வடக்கே போகும் ரயில் – 2

(தொடர்ச்சி:)

…… ஆபத்தான வேலையாக சில சமயங்களில் ஆகியுள்ளது என்றார். சமூக விரோதிகள், அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர்கள் எனப் பலரிடமிருந்தும் எதிர்ப்புகள், மிரட்டல்கள் வரும். எல்லாத் தடைகளையும், சத்திய சோதனைகளையும் தாண்டித்தான் அரசு அதிகாரி இயங்கவேண்டியிருக்கிறது என்றார். கையில் கறைபடாமாலும், முதுகில் அடிவிழாமலும் கடமையைச் செய்வது அவ்வளவு எளிதல்ல இந்த நாட்டில்.

நக்ஸலைட்டுகளின் ஏரியாவில் தான் சிலகாலம் பணிசெய்ய நேர்ந்ததைப்பற்றிக் கொஞ்சம் சொன்னார். அரிவாளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அடிதடி என்று அலையும் இவர்களை எப்படி சமாளிக்கமுடிந்தது என்றேன். முயன்றதில், ஓரளவு முடிந்தது என்றார். அவர்கள் அடிப்படையில் ஏழைகள் அல்லவா? அவர்களின் அடிப்படைத் தேவைகளே சரியாக பூர்த்திசெய்யப்படுவதில்லை. காட்டுப்பகுதிகளில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போதெல்லாம் அவர்களை, அருகிலுள்ள கிராமத்துப் பெரியவர்களுடன் அழைத்துப் பேசுவேன். அவர்களது குடும்பம், அவர்களின் உடனடித் தேவை என்ன என விஜாரிப்பேன். முதலில் முறைப்பார்கள். முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். பிறகு தயக்கத்துடன் சொல்வார்கள். அவர்களது கோபம், அலட்சியம் குறையும். கொஞ்சம் அவகாசம் வாங்கிக்கொள்வேன். வனத்துறை மேலதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லி, நலத்திட்டங்களைப் (Forest welfare schemes) பயன்படுத்தி, சமையல் அடுப்புகள், பிளாஸ்டிக் வாளிகள், சொம்புகள், குடங்கள், விரிப்புப்பாய்கள், மடிப்புக்கட்டில்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை வாங்கி அவர்களது குடும்பங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முதலில் வெறுப்புக் காட்டியவர்கள், பின் குணமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசி, ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி மரங்களை வெட்டுவது, கடத்த உதவுவது, காட்டுப்பகுதிகளை எரிப்பது போன்றவை சட்டத்துக்குப் புறம்பானது என்று ஓரளவு புரியவைத்தேன்; நடந்துவந்த குற்றங்களைக் குறைக்க முயன்றேன் என்றார். Officer! You are a Gentleman !

இந்திய அரசினால், வனத்துறைக்குழுவுடன் அமெரிக்காவுக்கு 1986-ல் தான் ஒருமுறை அனுப்பப்பட்டதாகக் கூறினார். அமெரிக்காவின் இயற்கைப்பாதுகாப்பு அமைப்புகள், வனங்கள், தேசிய பூங்காக்கள் போன்றவற்றைப் பார்வையிட இந்தக்குழு சென்றது. அப்போது ஒரு மாநிலத்தில் தேசியப்பூங்கா ஒன்றைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தது இந்தியக்குழு. இந்திய அதிகாரிகள் ஒரு பெரிய பட்டுப்போன மரம் ஒன்று பசுமையான பூங்காவின் நடுவில் காட்சியளித்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டனர். கூட இருந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி ஒருவரிடம் `இந்தப் பட்டுப்போன (உயிரற்ற) மரத்தை ஏன் அப்படியே விட்டுவைத்திருக்கிறீர்கள்? உயிரிழந்த மரத்தை அகற்றி, அந்த இடத்தில் வேறொரு மரத்தை நட்டு வளர்ப்பதுதானே முறை? உங்கள் நாட்டில் அப்படிச்செய்வதில்லையா` என்று கேட்டாராம் நம்ப ஆளு. அதற்கு அந்த அமெரிக்க அதிகாரி சொன்ன பதில் தன்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும், இயற்கை வளப்பாதுகாப்பில் தன்னை மேலும் உந்தியதாகவும் கூறினார். அந்த இளம் அமெரிக்கர் சொன்ன பதில்: `நாங்களும் இந்த உயிரற்ற மரத்தை அகற்றிவிடத்தான் முதலில் முடிவு செய்தோம். இருந்தும் வெட்டுமுன், இரவு பகலாக இந்த மரத்தில், சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தோம். வயதான பெரிய அந்த மரத்தின் பெருங்கிளைகளில் சிறிசும், பெரிசுமாய்ப் பொந்துகள் இருந்தன. அதில் உயிரோட்டம் தெரிந்தது. அதாவது, உச்சியில் ஒரு பொந்தில், ஒரு காட்டு ஆந்தை குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. மேலிருந்த சிறிய பொந்துகளில் அணில்கள் வாசம் புரிந்தன. பகலெல்லாம் ஓடியாடி விளையாடின. மரத்தின் பெரிய அடிப்பகுதியிலும் ஆழமான பொந்துகள் மறைவாகக் காணப்பட்டன. அதில் சுண்டெலிகள் குடும்பத்தோடு வாழ்வது தெரிந்தது. இதுவன்றி, எண்ணற்ற எறும்புகள், பூச்சிகள் மரத்தின் சிறுபொந்துகளிலும் மரப்பட்டைகளுக்கு அடியிலும் ஊர்ந்துகொண்டிருந்தன. உயிரற்ற நிலையிலும் இந்தப் பெரிய மரம் பலவிதமான உயிர்களுக்கு வாழ்வாதாரமாக, வாசஸ்தலமாக இருந்துவருவதை அறிந்தோம். இதனை வெட்டி அழிப்பது, அகற்றுவது இயற்கையின் விதிமுறைகளுக்கு, இயற்கைச் சமநிலைக்கு (natural balance) விரோதமான செயல் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தப்பட்ட மரம் அப்படியே நின்று மற்ற உயிர்களைப் பாதுகாக்கட்டும் என விட்டுவிட்டோம். பட்டமரமும் பார்க்க அழகாய்த்தானே இருக்கிறது!` என்றார் அந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி. அமெரிக்கர்கள் தங்கள் இயற்கை வளங்களை எப்படிப் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள் பார்த்தீர்களா?

