வாசிப்பின்பம்

ஆரம்பத்தில் சிறுவயதுப் பிள்ளைகளைத் தூங்கவைக்க பாட்டி, தாத்தா சொன்ன ராஜா-ராணி கதைகள். பிறகு வந்தன நீதிக்கதைகள் – பிஞ்சு மனதிற்கு அந்தக்கால ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் அரும்பங்களிப்பு. பிறகு மொழி பிடிபட ஆரம்பித்தபின், தானே ரசித்துப் படித்தல் துவங்கியது. அப்போது உள்ளே புகுந்தன வணிகப்பத்திரிக்கைகளின் வாயிலாக சராசரி எழுத்தாளர்களின் குடும்பக்கதைகள். பலர் இப்படி ஆரம்பித்திருந்தாலும் மேலும் வாசிப்பில் தேர்ந்து கல்கி, நா.பா. அகிலன், சாண்டில்யன், சிவசங்கரி, வாஸந்தி என ஹைஸ்கூல் படித்து முடித்தனர். சிலர் அதனையும் தாண்டி, ஜெயகாந்தன், லாசரா, சுஜாதா, சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் என பட்டப்படிப்பும் அதற்கு மேலும் செல்லலாயினர். அவரவர்க்கு வாய்த்த மொழியின்பம்!

முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்த அனுபவம்பற்றி அவ்வப்போது கொஞ்சம் எழுதலாம் என்கிறது மனம். முன்னோடி எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிடுவது ஆதவன், தி ஜானகிராமன், நீல.பத்மனாபன், எம்.வி.வெங்கட்ராம்,மௌனி, அசோகமித்திரன், கந்தர்வன், லாசரா, ஆர்.சூடாமணி போன்றவர்களை. இவர்களில் பலரின் எழுத்துக்கள் தமிழின் புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகியவற்றில் அனேகமாக வெளிவராதவை. அல்லது எப்போதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் அல்லது தீபாவளிமலரில் போனால்போகிறதென்று ஒரு கதையைப் பிரசுரித்திருப்பார்கள். இலக்கியத்தரம் வாய்ந்த இத்தகைய படைப்புகள் பெரும்பாலும் சிறுபத்திரிக்கைகள் என அழைக்கப்பட்ட, மிகக்குறைவான பேர்மட்டும் வாங்கிப் படித்த இலக்கியப் பத்திரிக்கைகளில்தான் வெளிவந்தன. சரஸ்வதி, எழுத்து, கணையாழி, தீபம், ஞானரதம், கசடதபற, கனவு, சுபமங்களா போன்ற இலக்கியப் பத்திரிக்கைகள் இயங்கிய காலமது.

தமிழின் புதிய எழுத்தாளர்கள் அப்போது வித்தியாசமான, தரமான படைப்புகளைத் தர ஆரம்பித்திருந்தார்கள். தமிழ் உரைநடையில் புதுப்புது உத்திகளைப் புகுத்த முனைந்தார்கள். எழுத்து நடை, கதையின் கரு, சொல்லாடல் என ஜனரஞ்சக எழுத்திலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது இவர்களின் எழுத்து. இத்தகைய எழுத்தைப் பொதுவெளியில் அறிமுகம் செய்தால்தானே சராசரி வாசகரில் சிலராவது இந்தப்பக்கம் திரும்புவார்கள்? நல்ல எழுத்தை நாடுவார்கள்? ம்ஹூம்.. தமிழ்நாட்டில் இதற்கெல்லாம் சான்ஸே இல்லை. ’நம்ப வாசகர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா!’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம்? இலக்கியத்தை இங்கே யார் கேட்டது?

இத்தகைய இலக்கிய எழுத்தாளர்களில் சிலர், தங்கள் கதைகளில் ஒன்றாவது, நிறையப்பேர் வாசிக்கும் வார இதழ்களில் பிரசுரமாகவேண்டும் என விரும்பி, அதை அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைப்பர். ஆனால் அவை பிரபல இதழ்களால் பெரும்பாலும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. கதைகள் திரும்பி வந்தன. அல்லது ஒரு பதிலும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டன. யோசித்துப் பாருங்கள். அந்தக்காலத்தில் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், பென்-ட்ரைவ்,பிரிண்டிங், காப்பி எடுத்து வைத்துக்கொள்ளும் வசதி எதுவும் கிடையாது. சொந்தமாகப் பேப்பர், நோட்புக் வாங்கிவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக ராப்பலாக உட்கார்ந்து பேனாவினால் எழுதினார்கள் நமது எழுத்தாளர்கள். அதுவும் ஒரே ஒரு காப்பி; அதனை வணிகப்பத்திரிக்கைக்கு என்று அனுப்பி, அவர்கள் அதனைப் பிரசுரிக்காததோடு, திருப்பியும் அனுப்பாதுபோய்விட்டால், மாய்ந்து மாய்ந்து எழுதிய படைப்பாளியின் கதி? அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே? எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே? அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள்! அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ? ஏழை எழுத்தாளனின் சோகத்தை யாரறிவார்?

இயலாமையிலும், வறுமையிலும் கிடந்து உழன்றுதான் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளால் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழுக்காக நாங்கள் இதைச்செய்தோம், அதைச் செய்தோம் என்றெல்லாம் அரசியல்வாதிகளைப்போல் அவர்கள் ஒருபோதும் பிதற்றியதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என எழுதிப்போயினர் தமிழ் முன்னோர். இவர்களின் உன்னத எழுத்துக்கள் சேகரம் செய்யப்பட்டு பிற்பாடு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும்ம் வாசிக்க சில கிடைக்கின்றன என்பது நாமும், வரப்போகிற இளைய தலைமுறையினரும் செய்த பாக்யம் என்றே சொல்லலாம். வாருங்கள், வாய்ப்பு, அவகாசம் கிடைக்கும்போதெல்லாம், தமிழின் சிறப்பான எழுத்துப்படைப்புகளைப் படித்து மகிழ்வோம். Pleasure of text என்கிறார்களே, அந்த வாசிப்பின்பத்தை அவ்வப்போது அனுபவிப்போம்.

**

பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..

தேடி நான் போனதில்லை. பால்யத்தில், அவ்வப்போது கோவிலில், கல்யாணவீட்டில் கட்டப்பட்டிருக்கும் லௌட் ஸ்பீக்கரில் இருந்து கணீர் என ஒலிக்கும்; இசையோ, பாடலோ சிந்தையை ஆட்கொள்ளும். இப்படித்தான் முருகன் பாடல்கள் என்னையறியாமலேயே எனக்குப் பழக்கமானது. எத்தனையோ பக்திப் பாடல்களைக் கேட்டிருப்பினும் முருகன் பாடல்கள்தான் என்னை வசீகரித்தவை. கவர்ந்தவை. பாடல் வரிகளும், பாடிய குரலும், இசையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும்.

