CWC 2019 செமிஃபைனல் : பாகிஸ்தான் இன்னுமா எட்டிப் பார்க்கிறது !

உலகக்கோப்பையின் ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நேற்றைய சுவாரஸ்யமான போட்டியில் முரண்டுபிடித்த ஆஃப்கானிஸ்தானை, வெஸ்ட் இண்டீஸ் அடக்கி வீழ்த்தியது. கர்ரீபியன் தீவுகளுக்கு ஃப்ளைட் பிடிக்குமுன், வெஸ்ட் இண்டீஸுக்கு ஒரு ஆறுதல் வெற்றி. சனிக்கிழமை இந்தியா, ஸ்ரீலங்காவுடனும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகின்றன.

இன்று (5/7/19) பாகிஸ்தான் பங்களாதேஷுடன் மல்லுக்கட்டப்போகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் கடைசிப்போட்டியாக அமையவிருப்பது இது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களில் பலர், 9 பாய்ண்ட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலிருக்கும் தங்கள் அணியின் மீது நம்பிக்கை இழக்கவில்லைபோலும். பாக். ரசிகர்களை விட்டுத்தள்ளுங்கள். அவர்களது பத்திரிக்கைகளும் தீவிர ரசிகர்களிடையே கற்பனையை வளர்த்துவருகின்றன. இங்கிலாந்திடம் அனாவசியமாகத் தோற்று, அதற்கு இரண்டு பாய்ண்ட்டுகளை தாரை வார்த்த இந்தியாவையும் கடுமையாக விமரிசித்து வருகின்றன. பாகிஸ்தானின் பிரபல நாளேடான டான் (Dawn), பாகிஸ்தான் ஒருவேளை, நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி  செமிஃபைனலில் நுழைந்துவிட்டால், எதிரணிகளால் சமாளிக்கமுடியாத அளவிற்கு அது பயங்கர அணியாக மாறிவிடும் எனக் கூறியிருக்கிறது! பாகிஸ்தானின் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது, தங்கள் அணி செமிஃபைனலில் நுழைவதுபற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: அல்லா உதவிசெய்வாரேயானால் உலகக்கோப்பையில் அதிசயம் நிகழமுடியும் (“..we need to be realistic, but if Allah helps, then miracles can happen” )

ஒரு இளம் பாக். கிரிக்கெட் ரசிகை

இப்படியாகத்தானே.. பாகிஸ்தானில் இன்னும் சூடு கிளம்பிக்கொண்டிருக்கிறது! பாக்.கின் செமிஃபைனல் நுழைவு சாத்தியக்கூறுகள்பற்றி ரசிகர்கள் (பாக். ரசிகர்களும்தான்) ரசமான விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள். ட்விட்டர் ஒரே அல்லோலகல்லோலப்படுகிறது.

களத்தில் காட்சி தற்போது இப்படி இருக்கிறது: நாலாவது இடத்தில் 11 பாய்ண்ட்டுகளுடன்இருக்கும் நியூஸிலாந்தை இழுத்துத் தள்ளிவிட, முதலில் பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி 11 பாய்ண்ட்டுகள் பெறவேண்டும். சமப் பாய்ண்ட்டுகள் வந்துவிடும். ஆனால் நியூஸிலாந்தின் NRR (Net Run Rate) பாக்.கைவிட அதிகமாயிற்றே. அதையும் காலிசெய்யவேண்டுமே.. அதனால், பங்களாதேஷை பாக். வென்றால் போதாது. கீழ்க்காணும் சாத்தியக்கூறுகளில் ஒன்றையாவது பயன்படுத்தி பெரிய வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தினால், பாகிஸ்தானின் ரன் -ரேட் நியூஸிலாந்தைவிட அதிகமாகிவிடும். உள்ளே நுழைந்துவிடலாம்:

1) பாகிஸ்தான் இன்றைய மேட்ச்சில் குறைந்தது 400 ரன் அடிக்கவேண்டும். அதுமட்டும் போதாது. பங்களாதேஷை 84 ரன்களுக்குள் நசுக்கித் தூக்கி எறியவேண்டும். 316 ரன்களில் வெற்றி. நியூஸிலாந்தைவிட பாக். ரன்-ரேட் அதிகமாகிவிடும். செமிஃபைனலில் சீட்டு!

2) பாகிஸ்தானால் 350 ரன்தான் எடுக்கமுடியுமா? தோஷமில்லை. பங்களாதேஷை 38 ரன்களில் ஆல்-அவுட் செய்துவிட்டால், 312 ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துவிடுமே.. அப்புறம் என்ன, செமிஃபைனல்தான்.

3) ’என்ன, 350, 400 ரன்களா? ரொம்ப ஜாஸ்தியில்லையா?’ – என்கிறதா பாகிஸ்தான்? போனால்போகட்டும். ஒரு கடைசி வாய்ப்பு: 308 ரன்னாவது பங்களாதேஷுக்கு எதிராக எடுத்துவிடட்டும். ஒரே கண்டிஷன்: பங்களாதேஷை ஒரு ரன்கூட எடுக்க, பாகிஸ்தான் விடக்கூடாது. அதாவது 0-வில் ஆல்-அவுட். சரிதானே! பாக். வந்துடுமே செமிஃபைனல்ல!

ஆனால் இதிலும் ஒரு பயங்கரம்: பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பேட்(bat) செய்தால், பாகிஸ்தானுக்கு சங்குதான்..

Fazal Amin தென்னாப்பிரிக்காவிலிருந்து இப்படி ட்வீட்டிக் கலக்குகிறார்: What if Sarfaraz wins the toss and decides to bowl first !

**

Picture  courtesy : Google

வாஜ்பாயி என்றொரு கவிஞர்


சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தந்தைவழித் தாத்தா, மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமஸ்கிருத அறிஞராக இருந்தவர். அப்பா பண்டிட் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயி ஹிந்தி மொழியின் கவிதை உலகில் தனக்கென இடம் அமைத்துக்கொண்ட கவிஞர். தேசபக்தர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். வாஜ்பாயி கான்பூர் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தபோது, பணிஓய்வுபெற்றிருந்த அவருடைய தந்தையும் நானும் சட்டம் படிக்கிறேன் என்று அதே காலேஜில், அதே வகுப்பில் சேர்ந்துகொண்டார். அப்பாவும் பிள்ளையும் க்ளாஸ்மேட்ஸ்!

இதிகாசம், புராணமென தந்தையிடம் கதைகள்பல கேட்டிருந்த வாஜ்பாயி, இந்து மதம், இந்தியக் கலாச்சாரம், தேசபக்தி, தியாகம் என இளம் பிராயத்திலேயே, உன்னத சிந்தனைகள் வாய்க்கப்பெற்றார். தன் பதின்ம வயதிலேயே சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புராணக் கதைளையும், நவீன காவியங்களையும் விரும்பிப் படிக்கத்தொடங்கியிருந்தார். ’ராம்சரித்மானஸ்’ என அழைக்கப்படும் துளசிதாசரின் ராம சரிதம் தன்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஹிந்தியின் புகழ்பெற்ற கவிஞர்களான ஜெய் ஷங்கர் ப்ரசாத்-தின் ’காமாயனி’, ’நிராலா’ என்கிற புனைப்பெயரில் எழுதிய சூர்யகாந்த் த்ரிப்பாட்டி-யின் ’ராம் கி ஷக்தி பூஜா’ (ராமனின் சக்தி பூஜை), மகாதேவி வர்மாவின் ’கீத்’ (கீதம்) ஆகிய நூல்கள் தன்னை மிகவும் வசீகரித்ததாகச் சொல்லியிருக்கிறார் வாஜ்பாயி.

வாஜ்பாயி இளம்பிராயத்திலேயே தன்னை ஒரு கவிஞனாகவே உருவகித்துக்கொண்டவர். பின்னர் காலப்போக்கில் தவிர்க்கவியலா மாற்றங்கள் நிகழ்ந்தன. கவர்ச்சிப்பேச்சாளர், அரசியல்வாதி என வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தி வேடிக்கை பார்த்தது. அரசியல்வாதியாக ஆகநேர்ந்த கவிஞர் என இவரைக் கொள்வதே சரி. அரசியல் சோர்வுகொடுத்த போதெல்லாம் தன்னிலிருந்தே பின்வாங்கியவர்போல், டெல்லியிலிருந்து விலகி, குலு மணாலியில் தனிவீட்டில் தங்கி இயற்கையை ரசிப்பதும், வாழ்வின் ஆழ்மடிப்புகளை உள்வாங்கியும் கவிதை வரைந்துகொண்டிருந்தார் அவர். வாஜ்பாயியின் கவிதைவெளி, இந்திய தேசம், இந்து தர்மம், வாழ்க்கை, மனிதனின் தனிமை, வீரம், துக்கம், மரணம் எனப் பலவாறு விரிந்து செல்கிறது. சமஸ்கிருதம், உருது ஆகிய வடமொழிகளின் வீச்சு, வார்த்தைசாகசங்கள் நிறைந்திருப்பன இவரது கவிதைகள். ’இலக்கியத்தின் உச்சபீடத்தில் என் கவிதை முயற்சிகள் வைக்கப்படுமா, இல்லையா என்பதை நானறியேன். ஆனால் என் கவிதைகள் என் வாழ்க்கையின் சாஸனங்கள்’ என்றார் வாஜ்பாயி.

