ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சேம்பியன்

ஐபிஎல் 2016-ன் இறுதிப்போட்டியில் (பெங்களூர், 29 மே, 2016) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இறுதிப்போட்டியில் பங்குகொண்ட இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை :அவற்றின் கேப்டன்களான விராட் கோஹ்லியும், டேவிட் வார்னரும் (David Warner) துவக்க ஆட்டக்காரர்கள். தங்கள் அணிக்கு சிறப்பாக துவக்கம் தந்த அதிரடி ஆட்டக்காரர்கள். இருவரின் கடும் முனைப்பு, உழைப்பு, தலைமைப்பண்பு இவைதான் அவர்களின் அணிகளை இறுதிப்போட்டிக்கு இட்டு வந்தது என்றால் மிகையில்லை.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் தந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே குறைவான ஸ்கோரில் வீழ்ந்திருந்தால் ஹைதராபாத் வெல்வது கடினமாகப்போயிருக்கும் 8 பௌண்டரி, 3 சிக்ஸர் என 69 விளாசித் தள்ளி அவுட்டான வார்னர், நெற்றியில் சிந்தனைக்கோடுகளுடன் பெவிலியன் திரும்பினார். தனக்கு அப்புறம் வேறு யாரும் அணியைத் தாங்கிப் பிடிப்பார்களா என்கிற கவலை. பயந்ததுபோலவே, மிடில் ஆர்டர் தடுமாறியது. இருந்தும் யுவராஜ் சிங் நன்றாக ஆடி 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்து ஒவ்வொருவராக வெளியேற, ஒரு சமயத்தில் ஹைதராபாத் 185-ஐத் தாண்டாதுபோல் இருந்தது. பெங்களூரின் ஷேன் வாட்சன் மிக மோசமாக 20-ஆவது ஓவரை வீச, ஹைதராபாத்தின் பென் கட்டிங் (Ben Cutting), அவரைக் கிழித்தெறிந்தார். ஆல்ரவுண்டர் கட்டிங் 15 பந்துகளிலேயே 3 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன் விளாசி, ஹைதராபாத்தை 208 ரன் உச்சத்துக்கு கொண்டுசென்றார். கட்டிங் அடித்த ஹிமாலய சிக்ஸர் ஒன்று ஸ்டேடியத்தையே கடந்து எம்.ஜி.ரோடில் போய் விழுந்தது (117 மீட்டர்).சீரியஸான முகத்துடன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த வார்னரின் முகம் மலர்ச்சி கண்டது.

209 என்கிற இலக்கு எந்த ஒரு அணியையும் அயரவைக்கக்கூடியது. இதனை நேரடியாக சந்திக்க இறங்கினார்கள் பெங்களூரின் விராட் கோஹ்லியும், க்ரிஸ் கேய்லும் (Chris Gayle). இதற்குமுன் பெங்களூர் பெற்ற சிறப்பான வெற்றிகளின் முக்கியமான பேட்டிங் ஹீரோக்கள் கோஹ்லியும், டி வில்லியர்ஸும் (AB de Villers) தான். இந்த இருவரையும் அணியின் Batman, Superman என வர்ணித்திருந்தார் கேய்ல். இதுவரை அவ்வளவு சரியாக விளையாடாத கேய்ல், சின்னஸ்வாமி ஸ்டேடியத்தின் 38000 ரசிகர்களுக்குமுன், அந்த இரவில் ருத்ர தாண்டவம் ஆடினார். ஆக்ரோஷமாக 4 பௌண்டரி, 8 சிக்ஸர்களைப் பறக்க விட்டு பெங்களூர் ரசிகர்களைக் கிறுகிறுக்கவைத்தார். ஒரு சமயத்தில் பெங்களூர் அணி, 11 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்திருந்தது. 38 பந்துகளில் 76 என சீறிய கேய்ல், பென் கட்டிங்கின் வேகப்பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கோஹ்லி சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கோஹ்லியும், கேய்லும் ஆடுகையில் அது ஐபிஎல் போட்டிகளின் முத்திரை பேட்டிங்காகத் தோன்றியது. 209 என்கிற உயர் இலக்கு, எளிதாக எட்டப்பட்டுவிடும் என எல்லோரையும் நினைக்கவைத்தது. இருவரின் வீழ்ச்சிக்குப்பின், அணியை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய ஸ்டார் பேட்ஸ்மன் டி வில்லியர்ஸ், கேஎல்.ராஹுல், ஷேன் வாட்சன் ஆகியோர் தங்கள் முயற்சியில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்விகண்டனர். ஐந்தே ரன்களில் டிவில்லியர்ஸ் அவுட் ஆனபோது, சோனி சேனலில் நவ்ஜோத் சித்துவின்(Navjot Sidhu) கமெண்ட்: `என்ன செய்வது? மனிதர்தான் இவர். கடவுள் இல்லையே!`

