ASIA CUP 2023: இந்தியா சாம்பியன்ஸ்!

ஆசியகோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இப்படி ஒரு அணி துவம்சம் செய்யப்பட்டதில்லை. நல்லதானே போய்க்கொண்டிருந்தது நமக்கு, என்ன ஆச்சு இன்னிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் கதறும் அளவுக்கு, ஒரே போடாகப் போட்டு சாய்த்துவிட்டது இந்தியா. 50 ஓவர் மேட்ச். டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து, 15 ஓவரிலேயே ஸ்ரீலங்கா மரண அடிவாங்கியது. 50 ரன் – ஆல் அவுட்!

இந்தியாவின் முகமது சிராஜ் போட்ட ஸ்விங் பௌலிங் பல நாட்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் உலகில் ஸ்லாகித்துப் பேசப்படும். 140 + கி.மீ. வேகப்பந்துகளில் சில உட்பக்கமாக ஸ்விங் ஆனதும், பல உள்ளே நுழைந்ததுபோல் திரும்பி, வெளியே போய்ப் போக்குக் காட்டியதும், ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைத் திணறவைத்தது. இதுவரை அனுபவிக்காதது. பிட்ச்சில் இறங்கி இந்திய வேகப்பந்துவீச்சை சந்தித்த உடனேயே, எல்லாம் தலைகீழானது. தடவ ஆரம்பித்துவிட்டார்கள். பேட்டிங் செய்வதெப்படி என மறந்துபோய்விட்டதுபோல் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலேயே பும்ரா, ஓப்பனர் குஸால் பெரெராவைத் தூக்கி வீசினார். சிராஜும் பயங்கரமாக மறுபக்கத்திலிருந்துப் போட்டுத் தாக்க, அவரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள்! கேட்கணுமா பின்னே? ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்குப் பித்துத்தான் பிடித்துவிட்டது என அவர்களது ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். நிலமை அப்படி.. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா 12 க்கு 6 விக்கெட்டுகள்! சிராஜின் அனலிஸிஸ் 5 for 5 எனச் சீறி, ஸ்ரீலங்காவின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சின்னாப்பின்னமாக்கியது. மனுஷனுக்கு ரோஹித் கொடுத்ததே 7 ஓவர்கள்தான். அதில் அவர் சாய்த்தது 6 விக்கெட்டுகள்.

முகமது சிராஜ் – பாராட்டு மழையில் !

பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க எண்ணிய ரோஹித், பாண்ட்யாவிடம் பந்தைக் கொடுத்தார். ஸ்ரீலங்காவுக்கு மூச்சு வருவதற்குள், பாண்ட்யாவின் பௌலிங் அவர்களை அந்தோ பரிதாபமாக்கிவிட்டது. 3 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள். விழிபிதுங்கிய ஸ்ரீலங்க வீரர்கள் அத்தனை விக்கெட்டுகளயும் சொற்ப டோட்டலுக்குப் பறிகொடுத்து ஓடிப்போனார்கள்!

இந்தியா சேம்பியன்ஷிப் வெல்ல 51 ரன் இலக்கு என இறங்கியது. ஷுப்மன் கில்லுடன் (Shubman Gill) ஓப்பன் செய்ய இஷான் கிஷனை இறக்கிவிட்டார் ரோஹித் ஷர்மா. இவர்களும் ஸ்ரீலங்காவின் ஜூனிவர் மாலிங்காவான, பதிரானாவிடம் தடுமாறுவார்கள். 51 ரன் எடுப்பதற்குள் 2, 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்கும் சாயும் என்பது அப்போதைய பொதுவான கணிப்பு. ஆனால் நடந்ததே வேறே! இறங்கிய உடனேயே, பதிரானா, மதுஷன்கா என எவரையும் விடாது தாக்கினார்கள் கில்லும், கிஷனும். 6.1 ஓவர்களிலேயே ரோஹித்தின் கைக்கு வந்தது ஆசிய கோப்பை. 8-ஆவது முறை கோப்பையைக் கைப்பற்றி மகிழ்ந்தது இந்தியா.

பாகிஸ்தானிலும், ஸ்ரீலங்காவிலுமாக நடந்த இந்த ஆசிய கோப்பைத் தொடரின் மறக்க முடியாத இந்திய வீரர் முகமது சிராஜ். ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வாங்கியதும், தான் எப்படிப்பட்ட மனுஷன் என உடனே காண்பித்தார் . ஆசிய கோப்பை தொடர் முழுதும் இஷ்டத்துக்கும் இடைமறித்துத் தொல்லை தந்த மழை, எல்லோருக்கும் எரிச்சலூட்டியது. அப்போதெல்லாம் தங்களின் சிறப்பான பணி மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து பாராட்டுப் பெற்றார்கள் கொழும்பு ஆடுகளத்தின் மைதானப் பணியாளர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை உணர்ந்த சிராஜ், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தனக்குக் கிடைத்த 5000 டாலர் (ஸ்ரீலங்க ரூ.16 லட்சம்) விருதுத் தொகையை சொளையாகத் தூக்கி அப்போதே அவர்களிடம் கொடுத்துவிட்டார். எத்தனையோ பேர் என்னென்னவோ சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு. எத்தனைப் பேரிடம் வெளிப்பட்டிருக்கிறது இத்தகைய மனம்?

சரி, தயாராகுங்கள் ரசிகர்களே… உலகக்கோப்பை 2023 கதவைத் தட்டப்போகிறது விரைவில். அதுவும் இந்தியாவில்.

**

வளரும் பாரதம்… வந்தே பாரத் !

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காக சென்னை போகவேண்டியிருந்தது.  நெருங்கிய உறவின் நீண்டநாள் அழைப்பு. முகூர்த்தத்திற்கு சில நாட்கள் முன்பு வரை,  குடும்பத்தில் யார் யாரெல்லாம் போவது, எத்தனை நாட்கள் சென்னை மாநகரில் தங்கலாம் என்றெல்லாம் சிந்தனையும், பேச்சும், காப்பியுமாகவே கழிந்ததால், வழக்கம்போல், நாள் நெருங்கி அழுத்த, திடீர் முடிவானது.  புதுசா ஓட ஆரம்பிச்சிருக்கே அந்த ‘வந்தே பாரத்’தில் போய்ப் பார்க்கலாம் நம்ம  சென்னைக்கு என்று. லேட்டா முடிவுக்கு வந்தா, லேட்டஸ்ட் ட்ரெய்ன் கிடைச்சிடுமா அவ்வளவு ஈஸியா?  ’தத்கால்’ புக்கிங்கில் பயணத்திற்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கே விரட்டிப் பிடித்தோம்!

மைசூரிலிருந்து பெங்களூரு, காட்பாடி வழியாக சென்னை செல்லும், இந்திய ரயில்வேயினால் துவக்கப்பட்டிருக்கும் அதிவேக நவீன மின்சார ரயில் இது. 6 மணி 25 நிமிடம் எடுத்துக்கொள்கிறது இந்தப் பயணத்திற்கு. எங்களுக்கு அதிலும் 1 1/2 மணிநேரம் மிச்சம். நாங்கள் பெங்களூர் வாசிகளாயிற்றே. பெங்களூர் ரயில் நிலையத்துக்கு மதியம் 2.50-க்கு வந்து ஐந்து நிமிடங்களில் வெளியேறுகிறது ஸ்டேஷனைவிட்டு. டபுள் டெக்கர் போன்ற மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் நிற்கும் சில பல ஸ்டேஷன்களை அனாயாசமாகப் புறந்தள்ளி, வேகமாக முன்னேறும் அதிவிரைவு ரயில். நாங்கள் வசிக்கும் ப்ரூக்ஃபீல்டிலிருந்து உபர் டாக்ஸி பிடித்து, பெங்களூரு மெயின் ஸ்டேஷனுக்கு (SBC) போய், வ.பா-வைப் பிடித்தோம்.  

