கசடதபற – மின்னூலாக

தமிழின் கலை, இலக்கிய ரசனைவெளியில், சராசரித்தனத்துக்கு எதிராகக் கலக ஆரவாரமெழுப்பி எழுபதுகளில் இயங்கிய சிற்றிதழ் ’கசடதபற’. ’சிறுபத்திரிகையை ’இயக்கமாக’ முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு’ இது என்கிறார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.

நா. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட பத்திரிக்கையில் ஞானக்கூத்தன், நகுலன்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி, க.நா.சுப்ரமணியம், சுஜாதா, ஸிந்துஜா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன்  போன்ற, பின்னாளில் ஒளிரப்போகும் எழுத்தாளர்கள்  சிறப்புப் பங்களிப்பு செய்திருந்தனர்.  

நண்பர்களிடம் பழைய அச்சு இதழ்களைத் தேடிப்பெற்று, word document -ஆக மாற்றி (செம வேலை இது) மின்புத்தகங்களாக கசடதபற இதழ்களை அமேஸான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார் மாமல்லன். சில நாட்களுக்கு முன் ’கசடதபற’-1, 2 ஆகியவை அமேஸானில் வெளிவந்தன. ’கசடதபற’- 3 (டிசம்பர் 1970) இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு இலவச வாசிப்புக்குக் கிண்டிலில் கிடைக்கிறது:

27/7/21 பகல் 12:30 -லிருந்து 29/7/21 பகல் 12:29 வரை (இந்திய நேரம்)

லின்க்: அமேஸன் search browser-ல் ASIN ‏ : ‎ B09B82837D என டைப் செய்து தொடரவும்.

கசடதபற 3 (Tamil Edition) by [நா. கிருஷ்ணமூர்த்தி, விமலாதித்த மாமல்லன்]

கசடதபற – 3 (டிசம்பர் 1970) இதழில்:

மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான் – ஞானக்கூத்தன்
கத்திரி – நகுலன்
முத்தச் செய்திகள் – வே. மாலி (சி. மணி)
சாம்பமூர்த்தி ராயரும் சந்திரசேகரனும் – ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)
பாலகுமாரன்
வலை – எஸ். வைதீஸ்வரன்
ஜன்னல் – சுஜாதா
உஷா ஐயர் – ஐராவதம்
என்னுடைய மேட்டு நிலம் – கலாப்ரியா
ஆதிமூலத்தின் ஓவியப் பார்வை – கி. அ. சச்சிதானந்தம்
மனக் கழுதை – குமரித்துறைவன்
காந்தி – ட்டி. ஆர். நடராஜன் (ஸிந்துஜா)
தொழுமரங்கள் – ந. மகாகணபதி
கைமாற்றுக்கு இருவர் – தீபப்ரகாசன்
ஓலூலூவுக்கு ஒரு பதில் – சா. கந்தசாமி
வேரும் விழுதும் – ராமகிருஷ்ணன்.

*

மறுஜென்மம் எடுத்திருக்கும் ’கசடதபற’ மூலம் இலக்கிய எழுத்தை ரசித்து மகிழுமாறு வாசக நண்ப, நண்பிகளை அன்புடன் அழைக்கிறேன்.

-ஏகாந்தன்

Ind-SL : உயிர்கொடுத்த தீபக் சாஹர்

இரண்டாவது ஒரு-நாள் போட்டியை லங்கா உத்வேகமாக ஆடியது. அவிஷ்கா, அஸ்லங்காவின் அரைசதம், கடைசியில் இறங்கும் கருணரத்னவின் 44 நாட் அவுட் என இந்திய பௌலிங்கை ஒரு கை பார்த்து 275 என போஸ்ட் செய்தார்கள். புவனேஷ்வர் (3), சாஹல்(3), தீபக் சாஹர்(2) இந்தியாவுக்காக நன்றாகப் பந்து வீசினார்கள்.

இந்தியா பதிலளிக்கையில், ப்ரித்வி ஷா 3 பௌண்டரிகளுடன் ஆரம்பிக்க, லங்கா கேப்டன் மாத்தி யோசித்தார். இவனை விட்டால் ஆபத்து! ஹஸரங்காவின் ஸ்பின் மூன்றாவது ஓவரில். ப்ரித்வி ஷா அவுட் bowled. அடுத்தாற்போல் இஷான் கிஷனைக் காலி செய்த ரஜிதா. தவண் திணறல். நன்றாக ஆடியும் பாண்டே(37) ரன் அவுட். சூர்யகுமார் மட்டுமே விளாசி அரைசதம். ஹர்தீக் பாண்ட்யா 0. க்ரீஸுக்கு வந்தவுடன் ஓவராக அலட்டிக்கொண்ட க்ருணால் பாண்ட்யாவின் மண்டையில் மாறி, மாறிப்போட்டுத் திணறவைத்த துஷ்யந்தா சமீரா! க்ருனால் தட்டுத்தடுமாறி 35. சூப்பர் சூர்யா (44 பந்தில் 53) அவுட் ஆகையிலேயே இந்தியா நிலைகுலைந்துவிட்டது. ஸ்கோர் 160/6. 8-தீபக், 9-புவனேஷ்வர், 10-குல்தீப், 11-சாஹல் – இந்த அசடுகளை வைத்துக்கொண்டு இன்னும் 116 ரன்னா எடுக்க முடியும்? சான்ஸே இல்லை எனத் தோன்றிய கட்டத்தில், பாதிப்பேர் டிவி-ஐ அணைத்துவிட்டு குறட்டைவிட ஆரம்பித்திருப்பார்கள்தான்.

Deepak Chahar

விழித்துக்கொண்டு விளையாடியவர் ஆனார், India’s sudden hero! ஓவராக தூக்கி அடித்து ஆக்ரோஷ அலட்டாமல், நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். புவனேஷ்வர் குமாரை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டே, அவ்வப்போது பௌண்டரி, சிக்ஸரும் தட்டி இந்தியாவை கரை சேர்த்துக் கலக்கிவிட்டார் தீபக் சாஹர். Career-best 69 not out. வெற்றியின் விளிம்பில் நின்றிருந்த லங்காவைப் பின்னே தள்ளிவிட்டு வென்றது இந்தியா. லங்காவின் தரப்பில் நன்றாக ஸ்பின் போட்டுத் தாக்கினார் வனிந்து ஹஸரங்கா. எதிர்கால லங்கா ஸ்டாரோ..

ஜெயித்திருக்க வேண்டிய மேட்ச்சை தோற்றதால், லங்கா கேப்டன் ஷனகாவுக்கும் கோச் மிக்கி ஆர்தருக்குமிடையே சூடாக வாக்குவாதம் கிளம்பியிருக்கிறது மைதானத்தில். வீடியோ ஆனது வைரல்!

ஹர்தீக்  பாண்ட்யா -பேட்டிங், பௌலிங்- இரண்டிலுமே தடுமாறிக்கொண்டிருக்கும் இக்கட்டான இந்திய நிலையில், ஒரு சரியான ஆல்ரவுண்டராக, வெள்ளைப்பந்து போட்டிகளில்,  தீபக்கை  நம்பலாம் போலிருக்கிறது. You are good enough to bat at No.7 -என்று திராவிட், பேட் செய்யப்போகுமுன் தன்னிடம் சொன்னார் என்கிறார் தீபக். பார்ப்போம் – இன்னும் கதை நிறைய இருக்கிறது.

**

கிரிக்கெட்: ப்ரித்வி மேஜிக் !

கொழும்புவில் நேற்று நடந்த ஒரு-நாள் கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா, எதிர்பார்க்கப்பட்டபடி எளிதாக வென்றது. ஸ்ரீலங்கா பெரிய ஸ்கோராக கொடுக்கமுடியாததற்கு அவர்களது பேட்ஸ்மன்களின் அனுபவக் குறைவே காரணம்.

Prithvi Shaw & Dhawan – Good chemistry..

