ASIA CUP 2023: இந்தியா சாம்பியன்ஸ்!

ஆசியகோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இப்படி ஒரு அணி துவம்சம் செய்யப்பட்டதில்லை. நல்லதானே போய்க்கொண்டிருந்தது நமக்கு, என்ன ஆச்சு இன்னிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் கதறும் அளவுக்கு, ஒரே போடாகப் போட்டு சாய்த்துவிட்டது இந்தியா. 50 ஓவர் மேட்ச். டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து, 15 ஓவரிலேயே ஸ்ரீலங்கா மரண அடிவாங்கியது. 50 ரன் – ஆல் அவுட்!

இந்தியாவின் முகமது சிராஜ் போட்ட ஸ்விங் பௌலிங் பல நாட்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் உலகில் ஸ்லாகித்துப் பேசப்படும். 140 + கி.மீ. வேகப்பந்துகளில் சில உட்பக்கமாக ஸ்விங் ஆனதும், பல உள்ளே நுழைந்ததுபோல் திரும்பி, வெளியே போய்ப் போக்குக் காட்டியதும், ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைத் திணறவைத்தது. இதுவரை அனுபவிக்காதது. பிட்ச்சில் இறங்கி இந்திய வேகப்பந்துவீச்சை சந்தித்த உடனேயே, எல்லாம் தலைகீழானது. தடவ ஆரம்பித்துவிட்டார்கள். பேட்டிங் செய்வதெப்படி என மறந்துபோய்விட்டதுபோல் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலேயே பும்ரா, ஓப்பனர் குஸால் பெரெராவைத் தூக்கி வீசினார். சிராஜும் பயங்கரமாக மறுபக்கத்திலிருந்துப் போட்டுத் தாக்க, அவரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள்! கேட்கணுமா பின்னே? ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்குப் பித்துத்தான் பிடித்துவிட்டது என அவர்களது ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். நிலமை அப்படி.. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா 12 க்கு 6 விக்கெட்டுகள்! சிராஜின் அனலிஸிஸ் 5 for 5 எனச் சீறி, ஸ்ரீலங்காவின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சின்னாப்பின்னமாக்கியது. மனுஷனுக்கு ரோஹித் கொடுத்ததே 7 ஓவர்கள்தான். அதில் அவர் சாய்த்தது 6 விக்கெட்டுகள்.

முகமது சிராஜ் – பாராட்டு மழையில் !

பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க எண்ணிய ரோஹித், பாண்ட்யாவிடம் பந்தைக் கொடுத்தார். ஸ்ரீலங்காவுக்கு மூச்சு வருவதற்குள், பாண்ட்யாவின் பௌலிங் அவர்களை அந்தோ பரிதாபமாக்கிவிட்டது. 3 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள். விழிபிதுங்கிய ஸ்ரீலங்க வீரர்கள் அத்தனை விக்கெட்டுகளயும் சொற்ப டோட்டலுக்குப் பறிகொடுத்து ஓடிப்போனார்கள்!

இந்தியா சேம்பியன்ஷிப் வெல்ல 51 ரன் இலக்கு என இறங்கியது. ஷுப்மன் கில்லுடன் (Shubman Gill) ஓப்பன் செய்ய இஷான் கிஷனை இறக்கிவிட்டார் ரோஹித் ஷர்மா. இவர்களும் ஸ்ரீலங்காவின் ஜூனிவர் மாலிங்காவான, பதிரானாவிடம் தடுமாறுவார்கள். 51 ரன் எடுப்பதற்குள் 2, 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்கும் சாயும் என்பது அப்போதைய பொதுவான கணிப்பு. ஆனால் நடந்ததே வேறே! இறங்கிய உடனேயே, பதிரானா, மதுஷன்கா என எவரையும் விடாது தாக்கினார்கள் கில்லும், கிஷனும். 6.1 ஓவர்களிலேயே ரோஹித்தின் கைக்கு வந்தது ஆசிய கோப்பை. 8-ஆவது முறை கோப்பையைக் கைப்பற்றி மகிழ்ந்தது இந்தியா.

பாகிஸ்தானிலும், ஸ்ரீலங்காவிலுமாக நடந்த இந்த ஆசிய கோப்பைத் தொடரின் மறக்க முடியாத இந்திய வீரர் முகமது சிராஜ். ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வாங்கியதும், தான் எப்படிப்பட்ட மனுஷன் என உடனே காண்பித்தார் . ஆசிய கோப்பை தொடர் முழுதும் இஷ்டத்துக்கும் இடைமறித்துத் தொல்லை தந்த மழை, எல்லோருக்கும் எரிச்சலூட்டியது. அப்போதெல்லாம் தங்களின் சிறப்பான பணி மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து பாராட்டுப் பெற்றார்கள் கொழும்பு ஆடுகளத்தின் மைதானப் பணியாளர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை உணர்ந்த சிராஜ், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தனக்குக் கிடைத்த 5000 டாலர் (ஸ்ரீலங்க ரூ.16 லட்சம்) விருதுத் தொகையை சொளையாகத் தூக்கி அப்போதே அவர்களிடம் கொடுத்துவிட்டார். எத்தனையோ பேர் என்னென்னவோ சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு. எத்தனைப் பேரிடம் வெளிப்பட்டிருக்கிறது இத்தகைய மனம்?