மதிய உணவுக்கு முன்வரும் வெஜ் சூப் வந்தது. ராஜதானி எக்ஸ்பிரஸில் அன்று என்னவோ அந்த சூப் பிரமாதமாக இருந்தது ! பேச்சுவாக்கில், நாக்பூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் organic farming முறையைத் தீவிரமாய்ப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் ஷர்மாஜி என்கிற விவசாயியைப்பற்றிச் சொன்னார். அவர் தன் வயல்களில் செயற்கை உரம் உபயோகிப்பதில்லை. ரசாயன மருந்து/உரம் போன்றவை அவரது வயல்பக்கம் அண்டமுடியாது. பாரம்பரிய, இயற்கை முறை விவசாயம் மட்டுமே கடைப்பிடிக்கிறார். ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் இப்போது அரண்டுபோய் நிற்கின்றனர். ஏன்? அவரது விவசாயம் லாபத்துக்கு மேல் லாபம் ஈட்டியதால். மேலும் அதிக பகுதிகளுக்கு விவசாயத்தை விஸ்தரித்துள்ளார். மொத்தம் 26 ஆட்கள், ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து அவருக்கு இந்த வயல்களில் சேவகம் செய்கின்றனர். கடுமையான உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். வருட லாபம் 11-12 லட்ச ரூபாய் வருகிறது. 3 லட்ச ரூபாயை மட்டும் தன் குடும்பம், பிள்ளைகளின் படிப்பு என்று செலவுக்கு எடுத்துக்கொள்கிறார் ஷர்மாஜி. மிச்சமிருக்கும் 8-9 லட்ச ரூபாயை தன் 26 தொழிலாளர் குடும்பங்களுக்குச் செலவு செய்கிறார். அவர்களின் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கிறார். `பாரத் தர்ஷன்` (இந்தியதேசத்தைப் பார்த்தல்) என்று வருஷத்திற்கு ஒருமுறை தன் தொழிலாளர்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இந்திய நாடு எப்பேர்ப்பட்ட பாரம்பர்யம் கொண்டது என்பதை அவர்களுக்குப் புரியுமாறு செய்கிறார். பத்து மாதம் அயராது உழைத்தவர்களுக்கு ஒருமாதம் ஆனந்தப் பயணம். இளைப்பாறல். எப்படி இருக்கு நம்ம ஷர்மாஜியின் சேவை? நாட்டையே சுருட்டிக் கூறுபோட்டுத் தன் பரம்பரைக்குச் சொத்து சேர்க்கும், போலி சமத்துவம் பேசி ஜனங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், இந்த விவசாயியின் கால்தூசிக்குச் சமமாவார்களா?

சில சமயங்களில், நெடுஞ்சாலை போடுவது, பாலங்கள் கட்டுவது போன்ற …(தொடரும்)

வடக்கே போகும் ரயில் -1

டெல்லி-பெங்களூர் என்று அவ்வப்போது ஷட்டில். சமீபத்தில் ராஜதானியில் பெங்களூருவிலிருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தேன். கூடப்பயணிப்பவர்கள் அச்சுபிச்சு கோஷ்டியாக இருந்தால் கொண்டுவந்திருக்கும் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டியதுதான். இரவில் வண்டியில் ஏறியதால் தின்றுவிட்டுத் தூங்குவதில் எல்லோருக்கும் கவனம். அடுத்த நாள் காலையில் பேச்சுக்கொடுத்ததில் தெரிந்தது – இந்தியன் ஆர்மியில் வேலையாயிருப்பவர் தன் குடும்பத்தினருடன் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார். எதிரே அமர்ந்திருந்த முதியவர்-அறுபதைத் தாண்டியவர். கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒல்லியான, well-dressed உருவம்– கையில் ‘Wordpower Made Easy ‘ என்று தலைப்புக் காட்டும் புஸ்தகம்! இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா? இல்லை, வெறும் அலட்டல் கேசா?

அறிமுகப்பேச்சின் ஊடே தான் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பலவருடம் மத்தியபிரதேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகச் சொன்னார். என்னைப்பற்றி கொஞ்சம் சொன்னேன். இன்னுமொரு இந்திய அரசு அதிகாரிதான் நம் எதிரில் என்ற நம்பிக்கை பெற்று தன் வனத்துறை அனுபவங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வனப்பராமரிப்பு, மரம் செடி, கொடி வளர்த்தல் இதெல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம் – `Global Warming`, ‘Depleting Ozone Layer’ என்றெல்லாம் கதைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் வாழும் இவ்வுலகில்.

நாக்பூரைச் சேர்ந்தவர். அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்குத்தான் 30+ ஆண்டுகளாக ஆற்றிய பங்கைப்பற்றி ஒரு சுருக்கம் சொன்னார். அந்த சமயம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆந்திரப்பிரதேசத்தின் குறுக்கே சீறி, மத்தியப்பிரதேசத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மே மாதம். இந்தியக் கோடையின் உச்சம். பகல் நேரப் பிரகாசத்தில், தகதகப்பில், ஜன்னலுக்கு வெளியே ஓடும் வனக் காட்சிகள். திட்டுத்திட்டான, விதவிதமான பேர் தெரியா மரங்கள், புதர்களுக்கிடையே மஞ்சளும், ஆரஞ்சுமாய் குலுங்கும் பூக்கள். பொட்டல்வெளி வருகையில் தொலைவில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரம் காட்டும் பனைமரங்கள். இடையிடையே நீர்த்திட்டுகளில், பாறைமுகட்டில் தன் இரைக்காகத் தவம் செய்யும் வெள்ளை நிற நாரைகள். ரயில் பயணத்தில், தெற்கிலிருந்து வட இந்தியா செல்லும் நீண்ட ரயில் பயணங்களில் ஜன்னலின் வழியாக ஓடும் இந்திய மகாதேசத்தின் காடுகளை, கண்குளிரவைக்கும் மரம் செடிகொடிகளை, பள்ளத்தாக்குகளைக் கண்டுகளிப்பது என் நீண்டநாளைய வழக்கம். இந்தமாதிரிப் பைத்தியம் நான் ஒருவன் தான் இந்த நாட்டில் என நினைத்திருந்தேன். எதிரே இப்போது அவர். வேகமாக ஓடி மறையும் மரங்கள், செடி கொடிகளில் லயித்திருந்தார். மனதைக் காட்டில் அலைய விட்டிருக்கிறார் என்பது அவரது கண்களில் தெரிந்தது. சரி, நம்மைப்போல் ஒருவனும் இவ்வுலகில் இருக்கிறான் என்றது மனம்.