லங்கா விளையாடிய அழகில்,  262 என்கிற ஸ்கோரே கொஞ்சம் ஆச்சர்யமானதுதான். 235-ஐத் தாண்டமாட்டார்கள் என்றே தோன்றியது. இலக்கை இந்தியா துரத்துகையில், லங்காவின் துவக்க பௌலிங்கை துவம்சம் செய்துவிட்டார், இந்திய அணிக்குத் திரும்பியுள்ள ப்ரித்வி ஷா. தவன் அடுத்த பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்க, ஏதோ சன்னதம் வந்ததுபோல் ஆடினார் ஷா. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் இந்திய உள்நாட்டுக்கிரிக்கெட்டிலும், ஐபிஎல்-இலும் ஆடி, தன் ஃபார்மை தேர்வாளர்களுக்கு நினைவுபடுத்திவந்தார் அவர். ஆஸ்திரேலியாவில் இந்தியா 36-ல் ஆல் அவுட்டானதற்கு என்னமோ ப்ர்திவி ஷாதான் காரணம் என்பதுபோல், அவரை ஒரு வருடம் இந்திய நீலத்தில் ஆடவிடாமல் செய்துவந்தார்கள் (தேர்வுக்குழுவா அல்லது கோஹ்லி-ஷாஸ்த்ரி கூட்டணியா?). நேற்று ஷா ஆடிய விதம் இந்த வருட இறுதியில் வரவிருக்கும் டி-20 உலகக்கோப்பை அணியில் ப்ரித்வி ஷா இருந்தே ஆகவேண்டும் என்கிற நிதர்சனத்தை மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. கொழும்புவில் இந்திய செலக்டர்கள் இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள். புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புவோம்.

எப்படிப் போட்டாலும் சாத்துகிறானே இவன் – என்கிற குழப்பத்தில், ஆத்திரத்தில்தான் துஷ்யந்தா சமீரா ஷார்ட்-பிட்ச் பந்துகளாக ஷாவுக்கு வீசி நிலைகுலைக்க முயன்றார். ஷா இவற்றைக் குனிந்து தவிர்க்க முயல்கையில்தான் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தது ஒரு பந்து. தலையடியா (concussion) எனப் பதறி ஓடிவந்த நிபுணர்களை, ஷா ஆசுவாசப்படுத்தவேண்டியாயிற்று! ஹெல்மட் மாற்றிக்கொண்டு ஷா தொடர்கையில், லங்கா கேப்டன் தந்திரமாக அகிலா தனஞ்சயா மூலமாக ஸ்பின்னை இறக்கினார். நாலைந்து பந்துகளைக் கவனித்துவிட்டு தாக்கியிருக்கலாம் ஷா. அவர் இருந்த வேகத்தில் முதல் பந்தையே வானவேடிக்கை காட்ட முயற்சிக்க, கேட்ச் ஆனது பந்து. ஆட்டநாயகன் ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43. அவர் இருந்தவரை லங்காவுக்கு மூச்சுவிடுவதில் ஏகப்பட்ட சிரமம் இருந்தது.

Ishan Kishan got Birthday Gift, 2nd Indian Cricketer after Gursharan Singh  ODI debut on Birthday | Ishan Kishan को मिला शानदार Birthday Gift, इस मुकाम  को हासिल करने वाले दूसरे भारतीय क्रिकेटर
Ishan Kishan – impressive debut

இந்தியாவுக்காக முதல் ஒரு-நாள் போட்டி ஆடிய இஷான் கிஷனும், சூர்யகுமாரும் சிறப்பாக ஆடினார்கள். ஷா அவுட் ஆனவுடன் வந்த கிஷன், முதல் பந்தில் சிக்ஸ் விளாசினார்; அசத்தல் அரைசதமடித்தபின்பே வெளியேறினார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ஷிகர் தவன், பின்னர் கொஞ்சம் வேகத்தை ஏற்றி 86 நாட்-அவுட் என வந்து சேர்ந்தார். அவரது கேப்டன்சி நன்றாக அமைந்து, 7 விக்கெட் வித்தியாச வெற்றி கிடைத்தது. ஸ்பின் -இரட்டையர்கள் குல்சா (குல்தீப்-சாஹல்) ஆளுக்கு 2, தீபக் சாஹர் 2, பாண்ட்யா சகோதரர்கள் ஆளுக்கு 1, என விக்கெட்டுகள். புவனேஷ்வர் குமாரிடம் பழைய திறன் காணப்படவில்லை. அடிவாங்கியும் விக்கெட் எடுக்கவில்லை.

ஸ்ரீலங்காவுக்கு சமிகா கருணரத்ன (Chamika Karunaratne) 43 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர். கேப்டன் ஷனகாவின் நிதானமான 39 – உதவவில்லை. பௌலிங்கில் லங்கா ஸ்பின்னர்கள்  பரவாயில்லை. சமீராவிடம் வேகம் மட்டும் இருந்தது.

20-7-21- ல் நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் – 1)உத்வேகம் பெறுமா லங்கா? 2) இந்தியப் புதுமுகங்களில் யாருக்காவது வாய்ப்புக் கிடைக்குமா ? கேள்விகள் -நாளை மதியத்தை நோக்கி நிற்கின்றன..  

**

இந்தியா-ஸ்ரீலங்கா கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இப்போதிருக்கும் நிலையில், அந்த அணிக்கு யார் தற்போதைய கேப்டன் என்பதில் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கே குழப்பம் வந்திருக்கும். கடந்த மூன்று வருடங்களாக ஒரு-நாள் போட்டிக்கான ஸ்ரீலங்கா அணிக்கு அடிக்கடி கேப்டன்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் -ஆஞ்சலோ மேத்தியூஸிலிருந்து இப்போது வந்திருக்கும் .. யாரது? -வரை. கோச்களின் கதியும் இப்படியே. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாறாதது அதன் கிரிக்கெட் நிர்வாகிகளின் அணி மட்டுமே! இந்த லட்சணத்தில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருக்கும் இந்திய அணி – ஒரு இரண்டாம் பட்ச அணியாம்.. அதற்கு ஒத்துக்கொண்டதன் மூலம் ஸ்ரீலங்காவின் கௌரவம் போய்விட்டதாம்! – முன்னாள் கேப்டன் – இந்நாள் அரசியல்வாதி அர்ஜுனா ராணதுங்காவின் புலம்பல் .

முதன்முறையாக இந்திய அணிக்கு ஷிகர் தவன் கேப்டனாகியிருக்கிறார் -இந்த ஒரு-நாள், டி-20 தொடர்களுக்காக. டெஸ்ட் டீமில் இல்லாத, சமீபத்திய இந்திய ஒரு-நாள் போட்டிகளில் ஆடிய புதியவர்கள், சிலர் ஏற்கனவே ஆடியவர்கள் என அணிவகுத்து நிற்கிறது இந்திய அணி. நிதிஷ் ரானா (பேட்ஸ்மன்), சேத்தன் ஸக்காரியா (வேகப்பந்துவீச்சாளர்), வருண் சக்ரவர்த்தி (ஸ்பின்னர்) என புதுமுகங்களும் உண்டு.

நாளைய போட்டிக்கு இந்திய அணி இப்படி இருக்கலாம்: ஷிகர் தவன், ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்ஸன், மணீஷ் பாண்டே, ஹர்தீக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், யஜுவேந்திர சாஹல். வருண் சக்ரவர்த்தியும், சேத்தன் ஸக்காரியாவும் – முதல் போட்டியிலேயே ஆடவைக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறி.

தஸுன் ஷனகா (Dasun Shanaka) தலைமை தாங்கும் ஸ்ரீலங்காவின் ஒரு-நாள் அணியில் முக்கியமான மூவர் இல்லை. டிக்வெல்லா, குஸால் மெண்டிஸ், குணதிலகா – இங்கிலாந்தில் சமீபத்திய டூரின்போது bio bubble-ஐ மீறி வெளியே சென்றதால் தடை செய்யப்பட்டுள்ளனர். துவக்க ஆட்டக்காரர் குஸால் பெரேரா காயம் காரணமாக ஆடவில்லை. அணியில் அனுபவஸ்தர்கள் குறைவு. புதியவர்கள் அதிகம். அவர்களுக்கு வேறுவழியில்லை. அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பதும் நிஸங்கா (Pathum Nissanka) துவக்க ஆட்டக்காரர்கள் : தனஞ்சயா டி சில்வா(Dananjaya de Silva) , பனுகா ராஜபக்ஸ (Bhanuka Rajapakse), தஸுன் ஷனகா ஆகியோர் மிடில் ஆர்டரில் வரக்கூடும். ஸ்பின்/வேகம் எனப் பந்துவீச்சில் லக்ஷன் ஸந்தகன், இஷுரு உடானா, துஷ்மந்தா சமீரா (Dushmantha Chameera), கஸுன் ரஜிதா இருக்கலாம். டிக்வெல்லா (Niroshan Dickwella) இல்லாத நிலையில் மினோத் பனுகா (Minod Banuka) விக்கெட் கீப்பராக ஆடுவார் எனத் தெரிகிறது.

