ஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்!

நேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். நினைத்ததெல்லாம் ஒருவேளை, வாழ்க்கையில் நடந்துவிடலாம். ஆனால் ஐபிஎல்-இல் அப்படியெல்லாம் நடக்காது!

முதலில் ஆடிய ஹைதராபாத், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஒவ்வொரு விக்கெட்டாகப் பரிதாபமாகப் பறிகொடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று போட்டிகளை கம்பீரமாக வென்ற ஹைதராபாத், தோற்பதையே பொழுதுபோக்காகக்கொண்டிருக்கும் மும்பையை எதிர்த்து ஆடுகிற லட்சணமா இது? நம்பமுடியவில்லை. மிட்செல் மெக்லனகனின் (Mitchel McClenaghan) முதல் ஓவரிலேயே ஹைதராபாத்துக்கு மணி அடித்திருக்கவேண்டும். ஷிகர் தவனையும் சாஹாவையும் ஒரே ஓவரில் அவர் அலட்சியமாகத் தூக்க, கேப்டன் வில்லியம்சனும், மனிஷ் பாண்டேயும் பௌண்டரி அடிக்க ஆரம்பித்தனர். இந்த வருட ஐபிஎல்-லில் தன் முதல் மேட்ச் விளையாடிய ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியும், யூசுஃப் பட்டானும் இன்னும் ஆடவேண்டியிருக்க, ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை ஹைதராபாத் எட்டும் எனவே தோன்றியது. ஆனால் பாண்டே, ஷகிப்-உல்-ஹசன், வில்லியம்சன் என அடுத்தடுத்து சரிந்து விழ, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் ஆட்டம் கண்டது. மும்பையின் தரப்பில் நன்றாக பந்துவீசிய மெக்லனகன், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் மார்க்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எனப் பலிவாங்கினர். ஹைதராபாத் 118 ரன் மட்டுமே எடுத்து, இன்று தொலைந்தோம் நாம் என மும்பையின் இரவு வானைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.

மும்பைக்கான இலக்கு 119 ரன் மட்டுமே. பூ! இவ்வளவுதானா..ஊதிருவோம்! என நினைத்து ஆட இறங்கியது மும்பை. ஹைதராபாதின் பௌலிங், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக் (Billy Stanlake) இல்லாததால், பலகீனமாகத் தெரிந்ததும் ஒரு காரணம். ஆனால் அந்த இரவு மும்பை இண்டியன்ஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மடியில் வைத்துக் காத்திருந்தது. பந்துவீச்சை ஆரம்பித்த சந்தீப் ஷர்மா அபாரமாக ஸ்விங் செய்ததோடு, கஞ்சத்தனமாக 3 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து, மும்பையை தொடக்கத்திலேயே மூச்சுத் திணறவைத்தார். கூடவே எவின் லூயிஸையும் காலி செய்தார். ஸ்பின்னர்கள் ரஷித் கான், முகமது நபி, ஷகிப்-உல்-ஹசன் என ஹைதராபாத் குத்தாட்டம் போட, மும்பைக்கு அவசர ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 34, ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா 24, என்பதைத் தவிர மும்பையிடம் காட்டிக்கொள்ள ஸ்கோர் ஏதுமில்லை. ரோஹித் ஷர்மா உட்பட யாருக்கும் பிட்ச்சில் என்ன நடக்கிறதென்றே கடைசிவரை புரியவில்லைபோலும். ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவிக்க, ஹர்திக் பாண்ட்யா இன்னும் இருக்கிறார்..இலக்கை அடைந்துவிடலாம் என்கிற நப்பாசை மும்பை கேம்ப்பில் அப்போது கொஞ்சம் இருந்தது. ஆனால் டெஸ்ட் மேட்ட்ச்சிலேயே அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா இங்கே செய்ததென்ன? 19 ரன்களில் வெறும் 3 ரன். இலக்குப் பக்கம் வரவே முடியாமல், 19-ஆவது ஓவரில் 87 ரன்னில் ஆல்-அவுட்டாகிக் கேவலமாகத் தோற்று தன் தோல்விப் பட்டியலை நீட்டிக்கொண்டது மும்பை இண்டியன்ஸ். ஒரு கடினமான போட்டியை, 31 ரன் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.

இறுதியில் பார்த்தால், அப்படி என்னதான் நடந்தது? 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை! தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா! இதிலிருந்தே எந்த மனநிலையில் இலக்கைத் துரத்தவந்தது மும்பை என்பது புரிந்துவிட்டிருக்கும். முடிவாக வெற்றிஇலக்கு, மும்பையைத் துரத்தி விரட்டிவிட்டது!

