எல்லோரும்தான் கவனிக்கிறார்கள் …

சமீபத்தில் வீடு மாற நேர்ந்தது. அதே கட்டிட வளாகத்தில்தான் எனினும், பேக்கர்களைக் கூப்பிடவேண்டியதாயிற்று. அவர்கள்  எல்லாவற்றையும் இறக்கி, இழுத்து, ஈவு இரக்கமின்றி கார்ட்டன்களுக்குள் வேகவேகமாகத் திணிக்கும் வைபவம் அரங்கேறியது. அவசர அவசரமாக, ஏகப்பட்ட சாமான்கள் கண்முன் மீண்டும் ப்ரத்யட்சம் ஆகி விலகின. அவற்றில் சில புத்தகங்களும் – பாப்லோ நெரூதா, ஆண்டன் செகாவ், சுஜாதா, கருட புராணம், ஜாதக அலங்காரம்.. இப்படி சில. முன்னரே வாங்கியிருந்தும்  சரியாகப் படிக்கப்படாமல், அல்லது முடிக்கப்படாமல் அல்லது இன்னும் தொடவேபடாமல் மூலையில் கிடந்திருக்கவேண்டும் – அடிக்கடி என் கவனத்தில் வராத வீட்டின் மூலை. புது வீட்டின் பரபரப்பு அடங்கியதும், நேரம் கிடைத்தது. உட்கார்ந்து படிக்க ஒரு மூலையும். படிப்போம் என சாயந்திர வேலையில் காஃபியோடு உட்கார்ந்தேன்..

“எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால், கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். – நம் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப . எப்படி? சொல்கிறேன்.

சின்ன வயதில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக் கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து ‘தோடி’ பாடிக்கொண்டிருந்தார். மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டுட்டு ”டேய்..  அவர் என்னத்தயோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே, அது என்னன்னு போய்ப்  பார்த்துட்டு வா!” என்றார். மாமா கவனித்தது தோடியை அல்ல.

இரண்டாவது உதாரணம்: ‘இலக்கியச் சிந்தனை’யில், ’கதையின் கதை’ என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி, மேற்கோள்கள் காட்டி தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரை போல, எனக்கே திருப்தி தரும்படியாகப் பேசினேன். பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர்  என்னை அணுகி, ‘உங்க பேச்சைக் கேட்டேன். ஏன் அப்பப்ப மூச்சிரைக்கிறது? உங்களுக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா?’ என்றார். அவர் கவனித்தது பேச்சை அல்ல. மூச்சிரைப்பை மட்டுமே.

மூன்றாவது: அமெரிக்காவில் ஒரு பரிசோதனை. ஒரு ஆளைக் கொலைபட்டினிபோட்டு, ஒரு அழகான சித்திரத்தை அவனிடம் காட்டினார்கள். அவனுக்கு சித்திரத்தில் ஒரு ஓரத்தில் வரையப்பட்டிருந்த திராட்சைப் பழம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்ததாம்.

எனவே, கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும் கவனிக்க எனக்கு சில வருஷங்கள் ஆகின. கவனித்தது அத்தனையையும் எழுதவேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.

என் கண்ணெதிரில் நடந்த சாலை விபத்தில், முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா ஊர்களிலும்தான் போக்குவரத்து, எல்லா ஊர்களிலும்தான் கிழவர்கள், கிழட்டு சைக்கிள்களில் அடிபட்டுச் சாகிறார்கள்.. ஆனால், இறுதியில் விபத்து நடந்த இடத்தில் இறைந்திருந்த கால் கிலோ அரிசியை ஒரு சிறுவன், ரத்தம் படியாததாகப் பொறுக்கி டிராயர் பைக்குள் திணித்துக்கொண்டபோது, எனக்கு அங்கே கதை கிடைத்துவிட்டது.