சரி, தயாராகுங்கள் ரசிகர்களே… உலகக்கோப்பை 2023 கதவைத் தட்டப்போகிறது விரைவில். அதுவும் இந்தியாவில்.

**

சென்னையில் இந்தியா அதகளம் !

Cricket enthralls in Chennai. Fans all over, have suddenly woken up to Rohit’s and Ashwin’s stupendous shows. பக்கவாத்யங்களின் சரியான வாசிப்பும். மூன்று நாட்களாக போதை ரொம்பத்தான் தலைக்கேறியிருக்கிறது ரசிகர்களுக்கு. It was  Brisbane last month. Now, scintillating Chennai !

சென்னை-2 மைதானத்தில் என்னென்னவோ காட்டிவருகிறது. ஸ்பின்னர்களின் கேட்ச்சுகளை நழுவவிடும் ரிஷப் பந்த், இஷாந்த், சிராஜின் வேகத்தில் லபக்கிய stunning catches.. ரிஷப்தான் இது? சென்னை ரசிகர்களின் துள்ளல், ஆர்ப்பரிப்பு, வீரர்களின் ரத்தத்தில் தாறுமாறாக ஏறிக்கொண்டு ஏதேதோ செய்கிறதுபோலும். Kohli the Kalaakaar.. is also on show. அவ்வப்போது கூட்டத்தை விசில் அடிக்கச் சொல்லி, கத்தச்சொல்லி ஏத்திவிட்டுக்கொண்டு.

Ashwin celebrates
century at Chepauk

அக்‌ஷர் பட்டேல் அபாரம் நேற்று மாலை. இன்னும் எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. நல்ல ஃபீல்டரும்கூட. இரண்டாவது இன்னிங்ஸில் 106-க்கு 6 விக்கெட் இழப்பு என்கிற தடுமாற்றத்தினூடே, 8-ஆவது வீரராக உள்ளே அடி எடுத்துவைத்த அஷ்வினின் அசத்தல் பேட்டிங் – a measured attack on the razor-sharp English bowling.  அவர் 77-ல் இருக்கும்போது கடைசி ஆளாக மைதானத்தில் இறங்கிய முகமது சிராஜ் அவ்வப்போது அஷ்வினின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டு, நிலமைக்கேற்றபடி காண்பித்த தடுப்பாட்டம் பிரமாதம். No.11 Siraj is not known for batting, certainly not for displaying defence! வெறும் tainlender-களை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டு, அபாரமாக வீசிய லீச், மொயின் அலியை சமாளித்து, நம்பமுடியாத சதத்தை விளாசிய அஷ்வின். சதமடித்து சாதித்தவரைவிட, அதிகமாகத் துள்ளிக்குதித்த சிராஜ்.. Another interesting addition to the Indian team! சென்னை கூட்டம் கவனித்தது. ரசித்தது. கொண்டாடியது.

இங்கே, பென் ஃபோக்ஸின் (Ben Foakes) அபார விக்கெட்கீப்பிங் (3 stumpings in a match) திறனை பாராட்டாமல் இருக்கமுடியுமா? தடுமாறும் இங்கிலாந்து ஜாம்பவான்களின் நடுவில், இந்திய சுழலில், சூழலில், மூச்சுத் திணறாமல் சாதுர்யமாக 42 நாட்-அவுட் காண்பித்ததைத்தான் மறக்கமுடியுமா? இங்கிலாந்தின் நம்பர் 2 விக்கெட் கீப்பர் ..from top of the rack.

ரூட்டும்  லாரன்ஸும் இன்று க்ரீஸில் தொடர்வார்கள். அஷ்வினும் பட்டேலும் பாய்வார்கள். குல்தீப் சேர்ந்துகொள்ளக்கூடும். எதிரியின் நிலை? தடுப்பாட்டம் தடுக்கிவிட்டுவிடும். தாக்கினால் கதை கந்தலாகிவிடும்!  Ben Stokes, Ollie Pope, Ben Foakes  என எதிர்த்து ஆட வீரர்கள் இருக்கிறார்கள்தான்.  ஆனால்….

**

சென்னை – 2 ! விழித்துக்கொள்ளுமா இந்தியா ?

நாளை (13/2/21) ஆரம்பிக்கிறது அதே சென்னையில் இரண்டாவது டெஸ்ட். இந்தமுறை கருப்புமண்ணால் நிரப்பப்பட்டிருக்கும் பிட்ச் நம்பர் 5-ல் ஆட்டம். முதல் நாளிலேயே வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும், பந்து திரும்பும்.. என்றெல்லாம் கணிப்புரை தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணியில் உற்சாகம். நேர்மாறான மனநிலையில் கோஹ்லியின் அணி. இந்தியா டாஸ் ஜெயிக்க… சரி, இது வேண்டாம். முதல் இன்னிங்ஸில் ரன் சேர்ப்பதே சிரமமாக இருக்கக்கூடும், பிட்ச் பற்றிய கணிப்பு சரியாக இருந்தால். இந்தியாவின் டாப்-5 – ரோஹித், கில் (Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே இந்தப் பிட்ச்சில் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும்.