அட்டகாசமாக ஆரம்பித்த பெங்களூர் அணி, தடுமாறி முன்னேறியது. இறுதியில் ஜெயிப்பதற்கு, 3 ஓவர்களில் 35 தேவைப்பட்டது. ஸ்டூவர்ட் பின்னியும்(Stuart Binny), க்றிஸ் ஜார்டனும்(Chris Jordan) எதிர்பாராதவிதமாக ரன்–அவுட் ஆகிவிட, பெங்களூர் 200 ரன்கள் வரைதான் செல்ல முடிந்தது. ஹெல்மெட்டிற்குள் பெங்களூரின் சச்சின் பேபி, குழந்தைபோல் அழுவது தெரிந்தது. இருபது வருடம் முன்பு, 1996-ல் பாம்பேயில் நடந்த உலகக்கோப்பை செமி-ஃபைனலில் இந்தியா தோல்வியைச் சந்தித்தபோது, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் வினோத் காம்ப்ளி கண்கலங்கி அழுதது நினைவுக்கு வந்தது!

8 ரன் வித்தியாசத்தில் ஐபிஎல். கோப்பையை முதன்முறையாக வென்றது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கணிசமாகக் குவிந்திருந்த ஹைதராபாத் ரசிகர்கள், பெங்களூரின் இரவில் கூச்சலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர். டேவிட் வார்னரின் சிறப்பான தலைமைப்பண்பு, தனிப்பட்ட உழைப்பு, பௌலர்களின் பிரமாதமான பங்களிப்பு ஆகியவையே ஹைதராபாத்தின் இந்த உன்னத வெற்றிக்குக் காரணம். ஆல்ரவுண்டர் பென் கட்டிங் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

தன் அணியின் கடுமையான உழைப்பே வெற்றிக்குக் காரணம் என்றார் டேவிட் வார்னர். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை சர்வதேசத் தரம் வாய்ந்தவர் எனப் புகழ்ந்தார். ஹைதராபாதின் மெண்ட்டரான(mentor) விவிஎஸ். லக்ஷ்மண், கேப்டன் டேவிட் வார்னர் அணியின் இளம்வீரர்களுக்கு உத்வேகமாகவும், முன்னோடியாகவும் திகழ்பவர் என்றார். ஹைதராபாத் அணியின் சிறப்பான பௌலிங் அந்த அணி வென்றதற்கு முக்கிய காரணம் என்றார் பெங்களூரின் கேப்டன் கோஹ்லி. தொடர் முழுதும் ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் மற்றும் ஆஷிஷ் நேஹ்ரா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். கோப்பையை வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.15 கோடியும், ஃபைனலில் தோற்ற பெங்களூர் அணிக்கு ரூ.10 கோடியும் இந்திய கிரிக்கெட் போர்டு பரிசுகளாக வழங்கியது.

ஐபிஎல்-2016 – சாதனையாளர்கள் :

அதிகபட்ச ஸ்கோர் (அணி): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 248/3 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)
அதிகபட்ச ரன்கள்: விராட் கோஹ்லி(பெங்களூர்): 973. (டேவிட் வார்னர்(ஹைதராபாத்) 848)
அதிகபட்ச சதங்கள்: விராட் கோஹ்லி: 4
அதிவேக அரை சதம்: 17 பந்துகளில் 50 ரன்கள் -இருவர்: க்றிஸ் மாரிஸ் (டெல்லி), கரன் போலார்ட்(மும்பை)
அதிகபட்ச சிக்ஸர்கள்: விராட் கோஹ்லி: 38 (டி வில்லியர்ஸ்(பெங்களூர்) 37)
அதிகபட்ச பௌண்டரிகள்: டேவிட் வார்னர் 88 (விராட் கோஹ்லி 83)
அதிகபட்ச விக்கெட்டுகள்: புவனேஷ் குமார் (ஹைதராபாத்) 23 (17 போட்டிகள்)
அதிகபட்ச விக்கெட்டுகள் (சுழல்பந்துவீச்சு): யஜுவேந்திர ச்சஹல்(பெங்களூர்) 21 (13 போட்டிகள்)