முதலில் சொல்லவேண்டியது தோற்றம்பற்றி. அதாவது.. appearance. வடிவேலு லாங்குவேஜில்.. லுக்கு! காலங்காலமாக பெருஞ்சதுரமே முகமாக, கம்பி பிண்ணிய முகப்பு ஜன்னல்களுடன்,  பாடாவதி கலரில், உருண்டை ஹெட்லைட்டுடன் அழுக்காக வந்து நிற்கும் இந்திய ரயிலாக இல்லாமல், பளிச்சென்று வெள்ளையாக, நீலக்கோடுடன், சிறிய அழகான எல் இ டி ஹெட்லாம்ப்புகளுடன், வித்தியாச வடிவேந்தி   ’வந்தே பாரத்’ என முகத்தில் சிறிதாக எழுதிக்கொண்டு, ஒரு ரயில்வண்டி இந்திய ப்ளாட்ஃபார்மில் கம்பீரமாக வந்து நிற்பதே கொஞ்சம் நம்பமுடியாத காட்சிதான்! வேறு வண்டி பிடிப்பவர்கள்கூட, தங்கள் மூட்டை, முடிச்சு அவசரத்தினூடே கொஞ்சம் நின்று,  திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு,  தங்கள் பாடாவதியின் படியில் கால்வைத்து ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

நவம்பர் 2022-ல் பிரதமர் நரேந்திர மோதியால் துவக்கிவைக்கப்பட்டது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் ரயில். எங்கள் டிக்கட்டை சோதித்ததில், நாங்கள் ஏறவேண்டிய கம்பார்ட்மெண்ட் C-7 என்றது. ஏறி சீட்டுகளில் உட்காருகையில், கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தெரிந்தன. சுத்தமான பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தரமான,  மென்மையான ரூஃப் லைட்டிங், எதிரே  தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வார்த்தைகளை ஓட்டி, பயணிகளை நிதானமாக வரவேற்கும் எல் இ டி திரை/ தெளிவான பெண்குரல்,  ஃப்ளைட்டுகளில் இருப்பதுபோன்ற, சரியான அளவிலான கைப்பிடிகள், எதிர் சீட்டின் பின்புறத்திலிருந்து எளிதாகத் திறக்கும் சிறு டிஃபன் டேபிள், சுத்தமான ஃப்ளோரிங். சரியாக வடிவமைக்கப்பட்டதோடு, பராமரிக்கவும்படும், நவீன டாய்லெட்டுகள் என்பது இந்திய ரயில்வேயில் இதுவரை நாம் சந்தித்திராதது.  இந்தியப் பயணிகளின் உள்நாட்டு ரயில் பயணத்தை சர்வதேசத் தரத்திற்குக் கொண்டுவர இந்திய ரயில்வேயின் தீவிர முயற்சிகளில் ஒன்று ’வந்தே பாரத்’ தொடர் ரயில்கள்.

பெங்களூரு-சென்னை என 4 ½ மணி நேரம்தான் வந்தே பாரத்தில். மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு நம்மைக் குலுக்கோ குலுக்கெனக் குலுக்கி, அயர்த்தி சென்னையில் ஒருவழியாகத் தள்ளிவிட்டுப்போய்விடுகின்றன.  வந்தே பாரத்தில் வேறென்ன சொல்லும்படி இருக்கிறது என்றால்.. இருக்கிறது சில.  பயண ஆரம்பத்தில் உங்களுக்குத் தரப்படுகிறது ஆங்கில அல்லது தமிழ் தினசரி இதழ். ஒரு மணி நேரத்திற்குப்பின் வருகிறது டிஃபன் டைம். ஒரு சின்ன ட்ரேயில் ஒரு குண்டு ஆலு சமோஸா, ஒரு நம்கீன் (அவல், கடலை, ஓமப்பொடி என Bikaner க்ரூப்பின் குஜராத்தி மிக்ஸர்) பாக்கெட், Chayoos-ன் இன்ஸ்டண்ட் டீ மிக்ஸ் அல்லது கொல்கத்தா ப்ராண்ட் ஒன்றின் காப்பி மிக்ஸ் பாக்கெட். வெல்கம் டு வந்தேபாரத் என அழைக்கும் சிறிய பேப்பர் கப்பில் சுத்தமான ஃப்ளாஸ்கிலிருந்து ஊற்றப்படும் வெந்நீர் – காப்பியோ, டீயோ நீங்களே தயாரித்துக்கொள்ள என. கூடவே அது என்ன ட்ரேயில்..சின்ன பேக்கட்? ஆ.. ஸ்வீட். எடுத்து படித்துப்பார்த்தேன் ஒட்டியிருந்த லேபிளை. ஸ்ரீ கஜானந்த் ஸ்வீட்ஸ், பெங்களூர் என்றது. சுத்த நெய்யில் செய்யப்படும் பாப்புலரான ஸ்வீட் ஸ்டால்களை பெங்களூரிலும், சுற்றுவட்டாரத்திலும் கொண்ட குழுமம். உள்ளே மைசூர் பாக். நெய் விரலில் ஒட்ட, வாயில் கரைதது பாக். நாக்கு இன்னும் இருக்கா!-என்றது.  மொத்தத்தில் ருசிக்க, தரமான உணவுப்பொருட்கள். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் நமது ஜனங்கள் ஆயில்பேப்பர், டிஷ்யூ என மூலைக்கு மூலை எறிந்துவிடும் கொடுங்குணம் கொண்டவர்களாயிற்றே.. அதை உடனே தவிர்க்க, ஃப்ளைட்டில் நடப்பதுபோல, பாலிதீன் பையுடன் குப்பை கலெக்ட் செய்ய என நீலச் சீருடையில் வரும் ரயில்வே அலுவலர்கள். இதுவன்றி மீதமிருக்கும் நேரத்தில் மென்மையாக உங்களை அணுகி, Snickers, KitKat  போன்ற சர்வதேச பாப்புலர் சாக்லட்டுகளை விற்கவும் செய்கிறார்கள் வந்தே பாரத்தில்.

பெங்களூர் திரும்பும் பயணத்தில்,  காலை 6-க்கு சென்னையிலிருந்து புறப்படுகிறது வந்தே பாரத். காலையில் ஆங்கிலம் அல்லது தமிழில் நியூஸ்பேப்பர் கொடுக்கிறார்கள். (மைசூரிலிருந்து புறப்படும் வண்டியில் ஆங்கிலமும், கன்னடமும் சாய்ஸ் ஆக இருக்கும்).அப்புறம் வருகிறது காலைச்சிற்றுண்டி. ம்ருதுவான இட்லி-ஜோடி, ஒரு மெதுவடை. இதமான காரத்தில் தேங்காய் சட்னி. சிறிய பிஸ்கெட் பேக் – Lotte Choco Pie. Coffee or tea- உங்கள் விருப்பம். சரியான சீரான வேகத்தில் (எல் இ டி ஸ்க்ரீன் அவ்வப்போது வண்டியின் வேகத்தை 103 கி.மீ, 110 கி.மீ எனக் காண்பிக்கிறது), சரியான வருகை நேரத்தில், குலுங்காது வந்து நிற்கிறது பெங்களூரு ஸ்டேஷனில். வேறென்ன வேண்டும் ஒரு இந்திய ரயில் பயணத்தில்!