ரயில் வேகமிழந்து மெல்ல ஊர்ந்தது. தண்டவாளத்துக்கு அருகே புதுப்புது வேப்பங்கன்றுகள் ஆளுயரத்தில் காற்றில் ஆடியவாறு நின்றிருந்தன. `வேப்பமரக்காடுகள் உண்டானால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது; இவைகளை யாரும் வெட்டிவிடாதிருக்க வேண்டுமே` என்றேன். `பறவை எச்சங்களால் இவைத் தன்னிஷ்டத்திற்கு ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. வெட்டமாட்டார்கள் . இவை பிழைத்துக்கொள்ளும். வெட்டுவதாயிருந்தால், சிறுபுதரோடு சேர்ந்து அப்போதே வெட்டியிருப்பார்கள்` என்றார். பனைமரங்களைப் பார்த்து ரசிப்பது தனக்குப் பிடிக்கும் என்றார். நான் க்யூபா நாட்டில் பார்த்த பலவகைப் பனைமரங்கள் பற்றி சொன்னேன் – `நெடும்பனை தவிர, கூதல் பனை, குட்டிப்பனை, விசிறிப்பனை என்று கிட்டத்தட்ட 86 வகைப் பனைமரங்கள் அங்கே உண்டு` என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். பனையைப்பற்றித் தொடர்ந்து பேசினார். பனை ஓலை, பனம்பழம், பனங்கள்ளு என்று விரிவான ஞானம்! நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழலில் வளர்ந்தவன். கிராமத்துப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட்! வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே? தண்ணீர் அதிகம் தேவைப்படாத பனையோடு, மூங்கில் காடுகள் வளர்ப்பு, பராமரிப்புப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

நாக்பூருக்கு அருகே ஒருமணிநேர பஸ் தூரத்தில் ஒரு கிராமத்தில் விசாலமான இடமாக வாங்கிப்போட்டிருக்கிறார். இப்போது சொந்த வீடு கட்டி வசிக்கிறார். முன்பகுதியில் வீடு கட்டி, பின்பக்கத்தில் மிச்சமிருக்கும் 5000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் தன் இஷ்டத்துக்குக் காடு வளர்த்திருக்கிறார் இந்த மனுஷன். காம்பவுண்ட் சுவர் இருக்கும் இடத்தில் ஒருபக்கம் பனைமரங்கள், இன்னொரு பக்கம் மூங்கில்மரங்கள் நட்டு வளர்க்கிறேன். உட்பகுதியில், மற்ற மரம்,செடி, கொடிகளை நட்டு 10 வருடமாகப் பராமரித்துவருகிறேன் என்றார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமானது. பனைமரம் போலே, மூங்கில் மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மூங்கிலில் நீளநீளமாய் முட்கள் இருக்கும். அந்த வகை மூங்கில் மரங்களை தன் காம்பவுண்டின் பின்வரிசையில் நட்டு வளர்க்கிறாராம். `பகல் நேரத்தில் விதவிதமான பறவைகள் வரும். ஏதேதோ பழங்கள் – அவருடைய குட்டி வனத்தில் சாப்பிட்டு விளையாடும். இரவு வந்ததும், அந்தக்கடைசி வரிசை முள் மூங்கில் மரங்களில்தான் கூடுகளில் போய்த் தூங்குமாம். காரணமும் சொல்கிறார்: அவருடைய அந்த குட்டிக்காட்டில், பாம்புகள், கீரிகள் போன்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது தென்படும். அவர் அவற்றைக் கொல்வதில்லை; அகற்றுவதில்லை. அவை வசிப்பதற்கும் இடம் வேண்டுமல்லவா? அதே சமயத்தில் கூடு கட்டி முட்டையிடும் பறவைகளுக்கு இந்த ஜீவன்கள் எதிரிகள். பாம்புகள், கீரிகள் மரங்களில் ஏறி கூடுகளிலுள்ள பறவை முட்டை சாப்பிடும் உயிர்கள். இந்த முள் மூங்கில் மரங்களை நாடி அவை வராதாம். `அதனால் தன் கூட்டுக்கும் குஞ்சுக்கும் பாதுகாப்பான இடமாக இந்த முள் மூங்கில் மரங்களை நம்பி கூடு கட்டி வாழ்கின்றன இந்தப் பறவைகள்` என்றார் அவர். எவ்வளவு கனிவு, அக்கறை இருக்கிறது இவரிடம். எவ்வளவு சிறு, சிறு விஷயங்களைக்கூட இவர் கவனித்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமளித்தது.

இடையிடையே ஜன்னல் வழிக் காட்சியில், காட்டுப்பகுதியில் சில இடங்களில் மரங்களை வெட்டியிருப்பது, எரித்திருப்பது தெரிந்தது. மரங்கள் தாறுமாறாய் வெட்டப்பட்டுக் கிடப்பதும், பூமி கருத்துப்போய் சில இடங்களில் இருப்பதும் கண்களில் பட்டு வேதனையை உண்டுபண்ணியது. அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். விலை அதிகமான தேக்கு போன்ற உயர் ரக மரங்களை சட்டத்துக்கு மீறி வெட்டுபவர்களைப் பிடிப்பது, தண்டனைக்கு உட்படுத்துவது மிகவும் ….(தொடரும்)

முத்திரை பதித்த மும்பை இண்டியன்ஸ் – ஐபிஎல் 2015

ஞாயிற்றுக்கிழமை (24-05-2015). கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம். இந்தியாவின் கோடைகாலத் திருவிழாவான ஐபிஎல்-ன் இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்கக் கழுத்தை நெறிக்கும் கூட்டம். எங்குபார்த்தாலும் நீலமும் (மும்பை அணி), மஞ்சளும் (சென்னை அணி) பளபளத்தன. ஸ்டேடியத்தில் ரசிகர்களோடு சேர்ந்து கூத்தடிக்க, அனில் கபூர் போன்ற பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், அம்பானிகள் போன்ற விஐபிக்கள் வேறு.

எதிர்பார்ப்பு எகிறும் சூழலில் மும்பை அணி முதலில் பேட் செய்ய இறங்கியது. முதல் ஓவரிலேயே பொறி பறந்தது. ஆஷிஷ் நேஹ்ராவின் 5 ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பார்த்தீவ் பட்டேல், டூ ப்ளஸ்ஸீயின் சூப்பர் ஃபீல்டிங்கில் அவுட்டானார். அடுத்து வந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. கல்கட்டா அவருக்குப் பிடித்த மைதானம். கேட்கவேண்டுமா? இரண்டாவது ஓவரிலேயே முதல் ஷாட்டை சிக்ஸராக அடித்துத் தொடர்ந்து அதிரடி பௌண்டரிகள். மைதானம் அதிர்ந்தது. 4-ஆவது ஓவரிலேயே ஸ்பின்னர் அஷ்வினை இறக்கினார் தோனி. சிம்மன்ஸ்(Lendl Simmons) மசியவில்லை. பௌண்டரி, சிக்ஸர் என்று அடுத்தடுத்து அவரும் விளாசினார். ஆறாவது ஓவரைப்போட்ட ஜடேஜாவுக்கும் அதே கதி! பௌலர்களை வேகவேகமாக மாற்றிய தோனி, பவன் நேகியை இறக்கினார். கவலைப்படாத சிம்மன்ஸ்-ரோஹித் ஜோடி கலக்க ஆரம்பித்தது. தீவைத்த சரவெடியானார் சிம்மன்ஸ்! 11-ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110 என்றது மும்பையின் ஸ்கோர். நீலச்சட்டை ரசிகர்களிடமிருந்து விசில் பறந்தது. ஸ்டேடியத்தின் விஐபி இருக்கையில், அட்டனக்கால் போட்டு ஆட்டத்தை ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