அதேபோல், ஒரு பெண் கணவனைத் திட்டிக்கொண்டே நடந்து கூலிக்குச் செல்கிறாள் – கதையில்லை. எல்லா ஊர்களிலும், எல்லாக் கணவர்களும் திட்டப்படுகிறார்கள். சட்டென்று கூடவே ஓட்டமும் நடையுமாக வந்து, தன் ஆறு வயது பிள்ளையைப் பார்த்து “நீயாவது என்னைச் சரியா வெச்சுப்பியாடா?” என்று கேட்டபோது, அதை (கதையில்) சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது..”

-’ரயில் புன்னகை’ சிறுகதைத் தொகுப்பில் சுஜாதா.

அன்றாட காரியங்களினூடே, சிறு சிறு சுற்றல்கள், பயணங்களினூடே எங்காவது ஏதாவது கவனத்தை ஈர்க்கத்தான் செய்கிறது. பல சங்கதிகள், விஷயங்கள் நாம் கவனிக்கமாட்டோம் என்கிற தைரியத்தில் எதிரே ஒரு கணம் வந்து, இடது, வலதாகப் பாய்ந்து ஓடி மறைந்துவிடுகின்றன. இனி  இப்படி விடக்கூடாது. சரியாக கவனித்து  மேலே பயணிக்கவேண்டும். அதாவது, மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டால்…   

**

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி: சின்னப்பசங்களின் சாகசம்!

டி-20 தொடருக்கான அணியில் ஆளில்லை. ஒரு-நாள் போட்டிகளிலும் இடமில்லை. டெஸ்ட் அணியில் பெயர் இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட்டுக்குத் தேர்வாகவில்லை. தொடரின் விதியையே மாற்றிய இறுதி மேட்ச்சில் என்னடான்னா அவர்தான் ஹீரோ! Madmax என ஒரு சிலரால் வர்ணிக்கப்படும் 23-வயது விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த் (Rishab Pant). தம்பிக்கு தலையில் சூடேறிவிட்டால் மைதானத்தில் ஆட்டமென்ன…ஒரே சாமியாட்டம்தான். கொஞ்சம் ஸ்டைல் மாற்றியிருந்தாலும், அதுதான் நடந்தது அன்று (19-1-21).. ரிஷப் பந்தின்  அதகளம் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் ஒரு வரலாற்று வெற்றியை இந்தியாவிடம் கொண்டுவந்தது – அதுவும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டை எனக் கருதப்படும் ‘The Gabba’ -வில். ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் கடந்த 32 வருடங்களில் ஒருதடவை கூட எந்த நாட்டிடமும் தோற்றதில்லையாமே.. அட.. !

The Captain !