இந்தியா ஒரேயடியாக ஸ்ரீலங்காவைத் துவம்சம் செய்துவிடுமா இல்லை, ஸ்ரீலங்கா திருப்பிக்கொடுக்குமா, அதனால் முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

Match starts at 1500 (IST). Live in India : Sony Ten 1, Sony Six. For Tamil coverage Sony Ten 4

**

சி.சு. செல்லப்பா சிறுகதை

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் மறக்க இயலாத எழுத்தாளர். வத்தலக்குண்டு சொந்த ஊர்.  இளம் வயதில் சென்னை வந்து,  சுதந்திரச் சங்கு, மணிக்கொடி ஆகிய அந்நாளைய சிற்றிதழ்களில் ஆரம்பித்தார் தன் எழுத்து வாழ்க்கையை. தரமான தமிழ்ப் படைப்புகளைத் தரவென, தானே முன்னிட்டு, ‘எழுத்து’ என்னும் சிற்றிதழை, எத்தனையோ இன்னல்களிடையே ஒரு தவமே போல் நடத்தி (தோளில் சுமந்து சென்று கல்லூரிப்படிகளில் ஏறி இறங்கியவர், மாணவர்கள் வாங்க, வாசிக்க என) தமிழுக்கு அணி சேர்த்த ஆளுமை.  கதைகள், புதினங்கள், நாடகம், திறனாய்வுக் கட்டுரைகள் என விரிவாகப் பரந்து நிற்கும் எழுத்துலகம் அவருடையது. சுதந்திரப்போராட்ட அனுபவங்களை மையமாகக் கொண்டு, சுமார் 16 ஆண்டுகள் உழைத்து அவர் எழுதிய நாவல் ’சுதந்திர தாகம்’. திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவில் ஒரு சிறு வாடகை வீட்டில், அந்த நாவலின் அச்சுப்பிரதிகளும், எழுத்து பிரசுரங்களும் ஒரு மூலையில் குவிந்து கிடக்க, தன் மனைவியுடன் முதுமையின் தள்ளாமையில் வாழ்ந்து 1998-ல் மறைந்தவர். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, திடீரென விழிப்பு வந்ததுபோல் சாஹித்ய அகாடமி எழுந்து கண்ணைக் கசக்கியது; செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலிற்கு விருது வழங்கியது (2001). 

அவரது எழுத்தைக் கொஞ்சம் அனுபவிப்போம்: 

சிறுகதை :  முறைமைப் பெண் – சி.சு.செல்லப்பா

அழகுவின் கல்யாணம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அன்றைக் கல்யாண காரியம் முடிந்து, அழகுவும் அங்கம்மாளும் படுக்கப் போகும் சமயம், அவர்கள் வீட்டுக் கதவு தடதடவென்று இடிக்கப்பட்டது. இந்நேரத்திற்குப் பிறகு யார் வந்து கதவைத் தட்டுவார்கள் என்று சந்தேகித்து , “யாரது?” என்று கேட்டுக்கொண்டே அங்கம்மாள் கதவைத் திறக்கப்போனாள். “நான் தான் அங்கி, கதவைத்திற” என்று வெளியிலிருந்து ஒரு முரட்டுக்குரல் பதில் அளித்தது. அந்தக் குரலைக் கேட்டதும், தாயும் மகளும் ஏக காலத்தில் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்து விழித்துக்கொண்டார்கள். பயம் தோய்ந்த ஒரு கலக்கம், பீதி அந்த விழிப்பில் கலந்திருந்தது.

சி.சு. செல்லப்பா | அழியாச் சுடர்கள்
சி.சு. செல்லப்பா

அந்தக் கலக்கத்தையும் அமிழ்த்திக் கொண்டு, அங்கம்மாள் போய்க் கதவைத் திறக்கவும், வீடு அதிரும்படியாகக் காலடி எடுத்து வைத்துப் பகுடித்தேவன் உள்ளே நுழைந்தான். இத்தனை வருஷங்களாக உழைத்து உழைத்து வைரம் பாய்ந்து போன தேகமும், குடித்துக் குடித்து நிலையாகச் சிவப்பேறிப் போயிருந்த கண்களும், இரண்டு கன்னங்களிலும் கிர்தா மீசையோடு வந்து சேரும்படியாகக் “கேரா’ வெட்டி விடப்பட்டு, இடுப்பில் தோல் உறை இடப்பட்டிருந்த ஒரு பிச்சுவா சகிதம், வெளிக்குத் தெரியாதபடி குத்து ஈட்டி ஒன்று மறைக்கப்பட் டிருந்த பித்தளைப்பூண் இரு புறமும் பிடித்த ஒரு கருங்காலித் தடியைக் கையில் வைத்துக்கொண்டு, ஆஜானுபாகுவாய் உள்ளே நுழைந்த உருவம், ஒரு கற்பனைக் காட்டுத் தெய்வத்தின் தோற்றத்தை அளித்தது.

பகுடித் தேவன் வரவும், அங்கம்மாள் அவன் பக்கம் திரும்பி, “அண்ணே, வா ! ஏது இந்த அகாலத்திலே புறப்பட்டு வந்தே? எங்கேயாவது காவலுக்குப் புறப்பட்டியா? ஏது இத்தனை நாளா இந்தப் பக்கமே காணோம்? இந்த ஊரிலேயே இருந்துக்கிட்டு…” என்று ஒரு புறம் அவனுடைய அகால வருகையை விரும்பாமல் வினவி, மறுபுறம் பரிவோடு கேட்பவள் போல வரவேற்றாள். ஆனால் பகுடியோ அவள் அழைப்பிற்குப் பதில் ஒன்றும் பேசாமல், தீவிரம் பொங்கும் முகத் தோற்றத்துடன், தடியை முன்னாலே போட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்தான்.

யதார்த்தத்திலேயே அந்த அகாலத்தில் பகுடி வந்தது அவளுக்கு அவ்வளவு திருப்திப்படவில்லை. அதற்கேற்றாற்போல் வரும் போதே அவன் கடுப்பாக நடந்து கொண்டது அவளுக்கு அசாதாரணமாகப் பட்டது. அவர்களுக்குள் முன் நடந்தது, பின் நடக்க இருப்பது இவற்றைக் கோவைப்படுத்திக் கொண்ட பொழுது, என்ன அனர்த்தத்திற்கு அவன் அடிபோடுகிறானோ என்ற பயம் ஏற்பட்டது தாய்க்கும் மகளுக்கும். எடுத்த எடுப்பிலேயே இருவரிடையேயும் சௌஜன்ய உணர்ச்சி காணப்படாதது, அவர்களுக்குள்ளே இருந்த மனஸ்தாபத்தை வெளியிட்டுக் காண்பித்தது.

அப்பொழுது வெளியே நல்ல இருட்டு. ஆடிக் கடைசி. ஆகையால் காற்று முழு வீறாப்புடனும் புழுதியை அள்ளி வீசிக்கொண் டிருந்தது. பனை மரங்கள் ஒன்றோடொன்று மோதி ‘ஹோ’ என்று அலறிக் கொண்டிருந்தன. அவ்வளவு கொதிப்படைந்த இரவு – அதற்குச் சமமாகக் கொதிப்படைந்த மனத்தோடு இருந்த பகுடி, ஒரு கனைப்புக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். அந்தக் கனைப்பு, தாய்க்கும் மகளுக்கும் கசந்து வழிந்தது. என்ன சொல்லப் போகிறானோ என்று அவன் வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அங்கி! நீ நினைத்ததை அப்படியே சாதித்துப் போட்டே, இல்லையா? குலத்தைவிடப் பணம் உனக்கு பெரிசாப் போயிருச்சு. அந்தப் பஞ்சாயத்துக்காரன் சம்பந்தம் உனக்கு ரொம்ப உசத்தியாப் போயிருச்சு. நம்ப மாசானம் உன் கண்ணுக்கு அவ்வளவாத் திருப்திப் படல்லே, இல்லையா?” என்று அடித் தொண்டையிலிருந்து உறுதியான குரலில் பேசினான். அவன் கண்கள் நிலையாக அவர்கள் இருவரையுமே மாறி மாறி விழித்து உருண்டன, அவன் இதைச் சொல்லும் பொழுது .