25-பந்துகளில் 50 ரன்னெடுத்த மும்பைக் கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடி அய்யனாரான கரன் போலார்ட் அடுத்து வந்தார். ஆச்சரியமாக, இதுவரை பௌலிங் போடாத டுவேன் ஸ்மித்தை பந்துபோடவிட்டார் சென்னை கேப்டன் தோனி. கைமேல் பலன்! முதல் பந்திலேயே அதுவரை விளாசிக்கொண்டிருந்த சிம்மன்ஸை(68) வீட்டுக்கு அனுப்பினார் ஸ்மித். கரன் போலார்டும், அம்பத்தி ராயுடுவும் அவ்வப்போது சிக்ஸர் அடித்து ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இறுதியாக 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 202 ரன்கள் என ஸ்கோரை முடித்துக்கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்கு 203 ரன். கல்கத்தா மைதானத்தில் இது துரத்தப்படவேண்டிய இலக்குதான். மும்பையின் மலிங்கா, மக்லெனகனின் வேகப்பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் ரன் எடுக்க சிரமப்பட்டனர் சென்னையின் ஆட்டக்காரர்கள் டுவேன் ஸ்மித்தும் அனுபவ வீரரான மைக் ஹஸ்ஸியும். ஜெகதீஷ் சுசித்தின் (Jagdeesha Suchith)பிரமாதமான கேட்ச்சில் வீழ்ந்தார் ஹஸ்ஸி. களத்தில் இறங்கினார் சுரேஷ் ரெய்னா. அவரும் ஸ்மித்தும் சேர்ந்து சென்னையின் ஸ்கோரை உயர்த்தப் பாடுபட்டனர். 58 ரன்னெடுத்திருந்த ஸ்மித் ஹர்பஜனின் சுழல்வீச்சில் விழுந்தார். கூடவே ரெய்னா (28), ப்ராவோ (9) என பெவிலியன் திரும்ப, சென்னை தடுமாறியது. 15 ஓவர்களில் 113 ரன்களே சென்னையால் எடுக்க முடிந்தது. மும்பையின் ஹர்பஜன் சிங், மலிங்கா, மெக்லனகன் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை நிலை குலையவைத்தார்கள். எட்ட வேண்டிய இலக்கு கண்ணில் தென்படவில்லை. 5 ஓவர்களில் 90 ரன் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை. தோனிப் போராடிப் பார்த்தார். ஆனால் யோகம் சென்னையின் பக்கம் இல்லை. மலிங்காவின் யார்க்கர் காலில்பட்டு ஸ்டம்ப்பை இடிக்க, தோனி அவுட்டானார். சென்னையின் ஐபிஎல் கனவும் தோனியோடு சேர்ந்து வெளியேறியது. அடுத்தடுத்து டூ ப்ளஸ்ஸீ, பவன் நேகி, அஷ்வின் என சென்னை ஆட்டக்காரர்கள் ஓட்டக்காரர்கள் ஆனார்கள். கடைசியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி. ஐபிஎல் 2015 சேம்பியன் ஆனது.

குதூகலத்தில் மும்பை அணியினர் துள்ளிக்குதிக்க, அணியின் சொந்தக்காரரான நீத்தா அம்பானி மைதானத்துக்குள் சிரித்துக்கொண்டே வந்து வீரர்களை பாராட்டி வாழ்த்தினார். மும்பை அணிக்கு பயிற்சியாளர்களாக ஒரு அணியே பணியாற்றியது: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்(Rickey Ponting), ஜாண்ட்டி ரோட்ஸ்(Jonty Rodes), ஷேன் பாண்ட்(Shane Bond), அனில் கும்ப்ளே, ராபின் சிங் ஆகியோர். இவர்களின் கடும் முயற்சியும், அணி வீரர்களின் உழைப்பு, கேப்டன் ரோஹித் ஷர்மாவின் தலைமைப்பண்பு, ஆட்டத்திறன் ஆகியவை ஒன்றுசேர்ந்து மும்பைஅணியை வெற்றிமேடையில் ஏற்றியது எனலாம். மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்வானார். கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடியும், இரண்டாம் இடத்துக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைக்கிறது.

ஐபிஎல் 2015-ன் சிறந்த சாதனையாளர்கள்: 562 அதிகபட்ச ரன் எடுத்து ஆரஞ்சு வண்ணத் தொப்பியை வென்ற டேவிட் வார்னர் (David Warner) (சன்ரைசர்ஸ், ஹைதராபாத்), 26 விக்கெட்டுகள் சாய்த்து பர்ப்பிள் கலர்த்தொப்பியை வென்ற டுவேன் ப்ராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), அதிகபட்ச சிக்ஸர்களாக 38-ஐ விளாசிய க்றிஸ் கேல்(Chris Gayle) (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு). முளைவிடும் இளம்வீரருக்கான பரிசை(Emerging Player Award) டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஷ்ரேயஸ் ஐயர் தட்டிச்சென்றார். மிகவும் முறையான, தரமான விளையாட்டிற்கான பரிசை (Fairplay Award) சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.

இந்த வருட ஐபிஎல் தொடரின் மூலம் திறமைமொட்டுக்களாய்க் கீழ்க்கண்ட இளம் வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பரிமளித்தனர்: சர்பராஸ் கான் (வயது17 -இடது கை ஆட்டக்காரர், பெங்களூரு அணி), ஹர்தீக் பாண்ட்யா(வயது 21-ஆல்ரவுண்டர், மும்பை இண்டியன்ஸ்), பவன் நேகி(வயது 20-ஆல்ரவுண்டர், சென்னை சூப்பர் கிங்ஸ்), ஷ்ரேயஸ் ஐயர் (வயது 20-துவக்க ஆட்டக்காரர், டெல்லி டேர்டெவில்ஸ்)தீபக் ஹூடா (Deepak Hooda) (வயது 20-ஆல்ரவுண்டர், ராஜஸ்தான் ராயல்ஸ்), சஞ்சு சாம்ஸன் (Sanju Samson)(வயது 21-விக்கெட் கீப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ்). மேலும் சிறப்பாக விளையாடிவந்தால், இவர்களில் ஒன்றிரண்டு பேராவது வரும் வருடங்களில் இந்திய அணியில் இணையும் வாய்ப்பைப் பெறக்கூடும்.

