டி 20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி

ஜூன் 9 -லிருந்து தொடங்கும் தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடருக்காக, இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்மில் இல்லாத ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஷிகர் தவன், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், டி.நடராஜன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, போன்ற முக்கிய வீரர்கள்  இல்லை. கடைசி இருவரும் காயம் காரணமாக பரிசீலிக்கப்படவில்லை.

புதுமுகங்களாக இருவர். தன்னுடைய அதிவேகப் பந்துவீச்சினால் ஐபிஎல்- இல் பேட்ஸ்மன்களைப் பயமுறுத்தி, காயப்படுத்தி கைங்கர்யம் செய்துவரும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் (ஸன்ரைசர்ஸ் ஹைதராபாத்), எதிர்பார்க்கப்பட்டபடி இந்திய அணிக்கு முதன்முறையாகத் தேர்வாகியிருக்கிறார். 150-கி.மீ.க்கு மேல் வீசி வேகத்தில் மிரட்டும் மாலிக்கை வைத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்களை கதிகலங்க வைக்க நினைக்கும் தேர்வுக்குழுவின் முயற்சி. விளைவு எப்படி இருக்கும் என்பது ஜூன் இரண்டாவது வாரத்தில் தெரிந்துவிடும். குறிப்பிடத் தகுந்த இளம் வேகவீச்சாளரான (பஞ்சாப் கிங்ஸின்) அர்ஷ்தீப் சிங் அணிக்குள் நுழைந்துள்ளார். இவர் ஐபிஎல் இல் அதிக விக்கெட் சாய்க்கவில்லை எனினும், டெத் ஓவர்களில் கஞ்சத்தனமாக ரன் கொடுத்து எதிரிகளைத் திணறவைக்கும் இவரது திறன் தேர்வுக்குழு உறுப்பினர்களைக் கவர்ந்துவிட்டது. வந்தார் உள்ளே.

சிலர் எதிர்பார்த்த, மொத்தத்தில் ஆச்சர்யமான ஒரு தேர்வு தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக். உள்நாட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கினாலும், கடந்த 3 வருடங்களாக கவனிக்கப்படாத இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன், ஐபிஎல்-இல் காட்டிய அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டினால் அதிரடியாகக் கொடுத்திருக்கிறார் ரீ-எண்ட்ரி. வரவேற்கப்படவேண்டியவர். கூடவே காயம் காரணமாக சமீபகாலமாகத் தேர்வாகாதிருந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா மீண்டும் அணியில். 6, 7 போன்ற பேட்டிங் வரிசை இடங்களில் யார் ஆடுவார்கள்? கார்த்திக்கா, பாண்ட்யாவா என்பது போகப்போகத்தான் தெரியும். இருவரும் பௌலிங்கை துவம்சம் செய்யக்கூடியவர்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில் அஷ்வினுக்கு ஏனோ இடமில்லை. அவரிடத்தை குல்தீப் யாதவிடம் கொடுத்தது சரியாகப்படவில்லை. மற்ற ஸ்பின்னர்கள் அக்ஷர் பட்டேல்,, யஜுவேந்திர சாஹல். ரவி பிஷ்னோய்.

வலிமையான தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் ஆல்ரவுண்டர்கள்/அதிரடிகள் எனக் கூட்டியிருக்கிறார்கள். அணி கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது:

கே.எல். ராஹுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்) இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர்பட்டேல், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

**

’சொல்வனம்’ YouTube channel சிறுகதைகளில் ஏகாந்தன்

’சொல்வனம்’ கலை, இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதைகள் – ’பின்னிரவின் நிலா’ மற்றும் ’நிஜமாக ஒரு உலகம்’ – இரண்டும் இப்போது ‘சொல்வனம் யூ-ட்யூப் சேனலில்’ பார்க்க/கேட்கக் கிடைக்கின்றன. நன்றி : சொல்வனம் ஆசிரியர் குழு / சரஸ்வதி தியாகராஜன்.

