என்னத்தச் சொல்ல

கலாபூர்வம் என்றால் என்ன
என்று விளக்க முற்படுகிறார் சோ.தர்மன்
புதுமைப்பித்தனைத் தொட்டுச் சென்று
மா.அரங்கநாதனிடம் மயங்குகிறார்
உணர்வுபூர்வமாக கலாபூர்வத்தில்
உறைந்திருக்கையில்
‘டங்’ என்ற பெருஞ்சத்தம்
இடியாய் விழுந்தது சமையலறையிலிருந்து
பாத்திரம் தற்செயலாகத்தான் விழுந்ததா
இல்லை என்
படிப்புக்கெதிராகவே அதிர்ந்ததா

**

வெளியின் ஒளி

போட்ட வட்டத்துக்குள்
நின்றுகொண்டிருக்கலாம் நான்
இருந்தாலும் வட்டத்துக்கு
வெளியேதான் என் கண்கள்
நிலத்திலேதான் ஊன்றியிருக்கின்றன
என் கால்கள்
அதற்காக
நிலத்தையே பார்த்துக்கொண்டிருப்பவன்
என்றா நினைத்துவிட்டாய் ?

**

மாயாஜாலம்

அதைத் தவிர
வேறொன்றுமில்லை
மூதாதையர்
பெற்றெடுத்து வளர்த்து
உலகில் உலவவிட்டோர்
மனைவி, மக்கள்
மனதுக்குப் பிடித்தமானோர்
மற்றபிற உறவுகள்
அனைத்தும் மாயை
மாயைதான் எல்லாம் எனப்படுகிறது
நீயும்தான் இந்தப் பெரும் சுழலில்
இந்த நானும் கூடத்தான்
மாயை தன்னையே
மாயையாகப் பார்த்து
மாயமாகும் நேரமிது

**

சஞ்சலம்

தெரியவில்லை என்றானது
தெரிந்ததுபோல் தெரிந்தது
இருந்ததுபோல் இருந்தது
இல்லை என்றானது
எதிரே வருவது மனிதனோ
எள்ளி நகையாடும் விதியோ
மனதில் தோன்றுவது தெளிவோ
மாளாத எண்ணங்களின் கழிவோ

**

இடறும் காட்சி

விடுமுறை தினத்தின் காலை நேரப் பூங்கா
சுற்றிலும் பச்சை இளமரங்கள்
மலர் பொங்கும் செடிகொடிகள்
கூட்டம் கூத்தடிக்கிறது
சிறுவன் ஒருவனின் கையில்
அழகாய் ஜொலிக்கும் மலர்
பறித்தவன் எடுத்துவந்து
பக்கத்து பெஞ்சில் உட்கார்கிறான்
பூவிலிருந்து ஒவ்வொரு இதழாக
பிய்த்துப் பிய்த்துப் போடுகிறான்
சிதைப்பதிலுமா ஒரு தனியின்பம்
நிமிடத்தில் குப்பையாகிவிடுகிறது
நிஜத்தின் சுடராய் ஒளிர்ந்த மலர்
ஒன்றும் நடக்காதது மாதிரி
எழுந்து போய்விடுகிறான்
என்ன நடக்கிறது இவ்வுலகில்
பூக்களை இப்போதெல்லாம்
யாரும் ரசிப்பதில்லையா
வாசத்தில் வசப்படுவதில்லையா
அபரிமித அழகென மயங்கி
சூடிக்கொள்வதில்லையா
அலட்சியப்படுத்தவும்
அழித்து எறிவதற்கும்தானா
இயற்கையின் சிருஷ்டி
இப்போதெல்லாம் ?

**

என்னென்னவோ

என்னென்னவோ சொல்கிறான் மனிதன்
என்னென்னவோ செய்கிறான்
என்னென்னவோ செய்துவிட்டதாகவும்
எண்ணிக்கொள்கிறான்
இன்னும் என்னென்னவோ
செய்தும் விடுவானாம்
எல்லையே இல்லையாம்
அவனுடைய செயல்திறனுக்கு

மாலையில் மெதுவாகக் கீழிறங்கும்
செவ்வாரஞ்சுப் பந்தை
சற்று நேரத்திற்குத்
தன் தலையில் தாங்கி நிற்கிறது
தூரத்துப் பனைமரம்

**