**

ஐபிஎல்-இறுதியில் சந்திக்கும் இரண்டு சிங்கங்கள்

நேற்று (22-5-15) நடந்த ஈட்டிமுனைப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணியைத் தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எதிர்பார்த்தபடியே படுசுவாராசியமான மேட்ச்சாக அமைந்தது இது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியை ரன் எடுக்கவிடாமல் நெருக்குவதிலேயே சென்னை குறியாக இருந்தது. ரான்ச்சி மைதானம் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை விரைவிலேயே இறக்கிவிட்டார் தோனி. பொதுவாக அட்டகாசமாகத் தாக்கி ஆடும் க்றிஸ் கேல்(Chris Gayle), அஷ்வினின் பந்துகளுக்கு வெகுவாக மரியாதை கொடுத்து ஆடுவதிலேயே தெரிந்தது -இந்த போட்டியில் அதிக ரன்கள் வர வாய்ப்பில்லை என்பது. அஷ்வினைத் தாக்காது தடுத்தாடினார் கேய்ல். பௌண்டரி, சிக்ஸர் முயற்சிக்காமல் வெறும் 6 ரன்களை சிங்கிள்களில் எடுத்தார் அவர். அந்தப்பக்கம் விராட் கோலி விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதிரடி ஸ்டாரான டி வில்லியர்ஸ் (AB de Villiers) அடுத்து காலியானார். டென்ஷன். அஷ்வினின் 4 ஓவர்களில் பெங்களூரு அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இடையில் வந்த மந்தீப் சிங்கை சாதுர்யமாகத் தூக்கி விட்டார் அஷ்வின். டென்ஷன் பில்ட்-அப் ஆக, ஆக, ரசிகர்கள் சீட் நுனியில்.. நகங்கள் பற்களுக்கிடையில்!

அஷ்வினின் பௌலிங் கோட்டா முடிந்தபிறகு சுரேஷ் ரெய்னாவைப் பந்து வீச அனுப்பினார் தோனி. ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த க்றிஸ் கேல், ரெய்னாவின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். மூன்றாவது ஒய்ட் பால்(wide ball). நான்காவது பந்தை சாமர்த்தியமாக முன்னே போட்டு கெய்லை, க்ரீஸுக்கு வெளியே இழுத்தார் ரெய்னா. கேய்ல் ஆவேசமாக முன்வந்து, ரெய்னாவின் தலைக்கு மேலே தூக்க, பந்து மைதானத்துக்கு மேலேயே உயர்ந்து பின் செங்குத்தாக பௌலருக்குப் பின்னால் இறங்கியது. ரெய்னா பின்பக்கமாகப் பெடல் செய்து நிதானமாகப் பிடித்தார் கேட்ச்சை. இந்த விக்கெட்டைத்தான் அதிகம் விரும்பினார் தோனி. ஏனெனில், நிதானமாக விளையாடிய கேய்ல் 41 ரன்களை ஏற்கனவே எடுத்துவிட்டார். அவர் இன்னும் கொஞ்சம் ஓவர் விளையாடினால் சென்னையின் விதியை மாற்றி எழுதியிருப்பார்!

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும், 17-வயது சிறுவனான சர்பராஸ் கானும் (Sarfaraz Khan) சிறப்பாக ஆடி பெங்களூருவின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் காலியானார் கார்த்திக். சர்பராஸ் கான், ஜடேஜா, ஹர்ஷல் பட்டேலின் பந்துவீச்சைத் தாக்கினார். சில அபாரமானபௌண்டரிகளை விளாசினார்.நெருக்கடி நிலைமையைக்கண்டு அஞ்சவில்லை. பின்பகுதியில் இவருடைய ஃபீல்டிங்கும் நன்றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால ஸ்டாராக இருப்பாரோ இந்த சர்பராஸ் கான்! அவ்வப்போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பெங்களூரு அணியின் கதையை, 139 ரன்களில் முடித்துவைத்தது சென்னை அணி.

140 என்கிற இலக்கைத் துரத்திய சென்னையின் துவக்க ஆட்டக்காரர் டுவேன் ஸ்மித் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மைக் ஹஸ்ஸி (Mike Hussey) நிதானமாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். சுரேஷ் ரெய்னா, டூ ப்ளஸீ (du Plessis) ஆகிய சென்னையின் தூண்கள் பெங்களூருவின் தாக்குதலில் நிலைகுலைந்தன. கேப்டன் தோனி வந்தார். நெருக்கடி நிலைமையைப் புரிந்துகொண்டார். இந்தப் பிட்ச்சில். வேகமாகத் தாக்க ஆரம்பித்தால் விக்கெட் பறிபோகும். அடுத்த முனையில் ஹஸ்ஸியை ஆடவைத்து, சிங்கிள்களில் கவனம் செலுத்தி நின்று ஆடினார் தோனி. இருவரும் ஜாக்ரதையாக முன்னேறி 140-ஐ நோக்கி அணியைக் கொண்டுவந்தனர். 56 அபாரமான ரன்கள் எடுத்து அவுட்டானார் ஹஸ்ஸி. கடைசி ஓவரில் தோனி 26 ரன்களில் அவுட். 2 பந்துகளில் ஒரு ரன் என்கிற நிலையில் சென்னக்கு டென்ஷன் ஏறியது. அப்போதுதான் மைதானத்தில் இறங்கியிருந்த அஷ்வின், பட்டேலின் பந்தை முன்வந்து லாவகமாக, லெக்சைடுக்குத் திருப்பிவிட்டார். வெற்றி ரன் கிடைத்தது. சென்னை இறுதிப்போட்டிக்குள் மும்பையை எதிர்கொள்ள நுழைந்தது.

இந்த ஐபிஎல்-லின் இறுதிப்போட்டி மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் முறைத்துக்கொள்ளும் கடும் போட்டியாக அமையும் எனத் தோன்றுகிறது. மும்பையின் துவக்க ஆட்டக்காரர்களான லெண்டல் சிம்மன்ஸ்(Lendl Simmons), பார்த்தீவ் பட்டேல் நல்ல ஃபார்மில் இருப்பவர்கள். கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கல்கத்தா மைதானம் என்றால் வெல்லக்கட்டி. கல்கத்தாவில் ரோஹித்தின் பேட்டிங் பிரகாசித்தால் அது சென்னக்குத் தலைவலி. அம்பத்தி ராயுடு, ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) அருமையான மத்தியநிலை ஆட்டக்காரர்கள்.போறாக்குறைக்கு இருக்கவே இருக்கிறார் கரன் போலார்டு (Kieron Pollard). அசாத்தியமான தாக்குதல் ஆட்டக்காரர். பின்பகுதியில் இறங்கி மும்பையின் ரன்விகிதத்தை ஒரேயடியாக உயர்த்தும் திறன் உள்ளவர். ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்லனகன்(McClenghan), மலிங்கா போன்றவர்கள் மும்பையின் பௌலிங் ஸ்டார்கள். சென்னைக்கு ஏகப்பட்ட சோதனைகளைத் தரவல்ல அணி மும்பை அணி.

நேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்மித், ரெய்னா, டூ ப்ளஸீ இறுதிப்போட்டியில் முனைப்பு காட்டி சென்னைக்கு விளையாட வேண்டியிருக்கும். ஜடேஜா பேட்டிங் செய்வது எப்படி என்பதை கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. `பாக்கெட் ராக்கெட்` என்று அழைக்கப்படும் சென்னை ஆல்ரவுண்டர் 20-வயதான பவன் நேகி (Pawan Negi), தன் சிறப்பான திறமையை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான், ஜடேஜாவுக்கு முன்பாக பேட்டிங் செய்ய இவரை அனுப்புகிறார் தோனி. சென்னையின் முன்னணிப் பந்துவீச்சாளர்களான நேஹ்ரா, அஷ்வின், ப்ராவோ (Bravo) சிறப்பாக பந்துவீசினால், மும்பையைத் திணற அடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. மறக்கக்கூடாத விஷயம் ஃபீல்டிங். இரண்டு அணிகளும் இதனை நினைவில் கொண்டு முனைப்புக் காட்டினால் சிறப்பாக இருக்கும். சென்னையை விட, மும்பை அணிக்கு வெற்றிவாய்ப்பு சற்று கூடுதலாக இருப்பதாகத் தெரிகிறது. நாளை மற்றுமொரு நாளல்லவா? என்ன நடக்கும் ? எம்.எஸ்.தோனியா? ரோஹித் ஷர்மாவா? யார் கையில் கோப்பை? ஞாயிறின் இரவு, மிச்சமிருக்கும் கதை சொல்லும் !

**

ஐபிஎல் – ரான்ச்சியில் ஒரு குட்டி யுத்தம்

ஐபிஎல் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கிறது. மும்பை இண்டியன்ஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அதனிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஒரு சூப்பர் போட்டியில் இன்று ரான்ச்சி நகரில் மோதவிருக்கிறது(22-05-2015). இந்தப்போட்டியின் வெற்றி சூடும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை அணியைக் கோப்பைக்காகச் சந்திக்கும். சென்னை அணியின் கேப்டனான தோனியின் (MS Dhoni)சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் குட்டி ஐபிஎல் யுத்தம் இது.

மெக்கல்லம் (Mc Cullum) நியூஸிலாந்துக்குத் திரும்பிவிட்ட நிலையில், சென்னை அணியின் துவக்க ஆட்டம் சற்றே மந்தமாகத்தான் இருக்கும். ஸ்மித்(Dwayne Smith), டூ ப்ளஸீ(du Plessis), சுரேஷ் ரெய்னா(Suresh Raina), கேப்டன் தோனி, பவன் நேகி(Pawan Negi) ஆகிய மத்திய நிலை ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக ஆடினால்தான், விராட் கோலி தலைமையில் ஆடும் பெங்களூரு அணியைச் சரியாக எதிர்கொள்ளமுடியும். பெங்களூர் அணிக்கு வலுவான தூண்களாக இருப்பவர்கள் க்றிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ்(AB de Villers) மற்றும் கேப்டன் கோலி. ராஜஸ்தானுக்கு எதிராக முந்தைய மேட்ச்சில் அதிரடியாக விளாசிய மந்தீப் சிங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. குட்டி பயில்வானான 17-வயது சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) நம்பர் 7-ல் வந்து வாணவேடிக்கை நிகழ்த்தும் திறமை வாய்ந்தவர்.

பௌலிங்கில் பெங்களூரு அணி மிட்ச்சல் ஸ்டார்க்(Mitchel Starc), வீஸே(Wiesse), யஜுவேந்திர சாஹல் ((Yuzvendra Chahal) ஸ்பின்னர்) ஆகியோரையேப் பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்களை சென்னையின் பேட்ஸ்மன்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது சென்னையின் வெற்றிவாய்ப்பு. சென்னையின் அஷ்வின், பவன் நேகி, டுவைன் ப்ராவோ(Dwayne Bravo), ஆஷிஷ் நேஹ்ரா ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மன்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வல்லவர்கள். பெரிய பெரிய கில்லாடிகளையும் ஒரு கொத்து கொத்தித் தூக்கி எறியும் சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. ஆனால் இன்று இவர்களின் ஸ்டார் எப்படி இருக்குமோ யார் கண்டது.

ரான்ச்சி மைதானம் அளவில் பெரியது. சராசரி ஸ்கோர் இந்த மைதானத்தில் 150. துல்லியமான பந்துவீச்சு, திறமையான ஃபீல்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்றுத் தூக்கலாக உண்டு. இருதரப்பிலும் உள்ள ஸ்டார் வீரர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள்- எப்படி வெற்றியை நோக்கித் தங்கள் அணியைத் திருப்பப் போகிறார்கள் என அறியும் ஆறாத ஆவலோடு ஸ்டேடியத்தில் சீட்டின் முனையில் உட்கார்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். CSK and RCB fans – cheers !

**

இரண்டு சின்னஞ்சிறு கவிதைகள்

காலத்தின் கோலம்

ஓடிக்கொண்டே இருக்கிறது காலம்
ஒயிலாகவே எப்போதும்
உடம்பை வைத்திருக்கவேண்டும் என்கிற
ஓயாத ஆசையினாலே
ஓடிக்கொண்டே இருக்கிறது காலம்

**

போகும் பொழுது ..