அங்கியும், அழகுவும் எதிர்பார்த்துப் பயந்தது போலவே எடுப்பிலேயே இவ்வளவு உஷ்ணமாக ஆரம்பித்தது,  அவர்களுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. தீர்ந்துபோனதென்று அவர்கள் கருதியிருந்த விஷயத்தை அவன் திரும்பக் கிளறி விட்டு விட்டான். மேலும் மேலும் அதைப்பற்றிப் பேசுவது மனஸ்தாபம் அதிகரிப்பதற்குத்தான் இடமாகும். ஆயினும் என்ன செய்வது? அவன் அப்படி நினைக்கவில்லை. ஜவாப் கூறித்தானே ஆகவேணும்!

“அதைப்பற்றி இனிமே பேச்சு எதற்கு? அண்ணே, வியவகாரந்தான் ஒரு விதமாகத் தீர்ந்து போயிடுத்தில்லே” என்று பேச்சிற்குப் புள்ளி வைத்து அங்கம்மாள் பதில் கூறினாள்.

“என்ன, தீர்ந்தா போயிருச்சு! நான் அப்படி நினைக்கல்லையே” என்றான் பகுடி, திரும்பவும் பன்மடங்கு உறுதியுடன். இதைக் கேட்டதும் அங்கம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனத்திற்குள் ஒரே கலக்கம். பதில் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

“மாசானம் ரொம்ப ஆசைப்படறான், ஓரண்டையும் பார்க்காமே ஏதோ ஒண்ணுக்குள்ளே ஒண்ணு கட்டிக் கொடுத்திருன்னு எத்தனையோ வாட்டி வலுவிலே உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன். அதைக் கொஞ்சங்கூடக் காதிலே போட்டுக்காமே இந்த மாதிரி காரியம் செய்துட்டே.. பகுடியை மனுசன்னு கூட மதிக்காமே…ஹும்!” என்றான் பகுடி தொடர்ந்து.

அங்கம்மாள் அவனுக்கு விட்டுக் கொடுக்காமல், “அண்ணே! என்ன இப்படிப் பேசறே! மாசானத்துக்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கத் தோதுப்படாதுன்னு உன்கிட்ட எத்தனை வாட்டி நானும் சொல்லியிருக்கேன். அழகுவுக்குத்தான். அவனைக் கட்டிக்கிற பிரியமே இல்லை. அப்புறம்…”

இதை அவள் கூறி முடிப்பதற்குள் பகுடியின் முகம் சரேலென்று நிமிர்ந்து அழகு பக்கம் திரும்பிக் கோபத்தோடு உருண்டன விழிகள். “நேற்றுப் பிறந்த கழுதைக்கு அவ பிரியம் வேறே வச்சிருக்குதோ? ஹும், வேண்டாமோ?” என்று கோபத்தில் நகைத்தபோது, அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது. அந்த இடத்தில் அதற்குமேல் நிற்க முடியாமல் அழகு அப்புறம் போய்விட்டாள்.

“அண்ணே, அவளோ எனக்கு ஒண்ணே ஒண்ணு. அவள் சம்மதம் இல்லாமே செய்கிறதற்குப் பிடிக்கல்லே” என்றாள் அங்கி பணிவோடு.

“அப்போ, ஜாதி முறைமை யெல்லாம் பறந்து போயிருச்சோ?” என்று கர்ஜித்தான் பகுடி.

அங்கி நடுநடுங்கிப் போய்விட்டாள். அவனிடம் எப்படிப் பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. வாஸ்தவமாகவே மாசானத்திற்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கக் கொஞ்சமும் அவளுக்கு இஷ்டம் இல்லை. அங்கம்மாள் வாழ்க்கைப்பட்ட இடம் கொஞ்சம் பசையுள்ள இடம். நாளையும் பின்னும், கண்ணீரும் கம்பலையுமாக வந்து நிற்காமல், கண்ணியமும் கொஞ்சம் அந்தஸ்தும் உள்ள இடத்தைத் தேடும் அவளா, இந்த யோக்கியதையும், பொறுப்பும், பணமும் இல்லாத கஜப் போக்கிரியின் மகன் – காவாலிப்பயல் – மாசானத்துக்கு அழகுவைக் கொடுப்பாள்?

இந்த லக்ஷணத்தில் முறைமை கொண்டாடுகிறான் – பகுடி. ஜாதி வழக்கமாம் வழக்கம்! முறைமையைப் பார்த்து விட்டுத்தான் அப்புறம் வெளியிடம் பார்க்கணுமாம்; வேடிக்கைதானே! ஆனால் இந்தக் காரணத்தையெல்லாம் பகுடியிடம் நேரடியாக எடுத்துச் சொல்லி அவன் கோபத்தை அதிகரிக்கச் செய்யவில்லை. பயந்து பயந்து தான் அங்கம்மாள் பதில் கூறினாள். அழகுவின் மீது சுலபமாகப் பழியைத் தூக்கிப் போட்டு விட்டாள். பகுடியின் கடைசிக் கேள்விக்கு அவள் ஒன்றும் பதிலே பேசவில்லை.

ஆனால் பகுடி அதோடு விட்டு விடாமல் திரும்பவும் அதே முரட்டுக் குரலில், “இதோ பாரு , அங்கி; உன்கிட்டத் தர்க்கம் பேசிக்கிட்டு இருக்கிறதற்கு நான் இங்கே வரல்லே. நம்ம ஜாதி வழக்கப்படி பேசாமே மாசானத்துக்குக் கட்டிக்கொடுத்திரு” என்றான்.

“என்ன, என்ன? நிச்சயம் பண்ணின கல்யாணத்தை முறிச்சிடவா சொல்றே?” என்று தன்னை மீறிப் பலக்கக் கூவிவிட்டாள் அங்கம்மாள், வியப்புக் குரலில்.

”ஆமாம், அதைத்தான் சொல்றேன். பேசாமே அப்படிச் செய்துடு. இல்லாட்டிப் பின்னாலே ரொம்ப மனஸ்தாபத்திற்கு இடமுண்டாவும்” என்றான். அங்கம்மாள் அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின்பு தன்னைத் திடப் படுத்திக்கொண்டு, “அண்ணே, நீ இப்படியெல்லாம் பேசறது நல்லாயில்லே, அதது தலைப்பொறி போலே நடந்துட்டுப் போவுது” என்றாள் இறைஞ்சலாக. தங்கள் விஷயத்தில் கூட அவன் அப்படி நடந்துகொள்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சாதனைக் குணம் நன்றாகப் பிடித்துக்கொண்டுவிட்ட ஒருவனுக்கு, தன் இனம், பிற இனம் என்று கூடப் பகுத்தறிய முடியாதபடி அறிவு இருளடைந்து விடுகிறது.

“அப்போ மாசானத்துக்கு அழகுவைக் கட்டிக் கொடுக்கமாட்டே நிச்சயமாய்? ஹும்?” என்று கூவினான் பகுடி.

“நிச்சயமான கல்யாணத்தை நிறுத்த முடியுமா அண்ணே? விட்டுடு பேச்சை” என்று சமாதானமாகக் கூறினாள் அங்கி.

பகுடியின் கோபமும், முரட்டுத்தனமும் அளவு கடந்து போய்விட்டன. உட்கார்ந்து கொண்டிருந்தவன் சரேலென்று எழுந்து, தடியைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி, “பகுடின்னா என்னமோ லேசாக நினைச்சுக்கிட்டு இருக்கிறே நீ! கிராமமே என்னைக் கண்டா நடுநடுங்கிக்கிட்டுக் கிடக்குது. அதுவும் உனக்குத் தெரியாம இல்லே. முறைமையை விட்டுட்டு வேறே இடத்திலே குட்டியைக் கட்டிக் கொடுத்துட்டா எனக்குத்தான் கேவலம். பகுடி ரோஷம் கெட்டவனல்ல. எங்கே இந்தக் கல்யாணம் நடந்துடறதைப் பார்த்துடறேன்! இல்லாட்டி என் பேரு பகுடியும் அல்ல; மறவனுமல்ல” என்று கிர்தாவில் கைபோட்டுத் திருகிக்கொண்டு, கண்களில் தீக்கனல் வீச, சட்டென்று திரும்பி வாசற்படியைக் கடந்து கீழே இறங்கி, இருளில் மறைந்து போய்விட்டான் பகுடி.