மரணம், 30 வருடங்களுக்கு முன்பே, ஒருமுறை இவர் கதவைத் தட்டிச் சென்றிருக்கவேண்டும். 1988-ல் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாயி, நியூயார்க் மருத்துவமனையில் போராடியவாறிருந்தார். தான் தன் இறுதிக்காலத்தில் இருக்கிறோமோ என அவர் மனதில் சஞ்சலம். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மரணதேவன் தயங்கித் தயங்கித் தன்னை நெருங்குவதாக அவர் உணர்ந்திருப்பார்போலும். அப்போது வட இந்தியாவில் ‘தர்ம்யுக்’(Dharmyug) (தர்ம யுகம்) என்கிற பெயரில் ஒரு புகழ்பெற்ற ஹிந்தி வார இதழ் வெளிவந்துகொண்டிருந்தது (ஆங்கிலத்தில் ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’வுக்கு இணையாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் வெளியிட்ட ஹிந்தி வாரஏடு). மருத்துவமனையிலிருந்து, தன் நண்பரான அதன் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில், மெல்ல நெருங்கும் மரணம்பற்றித் தன்ன்னில் வெவ்வேறு நிலைகளில் தோன்றிய சிந்தனைகளை இப்படிக் கவிதையாக வடித்திருந்தார் வாஜ்பாயி. ’தர்ம்யுக்’ இதழில் அதற்கடுத்த வாரமே (டிசம்பர் 4, 1988) அது வெளியானது:

சாவோடு ஒரு யுத்தம்

எத்தகைய யுத்தமாக இருக்குமது!
மரணதேவனை சந்திக்கும் உத்தேசம்
ஏதுமில்லை எனக்கு
அந்தத் திருப்பத்தில் நாம் சந்திப்போம் என
முடிவுசெய்திருக்கவுமில்லை – இருந்தும்
வழிமறித்து விஸ்வரூபமெடுத்து
என்னெதிர் நிற்கின்றான் அவன்!

மரணத்தின் ஆயுட்காலம்தான் என்ன
ஒரிரு கணங்கள்தானே
இன்று நாளை என்பதையெல்லாம்
எளிதாகத் தாண்டிச் செல்லும்
பெரும் தொடர்ச்சி இந்த வாழ்க்கை
முழுதுமாக வாழ்ந்திருக்கிறேன் நான்
முடிய விரும்புகிறபடியே முடிவேன்
உயிரை விடுவதில் அச்சமில்லை
உயிர்த்தே மீள்வேன் நான்

**

பதுங்கிப் பதுங்கியே
நெருங்காதே எனை நீ
நேருக்கு நேர் எதிர்கொள்
சோதித்துப் பார்த்துவிடு என்னை

கருகரு கண்மையிட்டுக்கொண்டு
மயக்குகிறது மாலை
கனிவான புல்லாங்குழலிசையாக
காத்துக் கிடக்கிறது இரவு
சாவைப்பற்றியெல்லாம்
சதா நினைத்துக்கொண்டிராமல்
சாவகாசமாகச் செல்கிறது
வாழ்வின் பயணம்

**
நூற்றுக்குமேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் வாஜ்பாயி. ‘எனது 51 கவிதைகள்’, ’தன்னிரக்கமில்லை, தப்பித்தலுமில்லை’ போன்ற தலைப்புகளில் ஹிந்தியில் பல கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதில் ’எனது 51 கவிதைகள்’ கவிதைத்தொகுதி மிகவும் புகழ்பெற்றது. 1995-ல் வாஜ்பாயியின் நண்பரான பிரதமர் நரசிம்மராவினால் டெல்லியில் வெளியிடப்பட்ட அதன் முன்னுரையில் வாஜ்பாயி எழுதுகிறார்: ’கவிதை என்பது தந்தைவழி வந்து சேர்ந்திருக்கிறது என்னிடம். என்னுடைய அரசியல் பாதையானது, என்னிலிருந்து கவிதாரசம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு தடங்கலாகவே இருந்திருக்கிறது.’ 12 மறுபதிப்புகள் கண்டதோடு, பல்கேரிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் இது. இவையன்றி ’வாஜ்பாயியின் 21 கவிதைகள்’ எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கில மொழியாக்கமாக, ஒரு தனிநூலாக (Penguin Global) வெளிவந்திருக்கிறது.

ரசமான கவிதைகள் சில, வெவ்வேறு காலகட்டங்களில் அவரின் விதவிதமான மனவோட்டத்தைக் காட்சிப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன:

தவிர்க்கவியலாதது

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போரும் நாளை
இல்லாது போய்விடலாம்
இருப்பதும் இல்லாதிருப்பதுமான நிகழ்வு
இப்படித்தான் நடந்துகொண்டே இருக்கும்
நாம் இருக்கிறோம்
நாம் இருப்போம்
என்கிற பிரமையும்
எப்போதும் திரும்பத் திரும்ப
எதிர்வந்தவாறேதான் இருக்கும்

**

அடுத்தவரின் பார்வையிலேதான்
பார்த்துக்கொள்கிறேன் என்னையே நான்
வாயை மூடிக்கொண்டுமில்லை
வாயாறப் பாடிக்கொண்டுமில்லை
**
மற்றவர்களிடம் நெருங்கிப் பழகவியலா
மலையுச்சியில் எனைத் தூக்கி வைத்துவிடாதே
வேண்டாம் அந்த வேதனையெல்லாம் எனக்கு

**
அதுமட்டும்

பாழாய்ப்போன பணயத்தில்
எல்லாவற்றையும் வைத்தாயிற்று
நிறுத்த முடியாது எதையும் இனி
உடைந்து நொறுங்கினாலும்
நொறுங்கிவிடலாம் – ஆனால்
தலைகுனிந்து நிற்பதென்பது
நடக்கவே நடக்காது

**

புதுப்பாடலைப் பாடுகின்றேன்

நொறுங்கிப்போன கனவுகளின்
விசும்பல் சப்தத்தை
யார் கேட்கப்போகிறார்கள்
விரிகின்றன மூடிய இமைகளுக்குள்
விரிசல்தட்டிய மனதின் சோகக்காட்சிகள்
இருந்தும் தோல்வியை ஏற்கமாட்டேன்
அவமானத்தை எதிர்கொள்ளமாட்டேன்
காலத்தின் கபாலத்தில் எழுதப்பட்டதையும்
அழிப்பவன், திருப்பி எழுதுபவன் நான்
புதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன் – தினம்
புதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன்

**

எவ்வழி?

நஷ்டங்களே ஆதாயமாய்
ஒரு சூதாட்ட வாழ்க்கை
இரண்டுநாள் அவகாசந்தான்
இலவசமாகத் தரப்பட்டிருக்கிறது
இதில் க்ஷணம் க்ஷணமாகக்
கணக்கெடுக்கவா- இல்லை
எஞ்சியிருப்பதையெல்லாம்
அப்படியே தந்துவிடவா
எந்தவழி செல்லட்டும் நான்?

**
அரசியல் வாழ்விலும் பண்பட்ட மனதின் சிந்தனை, பதற்றமாக அவரிடமிருந்து வெளிப்படுகிறது வேறொரு இடத்தில்:

காந்தி மகாத்மாவே
மன்னித்துவிடுங்கள்
வாக்குறுதியை மீறிவிட்ட
படுபாவிகள் நாங்கள்
சென்றுசேரவேண்டிய இலக்கை
மனம் மறந்து நாளாகிவிட்டது
பயணமும் பாதியிலேயே
நின்றுபோய்விட்டது

**

நாட்டின் அரசியல், சமூக அபத்தங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கிறது வாஜ்பாயியின் கீழ்வரும் கவிதை:

இன்றைய மகாபாராதம்

பாண்டவர் யார்
கௌரவர் யார்
கேள்வியே கோணலானது
இரு தரப்பிலுமாகப் புகுந்து
சதிராட்டம் போடுகிறானே சகுனி
எல்லாச் சபைகளிலும்
இடைவிடாது நிகழ்கிறதே
திரௌபதிக்கான அவமானம்
கிருஷ்ணன் இல்லாமலே
நடக்கவிருக்கிறது
மகாபாரத யுத்தம்
யார் வேண்டுமானாலும் இதில்
வென்றுவிடலாம்
ராஜாவாகலாம்தான் – ஆனால்
பிரஜைகளென்னவோ
அழுதுதான் ஆகவேண்டும்

*
படம்: இணையத்திலிருந்து; நன்றி.

And, quiet rolls the day

Good morning Good morning
Called whatsapp all along screaming
Good or bad
Worst or the very best
Morning is just morning
Though you may still be yawning
It doesn’t speak of any warning
Of anything that might come calling
During the course of the day..
Meanwhile, have a great day !

*

மித்தாலி ராஜ் !

’எந்த ஒரு ஆண் கிரிக்கெட்டரையாவது பார்த்து ’உங்களுக்கு பிடித்தமான பெண் க்ரிக்கெட்டர் யார்’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா?’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா! அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி! சபாஷ்!’ என ட்வீட்டியிருக்கிறார் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸா. என்ன கேள்வி, எப்போது நடந்தது இது? இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா?’ இந்த நோண்டலுக்குத்தான் அப்படிப் போட்டுத்தாக்கினார் மித்தாலி !

மித்தாலி இந்தியாவின் மகளிர் க்ரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர். பல பதின்மவயதுப் பெண்களின் க்ரிக்கெட் ஆதர்ஷம். 2002-ல், தன் 19-ஆவது வயதில் வலிமையான இங்கிலாந்து அணிக்கெதிராக இங்கிலாந்தின் டாண்ட்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 214 ரன்னெடுத்து க்ரிக்கெட் உலகை கிடுகிடுக்கவைத்த இந்தியப்பெண். ஒரு-நாள் க்ரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஐந்து சதம் விளாசியுள்ளார். ஒரு அதிசயம்: இந்த ஐந்து சதத்திலும் அவர் நாட்-அவுட்டாக நின்றார்! பெண்கள் க்ரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது க்ரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையும் உண்டு. வருடக்கணக்கில் இந்தியாவுக்காக மித்தாலி ராஜ் ஆடிய ஆட்டம் ‘லேடி சச்சின்’ என்கிற செல்லப்பெயரைப் பெற்றுத்தந்திருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்கிற பெண்ணில்லை அவர். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதாக, தான் உண்டு, தன் க்ரிக்கெட் உண்டு என்று கடும் பயிற்சி, விளையாட்டு என்று இருக்கிறார் எப்போதும். மகளிர் க்ரிக்கெட்டில் அவரது பேரெழுச்சியைக்கண்டு, 2003-ல் இந்திய அரசு ’அர்ஜுனா அவார்ட்’ வழங்கி கௌரவித்தது.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து, ஹைதராபாதில் வளர்ந்தவர் மித்தாலி. பெற்றோர் தமிழர். அப்பா துரை ராஜ் இந்திய வான்படை அதிகாரி/க்ரிக்கெட் ஆர்வலர். அம்மா லீலா தன்காலத்தில் க்ரிக்கெட் விளையாடியவர். க்ளாசிக்கல் டான்ஸ் வகுப்புகளை எட்டு வயதில் துறந்துவிட்டு, க்ரிக்கெட் மட்டையைக் கையிலெடுத்தார் மித்தாலி. No looking back, afterwards! அவருடைய விளாசல் இன்னும் தொடர்வது இந்தியாவின் அதிர்ஷ்டம். 2015-ல் இந்திய தேசியவிருதான ‘பத்மஸ்ரீ’, எங்கே மித்தாலி என அவரைத் தேடி வந்தது. அதே வருடம் அவருக்கு ‘விஸ்டன் க்ரிக்கெட்டர்’(Wisden Cricketer of the Year) என்கிற சர்வதேச க்ரிக்கெட் விருதும் கிடைத்தது. இந்தப் பெருமையைப்பெற்ற உலகின் ஒரே பெண் க்ரிக்கெட் வீரர் மித்தாலிதான். இப்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் மதிப்புமிக்க கேப்டன்.