இங்கிலாந்து அணியில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேகப்பந்துவீச்சில் அதிரடி மாற்றம். ஜோஃப்ரா ஆர்ச்சருக்குக் காயம். ரிவர்ஸ்-ஸ்விங் காட்டிய ஆண்டர்ட்சனும் ஆடவில்லை. மாற்றாக ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) மற்றும் ஓல்லி ஸ்டோன் (Olly Stone) / க்றிஸ் வோக்ஸ் – இருவரில் ஒருவர் வேகப்பந்துவீசக்கூடும். ஏனோ ஸ்பின்னர் டாம் பெஸ்ஸை (Dom Bess) எடுத்துவிட்டார்கள். பதிலாக இந்தியாவில் சிறப்பாக  பேட்டிங் செய்யும் ஸ்பின்னரான மொயீன் அலி உள்ளே. விக்கெட்கீப்பர் பட்லருக்கு ஓய்வாம். ரிசர்வ் விக்கெட்கீப்பர்  பென் ஃபோக்ஸிற்கு (Ben Foakes) வாய்ப்பு.

Axar Patel
Left-arm orthodox Spinner

இந்திய அணி? குழப்பம் தீர்ந்ததா கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்கு? தெரியவில்லை. ஃபிட்டாகிவிட்ட ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்,( நதீமின் இடத்தில் ) தன் முதல் டெஸ்ட்டை ஆட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. அது அணிக்கு வலிமை சேர்க்கும். பந்தை உள்ளே திருப்பும் இடது கை ஸ்பின்னர். பேட்டிங் திறமையும் உண்டு. இது மிக முக்கியம் இந்திய அணிக்கு இப்போது. ஆரம்பமே நொறுங்கினால் 7, 8-ஆவது ஆளாவது கவனமாக ஆடி, 30-40 சேர்த்து அணியை கௌரவமான நிலைக்குத் தள்ளவேண்டியிருக்கும். குல்தீப் யாதவும் வரலாம் எனவும் சிலர் யூகம். யாரிடத்தில்? வாஷிங்டன் சுந்தரின் இடத்தில்! குல்தீப் உள்ளே வருவது உபயோகமாக இருக்கும். ஆனால் போன டெஸ்ட்டில் அருமையாக பேட்டிங் செய்த சுந்தரை வெளியே போகச்சொல்வது, அபத்தக் கதையின் அடுத்த அத்தியாயமாக அமையும்.

முகமது சிராஜ் நல்ல ஃபார்மில், துடிப்போடு இருக்கும் வீரர். விக்கெட் வீழ்த்தும் ஆவேசத்தோடு, ஸ்விங் திறனும் காண்பித்தவர். அவர் அணிக்குள் நுழைவது அணிக்கு பலம் கொடுக்கும். யார் வெளியே போகவேண்டியிருக்கும்? பும்ராவின் யார்க்கர்கள்  சரியாக விழுகின்றன. விக்கெட்டுகளும் பரவாயில்லை. அதனால்  இஷாந்தின் இடத்தில், சிராஜ் ஆடினால் நாளைய பிட்ச்சில் எடுபடும் எனத் தோன்றுகிறது.

நமக்குத் தோன்றி என்ன செய்ய! ‘Ko-Sha’-வுக்குத் தோன்றவேண்டுமே..

**

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி: சின்னப்பசங்களின் சாகசம்!

டி-20 தொடருக்கான அணியில் ஆளில்லை. ஒரு-நாள் போட்டிகளிலும் இடமில்லை. டெஸ்ட் அணியில் பெயர் இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட்டுக்குத் தேர்வாகவில்லை. தொடரின் விதியையே மாற்றிய இறுதி மேட்ச்சில் என்னடான்னா அவர்தான் ஹீரோ! Madmax என ஒரு சிலரால் வர்ணிக்கப்படும் 23-வயது விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த் (Rishab Pant). தம்பிக்கு தலையில் சூடேறிவிட்டால் மைதானத்தில் ஆட்டமென்ன…ஒரே சாமியாட்டம்தான். கொஞ்சம் ஸ்டைல் மாற்றியிருந்தாலும், அதுதான் நடந்தது அன்று (19-1-21).. ரிஷப் பந்தின்  அதகளம் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் ஒரு வரலாற்று வெற்றியை இந்தியாவிடம் கொண்டுவந்தது – அதுவும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டை எனக் கருதப்படும் ‘The Gabba’ -வில். ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் கடந்த 32 வருடங்களில் ஒருதடவை கூட எந்த நாட்டிடமும் தோற்றதில்லையாமே.. அட.. !

The Captain !