ஜொலித்த ஸ்பின் நட்சத்திரங்கள்: மயங்க் மார்க்கண்டே (மும்பை இண்டியன்ஸ்). ரஷீத் கான் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)

**

தமிழ்ப் படம் ‘To Let’

தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். குறுகிய காலத்திலேயே வர ஆரம்பித்தன அங்கீகாரமும், புகழும். 2012-ல் நார்வே தமிழ்ப்பட விழாவில் ‘கள்ளத்தோணி’ என்கிற குறும்பட ஒளிப்பதிவிற்காகப் பரிசளிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பாலாவின் ‘பரதேசி’ படத்துக்காக லண்டன் திரைப்படவிழா வழங்கிய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைந்தது. ’கல்லூரி’-யில் ஆரம்பித்து ரெட்டச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்குப் பருவக்காற்று, தார தப்பட்டை, ஜோக்கர் போன்ற குறிப்பிடத் தகுந்த தமிழ்ப்படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்துள்ளார்.

இலக்கிய ஈடுபாடும் உண்டு செழியனுக்கு. உலகசினிமா குறித்த தொடர் ஒன்றை ஆனந்த விகடனில் எழுதி, பின்னர் ‘உலக சினிமா’ என்கிற நூலாகவும் அது வெளிவந்தது. சிறுகதை எழுத்தையும் முயற்சித்தவர். ‘ஹார்மோனியம்’ என்கிற சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். ’தமிழ்ச் சிறுகதைகளில் உளக்காட்சிகள்’ என்கிற இவரது ஆய்வு நூலுக்கு இந்திய கலாச்சார அமைச்சகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கூடவே, இலக்கிய ஆளுமையான ஜெயகாந்தனை சித்தரிக்கும் ஆவணப்படமான ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன்’ படத்திலும் ஒளிப்பதிவுப்பணி.

எதற்காக இவ்வளவு செழியன் புராணம்? இவர் முதன்முதலாக கதைவசனம் எழுதி, இயக்கியும் வெளியிட்ட ‘டு லெட்’ (To Let) என்கிற தமிழ்ப்படத்திற்கு இந்த ஆண்டு தேசியவிருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் திரைஅரங்குகளில் வணிகரீதியாக வெளிவரவில்லை இந்தப் படம். ஐ.டி. எனும் பெரும்பூதம் நகர வாழ்வை நாள்தோரும் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், வாடகைவீட்டுக்காரர்களான ஒரு இளம் தம்பதி, திடீரென வீட்டுக்காரரால் வீட்டைக் காலிசெய்யும்படி சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நல்ல குடித்தனக்காரர்களாகத்தானே இருந்தார்கள். சண்டை, சச்சரவு ஏதுமில்லையே? வீடும் பழகிவிட்டதே. இப்போது ஏன் திடீரென விரட்டவேண்டும்? அதிக வாடகை தருவதாக வீட்டுக்காரருக்கு ஐடி-க்காரர்கள் ஆசைகாட்டிவிட்டார்கள். பணத்துக்காக ஆடாத மனமும் உண்டோ? வீட்டுக்காரர் விட்டார் நோட்டீஸு. தம்பி! வேறு வீட்டைப்பார். ஓடிவிடு இங்கிருந்து ஒருமாதத்துக்குள்! ஒரு போக்கிடமில்லா ஊரில், ஏனோதானோ சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பிரயாசைப்படும் அந்த இளைஞன் பாவம், என்ன செய்வான்? தன் மனைவியையும் சின்னப்பிள்ளையையும் மோபெடில் வைத்துக்கொண்டு சென்னையின் வெயில், தூசிப்படலத்துக்கிடையில் வேர்க்க விறுவிறுக்க நாள்முழுக்க அலைகிறான். படிப்படியாய் ஏறி இறங்குகிறான். தேடுகிறான் நகரின் ஏதோ ஒருமூலையில் தனக்கான ஒரு இருப்பிடத்தை. கேள்விகள், எதிர்க்கேள்விகள், ஏளனம், அவமானம் .. நகரில் மாட்டிக்கொண்ட வீடற்ற ஒரு குடும்பத்தின் தடுமாற்றங்கள், போராட்டங்களை, உயிரோட்டத்துடன், உணர்வுபூர்வமாகத் திரைக்குக் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லியது திரைவிழாவின் ஜூரி. பாலிவுட், ஹாலிவுட் எனக் கலக்கிய புகழ்பெற்ற இயக்குனரான ஷேகர் கபூரைத் தலைவராகக்கொண்டு, இம்தியாஸ் ஹுசேன், மெஹ்பூப், கன்னட இயக்குனர் சேஷாத்ரி, தமிழ் நடிகை கௌதமி போன்ற பத்துபேர் அடங்கிய தேர்வுக்குழு இப்படத்தை சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. சிலமாதங்கள் முன்பு நடந்த கல்கத்தா திரைப்படவிழாவிலும், ’டு லெட்’ படத்திற்கு சிறந்த பிராந்திய மொழிப்படத்திற்கான விருது கொடுக்கப்பட்டது.