ரயில் பயணமாக லால் பாக் (Lalbagh) எக்ஸ்ப்ரெஸ், சென்னை எக்ஸ்ப்ரெஸ், டபுள் டெக்கர், ஷதாப்தி, என பெங்களூரிலிருந்து சென்னைக்கு சில சமயங்களில் பயணிக்கையில், இடையிடையே ஏகப்பட்ட குட்டி ஸ்டேஷன்களில் வண்டி நிற்கும். அலுப்போடு நகரும். செல்லும். அந்த வேலையே இங்கு நடக்காது, வந்தே பாரத்தைப் பொறுத்தவரை. பெங்களூரிலிருந்து பிற்பகல் 2: 55-க்குப் புறப்பட்ட வண்டி, 3 மணிநேரம் கழித்து காட்பாடி ஜங்ஷனில் 3-4 நிமிடம் நின்றது. பிறகு சென்னையை நோக்கி தண்டவாளத்தில் பறத்தல். இரவு சரியாக 7:29-க்கு சென்னை சென்ட்ரலின் 1-ஆம் எண் நடைமேடையில் வந்து நின்று, தன் பயணிகளை மெல்ல உதிர்த்துவிட்டது. பயணக் களைப்பே தெரியாமல் பயணிகள் ஃப்ரெஷ்ஷாக வந்து இறங்கியது பார்க்க, நன்றாக இருந்தது.

மேலும்: நாடு முழுதும் முக்கிய நகர்களை சர்வதேசத் தரத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நவீன, வேக, மின்சார ரயில்கள் மூலம் இணைக்கக் கருதி மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்’ இந்த ’வந்தே பாரத்’ ரயில்வே ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பெயர் ’ட்ரெய்ன் 18’ என இருந்திருக்கிறது! முதன் முதலாக வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் 2019-ல் துவக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. மைசூர்-சென்னை வந்தே பாரத் இந்த வகையில் ஐந்தாவது எக்ஸ்ப்ரெஸ் ரயிலாகும். சென்னை பெரம்பூரிலுள்ள ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைதான் (Integral Coach Factory, Chennai) புதிய தொழில்நுட்பத்துடன், நவீன வந்தே பாரத் ரயில் பெட்டிகள். வந்தே பாரத்தின் எலெக்ட்ரானிக்/ கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்களை வடிவமைத்ததில் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் பங்களிப்பு தந்திருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது. சராசரி வேகம் 105-115 என்றாலும், மணிக்கு 180 கி.மீ. வரை வேகம் காட்டக்கூடிய ரயில் வண்டி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலும் 16 பெட்டிகளைக் கொண்டது.

இன்று (8-4-23) சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரதமரால் துவக்கப்பட்டிருக்கும் புதிய சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத், சற்றே வித்தியாசமானது. 8 பெட்டிகள். அதில் ஒன்று எக்ஸிக்யூட்டிவ் கம்பார்ட்மெண்ட் என்கிறது செய்தி. இந்த ஏசி எக்ஸ்ப்ரெஸில், சேர்-கார் சீட்டுகள்: 450 (டிக்கட் விலை:ரூ.1215). எக்ஸிகியூட்டிவ் சேர்கார் சீட்டுகள்: 56 (டிக்கட் விலை ரூ. 2310). சென்னை-மைசூர் வந்தே பாரத்தைப்போல, சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் எக்ஸ்ப்ரெஸும் , புதன் தவிர்த்து வாரத்தின் மற்ற நாட்களில் ஓடும். சென்னையிலிருந்து மதியம் 2:25-க்குப்புறப்படும் இது, கோயம்புத்தூருக்கு இரவு 8:15-க்கு வந்து சேரும். இடையில், சேலம், ஈரோடு, திருப்பூர் என மூன்றே ஸ்டாப்புகள். அதேபோல, கோயம்புத்தூரில் காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத், காலை 11:50-க்கு சென்னை வந்து சேருகிறது. சென்னை-கோயம்புத்தூரிடையே செல்லும் ஏனைய இண்டர்-சிட்டி எக்ஸ்ப்ரெஸ்களைவிட, 1 1/2 மணி குறைவான நேரத்தில், ஏசி குளுகுளுப்பில், வந்தே பாரத் உங்களை சொகுசாகக் கொண்டுபோய் சேர்க்கும். இந்தப் புது விரைவு ரயிலில் பயணிப்பதற்கான டிக்கட்டுகள், புக்கிங் ஆரம்பமான சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. ஐபிஎல் டிக்கெட் சேல் மாதிரில்ல இருக்கு வந்தே பாரத் சேல்!

பியுஷ் கோயல் (Piyush Goyal) திறனான மந்திரியாகத் தலைமை தாங்கும் மத்திய ரயில்வே அமைச்சகத்திலிருந்து இன்னும் நல்ல பொதுநல முயற்சிகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது எனத் தோன்றுகிறது.

**

WPL, IPL .. கிரிக்கெட் ரசிகர்களின் யோகம்!

கத்தி போச்சு, மாங்கா வந்தது டும் டும் டும்.. ! – என்பதுபோல WPL போய், IPL உள்ளே நுழைகிறது நாளை (31-3-23) அகமாதாபாத் மைதானத்தில், கிரிக்கெட் ரசிகர்களின் மனவெளியில்.

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி WPL கோப்பையை வென்று, WPL-ன் முதல் எடிஷன் போட்டிகளை சில நாட்களுக்கு முன் மும்பையில் முடிவுக்குக் கொண்டுவந்தது. பெண்களுக்கான முதல் டி-20 லீக் கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக ஆரம்பித்து நடத்தியதிலும்,எதிர்பார்த்ததைவிட ரசிகர்களின் ஆதரவு, ஆரவாரம் மைதானங்களில் பொங்கியதாலும் இந்திய கிரிக்கெட் போர்டும், அணி உரிமையாளர்களும், கமர்ஷியல் ஸ்பான்சர்களும் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார்கள்.

WPL players: Smriti Mandhana, Nat Sciver-Brunt, Jemimah Rodrigues

கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை அணிக்கு ரூ.6 கோடி பரிசுப்பணமாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை. இவற்றைத் தாண்டி டூர்னமெண்ட்டின் சிறப்பு வீராங்கனை (ஹேலி மேத்யூஸ்)- ரூ.5 லட்சம், ப்ளேயர் ஆஃப் த ஃபைனல் (நாட் ஸிவர்-ப்ரண்ட்) ரூ.5 லட்சம், திறன்வாய்ந்த புதிய வீராங்கனை (யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia) ரூ.5 லட்சம், சிறந்த கேட்ச் பிடித்த வீராங்கனை (ஹர்மன்ப்ரீத் கௌர்) ரூ.2 1/2 லட்சம், ஃபைனல் மேட்ச்சில் சிறந்த பவர் ஹிட்டர் (ராதா யாதவ்) விருதுக்காக ரூ.1 லட்சம் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டு 2023-க்கான கோலாகல WPL விழா மார்ச்சில் நிறைவடைந்தது .