2020-21 ஆஸ்திரேலிய டூர் – கோவிட் காலத்தின் மத்தியில்- இது நிகழ்ந்ததற்கே இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளுக்கும், வீரர்கள், ஏனைய அணி அங்கத்தினர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதங்கள் குறிப்பாக, இந்தியாவுக்கு கடும் சோதனை காலமாக அமைந்தது. நவம்பர் 2020-ல் அமீரகத்தில், ஐபிஎல் -இல் ஆரம்பித்த கோவிட் bio-secure bubble, பயணம், ஹோட்டல் க்வாரண்டைன், தனிமையில் மேட்ச் பயிற்சி, தொடர்ந்து பயமுறுத்திய காயங்கள் என வீரர்களைப் புரட்டி எடுத்தது கெட்ட காலம். பிரச்னை மாறி பிரச்னை. மேட்ச்சுகளில் அடி, concussion, fracture,  தொடைக்காயம், முதுகுப்பிடிப்பு, பயிற்சியின் போதும் கையில் அடி, காலில் அடி.. சே… இப்படியா ஒரு அணியைப் பேய் பிடித்து ஆட்டும்.  ஒரு சகிக்கமுடியாத சூழலில், வீரர்களும், அணியின் support staff-ம் பொதுவாக அலுத்து, சலித்துத் துவண்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த ஏதோ ஒன்று, அவர்களை, ’ பயப்படாதே.. இறங்கு உள்ளே, ஆடு…’  என சொல்லிக்கொண்டே இருந்திருக்கும். காயம்பட்டு டெஸ்ட் சீனியர்கள் ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகிக்கொண்டிருக்கும்  வைபவம் தொடர, சர்வதேச அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும், இந்திய உள்நாட்டுத் தொடர்களில்கூட சரியாக ஆடி அனுபவம் அடையாத, பெஞ்சின் விளிம்பில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருந்த net bowlers / standby players, திடீரென உள்ளே, இந்தியாவுக்காக ஆட அழைக்கப்பட்டார்கள். முக்கியமான கடைசி போட்டியில், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) – யார் இவர்கள் – கடைசி டெஸ்ட் மேட்ச்சுக்கான இந்திய அணியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் விழித்தது.. ஷமி, பும்ரா, அஷ்வின், ஜடேஜா, விஹாரி எல்லாம் எங்கே போய்விட்டார்கள் ?  வலிமையான அணியாக, கூடவே சொந்த நாட்டு பிட்ச்சுகளில் ஆடும் சாதகம் பெற்றிருந்த எதிர் அணி. கடைசி மேட்ச்சில் அவர்களது கோட்டையான ’ப்ரிஸ்பேனில் பாக்கலாம்.. வர்றியா?’ எனக் கொக்கரித்த ஆஸ்திரேலிய அணியை, முக்கிய போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய அணி ஒருமாதிரியாத்தான் இந்தியாவுக்கே காட்சியளித்தது! என்ன செய்வது, வேறு வழியில்லை, முகாந்திரமில்லை. ஏளனமாகப் பார்த்தது எதிரணி. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம். பாவம் இந்தியா.. துரதிர்ஷ்டம். ஆடி, நொறுங்கி வீட்டுக்குத் திரும்பப்போகிறது…

Rishab Pant
Man for the moment..

ஆனால் கத்துக்குட்டிகள் புகுந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியதோ ஒரு நம்பமுடியாத வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் திகிலான ஒரு பக்கம் அந்த நாட்களில் அழுந்த எழுதப்பட்டது, பின் வருபவர்கள் படித்து சிலிர்ப்பதற்காக. ஷர்துல் டாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சிராஜ் முகமது – குறிப்பாக கடைசி நாளில் இளம் ஷுப்மன் கில் (Shubman Gill) காட்டிய திறன், சீனியர் புஜாராவின்  பொறுமை, அதிநிதான அணுகுமுறை,  ரிஷப் பந்த் வெளிக்கொணர்ந்த உத்வேகம், ஜெயிக்காமல் அகல்வதில்லை என்கிற, தீ போல் அகத்தில் எழுந்த முனைப்பு. இவைதான் ஒரு இரண்டாம் பட்ச அணியாக பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா என்கிற உலக நம்பர் 1  அணியை அவர்களின் கொல்லைப்புறத்திலேயே நசுக்கி, துவம்சம் செய்ய வழிவகுத்தது.

அடிபட்டு பாதிப்பேர் விழுந்துவிட்ட இந்தியாவின் படுமோசமான காலகட்டத்தில், அஜின்க்யா ரஹானே அணியை நடத்திச்சென்ற விதம் – அவரது தலைமைப்பண்பு, நிதானம், விவேகம்.. எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு, அதிகம் பேசாமல், அதிரடி மாற்றங்கள், முடிவுகளைக் களத்தில் எடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு அசத்து, அசத்திவிட்டார் மனுஷன்.  கோஹ்லி என்றாலே  கேப்டன், கிங் என்கிற அழுத்தமான பிம்பத்தை, ஒரே வீச்சில் கலைத்துப்போட்டார் ரஹானே. ஆஹா.. இவரல்லவா கேப்டன்.. கிரிக்கெட் ரசிகர்கள் 2021-ஐ மறக்கமாட்டார்கள். 