“அண்ணே! அண்ணே!” என்று ஏதோ கூற அங்கி, வாயெடுத்தாள். அவன் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்விட்டான், அந்த அபாக்கிய வீட்டில் பயத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி விட்டு.

மறு நாள் காலையில் அங்கம்மாள் வேறு ஒன்றும் தோன்றாமல் போலீஸில் போய் இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் தன் மகள் கல்யாணத்திற்குப் பகுடி, அவன் சகாக்கள் ஆகியவர்களால் இடைஞ்சல் ஏற்படு மென்று பயப்படுவதாயும், பந்தோபஸ்துத் தரவேண்டு மென்றும் “ரிபோர்ட்’ செய்து விட்டாள். அதன்மீது போலீஸார் பகுடியையும், அவன் மகனையும் கூப்பிட்டு அந்தக் கல்யாண சம்பந்தமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களே ஜவாப்தாரி என்று எழுதி வாங்கிக் கட்டுப்படுத்தி எச்சரித்து அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது தான் சம்பந்தப்பட்டவர்கள் மனத்தில் ஒரு நிம்மதி பிறந்ததென்று சொல்ல வேண்டும். இனிக் கல்யாணம் இடைஞ்சலின்றி நடக்கக்கூடுமல்லவா!

ஆனால் பகுடி இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன் சகோதரி அவ்வளவு தூரத்திற்குப் போகமாட்டாள் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனுடைய செய்கையே அவளுடைய அந்த நடவடிக்கைக்குத் தூண்டுகோலாக இருந்தது. இது வரையில் சுயேச்சை யாக நடந்து கொண் டிருந்த தான் கட்டுப்படுத்தப் பட்டதை நினைக்கும் பொழுது, அவன் மனம் கொதித்தது. எந்த விதத்தில் இதற்குப் பழி வாங்கலாம் என்று ஆராயத் தொடங்கியது அவன் முரட்டு உள்ளம்.

கல்யாண தினம் வந்துவிட்டது. அவர்கள் ஜாதி வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டிலேதான் கல்யாணம் நடப்பது வழக்கம். எனவே பெண் வீட்டா ரெல்லாம் கல்யாணத்திற்கு முந்தின நாளே மாப்பிள்ளை வீட்டுக் கிராமத்திற்குப் போய்விட்டார்கள். அங்கம் மாள் வீடு பூட்டிக் கிடந்தது.

பாதிராத்திரி சமயம் இருக்கும். மாப்பிள்ளை வீட்டுக் கிராமத்திலே அழகுவுக்கும், பாலுத்தேவன் மகனுக்கும் அந்நேரத்தில் முகூர்த்தம் ஆகி எல்லோரும் சந்தோஷமாகப் பொழுது போக்கிக்கொண் டிருக்கும் சமயம். அமாவாசை ஸமயமாகையால், எங்கும் இருட் டாக இருந்தது. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நக்ஷத்திரங்கள் மின்னிக் கொண் டிருந்தன. காற்று அகோரமாகக் கிளம்பி வீசிக்கொண் டிருந்தது. எல்லோரும் ஒரு தூக்கம் போட்டிருப்பார்கள். அப்பொழுது, திடீரென்று அரைகுறைத் தூக்கத்தில் இருந்த சிலருடைய நாசிகளில் ஓலை எறிவதனால் உண்டாகும் புகை நாற்றம் போல் ஏதோ தாக்கியது. சந்தேகப்பட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அங்கம் மாள் வீடு பற்றி எரிந்து கொண் டிருந்தது. தீப்பட்ட ஓலைத்துண்டுகள் பல ஆயிரக்கணக்கில் காற்றில் சிதறி நானா பக்கங்களிலும் பறந்து போய்க்கொண் டிருந்தன. அவ்வளவு தான்; கிராமமே ஒரே அல்லோல கல்லோலப் பட்டது. எங்கே பார்த்தாலும் ஒரே பரபரப்பு; ஆரவாரம். தீ பரவி விடாமல் இருக்கவேண்டிய வழிகள் எல்லாம் தாமதமின்றிக் கையாளப்பட்டும், தீ அணைய வெகு நேரம் பிடித்தது, காற்றடி காலமாகையால். அங்கம்மாள் வீடு உள்ளிருந்த சாமான்களோடு முழுவதும் வெந்து சாம்பலாகிவிட்டது.

கல்யாணம் முடிந்து மறுநாளே அங்கம்மாள் திரும்பி வந்தாள். வீடு இருக்கும் நிலைமையைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் பதறிற்று. கொஞ்ச நேரம் பிரலாபித்து விட்டு, உடனே போய் அதையும் போலீஸாரிடம் “ரிபோர்ட்’ செய்து விட்டாள். போலீஸார் வாசனையை நுகர்ந்தார்கள். பகுடியையும், மாசானத்தையும் கைது செய்யுமாறு வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. மாசானம் சுலபமாகப் பிடிபட்டான். பகுடியோ பதினைந்து நாட்கள் வரை அகப்படாமல் தப்பித்துக்கொண்டிருந்து பிறகு சாதுர்யமாக ஜாமீன் வசதி ஏற்படுத்திக்கொண்டு, ஆஜராகி ‘லாக்கப்பிற்குப் போகாமல் கோர்ட்டிலிருந்தே ஜாமீனில் விடுதலைக்கு வழி செய்து கொண்டான்.

அங்கம்மாளுக்குப் பகுடி தன் அண்ணன் என்ற நினைப்பே கூட இல்லாமற் போய்விட்டது. வீட்டையே எரித்துத் தன்னைப் பாழ்படுத்தியவன் அண்ணனாக இருந்தால் என்ன, வேறு யாரானால் என்ன? அத்தனை ஆக்ரோஷம் அவளுக்கு அவன் மீது பிறந்துவிட்டது. எப்படியாவது அவனை இதற்காகச் சிறையில் வைத்துப் பார்க்க வேண்டு மென்று கூட உறுதி கொண்டு விட்டாள்

அதோடு பகுடியை ஒழிப்பதற்குத் தக்க சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண் டிருந்த கிராமமும் அவளுக்குத் துணை புரியத் தூண்டுகோலாக முன் வரவே, பகுடிக்கு எதிராகப் பலமாகச் சாக்ஷிகளைத் தயாரிப் பதில் இறங்கிவிட்டாள். பகுடி தான் தீ வைத்தவன் என்று அவள் நிச்சயமாக நம்பினாள்.

தன்மீது தீ வைத்த குற்றம் சுமத்தப்படுவதைப் பகுடியால் பொறுக்க முடியவில்லை. குற்றம் செய்திருந் தால் அவன் மனம் சிறிதும் அதன் பயனை அனுபவிக்கத் தயங்காது. ஆனால் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிப்பதென்றால், அதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சப்மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணை ஆரம்ப மாயிற்று. பகுடிக்கு எதிராகச் சாக்ஷிகள் மிகப் பலமாகத் தயார் செய்யப்பட்டிருந்தனர். பகுடி கைதிக் கூண்டில் நின்று கொண் டிருந்தான். இந்த நாற்பது வருஷ காலத்திலே இன்றைக்குத்தான் அவன் ஓர் அற்ப, தீ வைத்த குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் ஏறி நிற்கிறான். சமயம் பார்த்து எதிரிகள் இப்படித் தன்னைச் சிக்கலில் மாட்டி விட்டதை நினைத்து அவன் மனம் உள்ளூறக் குமுறிக்கொண் டிருந்தது. அவனாலோ எவ்வளவோ முயன்றும் தன் நிரபராதித் தன்மையை ரூபிக்கும் வகையில் சாக்ஷியம் தயாரிக்க முடியவில்லை. எதிர்ச் சாக்ஷியமோ வெகு பலமாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. எங்கே தனக்குத் தண்டனை விதிக்கப்படுமோ என்று பயந்து கொண் டிருந்தான். கூண்டில் குனிந்த தலை நிமிரவே இல்லை. இடையிடையே அங்கம்மாளைப் பற்றிய ஞாபகம் வரும்போது அவன் பற்கள் நறநற வென்று நெரிந்தன. ரோஷத்தில் சொல்லிவிட்ட இரண்டு வார்த்தைகள் அல்லவா அவனது இந்த நிலைமைக்குக் காரணம்!