Above: IPL bowlers – Washington Sundar, Natarajan, Ashwin, Shardul Thakur

நாளை(31-3-23) ஆரம்பமாகிறது ஆண்களுக்கான கிரிக்கெட் ஆட்டபாட்டம். அதாவது, நம்ம IPL ! முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (கேப்டன்: ஹார்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன்: எம்.எஸ்.தோனி) -உடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் தீவிர ரசிகர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையப்பேர். ஆதலால், போட்டி அதிஆர்வமாக கவனிக்கப்படும். குஜராத் அணியில் பாண்ட்யாவோடு, நியூஸிலாந்தின் கில்லாடி(!) கேன் வில்லியம்ஸன், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், முகமது ஷமி, ராஹுல் தெவாட்டியா, சாய் கிஷோர் ஆகியோர் பலம் காட்டுகிறார்கள். போன வருடம் பத்து போட்டிகளில் தோற்று பரிதாபமாகக் காட்சியளித்த சிஎஸ்கே-யில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், இங்கிலாந்தின் மொயீன் அலி, தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியஸ் (Dwaine Pretorius), அம்பதி ராயுடு ஆகியோர் முஷ்டியை உயர்த்தி நிற்கிறார்கள். தோனி முதல் மேட்ச்சில், காயம் காரணமாக ஆடமாட்டாரோ என்றொரு வதந்தி!தொடரின் பின்பகுதியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சென்னை அணியில் சேர வாய்ப்பு. அஹமதாபாதின் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் முதல் போட்டியிலேயே பொறிபறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை ஆட்டமாடிய பெண்களைக் கொஞ்சம் மனதிலிருந்து அகற்றிவிட்டு, ஆடவிருக்கும் ஆண்வீரர்களை இனி கவனிக்கப் பாருங்கள், கிரிக்கெட்டின் போதை பக்தர்களே! உங்களுக்கு சுக்ர தெசைதான் இப்போது…

**

பெண்கள் T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை 2023: இந்தியா – பாக் மேட்ச்

தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் ICC மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையில், இன்று (12-02-23) மாலை தன் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் ஸ்ரீலங்கா தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா நியூஸிலாந்தையும், இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸையும் தோற்கடித்துவிட்டன.

பெண்களின் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய டாப் அணிகளாகப் பார்க்கப்படுகின்றன. அடுத்தவரிசையில் நியூஸிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகள் சவால்விடும் அணிகளாக எதிர் நிற்கின்றன.

Harmanpreet Kaur & Bismah Maroof

இதுவரை பல ஐசிசி போட்டிகளில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்திருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்கு மீடியா ஹைப் அதிகமாகி வருகிறது! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தியாவில் மாலை ஆறரை மணிக்கு போட்டியை நேரலையில் தருகிறது என்பதில் ரசிகர்கள் ஒரே உற்சாகம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தெனாப்பிரிக்கா என 10 அணிகள் போட்டியிடும் மகளிர் டி-20 உலகக்கோப்பை இது.

India star Smriti Mandhana

இன்றைய மேட்ச்சில் இந்தியாவுக்குக் கொஞ்சம் பின்னடைவு: துவக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான ஸ்ம்ருதி மந்தனா கையில் காயம் காரணமாக ஆடமாட்டார். இன்று குறிப்பான பங்களிப்பு தர வாய்ப்பிருக்கக்கூடிய வீராங்கனைகள்:

இந்தியா: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், (U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்) ஷெஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் (Richa Ghosh)(விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gayakwad), ரேணுகா சிங் டாக்குர் (Renuka Singh Thakur), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), தீப்தி ஷர்மா (Deepti Sharma).

பாகிஸ்தான்: கேப்டன் பிஸ்மா மரூஃப் (Bismah Maroof), நிடா தர் (Nida Dar), நஷ்ரா சந்து, முனீபா அலி (விக்கெட்கீப்பர்), ஃபாதிமா சானா, ஆலியா ரியாஸ்

India-Pak Women’s T20 Cricket World Cup Match, Cape Town: Star Sports 1830 hrs (IST)

**

SL-IND டி-20: மும்பை த்ரில், Pandya’s gamble!

கடைசி ஓவர் களேபரம் நேற்று (03-01-23)வங்கெடேயில். 13 எடுக்கவேண்டும் ஸ்ரீலங்கா வெற்றிக்கு. தான் போட்டிருக்கவேண்டிய ஓவரை அக்‌ஷர் பட்டேலிடம் கொடுத்தார் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா. ஸ்ரீலங்காவிற்கு ஆச்சர்யம். களத்தில் விளாசும் ஆல்ரவுண்டர் கருணரத்னே, டெய்ல்-எண்டர் ராஜிதா. இன்னும் 2 விக்கெட்வேறு கையில். நாம் ஜெயிச்சிட்டோம் என்று SL dugout ரிலாக்ஸ் ஆகி, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு மும்பையின் இரவில் அமர்ந்திருந்தது!

அக்‌ஷரின் முதல் பந்து வைட். 2-ஆவதில் ராஜிதா ஒரு ரன். 3-ஆவதை வைட் என நினைத்து கருணா சும்மா இருக்க, அது வைட் இல்ல தம்பி..dot ball! 4-ஆவதை (legal 3rd) தூக்கி விளாச, சிக்ஸர்! ஸ்ரீலங்கா பக்கம் சட்டெனத் திரும்பிய முள்! 3-பந்தில் 5 ரன்தான் தேவை. மேட்ச் போச்சு இந்தியாவுக்கு –ரசிகர்கள் பதற்றம். அப்படியே பட்டேலும், கிஷனும் டென்ஷன் முகத்தோடு கேப்டனுடன் வாக்குவாதம். ஏன் எங்கிட்ட கொடுத்தே .. நீயே போட்டிருக்கலாம்ல என்று பட்டேல் கேப்டனைக் கேட்டது போல, நீ போட்றபடி போடு.. தோத்தா அதுக்கு நான்தான் பொறுப்பு.. போ.. போய்ப் போடு என்று பாண்ட்யா சொல்வதுபோல் உடல்மொழிகள் துல்லியமாக ஸ்க்ரீனில்.  அடுத்த பந்து அக்‌ஷரின் dot ball ! 2-ல் 5 தேவை. யார்க்கர்போல 5-ஆவதை அக்‌ஷர் வீச, 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ராஜிதா ரன் அவுட். ஹூடா த்ரோவில் அக்‌ஷர் காரியம். கடைசிப்பந்தில் 4 தேவை ஸ்ரீலங்காவிற்கு. 109 கி.மீ.யில் வேகத்தோடு போட, மிட்-ஆனில் ஃபீல்ட் ஆனது. அதே ஹூடா. இப்போது த்ரோ விக்கெட்கீப்பருக்கு. ஒரு ஃப்ளாஷில் காரியத்தை முடித்த கீப்பர் கிஷன். மதுஷன்கா ரன் அவுட். லங்கா ஆல் அவுட்160. 2 ரன்னில் த்ரில் வெற்றி இந்தியாவுக்கு என்றது ஸ்கோர்போர்டு!

ஆட்டத்திற்குப் பிறகான நேர்காணலில் பாண்ட்யா : ’வேண்டுமென்றேதான் கடைசி ஓவரை அக்‌ஷரிடம் கொடுத்தேன். அவர்கள் 13 ரன் அடிக்கலாம். நாம் தோற்கலாம். இருந்தாலும் நெருக்கடி  சிச்சுவேஷனை உண்டாக்கி சோதித்துப் பார்க்க எண்ணம். அக்‌ஷர் கடைசி ஓவர் ப்ரெஷரை சாமர்த்தியமாகக் கையாண்டார்.’ என்றார். 4 விக்கெட் எடுத்த புது வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவிக்கும் பாராட்டு .