YouTube லிங்க் :

இணையத்தில் வாசிக்க விரும்புபவர்கள் solvanam.com சென்று வழக்கம்போல் வாசிக்கலாம்.

**

உனக்காக .. எல்லாம் உனக்காக ..

ஐயா! மாட்டேன். என்னால் இது முடியாது.

கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon).

ஏன் முடியாது?

என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை…

ஒவ்வொரு மாணவனையும் தன் தந்தையைப்பற்றி கொஞ்சம் எழுதிக் காட்டச் சொல்லியிருந்தார் அன்று. அதற்குக் கிடைத்த ஒரு சிறுவனின் பதில் இது. திடுக்கிட்ட ஆசிரியர், மற்ற சிறுவர்கள் பதற்றத்தோடு திரும்பிப் பார்க்க,  அவனை நெருங்கினார். மெல்ல அவன் தலையை வருடிக்கொடுத்தார். மிருதுவாக, அழுத்தமாகச் சொன்னார்: ‘இதைப்பற்றி அதிகம் மனதை வருத்திக்கொள்ளாதே. இது ஒரு தடையாக இருக்கக்கூடாது உன் வாழ்வில்..” என்றார் எச்சரிக்கும் தொனியில்.

தன் பள்ளி ஆசிரியரை பிற்காலத்தில் நினைவில் கொள்கிறான், இப்போது வளர்ந்துவிட்டிருக்கும் அந்த இளைஞன். ஆசிரியரை மட்டுமா? அவன் அம்மா? சாதாரண மனுஷியா அவள்? அவளன்றி இன்று, நின்று பேசுவானா அவன்?

அமெரிக்க வெளிக்குக் கீழே, கரீபியத் தீவுகளின் (Carribean Islands) சிறுநாடுகளில் ஒன்றான ஜமைக்கா. எங்கோ ஒரு கிராமத்தில் வர்ணத்தையே பார்த்திராத தகரம். அதை வளைத்தும், நிமிர்த்தும் ஓருவாறு ‘கட்டப்பட்ட’ வீடு. எத்தனை மழை  இரவுகள். நாலாபுறமும் தண்ணீர் வழிய, அம்மாவின் படுக்கை நனைந்துவிடாது, அதை ’வீட்டின்’ நடுவில் இழுத்துப்போட்டுத் தூங்கவைத்திருக்கிறான். அவளும் எத்தனை மறுத்திருக்கிறாள். ’நாளைக்கு பள்ளி செல்லவேண்டும். நீ தூங்கு கொஞ்சமாவது’ என்று. அவளுக்கும் ஓய்வு வேண்டுமே. அடுத்த நாளும் வேலைக்குச் செல்லவேண்டாமா அவள்? பாத்திரம் தேய்க்கணும், துணி தோய்க்கணும், இன்னும் ஏகப்பட்ட எடுபிடி வேலைகளை மற்றவர்களுக்கு செய்தால்தானே இந்த வீட்டில் அடுப்பு  சூடாகும்? தட்டில் ஏதாவது விழும்.. பசி கொஞ்சமாவது தணியும்? என் அம்மா முழித்துக்கொண்டிருக்க, நான் தூங்குவதா? எப்படியெல்லாமோ வாதாடி அவளைக் கண்ணயர வைத்துவிட்டு, நீண்ட இரவுகளில் கூரையின் சொட்டும் மழைநீரைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான். மற்ற அம்மாக்களைப் போலல்லாது, இவ்வளவு கஷ்டப்படுகிறாளே இவள்.. என்று தீரும், விலகும் இந்தத் துன்பம். அம்மா.. நான் ஏதாவது செய்வேன் உனக்கு ஒரு நாள். நீ மேலும், மேலும் கஷ்டப்படாது பார்த்துக்கொள்வேன்…