2020-21 ஆஸ்திரேலிய டூர் – கோவிட் காலத்தின் மத்தியில்- இது நிகழ்ந்ததற்கே இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளுக்கும், வீரர்கள், ஏனைய அணி அங்கத்தினர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதங்கள் குறிப்பாக, இந்தியாவுக்கு கடும் சோதனை காலமாக அமைந்தது. நவம்பர் 2020-ல் அமீரகத்தில், ஐபிஎல் -இல் ஆரம்பித்த கோவிட் bio-secure bubble, பயணம், ஹோட்டல் க்வாரண்டைன், தனிமையில் மேட்ச் பயிற்சி, தொடர்ந்து பயமுறுத்திய காயங்கள் என வீரர்களைப் புரட்டி எடுத்தது கெட்ட காலம். பிரச்னை மாறி பிரச்னை. மேட்ச்சுகளில் அடி, concussion, fracture,  தொடைக்காயம், முதுகுப்பிடிப்பு, பயிற்சியின் போதும் கையில் அடி, காலில் அடி.. சே… இப்படியா ஒரு அணியைப் பேய் பிடித்து ஆட்டும்.  ஒரு சகிக்கமுடியாத சூழலில், வீரர்களும், அணியின் support staff-ம் பொதுவாக அலுத்து, சலித்துத் துவண்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த ஏதோ ஒன்று, அவர்களை, ’ பயப்படாதே.. இறங்கு உள்ளே, ஆடு…’  என சொல்லிக்கொண்டே இருந்திருக்கும். காயம்பட்டு டெஸ்ட் சீனியர்கள் ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகிக்கொண்டிருக்கும்  வைபவம் தொடர, சர்வதேச அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும், இந்திய உள்நாட்டுத் தொடர்களில்கூட சரியாக ஆடி அனுபவம் அடையாத, பெஞ்சின் விளிம்பில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருந்த net bowlers / standby players, திடீரென உள்ளே, இந்தியாவுக்காக ஆட அழைக்கப்பட்டார்கள். முக்கியமான கடைசி போட்டியில், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) – யார் இவர்கள் – கடைசி டெஸ்ட் மேட்ச்சுக்கான இந்திய அணியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் விழித்தது.. ஷமி, பும்ரா, அஷ்வின், ஜடேஜா, விஹாரி எல்லாம் எங்கே போய்விட்டார்கள் ?  வலிமையான அணியாக, கூடவே சொந்த நாட்டு பிட்ச்சுகளில் ஆடும் சாதகம் பெற்றிருந்த எதிர் அணி. கடைசி மேட்ச்சில் அவர்களது கோட்டையான ’ப்ரிஸ்பேனில் பாக்கலாம்.. வர்றியா?’ எனக் கொக்கரித்த ஆஸ்திரேலிய அணியை, முக்கிய போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய அணி ஒருமாதிரியாத்தான் இந்தியாவுக்கே காட்சியளித்தது! என்ன செய்வது, வேறு வழியில்லை, முகாந்திரமில்லை. ஏளனமாகப் பார்த்தது எதிரணி. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம். பாவம் இந்தியா.. துரதிர்ஷ்டம். ஆடி, நொறுங்கி வீட்டுக்குத் திரும்பப்போகிறது…

Rishab Pant
Man for the moment..

ஆனால் கத்துக்குட்டிகள் புகுந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியதோ ஒரு நம்பமுடியாத வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் திகிலான ஒரு பக்கம் அந்த நாட்களில் அழுந்த எழுதப்பட்டது, பின் வருபவர்கள் படித்து சிலிர்ப்பதற்காக. ஷர்துல் டாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சிராஜ் முகமது – குறிப்பாக கடைசி நாளில் இளம் ஷுப்மன் கில் (Shubman Gill) காட்டிய திறன், சீனியர் புஜாராவின்  பொறுமை, அதிநிதான அணுகுமுறை,  ரிஷப் பந்த் வெளிக்கொணர்ந்த உத்வேகம், ஜெயிக்காமல் அகல்வதில்லை என்கிற, தீ போல் அகத்தில் எழுந்த முனைப்பு. இவைதான் ஒரு இரண்டாம் பட்ச அணியாக பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா என்கிற உலக நம்பர் 1  அணியை அவர்களின் கொல்லைப்புறத்திலேயே நசுக்கி, துவம்சம் செய்ய வழிவகுத்தது.

அடிபட்டு பாதிப்பேர் விழுந்துவிட்ட இந்தியாவின் படுமோசமான காலகட்டத்தில், அஜின்க்யா ரஹானே அணியை நடத்திச்சென்ற விதம் – அவரது தலைமைப்பண்பு, நிதானம், விவேகம்.. எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு, அதிகம் பேசாமல், அதிரடி மாற்றங்கள், முடிவுகளைக் களத்தில் எடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு அசத்து, அசத்திவிட்டார் மனுஷன்.  கோஹ்லி என்றாலே  கேப்டன், கிங் என்கிற அழுத்தமான பிம்பத்தை, ஒரே வீச்சில் கலைத்துப்போட்டார் ரஹானே. ஆஹா.. இவரல்லவா கேப்டன்.. கிரிக்கெட் ரசிகர்கள் 2021-ஐ மறக்கமாட்டார்கள். 