ஆத்மார்த்த முருக பக்தர்களுக்கும், என்னைப்போல் அரைகுறைகளுக்கும் டி.எம்.சௌந்தரராஜன், கேட்காது அளித்த அருட்கொடை இந்தப் பக்திப்பாடல்கள். சிலபாடல்கள் மிகச் சாதாரண வரிகளை உடையவைதான் என்பதனையும் கவனித்திருக்கிறேன். ஆனால் டி.எம்.எஸ். தன் குரலினால், பக்தியினால் அவற்றிற்கு உயிரூட்டி கேட்பவர்களின் மனதில் உலவிக்கொண்டிருக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டார். சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், இசை அமைப்பாளரையும் (சில பாடல்களுக்கு டி.எம்.சௌந்திரராஜனே இசை அமைத்திருக்கிறார்) இங்கு பாராட்டவேண்டும்.

என் நினைவில், சிறுவனாய் சுற்றிக்கொண்டிருக்கையில் அடிக்கடிக் கேட்டு எனையறியாமல் முணுமுணுத்த பாடல்கள்: ’உள்ளம் உருகுதைய்யா..முருகா உன்னடி காண்கையிலே..’ மற்றும் ’வினாயகனே வினை தீர்ப்பவனே..’ (அம்பியைச் சொல்கையில் அண்ணனை சொல்லாது விட்டால் எப்படி?). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ? இல்லை, கேட்டவருக்கெல்லாம் இப்படித்தானா? பாட்டுபாட்டாகப் போட்டுக் கேட்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்தானா அந்த முருகன் ?

அழகென்ற சொல்லுக்கு முருகா… உன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

-டி.எம்.எஸ். கரைந்துவிட்டார் இந்தப் பாட்டில்.

சொல்லாத நாளில்லை ..
சுடர்மிகு வடிவேலா..,
சுவையான அமுதே
செந்தமிழாலே..

என்று ஆரம்பிக்கும் இன்னொரு டி.எம்.எஸ். பாடலும் இதே போன்று நம்மை அள்ளிச்செல்லும்.

‘முருகனைப்பற்றி ஒரு பக்திப்பாட்டு எழுதிக்கொடுய்யா’ என்றார்கள். நானும் அவசர அவசரமாய் எழுதிக் கொடுத்தேன். அது டி.எம்.சௌந்திரராஜனிடம் போய்ச்சேர, அவர் அதைப் படித்துப்பார்த்துப் பிடித்துப்போக, தானே அதற்கு இசை அமைத்து தன் இனிய குரலால் பாடி, யாரும் அறிந்திராத என்னை தமிழ்கூறும் உலகத்துக்கெல்லாம் அறிமுகப்படுத்திவைத்தார் என்பதாக ஆனந்தவிகடன் தொடரில் எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அந்தப் பாடலின் ஆரம்பம் இது:

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே.. உனை மறவேன்…

இவற்றைப்போன்றே இன்னொரு முருகன் பாடலும் மனதை வருடிப்பார்த்தது சிறுபிராயத்தில். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அப்பாடலை இப்போதும் சிலசமயங்களில் கேட்கிறேன் ஆனந்தமாக:

பன்னிரு விழிகளிலே..
பரிவுடன் ஒரு விழியால்
எனை நீ பார்த்தாலும் போதும் – வாழ்வில்
இடரேதும் வாராது எப்போதும்…
முருகா…

கீழ்வரும் பாடலைக் கேட்டும் யாரும் மயங்காதிருக்க முடியுமா:

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்…
திருச்செந்தூரிலே வேலாடும் – உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்…

இளமை தவழும் ஜெயலலிதாவும் கே.ஆர்.விஜயாவும் வள்ளி, தெய்வானையாக மின்னும் 1967-ல் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் வரும் பாடலிது.. பூவை செங்குட்டுவனின் பாடலை ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்கள் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், பி.சுசீலாவும். இசை தந்து அன்பு காட்டியவர்: கே.வி.மகாதேவன்.

காங்கோவின் தலைநகர் கின்ஷாஸாவில் ஒரு ஹிந்துக்கோவில் உள்ளது. அங்கே உள்ள கடவுள்களில் பாலமுருகனும் ஒன்று. வாரம் ஒரு முறை அல்லது திருநாள் எனத் தமிழர்கள் கூடி, ஒரு மணிநேரம் பக்திப் பாடல்களைப் பாடுவது உண்டு. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் தொண்டையை சரிசெய்துகொண்டு சில பக்திப்பாடல்களைப் பாட முயன்றிருக்கிறேன். என் பால்யப்பிராயத்து நினைவுகளைக் கிளறி நெட்டில் வரிகளைத்தேடி பாடிய காங்கோ நாட்கள் அவை. தமிழ்நாட்டில் சிறுவயதில் கேட்கவைத்து, காங்கோவில் போய் பாடவைத்துள்ளான் அந்தக் கார்த்திகேயன் !

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா –என்கிற பாட்டில் இப்படி சில வரிகள் வரும்:

ஹர ஹரா ஷண்முகா முருகா..
ஹர ஹரா ஷண்முகா முருகா – என்று
பாடுவோர் எண்ணத்தில்
ஆடுவாய் முருகா..!

குழந்தையே முருகா! இப்படிக் குதூகலமாய் ஆடிக்கொண்டிரு எப்போதும்..

**

அர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்

டெல்லியிலோ, பெங்களூரிலோ எங்கிருக்கிறேனோ அங்கே, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்கு பொதுவாக சனிக்கிழமைகளில் செல்வது வழக்கம். டெல்லியில் தங்குகையில் சில வாரங்களில் சனியோடு, செவ்வாய், வியாழனும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. கோவிலில் ஏதாவது விசேஷம், ஏகாதசி, ப்ரதோஷம், சகஸ்ரநாமப் பாராயணம் என ஆன்மிக நண்பர்களின் அழைப்புவேறு இந்த ஃப்ரிக்வென்ஸியை அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் பக்திப் பரவசமாகிவிட்டதாக அர்த்தமில்லை. எப்போதும்போல்தான் இருக்கிறேன்.

வயதான அனுபவஸ்தர்களும் இளைஞர்களுமென அர்ச்சகர்களும், குருக்கள்களும், சிவாச்சார்யார்களும் முறையே அந்தந்தக் கோவில்களுக்கேற்றபடி, கோவில், ஊர்வழக்கப்படி அமைக்கப்பட்டிருக்கும் கடமைகளை/ தினப்பூஜைகளைச் செய்கின்றனர், பேருக்கு ஏதோ சம்பளம் என வாங்கிக்கொண்டு. பல சிறிய கோவில்களில் மாத சம்பளம் என ஒன்றும் தரப்படுவதுமில்லை. பெரும்பாலான கோவில்களில் திருவிழாச்சமயம் தவிர வேறு கூட்டமோ அது தரும் வருமானமோ அர்ச்சகர்களுக்கு இருப்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழ்மை நிலையிலும் கண்ணியம் காத்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்துவருகின்றனர். இவர்களில் சிலர் தள்ளாடும் வயதினர். போற்றுதலுக்குரிய இறைத்தொண்டர்கள்.