நேற்று(24/6/2017) டெர்பி (Derby)-இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் விரட்டியடித்தது. இந்திய ஸ்கோரான 281-ல் கேப்டன் மித்தாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்னெடுத்து கடைசி பந்தில்தான் அவுட்டானார். இந்த அரைசதம் அவர் தொடர்ச்சியாக ஒரு-நாள் போட்டிகளில் அடித்த 7-ஆவது அரைசதம் – மகளிர் க்ரிக்கெட்டில் ஒரு உலக சாதனை. துவக்க ஆட்டக்காரர்களான பூனம் ரௌத் (Poonam Raut), ஸ்ம்ரிதி மந்தனா, மற்றும் ஆல்ரவுண்டர் தீபிகா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் (Poonam Yadav), ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), ஜூலன் கோஸ்வாமி (Julan Goswami), வேதா க்ருஷ்ணமூர்த்தி என நீளுகிறது இந்திய வீராங்கனைகளின் அணி.

விராட் கோஹ்லி-அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டு, இந்தியப் பெண்கள் க்ரிக்கெட் அணியின் வெற்றிநடையில் கவனம் வைப்போமா. தகுதிமிக்க நமது வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவோம், தேசத்தின் பெருமைக்காக அவர்களது கடும் உழைப்பைப் பாராட்டுவோம், வாங்க!

**

அசோகமித்திரன்

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவரான அசோகமித்திரன் மறைந்துவிட்டார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என ஒரு பெரும்காலவெளி காண்பித்த நகர்வாழ் மத்தியதர சமூகத்தின் தினசரி வாழ்வுப்போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்து, எழுத்தில் உன்னதமாய்க் கொண்டுவந்த படைப்பாளி. 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள் என ஒரு இடைவெளியின்றி தமிழ்ப்பரப்பில் இயங்கிவந்தவர். இருந்தும் ஆரவாரமில்லாதவர். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர். An extraordinary, unassuming genius, no doubt.

தமிழ் இலக்கிய வாழ்வில் தொடரும் அபத்தமான குழு அரசியலில் என்றும் அவர் சிக்கியதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் அசோகமித்திரன். மென்மையாகப் பேசியவர். குறைவாகவே தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். வெகுசில நேர்காணல்களையே தந்திருக்கிறார். அந்த நேர்காணல்களில் அவர் சொன்னவையும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அலங்காரமற்ற சாதாரண மொழியில் வாசகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துச்சிற்பி அவர். அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ செகந்திராபாதில் 1948-ல், ஹைதராபாத் பகுதி இந்திய யூனியனில் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த இனக்கலவரங்கள் அடிக்கோடிட்ட சமூகவாழ்வினைப் பதிவு செய்கிறது. கரைந்த நிழல்கள் எனும் நாவல் தமிழ்ச் சினிமா உலகினை பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கிறது. மானசரோவர், தண்ணீர், ஒற்றன் போன்ற நாவல்களும் ப்ரபலமாகப் பேசப்படுபவை.

மிகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார் அசோகமித்திரன். சொற்சிக்கனத்துக்குப் பேர்போனவர். அனாவசியமாக ஒரு வார்த்தை, வர்ணனை எதுவும் கிடைக்காது அவரது எழுத்தில். அவரது படைப்பில் படைப்பாளி துருத்திக்கொண்டிருப்பதில்லை. போதனைகள் இல்லவே இல்லை. சாதாரண நிகழ்வுகளினூடே பூடகமாக மனித வாழ்வைப்பற்றி எதையோ வாசகனுக்கு உணர்த்தப் பார்த்தவர். சிறுகதையின் பொதுவாக அறியப்பட்ட வடிவங்களைத் தாண்டி வெறும் நிகழ்வுகளின் கோர்வையாகவும், கதாபாத்திரத்தின் சிந்தனைப்போக்காகவும்கூட தன்னுடைய சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதையைப்பற்றி அறியப்பட்டுள்ள கோட்பாடுகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவரைப் படிப்பவருக்கு அசோகமித்திரன் எளிதில் பிடிபடுவதில்லை. பார்வை, எண்கள், காந்தி போன்ற சிறுகதைகளை இவ்வகைகளில் குறிப்பிடலாம்.

முன்பு, இதழொன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த தன் கதைகளென சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார் அசோகமித்திரன். அவை: அப்பாவின் சிநேகிதர், ராஜாவுக்கு ஆபத்து, நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பதினெட்டாவது அட்சக்கோடு. மேலும், தனக்குப் பிடிக்காதவை எனவும் இரண்டைக் குறிப்பிட்டிருக்கிறார் ! தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகியவை இந்த மாதிரியும் அறியப்படுகின்றன. காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், விமோசனம், பறவை வேட்டை, பிரயாணம் போன்ற சிறுகதைகள் இலக்கியவெளியில் அடிக்கடி ஸ்லாகித்துக் குறிப்பிடப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் ஐம்பது ஆண்டுகாலமாய் அவர் எழுதிய சிறுகதைகளை ஒரு பெரும்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.

1996-ல் அவருடைய சிறுகதைத்தொகுப்பான ’அப்பாவின் சிநேகிதர்’ நூலுக்காக சாகித்ய அகாடமி அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. தமிழுக்கான ’ஞானபீட விருது’க்காக அவரது பெயர் சமீபகாலத்தில் குறிப்பிடப்பட்டுவந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அசோகமித்திரனுக்கு அந்த விருது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொடுக்கப்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய விருதிற்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சன்னமானது. கிட்டத்தட்ட இல்லாமலானது.

இலக்கிய மாத இதழான கணையாழியின் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றியிருக்கிறார் அவர். இந்தக்காலகட்டத்தில் (எண்பதுகளின் இறுதிவரை), புதிய படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றைக் கணையாழியில் பிரசுரித்துள்ளார் அசோகமித்திரன். அவரது நாவலான ‘தண்ணீர்’ கணையாழியில்தான் தொடராக வெளிவந்தது. அதனைத் திரைப்படமாக்க முயற்சிசெய்யப்பட்டது. ஏனோ அது வெளிச்சத்துக்கு வரவில்லை. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் பயின்றவர். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் தெரிந்துவைத்திருந்தவர் அசோகமித்திரன். அவைபற்றிய அவரது பத்திகள் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் அவரது எழுத்துக்களில் உண்டு என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ’அதிர்ந்துபேசாத எழுத்து’ என அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தில் ‘கவிதை’ என்கிற வகைமை (genre) அவரை அவ்வளவாகக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.

அசோகமித்திரனின் புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வந்துள்ளன. புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகமான ’பெங்குயின் இந்தியா’ அசோகமித்திரனின் மூன்று படைப்புகளை (மொழிபெயர்ப்பு:என்.கல்யாணராமன்), ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. My years with Boss, The Ghosts of Meenambakkam (குறுநாவல்), Still bleeding from the wound (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் அவை. இளம் வயதில் செகந்திராபாதில் வாழ்ந்திருந்த அசோகமித்திரன் தன் அப்பாவின் மறைவிற்குப்பிறகு சென்னைக்கு இடம்பெயர நேர்ந்தது. அவரது அப்பாவின் சிநேகிதரான, புகழ்பெற்ற படநிறுவனமான ஜெமினி ஸ்டூடியோஸின் அதிபர் வாசன் இளம் அசோகமித்திரனைச் சென்னைக்கு அழைத்தார். ஜெமினி ஸ்டூடியோஸில் வேலைபார்த்த அசோகமித்திரன் அங்கே தன் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள்பற்றி ஹாஸ்யம் கலந்து எழுதிய குறிப்புகளே ‘பாஸுடன் சில வருடங்கள்’ என்கிற சுவாரஸ்யமான புத்தகம். தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக ஆங்கிலத்திலும் எழுதியவர் அசோகமித்திரன்தான். அவருடைய பத்தி எழுத்துக்கள் இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஸ்டேட்ஸ்மன், நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஆங்கில தினசரிகளிலும், அப்போது ப்ரபலமாக இருந்த வார இதழான ’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’விலும் பிரசுரம் கண்டன. கூடவே, மொழிபெயர்ப்புப் பணியையும் செய்துள்ளார் அசோகமித்திரன். அனிதா தேசாயின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆங்கில நாவலான Fire on the Mountain அசோகமித்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை சாகித்ய அகாடமியே வெளியிட்டுள்ளது.