முதல் ஓவரில் கிஷன் அடித்த 16 ரன்கள், ஏதோ ஸ்கோர் 180-190 வரை போகப்போகிறது என்கிற கற்பனையை ரசிகர்களிடம் ஓஹோவென வளர்த்துவைத்தது. அடுத்தடுத்து ஹுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்ஸன் என ஒற்றை இலக்க சரிவுகள் இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா பௌலர்கள் கொடுத்த செட்பேக்ஸ். கிஷனும், பாண்ட்யாவும் மிடில் ஓவர்களைத் தாக்குப்பிடித்து வண்டி ஓட்ட, இறுதி ஜோடியான தீபக் ஹூடாவும், அக்‌ஷர் பட்டேலும்தான் நெருக்கடியை சமாளித்து, இந்தியாவை 150-ஐக் கடக்கவைத்தார்கள். 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 43 நாட் அவுட் என மிரட்டிய ஹூடா ப்ளேயர் ஆஃப் தி மேட்ச். அக்‌ஷர் 31 நாட் அவுட், , கிஷன் 37, பாண்ட்யா 29. தன் முதல் டி-20 மேட்ச்சை ஆடிய Gill, ஏழேடுத்து ஏமாற்றம். சூர்யா, சாம்ஸன் சல்லீஸாக வீழ்ந்ததில் லங்காவுக்கு ஆனந்தம்.

எதிரியின் ரன்-அவுட்டில் ஆனந்தப்படும் பாண்ட்யா, பட்டேல்! (மேலே)

இலக்கைத் துரத்திய ஸ்ரீலங்காவும் ஆரம்பத்தில் சரிந்தது ஷிவம் மாவியிடம். ஆனால் இந்திய ஸ்பின்னர்களை வெளுத்தது. பாண்ட்யா, ஷிவம், மாலிக் ஆகியோரிடம் லங்கா பேட்ஸ்மன்கள் பயந்து பின்வாங்கினார்கள் என்பதும் தெரிந்தது. 144, 145 என வீசிக்கொண்டிருந்த உம்ரான்  மாலிக், திடீரென 155 கி.மீ. (record ball) ஒன்றை ஏவி, வேக ரன்னெடுத்த ஸ்ரீலங்கா கேப்டன்  ஷனகாவை (45) சாஹலிடம் கேட்ச் கொடுக்கவைத்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். ஹஸரங்கா, கருணரத்னா க்லெவர் பேட்டிங்.  இந்திய அணியில், சாஹல், சாம்ஸன், ஹூடா ஆகியோர் அபார ஃபீல்டிங். Super keeping by Ishan Kishan. Lot of saves behind the wicket in a low-scoring match.

Scores (20 overs): India 162/5.  SL 160 all out.Player of the match: Deepak Hooda

**

Ind-Zim: தொடரில் இந்திய வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு ஒரு-நாள் போட்டிகளை வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட ரிசல்ட்தான் இது. நாளை (21/8/2022) நடக்கப்போகும் ஆட்டமுடிவும் இப்படித்தான் இருக்கும். இந்தியா ஓரிரு புதியவர்களை அறிமுகம் செய்யக்கூடும் என்பதைத்தவிர சுவாரஸ்யம் ஏதுமில்லை.

சர்வதேசப்போட்டி அனுபவம் அதிகமில்லாத, கத்துக்குட்டி வீரர்களை அதிகமாகக் கொண்ட ஒரு அணியை வீழ்த்தியதில் இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. ஆயினும் இந்தத் தொடர் மற்ற வரவிருக்கும் தொடர்கள் போலவே ஒரு சர்வதேச கிரிக்கெட் கமிட்மெண்ட்.

முதல் மேட்ச்சில் ஜிம்பாப்வே 189 அடிக்கக் காரணம் 9-ஆவது விக்கெட்டிற்காக பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய பௌலிங்கை ஆடிக்காண்பித்த இரு வீரர்கள் -பௌலிங் ஆல்ரவுண்டர்கள்: ப்ராட் எவான்ஸ் (Brad Evans), ரிச்சர்ட் இங்கராவா (Richard Ngarava). அணியின் பிரதான ஆட்டக்காரர்களைவிடவும் முதிர்ச்சி, ஆக்ரோஷம் காட்டி ஆடினார்கள். ஜிம்பாப்வேயின் எதிர்கால ஸ்டார்களாக உருவெடுக்கலாம். ஆனால் ஜிம்பாப்வே பௌலர்களால் ஒரு இந்திய விக்கெட்டையும் சாய்க்கமுடியவில்லை என்பது ஆச்சர்யம்தான். ஷுப்மன் கில்லும் (Shubman Gill), ஷிகர் தவணும் 80+ விளாசினார்கள். (Score: Zim 189. India 192 (no loss).

Sanju Samson

நேற்று நடந்த போட்டியில் முதிர்ந்த வீரரான ஷான் வில்லியம்ஸும் (42), இளம் பேட்ஸ்மன் ரயான் பர்ல் (Ryan Burl, 39 Not ourt)-உம் பொறுப்பாக ஆடினார்கள். இருந்தும் 161-ஐத் தாண்டமுடியவில்லை ஜிம்பாப்வேயினால். எளிதாக இந்தியா இலக்கைத் தொடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் 5 விக்கெட்டுகளை பலிகொடுத்தபின் தான் வெற்றி கிடைத்தது. இந்திய கேப்டன் ராஹுல் துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஒரு ரன்னில் பெவிலியனுக்கு ஓடிவந்தார்! விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் நன்றாக ஆடி, 4 சிக்ஸர் தூக்கி 43 நாட் அவுட். ஷர்துல் டாக்குருக்கு 3 விக்கெட். (Score: Zim 161. India 167/5. )

நாளைய போட்டியிலாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ராஹுல் த்ரிப்பாட்டியை இந்தியா களத்தில் இறக்குமா? இல்லை, ஜிம்பாப்வேக்கு டூரிஸ்ட் விஸாவில் தான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறாரா !

**

விக்ரம் – Just a chartbuster ?

ஃபினாமினல், ப்லாக்பஸ்ட்டர், சார்ட்பஸ்ட்டர் என்றெல்லாம் ஒரு படத்தின் ‘வெற்றி’யைப்பற்றிப் பிரஸ்தாபிப்பது என்பது, அது அள்ளிக்கொடுத்த பண விஷயத்தைப் பிரதானமாக வைத்துத்தான், பொதுவாக. 200 ஐத் தாண்டிருச்சா, என்ன.. 400-க்கும் மேல போய்க்கிட்டிருக்கா! – போன்ற ஆஹா.. ஓஹோக்கள் திரைப்படம்பற்றிய கமர்ஷியல் ஆங்கிள் பிரமிப்புகளே. வியாபாரமாகவே உருமாறிவிட்ட உலகில், வியாபாரம்பற்றித்தானே எப்போதும் பேசுவார்கள்? குதிப்பார்கள்? அதில் தவறென்ன சொல்லமுடியும்.