கோஹ்லியின் தலைமையில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்,  இந்தியா சந்தித்தது அவமானத்தை. இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஆல்-அவுட்.  ஒரு பெரும் தோல்வியை இந்தியாவின் தலையில் சுமத்திவிட்டு நாட்டுக்குத் திரும்பிவிட்டார் அப்பாவாகப்போகும் கோஹ்லி! உலகம் அதிர்ந்திருந்த வேளையில், கோஹ்லியும் இல்லை, ரோஹித் ஏற்கனவே அணியில் இல்லை. இத்தோடு இந்தியாவின் ஆட்டபாட்டமெல்லாம் ஒழிந்தது என நினைத்து சுகித்திருந்தது ஆஸ்திரேலியா. ’நாளை பொழுது யாருக்கு விடியும்? நடந்து பார்த்தால்.. நாடகம் புரியும் !’ -என்கிற கண்ணதாசனின் வரிகளை ஆஸ்திரேலியர்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை! ”4-0 Whitewash” -இந்தியா பரிதாபமாகத் தொடரைத் தோற்கும்” என்று கேலி செய்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்/வர்ணனையாளர்-Michael Vaughan. ’India will be smoked in Tests!’ என்றது உலகக்கோப்பை வென்ற ஒரு ஆஸ்திரேலிய பெருந்தலை – மைக்கேல் கிளார்க். கடைசி நாளில் ஒரு பக்கம் ரிஷப் பார்த்திருக்க, இன்னொரு முனையில் புஜாரா, தலையில், மார்பில், கையில் என அடிபட்டு ஆடிக்கொண்டிருக்கையில்,   ‘Pujara is in his elements. Unsettle him… Rip open his helmet’ என வெறி கொண்டு ட்விட்டரில் தாக்கிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் – ஆஸ்திரேலியாவின் வீர, தீர ஒரிஜினல் முகங்கள்.

கடைசியில் Brisbane-ல் நடந்தது என்ன! குறிப்பாக இந்தியாவின் ’சின்னப்பசங்க’ ஐந்தே நாட்களில், என்னென்ன வித்தைகள் செய்துகாட்டினார்கள் ? ”நெட்-பௌலர்களையும், ஸ்டாண்ட்-பை ப்ளேயர்களையும் வைத்தல்லவா இந்தியா  கடைசியில் ஆடியது? இது இந்தியாவின் முழு டீமே இல்லையே! ஆஸ்திரேலியாவின் வலிமையான அணி, இந்தியா “A” டீமிடம் தோற்றுவிட்டதே! “ – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்ட்டிங்கின் புலம்பல்.. அப்பப்பா.. தாங்கமுடியவில்லை!

இன்னும் நிறைய எழுதலாம் இந்த மாபெரும் ’டெஸ்ட் தொடர் வெற்றி’பற்றி. இங்கே நிறுத்திக்கொள்வோம் இப்போது.

**

இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா ?

எனது கட்டுரை ஒன்று ’சொல்வனம்’ இதழில் (10 ஜனவரி, 2021) ’இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா ?’ என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. அன்பர்களை லிங்கில் சென்று வாசிக்குமாறு வேண்டுகிறேன்.