சமகாலப் படைப்பாளிகளான க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி,நகுலன், ஆகியோர்களுடன் நட்புடனும், தொடர்பிலும் இருந்தார் அசோகமித்திரன். தன் வீட்டுக்கு வந்து சந்தித்த எழுத்தாளர்களோடு மனம்விட்டு உரையாடி மகிழ்ந்தவர். அவருடைய எண்பதுகளில் அவர் மெலிந்து, உடல்சோர்ந்து காணப்பட்டாலும், உற்சாகமாகக் கடைசிவரை எழுதிவந்தார். அமெரிக்க பல்கலையான University of Iowa அசோகமித்திரனுக்கு படைப்பிலக்கியத்திற்கான ஃபெலோஷிப்பை (Creative writing fellowship) வழங்கி கௌரவித்துள்ளது. அசோகமித்திரன்பற்றிய ஆவணப்படம் ஒன்று அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் தற்செயலாகக் கிடைத்த ஒரு தமிழ்க்கடையில் மாத இலக்கிய இதழான ’தடம்’ கிடைத்தது. உள்ளே எட்டிப்பார்த்ததில் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. வாங்கிவந்தேன். அதில், ஃப்ரெஞ்சுப்புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸால் (Charles Dickens) எழுதப்பட்ட ’இரு நகரங்களின் கதை’ (A tale of two cities) நாவலே தன்னை வாசிக்க, எழுதத் தூண்டிய புத்தகம் என்கிறார் அவர். தமிழில், புதுமைப்பித்தனின் பெயர் நினைவிலில்லாத ஒரு சிறுகதையையும் இவ்வாறே குறிப்பிடுகிறார். ’உங்கள் புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்கிற ஒரு கேள்விக்கான பதிலில் ‘…..ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டாப் போதும்னு நினைக்கிறேன்’ என்கிறார் அசோகமித்திரன்.

**

Melukote Temple திருடப்பட்ட விஷ்ணுவின் வைரமுடி !

மேலக்கோட்டைப் பயணம் 3 (தொடர்ச்சி)

திருநாராயணபுரம் என்று வைஷ்ணவர்களால் அழைக்கப்படும் மேலக்கோட்டையில் காட்சிகொடுக்கும் செலுவநாராயண ஸ்வாமி திருக்கோயிலுக்கு நாங்கள் வந்துசேரும்போது காலை 10.45 . மலைப்பிரதேச ஊரானதால் குளுகுளுவென்றிருந்தது. கோவில் மதியம் 1 மணிவரை திறந்திருக்கும் என்றார்கள். கோவில் கட்டிடத்தைப் பார்த்தாலே தெரிந்தது மிகவும் தொன்மையான கோவில் என்று. முதலில் சன்னிதிக்குள் போய் திருநாராயணப் பெருமாளை சேவித்துவிடுவோம் என வேகமாய் உள்ளே சென்றோம். கூட்டம் இல்லை. உள்ளூர்க்காரர்கள் மாதிரி தெரிந்த சிலர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னேயே நாங்களும் சென்றோம். வந்துவிட்டது மூலவர் செலுவநாராயண ஸ்வாமியின் சன்னிதி. பத்துப்பனிரெண்டு அடி தூரத்தில் நின்ற திருக்கோலத்தில் திருநாராயணன் பிரகாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் தன் பக்தர்களை. அவருடைய திருப்பாதத்தில் பீவி நாச்சியாரின் சிறிய விக்ரகம் இருக்கிறது. அந்தத் தூரத்திலிருந்து பார்க்கையில் சரியாகத் தெரியவில்லை. அர்ச்சகராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

நின்றிருந்த அர்ச்சகர்களில் ஒருவரிடம் கையில் கொண்டுவந்திருந்த தேங்காய் பழத்தைக் கொடுத்தோம். தேங்காயைப் பார்த்தவுடன் ’வாசலுக்குப் போய் உடைச்சுண்டு வாங்கோ!’ என எங்களை உடன் திருப்பினார் அர்ச்சகர். இது என்னடா, எங்கும் காணாத அதிசயம்! நாமே தேங்காயை உடைத்துவிடவேண்டியதுதானா? ரிவர்ஸ் கியரில் நகர்ந்தோம். எங்கே போய் உடைப்பது? கிட்டத்தட்ட நுழைவாசலே மீண்டும் வந்துவிடும் நிலையில், கோவிலின் நாதஸ்வர வித்வான் ஒருவர் எதிர்ப்பட்டு வலதுபுறம் காட்டி ’அங்கே போய் தேங்காயை உடைச்சிட்டு வாங்க’ என்றார் தமிழில். அட, இது நம்ம ஆளு! சில அடிகள் முன்னேறியவுடன் தேங்காய் உடைப்பதற்கான பிரத்தியேக அமைப்பு தெரிந்தது. ஓ! இப்படி ஒரு ஏற்பாடா ! உடைத்தேன் தேங்காயை. மூடிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வேகமாக சன்னிதிக்கு வந்தோம். இப்போதாவது வாங்கிக்கொள்வீரா அர்ச்சகரே? வேறேதும் சொல்வீரா என்கிற வகையில் மனம் ஓடியது. அர்ச்சகர் தேங்காய் மூடிகள், பழங்களை வாங்கிக்கொண்டு பெருமாளுக்கு சுருக்கமாக நைவேத்யம் செய்து ப்ரசாதத்தைத் தந்தார். தீபத்தைக் கண்ணில் ஒத்திக்கொண்டவுடன் பெருமாள் தீர்த்தம் கொடுத்தார் எங்களுக்கும் மற்றவர்களுக்கும். அருகில் நின்ற அர்ச்சகரிடம் ’உத்சவப் பெருமாள்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தேன். ‘செல்வப்பிள்ளை!’ என்னைச் சரிசெய்தார் உடனே. ’தரிசிக்க நேரமாகும்!’ என்றார். ’திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாகிக் கொண்டிருக்கிறதுபோலும்’ : இது என் தர்மபத்தினியின் யூகம்.

செலுவநாராயணப் பெருமாளைப் பார்த்து உருக்கமாக வேண்டி நின்றனர் பக்தர்கள். அதில் ஒரு இளம்பெண், அந்த சிறிய கூட்டத்திலிருந்து சற்றே ஒதுங்கி சன்னிதிக்கு நேரே அங்கேயே உட்கார்ந்துகொண்டாள். சில நிமிடம் கண்மூடி அமர்ந்திருந்தாள். நல்ல காலம், அர்ச்சகர் ஏதும் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் சிலர் வந்து பெருமாளை அவரவர்க்குத் தோன்றியபடி வணங்கி நிற்க, அர்ச்சகர்கள் அருகில் யாருடனோ அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.

திருநாராயணரை அமைதியாக சேவித்தவுடன், இடதுபுறமாக உள்பிரகாரத்தில் நுழைந்து சுற்ற ஆரம்பித்தோம். உள்பிரகார மண்டபத்தில் நிறைய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவ்வளவுபேர் இங்கே எப்படி? இந்த பள்ளிக்கூடவாத்தியார்கள் சொல்லித்தரும் அழகிற்கு, நேரடியாக ஆண்டவனிடமே கேட்டுவிடலாம் பாடத்தை என்று வந்துவிட்டார்களா ! அவர்களைக் கடந்து திரும்புகையில் ஆஞ்சனேய சன்னிதி. சேவித்து தீர்த்தம் வாங்கிக்கொண்டு பிரகாரத்தை தொடர்ந்து சுற்றினோம். சுற்று முடியும் தருவாயில் தாயாரின் சன்னிதி வந்தது. அழகான கல்யாணி நாச்சியார். பரபரப்பின்றி நிதானமாகத் தாயாரை வணங்கிவிட்டு வெளியே வந்தோம். தாயார் சன்னிதியின் அருகில் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறுமண்டபம் ஒன்று, கடந்துபோய்விட்ட ஒரு காலகட்டத்தின் கட்டிடக்கலையின் நுட்பங்களை பறைசாற்றி நின்றிருந்தது.

கொஞ்சம் நகர்ந்தபின் வந்தது ராமானுஜர் சன்னிதி. கல் விக்ரகத்துக்கு அருகில் தாமிரத்தில் ராமானுஜர் விக்ரகம் ஒன்று பளபளத்தது. செல்வப்பிள்ளையை டெல்லியிலிருந்து மீட்டுவந்தவரை, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, ’நமோ நாராயணா’ என்கிற மந்திரத்தை அனைவருக்குமாக அருளியவரை, பக்தர்கள் எந்தக் குலமாயினும் அனைவரையும் சமமாக பாவித்தவரை, முற்றிலும் வித்தியாசமான ஒரு ஞானியை மனமார வணங்கினோம்.

வெளியே வந்தவுடன் மீண்டும் அந்தப் பெரிய கோவிலை ஒரு முறை நிதானமாகப் பார்த்தேன். பழைய காலத்துத் கற்தூண்களில் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள். அகலவாக்கில் விரிந்திருந்த முகப்பு. வாசலுக்கு எதிரே சுமார் 15 அடிதூரத்தில் சிறிய சன்னிதிபோன்ற அமைப்பு. அதனுள் கைகூப்பியபடி சிலை ஒன்று. கோவிலைக் கட்டிய மன்னனாயிருக்கும் என நான் கூற, ‘கருடன் சன்னிதி. பெருமாளைப் பார்த்துக்கொண்டு யார் நிற்பார்கள்!’ என்று என் அறியாமையை உடனே சுட்டினாள் மனைவி. கேட்டவுடன் உஷாராகி, அருகில் சென்று பார்த்தேன். ஆம், அவரே தான். கோவிலின் முன் நின்று சில புகைப்படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பினோம். 12-13 வயதிருக்கும் – ஒரு பள்ளி மாணவி – கருடனின் பாதங்களில் குனிந்து, சிரம் வைத்து தியானித்திருந்ததைக் கண்டேன். தொழில்நுட்பம், நவீனநாகரீகம் என்றெல்லாம் ஒரே வேகமாகப் பொங்கும் இப்போதைய காலகட்டத்திலும், பண்டைய கலாச்சார உன்னதத்திலிருந்து நீங்கிவிடாது, நமது குழந்தைகள் நன்றாகவே வளர்ந்துவருகின்றன என்று ஒரு நிம்மதி தோன்றியது மனதில்.

ராமானுஜர் – விஷ்ணுவர்தனுக்குப் பிந்தைய காலத்தில், 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மைசூர் மகாராஜாவான ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தையும் சுற்றுப்பகுதிகளையும் கைப்பற்றினார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்மீது பிடிப்புகொண்டார். செலுவநாராயண ஸ்வாமி கோவிலும் சுற்றுப்புறங்களும் அவரால் மேலக்கோட்டை பிராமணர்களுக்கு, கோவிலை செவ்வனே பராமரிக்க, பூஜைபுனஸ்காரங்களைக் கிரமப்படி நடத்தவென வழங்கப்பட்டது. மைசூர் மகாராஜாக்களின் பரம்பரையில் வந்த மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் திருநாராயணனுக்கு உபயமாக மணிகள் பதிக்கப்பட்ட தங்கக்கிரீடம் ஒன்றை அளித்துள்ளார். இது கிருஷ்ணராஜமுடி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலிலிருக்கும் ஏனைய தங்க, வெள்ளி நகைகள், பாத்திரங்களில் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் பட்டத்து ராணியரால் உபயம் செய்யப்பட்டவை எனப் பதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ உடையார், பட்டத்துமகிஷிகளுடன் அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வாராம்.