இதுபோன்றே கிராமங்களில் இருக்கும் அய்யனார், முனீஸ்வரன், கருப்பர், பிடாரி, மாரியம்மன் கோவில்களிலும், இன்னபிற தேவதைகளுக்கான கோவில்களிலும் பரம்பரைப் பூசாரிகளும் அவர்கள் வழிவந்தோரும் காலங்கலமாகப் பணியாற்றிவருகிறார்கள். (நான் கிராமத்தில் என் இளம்பிராயத்தைப் போக்கியவன்; கிராம வாழ்வின் பல்வேறு தளங்களில் விருப்பத்தோடு சஞ்சரித்தவன், ஆதலால் அறிவேன்.) இவர்களில் பலர், இக்கட்டில், மன உளைச்சலில் இருக்கும் ஒன்றுமறியா ஏழை, எளியோருக்கு வேண்டிய நல்போதனை செய்து, உரிய தெய்வங்களுக்கான பரிகார பூஜைகள் செய்வித்து, அந்த ஏழைகளுக்காகப் பிரார்த்தித்து அவர்களுடனே வாழ்பவர்கள்; சம்பளம் என்பதாக இவர்களுக்கும் ஒன்றும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் நாள், கிழமைகளில் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இவர்களது இறைப்பணி/சமூகப்பணி அவ்வளவாகக் கவனிக்கப்படாதது. ஆனால் கவனிக்கப்படத்தக்கது; மெச்சப்படவேண்டியது.

கோவிலில் நாம் அர்ச்சனை செய்ய நேர்கையில், அல்லது அர்ச்சனை நடந்துகொண்டிருக்கும்போது அங்கிருக்கையில் நமக்கு ஏற்படும் அனுபவம் சில சமயங்களில் புதுமையானதாக, இதுவரை அனுபவித்திராததாக அமையக்கூடும். சில ஸ்தலங்கள், சில கோவில்கள் காலங்காலமாக தன்னுள் விசேஷ அதிர்வலைகள் கொண்டவையாக இருக்கும். மந்திரங்கள் கர்ப்பகிருஹத்தில் பக்தி பாவனையோடு ஒலிக்கும்போது, மொழி தெரியாத நிலையிலும் அஞ்ஞானிகளான நாம் அதன் சக்தியை ஓரளவாவது உணரமுடியும். அல்லது எப்போவாவது பரவசமாய் உணர்ந்து ஒருவித அமைதியோடு, திருப்தியோடு வெளிவந்திருப்போம். மனித அனுபவங்கள் ஒருவருக்கொருவர், சமயத்துக்கு சமயம், சூழலுக்கு சூழல் மாறுபட்டது. ஆதலால் ஒப்பிட முடியாதது. அதிலும் இறை அனுபவம் என்பது, ஒருபோதும் தர்க்கத்தின் கீழ் வருவதல்ல. விவாதத்தினால் அறியப்படுவதல்ல. ஒன்று, உணர்ந்தீர்கள், அல்லது, இல்லை. அவ்வளவுதான். Period.

புதுக்கோட்டைக்கருகிலுள்ள, தென்னைமரங்கள் அணிவகுக்கும் செம்பாட்டூர் என்கிற அழகான கிராமத்தில் இளமைக்காலத்தின் பெரும்பகுதி சென்றிருக்கிறது. அங்கே அய்யனார், முனீஸ்வரர் கருப்பர் கோவில்களோடு, அம்பாள், சிவன், எல்லைப்பிடாரி கோவில்களுமுண்டு. எங்கள் வீட்டின் பின்புறம் திருக்கோடி அம்பாள் கோவிலும் , சிவன் கோவிலும் அமைந்திருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது பெரியசாமி குருக்கள் என்று ஒரு பெரியவர் அங்கே நாள், கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்காக அயலூரிலிருந்து சைக்கிளில் வருவார். பக்கத்திலிருந்த வெள்ளைக்காரர்கள் காலத்துக் கேணியிலிருந்து குடம், குடமாய் தண்ணீர் எடுத்து கோவில் கர்ப்பகிருஹம், பிரஹாரங்கள் என எல்லாவற்றையும் அலம்பிவிடுவார். சிறுவர்களாகிய, இளைஞர்களாகிய சிலர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்து உதவி செய்வோம். கிராமத்துப் பொடியன்கள் கோவிலுக்கு வெளியே கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள். பக்கத்தில் மஞ்சள் அரளியும் மற்ற செடிகள் எல்லாம் வளர்ந்திருக்கும். அபிஷேகம் முடிந்தபின், விக்ரஹங்களுக்கு வஸ்திரம் உடுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு சின்ன அலங்காரம் செய்வார். அரளிப்பூக்களை ஒவ்வொரு சன்னிதியாக வைத்து, கல் அகல்விளக்குகளை ஏற்றுவார். ஊதுபத்தி ஏற்றிவைத்து, சாம்பிராணிக் கரண்டியோடு சன்னிதி சன்னிதியாக வேகமாக வலம் வருவார். சிலமணி நேரத்திற்குள் கோவில் கமகம என்றாகிவிடும். கோவிலின் தென்பகுதியில் சிறு வாசலில் கருங்கற்களை அடுக்கி அடுப்பாக்கி, விறகு, பட்ட முள்குச்சிகளை வைத்து அடுப்புமூட்டி கொஞ்சமாக சாதம் வடிப்பார். ஏழையாயினும், அதற்கேற்ற அரிசியை அவரே வீட்டிலிருந்து கொண்டுவருவார். வெறும் சாதம்தான் நைவேத்யம் சிவனுக்கும் அம்பாளுக்கும் மற்ற தெய்வங்களுக்கும். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ஊர்ப் பெரிய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால், சிறப்பான அலங்காரங்கள், பூஜைகள் நடக்கும். சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதப் பிரசாதங்கள்.