கோஹ்லியின் தலைமையில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்,  இந்தியா சந்தித்தது அவமானத்தை. இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஆல்-அவுட்.  ஒரு பெரும் தோல்வியை இந்தியாவின் தலையில் சுமத்திவிட்டு நாட்டுக்குத் திரும்பிவிட்டார் அப்பாவாகப்போகும் கோஹ்லி! உலகம் அதிர்ந்திருந்த வேளையில், கோஹ்லியும் இல்லை, ரோஹித் ஏற்கனவே அணியில் இல்லை. இத்தோடு இந்தியாவின் ஆட்டபாட்டமெல்லாம் ஒழிந்தது என நினைத்து சுகித்திருந்தது ஆஸ்திரேலியா. ’நாளை பொழுது யாருக்கு விடியும்? நடந்து பார்த்தால்.. நாடகம் புரியும் !’ -என்கிற கண்ணதாசனின் வரிகளை ஆஸ்திரேலியர்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை! ”4-0 Whitewash” -இந்தியா பரிதாபமாகத் தொடரைத் தோற்கும்” என்று கேலி செய்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்/வர்ணனையாளர்-Michael Vaughan. ’India will be smoked in Tests!’ என்றது உலகக்கோப்பை வென்ற ஒரு ஆஸ்திரேலிய பெருந்தலை – மைக்கேல் கிளார்க். கடைசி நாளில் ஒரு பக்கம் ரிஷப் பார்த்திருக்க, இன்னொரு முனையில் புஜாரா, தலையில், மார்பில், கையில் என அடிபட்டு ஆடிக்கொண்டிருக்கையில்,   ‘Pujara is in his elements. Unsettle him… Rip open his helmet’ என வெறி கொண்டு ட்விட்டரில் தாக்கிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் – ஆஸ்திரேலியாவின் வீர, தீர ஒரிஜினல் முகங்கள்.

கடைசியில் Brisbane-ல் நடந்தது என்ன! குறிப்பாக இந்தியாவின் ’சின்னப்பசங்க’ ஐந்தே நாட்களில், என்னென்ன வித்தைகள் செய்துகாட்டினார்கள் ? ”நெட்-பௌலர்களையும், ஸ்டாண்ட்-பை ப்ளேயர்களையும் வைத்தல்லவா இந்தியா  கடைசியில் ஆடியது? இது இந்தியாவின் முழு டீமே இல்லையே! ஆஸ்திரேலியாவின் வலிமையான அணி, இந்தியா “A” டீமிடம் தோற்றுவிட்டதே! “ – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்ட்டிங்கின் புலம்பல்.. அப்பப்பா.. தாங்கமுடியவில்லை!

இன்னும் நிறைய எழுதலாம் இந்த மாபெரும் ’டெஸ்ட் தொடர் வெற்றி’பற்றி. இங்கே நிறுத்திக்கொள்வோம் இப்போது.

**

டி-20 தொடர் கையில்.. இனி டெஸ்ட் அரங்கம் !

மூன்றாவது டி-20 ஐ 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.  மேத்யூ வேடின் (Mathew Wade)அதிரடி பேட்டிங்கிற்கு கொஞ்சம் மேலேயே போய் பதில் தந்தார் கேப்டன் கோஹ்லி. Class act. ஆனால் போதவில்லை. மிடில்-ஆர்டர் நொறுங்க, பாண்ட்யாவும் 20 ரன்னில் விழுந்ததால், இந்தியா வெல்ல இயலவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஆஸ்திரேலிய பௌலர்கள் (குறிப்பாக ஸ்பின்னர் ஸ்வெப்ஸன்) அபாரமாக வீசி இந்தியர்களைத் தடுமாறவைத்தார்கள். அவர்கள் இந்தியாவைவிட ஒரு படி மேலேயே இருந்தார்கள். ஜெயித்ததே நியாயம்!

2-1 என்று தொடர் இந்தியாவின் கையில் வந்தது. தொடர் நாயகன் ஹர்திக் பாண்ட்யா நடராஜனின் கையில் தன் விருதைக் கொடுத்து ’நீ தாம்ப்பா இந்த விருதுக்கேற்ற ஆளு!’ என்று உணர்ச்சி வசப்படுகிறார். தொடர் கோப்பையை கேப்டன் கோஹ்லியும் அவரிடம் கொடுத்து நிற்க, வீரர்கள் வெற்றிமுகம் காட்டிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நடராஜனுக்குத் தலை சுற்றியிருக்கும்!  Natarajan is the find of the series, no doubt என்கிறார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். இப்படியே இவர் தொடர்ந்தால், அடுத்த ஆண்டின் டி-20 உலகக்கோப்பைக்கான அணியின் வியூகங்களில் இவர் இடம்பெறலாம் என்கிறார் கோஹ்லி. ஆஸ்திரேலிய மைதானத்தில் ஷமி, பும்ராபோன்ற அனுபவ வீரர்களே தத்தளிக்கையில், எதிரி யார் எனத் தலையைப் பிய்த்துக்கொள்ளாமல், துல்லியம், variations, கடின உழைப்பு என மட்டும் மனதைக் குவியவைத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார் நடராஜன். சாய்த்தபின்பு? கூச்சலோ, கொண்டாட்டமோ ஏதுமில்லை. பந்தை எடுத்துக்கொண்டு அடுத்து வீசப்போவதைப்பற்றி சிந்தித்தவாறே செல்லும் நடராஜன். இதில் கபில்தேவின் சாயல். இந்தியர்கள் புகழ்வது இருக்கட்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் பெரிசுகளும், இந்தக்காலத்தில் காணக்கிடைக்காத அந்த எளிமையை, பண்பை கவனிக்கத் தவறவில்லை.