வைரமுடி ப்ரம்மோத்சவம்

செலுவநாராயண ஸ்வாமி திருக்கோவிலில் நடத்தப்படும் வைரமுடி பிரும்மோத்ஸவம் அதிவிசேஷமானது. தென்னாட்டில் நடக்கும் 4 புகழ்பெற்ற பிரும்மோத்ஸவங்களுள் ஒன்று. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) இது நடக்கும். மேலக்கோட்டையே புத்துயிர் பெற்று திருவிழாக்கோலத்தில் பரபரக்கும் மாதம்; ஏகப்பட்ட பக்தர் வெள்ளத்தை ஈர்க்கும் மகாவைபவம். கிட்டத்தட்ட 4 லட்சம்பேர் கூடுகின்றனர். இந்த உற்சவத்தின்போது செல்வப்பிள்ளை அணிந்து வலம்வரும் வைரக் கிரீடம் அல்லது வைரமுடி மிகவும் தொன்மையானது. இந்த வைரமுடி, பிரும்மோத்ஸவ காலத்தில் (13 நாட்கள்) மட்டும்தான் கோவிலுக்கு மைசூர் கருவூலத்திலிருந்து காவல் பாதுகாப்புடன் கொண்டுவரப்படுகிறது. பிரும்மோத்ஸவத்தின்போது இது ராமானுஜரின் சன்னிதிமுன் செல்வப்பிள்ளக்கு அணிவிக்கப்படுகிறது. உத்சவருக்கு அணிவிக்குமுன் இதனைப்பார்க்கக்கூடாதாம். ஆதலால் அர்ச்சகர் தன் கண்களில் துணிகட்டிக்கொண்டு செல்வப்பிள்ளைக்கு இதனை அணிவிக்கிறார். செல்வப்பிள்ளையின் சிரசின்மீதுதான் இதனை யாரும் பார்க்கவேண்டும். உத்சவம் முடிந்தபின் பட்டுத்துணியால் சுற்றப்பட்டு செல்வப்பிள்ளையின் சிரசிலிருந்து ஜாக்ரதையாக அகற்றப்பெற்று மிகுந்த பாதுகாப்புடன் மைசூர் கருவூலத்திற்கு (அந்தக்காலத்தில் ராஜாவின் கருவூலம்) அனுப்பப்படுகிறது. இந்தமுறை இப்போதும் நீடிக்கிறது. இத்தகைய புகழ்பெற்ற வைரமுடி புராணகாலத்தைச் சேர்ந்தது என்கிறது வைஷ்ணவ குருபரம்பரைக் கதை. அதனைக் கொஞ்சம் பார்ப்போம்:

ஒரு காலத்தில், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் வைரக்கிரீடம், அவன் சயனித்திருக்கையில் திருட்டுப்போய்விட்டது! யார் இந்த துஷ்ட வேலையைச் செய்தது? விரோச்சனன் என்கிற அசுரர்களின் மன்னன். யார் இவன்? பக்த ப்ரஹலாதனின் புதல்வன். விஷ்ணுவின் பரமபக்தனான ப்ரஹலாதனுக்கு இப்படி ஒரு பிள்ளை! நாராயணன் ஜாஸ்தி அலட்டிக்கொள்ளவில்லையோ! விஷ்ணுப்ரியர்களான தேவர்களால் இதனைத் தாங்கமுடியவில்லை. கருடபகவானை அழைத்து ‘நீர் போய் அந்த விரோச்சனனை வென்று மீட்டுக்கொண்டுவாரும் வைரமுடியை!’ என்று கேட்டுக்கொண்டனர். கருடனும் பெருமாள் அனுமதிபெற்று ராட்சசலோகம் சென்றார். நீண்டகாலம் நடந்த பெரும்போரில் விரோச்சனனை ஒருவழியாக வென்றார். திருமாலின் வைரமுடியோடு திரும்பிக்கொண்டிருந்தார்.
வைரமுடியில் ப்ரதானமாக இருந்த ஒரு நீலமணி அவர் வருகிற வழியில் கீழே விழுந்துவிட்டது. அந்த நீலமணி பூமியில் விழுந்த இடம் கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நாச்சியார் கோவில். நீலக்கல் விழுந்த இடத்தில் ஆறு ஒன்று புறப்பட்டு திடுதிடுவென ஓட ஆரம்பித்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் ஓடும் மணிமுத்தாறுதான் அது என்கிறது புராணம்.

கருடன் திரும்பி வந்துகொண்டிருக்கையில், பிருந்தாவனத்தைக் கடந்துகொண்டிருந்தார் ஒரு பகற்பொழுதில். கீழே பார்த்தால் கிருஷ்ணன்! தன் நண்பர்களுடன் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான். நாராயணன் அல்லவா இது! வெயில் இவர்மேல் தாக்குமோ என நினைத்துத் தன் பிரம்மாண்டமான இறக்கைகளை பிருந்தாவனத்தின் மீது விரித்து மையம்கொண்டார் கருடன். நிழல் படர்ந்தது பிருந்தாவனத்தில். பின்னர் கீழிறங்கி தான் கொண்டுவந்த வைரக்கிரீடத்தைக் கிருஷ்ணனுக்கு அணிவித்து வணங்கினார். மனிதரூபத்தில் இருந்த கிருஷ்ணனோ அதனைத் தான் வணங்கும் நாராயண விக்ரஹத்துக்கு (புராணகாலத்தில் ராமப்ரியா -தற்போது செல்வப்பிள்ளை) அணிவித்து மகிழ்ந்தானாம். இப்படியாக மேலக்கோட்டைப் பெருமாளிடம் வந்துசேர்ந்ததாம் இந்த வைரமுடி.

கோவிலுக்கு வெளியே வந்தோம். எங்கள் காரை எங்கே பார்க் செய்திருக்கிறார் ஒட்டுனர் எனத் தெரியவில்லை. ஒன்றும் அவசரமில்லை என வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சீதோஷ்ணநிலை ப்ரமாதமாக இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் வந்தது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். அதற்கடுத்தாற்போல், ராமானுஜருக்குப்பின் வந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களுள் முக்கியமானவரான ஸ்வாமி மகாதேசிகனின் சன்னிதி இருந்தது. சன்னிதி திறந்திருந்ததால் படியேறி உள்ளே சென்றோம். மிகவும் வயதான அர்ச்சகர் சன்னிதியில் அன்புடன் வரவேற்றார். ஸ்வாமி தேசிகன் மிகவும் அழகான தோற்றத்தில் காட்சி அளித்தார். ஆச்சாரியனுக்கு தீபாராதனை செய்துவிட்டு, தீர்த்தம், துளசி தந்தார் பெரியவர். அவருடைய கனிவு கண்டு கொஞ்சம் பேசலாம் எனத் தோன்றியது. அவரிடம் ஸ்வாமி தேசிகன் ராமானுஜரைப்போலவே மேலக்கோட்டை வந்து தங்கியிருந்திருக்கிறாரா என்று கேட்டேன். ‘இல்லை. தங்கியிருக்கவில்லை. ஆனால் வந்திருக்கிறார். இந்த ஸ்தலத்தை ஸ்லாகித்திருக்கிறார். ஒரு ஸ்லோகத்தில் மேலக்கோட்டையைப்பற்றிக் குறிப்பிட்டு ‘எல்லா விசேஷங்களும் கொண்ட உன்னத ஸ்தலம்’ எனப்பொருள்படும்படி பாடியிருக்கிறார் என்றார். அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் கடைசிவரியைப் பாடியும் காட்டினார் பெரியவர். அடியேனின் அஞ்ஞானத்தில் என்ன பெரிதாகப் புரிந்துவிடப்போகிறது? அர்ச்சகர் ஸ்வாமியிடம் விடைபெற்று வெளியே வந்தோம்.

கொஞ்சதூரத்தில் பக்தர்களுக்கான தங்கும்விடுதி ஒன்று காணப்பட்டது. தெருவோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறுகடைகள். சாலையில் சில அந்தணர்கள் – மேலக்கோட்டை ஐயங்கார்களாக இருக்கும் – நெற்றியில் பளிச்சென்ற நாமத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அக்ரஹாரத் தெருவாக இருக்கும் எனப்பட்டது. தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துவிட்ட ஓட்டுனர், வண்டியை எடுத்துக்கொண்டுவந்து நிறுத்தினார். கிளம்பினோம். உயரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் இன்னுமொரு பழங்காலக் குன்றுக்கோவிலை நோக்கி. யோகநரசிம்ஹ ஸ்வாமியைத் தரிசிக்கவேண்டாமா ?

(தொடரும்)

**

காலைநேரத்துக் கவிதைகள்

1. ஒன்றும் அறியாமலே

மொட்டை மாடியின்
சுற்றுச்சுவரின் மேல் நின்று
கரைகிறது காகம்
பக்கத்தில் இருக்கும் தொட்டியில்
உயர்ந்து வளர்ந்திருக்கிறது ரோஜாச் செடி
உன்னதமாய் அதில் ஒரு பூ
ரோஜாவின் மயக்கும் எழில் தெரியுமா
அதன் மணம்தான் அறியுமா
பெரிதாகக் கரைகிறது காகம்

**

2. ஐயய்யோ !