சொறிந்துகொண்டே காலத்தைக் கடத்தும்
சோம்பேறிகள் பொழுதுபோக்க
வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறாள் பெண்
பொரிந்துகொண்டிருக்கிறது சட்டியில் சோளம்

**

சங்கமம்

காலமெனும் கடும்சூரியனின்
உரித்தெடுக்கும் உஷ்ணத்தில்
உலர்ந்த இலைக் குவியலாய்
உயர்ந்து நின்றேன் மலைபோலே
ஸ்பரிசத்திற்காக ஏங்கி நிற்கையில்
நெருங்கினாய் தொட்டாய் நெருப்பாய்
எரிந்தேன் பெரும் ஜ்வாலையாய் உயர்ந்தேன்
அனலாய்க் கனன்றேன் விரிந்தேன் பரந்தேன்
நான் நீயானேன்
நீயே நானாக ஆனாய்

**

சிலிர்க்கவைக்கும் சித்திரம்

கிடைத்தக் கொஞ்சக் காசில்
காலட்சேபம் செய்தபோது
கவலை அதிகமின்றி இருந்தான்
கிடைத்ததை உண்டான்
படுத்த இடத்தில்
அசந்து தூங்கினான்
உடம்பு திருப்திப்பட்டு அவனுக்கு
உறுதுணையாய் இருந்தது
பாழாய்ப்போன மனந்தான்
ஒத்துழைக்க மறுத்தது
தார்க்குச்சி கொண்டு
முதுகில் குத்தியது
ஓட ஓட விரட்டியது
ஓடினான் ஓயாது தேடினான்
அதிசயம்போலவே ஒருநாள்
நிஜமாகவே வந்து சேர்ந்தது
உழைப்பையும் அவனுடைய
அழைப்பையும் மிஞ்சிய காசுபணம்
வீடு பங்களா என விவரமாய்
விஸ்தரித்துக்கொண்டான்
மெத்து மெத்தென்ற மெத்தையில்
மெதுவாக ஏறி சிலிர்த்தான்
காலை நீட்டிப் படுத்துப் பார்த்தான்
புரண்டு புரண்டு படுக்க
மிரண்டோடியது தூக்கம்
பின்னிரவில் திரும்பிய அரைத் தூக்கத்தில்
அபத்தச் சொப்பனங்களின் சித்திரவதை
அப்பனுக்கு போய்விட்டது நிம்மதி
வகைவகையான உணவின் திண்மையும்
வதைக்கும் தூக்கமின்மையும் நாளடைவில்
உடம்பை ஒருவழி செய்தது
பதறினான் படபடத்தான்
பலபேரின் கருத்தைக் கேட்டான்
ஓட்டம் ஆட்டமுன்னு
ஜிம்மு பம்முன்னு
ஒரேயடியாகக் குழப்பிக்கொண்டான்
பணம் தண்ணீராய்ச் செலவழிந்தது
உடம்போ பெரிதாகிப் பொங்கி வழிந்தது
ஆற்ற வழியின்றி வேறு கதியின்றி
அசந்துபோய் மனதுக்குள் ஒடுங்கினான்
எண்ணலானான் மிச்சமிருந்த நாட்களை

**

தாய்லாந்திலிருந்து தாயாருக்கு

டெல்லியின் மத்திய நகர்ப்பகுதியில் உள்ள கரோல்பாக்கில்(Karol Bagh) குரு ரவிதாஸ் மார்க் என்கிற நீண்ட தெருவில் இருக்கிறது ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவில். 1982-ல் கட்டப்பட்ட இக்கோவில், அஹோபில மடத்தினால் நன்றாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலுக்கு நரசிம்ம ஜெயந்தி அன்று(மே 2) செல்லத் திட்டம். டெல்லியில் இப்போது போட்டுத்தாக்கும் கடும் வெயிலில் 2-ந்தேதி மதியம், நாங்கள் வசிக்கும் கிழக்கு டெல்லியிலிருந்து கோவில் இருக்கும் மத்திய டெல்லிக்குச் செல்லலாம் என்கிற எண்ணம் மிரட்சியைத் தந்ததால், தயக்கத்துடன் கைவிடப்பட்டது. சரி நாளை காலை சூரியன் தலைக்குமேல் வந்து வதைக்க ஆரம்பிக்குமுன் கிளம்பிவிடுவோம் என்று ஒரு வைராக்கியம் கொண்டோம்.
3-ந்தேதி காலை 8 1/2 க்குக் கிளம்பி டெல்லி மெட்ரோவைக் கூட்டம் ஆக்ரமித்துக்கொள்ளுமுன் அதில் பயணித்தோம். கரோல்பாக்கிற்கு அருகிலுள்ள ரஜேந்திர ப்ளேஸ் ஸ்டேஷன் தான் கோவிலுக்கு அருகிலுள்ள ஸ்டேஷன். அதில் இறங்கி கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அமைதியான அழகான கோவில். சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் எதிரே தெரிவது ஸ்ரீ நரசிம்மர் சன்னிதி. அவருக்கு எதிரே சின்னதாக கருடன் சன்னிதி. கூட்டம் அதிகமில்லை. சில தமிழ்நாட்டுக் குடும்பங்களும், வட இந்தியக் குடும்பங்களும் நரசிம்மப்பெருமானை தரிசிக்க அன்று காலை வந்திருந்தனர். கூட வந்திருந்த குழந்தைகள் திடீரென தங்களுக்கு வாய்த்த பெருவெளியில் ஆனந்தமாய் உலவ ஆரம்பித்தன. வயதான அர்ச்சகர் ஒருவர் தீபாராதனை செய்து தீர்த்தம், குங்குமம் கொடுத்தார். ஒரு வட இந்தியப்பெண் என் அருகிலிருந்து பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தார். அர்ச்சகருக்கு ஹிந்தியோ ஆங்கிலமோ பேச வராது என்பதைப் புரிந்துகொண்டு, என்னிடம் மெதுவாக கிசுகிசுத்தார்: ‘அர்ச்சகரிடம் கேளுங்கள் பகவானுக்குப் போட்டிருக்கும் மாலைகளில் ஒன்றை எடுத்துத் தருவாரா என்று!’ நமது கோவில் வழக்கங்கள் பொதுவாக இந்த வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை. நான் ஆங்கிலத்தில் அந்தப் பெண்மணியிடம் விளக்கினேன். இந்தக் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்திருக்கும் மாலையைக் கழட்டி பக்தர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். ஒருவேளை நீங்கள் ஒரு மாலை வாங்கி வந்து அர்ச்சனைக்குக் கொடுத்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம். அர்ச்சகர் அந்த மாலையை நம் வேண்டுகோளுக்கிணங்கி ஸ்ரீநரசிம்மரின் திருப்பாதத்தில் வைத்து உங்களுக்குத் தருவார் என்றேன். அந்த விஷயத்தில் மேற்கொண்டு செல்ல அவர் தயாராயில்லை. நரசிம்மரை நமஸ்கரித்துவிட்டு நகர்ந்துவிட்டார் அந்தப் பெண்.

பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பிக்கையில் முதலில் வருவது சக்ரத்தாழ்வார்- யோகநரசிம்மர் சன்னிதி.அமைதியான அழகுமுகம். சிறிய, அழகான குருவாயூர் கிருஷ்ணன், நரசிம்மர் சன்னிதிக்கு நேர்பின்புறம் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார். சேவித்துக்கொண்டே வருகையில் நரசிம்மர் சன்னிதியின் வலதுபுறத்தில் வருகிறது தாயார் அமிர்தவல்லி சன்னிதி. மஹாலக்ஷ்மி என்றும் சன்னிதியின் மேல்பக்கம் எழுதியிருக்கிறது (குறிப்பாக வட இந்திய பக்தர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக. ஸ்ரீ அமிர்தவல்லி என்று மட்டும் எழுதினால் இது என்ன மாதாவோ, எந்த மதராஸிக்கடவுளோ தெரியலையே என்று பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்). தாயார் –மூலவரும் உத்சவரும்- பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு சாந்தமான அழகு. சிறிய சன்னிதியின் விளக்கு வெளிச்சத்தில் தாயாரின் கழுத்தில் வித்தியாசமாக வயலட், வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் பூமாலை, அழகுக்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டிருந்தது. உற்றுப் பார்த்ததில் இது நம்ம ஊர்ப்பூவல்ல என்று தெரிந்தது. ஆப்பிரிக்காவிலும், க்யூபா, ஜப்பானிலும் பார்க்காத பூக்களா? ஆனால் இந்த வகைப்பூவை எங்கும் இதற்குமுன் நான் பார்த்ததில்லை. திரும்பவும் பார்க்கப்பார்க்க அது இந்த உலகத்தைச் சேர்ந்ததே அல்ல எனத் தோன்றியது. தேவலோகத்துப் புஷ்பமா? மஹாலக்ஷ்மியின் மஹோன்னத அழகு முகம். கழுத்தில் அந்தப் பெயர் தெரியாத அபூர்வப் புஷ்பம். அங்கு நிலவும் அபார அமைதி. அங்கேயே உட்கார்ந்துவிடலாம் எனத் தோன்றியது.

எதிரே இருந்த ஆஞ்சனேயர் சன்னிதிக்குச் சென்றோம். அவரை வணங்கி சன்னிதியைச் சுற்றிவிட்டு, மீண்டும் பிரதானமான நரசிம்மர் சன்னிதி முன் சென்றோம். அங்கு உட்கார்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்துகொண்டோம். மேலும் வட இந்திய பக்தர்கள். ஒரு இளம் வட இந்தியப் பெண் கையில் புதிதாக ஏற்றிய அகல்விளக்குடன் நரசிம்மர் சன்னிதி முன் வந்து நின்றாள். அவரையே பார்த்துக்கொண்டு தீபாராதனையாக அகல்விளக்கை மெதுவாக சுற்றினாள். கூடவே பாடவும் ஆரம்பித்தாள். மென்மையான குரலில் ஹிந்தியில் பக்திப்பாடல். நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதைசெய்தது உள்ளிட்ட புராணக்கதையை உருக்கத்துடன் பாடியவாறே தீபாராதனைக் காட்டி நின்றாள். அவளைப் பொறுத்தவரை அவளையும் நரசிம்மரையும் தவிர வேறு எதுவும், யாரும் அங்கில்லை என்பதாக லயித்திருந்தாள். இன்னும் சில பக்தர்கள் வந்து சேர, அர்ச்சகர் இன்னுமொருமுறை சிங்கப்பெருமானுக்கு தீபாராதனை செய்தார்.

தீபத்தை எடுத்துக்கொண்டு வாசலில் வந்து பக்தர்களுக்குக் காட்டினார். எல்லோரும் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்வதை ஆவலுடன் பார்த்துக் கை உயர்த்தி நின்றது 3-வயது மதிக்கத் தகுந்த ஒரு பெண்குழந்தை. அர்ச்சகர் 6 1/2 அடி உயரம். தீபத்தட்டு எங்கோ மலை உச்சியின் மகரதீபம்போல் அதற்குத் தோன்றியிருக்கவேண்டும் தன் பிஞ்சுக்கால்களின் நுனியில் எம்பித் தவமாய் நின்றது. அல்லாடியது குழந்தை தீபத்திற்காக. யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பெற்றோருக்கும் குழந்தையைத் தூக்கிப் பிடிக்கவேண்டும் என்கிற பிரக்ஞை இல்லை. நான் அர்ச்சகர் பக்கம் நெருங்கி அந்தக் குழந்தைக்கு தட்டைக் காட்டுங்கள் என்றேன். ஏனோ, என் குரலே தாழ்ந்திருந்தது. அர்ச்சகருக்கு நான் சொல்லியது காதில் விழுந்ததா இல்லை அவருக்கே தோன்றியதா தெரியவில்லை. சில வினாடிகளில் தட்டைக் கீழே இறக்கினார். மிகுந்த சிரத்தையுடன் எம்பித் தட்டைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள் குழந்தை.

கூட்டம் கொஞ்சம் குறைந்தபின் அந்த அர்ச்சகரிடம் கேட்டேன்: தாயாருக்கு சாத்தியிருக்கிறதே ஒரு வயலட் நிற மாலை..மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அந்தப்பூவின் பெயர் என்ன? அர்ச்சகர் பார்த்தார்; மர்மமாகச் சிரித்தார். சொன்னார்: அந்த மாலை தாய்லாந்திலிருந்து விசேஷமாக அனுப்பப்பட்டுள்ளது. இங்கேயும் பாருங்கள் என்று நரசிம்மரைக் காண்பித்தார். ஆமாம்..அவரும் அந்த மாலையைப் போட்டுக்கொண்டிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். எந்த பக்தர் செய்த வேலை இது. என்ன அழகாக அமைந்துவிட்டது!

மீண்டும் ஒருமுறை பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். தாயார் சன்னிதி வந்ததும் அருகே நின்று வணங்கிக்கொண்டிருந்தேன். 2 அல்லது 2 ½ வயதான குழந்தை ஒன்று, தன் அம்மாவை அலட்சியம் செய்து வேகமாக வந்தது. மூடியிருந்த தாயார் சன்னிதிக் கதவின் ஜன்னல்போன்ற இடுக்கில் எட்டிப் பார்த்தது. திருப்தி இல்லை போலும். நன்றாகப் பார்க்கவென படிகளில் தன் சின்னக் கால்களை வைத்துத் தடுமாறி ஏறியது. வெறும் தாழ்ப்பாள் மட்டும் போட்டிருந்த கதவை திறக்க முயன்றது. அம்மாக்காரி ஓடிவந்து தூக்க முயன்றார். இருக்கட்டும். குழந்தை தெய்வத்தை பார்ப்பது நாம் வணங்குவதைவிடவும் முக்கியம் என்றேன். அவர் ‘அதற்கு இல்லை; விட்டால், கதவைத் திறந்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது’ என்றார்.

தாயாரிடமும், நரசிம்மப்பெருமானிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம். சூரியன் தன் தினப்படிக் கடமையைச் செய்வதில் முனைப்பாய் இருப்பதை உடல் உடனே உணர்ந்தது.

**