அப்போதெல்லாம் தைமாதம் நடக்கும் ஊர்த்திருவிழாவின்போது அம்பாளுக்கு, சிவனுக்கு சந்தனக்காப்பு நடைபெறும். திரையைப்போட்டுவிட்டு, வெறும் வயிற்றோடு, மணிக்கணக்காக உள்ளே அமர்ந்து வியர்க்க, விறுவிறுக்க அலங்காரம் செய்வார் பெரியசாமி குருக்கள். அலங்காரம் முடிந்தபின், திரை விலக்குமுன், என்னை உள்ளே அழைத்து பத்தடி தூரத்தில் நிற்கவைத்து உள்ளே டியூப்லைட்டைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். ‘சரியா வந்திருக்காடா! தலையிலிருந்து பாதம் வரை சரியாகக் கவனி. கண்ணப் பாரு! உதடு சரியா இருக்கா? சந்தனப்பொட்டு செண்டர்ல வந்திருக்கா?’ என்பார். அவரும் விக்ரஹத்திலிருந்து விலகி வெளியே வந்து பலவேறு கோணங்களில் பார்த்து திருப்தி ஏற்பட்டபின்தான், காத்திருக்கும் ஊர்மக்களுக்காகத் திரைவிலக்குவார். சிவலிங்கம், வில்வமரத்தின் பின்னணியில் அட்டனக்கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சிவபெருமானாக மாறி சிலிர்க்கவைக்கும். அம்பாளும் அவர்செய்த சந்தன, புஷ்ப அலங்காரத்தில் அழகாய் ஜொலிப்பாள்.

இங்கே என்ன சொல்லவருகிறேன் எனில், சாப்பாட்டிற்கே வசதியில்லாமல் இன்னொரு குக்கிராமத்தில் குடும்பத்துடன் சிரமப்பட்டவர் பெரியசாமி குருக்கள். அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டு உருகி, உருகி, பார்த்துப்பார்த்து அலங்காரம் செய்வார். பண்டிகை நாட்களில் கோவில் தீபத்தட்டில் அவருக்காக கால் அணா, அரையணா போடுவோர் சிலர் உண்டு. மொத்தம் 5, 6 ரூபாய் சேர்ந்தாலே பெரிசு. ஒரு குறை சொல்லமாட்டார். வாயார வாழ்த்தி கிராமமக்களை ஆசீர்வாதம் செய்வார். கிராமத்துக்காரர்கள் ‘சாமி, சாமி!’ என்று அவர்மீது பிரியமாயிருப்பார்கள். அவர் கையால் வீபூதி வாங்கிக்கொள்ளப் போட்டிபோடுவார்கள். எல்லாம் முடிந்தபின், ஒட்டியவயிறோடு துண்டை மேலே போர்த்திக்கொண்டு பழைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவார். அப்படி ஒருகாலம். அங்கே ஏழ்மை இருந்தது. திருவிழா இருந்தது. தர்மம், நியாயம் கூடவே விலகாது இருந்தன. இப்போது எப்படி இருக்கிறதோ ஊரும், அதன் கோவில், குளங்களும்? மனிதரும்தான் மாறிவிட்டனரோ என்னவோ?

திருச்சியிலிருந்து சமீபமாக குணசீலம் என்னும் கிராமத்தில் இருக்கும் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு, அப்பா காலத்தில் வருஷா வருஷம் போவது வழக்கம். அந்தக்கோவிலில் காலையில் அர்ச்சனை சீட்டு/தட்டு வாங்குகையில் அஷ்டோத்திரத்திற்கு பதிலாக சகஸ்ரநாம அர்ச்சனைக்கு வாங்கிவிடுவார் அப்பா. நின்று நிதானமாக பெருமாளை சேவிப்போம் என்கிற ஆசை. ஒரு வயதான அர்ச்சகர் அந்தக் கோவிலில். அப்போதே சுமார் 75 வயதிருக்கும். காது சரியாகக் கேட்காது. ஆனால், அவர் அர்ச்சனை செய்கையில் மந்திரங்கள், ஸ்லோகங்கள் அபாரமான லயத்தில் அவரது வாயிலிருந்து வெளிப்படும். அடடா! ’ஓம்’ என்கிற பிரணவ சப்தம் நமக்குள் ஏற்படுத்தும் பரவசம். இதே ’ஓம்’ என்கிற சொல்லை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோமே. இவர் சொன்னால்மட்டும் ஏன் இப்படி? என்று அசந்திருக்கிறேன். அவர் செய்யும் அர்ச்சனை ஒரு இனிய சூழலாக அந்த இடத்தை நொடிக்குள் மாற்றிவிடும். உன்னத ஆன்மிக அனுபவம்.

சிலவருடங்களுக்கு முன் ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலில் – எந்த சன்னிதியில் என்று நினைவில்லை – வணங்கிக்கொண்டிருந்தேன். அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார் ஒரு அர்ச்சகர். 80-85 இருக்கும் அவருக்கு வயது. பக்தர்களுக்கு குங்குமம் கொடுத்துவிட்டு, சடாரியை சாதிப்பதற்காக எடுத்துவந்தார். அவரின் தள்ளாமை கண்டும், உணர்வுபூர்வமாகவும், அவர் சடாரியை தலையில் வைப்பதற்கு ஏதுவாகத் தலையை நன்றாகத் தாழ்த்தினேன் அப்போது அவர்தான் எவ்வளவு பக்திபூர்வமாக ஆசீர்வதித்து சடாரியைத் தலையில் வைத்தார். உடம்பு சிலிர்த்தது. அப்பேர்ப்பட்ட பழையகாலத்து அர்ச்சகர், மனிதர் அவர்.

சில புகழ்பெற்ற கோவில்களில் தீபாராதனை காண்பிப்பதற்கு முன் அந்தக்கோவிலின் பெருமாள்-மூலவரின் பெருமைபற்றிக் கொஞ்சம் ஸ்தல புராணமாக சொல்லிவிட்டு அர்ச்சகர் தீபத்தைக் காட்டுவார். பக்தர்களும் தாங்கள் நிற்கும் கோவிலின் விசேஷத்தை, பெருமாள் அல்லது ஸ்வாமியின் கீர்த்தியை ஓரளவு மனதில் வாங்கிக்கொண்டு, பக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தீர்த்தம்/குங்குமம்.வீபூதி வாங்கிக்கொள்வார்கள். அரியக்குடி ஸ்ரீனிவாஸர் கோவில், உப்பிலியப்பன் கோவில் போன்ற கோவில்களில் இத்தகைய அனுபவம் எனக்குண்டு. திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணர் கோவிலில், பெருமாள் சேவித்தபின் கோவிலின் முதல்மாடத்திற்குச் செல்லவேண்டுமெனில், குறுகியபடிகளாக, குனிந்து செல்ல வழி உண்டு. அப்போது ஒரு இளைஞர் நம்மைப் பின் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் கோவிலில் நடந்த ஒரு சமபவத்தை –ராமானுஜர் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கத்தை- உணர்வுபூர்வமாக விவரிப்பார். ராமானுஜர் தன் குருவிடமிருந்து நாராயண மூலமந்திரத்தை தீக்ஷையாகப் பெற்றது அந்த ஊரின் கோவிலுக்கெதிரே உள்ள அக்ரஹார வீடொன்றில்தான். சொல்வோருக்கு மோட்சம் தரும் அந்த மந்திரத்தை தான் அனுபவித்தால்மட்டும் போதாது, இதோ எதிரே செல்கிறார்களே தினம்தினம் அல்லாடும் அப்பாவி ஜனங்கள் –அவர்களுக்கும், ஏன், கேட்கும் எல்லோருக்கும் தெரியவைப்போம்; அனைவருக்கும் கிடைக்கட்டும் மோட்சம் என நினைத்த இளம் ராமானுஜர் அந்தக் கோவிலின் மாடத்தின் மேலேறித்தான் அங்குமிங்குமாகச் சென்றுகொண்டிருந்தவர்களை அன்புடன் அழைத்தார்; மந்திரத்தின் மகிமையைச் சொல்லி அவர்களைத் திருப்பிச் சொல்லவைத்தார். இந்தக் கதையை அங்கிருந்த கிராமத்து இளைஞர் – guide-ஆகப் பணியாற்றுபவர்போலும் – மிக நேர்த்தியாகச் சொன்னார் நான் சென்றிருந்த தினத்தன்று.