அன்று அங்கம்மாள் சாக்ஷியம் விசாரிக்கப்பட வேண்டிய பிரமேயம் ஏற்படவில்லையாதலால், அவள் கோர்ட்டிற்கு வரவில்லை. பகுடி பயந்தது போலவே, குறிப்பாக இரண்டொரு சாக்ஷிகளை மட்டும் விசாரித்து விட்டு மாஜிஸ்டிரேட் வழக்கை ஸெஷன்ஸுக்கு அனுப்பி விட்டார். அந்தத் தீர்ப்பு, பகுடிக்குப் பேரிடியாக விழுந்தது. அவன் நம்பிக்கை இழந்தவனாகி விட்டான். அவனது முரட்டு மனமும் கலகலத்துப் போய்விட்டது.

பகுடி ஸெஷன்ஸுக்கு அனுப்பப்பட்ட விஷயத்தை யாரோ ரொம்ப மகிழ்ச்சியோடு அங்கம்மாளிடம் வந்து கூறினார்கள். அவள் மனம் சந்தோஷப்படவேண்டியிருக்க, அவளுக்கு அதைக் கேட்டதும் திடுக்கென்றது. அப்பொழுது அவள் மனத்தில் ஏற்பட்டது, திருப்தியா, அதிருப்தியா என்று அவளாலேயே நிதானிக்க முடியவில்லை. பல முரண்பாடான எண்ணங்கள் அவள் மனத்தில் எழுந்து அலைத்தன. வேதனை போட்டுப் பிய்த்துக் கொண்டது. “ஐயோ! யார்மீது இப்படி நடவடிக்கை எடுத்துக்கொண்டு விட்டோம்’ என்று ஒரு வேதனை அவள் மனத்தில் முளைத்தது. ’அவன் உன் அண்ணன் அல்லவா?’ என்று ஏதோ ஒன்று அவளுக்கு உள்ளே இருந்து வினவியது போல் இருந்தது. மறு கணம் அவன் செய்த கொடுமை நினைவிற்கு வரவும், அதில் ஓர் ஆறுதல் ஏற்பட்டது போல் இருந்தது. வெளியிட்டுச் சொல்ல முடியமால் உள்ளூற இந்தக் குழப்பத்திலேயே நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மங்கலான சூரியன் கூட மேக விதானத்தைப் பொத்துக்கொண்டு வெளிக் கிளம்ப முடியவில்லை. அன்ற தான் ஸெஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையின் கடைசி நாள். பகுடி தான் தண்டிக்கப்படுவது நிச்சயம் என்று தீர்மானித்தவனாய் உணர்ச்சியே இல்லாமல் மனம் குன்றிப் போய், கைதிக் கூண்டில் நின்று கொண்டிருந்தான். குனிந்த தலை நிமிரவே இல்லை. அவனுடைய மானம் அல்லவா அவனை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருந்தது!

விசாரணை ஆரம்பித்தது. சாக்ஷிகள் ஒவ்வொரு வராகக் கூறிவிட்டுப் போய்க்கொண் டிருந்தார்கள். அதைப்பற்றியெல்லாம் பகுடி சிறிதும் கவலைப்பட்டவன் போலவே தோன்றவில்லை. அடுத்த சாக்ஷியின் பெயர் கூப்பிடப்படவும் பகுடி திடுக்கிட்டுத் தன் ஒளியிழந்த கண்களை உயர்த்தி அந்தப் பக்கம் பார்த்தான். அங்கம்மாள் – அவன் சகோதரி – தள்ளாடித் தயங்கி வந்து கொண் டிருந்தாள். அதே சமயம் களையிழந்திருந்த அவள் முகத்திலிருந்து இரண்டு விழிகள் கைதிக் கூண்டை நோக்கின. ஒரே விநாடி இருவர் கண்களும் சந்தித்தன. அடுத்த விநாடி இருவர் முகங்களும் விருட்டென்று தாமாகவே அப்புறம் திரும்பிக் கொண்டன. பகுடிக்கு வெறுப்பு; அங்கமாளுக்குக் குழப்பம். சகோதரனுக்கு எதிர்த் தரப்பில் சகோதரி சாக்ஷி சொல்வதென்றால் அதைவிட விதிவசம் வேறென்ன இருக்கும்?

பகுடியின் அந்தப் பார்வை – கோபமும், நிராதரவும், இரக்கமும், கொடூரமும் கலந்து பேசிய அந்தப் பார்வை அவள் நெஞ்சை ஆயிரம் சுக்கலாக உடைத்து நொறுக்கிவிட்டது. அக்கு அக்காகப் பிரிக்கப்பட்டதொரு கப்பல் போல் சிதறிப் போய்விட்டது. அதனால் எழுந்த கலக்கத்தை அவளால் சமாளிக்க முடியவில்லை. ஒரு யந்திரத்தைப்போல் தான் சொன்னது புரியாமலே மளமளவென்று சாக்ஷியம் கூறிவிட்டு இறங்கிப் போய் விட்டாள்.

அப்பொழுதுதான் அவள் கலக்கம் அதன் உச்ச நிலையை அடைந்துவிட்டதென்று சொல்லவேண்டும். சுலபமாக நிவர்த்தித்துவிட முடியாத ஒரு நிலைமையைச் சிருஷ்டித்துவிட்டாள் அவள்..

ஆனால் ஓர் இரண்டு வருஷ தண்டனையை மனத்தில் கற்பனை செய்து கொண்ட பொழுது அவள் உடல் நடுங்கினாள். அழுகைகூட வந்துவிட்டது. அவளறியாமல், “ஐயோ, ஆத்திரப்பட்டு என்ன காரியம் செய்துவிட்டோம்!” என்று வாய்விட்டுக் கூறி விட்டாள். தன் அண்ணன் சிறைக்குப் போகத் தான் காரணமாக இருப்பதென்றால் !  அவள் கோழையாகி விட்டாள். கோபமும் வர்மமும் அவள் மனத்திலிருந்து பறந்து போன இடம் தெரியவில்லை. எங்கிருந்தோ வாத்ஸல்யமும், பச்சாத்தாபமும் வந்து நுழைந்து கொண்டன. இந்தச் சமயத்தில் ஜட்ஜ் தீர்ப்பு எழுதத் தம் அறைக்குப் போய்விடவே, அங்கம்மாளின் நிலைமை சகிக்கக்கூடா தாகிவிட்டது. ‘ஐயோ, என்ன அவசரப் பட்டு இந்தக் காரியம் செய்துவிட்டேன்! அண்ணனைச் சிறைக்கு அனுப்ப நானா காரணமாக இருப்பேன்? இல்லை, மாட்டவே மாட்டேன். அக்கிரமம்..’ என்று துடித்தாள்.

திடீரென்று ஓர் அசட்டு யோசனை தோன்றியது. ஜட்ஜிடம் போய் நேரில் சொல்லிவிட்டாலென்ன? “அவன் செய்யவில்லை, அந்தக் காரியம். வேறு யாரோ, எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிடக் கூடாதா என்றுகூட நினைத்தாள். ஆனால் அது நியாயஸ்தலம். வாத்ஸல்யத்திற்கும், பச்சாத்தாபத்திற்கும் அங்கே இடம் இல்லை. சட்டத்திற்கும் சாக்ஷியத்திற்குமே மதிப்பு உண்டு. சாக்ஷியமோ அவன் குற்றவாளிதான் என்று நிரூபித்துவிட்டது. சட்டம் அவனைத் தண்டித்துத்தான் ஆகவேண்டும்; இல்லாவிட்டால் அது சட்டமே அல்ல. நீதிக்குப் புறம்பானதாகிவிடும். அவள் மேலும் நினைத்தாள் : ‘ஐயோ, குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று ஜட்ஜ் விடுதலை செய்துவிடமாட்டாரா?’ என்று பேதை மனம் பிதற்றத் தொடங்கியது. ஆத்திரத்தில் தான் செய்துவிட்டதைக் குறித்து மருகினாள், மருகினாள், மருகினாள். மனம் நிலைக்காமல், செய்வது இன்னதென்று புரியாமல் பிரமையே உருவாகிவிட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து ஜட்ஜ் திரும்ப ஆசனத்தில் வந்து உட்காரவும், கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. குல்லாய் அணிந்து கொண்டு, கண்களை ஒரு தரம் கசக்கிவிட்டு, சபையைச் உற்றுப்பார்த்து ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வாயைத் திறந்தார். எல்லோருடைய ஆவல் முகங்களும் கவனத்தோடு அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தன. அதேசமயம் திடீரென்று, “தர்ம துரை…ளே!” என்று தளர்ந்த குரல் ஒன்று நிதானித்துக் கிளம்பியது. “உஸ்! பேசக்கூடாது..’  ‘ யாரது? தள்ளு வெளியே!” என்று பல குரல்கள் ஏக காலத்தில் அங்கம்மாள் வாயை அடைத்தன. ஜட்ஜ் தீர்ப்புக் கூறப் போகும் சமயத்தில் கோர்ட்டில் சப்தம் போடவாவது!