**

கபீர்தாஸ் – தத்துவம், ஆன்மீகம்

கபீர்தாஸின் கவிதைகள் சிலவற்றில் (தோஹா மற்றும் பிற கவிதைகள்), கபீர் தன்னையே அழைத்துச் சொல்வதுபோலவோ அல்லது தன்னையே கேட்டுக்கொள்வதுபோலவோ இருக்கும். இவருடைய வார்த்தைகள் பலமொழிக்கலவையாதலால், மொழியாக்கம் கடினமானது. கவிதைகளைப் படிக்க/புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பதற்காக சிறு சிறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்த முயற்சித்துள்ளேன்.

சமநிலை

சந்தையில் நிற்கிறான் கபீர்
சகலருக்கும் நல்லதையே வேண்டுகிறான்
நண்பன், பகைவன் என்று யாரையும் பார்ப்பதில்லை

**

மனம்

மனதின் இலக்காக மாறிவிட்டாய்
இருக்க மாட்டேன் என்கிறது ஒரு இடத்தில்
கபீர், நீதான் என் செய்வாய் !
இந்த மனம் நிற்பதில்லை ஒரு இடத்தில்
**

என்ன பாவம் செய்ததென தலைமயிரை மழித்து
அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறாய்
மனமெங்கும் மண்டியிருக்கின்றது விஷம்
மனதை ஏன் மழித்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்?
**

மனம் தெளிந்து குளிர்ந்த பின்னே
எதிரி என்போர் யாரும் இல்லை
அகங்காரம் அழிந்தபின்னே
அனைவரும் உறவினர்தாமே
**

தன்னிலை

நீ வளர்ந்து உயர்ந்துதான்விட்டாய் – அதனால் என்ன
பனைமரம் கூடத்தான் உயர்ந்திருக்கிறது, நிழலா தருகிறது?
**

வீணையின் நரம்புகள் அறுந்துவிட்டன கபீர்!
இசைப்பவனும் போய்விட்டான்.
வீணைதான் என் செய்யும்?

(இங்கு வீணை என்பது உடம்பு. இசைப்பவன் என இருப்பது ஆன்மா.)
**

அகங்காரம்

அகம்பாவம் ஒருபோதும் வேண்டாம் கபீர்!
எவரையும் ஏளனம் செய்யவேண்டாம்
உன் சிறுபடகோ ஆபத்தான பெருங்கடலில்
எப்போது சூறாவளி, எப்போது புயல்,
எப்போது எது வரும் யார் கண்டது?
**

நீ எழுப்பிய மாளிகையை
நிமிர்ந்து பார்த்து கர்வப்படாதே
நாளை நீ அதன் கீழே
உன் மேல் வளரும் புல்
**

கொள்வதற்கு குருவின் நாமம்
கொடுப்பதற்கு அன்னதானம்
பணிவதால் கிடைக்கும் உயர்வு
அகங்காரம் தரும் உன் வண்டிக்கு அதிர்வு
**

காலம்

மெல்ல மெல்லச் செல்வாய் மனமே
எல்லாம் காலக்கிரமப்படியே நடக்கும்
நூறு குடம் தண்ணீரை உடன் ஊற்றினாலும்
பருவம் வந்தபின்பே பழங்கள் தோன்றும்
**

நாளை செய்யவேண்டியதை இன்றே செய்
இன்று செய்ய வேண்டியதை இப்போதே
கணநேரத்தில் ப்ரளயமே ஏற்பட்டுவிடுமப்பா
விட்டுப்போனதை நீ எப்போது முடிப்பாய் ?
**

நிலையற்ற நிலை

எந்திரத்தில் அறைபடும் தானியங்களைக் கண்டு கபீர் அழுகிறான்
ஐயகோ! முழுசாக எதுவும் தப்பிக்கப் போவதில்லையே !