பெங்களூரில் சில கோவில்களுக்குத்தான் போக நேர்ந்துள்ளது. சனிக்கிழமைகளில் செல்வது ப்ரூக்ஃபீல்டில் இருக்கும் வெங்கடரமணர் கோவில். ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் வெங்கடரமணர் அருளும் அழகான, சுத்தமான கோவில். அங்கே பணிசெய்யும் அர்ச்சகர்களின் அலங்காரத் திறமை, கலைநேர்த்தி பாராட்டப்படவேண்டிய விஷயம். குறிப்பாக சனிக்கிழமை காலை தீபாராதனைக்காக அவர்கள் செய்யும் மலரலங்காரம் மனதை மயக்கக்கூடியது. தாயார்களுடன் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை பார்த்துக்கொண்டே அங்கேயே உட்கார்ந்துவிடலாம்போல் தோன்றும்.

டெல்லி கோவில்களிலும் நல்ல அனுபவங்கள் சில உண்டு. கிழக்கு டெல்லி மயூர்விஹார்-3-ல் இஷ்டசித்தி வினாயகர் கோவிலுக்குப் போவது வழக்கம். அங்கு வினாயகர், சிவன், ஐயப்பன் போன்ற சன்னிதிகளோடு சிறிய லக்ஷ்மிநாராயணர் சன்னிதியும் உண்டு. அதனைப் பார்த்துக்கொள்ளும் அர்ச்சகர் பத்ரிநாராயணன். எம்.சி.ஏ. படித்தவர். விருப்பத்தினால் தன் அப்பா பார்த்த பகவத்கைங்கரியத்துக்கு வந்துவிட்டதாகச் சொல்வார். பெருமாளுக்கு அலங்காரம் சிரத்தையாக செய்வார். நன்றாக குரலை உயர்த்தித் தெளிவாக தமிழின் நாலாயிரத் திவ்யப்பிரபந்த பாடல்களைப் பாடுவார். பக்தர்களுக்குக் கேட்க சுகமாயிருக்கும். அவருடைய பழகும் முறையினால் தமிழர்களோடு, வட இந்திய பக்தர்களும் அடிக்கடி அந்த கோவிலுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். அதே கோவிலில் கணேசன் என்கிற சிவாச்சாரியார் சிவன், துர்க்கை, வினாயகர் போன்ற சன்னிதிகளைக் கவனிக்கிறார். நாராயணர் சன்னிதியில் விசேஷ பூஜை, சனிக்கிழமைகளின் சகஸ்ரநாம பாராயணம் போன்றவைகளின்போது, ஓரத்தில் நின்றுகொண்டு கிருஷ்ண பக்திப்பாடல்களை தமிழ், மலையாளத்தில் உருக்கமாகப் பாடுவார். தெற்கு டெல்லி ஆர்.கே.புரம் செக்டர்-3 வெங்கடேஸ்வரர் கோவிலில் வயதான அர்ச்சகர் ஒருவர், வேதமந்திரங்களோடு பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக செய்விப்பார். வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் நிதானமாக உட்கார்ந்து ரஸிக்கலாம்.

எல்லாக் கோவில்களிலும் இப்படியான அனுபவங்கள் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கலாகாது. எனினும், இப்படி ஆங்காங்கே சிலராவது, தினம் செய்யும் இறைப்பணியை மனம் உவந்து, செயல் நேர்த்தியுடன் செய்வதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்/சிவாச்சாரியாருக்கு, பகவத் கைங்கரியத்தைத் தான் நன்றாகச் செய்கிறோம் என்கிற ஆத்ம திருப்தி ஏற்படுவதோடு, அதன் நற்பலன் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

**

தமிழ் எழுத்தாளர்களும், விருதுகளும்

தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் என்பதாக, சொல்லிக்கொள்ளும்படியாக அதிகமில்லை. இந்திய அரசு மொழிவாரியாக, வருஷாவருஷம் வழங்கிவரும் ’சாஹித்ய அகாடமி’ மற்றும் ’ஞானபீட விருது’கள் குறிப்பிடத் தகுந்தவை. அவைதாண்டி தமிழ்நாடு அரசு – தமிழை வளர்ப்போம், காப்போம், தமிழ் செம்மொழி, எம்மொழி என்றெல்லாம் மார்தட்டி, மொழி அரசியலால் காலங்காலமாய்ப் பிழைக்கும், செழிக்கும் அரசியல்வாதிகள் – அதாவது தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளும் பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை தமிழின் சமகால எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கென. ’கலைமாமணி விருது’ இருக்கிறதே என முணுமுணுக்கவேண்டாம். கலைமாமணி விருதுகளுக்காக தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம், தகுதிகளைத் தாண்டி சிலசமயம் அவை யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்றெல்லாம் ஆராய்ந்தால் அது எங்கோ கொண்டுபோய் விட்டுவிடும். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை அதனைப் பகடி செய்தது நினைவுக்கு வருகிறது: ‘இந்த வருடத்திற்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன; லூஸ்மோகனோடு சேர்ந்து நானும் பெற்றுக்கொண்டேன்!’ அந்த விருதின் standard, sanctity என்ன என்பதை இதைவிடத் தெளிவாக விளக்கவேண்டியதில்லை. இவற்றைத் தாண்டி இலக்கிய அமைப்புகள் சில முன்வந்து, எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்கின்றன. வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளால் வழங்கப்படும் ’இயல்’, ‘விளக்கு’ விருதுகள், விஷ்ணுபுரம்’, ‘சுஜாதா’ விருதுகள் போன்றவை. இவற்றிற்கு ஒரு தராதரம் உண்டு; ஆதலால் இலக்கியவாதிகள், விமரிசகர்கள், வாசகர்களால் கவனிக்கப்படுபவை.