லிங்க்:

தேகம்

’காயமே இது பொய்யடா..வெறும் காற்றடைத்த பைய்யடா..’ என்று யாரோ, எப்போதோ, எதையோ அறிந்த நிலையில் பாடியதை, அசட்டுத்தனமாக அவ்வப்போது உளறிவிட்டால் உடம்பின்மீதுள்ள பிடிப்பு அகன்றுவிட்டதாக ஆகிவிடுமா? போனால் போகட்டும் என்று காலம் விட்டுவிடுமா உங்களை? பெரிதாக நீங்கள் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கும் அந்தப் பைக்குள் காற்று போகாமலும், போன காற்று சரியாக வெளிவராமலும் வேடிக்கைகள் பல செய்து காண்பிக்கிறது காலம். காற்றடைத்த பையாவது கால், கை ஆட்டும். பேசும். ஏதேதோ செய்யும். காற்று ’போன’ பை? கிடத்தப்படும். வேகமாக அப்புறப்படுத்தப்படும். கடந்த வருடம், ஆவேசமாக உலகெங்கும் நிகழ்த்திக் காட்டிய விதவிதமான செயல்பாடுகளில் பிரதானமானது இதுதான். இந்தக் காற்றுப் பிரச்னை, காயப் பிரச்னை உலகில் இன்னும் தீர்ந்ததாகத் தெரியவில்லை.

ஸ்தூல தேகத்தின் மீது மனிதன் கொண்டிருக்கும் தீராக் காதல்! தான் என்பது ’இது’ என தன் உடம்பைப் பார்த்து காலமெலாம் நினைத்துக்கொண்டிருந்தால்,  கொஞ்சிக்கொண்டிருந்தால், ஏதாவது திடீர் ஆபத்து வருகையில்,  ஐயய்யோ.. ’அது’ சாய்ந்துவிடுமோ, சரிந்துவிடுமோ, நம் கதை அவ்வளவுதானோ என்கிற பயம் வரும். மருந்தும் மாயமும் ஒன்றும் காப்பாற்றப்போவதில்லை.. போச்சு.. எல்லாம் போச்சு.. என்கிற பீதியும் ஒரேயடியாகக் கிளம்பி, ஏற்கனவே சோர்ந்திருக்கும் மனதை மேலும் மேலும் சித்திரவதை செய்யத்தான் செய்யும். யாராயிருந்தால் என்ன. உயிர்ப்பயம் இல்லாதோர் உண்டோ உலகில்? மனிதனின் புத்திசாலித்தனமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மருத்துவ ஆராய்ச்சிகளைத் தாண்டி இந்த மனித உடம்பு என்பது எந்த நிலையிலும் எளிதில் நொறுங்கிவிடும், உயிர் உடம்பைவிட்டு எந்த நேரமும் கழன்றுகொண்டுவிடும் என்பதற்கான உன்னதக் காட்சிகளை சென்ற வருடம், zoom செய்து திருப்பித் திருப்பி மனிதனுக்குப் போட்டுக் காண்பித்தது. இந்த வருடம் தடுப்பூசிகள் தடதடக்கும். அதன் சாகசங்கள்(?), பின்விளைவுகள் பெரிதாகப் பிரஸ்தாபிக்கப்படும். மேலும், குழப்பம், மேலும் மேலும் பயம்..

இறக்கிவிட்டவர் ஒருவர், நடத்திச் செல்பவர் ஒருவர், தூக்கிக்கொண்டு காட்சியிலிருந்து விலகிச் செல்பவர் பிறிதொருவரோ? நடக்கட்டும். அவரவர் வினைவழி  அவரவர்   வந்தனர் .. அவரவர் வினைவழி  அவரவர் அனுபவம் .. அவரவர் வினைவழி அவரவர் பயணம்..

இதற்கிடையில் வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள் என்றவாறு மனிதன் இவ்வுலகில் ..

**

Haa . . haa . . !

ஹேய் ! ஹாப்பி நியூ இயர் !

. . . . .

ஏய் !  என்ன. .   தூக்கம் கலையலையா ? ஹாப்பி நியூ. . இயர் !

ம். .  போயிருச்சா ?

என்ன ?

அது. .  20.. 20. .  போயிருச்சா. . . ?

போயிருச்சாவா ? வந்திருச்சு 2021.  ஹா. . ஹா. . !

ஹ்ம். . ஹாப்பி நியூ இயர் !

2020 dumped !
Cartoon: EP Unny / Indian Express