விக்ரம் (2022)

இந்தப் படத்தை நான் பார்க்க விரும்புவது குறிப்பாக ஃபஹத் ஃபாஸில் (Fahadh Faasil), விஜய் சேதுபதி நடிப்பிற்காக. ஆங்காங்கே இவர்கள் இருவரின் பங்களிப்புபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதால். மேலும், லோகேஷ் கனகராஜ் அவ்வளவு நல்ல இயக்குனரா என்ன? சினிமாவை ஒரு கலானுபவமாக, அதாவது ஒரு சீரியஸ் மீடியம் என அவதானித்து, ‘செலெக்ட்’ படங்களாகப் பார்த்துவருவதால்தான், இவ்வாறான சிந்தனை. விக்ரம் ஒரு ஆர்ட் படமல்ல. ஒரு சத்யஜித் ராய், மிருணாள் சென், அரவிந்தன் படத்தைப்போல் திரையில் இழையும் கவிதையல்ல என்பது தெரிந்ததே (தினத்தந்தி மன்னிக்க)! வணிகமே இதிலும் குறிக்கோள் எனினும், கலைக்கோணத்தில் சிறந்த நடிப்பு, இயக்கப் பங்களிப்புகள் உண்டோ இந்தப் படத்தில் எனத் தெளிவாவதில் ஒரு சந்தோஷம். படத்தை நிதானமாக உட்கார்ந்து பார்த்தால்தான் இந்த விஷயங்களைப்பற்றி அறிய நேரும். கூடவே, கமல் அங்கிளின் நடிப்புத் திறன் அப்படியே இருக்கா, இல்லை, ஒருமாதிரி ‘மய்ய’மாகப் போய்விட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள! ஏனெனில், வெறுமனே சுஹாசினி தன் சித்தப்பாபற்றி வானளாவ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திப்பட்டுக்கொண்டிருக்கமுடியாதே..

**

கசடதபற – மின்னூலாக

தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு’ இது என்கிறார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.

நா. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட பத்திரிக்கையில் ஞானக்கூத்தன், நகுலன்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி, க.நா.சுப்ரமணியம், சுஜாதா, ஸிந்துஜா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன்  போன்ற, பின்னாளில் ஒளிரப்போகும் எழுத்தாளர்கள்  சிறப்புப் பங்களிப்பு செய்திருந்தனர்.  

நண்பர்களிடம் பழைய அச்சு இதழ்களைத் தேடிப்பெற்று, word document -ஆக மாற்றி (செம வேலை இது) மின்புத்தகங்களாக கசடதபற இதழ்களை அமேஸான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார் மாமல்லன். சில நாட்களுக்கு முன் ’கசடதபற’-1, 2 ஆகியவை அமேஸானில் வெளிவந்தன. ’கசடதபற’- 3 (டிசம்பர் 1970) இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு இலவச வாசிப்புக்குக் கிண்டிலில் கிடைக்கிறது:

27/7/21 பகல் 12:30 -லிருந்து 29/7/21 பகல் 12:29 வரை (இந்திய நேரம்)

லின்க்: அமேஸன் search browser-ல் ASIN ‏ : ‎ B09B82837D என டைப் செய்து தொடரவும்.

கசடதபற 3 (Tamil Edition) by [நா. கிருஷ்ணமூர்த்தி, விமலாதித்த மாமல்லன்]

கசடதபற – 3 (டிசம்பர் 1970) இதழில்:

மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான் – ஞானக்கூத்தன்
கத்திரி – நகுலன்
முத்தச் செய்திகள் – வே. மாலி (சி. மணி)
சாம்பமூர்த்தி ராயரும் சந்திரசேகரனும் – ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)
பாலகுமாரன்
வலை – எஸ். வைதீஸ்வரன்
ஜன்னல் – சுஜாதா
உஷா ஐயர் – ஐராவதம்
என்னுடைய மேட்டு நிலம் – கலாப்ரியா
ஆதிமூலத்தின் ஓவியப் பார்வை – கி. அ. சச்சிதானந்தம்
மனக் கழுதை – குமரித்துறைவன்
காந்தி – ட்டி. ஆர். நடராஜன் (ஸிந்துஜா)
தொழுமரங்கள் – ந. மகாகணபதி
கைமாற்றுக்கு இருவர் – தீபப்ரகாசன்
ஓலூலூவுக்கு ஒரு பதில் – சா. கந்தசாமி
வேரும் விழுதும் – ராமகிருஷ்ணன்.

*

மறுஜென்மம் எடுத்திருக்கும் ’கசடதபற’ மூலம் இலக்கிய எழுத்தை ரசித்து மகிழுமாறு வாசக நண்ப, நண்பிகளை அன்புடன் அழைக்கிறேன்.

-ஏகாந்தன்

இந்திய இலக்கிய விருது – சாஹித்ய அகாடமி

சுதந்திரத்துக்கு ஆறு வருடங்களுக்குப் பின், 1954-ல், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவவும், அவற்றின் இலக்கியம் சார்ந்த பணிகளை வளர்க்கவும், ஒருங்கிணைக்கவும், இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தவும் என உயரிய நோக்கத்துடன், அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட மத்திய அமைப்பு சாஹித்ய அகாடமி. அரசினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஒரு தன்னிச்சையான அமைப்பாக இயங்குகிறது. இதனை நிறுவவென இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மான மொழியில் சாகித்ய அகாடமியின் நோக்கம் : ’a national organisation to work actively for the development of  Indian letters and to set high literary standards, to foster and co-ordinate literary activities in all the Indian languages and to promote through them, all the cultural unity of the country’ எனக் குறிப்பாகச் சொல்கிறது.

தலைநகர் புதுதில்லியில் இதன் தலைமைக் காரியாலயம் ஃபெரோஸ் ஷா சாலையில் உள்ள ’ரபீந்திர பவன்’ என்கிற பிரத்யேகக் கட்டிடத்தில் இயங்குகிறது. சாஹித்ய அகாடமியின் பிராந்திய அலுவலகங்கள் சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்களில், இந்தியப் பெருமொழிகளோடு ஒப்பிடுகையில், நன்கு வளர்ந்த தனி மொழி என ஒன்றில்லை. Dialects எனப்படும்  வாய்மொழியே அங்கு வழக்கிலிருந்து வருகின்றன.  சாஹித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்படாத, ஆனால் அங்கு நிலவும் வாய்மொழி வந்த படைப்புகள், பிரசுரங்களையும் ஊக்குவித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த ஒற்றுமையை வளர்க்கவென திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தாலாவில் ‘The North-East Centre for Oral Literature’  என்கிற அலுவலகத்தை நிறுவி இயக்கிவருகிறது சாஹித்ய அகாடமி.  இதுவன்றி, ஆதிவாசிகளின் மொழி சார்ந்த இலக்கிய, பண்பாட்டு வார்ப்புகள் ஆகியவற்றை ஆராய, வளர்க்கவென சாஹித்ய அகாதமி ’ஆதிவாசி இலக்கிய மையம்’ ஒன்றையும் புதுதில்லியில் நிறுவி இயக்கிவருகிறது.

22 இந்திய மொழிகளோடு, ராஜஸ்தானியும், நாட்டின் இணைப்புமொழியான ஆங்கிலமும் சேர்க்கப்பட்டு மொத்தம் 24 மொழிகளும், சார்ந்த படைப்புகளும் சாஹித்ய அகாடமியின் கட்டுக்கோப்பில், கவனத்தில் வருகின்றன. டெல்லியிலுள்ள சாகித்ய அகாடமியின் நூலகம், இந்தியாவின் முக்கியமான பன்மொழி நூலகமாகும். அகாடமி அங்கீகரித்துள்ள  மொழிகளிலிருந்து, சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், மொழி அகராதிகளும் அடங்கிய சுமார் 2 லட்சம் புத்தகங்கள், இலக்கிய வாசகர்களுக்கு இங்கே வாசிக்கவும், தொடர்புகொள்ளவும் கிடைக்கின்றன.