அங்கே ஒரு தொலைக்காட்சி சேனல் தன்னை அணுகியபோது, அந்த அம்மா வேதனை நினைவுகளை வலியுடன் மீட்கிறாள். காதலியாக ஒருவனுக்கு இருந்தவள், ஒருநாள் கர்ப்பமானாள். அறிந்த அவன் அதிர்ந்தான். சொன்னான். ’நிறுத்து இதை உடனே. போய் அபார்ஷன் செய்துகொள்!’ திடுக்கிட்டது அவளது மென்மையான பெண்மை. ’முடியாது!’ என்றது தீர்க்கமாக. கோபத்தில் எரிந்து விழுந்தான். போனான். போயே விட்டான். ஏழை. தான் விரும்பியவனைத் தவிர வேறு உலகறியாத பெண். துணையேதுமின்றி அபலையானாள். வீடுகளில் வேலை செய்வது, வயிற்றைக் கழுவுவது இப்படிச் சென்றது கொடுங்காலம். இந்த ஒரு மாதம் போய் விடட்டும் எப்படியாவது.. இன்னும் ஒரு மாதம். இதோ இந்த மாதந்தான்… அப்பாடா, பெத்துட்டேன் என்று தனக்கென வந்து பிறந்த உயிரை ஆசையோடு பார்த்தாள். ஏதோ கொடுத்தாள், ஊட்டிவிட்டாள், வளர்த்தாள், அவளுக்குத் தெரிந்தபடி, வாய்த்தபடி..

அம்மா.. அம்மா என்றவாறு வளர்ந்து உருகும் தன் பையன் ஒரு நாள் கையில் ஏதோ பிடித்தபடி பள்ளியிலிருந்து வருவதைப் பார்த்தாள். கிரிக்கெட் பேட்! அம்மாவைப் பார்த்து மட்டையைத் தூக்கியவாறு சிறுவன் சொன்னான்: ”அம்மா உனக்கு நான் கிரிக்கெட் ஆடி சம்பாதித்துப் போடுவேன். ஒரு இடத்தில் அமைதியாக உன்னை உட்காரவைத்து சாப்பிட வைப்பேன்..” அந்தத் தாய் கண்கலங்க நினைவு கூர்கிறாள். ”எனக்குக் கோபம் வரவில்லை. நம்பிக்கை வந்தது. இவன் செய்வான்.. செய்யக்கூடியவன்தான் இந்தப் பிள்ளை! என் மகன்….”

ஜமைக்கா, ட்ரினிடாட், பார்படோஸ் போன்ற கரீபிய உலகின் பொருளாதார வளர்ச்சியில்லாத சிறுசிறு நாடுகளில், நம்நாட்டிலும், பிற வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பெருவணிகம் என்று ஏதுமில்லை. சிறுதொழில்கள் உருப்படியாக நடத்தப்பட்டாலே பெரும் விஷயம் அங்கெல்லாம்.  மக்கள் நலம் சார்ந்த, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களெல்லாம் அரசாங்கங்களிடம் இல்லை அங்கே.  சினிமா என்கிற தொழிலோ அதுசார்ந்த கொழுத்த பணக்காரர்களான ஸ்டார்களோ இல்லை. கொஞ்சம் வசதியானவர்கள், பணக்காரர்கள், புகழ்பெற்றவர்கள் என்றால், அவர்கள் அங்கே கிரிக்கெட் ஆட்டக்காரர்களாகத்தான் இருக்க முடியும் என்கிற விசித்திர நிலை, கிட்டத்தட்ட. அத்தகைய பின்புலத்தில், கரீபியச் சிறுவர்கள் ’நான் ஒருநாள் பெரிய கிரிக்கெட்டராக வருவேன், பெரும் பணம் சம்பாதிப்பேன், என்னைப்பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசுவார்கள்..’ என்றெல்லாம் கற்பனை செய்வது சகஜம்.