அங்கம்மாளுக்கு மேலே ஒன்றும் பேசத் தோன்றவில்லை. ஜட்ஜையும், சபையையும் மாறி மாறிப் பார்த்து மருள மருள விழித்தாள். இது ஒரு விநாடிக்குத்தான். மறு விநாடி அவள் தளர்ந்த, ஆயாசமடைந்த சரீரம் பொத்தென்று ஆசனத்தில் விழுந்து உட்கார்ந்தது. தலை சாய்மானத்தில் சாய்ந்து கொண்டது. ஜட்ஜ் திரும்பவும் தொடர்ந்து ஆரம்பித்துத் தம் தீர்ப்பைக் கூறி முடித்தார். ஆனால் ஜட்ஜ் கூறிய அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்கள் அப்பொழுது அவள் காதில் விழவில்லை.

**

சி.சு. செல்லப்பாவின் ’சரஸாவின் பொம்மை’ எனும் சிறுகதைத்தொகுதியில் வருகிறது இந்தக் கதை.

இந்திய இலக்கிய விருது – சாஹித்ய அகாடமி

சுதந்திரத்துக்கு ஆறு வருடங்களுக்குப் பின், 1954-ல், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவவும், அவற்றின் இலக்கியம் சார்ந்த பணிகளை வளர்க்கவும், ஒருங்கிணைக்கவும், இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தவும் என உயரிய நோக்கத்துடன், அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட மத்திய அமைப்பு சாஹித்ய அகாடமி. அரசினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஒரு தன்னிச்சையான அமைப்பாக இயங்குகிறது. இதனை நிறுவவென இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மான மொழியில் சாகித்ய அகாடமியின் நோக்கம் : ’a national organisation to work actively for the development of  Indian letters and to set high literary standards, to foster and co-ordinate literary activities in all the Indian languages and to promote through them, all the cultural unity of the country’ எனக் குறிப்பாகச் சொல்கிறது.

தலைநகர் புதுதில்லியில் இதன் தலைமைக் காரியாலயம் ஃபெரோஸ் ஷா சாலையில் உள்ள ’ரபீந்திர பவன்’ என்கிற பிரத்யேகக் கட்டிடத்தில் இயங்குகிறது. சாஹித்ய அகாடமியின் பிராந்திய அலுவலகங்கள் சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்களில், இந்தியப் பெருமொழிகளோடு ஒப்பிடுகையில், நன்கு வளர்ந்த தனி மொழி என ஒன்றில்லை. Dialects எனப்படும்  வாய்மொழியே அங்கு வழக்கிலிருந்து வருகின்றன.  சாஹித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்படாத, ஆனால் அங்கு நிலவும் வாய்மொழி வந்த படைப்புகள், பிரசுரங்களையும் ஊக்குவித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த ஒற்றுமையை வளர்க்கவென திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தாலாவில் ‘The North-East Centre for Oral Literature’  என்கிற அலுவலகத்தை நிறுவி இயக்கிவருகிறது சாஹித்ய அகாடமி.  இதுவன்றி, ஆதிவாசிகளின் மொழி சார்ந்த இலக்கிய, பண்பாட்டு வார்ப்புகள் ஆகியவற்றை ஆராய, வளர்க்கவென சாஹித்ய அகாதமி ’ஆதிவாசி இலக்கிய மையம்’ ஒன்றையும் புதுதில்லியில் நிறுவி இயக்கிவருகிறது.

22 இந்திய மொழிகளோடு, ராஜஸ்தானியும், நாட்டின் இணைப்புமொழியான ஆங்கிலமும் சேர்க்கப்பட்டு மொத்தம் 24 மொழிகளும், சார்ந்த படைப்புகளும் சாஹித்ய அகாடமியின் கட்டுக்கோப்பில், கவனத்தில் வருகின்றன. டெல்லியிலுள்ள சாகித்ய அகாடமியின் நூலகம், இந்தியாவின் முக்கியமான பன்மொழி நூலகமாகும். அகாடமி அங்கீகரித்துள்ள  மொழிகளிலிருந்து, சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், மொழி அகராதிகளும் அடங்கிய சுமார் 2 லட்சம் புத்தகங்கள், இலக்கிய வாசகர்களுக்கு இங்கே வாசிக்கவும், தொடர்புகொள்ளவும் கிடைக்கின்றன.

அவ்வப்போது அகாடமி, இந்திய மொழிகளின் சிறப்புப் படைப்பாளிகள் வரிசையைத் தேர்ந்து, அவர்களின் ஆக்கங்களை ஆங்கிலம் உட்பட பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

1987-லிருந்து இந்த அகாடமி ’எழுத்தாளரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சியையும் தனது புதுதில்லி மற்றும் பிராந்திய அலுவலகங்களில் அவ்வப்போது நடத்துகிறது. ஒரு புகழ்பெற்ற இலக்கிய ஆளுமையை அழைத்துவந்து,  அவரின் வாழ்க்கை, எழுத்தாக்கங்கள்பற்றி வாசகர்கள்/புது எழுத்தாளர்கள் முன் நேரிடையாகப் பேசவைக்கிறது. குறிப்பிட்ட படைப்பாளிபற்றி அவர் வாயிலாகவே மற்றவர்கள் தெரிந்துகொள்ள வழிசெய்யும் அரிய முயற்சி.

Men and Books – மனிதரும் புத்தகங்களும் – என்கிற தலைப்பில் வெவ்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள், பிரபலங்களை அழைத்து ஒரு மொழியின் பிரபல எழுத்தாளர், படைப்பு பற்றி உரையாற்ற சாஹித்ய அகாடமி வாய்ப்பு தருகிறது. இந்த வகையில், ஒரு டாக்டரோ, விஞ்ஞானியோ, தொழில்நுட்ப வல்லுநரோ, ஓவியரோ, பாடகரோ – தனக்குப் பிடித்த, தனிப்பட்ட வகையில் தன் சிந்தனையை மேம்படுத்திய இலக்கிய வாசிப்பு குறித்து 40 நிமிடங்கள் உரையாடமுடியும்.

Through my window – எனது ஜன்னலின் வழியே-  என ஒரு சுவாரஸ்ய நிகழ்வை அகாடமி 1993-லிருந்து முன்னெடுத்துச் செயல்படுத்திவருகிறது. இதில், ஒரு படைப்பாளி தன்னை ஆகர்ஷித்த வேறொரு எழுத்தாளரின் வாழ்க்கை, இலக்கிய படைப்புபற்றி பேச வாய்ப்பு உண்டு.

வாய்ப்பு கிடைக்கையில் இந்திய மொழி ரீதியாகவும், சர்வதேச அளவிலும் இந்தியாவில் இலக்கிய செமினார்களை நடத்திவருகிறது அகாடமி.  

Sahitya Akademi Awards - BankExamsToday
Sahitya Academy Award

வருடந்தோறும் இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய ஆக்கங்களுக்காக சாஹித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் (50-களில்) விருதுபெற்றோருக்கு ரூ.5000 ரொக்கப்பரிசும் பட்டயமும் வழங்கப்பட்டுவந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டது. 2001-ல் பரிசுத்தொகை ரூ.40000 -ஆக இருந்தது. 2009-லிருந்து அது மேலும் உயர்த்தப்பட்டு, இப்போது ரு.1 லட்சம் ரொக்கமும், பட்டயமும் சாஹித்ய அகாடமி விருது பெற்றவருக்கு வழங்கப்படுகின்றன.