அவ்வப்போது அகாடமி, இந்திய மொழிகளின் சிறப்புப் படைப்பாளிகள் வரிசையைத் தேர்ந்து, அவர்களின் ஆக்கங்களை ஆங்கிலம் உட்பட பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

1987-லிருந்து இந்த அகாடமி ’எழுத்தாளரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சியையும் தனது புதுதில்லி மற்றும் பிராந்திய அலுவலகங்களில் அவ்வப்போது நடத்துகிறது. ஒரு புகழ்பெற்ற இலக்கிய ஆளுமையை அழைத்துவந்து,  அவரின் வாழ்க்கை, எழுத்தாக்கங்கள்பற்றி வாசகர்கள்/புது எழுத்தாளர்கள் முன் நேரிடையாகப் பேசவைக்கிறது. குறிப்பிட்ட படைப்பாளிபற்றி அவர் வாயிலாகவே மற்றவர்கள் தெரிந்துகொள்ள வழிசெய்யும் அரிய முயற்சி.

Men and Books – மனிதரும் புத்தகங்களும் – என்கிற தலைப்பில் வெவ்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள், பிரபலங்களை அழைத்து ஒரு மொழியின் பிரபல எழுத்தாளர், படைப்பு பற்றி உரையாற்ற சாஹித்ய அகாடமி வாய்ப்பு தருகிறது. இந்த வகையில், ஒரு டாக்டரோ, விஞ்ஞானியோ, தொழில்நுட்ப வல்லுநரோ, ஓவியரோ, பாடகரோ – தனக்குப் பிடித்த, தனிப்பட்ட வகையில் தன் சிந்தனையை மேம்படுத்திய இலக்கிய வாசிப்பு குறித்து 40 நிமிடங்கள் உரையாடமுடியும்.

Through my window – எனது ஜன்னலின் வழியே-  என ஒரு சுவாரஸ்ய நிகழ்வை அகாடமி 1993-லிருந்து முன்னெடுத்துச் செயல்படுத்திவருகிறது. இதில், ஒரு படைப்பாளி தன்னை ஆகர்ஷித்த வேறொரு எழுத்தாளரின் வாழ்க்கை, இலக்கிய படைப்புபற்றி பேச வாய்ப்பு உண்டு.

வாய்ப்பு கிடைக்கையில் இந்திய மொழி ரீதியாகவும், சர்வதேச அளவிலும் இந்தியாவில் இலக்கிய செமினார்களை நடத்திவருகிறது அகாடமி.  

Sahitya Akademi Awards - BankExamsToday
Sahitya Academy Award

வருடந்தோறும் இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய ஆக்கங்களுக்காக சாஹித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் (50-களில்) விருதுபெற்றோருக்கு ரூ.5000 ரொக்கப்பரிசும் பட்டயமும் வழங்கப்பட்டுவந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டது. 2001-ல் பரிசுத்தொகை ரூ.40000 -ஆக இருந்தது. 2009-லிருந்து அது மேலும் உயர்த்தப்பட்டு, இப்போது ரு.1 லட்சம் ரொக்கமும், பட்டயமும் சாஹித்ய அகாடமி விருது பெற்றவருக்கு வழங்கப்படுகின்றன.

சாகித்ய அகாடமி விருதுத் தேர்வுமுறையே ஓராண்டு எடுத்துக்கொள்கிறது. விருதுக்குத் தேர்வுசெய்யப்படும் நூல் இந்த ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் வரையறை உண்டு. சாகித்ய அகாடமியின் வல்லுனர் குழுவினால் முக்கிய படைப்பாளிகளின் புத்தகங்கள் பொதுவாகத் தேர்வுசெய்யப்பட்டு, முதலில் 10 மொழிவல்லுநர்களின் பார்வைக்கு வருகின்றன. ஒவ்வொரு மொழிவல்லுனரும் ஆளுக்கு இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்ய, பட்டியல் தயார்செய்யப்பட்டு, மூன்று அகாடமி நீதிபதிகளின் குழுவுக்கு (Jury) சமர்ப்பிக்கப்படுகிறது. ஏகோபித்த தேர்வு, அல்லது அதிக (நடுவர்குழு உறுப்பினர்கள் (Jury members) வாக்குகள் பெற்ற ஆசிரியர்கள்/படைப்புகள், செயற்குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டு, விருதுக்கான அங்கீகாரம் பெறப்படுகிறது. பிறகு குறிப்பிட்ட ஆண்டிற்கென,  ஒவ்வொரு மொழிசார்ந்து விருது அறிவிக்கப்படுகிறது. கூடவே விருதுத்தேர்வில் சம்பந்தப்பட்ட மொழிசார்ந்த நடுவர் குழுவினரின் பெயர்களும் அறிவிக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மைக்காக இந்த ஏற்பாடு.

2011-ஆம் ஆண்டிலிருந்து ’யுவ புரஸ்கார்’ (சாஹித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது) வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மொழியிலும், 35 வயதுக்குட்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன.  விருதுத்தொகையாக ரூ.50000-மும், சிறு பட்டயமும் விருதாளருக்குக் கிடைக்கின்றன.

**  

மோனம் போற்று

தேர்தல் காலம். நாடே மொத்தமாய் சத்தக்காடாகிவிட்டிருக்கும் நேரத்தில் இதைப்பற்றிப் பேசவந்திருக்கிறானே இவன் எனத் தோன்றலாம்தான். இரைச்சலின்போதுதானே சப்தமில்லாத் தருணங்களின் தன்மையும், மென்மையும் ஓரளாவாவது மனதைத் தீண்டும்?

பொந்திஷெரி (ஃப்ரென்ச்காரர்கள் ஆசையாய் அழைத்த பாண்டிச்சேரி!) வாழ்வில் சுப்ரமணிய பாரதி அடிக்கடி காணாமற்போயிருந்தார். அதாவது அவரது வாய்மொழி போய்விட்டிருந்தது. வீட்டிலிருப்போருடன், நண்பர்களுடன் அளவளாவுவது  மறைந்துவிட்டிருந்தது. மௌனம். மௌனம். அதுவொன்றே பேசுமொழியாக  வெளிப்படுமாறு தன்னை யோகநிலையில் ஆழ்த்திக்கொண்டிருந்தாராம். ’தினந்தோறும் எதையாவது பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவருக்கு என்ன வந்தது? ஊமையைப்போல் சைகை, கையாட்டல், காலாட்டல்.. எந்த மண்ணாய்ப்போகிறவன் இவருக்குக் கற்றுக்கொடுத்தானோ இதை!’ என்று அங்கலாய்த்திருக்கிறார் பாரதியின் மனைவி செல்லம்மா. அத்தகைய மோன நிலைகளின்போதும் ஏதாவது கவிதை எழுதியிருந்தால் அதை, வீட்டிலுள்ளோருக்குப் படித்துக்காட்டுவாராம்! அதாவது வெட்டிப்பேச்சு, வளவளப்புக்குத்தான் வாய்ப்பூட்டு. கவிதை அந்தக் கட்டுக்குள் வராது. குறிப்பாக பாண்டிச்சேரி வாழ்க்கையின்போது தமிழுக்கு உணர்வுபூர்வமாக நிறைய படைத்து அர்ப்பணித்த மாகவிஞன்.  ’மோனம் போற்று’ என்று தன் ‘புதிய ஆத்திச்சூடி’யில் சொல்கிறார் பாரதி. போற்று என்றால் ஒப்புக்கு ’போற்றி.. போற்றி!’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, கூட்டத்தோடு ஓதிவிட்டு ஓடிவிடுவது என அர்த்தமல்ல. மௌனத்தை உணர்; போற்று;  பயில்; அதனால் மெய் தாண்டி உய்.. என நீள்கிறது அதன் அர்த்தம்.