அன்று அந்தத் தாயின் முன் அப்படிக் கிரிக்கெட் மட்டையை உயர்த்திய அந்தச் சிறுவனின் வாழ்க்கை எளிதாக அமைந்துவிடவில்லை. பல சங்கடங்கள், போட்டிகள், தடைகள். சோதனைகள். ஒவ்வொரு முறை மனம் வெதும்பியபோதும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறான். ’நான் இதை எனக்காகப் பிரதானமாகச் செய்யவில்லை. அந்தப் பெண்ணிற்காக, என் தாய்க்காக செய்துகொண்டிருக்கிறேன். என் தங்கைக்குமாகவும்..’ சிபிஎல் என்கிற கரீபியன் ப்ரிமியர் லீக்  டி-20 கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் பெயரும் வாங்கிவிட்டான். வெஸ்ட் இண்டீஸுக்காகத் தேர்வாகி ஆடியுமிருக்கிறான் சில ஆட்டங்கள். ஐபிஎல்-இல் டெல்லி அணிக்காக நேற்று மட்டையைப் பிடித்தவன், தன் அம்மாவை நினைத்தானோ.. அப்பாவை நினைத்தானோ.. என்ன நடந்ததோ அவன் மனதில். கிரிக்கெட் மைதானத்தில் பொறி பறந்தது. எதிரணியை துவம்சம் செய்து சிக்ஸர்களாகப் பறக்கவிட்டான். அவுட் ஆகாது மும்பை மைதானத்தில் கம்பீரமாக நின்றான். கைதட்டல்களுக்கிடையே பெவிலியன் திரும்பினான் ரோவ்மன் பவல் (Rovman Powell).

எது எப்படி இருப்பினும், தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டான் பிள்ளை. தன் மகன் கட்டிய வசதியான வீட்டில் அம்மா உட்கார்ந்து, சற்றே நிம்மதியாகத் தன் கடைசிகாலத்தை அனுபவிக்குமாறு செய்துகொடுத்திருக்கிறான். அப்பாவைப்பற்றி அவன் எப்படி நினைக்கிறான் என்பது தனிமனிதனாக அவன் யாரென்று கொஞ்சம் சொல்கிறது: ” தேடுதலை நிறுத்திவிட்டேன். விந்தை விதைத்தவனுக்கும் நன்றி. அவனன்றி நான் இங்கே வந்திருக்கமுடியாதல்லவா…”

**

விடாத அது …

இடதுபக்கம் மஸாலா நூடுல்ஸ். வலதுபக்கம் சிக்கன் நூடுல்ஸ். இடையிலே உப்புமா, கறுப்புக் காப்பி. இண்டிகோவில் சீட் 1-இ, நல்ல லெக்-ரூமுடன் வசதியாக இருந்தது. மஸாலாவை முடித்தபின் லேப்டாப்பை முடுக்கி, ஹாலிவுட் சினிமாவில் உறைய ஆரம்பித்திருந்தான், ஃபிட்னெஸ் பற்றி அதிகம் கவலைப்படாதவன் போன்ற அமைப்பிலிருந்த அந்த இளைஞன். வெந்நீர் விட்டுக் கொடுத்த விமானப்பணிப்பெண், அஞ்சு நிமிஷம் கழித்து சாப்பிடனும்னு சொல்லியும், ஓரிரு நிமிஷம்கூட பொறுக்கமாட்டாமல் பயங்கரப் பசியில் சிக்கன் நூடுல்ஸை உள்ளே தள்ளி, தீர்த்துக்கட்டிவிட்டு, லேப்டாப்பில் கேம் ஒன்றில் களிக்க ஆரம்பித்திருந்தான் இந்தப்பக்கத்து ஒல்லி. நடுவிலே, உப்புமா முடித்து, காப்பியை ரசித்தவாறு விரித்த புத்தகத்தோடு நான். காட்சி.. கொஞ்சம் விசித்திரமாகத்தான் எனக்கே இருந்தது. புத்தகத்தின் தலைப்பை யாரும் கவனித்திருந்தால், என்னை ஒரு மாதிரி ஏற இறங்கப் பார்த்திருக்கக்கூடும். படிக்கிறதுக்கு இந்த ஆளுக்கு கெடச்சுது பாரு ஒரு புஸ்தகம்.. என்றோ, என்ன இது.. அபசகுனம் மாதிரி பக்கத்தில் ஒக்காந்து இதைப் படிக்கிறான் இந்த மனுஷன்.. நம் கண்ணில்வேற பட்டுத் தொலச்சிருச்சே.. ஒருவேளை நமக்கு ஏதாவது ஆபத்து.. சே.. சே.. அப்படியெல்லாம் நடக்காது.. என்றெல்லாம் அவர்களுக்குள் சிந்தனை ஒரு இடத்தில் நில்லாது ஓடியிருக்கக்கூடும்.