2016-க்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் எழுத்தாளரும் கவிஞருமான வண்ணதாசன். ஒரு அரைநூற்றாண்டு காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் இயங்க வேண்டியிருந்தது போலும், அவருக்கு இந்த விருது கிடைப்பதற்கு. ஏதோ கொடுத்தார்களே என்றிருக்கிறது சிலசமயத்தில். சமகால முன்னணி எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்கள் சாகித்ய அகாடமியில் இதுவரைப் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதே தெரியவில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு – அதாவது தகுதி வாய்ந்த படைப்பாளிகளுக்கு – உரிய காலத்தில் விருது கொடுப்பதற்கு சாகித்ய அகாடமி பலவருடங்களாகவே சண்டித்தனம் செய்துவருகிறது. ஒரு 40-50 வருடம் எழுதட்டுமே என்ன அவசரம்! – என்பதான ஒரு அலட்சிய மனோபவம் சாகித்ய அகாடமி தேர்வுக்குழுவில் அமர்ந்திருக்கும் தெள்ளுமணிகளுக்கு. ஹிந்தி, பஞ்சாபி, கொங்கணி, வங்காளம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளின் கதை இப்படியில்லை. அவற்றில் எழுதுபவர்களுக்கு விரைவில் கிடைத்துவிடுகின்றன விருதுகள்.

இப்படி அபூர்வமாகத்தான் விருதுகள் தமிழ் எழுத்தாளர்களைச் சென்றடைகின்றன. இப்படியான ஒரு சூழலில் ஒரு எழுத்தாளருக்கு தேசிய விருதோ, மற்ற குறிப்பிடத்தகுந்த விருதோ கிடைத்தால், தமிழில் எழுதும் மற்றவர்கள் மனம் திறந்து பாராட்டவேண்டாம்? அதுதான் இல்லை. நமது தமிழ் எழுத்துக்கலாச்சாரமும் அப்படி! தீராநதி இதழொன்றிற்கான நேர்காணலில், சாகித்ய அகாடமி விருது கிடைத்தற்காக, சக எழுத்தாளர்களின் பாராட்டுக்கள் எப்படி? என்று வண்ணதாசனைக் கேட்டிருக்கிறார்கள். அவரது பதில் சமகாலத் தமிழ்ச்சூழலைக் கோடிட்டுக் காட்டுகிறது :

’’இலக்கியவாதிகள் ஒன்னுக்கொன்னு ஒருத்தரைப் பாராட்டுறதுங்கறது ரொம்பவே அபூர்வம். முகத்துக்கு நேராகவே கண்டுகொண்டாலும் விருதைப்பற்றிப் பேசிக்கொள்ளாமல் செல்கிறவர்களுமுண்டு. அதுக்காக ஒருத்தருமே வாழ்த்து சொல்லலேன்னு இல்ல. சொன்னவர்களும், சொல்லாதவர்களும் உண்டு. அதையெல்லாம் நான் பெருசா எடுக்கல. பஸ்ஸ்டாண்டுப் பக்கம் போறப்ப சாதாரணக்கடையில் இருக்கிறவங்க, நடைபாதையில போறவங்க, வாரவங்க, ‘இதா..நம்ம ஊரு ஆளு..இவருக்கு விருது கிடைச்சிருக்கு’ன்னு சொல்லி வாழ்த்துற பொதுஜனமே விருதுக்கான வாழ்த்தை மனசாரக் கொடுக்கறவங்க.. இது போதாதா எனக்கு? இலக்கியவாதிகளையா நான் எழுதிக்கொள்வது. உண்மையான விமரிசகர்களும், வாழ்த்தாளர்களும், நான் எழுதக்கூடிய எளிய மனிதர்களும், வாசகர்களுமே.’’

ஒருவருக்கு விருது கிடைத்தால் இன்னொருவர் – அதே மொழியில் எழுதும் இன்னொரு எழுத்தாளர் – அவரைப் பாராட்டுவதில் என்ன பிரச்சினை? ஏன் தயங்குகிறார்கள்? நேரிடையாக சந்திக்கையிலும் ஏதேதோ பேசிவிட்டு, விருதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்தால் அதற்கு என்ன அர்த்தம்? ‘ ம்ஹ்ம்..நானும் நாப்பது வருசமா எழுதிக்கிட்டிருக்கேன். என்னய ஒருபயலும் கவனிக்க மாட்டேங்குறான். இவனுக்கு கெடச்சிருச்சா!’ என்கிற சராசரி மனிதனின் பொறாமையைத்தானே இங்கே நாம் காண்பது? வேறென்ன விசேஷம் இதில்? சக எழுத்தாளனைப் பாராட்டவேண்டும் என்கிற எண்ணம்கூடத் தோன்றாத எழுத்தாளப் பெருந்தகைகளே, நீங்கள் படைப்பாளியாக இருக்கும்போது, கையில் பேனாவை அல்லது லேப்டாப்பை எடுக்கையில், பெரிதாக எழுதித்தான் தள்ளிவிடுகிறீர்கள், மறுக்கவில்லை. ஆனால் ஒரு தனிமனிதனாக (as an individual), மேலே குறிப்பிட்டதுபோல் நீங்கள் காண்பிப்பது ஒரு சாதாரணனின் இயல்பைத்தானே? அல்ப புத்தியைத்தானே? கொஞ்சம் முன்னேறி மேலே வந்தாலென்ன ?

**

சில நேரங்களில் சில பதற்றங்கள் !

இன்றைய நியூஸ் என்ன என்ற நினைப்போடு மீடியாவின் பக்கங்களைப் பதற்றத்துடன்தான் திறக்கவேண்டியுள்ளது தினமும். பார்க்காமலும் இருக்கமுடிகிறதா என்றால், அதுதான் இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் அளவிலா குறுகுறுப்போ, தேசபக்தியோ ஏதோ ஒன்று – ஆளை விடமாட்டேன் என்கிறது. நம்ப மீடியா ஆசாமிகள் இருக்கிறார்களே – அது நியூஸ்பேப்பரா இருக்கட்டும் அல்லது டிவி சேனலா இருக்கட்டும் – என்ன சொல்வார்களோ, எதைப்பற்றிச் சொல்வார்களோ, குசுகுசுச் செய்தியோ, குண்டுவீச்சோ யாருக்குத் தெரியும்? மனசைத் தேற்றிக்கொண்டு கொஞ்சம் பார்த்ததிலே இதெல்லாம் கண்ணில் பட்டது. முதல் செய்தியிலேயே டென்ஷன் எகிறியது..

ஏர் இந்தியா விமானத்தின் மீது ட்ராக்டர் மோதல்

டிராக்டர் ஆகாசத்தில் பறந்து ஏர் இந்தியாவை வழிமறித்து முட்டித்தள்ளியதா? அப்படி நடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதுவும் நடக்கும் காலந்தானே இது? இப்படியெல்லாம் சந்தேகப்பட்டீர்களானால் டிராக்டர் பறப்பதையும் ஏர் இந்தியா விமானத்தை முட்டி நசுக்குவதையும் வீடியோ போட்டுக் காண்பித்துவிடுவார்கள். அதையும் நூறு இருநூறு பேர் வாட்ஸப்பில் உடனே ஃபார்வர்ட் செய்து, ரிசீவ் செய்பவர்களின் ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டுவிடுவார்கள். படியுங்கள், கடந்து செல்லுங்கள். செல்லுகையில் டிராக்டர் எதிர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்டவன் அருளட்டும் உங்களுக்கு.