முற்றிலும் புதியவர்களைக்கொண்டு செழியன் இப்படத்தை இயக்கியிருப்பதாய்த் தெரிகிறது. கவிஞர் விக்ரமாதித்யனின் மகன் சந்தோஷ் நம்பிராஜன் முக்கியப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் செழியனிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்தவர். செழியன் இந்த ரோலைக் கொடுத்தவுடன் ’நானா?’ என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார் சந்தோஷ். சர்வதேச அளவில் படம் போகக்கூடும் என்பதால், நடிக்காமல் இயல்பாகக் கேரக்டருக்குப் பொருந்தக்கூடிய ஆள்தான் சரியா இருக்கும். நீ சரியா இருப்ப! என்றாராம் செழியன். சரிதான். இத்தகையப் படத்திற்கு புதியவர்கள்தான் லாயக்கு. ஒத்துவரும். அப்போதுதான் ஒரு உண்மைத்துவம், உயிர்த்தன்மை கதையோட்டத்தில் காணப்படும். ஆட்டம், பாட்டம், அடி, குத்து, வெட்டு, ஆபாசம் என்பதுதான் படம் எனப் பழகிப்போனவர்களுக்கு, செழியன் இந்தப்படத்தில் என்ன சொல்லவருகிறார் எனப் புரிய வாய்ப்பில்லைதான். அவர்களைப் பொறுத்தவரை –தமிழின் மெஜாரிட்டி ரசிகர்கள் அப்படித்தான்– இதெல்லாம் படமே இல்லை! நல்லது. மற்றவர்கள், அதாவது தரமான வித்தியாசமான திரைமுயற்சிக்காக ஏங்குபவர்கள் -கொஞ்சப்பேர்தான் அவர்கள், தமிழில் எப்போதாவது நிகழும் இத்தகைய கலைப்படைப்பு, எப்போது திரையரங்குகளில் வெளிவரும் எனக் காத்திருந்து பார்க்கவேண்டியிருக்கும். என்ன செய்வது, நல்ல விஷயங்களுக்காக, இந்த நாட்டில் காத்துக்கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது.

**

சூப்பர்கிங்ஸின் சூப்பர் வெற்றி, மற்றும்..

ஏகப்பட்ட சாலைமறியல்கள், அடிதடிகள், காவல் நெருக்கடிகளைத்தாண்டியும், நேற்று(10-4-18) சேப்பாக் மைதானம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது என்றே தோன்றியது. மங்களகர மஞ்சள், ப்ரகாசம் காட்டியிருந்தது எங்கும். இப்படி ஒரு ரசிகர்கூட்டம் ஆவேசமாகக் குஷிப்படுத்துகையில், பெரும் உத்வேகத்துடன்தானே மைதானத்தில் இறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்? கேதார் ஜாதவ் இல்லாததால் சாம் பில்லிங்ஸை (Sam Billings) மிடில் ஆர்டரில் இறக்கியது சென்னை. இருந்தும், இப்படி ஒரு பயங்கர மாஸ் காட்டும் இந்த அணி என நான் நினைக்கவில்லைதான். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிரமாத ஸ்கோரான 202-க்குப் பின்.

முதலில் ஆடிய தினேஷ் கார்த்திக்கின் கல்கத்தா அணியும், தன் சொந்த மைதானத்தில் இரண்டு வருடங்களுக்குப்பின் இறங்கும் சிஎஸ்கே கடுமையாக விளையாடும் என எதிர்பார்த்தே இறங்கியிருந்தது. மஞ்சள் சட்டைகள் மடக்கிவிடுவார்கள் என்பதால், ஆரம்ப விக்கெட்டுகளுக்குப்பின் உஷாராக விளையாடியது கல்கத்தா. மிடில் ஆர்டரில் உத்தப்பா, கார்த்திக் மற்றும் நேற்றைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல். தோனியின் பந்துவீச்சாளர்கள், ஆரம்பத்திலிருந்தே கல்கத்தா வீரர்களை செட்டில் ஆக விடவில்லை. கொத்து கொத்தென்று கொத்தி விக்கெட்டுகளைத் தூரப்போட்டார்கள். திடீரென்று 89/5 என்று அலறியது கல்கத்தா ஸ்கோர். கல்கத்தா ரசிகர்களின் முகம் வாடிப்போய்விட்டது. மிஞ்சி மிஞ்சிப்போனால் 150-155-ஐ நெருங்கலாம். ஊதித்தள்ளிவிடலாம் மேட்ச்சை என தோனி&கோ நினைத்திருந்த நேரம். 7-ஆம் ஆளாக கல்கத்தாவுக்கு வந்திறங்கினார் ஆந்த்ரே ரஸ்ஸல். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடையிலிருந்து ஒருவழியாக மீண்டு வந்திருந்த ரஸ்ஸல், சில விஷயங்களை நிரூபிக்கக் காத்திருந்தார் போலும். சேப்பாக் அதற்கான வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது. என்ன ஒரு ஆட்டம்! முதல் மேட்ச்சில் ப்ராவோ, அப்புறம் கே.எல்.ராஹுல், பின்னர் சுனில் நாராய்ண், இப்போது இந்த ரஸ்ஸல்! அவர் விளாசிய 11 சிக்ஸர்களில் ஒன்று மைதானக் கூரைக்கு மேலே பறந்து ரசிகர்களை அண்ணாந்து பார்க்கவைத்தது. 102 மீட்டர்ஸ். காணாமற்போனது பந்து. இப்படி அதகளமாக ஆடி கொல்கத்தாவை 202-க்குத் தூக்கி நிறுத்தினார் கல்கத்தாவின் ஹீரோ. மைதானத்தில் ஒரே மஞ்சளாகப் பூத்திருந்தாலும், ஒருபகுதியில் கல்கத்தாவின் வயலட் கூட்டமுமிருந்தது. அதில் விஐபி பகுதியில் தன் பரிவாரத்துடன் அமர்ந்திருந்த கல்கத்தா அணி உரிமையாளருமான நடிகர் ஷா ருக் கான், ரஸ்ஸலை ஏதோ தேவதூதனை பார்ப்பதுபோல் பார்த்துக் கையசைத்தார். சென்னை காலி என்று அவரும் நினைத்திருப்பார் !