Mohammed Siraj

டெஸ்ட் மைதானத்திற்கு கதை மாறுகிறது டிசம்பர் 17-லிருந்து. முதல் டெஸ்ட் அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் இரவு-பகல் ஆட்டம். இந்திய பேட்டிங் கோஹ்லி, புஜாரா, ரஹானே, ராஹுல் என மையம் கொள்ளும். துவக்கத்தில் ப்ரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் – இருவரில் ஒருவர் நுழைய வாய்ப்பு. அனேகமாக வ்ருத்திமான் சாஹா விக்கெட்கீப்பராக பங்களிப்புசெய்வார். இந்தியாவின் பௌலிங் ஆஸ்திரேலியாவின் வலிமையான பேட்டிங்கிற்குப் பெரிதாக சவால் விடுக்கும் எனத் தோன்றவில்லை. வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவோடு, உமேஷ் யாதவ் மற்றும் அனுபவம் இல்லாத, ஆனால் சாதிக்க ஆசைப்படும் முகமது சிராஜ் (ஐபிஎல் பெங்களூர் அணி) இருக்க வாய்ப்பு. ஒருவேளை சிராஜ் சேர்க்கப்படவில்லை எனில், நவ்தீப் செய்னி வரலாம். ஒரே ஒரு ஸ்பின்னர்தான் இந்திய அணியில் இருப்பார். அந்த நிலையில் அனுபவ வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு. சிட்னி டெஸ்ட்டில் இரண்டு ஸ்பின்னர்கள் ஆடலாம். அப்போது அஷ்வினோடு ஜடேஜா சேர்ந்துகொள்வார். ஜடேஜாவின் வலிமையான பேட்டிங் அணிக்கு உகந்தது. காயத்திலிருப்பதால், முதல் டெஸ்ட்டிற்குள் அவர் நுழைவதற்கான வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.

முதல் டெஸ்ட்டிற்குப் பின் கோஹ்லி விடுவிக்கப்படுவதால், அவரிடத்தில் ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறலாம். கோஹ்லியில்லாத இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானேதான் கேப்டன். இந்தத் டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கு வேறொரு கதையைச் சொல்லக்கூடும்.

**

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணம் – இந்திய அணிகள்

முன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி, வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங் ஆகியோரைக்கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய தேர்வுக்குழு  தன் முதல் பணியைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் மூன்று இந்திய அணிகள், ஆரம்பக் குழப்பங்களுக்குப் பிறகு ’திருத்தி’ அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல்  முடிந்தபின் (ஃபைனல் 10-11-20), நவம்பர் 2020 இறுதியிலிருந்து ஜனவரி 2021 வரை 3 ஒரு-நாள், 3 டி-20, 4 டெஸ்ட் போட்டிகள் எனத் தொடர்களை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆடவிருக்கின்றன. அழுத்தம் நிறைந்த இந்த கோவிட் காலத்தில்,  மூன்றுவகைக் கிரிக்கெட் போட்டிகளை, அயல்நாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடுமாறு செய்யும் இத்தகைய நீண்ட தொடர் உசிதம்தானா என்கிற கேள்வியும் தலைகாட்டத்தான் செய்கிறது.

நடராஜனைப் பாராட்டும் கேப்டன் டேவிட் வார்னர்

அணிகள் சில புதுமுகங்களைத் தவிர்த்து,  எதிர்பார்க்கப்பட்ட வகையில் இருக்கின்றன. டி-20, ஒரு-நாள் அணிகளில் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்திற்கு இடமில்லை என்பது ஒரு அதிர்ச்சி.  இந்திய டி-20 அணியில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு/கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி,  தோள்பட்டைக் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். (காயம்பற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணி, இந்திய போர்டுக்கு சரிவரத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது). Someone’s loss is someone else’s gain என்கிற கூற்றுக்கேற்ப, அவருடைய இடத்தில் தமிழ்நாடு/சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T. நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளுக்கான, மூன்று ‘ரிஸர்வ் வேகப்பந்துவீச்சாளர்கள்’ லிஸ்ட்டில் இருந்தார்). ’Natarajan is the find of IPL 2020’ என்றதோடு அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர். 

தேர்வில், ஒரு முக்கியமான மாற்றமும் நிகழந்தது. சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அணிகளில் காணாமற்போயிருந்த, இந்தியாவின் ப்ரிமியர் பேட்ஸ்மனான ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்திற்காக ஓய்வு இன்னும் தேவைப்படுவதால் டி-20, ஒரு-நாள் போட்டிகளில் ஆடமாட்டார். இன்னுமொரு அறிவிப்பு: முதல் டெஸ்ட்டிற்குப்பின் டிசம்பர் இறுதியில், கோஹ்லி விடுப்பில் இந்தியா திரும்புகிறார் (அனுஷ்காவுக்குக் குழந்தை பிறக்கும்போது அருகிலிருக்கவேண்டுமே!) எனினும், தொடர்ந்து ஆடிவரும் கோஹ்லிக்கு விடுப்பு  தேவைதான். இதனால் டெஸ்ட்-2, 3, 4-களில் ரோஹித் கேப்டனாக ஆடக்கூடும்.

கேரளா/ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன் முன்னராக டி-20 அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். இப்போது ஒரு-நாள் அணியிலும் அவர் இணைக்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும். அவர் ஒரு அதிரடி என்பதோடு அருமையான கீப்பரும். டெஸ்ட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா காயத்தில் இருப்பதாகத் தெரிகிறது.காயம் சீரியஸ் இல்லை எனில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் நீடிப்பார்.