தமிழ்த்தாயின் சொந்தமகன் நான்தான்! –பாரதிராஜா.

சரியாகத்தான் படித்தோமா என்று திருப்பியும் படிக்க நேரிட்டது. ஏனென்றால் ஜெயலலிதா மறைந்தபின் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகச் சொல்கிறார்கள். அம்மாவின் ஆட்சிதான் இது என்று அடுத்து வந்தவர்கள் குழப்புவது ஒருபக்கம். ஜெ-யின் பூர்வீக வீட்டை நினைவாலயமாக்கக் கூடாது என்று அவருடைய அண்ணன் மகள் அலறுவது இன்னொரு பக்கம். போதாக்குறைக்கு, ’அவருடைய சொந்த மகன் நான் தான்’ என்று கொஞ்ச நாட்களுக்கு முன் ஒருத்தன் கிளம்ப, ’வாய மூடுறியா இல்ல, புடிச்சு உள்ளாரப் போட்றட்டுமா’ன்னு கோர்ட்டே இடைமறித்து எச்சரிக்கக்கூடிய லெவலுக்கு வந்துதே. அந்த நினைவை மனசு நேரங்காலந்தெரியாமல் கிளறிப்போட்டது. இருங்கள், இப்போது நாம் எங்கே இருக்கிறோம் – பாரதிராஜா நான் தான் தமிழ்த்தாயின் சொந்த மகன் என்கிறாரா.. அவர் கொஞ்சம் தெளிவான ஆளுதான். அப்படியெல்லாம் அபாண்டம் அவருக்கு பழக்கமில்லை. பின்னே ஏன் இப்படி திடீர் என அவரிடமிருந்து அறிவிப்பு? அரசியலுக்குள் குதிக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் கமல் ஹாசனும், ரஜினி காந்தும் அப்படியில்லையாம். வளர்ப்பு மகன்கள்தானாம். ஆண்டவா, எத்தனையோ மாநிலங்கள் இந்தியாவில் இருக்க, தமிழ்நாட்டின் காலரை மட்டும் அடிக்கடிப் பிடித்து ஏன் உலுக்குகிறாய்? சிவனே, பரமே, பரந்தாமா, பார்த்தசாரதி – நாங்கள் உன்னை என் செய்தோம்? அப்படியே ஏதாவது தப்பு செய்திருந்தாலும் நீதான் கருணாநிதியாயிற்றே – ஐ மீன் – கருணைக்கடலாயிற்றே, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளக்கூடாதா?

இன்னொரு செய்தி: உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!

காலங்காலமா இருக்கிற இடந்தெரியாம இருக்கிற அப்பாவியாச்சே! அவரையும் இவனுங்க விடலையா? சிவபெருமான் பாவம் – உடம்புல பூரா சாம்பலப் பூசிக்கிட்டு, சோறுதண்ணி இல்லாம கண்ணைமூடிக்கிட்டு ஏதாவது கல்லுமேலே ஏறி உட்கார்ந்துகிட்டு இருந்திருப்பாரு சிவனேன்னு… (ஓ, அவரேதான் சிவனோ?) அவரை ஏம்பா சீண்டுறீங்க, இருக்கிற பிரச்சின போறாதுன்னுட்டா ?

மிரளவைத்த செய்தி: ’சிவன் சொன்னான்; பிச்சையெடுக்கறேன்..!’

மறுபடியும் சிவனா? இதச் சொன்னது யாரு? யாராவது ஆதீனமா? கிராமத்துப் பண்டாரமா? தமிழ் நாட்டுக்காரர் இல்லை என்பதுமட்டுமல்ல, இந்தியரே இல்லை இந்த ஆசாமி. என்னது? ஆம். எவ்ஜெனி பர்ட்னிகோவ் (Evgenii Berdnikov) ரஷ்ய நாட்டுக்காரர். முதலில் காஞ்சீபுரம் கோவில் வாசலில், தலையிலிருந்த தொப்பியைக் கழற்றிக்காட்டி பிச்சை கேட்டிருக்கிறார். நம்ப ஜனங்களுக்கு ஆச்சரியம். கூடவே கனிவு. ஒரு வெள்ளக்காரன் நம்பட்ட கேக்கறான்பாரு பிச்ச!- என்று ஒரு த்ரில். போலீஸ் பார்த்து பர்ட்னிகோவை விஜாரித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். வீஸாவைச் செக் செய்ததில் நவம்பர் 22 வரை அவருக்கு இந்திய டூரிஸ்ட் வீஸா இருக்கிறது. அது பிரச்னை இல்லை. ’ரஷியன் ’கான்ஸ்லேட்டை தொடர்பு கொள்ளுங்க. உங்க நாட்டுக்கு நீங்க திரும்ப உதவுவாங்க’ என்றிருக்கின்றனர் தமிழ்நாடு காவல்துறை. பர்ட்னிகோவ் எடுத்த பிச்சைபற்றிக் கேள்விப்பட்ட இந்திய வெளி உறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ‘அட, நீங்கள் எங்கள் நட்பு நாடான ரஷ்யாவின் ப்ரஜை ஆயிற்றே! உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள். எங்கள் அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள்’ என்று ட்வீட்டரில் செய்தி கொடுத்துள்ளார். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டிருக்கிறார் அந்த ரஷ்ய டூரிஸ்ட். கூடவே கமெண்ட் வேறு அடித்துள்ளார்: ’உங்கள் மந்திரி என் பெயரை சரியாகச் சொல்லவில்லை. என் பெயர் எவாஞ்சலின் (தமிழ் பத்திரிக்கைகள் குறிப்பிட்டபடி) அல்ல. நான் எவ்ஜெனி பர்ட்னிகோவ்!’ என்றிருக்கிறார். ‘அது சரிப்பா! நீ உன் நாட்டுக்குத் திரும்பணுமே! பண உதவி வேணுமா!’ என்று கேட்டதற்கு ‘ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் ஒரு டூரிஸ்ட்டா 50 யூரோ, 8 டாலர் எடுத்துக்கிட்டு இந்தியா வந்தேன். பணம் தீந்துபோச்சு. இருந்தாலும் என்னோட ஸெல்ஃபீ எடுத்துண்டு பணம் கொடுக்கறாங்க! பிச்ச கேட்டா போட்றாங்க. எனக்கு உங்க நாடு பிடிச்சிருக்கு!’ என்று பதில் சொன்னாராம் சென்னை டி.நகர்க் கோவில் ஒன்றின் வாசலில் உட்கார்ந்துகொண்டு. ’ஆனா இப்பிடி பிச்சை எடுக்குறீங்களே..ன்னு ஆரம்பிச்சா, ‘சிவன் சொன்னாரு! நான் பிச்சை எடுக்கத்தான் செய்வேன்’ என்று அடம்பிடிக்கிறாராம் பர்டினிகோவ்.