குறுக்கே ஓடுகிறது பூனை
கொஞ்சம் நில்
என்ன நிறமது
ஆ! கருப்பு . .
ஏதோ நடக்கப்போகிறது இன்று
கருப்பாகத்தான் இருக்குமது

**

ஆதிசங்கரர் – 2 : எதிரே நின்றவன்

கோவிந்த பகவத்பாதர் என்னும் ஆச்சார்யரை நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர் என்னுமிடத்தில் ஆதிசங்கரர் சந்திக்க நேர்ந்தது. உபநிஷதங்களில் தேர்ந்தவரான கௌதபாதர் என்னும் குருவின் சீடர் அவர். வேதசாஸ்திரங்களில் தலைசிறந்தவர் எனப் போற்றப்பட்டவர். நர்மதா நதிக்கரைக்கு வந்த ஆதிசங்கரர் நதியில் சீறும் வெள்ளப்பெருக்கை தன் கமண்டலத்தில் அடக்கினார். அதனைக்கண்டு அதிசயித்த பகவத்பாதர் இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அதீத யோகசக்தியா என வியந்தார். சங்கரரிடம் நீ யார் எனக் கேட்ட அந்த குருவிற்கு பதிலாக, தான் இந்த உடம்போ, உருவமோ அல்ல; அமைதியும் ஆனந்தமுமாய் என்றுமிருக்கும் ஆன்மாவே என்பதை அழகாகச் சொல்லும் ஆத்மஷடகம் என்கிற 6 ஸ்லோகங்கள் அடங்கிய அற்புதத்தை அருளினார் ஆதிசங்கரர். மேலும், முதலையிடமிருந்து உயிர்பிழைக்கத் தன் தாயாரின் அனுமதிபெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் சொல்லி, தனக்கு பூரண சந்நியாச தீட்சை அருளி, வேதாந்தத்தைக் கற்றுக்கொடுக்குமாறு கோவிந்த பகவத்பாதரை வேண்டினார் சங்கரர். குருவும் சிறுவனான சங்கரரின் வேண்டுகோளை ஏற்று துறவறத்தில் சிறந்ததான பரமஹம்ச சந்நியாச தீட்சையை அளித்தார். அத்வைதக் கருத்துக்களைக் கற்பித்ததோடு குருகுலவாசம் முடிந்தபின், சங்கரரை நாடு முழுதும் சென்று உண்மையான வேதாந்தக்கருத்துக்களை மக்களிடையே பரப்பச் சொன்னார் கோவிந்த பகவத்பாதர். குருவின் ஆக்ஞைப்படி ஆன்மீகப்பயணம் மேற்கொண்ட ஆதிசங்கரர், முதலில் காசி நோக்கிப் பயணித்தார்.

தன் தேசப்பயணத்தின்போது, தன்னோடு ஆன்மீகத் தத்துவங்களில் முரண்பட்ட, பரம்பொருள்பற்றிய தவறான சிந்தனை உடைய பல மத அறிஞர்களையும், குருக்களையும் வாதப்போர்களில் வென்றார் ஆதிசங்கரர். அவர்களின் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் மனதில் இருந்த பரப்பிரும்மம் தொடர்பான குழப்பங்களை அகற்றித் தெளிவு ஏற்படுத்தினார். நெடும்பயணத்தின்போது, அவருக்கென்று சில சீடர்கள் உருவாகி அவரோடு தேசசஞ்சாரம் செய்தனர்.

காசிக்கருகில் ஒருநாள், கங்கை நதியில் குளித்துவிட்டு சங்கரர் தன் சிஷ்யர்களுடன் பாதையில் போய்க்கொண்டிருந்தார். எதிரே, அந்தக்கால வருணாசிரம முறைப்படி கீழ்ஜாதிக்காரனான ஒருவன் வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு அருவெருப்பு தரும் உருவம். கையில் பிடித்திருந்த கயிறுகளில் நான்கு நாய்களைக்கட்டி இழுத்துக்கொண்டு வந்தான். அவனிடமிருந்து துர்வாசம் வீசிற்று. மிக அருகில் அவன் வருவதாகத் தோன்றவே, ஆதிசங்கரர் அவனை `சற்று விலகிப் போ!` என்றார். அவனோ விலகவில்லை. நின்றான். ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டான்: “எது விலக வேண்டும்? உடம்பா? ஆன்மாவா? ஆன்மாவென்றால் அது எங்கும் நிறைந்திருப்பது . எல்லாவுமானது. அதிலிருந்து அதுவே விலகமுடியுமா? உடம்புதான் என்றால், அது ரத்தம், சதை, எலும்புகளாலானது. நிச்சயம் ஒரு நாள் அழியப்போவது. அழியப்போகும் உடம்புகளில் ஒன்று, இன்னொரு உடம்பை விலகிப் போ எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?“

சங்கரர் லேசாக அதிர்ந்தார். அவன் தொடர்ந்தான்: “கங்கையின் பரப்பில் பிரதிபலித்து மின்னும் சூரியன், சேரியிலிருக்கும் குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனிடமிருந்து வேறுபட்டதா? “

எதிர் நின்றவனைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த சங்கரரின் மனதில் ஆன்மஒளி பிரகாசித்தது. “தாங்கள் இவ்வளவு விஷயஞானம் உடையவர் எனத் தெரியாது. ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. தங்களை நமஸ்கரிக்கிறேன்“ என்று கைகூப்பி, தலைதாழ்த்தினார் ஆதிசங்கரர். இந்தக் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அவர் அப்போது 5 ஸ்லோகங்களை (பாடல்களை) இயற்றி, எதிர் நின்றவன் முன் பாடினார். அதற்குப் பெயர் `மனிஷா பஞ்சகம்`. `மனிஷா` என்றால் உறுதிப்படுத்திக்கொள்ளல்(conviction) அல்லது திட நம்பிக்கை எனப் பொருள். பஞ்சகம் என்பது ஐந்து ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள். ஒருவன் ஆன்மதரிசனம் அடைந்தபின், அதாவது தன்னை முழுமையாக உணர்ந்தபின், அவன் மேல்ஜாதி, கீழ் ஜாதி, உயர்குலம், தாழ்ந்த குலம் போன்ற சமூக வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவனாகிறான் என்கிற ஆன்மீகக் கருத்தை முன்வைக்கிறது மனிஷா பஞ்சகம்.

அத்வைத சித்தாந்தத்தைத் தன் குருவிடமிருந்து சங்கரர் ஏற்கனவே கற்றிருப்பினும், இந்த நிகழ்வில்தான் அதன் உண்மையான சாரம் அவரால் ஆழமாக உணரப்பட்டது என்பர். விஸ்வனாதராகக் காசியில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆதிசங்கரரை சோதிக்க, இப்படிப் புலையனாக எதிர்வந்தார் என்றும், அவனுடைய கையில் பிடித்திருந்த நான்கு நாய்கள், உண்மையில் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர் சமயச்சான்றோர்.

அத்வைத சித்தாந்தம் மூலம் இந்து மத மறுமலர்ச்சிக்குப் புத்துயிர்ச்சி தந்தார் ஆதிசங்கரர். தனது நெடிய பாரதப் பயணத்தின்போது பாஸ்கர பட்டர், தண்டி, மயூரா ஆகிய ஆச்சாரியர்களை தன் ஞானத்தினாலும், புலமையாலும்,வாதத்திறமையாலும் வென்றார். அதுபோலவே வடக்கே அவரை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள மறுத்த தர்ம குப்தா, முராரி மிஷ்ரா, பிரபாகர பட்டர் மற்றும் உதயணாச்சாரியார் ஆகிய மதகுருக்களையும் சமய வாதப்போரில் வென்றார். இறுதியில், ஆதிசங்கரரின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அத்தகைய குருக்களும், அவர்களது சீடர்களும் அவருடைய சிஷ்யர்கள் ஆயினர்.

காசியில் இருந்தபோது இளம் சங்கரர் பிரும்மசூத்திரத்திற்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதினார். அவருடைய உரையின் துல்லியத்தை சோதித்தறிய, மூலத்தை இயற்றிய வியாச முனிவரே அந்தணர் வேடத்தில் ஆதிசங்கரர் முன் வந்தமர்ந்தார் ஒருநாள். அப்போது தன் சீடர்களுக்கு பிரும்மசூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார் ஆதிசங்கரர். வந்திருந்த வயசான பிராமணர், பிரும்மசூத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சுலோகத்தை குறிப்பிட்டு, அதற்கு நீ என்ன விளக்கம் தருகிறாய் என ஆதிசங்கரரைக் கேட்டார். ஆதிசங்கரர் கொடுத்த விளக்கத்தில் முழுதும் திருப்தியுற்று சங்கரரை ஆசீர்வதித்ததுடன், அவரது புலமையையும், ஞானத்தையும் சிலாகித்துப் பேசினார் வந்திருந்த முதியவர். அப்போது அவரிடம் மனம்விட்டு பேசிய ஆதிசங்கரர், தனக்கு இந்த பூமியில் விதிக்கப்பட்டிருப்பது 16 வருடங்கள்தான் என்றும், அது நிறைவுறும் தருவாயில் உள்ளது என்றும் சொன்னார். கங்கைநதி தீரத்தில் உள்ள மணிகர்ணிகா எனும் துறையில் இறங்கி தான் ஜலசமாதி ஆகிவிட எத்தனித்திருப்பதாகப் பெரியவரிடம் கூறினார் சங்கரர். அந்தணராக வந்திருந்த வியாச முனிவர், “சங்கரா!, உனக்கு இன்னும் கடமைகள் மீதமுள்ளன. மேற்கொண்டு நீ வேதசாஸ்திரங்களுக்கு விளக்கங்கள் சொல்லியும், வேதாந்த உட்கருத்தை மனிதரிடையே பரப்பியும், பரப்பிரும்மம் பற்றிய சிந்தனைத்தெளிவுக்கு வகை செய்யவேண்டும். எனவே பாரதம் முழுதும் பயணிப்பாயாக. பகவத் கைங்கர்யத்திற்காக (இறை சேவைக்காக) உனக்கு மேலும் 16 வருடங்கள் ஆயுள் அருளப்படுகிறது“ என்றார். வந்திருந்து பிரும்மசூத்திர வியாக்கியானம் கேட்டவர் சாட்சாத் வியாச மகரிஷியே என உணர்ந்துகொண்ட ஆதிசங்கரர், அவருடைய பாதம் பணிந்து ஆசிபெற்றார். அருகிலிருந்த ஆதிசங்கரரின் பிரதம சீடரான பத்மபாதர் மெய்சிலிர்த்து இருவரையும் வணங்கி மகிழ்ந்தார்.