203 என்பது இலக்கு. தோனியின் சென்னைக்கு இது ஒரு வாழ்வா சாவா போட்டியாகத் தெரிந்திருக்கவேண்டும். செய் அல்லது செத்து மடி! இப்படியான மனநிலையில் சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் ஆரம்பத்திலேயே தூள்கிளப்பினார்கள். ஆறே ஒவர்களில் ஸ்கோர் 75. என்ன ஆச்சு சென்னைக்கு? ஏதாவது பூதம் கீதம் புகுந்துகொண்டதா! ஒன்றிரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ரன் –ரேட்டை உயர்த்தியே வைத்திருந்தது சென்னை. தினேஷ் கார்த்திக் கல்கத்தா பௌலர்களை வேகவேகமாக சுழற்றிப்பார்த்தார். அவர்களும் அவ்வப்போது நன்றாக வீசியும் சென்னையிடம் பாச்சா பலிக்கவில்லை. இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் சாம் பில்லிங்ஸ். முன்பு டெல்லி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர். ரஸ்ஸல் போட்ட ஆட்டத்திற்கு சென்னையிலிருந்து யாராவது ஒருவர் பதில் சொல்லியாக வேண்டுமே! அந்த வேலையை இவர் தன் கையிலெடுத்துக்கொண்டார். எதிரே தோனி நிதானம் காட்டுகையில், காட்டடியில் இறங்கினார் பில்லிங்ஸ். 23 பந்துகளில் 56 (5 சிக்ஸர்கள்) எனத் தூள்கிளப்பியது அவருடைய பேட். மைதானத்தின் மஞ்சள்சட்டைகள் எழுந்தாடின. ஆர்ப்பரித்தன. 19-ஆவது ஓவரில், டாம் கர்ரனிடம் பில்லிங்ஸ் விழுந்துவிட்டாலும், சென்னையில் உயிர் இன்னுமிருந்தது. கடைசி ஓவர் சிக்ஸரைக் காண்பித்து ’சுபம்’ போட்டுவைத்தார் ரவீந்திர ஜடேஜா. இன்னுமொரு மகத்தான சிஎஸ்கே வெற்றி, மஞ்சள் கொண்டாட்டம்.

குழப்பம் ஏற்படுத்தவேண்டுமென்றே சில தரப்பினர்களால் கிளப்பப்பட்ட சர்ச்சைகள், மறியல்கள், பேடித்தனமான மிரட்டல்களுக்கு மத்தியில், க்ரிக்கெட் எனும் அபாரமான விளையாட்டின் வெற்றி. உன்னத க்ரிக்கெட் ரசனைக்குப் பேர்போன சென்னையின் வெற்றி.

** .

சென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்

சென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா?

கல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர்? கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து
கோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்!

பேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.

சென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி? முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா? சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே! பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா?
சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில்? முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்?

இதற்கிடையே – ஏய்! ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை! –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்!

**

ஐபிஎல் – CSK & RR : மீண்ட சொர்கம் ?

இன்று (7-4-18) மும்பையில் கோலாகலமாகத் தொடங்குகிறது இந்த வருடத்தின் க்ரிக்கெட் விழா – ஐபிஎல். முதல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதக் காத்திருக்கின்றன.