சாகித்ய அகாடமி விருதுத் தேர்வுமுறையே ஓராண்டு எடுத்துக்கொள்கிறது. விருதுக்குத் தேர்வுசெய்யப்படும் நூல் இந்த ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் வரையறை உண்டு. சாகித்ய அகாடமியின் வல்லுனர் குழுவினால் முக்கிய படைப்பாளிகளின் புத்தகங்கள் பொதுவாகத் தேர்வுசெய்யப்பட்டு, முதலில் 10 மொழிவல்லுநர்களின் பார்வைக்கு வருகின்றன. ஒவ்வொரு மொழிவல்லுனரும் ஆளுக்கு இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்ய, பட்டியல் தயார்செய்யப்பட்டு, மூன்று அகாடமி நீதிபதிகளின் குழுவுக்கு (Jury) சமர்ப்பிக்கப்படுகிறது. ஏகோபித்த தேர்வு, அல்லது அதிக (நடுவர்குழு உறுப்பினர்கள் (Jury members) வாக்குகள் பெற்ற ஆசிரியர்கள்/படைப்புகள், செயற்குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டு, விருதுக்கான அங்கீகாரம் பெறப்படுகிறது. பிறகு குறிப்பிட்ட ஆண்டிற்கென,  ஒவ்வொரு மொழிசார்ந்து விருது அறிவிக்கப்படுகிறது. கூடவே விருதுத்தேர்வில் சம்பந்தப்பட்ட மொழிசார்ந்த நடுவர் குழுவினரின் பெயர்களும் அறிவிக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மைக்காக இந்த ஏற்பாடு.

2011-ஆம் ஆண்டிலிருந்து ’யுவ புரஸ்கார்’ (சாஹித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது) வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மொழியிலும், 35 வயதுக்குட்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன.  விருதுத்தொகையாக ரூ.50000-மும், சிறு பட்டயமும் விருதாளருக்குக் கிடைக்கின்றன.

**  

வாசகரை சாந்தப்படுத்திய ஜெயகாந்தன்

 ’மணிக்கொடி’ காலத்திற்குப் பின், விஜயபாஸ்கரன் ஆசிரியராக இருந்து 1950-களில் நடத்திய ’சரஸ்வதி’ இலக்கிய இதழ், தமிழின் இளம் இலக்கியப் படைப்பாளிகளைக் கவர்ந்தது. அவர்களது சிறுகதைகள், கட்டுரைகளை ஆர்வமாய் வெளியிட்டுத் தனக்கு வனப்பு சேர்த்துக்கொண்டது சரஸ்வதி. அத்தகையோரில் சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், விந்தன், கிருஷ்ணன் நம்பி ஆகியோர் இருந்தனர். சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவலான ‘ஒரு புளியமரத்தின் கதை’ , முதலில் சரஸ்வதியில்தான் ’புளியமரம்’ என்கிற தலைப்பில் தொடராக எழுதப்பட்டது

வெளிவர ஆரம்பித்திருந்த ஜெயகாந்தனின் கதைகள் அப்போதிருந்த எழுத்து வெளியில், வித்தியாசமாகவும், சிலரை சினப்படுத்தியவையாகவும் இருந்திருக்கின்றன. ’பௌருஷம்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று, சரஸ்வதி, மே, 1957 இதழில் வெளியாகி (அப்போது கதாசிரியரின் வயது 23) சர்ச்சையைக் கிளப்பியது. குணவதியான கிராமத்துப் பெண்ணொருத்தி, கல்யாணம் செய்துகொண்டு தன் கணவனுடன் பட்டணம் வருகிறாள், வாழ. ரிக்‌ஷாக்காரனான தன் கணவன் ஒரு மாதிரி என அவளுக்குத் தெரியாது. ஒருநாள் அவன், எவனோ ஒருவனை வீட்டுக்கு அழைத்துவருகிறான், தன் மனைவியின் அழகு, இளமையை வைத்துக் காசு சம்பாரிக்கலாம் எனத் திட்டமிட்டவாறு. விஷயம் அறிந்து திடுக்கிட்டவள், ஓங்கி விட்டாள் ஒரு அறை கணவனுக்கு. நீயெல்லாம் ஒரு புருஷன்.. உனக்கு நான் பொண்டாட்டியா! – எனச் சீறியவாறு மனம் நொந்து, விடுவிடுவென கிராமத்துக்குத் திரும்புகிறாள் எனச் செல்லும் கதையில் சில திருப்பங்கள், நெளிவு, சுளிவுகள். அந்தக் கதைக்காக வாழ்த்துகள் சிலவும், வசைகள் பலவும் வரிசை கட்டி ஆர்ப்பரித்தன. சரி, கொஞ்சம் விளக்கவேண்டியதுதான் என நினைத்த ஜெயகாந்தன் அடுத்த இதழில், விமர்சனத்துக்குப் பதிலாக சில விஷயங்களைச் சொல்லலானார்:

”கடிதங்கள் மூலமாய் சரஸ்வதியில் வெளியாகும் எனது கதைகளை விமர்சித்து வரும் வாசக அன்பர்களுக்கும், நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும் வாழ்த்தியும், வைதும் என்னை, இலக்கியத்தை வளர்க்கும் இலக்கிய அபிமானிகளுக்கும் எனது நன்றி.

எனது சிருஷ்டிகளைச் சிலர் ‘ஆபாசம்’ என்கின்றனர். சிலர் ‘தரக்குறைவு’ என்கின்றனர். இன்னும் சிலர், ‘இது என்ன, கதையா?’ என்கின்றனர்.

சென்ற இதழில் வெளியான ‘பௌருஷம்’ என்ற கதையைப் படித்துப் பல நண்பர்கள் முகம் சுளித்தனராம்.

ஆம்; நானும்கூட, அந்தக் கதையை எழுதிவிட்டு முகம் சுளித்துக்கொண்டேன்!

மனிதராசியின் வாழ்க்கை வக்கிரங்களைப் பார்த்தால் சிலசமயம், நம் முகம் சுருங்கத்தான் செய்கிறது. அதனால் நாம் வாழ்க்கையை வெறுத்துவிடுகிறோமா என்ன?

இலக்கியமும் அப்படித்தான். அந்தக் கதையைப் படித்துவிட்டு நீங்கள் முகம் சுளித்திருப்பீர்களானால், அதுதான் எனது வெற்றி! என் கதையின் வெற்றி.

ஆனால் அதில் வரும் ரங்கத்தைப் பார்க்கும்போது என் முகம் சுருங்கவில்லை. நெஞ்சு உயர்ந்தது பெருமிதத்தால்.  சற்று, நீங்களும் அதைப் பாருங்களேன்.

கதையை எப்படியெப்படியோ சொல்கிறேன். ஏன் அப்படியெல்லாம் சொல்லவேண்டும் என்று கேட்பதைவிட, எதற்காக அப்படியெல்லாம் சொல்கிறேன்; அப்படியெல்லாம் சொல்லி, கடைசியாக அதில் நிமிர்ந்து நிற்கும் உண்மை என்ன என்று பார்த்தால், நீங்கள் முகம் சுளிக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கடைசியாக என் நண்பர்களையும், வாசகர்களையும் நான் வேண்டிக்கொள்வது இதுதான்.

இலக்கிய விஷயத்தில் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்துவிடாதீர்கள். உங்கள் ‘முசுடு’த்தனத்தைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு, பரந்த நோக்கோடு இலக்கியத்தை அணுகுங்கள். காலத்தின் மீது, வரப்போகும் சரித்திரத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

உண்மை இலக்கியங்கள் நிற்கும். மற்றவை நசிக்கும்.

அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆதலால், தொடர்ந்து கடிதங்கள் மூலமாயும், நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாழ்த்தியோ, வைதோ இலக்கியத்தை வளர்க்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.”

-ஜெயகாந்தன்

சர்ச்சைகளும் விளக்கங்களுமாய், சிறப்பானவர்களின் சீரிய எழுத்து பல தாங்கி, தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கியவெளியில் லட்சிய வீறுநடைபோட்ட காலமது. ‘சரஸ்வதி காலம்’ என்கிற வல்லிக்கண்ணனின் புத்தகத்தைப் படிக்கையில், பகிரத் தோன்றியதே மேல் வந்தது. வல்லிக்கண்ணன் தனது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற நூலுக்காக, 1978-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

**