இணையவெளியில் புதுமுகம்: மெட்ராஸ் பேப்பர்

பல்வேறான வடிவங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிய இதழ் ஒன்று ஜூன் 1, 2022-லிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கிறது. மெட்ராஸ் பேப்பர். எதற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என அலையும் தமிழ்நாட்டிற்கு ‘மெட்ராஸ் பேப்பர்’ கொடுக்கிறது ஒரு அதிர்ச்சி. ’முதல்ல சந்தா கட்டு.. அப்பறம் திறந்து படி!’ – எனத் தைரியமாகச் சொல்லும் ஆன்லைன் இதழ். Already a trend-setter, இந்த வகையில்.

’தமிழில் சர்வதேசத் தரத்தில் ஒரு பத்திரிக்கை என்பது எங்கள் இலக்கு’ எனச் சொல்லிக்கொண்டு, நீல நிறத்தில் பெயர், எளிமையான லே-அவுட் என முகம் காட்டுகிறது. சற்றே பெரிசான கருப்பு எழுத்துரு, கண்களை ஓட்ட எளிதாயிருக்கிறது. ’விரிவும் ஆழமும், குன்றாத வாசிப்பு எளிமையையும் விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் பத்திரிக்கை ஒரு விருந்தாக அமையும். பொதுவாக தமிழ்ப் பத்திரிக்கைகள் அதிகம் தொடாத, தொடத் தயங்கும் கனமிகு சர்வதேச விவகாரங்கள் சார்ந்த நுட்பமான அலசல் கட்டுரைகளை எளிய மொழியில் நீங்கள் இதில் வாசிக்கலாம்… ’ என்றெல்லாம் உறுதிமொழிகள், எழுத்தாளர் பா.ரா.வினால் துவக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இதழிடமிருந்து. பார்ப்போம்.

மாத சந்தா (4 இதழ்கள்) ரூ.75, வருட சந்தா (52 இதழ்கள்) ரூ.400 எனச் செல்கிறது சந்தாக் கட்டணங்கள். வாசகர்கள் தங்கள் பெயரை ரிஜிஸ்டர் செய்யும்போதே, கட்டிவிடுங்கள் பணத்தை எனக் கட்டம் காண்பிக்கிறது மெட்ராஸ் பேப்பர்.

முதல் இதழில், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த விபரமான கட்டுரைகளோடு, சித்தர்கள், ஆதீனங்கள், ஓஷோபற்றி என்றெல்லாம் எழுத்து வெளியாகியிருக்கிறது. இடையிலே ’பிள்ளையாரைக் காணவில்லை’ எனப் படபடக்கிறது ஒரு கட்டுரை. தமிழ்நாட்டை விட்டிட முடியுமா! எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் ‘ஆபீஸ்’ நாவல் தொடராகத் துவங்கி விறுவிறுப்பு காட்டுகிறது. ஆசிரியர் பா.ராகவனின் ’உக்ரையீனா’ தொடரும் ஆரம்பமாகியிருக்கிறது. வேறு சில தெரிந்த இலக்கிய முகங்கள் பின்னர் இணையக்கூடும்.

எல்லாம் சரி, கவிதைகள் மெட்ராஸ் பேப்பரில் தலைகாட்டுமா, காட்டாதா!   **