ஸௌரவ் கங்குலியின் குறிப்பிடத்தக்க, விமர்சகர்களால் ஸ்லாகிக்கப்பட்ட  இந்திய கேப்டன்சி காலத்தில், ராஹுல் திராவிட் துணைக்கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் வெகுகாலம் சேவை செய்தது நினைவிருக்கலாம்! அந்த ’ரோல்’ கிட்டத்தட்ட இன்னொரு கர்னாடகா பேட்ஸ்மனான கே.எல்.ராஹுலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. டி-20, ஒரு-நாள் போட்டிகளில் இவரே முதல்-சாய்ஸ் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு. சாம்ஸன் கீப்பர் எனினும், அவருடைய பேட்டிங்கிற்காகவே அணியில் இருக்கவேண்டியவர்.  அவருடைய ஆடும் ஸ்டைல், பந்து எழுந்து எகிறும் ஆஸ்திரேலியப் பிட்ச்சுகளுக்கு ஒத்துப்போகும். இதெல்லாம் கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெளிவாகவேண்டுமே! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாஹா ஆட முடியாத பட்சத்தில், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இயங்குவார். இவரது கீப்பிங் தரம் ‘டாப்-க்ளாஸ்’ அல்ல – சாம்ஸன், சாஹா ஆகியோரோடு ஒப்பிடப்படுகையில். கோச் சாஸ்திரியின் பயிற்சியில், புத்திமதியில், இயற்கையாக ரிஷப்பிடம் இருந்த அதிரடி ஆட்டமும் மலையேறிவிட்டதுபோல் தோன்றுகிறது.

காயத்தினால் கடந்த வருடம் ஆடாதிருந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா, ஒரு-நாள் மற்றும் டி-20 அணிக்குத் திரும்பியிருக்கிறார். Welcome change. இவரோடு, மனீஷ் பாண்டே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி-20, ஒரு-நாள் அணி இரண்டிலும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் பேட்டிங்கிற்கு கோஹ்லியோடு, இவர்களின் திறனே ஆதாரம். அதைப்போலவே பௌலிங்கில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் செய்னி,  ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும். ஆல்ரவுண்டர் சுந்தரின் ‘off-spin’,  ‘பேட்டிங் பவர்ப்ளே’ யில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மன்களை அடக்க உபயோகமாக இருக்கும்.  சுந்தரின் பேட்டிங் ‘left-handed’, பௌலிங்  ’right-handed’ – சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்
முகமது சிராஜ்

டெஸ்ட் போட்டிகளில்,  இந்தியாவின் பேட்டிங் செயல்பாடுகள்,  கோஹ்லியைத் தாண்டி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரைத்தான் நம்பியிருக்கும். இளம் பேட்ஸ்மன் ஷுப்மன் கில் (Shubman Gill), ரிஷப் பந்த் ஆகியோருக்கும் ஆட வாய்ப்பு கிட்டலாம்.  பௌலிங்கில் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா (Bumrah), ஷமி, உமேஷ் யாதவ், செய்னி ஆகியோரோடு,  ஹைதராபாத்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜும் (Mohammad Siraj) டெஸ்ட் அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.  வலிமையான ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களுக்கு இவர்களது பௌலிங் நெருக்கடி தருமா? பெரும் கேள்வி.

டெஸ்ட் அணியில் இருக்கும் அஷ்வினைத் தவிர, இந்தியாவுக்காக ஆட இரண்டு தமிழர்கள் – வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடிய இருவரும் டி-20 பங்களிப்புக்காக மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஜெர்ஸியில் முதன்முறையாக ஆடப்போகும் சேலத்தின் நடராஜனுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! ஆஸ்திரேலியாவில் இவர்களின் கதை எப்படிச் செல்லுமோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

**

ஐபிஎல் : பத்து பரவச வருடங்கள்

2008-ல் இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் லலித் மோதியின் தலைமையில் துவங்கப்பட்ட சர்வதேச டி-20 க்ரிக்கெட் மேலாவான (Mela) ‘இந்தியன் ப்ரிமியர் லீக்’ எனப்படும் ஐபிஎல் (IPL), அபாரப் புகழடைந்து முன்னேறி இந்த வருடம் 10-ஆவது சீஸனில் காலடி எடுத்துவைக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேஹ்வாக், எம்.எஸ்.தோனி, சௌரவ் கங்குலி, ராஹுல் த்ராவிட், அனில் கும்ப்ளே, ரிக்கி பாண்ட்டிங், ஷோயப் அக்தர், ஜெயசூரியா, முரளீதரன், சங்கக்காரா, மெக்கல்லம், க்றிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ் (AB de Villiers) என உலகப்புகழ்பெற்ற க்ரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடிய முதல் சீஸன்! அதன் பிறகு எத்தனையோ வீரர்கள் வந்தார்கள், சென்றார்கள். இந்தியாவுக்குள்ளும், வெளியேயும் எண்ணற்ற க்ரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு மாதம் க்ரிக்கெட் சாகஸம் எனும் மிதமிஞ்சிய போதை உலகம் இந்த ஐபிஎல். இதற்குப்போட்டியாகவோ, பொறாமைகொண்டோ, எங்கெங்கோ என்னென்னமோ பேரில் டி-20 தொடர்களை ஆரம்பித்துப் பார்த்தார்கள். ஆனால் புகழில் எதுவும் ஐபிஎல் முன் நிற்கமுடியுமா என்ன !