சூதாட்டவெளியில் சிக்கியதால் தடை செய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக வெளியில் உட்கார்ந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்(RR), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த வருடம் மைதானத்துக்குள் நுழைகின்றன. போட்டிகள் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலத்தின்போது, சீட்டுக்கட்டுகளைக் கலைத்து ஆளாளுக்குப் புதிதாகப் பகிர்வதுபோல, போனவருடத்து அணிகளின் வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டார்கள் (சில சீனியர் வீரர்களைத் தவிர்த்து). ஐபிஎல்-இன் எட்டு அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்து, புதிய கட்டமைப்புடன் தங்கள் அணியை வைத்திருக்கின்றன.

பெரும்பாலான அணிகள், இந்தவருட ஏலத்தின்போது, குறிப்பாகத் தனக்கு வேண்டிய பௌலர்களை தேர்ந்தெடுப்பதில் நேரம் மற்றும் பணம் செலவழித்ததைக் காணமுடிந்தது. சரியான ஸ்பின் பௌலர்களைத் தங்கள் அணிக்கு வாங்குவதில், ஒவ்வொரு அணியின் பிரதிநிதிகளும் பேப்பரில் கூட்டல் கழித்தல் போட்டுக்கொண்டு ஏலமெடுத்தனர். இந்த வருடத்திய ஐபிஎல் ஏலத்தில் ரூ.11 கோடி, 12 கோடி எனப் பெற்ற கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, ஜெயதேவ் உனாத்கட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) போன்ற வீரர்கள் உண்டு. ஏகப்பட்ட பணத்தை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருக்கும் இந்த வீரர்கள், போட்டிகளில் உயர உயரப் பறப்பார்களா அல்லது காற்றுப்போன பலூனைப்போல கீழே சுருண்டு விழுவார்களா என்பதை வரவிருக்கும் நாட்கள் தெளிவாகச் சொல்லிவிடும்.

வனவாசத்திலிருந்து மீண்டு ஐபிஎல்-லுக்கு வந்திருக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சாதித்துக்காட்டவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை அணிக்கு வழக்கம்போல மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் பந்து சிதைப்பு சர்ச்சையில் மாட்டி ஆஸ்திரேலிய அணியிலிருந்தே நீக்கப்பட, ராஜஸ்தான் தலைமைப்பதவியும் கூடவே பறிபோனது. ராஜஸ்தான் அணிக்கு இப்போது இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான அஜின்க்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸும் எத்தகைய வெற்றி தோல்விகளைப்பெறும் என்பதனை அந்தந்த அணிகள் ஒவ்வொரு மேட்ச்சிலும் இறக்கவிருக்கும் வீரர்களின் காம்பினேஷன் மற்றும் களவியூகம் முடிவுசெய்யும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி அமைந்திருக்கிறது? இந்த அணியின் பௌலிங் வலிமையானதாகத் தெரிவதால், முக்கிய போட்டிகளில் கேப்டன் ரஹானேயின் தலைபாரம் பாதியாகக் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களாக ஜெயதேவ் உனாத்கட், தவல் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், துஷ்மந்தா சமீரா முன்னிலைப்படுத்தப்படலாம். இந்த அணிக்கு வாய்த்திருக்கும் ஸ்பின் பௌலிங் காம்பினேஷன்தான் ரஹானேக்கு மிகவும் கைகொடுக்கும் எனத் தோன்றுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேர்ப்பு ஆஃப்கானிஸ்தானின் ஜஹீர் கான். 18 வயதான லெக்-ப்ரேக் பௌலர். இவரிடம் எதிரி விக்கெட்டுகள் வேகமாக சரியலாம். ப்ரஷாந்த் சோப்ரா, ஷ்ரேயஸ் கோபால், கே.கௌதம் போன்ற ஸ்பின்னர்களின் பலமும் கூடவே உண்டு.
இங்கிலாந்தின் இரண்டு குறிப்பிடத்தகுந்த ஆல்ரவுண்டர்கள் ராஜஸ்தானுக்கு விளையாடுகிறார்கள். ஒருவர் பென் ஸ்டோக்ஸ், நல்ல மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனும் கூட. இன்னொருவர் இன்னும் இங்கிலாந்து அணிக்கே ஆடாதவர்! என்னையும் எப்படி ஏலத்தில் கேட்டார்கள் என எனக்கே புரியவில்லை எனும் 22-வயதான ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இங்கிலாந்தின் சிறப்புத் திறமையாக விமரிசகர்களால் கருதப்படும் இவரை, ராஜஸ்தான் ஆர்வமாய் வாங்கிப்போட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ஆர்ச்சர் ?

விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்ஸன், ராஹுல் த்ரிபாட்டி அல்லது ஜதின் சக்ஸேனாவோடு ராஜஸ்தானின் ஆட்டத்தைத் துவக்கலாம். ஸ்மித்திற்குப்பதிலாக சேர்க்கப்பட்டிருக்கும் ஹெண்ட்ரிக் க்ளாஸன் (Henrich Klassen) அணியின் இன்னொரு விக்கெட் கீப்பருமாவார். சாம்ஸனுடன் துவக்கத்தில் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு இவருக்கும் கிட்டலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வலுசேர்ப்பார்கள். லோயர் ஆர்டரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை வேகமாக அறிமுகப்படுத்துவார்கள் எனத் தோன்றுகிறது. இவருக்குப்பின் ஷ்ரேயஸ் கோபால் அல்லது கே.கௌதம் வருவார்கள் எனத் தோன்றுகிறது. சிறந்த பௌலர்கள் அணியில் இருப்பினும், அணியின் கேப்டனாக ரஹானேயின் களவியூகம் எப்படி ராஜஸ்தானின் வெற்றிக்கு ஒத்துப்போகும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கடந்த வருடங்களில் காணப்பட்டதுபோல வலிமையானதுதானா என்பது பெரும் கேள்வி. துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்ஸன் அல்லது தூ ப்ளஸீ (Faf du Plessis) இறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஸ்டார் இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 3-ஆம் இடத்திலும், அம்பத்தி ராயுடு அல்லது கேப்டன் தோனி 4-ஆவது, 5-ஆவது இடத்திலும் இறங்க வாய்ப்புள்ளது. 6-ஆவது 7-ஆவது இடங்களில் வருபவர்களுக்கு விளையாட இரண்டு மூன்று ஓவர்களே கிடைக்கும். ஆதலால் அவர்கள் பந்துகளை வீணாக்காது, வேகமாக அடித்து ஆடும் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த இடங்களில் இடம்பெறும் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர் டுவேன் ப்ராவோ(Dwayne Bravo), ரவீந்திர ஜடேஜா அல்லது கேதார் ஜாதவ் இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சுக்கு யார், யாரை நம்புவார் தோனி? இங்கிலாந்தின் மார்க் உட், டுவேன் ப்ராவோ மற்றும் ஷர்துல் டாக்குர் இந்த வேலையைச் செய்யலாம். மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் சென்னையிடம் ஸ்பின்னர்கள் குறைவு. ரவீந்திர ஜடேஜா, மற்றும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோரின் திறனையே தோனி முக்கிய கட்டங்களில் நம்பவேண்டியிருக்கும். இவர்கள் அடிவாங்கினால், சென்னையும் வாங்கும்! போன வருடம் மும்பைக்கு விளையாடிய பழைய புலியான, ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அணியில் உண்டு. அஷ்வினை ஏலத்தில் எடுக்கமுடியாத சென்னை அணி, ஹர்பஜனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும். அவரை அடிக்கடி இறக்க முயற்சிக்கும். அது குறிப்பிடத்தகுந்த பலனைத் தருமா என்பதை ஏப்ரல், மே மாதங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.

சென்னையின் முதல் சவால் இன்றே மும்பையில் காத்திருக்கிறது. லோக்கல் ஹீரோக்களான மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னையின் மஞ்சள் ஜெர்ஸிகளுக்குக் கடும் சோதனையைக் கொடுக்கும். ரோஹித் ஷர்மா, கரன் போலார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பென் கட்டிங் (Ben Cutting) ஆகியோர் அணியின் பேட்டிங் பலம். பௌலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் (Pat Cummins), மெக்லெனெகன் (McClenagan), முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வேகப்பந்துவீச்சையும், க்ருனால் பாண்ட்யா, ஸ்ரீலங்காவின் அகிலா தனஞ்சயா, தென்னாப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி (JP Duminy) ஸ்பின்னையும் கவனித்துக்கொள்வார்கள். சென்னையைவிட மும்பை அணி குறிப்பாக பௌலிங்கில் வலிமையானதாய்த் தோன்றுகிறது. ஆனால் நடக்கப்போவது டி-20 மேட்ச். சில ஷாட்டுகளில், சில கேட்ச்சுகள், திடீர் விக்கெட்டுகளில் மேட்ச்சின் கதையே மாறிவிடும். ரோஹித்தா, தோனியா? நீலமா, மஞ்சளா ? இன்றைய இரவு சொல்லிவிடும் புதுக்கதையை.

**

ஏப்ரல் 5 – அப்பப்பா !

அப்பப்பா என்றவுடன் ‘நேற்று நீ.. சின்ன பப்பா..’ என்று ஆரம்பிக்கிற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். எதுக்கெடுத்தாலும் சினிமாவா? வாழ்க்கையை எப்போதாவது கொஞ்சம் சீரியசாக எடுத்துக்கொள்ளப் பாருங்கள் – எப்பேர்ப்பட்ட நாள் இது. இதன் முக்கியத்துவம்பற்றி யாருக்காவது ஏதாவது தெரிகிறதா? எவனும் இதைப்பற்றி யோசித்ததாகக் கூடத் தெரியவில்லையே. இந்தியா, அதிலும் நம்ம தமிழ்நாடு இப்படிப் போய்விட்டதே அட, ராமா! (ராமா என்றதும் ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயத்தை நினைத்துக்கொண்டால், இதற்கெல்லாம் யாரும் பொறுப்பேற்பதற்கில்லை! நாட்டில் அவனவனுக்கு எத்தனையோ வேலை கிடக்கிறது.)