(கபீரின் பார்வையில் இந்த உலகில் மனிதர்கள் ஒன்றும் புரியாமல், உய்ய வழி தெரியாது, உலகவாழ்வில் உழல்கின்றனர் துயரப்பட்டு மடிகின்றனர். ஒருவரும் கரையேறமாட்டார் போலிருக்கிறதே என்கிற துக்கம் அவருக்கு. அத்தகைய சிந்தனையில் மேற்சொன்ன வார்த்தைகள்)
**

மலர்பறிக்கும் தோட்டக்காரனைக் கண்டு மருண்டன மொட்டுகள்
மறுநாள் நம் கழுத்தைத் திருகவும் வருவானே இவன் !
**

பேச்சு

கேட்பவருக்கும் சுகம் உமது மனதிற்கும் குளிர்ச்சி
ஏற்படும்படியான வார்த்தைகளேயே பேசுவீர்
**

பாண்டித்யம்

இந்த உலகம் எத்தனையோ கற்றும் ஒன்றும் அறிந்தபாடில்லை
அன்பெனும் ஒன்றைப் படித்தவன் அல்லவா உண்மையில் பண்டிதன்
**

நல்வாழ்வு

ஒரு மாலைக்குள் மடிந்துவிடும்தான்
இருந்தும் அந்த பூவைப்போலவே
மணம்தனைப் பரப்பியே
வாழ்க்கையை வாழ்ந்துவிடு
**

தர்மம், நியாயம்

ஏழையை அபலையை ஒருபோதும் வதைக்காதீர்
வேதனை தாங்காது அவன் பெருமூச்சுவிட்டாலும்
எரித்துவிடும் உடன் அது உம்மை
**

எத்தனைவித மனிதரைத்தான் நீ பார்த்திருக்கிறாய் கபீர்!
கண்டதுண்டா அடுத்தவனைக் குறைகூறாத ஒருவனை?
***

இவ்வுலகில் நீ வந்திறங்கியபோது
எல்லோரும் சிரித்தார்கள், நீ அழுதாய்
உலகைவிட்டு நீ போகும்போதும்
எல்லோரும் சிரிக்கும்படியாக
எதனையும் வாழ்வினில் செய்துவிடாதே
**

அள்ளிக் கொடுத்தவன் குறைந்துபோகமாட்டான்
நீரெடுத்துக் குடித்ததால் குறையாது நதியும்
இதற்கும் மேல் என்னதான் சொல்வான் கபீர் !
**

ஆத்ம விசாரம்

மிகமோசமான மனிதன் யார் எனத் தேடியபோது தென்படவில்லை
மனதின் ஆழத்தில் ஊடுருவி நான் உற்றுநோக்கியபோது
என்னைவிட மோசமானவன் எவனுமில்லை
**

தாசன் என்றென்னை அழைக்கலாகுமா?
தாசனுக்கும் தாசனே நான்
இப்பொதெல்லாம் நான் இப்படித்தான் ஆகியிருக்கிறேன்
காலில் தினம் மிதிபடும் சிறுபுல் போலே

**

சாது, ஞானி என்போர்

சாது என்பவன் ஒரு சந்தன மரத்தைப்போலே
சம்சார சர்ப்பம் சுற்றியிருப்பினும் பாதிப்பு ஏதுமில்லே

(பொருள்: உண்மையான ஞானி, குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ளபோதும் அதன் ஆசாபாசங்களால் பாதிக்கப்படுவதில்லை. எப்படி தன்மேல் சுற்றியிருக்கும் நாகப்பாம்பினால், சந்தன மரம் அதன் விஷத்தைக்கொள்ளாதோ, தன் மணம் இழக்காதோ, அதைப்போலே)
*
*

இறையருளின் பசியில் இருப்பவன் சாது, பொருளுக்காக அல்ல
நிறைபொருளுக்காக பசித்திருப்பவன் எவனோ அவன் சாதுவல்ல.
**

ஞானி என்பவர்
நல்மணிகள் காணப்படும் மகாசமுத்திரம்
ஒருகையளவே எடுத்தேன்
எல்லாம் முத்துக்கள் ரத்னங்கள்!
***

குருவின் கருணை எனக்குக் கிட்டியது
அறிய முடியாததை அறிந்துகொண்டேன்
***

தேடல்

மதுரா, காசி, துவாரகா, ஹரித்வார், ஜகன்னாத் என
சுற்றிச் சுற்றி நீ வந்தாலும்
ஞானியின் அருகாமை, ஹரிபஜன் இன்றி
கிட்டப்போவதில்லை எதுவும்
**

பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்க்கமாட்டாய்
பனைமரத்தில் ஏறி, தெரிகிறானா எனத் தேடுவாய் !
**

குளத்து நீரில் மலரும் அல்லி
நீல ஆகாயத்திலோ வெண்ணிலவு !
எவரெவர் எதெதனை நாடுகின்றனரோ
அததனையே சென்றடைவர் இறுதியில்
**

மெய்ஞானம்

வனத்திலுள்ள மரமெல்லாம் சந்தனமில்லை
படையிலுள்ளோர் அனைவரும் வீரரில்லை
கடலில் கிடப்பதெல்லாம் முத்துக்கள் இல்லை
மனிதர் எல்லோரும் ஞானியர் இல்லை, இல்லை!