டெல்லி போனபின், வீட்டில் ஆர, அமர  மெல்ல வாசிக்கவேண்டும் என்று கொண்டுவந்திருந்த புத்தகம்.  ஆவலில் ஃப்ளைட்டிலேயே திறந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். பலரும் சற்றே தூரத்தில் இருந்தாவது பார்க்க நேருகின்ற, அவ்வப்போது பேச வாய்க்கின்ற, அல்லது நினைத்து பயப்படுகின்ற, பொதுவாக உள்ளே செல்ல விரும்பாத கருத்தாழம் காட்டும் ஒரு  நூல். சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய Death – An inside story (Penguin India). பிறப்பெடுத்துவிட்ட ஒவ்வொரு ஜீவனாலும் தவிர்க்கமுடியாத ஒரு இறுதி நிகழ்வு.. மரணம்.

வந்தே தீர்க்கும் வயோதிகம், உடலை விட்டுவிட்டு உயிர் நீங்கிடும் உன்னதம் போன்ற, பயங்கர அல்லது மர்மம் நிறைந்த (ஆளாளுக்கு ஏற்றபடியான) தருணங்களை சந்திப்பதற்கான ஆயத்தங்கள் பற்றியெல்லாம் ஆதிகாலத்து இந்து மரபின் ஆழமான அவதானிப்புகள், அது சார்ந்த தார்மீக வழிநடத்துதல்கள் எனவும், தொடர்பான சடங்குகள்பற்றியும், இந்தக்கால அவசரக்குடுக்கைப் பிரகிருதிகளுக்குக் கொஞ்சம் சொல்லப் பார்க்கும் புத்தகம். மனிதவாழ்க்கை எனும் பெருவெளியை சீரியஸாக கவனித்துவரும் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய முக்கியமான நூல் எனத் தோன்றுகிறது. எங்கே பக்கம் திறந்ததோ அங்கே நிறுத்தி, திட்டுத்திட்டாக மனம் போனபடிக் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் பயணத்தின்போது. நிதானமாகத் தொடர்வேன் சில நாட்களில் என்று நினைக்கிறேன்

33 -ல் புறப்பட்டிருந்து, சுமார் இரண்டரை மணிநேரத்தில் 38-ல் இறக்கிவிடப்பட்டேன். பாய்லருக்குள் தலையை விட்டது போல் ஒரு அதிர்ச்சி. டெல்லி ஏர்ப்போர்ட்டின் டர்மினல் 1 வித்தியாசமாக இருந்தது. பேக்பேக்குடன் மட்டுமே பெங்களூரிலிருந்து வந்ததால் வேகமாக வெளியேறி, வாசல் கவுண்ட்டரில் மேஹ்ரூவை புக் செய்தேன். டாக்ஸியில் அமர்ந்ததும் ஓட்டுநரை சற்று எரிச்சலோடு கேட்டேன். ஏசி சல் ரஹா ஹை ?.. யா நஹி(ன்)!  சற்றே அதிர்ந்தவனாய், ஹா(ன்) ஜி.. சல் ரஹா ஹை! என்றான் உஷாராக அந்த இளைஞன். உள்ளே மெதுவாக நோட்டம் விட்டேன். மஹிந்திரா எலெக்ட்ரிக்.. புது வண்டி! இருந்தும் எனக்கு சந்தேகம் ஏசிபற்றி, அதன் திறன்பற்றி. நான் ஏசி வென்ண்ட்டையே பார்ப்பதைக் கண்டதும் கொஞ்சம் கூட்டிவைத்து அவன்பாட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தான், டெல்லியின் கோடையில் ஊறி விளைந்திருந்த அந்த தென்னகத்து இளைஞன்.

**