சரி, ஏப்ரல் 5-க்கு வருவோம். க்ரிகரியன் கேலண்டரில்(Gregorian calendar) 95 ஆவது நாள் இது. உடனே கூட்டிப் பார்க்க ஆரம்பித்திருப்பீர்கள். ஜனவரியில் 31 நாட்கள், பிப்ரவரி 28, மார்ச் 31, ஏப்ரலில் 5 என. கூட்டத் தெரியாதவர்கள், கணக்கு வாத்தியாரை அடிக்க, அப்போதே கை ஓங்கியவர்கள், கொஞ்சம் விலகி நில்லுங்கள். மற்றபடி, நல்லபிள்ளைகள் இத்தனை நேரம் சரியாகக் கூட்டி 95க்கு வந்திருப்பீர்கள். இதிலும் சிலர் இது லீப்வருஷம் என நினைத்து, கூட்டினால் 96 வருகிறது எனக் குற்றம் கண்டுபிடிக்கலாமா என்றுவேறு பார்த்திருப்பீர்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் பிறந்த மாநிலம், நாடு அப்படி. சரி, மேலே படியுங்கள்.

இந்த பூமியில் முதன்முதலாக விண்கல் ஒன்று விழுந்தது. எப்போது? இந்த ஏப்ரல் 5-ஆம் தேதியில்தானாம்! ஸ்காட்லாந்துப் பகுதியில் அது மோதி விழுந்ததாக வானவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இதற்கும் மோதிதான் காரணம் என்று ஓலமிடவேண்டாம். இது நடந்தது 1804-ஆம் ஆண்டில், பிரிட்டனில்!).

இரண்டாவது உலக மகாயுத்தம். (மூன்றாவது ஓவர்-டியூ என்று முணுமுணுக்கிறீர்களா?) கேள்விப்பட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள். The Great Escape, Downfall, Schindler’s List, Casablanca போன்ற உலகப்போர்பற்றிய சில அபாரமான ஆங்கில சினிமாக்களையும் உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதற்கென்ன இப்போது என்கிறீர்கள். இப்படி அவசரக்குடுக்கையாக இருந்தால் நான் என்ன செய்வது? இரண்டாவது உலகப்போரின்போது 1942 ஏப்ரல் 5-ஆம் தேதியில்தான், நமது பக்கத்து நாடான ஸ்ரீலங்காவை (அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த சிலோன்) ஜப்பானியப் போர்க்கப்பல்கள் கடுமையாகத் தாக்கின. நீந்தத் தெரியாத இரண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் மூழ்கித்தொலைந்தன. (அதற்கு நாம் என்ன செய்யமுடியும்?) இதோடு நின்றதா? அடுத்தவருடம் இதே நாளில்தான்(ஏப்ரல் 5), அமெரிக்கப்போர் விமானங்கள் பெல்ஜியத்தின்மீது குண்டுவீசின. 209 குழந்தைகள் உட்பட 900 பேரை ஈவு இரக்கமில்லாமல் கொன்றபிறகு, ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது; பெல்ஜியத்தை தவறாகத் தாக்கிவிட்டதாக அமெரிக்கா சொன்னது. பார்த்தீர்களா, ட்ரம்ப் வருவதற்கு பலவருடமுன்பே அமெரிக்கா எப்படியெல்லாம் ஒத்திகை பார்த்திருக்கிறது!

இரண்டாவது உலகப்போரில் 1945-ல் இதே நாளில்தான், ஹங்கேரி ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்து நேசநாடுகளால் விடுவிக்கபட்டது. அப்பாடி.. சுதந்திரம்! ஏப்ரல் 5 அந்நாட்டின் தேசீய நாள்.

வேறுசில விஷயங்களையும் பார்ப்போம். சுதந்திர இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசு, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையில் ஏப்ரல் 5-ஆம் தேதிதான் பதவி ஏற்றது-அதாவது 1957-ல். 1959-ல் அது மூட்டையைக்கட்டிக்கொண்டு வீட்டுக்குப்போகும்படி ஆனது என்பது வேறு விஷயம்.