மகரிஷி வியாசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு, தேசமுழுதும் ஆன்மீகப்பயணம் மேற்கொண்டார் ஆதிசங்கரர். அப்போது பிரயாகை என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கு குமரிலபட்டர் எனும் வேதசாஸ்திரவிற்பன்னர் வாழ்ந்துவந்தார். அவர். தான் ஒரு பௌத்த துறவியிடம் கற்றபோது உண்மைக்கு மாறாக, குருதுரோகம் செய்துவிட்டதாகக் கருதி மனம் நொந்தார். தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள, நெல் உமிக்கருக்கிற்குத் தீமூட்டி அதில் நுழைந்து துடிதுடித்து உயிரிழக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அதுபற்றிக்கேள்விப்பட்டு அங்கு வந்த ஆதிசங்கரர் அவரைத் தடுத்து அவரது வேதப்புலமையை புகழ்ந்ததோடு, அவருக்கு பிரும்ம தத்துவத்தை விளக்கி சாந்தப்படுத்தினார். ஆதிசங்கரரை வணங்கி அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் குமரிலபட்டர் ஹோமம், யாகம் ஆகிய மதச்சடங்குகளில் தேர்ந்தவரான மண்டன மிஷ்ரா எனும் குரு மகிஷ்மதி எனும் ஊரில் வாழ்வதாய்க் கூறினார். பிரும்மத்தைப்பற்றி தவறான புரிதல் கொண்டுள்ள அவரை வாதத்துக்கு அழைத்து வெல்லவேண்டும், அவருக்குத் தெளிவை அருளவேண்டும் என்றும் ஆதிசங்கரரை குமரிலபட்டர் வேண்டிக்கொண்டார். ஆதிசங்கரரும் அதற்கிணங்கி தன் சீடர்களுடன் மகிஷ்மதி சென்றடைந்தார் (தொடரும்)

**

கிரிக்கெட் தொடர் : இந்தியா ஆக்ரோஷ வெற்றி

தொடரின் ஆரம்பத்திலேயே, “அச்சமற்ற, ஆவேசமான கிரிக்கெட் விளையாடுவோம்“ என்றார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி. தான் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல என்று அதை செய்தும் காண்பித்துவிட்டார். இந்தியாவின் பட்டோடி, ஸ்ரீகாந்த், கங்குலி வரிசையில் ஆக்ரோஷமான கேப்டனாகக் காணப்படுகிறார் கோஹ்லி. கிரிக்கெட் ஒரு நவீன விளையாட்டாக மேலும் மேலும் மாற்றம் பெற்றுவரும் நிலையில், போட்டி மனப்பான்மையும், தொழில்நுணுக்கங்களும் வளர்ந்துவரும் வேளையில், இத்தகைய ‘fearless and at the same time, a thinking captain’ இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்திருப்பது நல்லது.

இந்திய-ஸ்ரீலங்க கிரிக்கெட் தொடர் 1-1 என்கிற சமநிலையில், மூன்றாவது டெஸ்ட் கொழும்புவில் சூடாக ஆரம்பித்தது. பிட்ச் வேகப்பந்துவீச்சுக்குத் துணைபோனது. ஆரம்பத்தில் ஆடவந்த இந்தியா, துல்லியமான ஸ்ரீலங்க வேகப்பந்துவீச்சையும், திறமையான ஃபீல்டிங்கையும் எதிர்கொள்வதில் திணறியது. வழக்கம்போல் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. 6 சதங்கள் அடித்திருந்த நிலையிலும் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடததால், ரிசர்வ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த செத்தேஷ்வர் புஜாரா(Chetheshwar Pujara), இந்த மேட்ச்சில் (முரளி விஜய் இல்லாத நிலையில்) ஓப்பனராகக் களம் இறக்கப்பட்டார். திடீரென்று நமது டூர் செலக்டர்களுக்கு, அவர் நின்று விளையாடக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பது நினைவுக்கு வந்திருக்கும். ஒரு பக்கம் ராஹுல், ரஹானே, கோஹ்லி, ரோஹித், பின்னி என்று ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, புஜாரா தன் அபாரமான திறமையை சரியான சமயத்தில் வெளிக்கொணர்ந்தார். 59 ரன்னெடுத்து அமித் மிஷ்ரா அவருக்குத் துணை. இறுதி வரை ஆட்டமிழக்காத புஜாரா 145 ரன் எடுத்து இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றினார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 312.

ஸ்ரீலங்காவின் முதல் இன்னிங்ஸும் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் 47/6 என்கிற அபாயகர நிலைக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் அது தள்ளப்பட்டது. ஆனால் தன் முதல் டெஸ்ட்டை ஆடிய குசால் பெரேரா, பதற்றமின்றி, சிறப்பாக ஆடி 55 ரன்கள் எடுத்தார். ஹெராத் 49 ரன் சேர்க்க, ஸ்ரீலங்கா 201-ல் ஆல் அவுட்டானது. ஆச்சரியமான வகையில், இஷாந்த் ஷர்மா ரன் அதிகம் கொடுக்காமல் 5 ஸ்ரீலங்கர்களை `பேக்`செய்து அனுப்பினார். ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களையும், லெக் ஸ்பின்னர் மிஷ்ரா 2 விக்கெட்டுகளையும், யாதவ் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், ஸ்ரீலங்காவின் நுவான் ப்ரதீப் ஜோராகப் பந்து வீசினார். ரன் சரியாக எடுக்கவிடாமல், புஜாரா உட்பட முதல் 4 இந்திய வீரர்களை விரைவில் பெவிலியனுக்குத் திருப்பினார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் இப்படி ஃப்ளாப் ஷோ கொடுத்தபிறகு, மிடில் ஆர்டர் பேட்டிங்க் அதிசயமாக கைகொடுத்தது! இந்திய மிடில் ஆர்டர் வீரர்களின் விளையாட்டைக் கொஞ்சம் கவனியுங்கள்: ரோஹித் ஷர்மா 50, ஸ்டூவர்ட் பின்னி 49, நமன் ஓஜா(முதல் டெஸ்ட்) 35, அமித் மிஷ்ரா 39, அஷ்வின் 58(டாப் ஸ்கோர்). இது எப்படி! 4 விக்கெட்டுக்கு 64 ரன்கள் என்று ஆரம்பத்தில் தடவிய இந்திய அணி, 274-க்கு வேகமாகப் பாய்ந்தது. 386 என இலக்கு வைத்து ஸ்ரீலங்காவின் தூக்கத்தைக் கெடுத்தது.

நான்காவது நாள் இறுதிப்பகுதியில் ஸ்ரீலங்கா இரண்டாவது இன்னிங்ஸ் இலக்கைத் துரத்த முனைந்தது. இஷாந்த் ஷர்மாவுக்கு ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைக் கண்டாலே ஏனோ, சூடேறிவிடுகிறது. முதல் இன்னிங்ஸிலேயே ஸ்ரீலங்க பேட்ஸ்மென்களை வறுத்தெடுத்த இஷாந்த், பந்து வீச்சில் அனல் பறக்கவிட்டார். ஸ்ரீலங்கர்களும் அவரை அதி கவனமாக ஆட விரும்பியிருக்கவேண்டும். ஆனால் துவக்க ஆட்டக்காரார்களை துவக்கவே விடவில்லை இஷாந்த். தரங்காவை பூஜ்யத்திலேயே விரட்டிவிட்டார். யாதவ்வும் விக்கெட்டெடுக்க, கேப்டன் கோஹ்லி ஒரே குஷி. 4-ஆவது இடத்தில் அதிரடிக்காக அனுப்பப்பட்டிருந்த தினேஷ் சண்டிமாலின் காரியத்தை 18 ரன்களிலேயே இஷாந்த் முடித்துவிட்டார். இந்திய பௌலர்களின் ஆக்ரோஷம், அவசரம் ஸ்ரீலங்க ரசிகர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. போதாக்குறைக்கு கிராமத்து தேவதை முன் சாமியாடிபோல, தன் தலையில் தானே அடித்துக்கொண்டு சண்டிமாலை கேலிசெய்து வழியனுப்பினார் இஷாந்த். Too much aggression. (இஷாந்த் பேட்டிங் செய்தபோது, ஏற்கனவே ஹெராத், பிரசாத், சண்டிமால் ஆகியோருடன் அவருக்கு சூடான வாக்குவாதம் ஏற்பட்டு அம்பயர் குறுக்கிடவேண்டியிருந்தது).

ஐந்தாவது நாள் ஆட்டம் இந்தியாவின் தொடர்வெற்றி வாய்ப்பு, ஸ்ரீலங்காவின் கடுமையான எதிராட்டம் ஆகியவற்றை பூதாகரமாகத் தாங்கி நின்றது. ரசிகர்கள் சீட் நுனியில் இருந்தார்கள். ஸ்ரீலங்காவின் ஸ்கோர் 5 விக்கெட்டிற்கு 107 ரன் என்கிற நிலையிலும், குசால் பெரேரா, மேத்தியூஸ் திறமையாக ஆடி ஸ்ரீலங்க வெற்றி நம்பிக்கைக்கு வலுவூட்டிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீலங்காவின் ரன்விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. கோஹ்லியின் நெற்றியில் கவலைக்கோடுகள். ஸ்கோர் உயர, உயர ஒரு கட்டத்தில் இருவரும் அவுட்டாகிற மாதிரியே தெரியவில்லை. பிரமாதமாக விளையாடிய கேப்டன் மேத்தியூஸ் சதமடித்தார். பெரேரா அந்தப்பக்கம் அவர்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்.

இஷாந்த், அஷ்வின் இருவரையும் மீண்டும் தாக்குதலில் புகுத்தி, கள வியூகத்தை மாற்றினார் கோஹ்லி. பிட்ச் ஸ்பின் எடுக்காவிட்டாலும், மதியூகமான பந்துவீச்சினால் ஸ்ரீலங்காவைக் குழப்பிக்கொண்டிருந்த அஷ்வின், 70-ரன் அடித்து ஸ்ரீலங்காவின் நம்பிக்கை ஒளியாயிருந்த குசால் பெரேராவின் விக்கெட்டைத் தகர்த்துத் தூக்கி எறிந்தார். திருப்புமுனை. அந்தப்பக்கம் மேத்தியூஸ், இஷாந்தின் இன்ஸ்விங்கருக்கு பலியானார். ஸ்ரீலங்காவின் அரண்மனை தகர்ந்தது. ஆவேசம் காட்டமுயன்ற கடைநிலை ஆட்டக்காரர்கள் அஷ்வினிடம் அடிபணிந்தார்கள். ஸ்ரீலங்காவின் கதைக்கு 268-ல் முற்றுப்புள்ளி வைத்துத் தொடரை வென்றது இந்தியா. கோஹ்லியின் ஆனந்த நாட்டியம் ஆரம்பமானது!