முதல் சீஸனில் ஆடியவர்களில் பெரும்பாலானோர் இப்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள். சிலர் பயிற்சியாளர்களாகவும், சிலர் வர்ணனையாளர்களாகவும் மாறி ஐபிஎல் உலகை விடாது சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். முதல் சீஸனில் ஆடியவர்களில் க்றிஸ் கேல், தோனி மற்றும் டி வில்லியர்ஸ் மட்டுமே இன்னும் மைதானத்தில் எஞ்சியிருக்கும் ஸ்டார் வீரர்கள். கேப்டனாக அல்லாமல் சாதாரண ஆட்டக்காரராக புனே அணிக்காக இந்தமுறை ஆடவிருக்கிறார் இந்திய ஒரு-நாள் மற்றும் டி-20 கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இன்று (05-04-2017) ஹைதராபாதில் தொடங்கவிருக்கும் 10-ஆவது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டியில், கடந்த வருட சேம்ப்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுடன் (RCB) மோதுகிறது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு வாரங்களுக்கு ஆடமாட்டார் எனத் தெரிகிறது. முதல் மேட்ச்சில் அந்த அணிக்கு, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்ஸன் கேப்டனாக ஆடுகிறார்.

இந்த ஐபிஎல் சீஸன் ஆரம்பிக்குமுன்னேயே காயப் பட்டியல் என்னவோ நீண்டுகிடக்கிறது! பெங்களூர் அணியில் கோஹ்லியோடு, அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸும் முதல் மேட்ச்சில் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. காயம் காரணமாக கே.எல்.ராஹுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரும் ஆடப்போவதில்லை. டெல்லி அணியில் தென்னாப்பிரிக்க வீரர்களான ஜே.பி. டூமினி (JP Duminy), க்விண்டன் டி காக் (Quinton de Cock) விலகிவிட்டார்கள். பஞ்சாப் அணியின் முரளி விஜய்யும், புனே அணியின் ரவி அஷ்வினும் காயம் காரணமாக இந்த வருடம் ஆடப்போவதில்லை. ஸ்மித்தை புதிய கேப்டனாகக் கொண்டு ஆடவிருக்கும் புனே, ஸ்டார் ஸ்பின்னர் அஷ்வின் இல்லாமல் தடுமாற வாய்ப்பதிகம். இப்படி வீரர்களின் காயங்கள் அணிகளின் சமநிலையை சீர்குலைத்துவைத்திருக்கின்றன. இதுவும் ஒருவகைக்கு நல்லதே எனத் தோன்றுகிறது. ஆடவாய்ப்பில்லாமல் இதுகாறும் பெஞ்சில் உட்கார்ந்து வேடிக்கைபார்த்த ரிசர்வ் வீரர்கள், மட்டையோடு மைதானத்தில் இறங்க வாய்ப்பு வந்திருக்கிறது.

2017 ஐபிஎல் ஏலத்தின்போது இரண்டு புதிய வீரர்கள் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் புருவங்களை உயர்த்தவைத்தார்கள். அவர்களில் ஒருவர் ஏழைக்குடும்பத்து இளைஞர், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ’தமிழ்நாடு ப்ரிமியர் லீக்’-இல், திண்டுக்கல் அணிக்காக ஆடி அதிரவைத்தவர். பஞ்சாப் அணியின் மெண்ட்டரான (Mentor) வீரேந்தர் சேஹ்வாகின் கவனத்தைக் கவர்ந்தார். விளைவு ? இந்தியவீரருக்கான இவ்வருட அதிகபட்சத் தொகையான ரூ.3 கோடியில் பஞ்சாப் அணி நடராஜனை வாங்கியுள்ளது. ‘’க்ரிக்கெட் இல்லையென்றால் என் அப்பாவைப்போல நானும் கூலிவேலைக்குப் போயிருப்பேன்’’ என்று நேர்காணலில் அடக்கமாகச் சொல்லிக் கண்கலங்கவைத்தார் நடராஜன். ஐபிஎல் எனும் ராட்சதக் களத்தில் எப்படி ஆடப்போகிறார் இவர் எனப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகிறார்கள். இதேபோன்ற இன்னுமொரு கதை ஹைதராபாதின் முகமது சிராஜ். வயதான ஆட்டோ ட்ரைவரின் மகன். இவரும் வேகப்பந்துவீச்சாளர்தான். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இவரது திறமையில் நம்பிக்கை கொண்டு வாங்கியிருக்கிறது. இந்த இருவரையும் போலவே, இன்னும் மெருகூட்டப்படவேண்டிய வைரங்களை ஐபிஎல் இந்த வருடமும் கண்டெடுக்கக்கூடும். இந்திய நட்சத்திரங்களான அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோரை ஐபிஎல்-தானே கண்டுபிடித்து வெளி உலகுக்குக் காட்டியது?

**