ஏப்ரல் 5 என்கிற நாளுக்கு சீன சரித்திரத்தில் முக்கியத்துவம் உண்டு. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட்டுகள் (வேறு எந்தக் கட்சி இருக்கிறது அங்கே) நினைத்துப் பார்க்கவும் விரும்பாத நாள் அது. 1976-ல் செஞ்சீனாவின் அதிபர் மா-சே- துங் ஆட்சியின்போதுதான் முதன் முதலாக மக்கள் எதிர்ப்பை, சீனா தன் தலைநகரமான பெய்ஜிங்கின் (அப்போதைய பீக்கிங்) தியனென்மென் சதுக்கத்தில் எதிர்கொண்டது. (அதற்குமுன்னும் நாட்டின் வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கெதிரான புரட்சி வெடித்திருக்கலாம். ஆனால் அவை யாருக்கும் தெரியாமல், கொடுமையாக நசுக்கப்பட்டிருக்கும். பத்திரிக்கை சுதந்திரம், ஊடக சுதந்திரம் இல்லாத, மக்கள் வாயைத் திறக்கலாமா என்று யோசிக்கக்கூட முடியாத, கடும் அடக்குமுறை ஆட்சி சீனாவில் நிலவிய கொடுங்காலம். அதனால் அது வெளி உலகுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை) ஏப்ரல் 5-ஆம் தேதி, எதிர்க்கும் மக்களை நசுக்குவதற்காக சீனப்படைகளை டேங்குகளோடு சீன அரசு நகரில் இறக்கியது. அதனைத் தனியனாக ஒரு போராளி தடுத்து நிறுத்த முயற்சிக்க, பயமுறுத்தும் வகையில் முன்னேறும் டாங்குகள் – ஒரு பயங்கரக் காட்சி, எப்படியோ வெளி உலகுக்குப்போய், மேலைநாட்டு பத்திரிக்கைகள், டிவிக்கள் பெரிதாகப் படம்போட்டு அடிக்கடிக் காண்பித்தன – பாத்தீங்களா சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் லட்சணத்தை, தன் மக்களுக்கெதிராகவே டாங்கிகளை அனுப்பும் பயங்கரத்தை என அரசியல் விமரிசனத்தில் சீறின. கம்யூனிஸம் vs ஏகாதிபத்தியம் என்கிற பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலமல்லவா. கேட்கவா வேண்டும்?

சரி இந்த உலகத்தை தூக்கி வையுங்கள் ஒருபக்கம். நம்ம நாடு, அதிலும் தமிழ்நாடு இப்போது எப்படி இருக்கிறது? நேற்று ஆளுங்கட்சி நமது அப்பாவித் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததாமே அதில் பாழாய்ப்போன இந்த இடைவேளை வந்துவிட்டதாம். அப்போது யார் யாரோ, கொண்டுவந்த பாத்திரத்தைத் திறந்துவைக்க, பிரியாணி, டொமேட்டோ ரைஸ் என்று வெளுத்துவாங்கிவிட்டதுகளாமே நமது ஆளுங்கட்சிப்புள்ளிகள்.. பின்னே, உண்ணாவிரதம் இருக்கிற இடத்துல, பசி ஆளையே திங்குற நேரத்துல வாசனையா, ருசியாக் கொண்டாந்து பக்கத்துல பாத்திரத்தத் தொறந்து வச்சா, எடுத்து உள்ள தள்ளாம இருக்கமுடியுமா? இதுக்கெல்லாமா ஆளுங்கட்சியை குறை சொல்வது?

கொஞ்சம் இருங்கள்.. இன்று ஏப்ரல் 5-ஆ? அடடா! ஆட்சியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எல்லாவற்றையும் எதிர்ப்பதையே சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சிகளும், அவர்களுக்குப் பின்னணி ஓசை எழுப்பும் ஜிங்-சக்குகளும் ஒன்று சேர்ந்து காவிரி, கோதாவரி என்று ஏதாவது கோஷமிட்டுக்கொண்டு வெளியே வந்திருப்பார்களே.. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்கிற சாக்கில், மக்களின் சொத்தை-அதான் அரசு அலுவலகங்கள், வாகனங்கள், பஸ், ரயில், தண்டவாளம் என்கிற பொதுச்சொத்துக்களை சேதம் செய்ய முனையவில்லையே? ஒருவேளை, மக்களுக்கான போராட்டம், சாலைமறியல் என்கிறபெயரில், வழக்கம்போல் ஒரு பாவமுமறியாத சாதாரண மக்களின் வாழ்வில் அழுந்தக் கையை வைத்துவிட்டார்களோ? பொட்டிக்கடைகளில் ஆரம்பித்து எல்லாவற்றையும் இழுத்து மூடுகிற வீரத் திருப்பணிமூலம், தினப்படி ஏதோ வேலைசெய்து கையில் கொஞ்சம் காசுவாங்கி கஞ்சிகுடிக்கும், கூலித்தொழிலாளர்களின் வயிற்றிலும் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார்களோ? என்னென்ன காத்திருக்கிறதோ இன்று?

தமிழ்நாடே, உனக்கு எந்த தெசை நடக்கிறது இப்போது? இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறது?
**