ஆட்ட நாயகனாக செத்தேஷ்வர் புஜாரா அறிவிக்கப்பட்டார். வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையில், ஸ்ரீலங்காவின் பிரசாத், பிரதீப் ஆகியோரின் பிரமாதப் பந்துவீச்சை எதிர்த்து, அபாரமான துவக்கம் தந்தவர் புஜாரா. அவருடையது மறக்கமுடியாத இந்திய இன்னிங்ஸ். அபார சுழல் வீசி, தொடரின் இறுதி இன்னிங்ஸில் 58 ரன் எடுத்து டாப் ஸ்கோர் செய்ததோடு, மொத்தம் 21 ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்கு வெடி வைத்த அஷ்வின் `தொடர் நாயகன்`.

ஸ்ரீலங்காவை லங்க மண்ணிலேயேப் போட்டு நசுக்குவது எந்த ஒரு அணிக்கும் பெரிய சவால்தான். 22 வருடங்களுக்குப் பின், இந்த தொடர் வெற்றி (2-1), இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதற்குமுன் ஸ்ரீலங்காவில், 1993-ல் இந்த நல்ல காரியத்தை செய்தவர் கேப்டன் முகமது அசருதீன். இந்தியா மிகவும் ஆக்ரோஷமாக கிரிக்கெட் ஆடி வென்ற தொடர் இது. பெருமைக்குரியவர் கேப்டன் விராட் கோஹ்லி. அவருடைய தீரா முனைப்பும், அணியினரின் அயராத உழைப்பும் இந்த வெற்றியைக் கொண்டுவந்தது. You and your team deserve all the kudos that are coming up, Virat ! Keep it up. Another big home series against SA is landing shortly !
**

உலகக்கோப்பை: இந்தியா இல்லாத ஃபைனல்

மெல்போர்னில் 29-3-2015-ல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி. இந்தியா இல்லாத ஆட்டம். நிலவில்லா வானம்போல, கனியில்லா மரத்தைப்போல! இது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் சுற்றுப்புறத்திலிருக்கும் எண்ணற்ற இந்திய / இந்திய வம்சாவளி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாரத் ஆர்மி போன்ற இந்திய ரசிகர் அமைப்பினர் ஏகப்பட்ட டிக்கெட்டுகளை இருப்பில் வைத்துக்கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருப்பார்கள். என்ன செய்வது இந்திய அணியின் ஒரு மோசமான தினம் ரசிகர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

சரி, இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கும் இரு பெரும் அணிகளைக் கொஞ்சம் பார்க்கலாம். ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா. பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் most professional team. Presently, Cricket’s most feared team. அணியின் பலம் என பௌலிங்கைக் குறிப்பாகச் சொல்லலாம். மிட்ச்செல் ஸ்டார்க்(Mitchel Starc), ஜோஷ் ஹாசல்வுட்(Josh Hazzlewood), மிட்ச்செல் ஜான்சன்(Mitchel Johnson), ஜேம்ஸ் ஃபாக்னர்(James Faulkner), ஷேன் வாட்சன்(Shane Watson) என துல்லியமும்(accuracy) வகைமையும்(variety) வெகுவாகக் காட்டும் வேகப்பந்துவீச்சாளர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை. போதாக்குறைக்கு, மைதானம் ஸ்பின் எடுக்குமானால், பந்துபோடுவதற்குத் தோதாக க்ளென் மேக்ஸ்வெல்(Glen Maxwell), ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) போன்ற part-time but, effective Spinners. பேட்டிங்கில் டேவிட் வார்னர்(David Warner), மேக்ஸ்வெல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அணியின் சிறப்பு அம்சம். ஒருவேளை விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாற நேர்ந்தாலும், நிதானமாக அணியை அழைத்துச்செல்லும் திறனுடைய, ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் க்ளார்க், ஷேன் வாட்சன் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் உண்டு. பௌலர்களில் ஸ்டார்க், ஜான்சன், ஃபால்க்னர் திறமையாக, தேவைப்பட்டால் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய வல்லவர்கள். இன்னுமொரு சிறப்பம்சம்: அணியில் கிட்டத்தட்ட அனைவரும் சிறந்த ஃபீல்டர்கள். இப்படியொரு அணி இருக்கையில் அது ஃபைனலில் வராதிருக்க முடியுமா? இத்தகைய அணியிடம்தான் இந்தியா தோற்றது.

அந்தப் பக்கம் நிற்பது இன்னொரு host-ஆன நியூஸிலாந்து அணி. பல முயற்சிகளுக்குப்பின் முதன் முறையாக உலகக்கோப்பையின் ஃபைனலில் முகம் காட்டியிருக்கிறது. நியூஸிலாந்து இதுவரை உலகிலுள்ள சுமாரான கிரிக்கெட் அணியாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக நிலைமை மாறி, நியூஸிலாந்து டீம் குறிப்பாக ஒரு-நாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடிவருகிறது. நல்லதொரு பேட்டிங், பௌலிங் காம்பினேஷனோடு நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டிகளுக்கேற்றபடி செட்டாகி உள்ளது. கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) உலகக் கிரிக்கெட்டின் சிறப்பான அதிரடி வீரர்களில் ஒருவர். க்ரிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ்(AB de Villiers), மேக்ஸ்வெல்(Maxwell) வகை. கூடவே அவருடன் ஆட்டத்தைத் துவக்கும் மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptill) நிதானமான துவக்கத்தைத் தரும் அனுபவ வீரர். நிலைமைக்கு ஏற்றபடி, அதிரடிக்கு மாறும் திறமை உண்டு. மிடில் ஆர்டரில் வரும் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர், க்ராண்ட் எலியட்(Grant Elliott, hero of the first Semi-final) ஆகியோர் திறன்மிகுந்த ஆட்டக்காரர்கள். டீமின் பின்ச் ஹிட்டராக(Pinch hitter) வருபவர் கோரி ஆண்டர்சன்(Corey Anderson). அணிக்குத் தேவைப்படுகையில் மிதவேகப் பந்துவீச்சாளராகவும் பயன்படுபவர். மிகவும் துல்லியமாக யார்க்கர்கள்(Yorkers) போட்டு கதிகலங்கவைக்கும் பௌலர் டிம் சௌதீ (Tim Southee). (உலகக்கோப்பையின் லீக் மேட்ச்சில் 7 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தின் முதுகெலும்பை முறித்த ஆசாமி ). அணியின் தலைசிறந்த ஸ்விங் பௌலர் ட்ரெண்ட் போல்ட்(Trent Boult). இவரை எதிர்த்து பேட் செய்வது எதிரணியின் பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம். இவர்களோடு, கைலி மில்ஸ், (Kyle Mills), மைக்கேல் மேக்லெனகன் (Michel Mccleneghan) ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் துணை. மேட்ச்சின் இக்கட்டான நிலையிலும் தன் அனுபவமிக்க, கட்டுப்பாடான சுழல்வீச்சினால் விக்கெட்டுகளை சாய்க்கும்/ ரன்களைக் கட்டுப்படுத்தும் திறனுடையவர் டேனியல் வெட்டோரி(Daniel Vettori). ஃபீல்டிங்கிலும் நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு சளைத்தவர்கள் அல்ல. டாப்கிளாஸ். வேறென்ன தகுதி வேண்டும், உலகக்கோப்பையை வெல்வதற்கு என்றுதான் நியூஸிலாந்து ரசிகர்கள் கேட்பார்கள்.

கிட்டத்தட்ட சம அளவு எதிரிகள் போல் இரு அணிகளும் தென்பட்டாலும், ஆஸ்திரேலிய வீரர்களிடம் தங்களை யாராலும் வெல்லமுடியாது என நினைக்கும் அளவிற்கு, overconfidence பரவலாகத் தென்படும் குணங்களில் ஒன்று. நியூஸிலாந்து போன்ற துடிப்பான வீரர்களைக்கொண்ட, உத்வேகமிக்க டீமுக்கெதிராக ஆஸ்திரேலியாவைக் கவிழச்செய்யும் மனப்போக்குதான் இது.

இன்னொரு விஷயம். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா பார்த்து அலுத்துப்போன நியூஸிலாந்து அல்ல இப்போதிருப்பது. This New Zealand is for real. முதல் 10 ஓவர்களிலேயே தன் அசுரவேக பேட்டிங்கினால் எதிரியைக் கதிகலங்கவைக்கும் மெக்கல்லத்தை ஒரு 15-16 ஓவர்களுக்குள் ஆஸ்திரேலியா எடுக்காவிட்டால், ஆஸ்திரேலியாவின் வீர சரித்திரம் ஒரு முடிவுக்குக்கொண்டு வரப்படும். நியூஸிலாந்தின் போல்ட்-சௌதீ-வெட்டோரி தாக்குதலை ஆஸ்திரேலியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்தது இறுதிப்போட்டியின் கதி. தன் ஒட்டுமொத்த திறமையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா விளையாடும் எனினும், உள்ளுணர்வு ஏதோ சொல்வது போல் தோன்றுகிறதே.. உலகக்கோப்பை நியூஸிலாந்தின் கைகளில்தான் ஜொலிக்கப்போகிறது என்பதுபோல்..! யார் கண்டார்கள், ஒருவேளை அப்படி இல்லாமலும் போகலாம். என்ன அவசரம்.This is cricket’s premier international event. ஒருநாளுக்கும் குறைவான அவகாசம்தானே..பொறுத்திருப்போம், நடக்கப்போவதை ரசித்துப் பார்த்திடுவோம். நாமெல்லாம் கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டின் மஹா மஹோ ரசிகர்களல்லவா!

**