என்னன்னு விளக்க? ஒன்னும் புரியமாட்டேங்கறதே.. இதைத்தான் நமது மூதாதையர்கள் நாசூக்காகச் சொன்னார்கள்: எல்லாம் சிவன் செயல் !

கடைசியாக ஒரு செய்தி:

இந்த நிமிடம்வரை ’மெர்சல்’ படத்துக்கு சான்று வழங்கப்படவில்லை – சென்ஸார் போர்டு புதுகுண்டு!

– அதானே பார்த்தேன். இன்னும் குண்டுவிழாமலிருந்தால் நாள் நல்லபடியாப் போகாதே..!

**

மாலைக்குளிரின் மயக்கத்திலே

மயக்கும் மாலையைத் தழுவிக் கொஞ்சம்
வருடிப் பார்க்கிறது வாலிப இருட்டு
பால்கனி கதவைத் திறக்கையில்
குளிர்ச்சிக் குறுகுறுப்பாய் இளங்காற்று
நனைத்திருக்கிறது மழை எங்கோ எதையோ
வானத்தின் சாம்பல் கருத்துப் பெருக்கிறது
ஒளிர்ந்து மறைந்த சாகசமின்னல்
நொடியில் காட்டி மறைத்தது எதையோ
சிலிர்ப்புச் சிதறல்கள் கீழ்வெளியில்
ஓடிக்கொண்டும் ஓட்டிக்கொண்டும்
பிடித்தும் தூக்கி வீசியும்
கத்திக் கத்திக் கூப்பிட்டுக்கொண்டும்
பொங்கிப் பரவுகிறது பரவசக் குமிழிகள்
இருந்தும் – சீண்டும் குளிரின் நீள்விரல்கள்
இதமானதல்லவே பிஞ்சுகளின் மேனிக்கு
டிவியின் வில்லியிடமிருந்து விடுபட்டால்தானே
கூவி அழைக்கமுடியும் குழந்தைகளை அம்மாக்கள்?

**

நல்ல காலம், காந்தி இப்போ இல்லே !

கோவில்பட்டியில் சமீபத்தில் ஒரு போராட்டத்தை நமது பாரம்பரியமிக்க தேசியக்கட்சிக்காரர்கள் நடத்தினார்கள் என்கிறது மீடியா செய்தி. ’இப்ப என்ன அதுக்கு’ என்று சிடுசிடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாகப் பொறுமை காட்டவேணும். அப்போதுதான் எதையும் உங்களுக்குச் சொல்ல முடியும்.

மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்டதுதான் இந்த போராட்டம். அதனால் நியாயமானதே. என்ன பிரச்சினை? ஆயிரக்கணக்கான
பயணிகளை தினம் சந்திக்கும் ஒரு பிஸியான ஊரின் பஸ்நிலையத்திற்குத் தேவையான யோக்யதை எதுவும் கோவில்பட்டி நிலையத்திற்கு இல்லை என்கிறார்கள் தினம் தினம் அவஸ்தையை அனுபவிப்பவர்கள். விசித்திரம் என்னவென்றால், பழைய பஸ் நிலையத்திற்குப் பதிலாக புதிய பேருந்து நிலையம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது முன்னேற்றம்? முன்பு 28 பேருந்துகள் நிறுத்த வசதியிருந்த ‘B’ கிரேடு நிலையமாக இருந்தது கோவில்பட்டி. இப்போது 18 பஸ்கள்தான் நிறுத்தமுடியும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பஸ்களின் நேர அட்டவணை கூடப் பொருத்தப்படாமல், கட்டணக் கழிப்பிட வசதியும் செய்துதரப்படாமல் ‘C’ கிரேடு பேருந்து நிலையமாக மறுபிறவி எடுத்திருக்கிறது அந்த பஸ்ஸ்டாண்ட். அப்பாவி மக்களை சீண்டிக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள்? அப்படித்தான் இருக்கவேண்டும்.

பொதுமக்களின் இன்னல்கள்போக்க, நடவடிக்கை வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நோக்கம் சரியானதே. விஷயம் இதோடு நிற்கவில்லை; இந்தப் போராட்டத்தை ஒரு நூதனப் போராட்டமாக நடத்தினார்களாம் கோவில்பட்டி காங்கிரஸ்காரர்கள். ஆ.. காங்கிரஸ்.. எப்பேர்ப்பட்ட கட்சி? இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை, ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடிக்கப் போராடும் ஒரு பேரியக்கமாக வடிவமைத்துத் தலைமை தாங்கினார் மகாத்மா காந்தி. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடுகையில் ஹிம்சையை, வன்முறையைத் தவிர்த்தார். எங்குமே, யாருமே கேட்டிராத நூதன வழியாக அஹிம்சைப் போராட்டத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வில் எழுந்து ஆர்ப்பரிக்கவைத்தார். ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம்காணவைத்ததோடல்லாமல், உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார் காந்தி. அன்னாரின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் தொடர்பவர்களல்லவா அன்னை சோனியாவின் காங்கிரஸார்?

காந்திக்கு மேலேயும் ஒருபடி போகப் பார்த்திருக்கிறார்கள் கோவில்பட்டியில். ‘நூதனப் போராட்டம்’ என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். எப்படி இவர்களது நூதனம்? ஹிம்சைவழிப் போராட்டம். என்னய்யா சொல்கிறீர் என்று கோபப்படுகிறீர்கள். பொறுமை.. பொறுமை. தமிழ்க்காங்கிரஸார் சொகுசாகத் தின்றுவிட்டு, வெள்ளைவெளேர் வேட்டிசட்டையோடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கோஷமிட்டார்கள். ’அதுக்காக, சாப்பிடாமயா இந்த வெயில்ல வந்து போராடமுடியும்’-னு பாயாதீங்க. மேற்கொண்டு அறியுங்கள். இரண்டு அப்பாவி விலங்குகளை – அதாவது அவர்களிடம் எளிதில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு கழுதைகளை- தரதரவென இழுத்துவந்து அங்கு அடைத்துவிட்டார்கள். மணிக்கணக்கில் விலங்கு ஹிம்சை. கோஷம். நூதனப் போராட்டம் ! ’கழுதையைப் பார்த்தாவது கோவில்பட்டிக்கு யோகம் வருமாம்’ – சொல்கிறார் ஒரு லோகல் காங்கிரஸ் பிரஹஸ்பதி. இப்படிப் போகிறது செந்தமிழ்நாட்டில் நமது பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் கதை. காந்திவழி வந்த அரசியல்வாதிகளின் போராட்ட நெறி ..

**