மஹாபெரியவா என்று பக்தியோடு, பரவசத்தோடு அழைக்கப்படும் காஞ்சி மடத்தின் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், தன் வாழ்நாளில் அநேக நாட்களில் மௌன விரதம் இருந்துவந்தவர். அன்று யாராவது பார்க்க வந்திருந்து, எதிர்வந்து வணங்கி நின்றாலும், கையுயர்த்தி ஆசீர்வாதம் அல்லது பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்தல் என்பதோடு சரி. வார்த்தைகள் சம்பந்தப்படா ஆசி. வந்தவர்களுக்கும் இந்த தரிசனமே, ப்ரசாதமே போதுமானதாய் அமைந்திருந்தது.

ரமண மகரிஷி திருவண்ணாமலையைச் சுற்றிச்சுற்றி, உலவி காலம் கழித்தவர். ஆஸ்ரமத்தில் அமைதியாக உட்கார்ந்து, தியானத்தில் ஆழ்ந்திருந்த காலமதிகம். மிகக் கொஞ்சமாகப் பேசிய ஞானி. உலகின் தொலைதூர நாடுகளிலிருந்து அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு ஆர்வத்தோடு பார்க்க வந்தவர்கள், பிரிட்டிஷ்-இந்தியா காலத்திலேயே சிலருண்டு. நாளின் சில மணிநேரங்கள் அல்லது காலத்தோடு சம்பந்தப்பட்டிராத பொழுதுகள் அவரோடு மௌனத்திலேயே நடந்தன என்பது அவரருகில் வந்தோர்க்குத் தெரியும்.  அத்தகைய நேரங்களில் எங்கிருந்து யார் வந்திருந்தாலும், எத்தனை மணிநேரமாகக் காத்திருந்தாலும், ரமண மகரிஷி வாய்திறந்து பேசியதில்லை. சப்தமற்ற, சமிக்ஞைகூட காணப்படாத மோன நிலையில் இருந்திருக்கிறார். வந்திருந்தவர்களும் நிலைமையை, மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, கொஞ்ச நேரம் அவர் முன் இருப்பதே போதுமானது என உணர்ந்தவர்களாய், கைகூப்பி அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஒருவகை நிம்மதியோ, உள்மாற்றமோ அடைந்திருக்கிறார்கள். ஆங்கில ஆன்மீக எழுத்தாளரான பால் ப்ரண்டனுக்கும் (Paul Brunton) அப்படி நிகழ்ந்திருக்கிறது என்பது அவரின் 20 உலகமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள A Search in Secret India எனும் நூலில் காணப்படுகிறது.

The Doors of Perception, The Art of Seeing, The Genius and the Goddess, Brave New World, Heaven and Hell போன்ற நூல்களை எழுதிய  பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) சொன்னார் ஒருமுறை இப்படி: ”வார்த்தைகளில் கொண்டுவரமுடியாத ஒன்றை (expressing the inexpressible) சொல்ல,  மௌனமே சரியான மொழி. அதைத் தவிரவும் ஒன்று உண்டென்றால் அது இசை”. இங்கிலாந்தில் ஒரு மாலையில்,  ஜே.கிருஷ்ணமூர்த்தியோடு ஒரு ‘நடை’ போய்வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நகரங்களின் இரைச்சல்களைத் தாண்டி மலைகள், ஆறுகள் என இயற்கைச் சூழல் அமைந்த சிற்றூர்களில் ஜேகே தங்கி இருப்பார் – தன் பயணங்களின்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருக்க நேர்கையில். தன் காட்டேஜிலிருந்து மாலை நடை செல்கையில் சில நண்பர்கள்,  நெருங்கியவர்கள் அவரைத் தொடர்வதுண்டு. ஜே.கே-யோடு அன்று ’வாக்’ போகப்போகிறோம் என்கிற உணர்வு தந்த மகிழ்ச்சியில் சில கேள்விகளைத் தயாராக்கி மனதில் உட்காரவைத்திருந்தார் ஹக்ஸ்லி. அவரிடம் இவற்றிற்கு விடை காணவேண்டும். ஆனால் நடந்தது வேறு. நடையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, ஹக்ஸ்லி ஜே.கே. யிருந்து சிறிது தள்ளி கூட நடந்து சென்றாரே தவிர, கேட்கவில்லை எதையும். Simply, it didn’t happen. மெல்ல, மௌனமாக நடந்துகொண்டிருந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்கிற ஜாக்ரதை உணர்வு ஆரம்பத்தில். அப்புறம் அது அப்படியே தொடர, ஹக்ஸ்லியிடம் ஆரம்பத்திலிருந்த பரபரப்பு காணாமற்போயிருந்தது. அந்த அலாதி சூழலின் அமைதியில் அவரும் ஒன்றாகக் கலந்திருந்ததை  உணர்ந்தார். ”மௌனம் என்பதின் அழகை, ஆழத்தை, சக்தியை அந்த மாலையில் நான் தரிசித்தேன்” என்கிறார் பிறிதொரு சமயத்தில் ஹக்ஸ்லி.

சாதாரண மனிதன்கூட தனது சராசரி தினசரி வாழ்வினூடே, ஒரு விழிப்புணர்வோடு சில மணிநேரங்கள் பேசாது இருந்து பார்த்தால், வித்தியாசம் தெரியும்.  சலசலக்கும் மனது தன் ஆட்டபாட்டத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வதை நாளடைவில் உணரநேரும். பலர் இதுபற்றிப் படிக்கிறார்கள். கேள்விப்படுகிறார்கள். ஆனால் ஏனோ முயற்சிப்பதில்லை. தினப்படி வாழ்க்கை நிகழ்வுகளில் சலசலப்பதில், அல்லது பதில் சொல்லி நேரத்தைக் கடத்துவதில் மும்முரம் காட்டுவதே வழக்கமாகிவிட்டிருக்கிறது நம்மில் பலருக்கு. இதையெல்லாம் தாண்டி, அலுவலக, அவசர காரியங்கள் ஏதும் இல்லையெனில், வீட்டிலேயே ஒரு மூலையில் அமர்ந்து சில மணிநேர மௌனத்தை முயற்சிக்கலாம். வீட்டில் யாருமில்லாத தனிமை கிடைப்பதும் ஒரு பாக்யம்! ஆனால் அப்பேர்ப்பட்டோர் அதன் அருமையை உணராதவர்களாகவே இருப்பார்கள், பெரும்பாலும். யாரையாவது வெளியே பார்த்து நலம் விஜாரித்தால் இப்படி சில சமயங்களில் பதில் வருவதுண்டு: ”வீட்டுல யாருமில்ல சார். ஊருக்குப் போயிருக்காங்க. தனியா ஒக்காந்துகிட்டு என்ன செய்ய? டிவி-யையே எவ்வளவுதான் பாக்க? அதான் இப்படி ஒரு ரவுண்டு போய்ட்டுவரலாம்னு..!” தனிமையைக் கண்டு பயப்படுபவர்கள், மௌனத்தை எப்போது சந்திப்பார்கள்?

**