(மெய்ஞானம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல; கோடியில் ஓரிருவருக்கு ஒருவேளை வாய்க்கக்கூடும். அத்தனை அரிதானது அது என்பதனை இப்படிச் சொல்கிறார் கபீர்தாஸ்)
**

குடத்திற்குள் இருக்கிறது நீர்
நீரில்லையெனில் நீர்க்குடம் இல்லை
ஞானத்திற்கு மனமே பெரும் தடை- இருந்தும்
மனமில்லையேல் ஞானம் இல்லை!
**

பரம்பொருள்

எள்ளில் எண்ணெய்போலே
கல்லில் நெருப்புபோலே
உன் கடவுள் உன்னுள்ளேதான்
விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள்

(’விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள்’ என்பதற்கு – இந்த உண்மையை உணர, உனக்குள் ஒரு அகவிழிப்பு ஏற்பட்டால்தான் முடியும் என அர்த்தம்)
*
*

நாமம் ஜெபித்தே அவனை ஜெயம்கொள் மனமே
இதுவே மெய்ப்பொருள் காணும் தந்திரம்
ஆயிரமாயிரம் சாஸ்திரங்களைப் படித்துப் படித்து
தலையைப் பிய்த்துக்கொண்டு ஏன் சாகிறாய்?
***

மனிதனால் ஆவது ஏதுமில்லை
கடவுளினால்தான் எல்லாமே
மலையைத் தூக்கிக் கடுகுக்குள் வைப்பான்
கடுகையே மலையாகவும் ஆக்கிடுவான்!
***

தியானம் செய்பவன் யார்? யார் அவன்?
புரிந்துகொண்டால் தியானம் எதற்கு?
**

ஒன்றென்பேன். ஆனால் அப்படித் தெரிவதில்லை
இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும்
’அது’ எதுவோ, எப்படி இருக்கிறதோ
அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும், என்கிறான் கபீர்!
**
(இங்கு, ஆதிசங்கரரின் ’அத்வைத’க் கருத்துக்குள் கபீர் வருவதாய்த் தெரிகிறது. ’ஒன்றென்பேன்’ என்பதில் இரண்டாக, பலவாறாகத் தோன்றினாலும், எல்லாம் ஒன்றே. (திருமூலர்: ஒருவனே தேவன்). பிரும்மம் (பரம்பொருள்/Absolute Truth) ஒன்றே. அதற்குள் அனைத்தும் அடக்கம் என்கிறார்.
’இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும்’ என்பதில் ‘துவைதம்’ அல்ல என்கிறார். அதாவது இரண்டல்ல (duality)-எல்லாவற்றையும் எதிரும் புதிருமாய்ப் பார்ப்பது –இன்பம்-துன்பம், சொர்க்கம்-நரகம், நல்லது-கெட்டது, இரவு-பகல், சரி-தவறு என இரட்டை, இரட்டையாக எல்லாவற்றையும் நோக்கி, சிக்கித் தவிப்பது அல்ல. அப்படிச் சென்றால், அது உண்மைக்குப் புறம்பாகும் என்கிறார் கபீர்.
)
**
நானிருந்தபோது அங்கு ஹரி இல்லை
இப்போதோ ஹரி வந்துவிட்டான் – நானில்லை !
ஒளியை நான் பார்த்துவிட்டபின்
விலகி ஓடிவிட்டது இருளெல்லாம்

(பொருள்: ’நான், நான்’ என நான் அலைந்தபோது, ஹரி (பரப்பிரும்மம்/பரம்பொருள்) என்னிடம் வரவில்லை.
குருவின் அருளால் இப்போது அவன் என்னுள் வந்து இறங்கி விட்டான். அவன் வந்தபின்னே ‘‘நான்’ என்பதாக ஏதுமில்லை)

**

கபீரின் ஆன்மீகத் தாக்கம்

முந்தைய பதிவு – ‘கபீர்தாஸ் – டெல்லி சுல்தானோடு மோதல்’-இன் தொடர்ச்சி:

கபீருக்கு இரண்டு மகன்கள் என்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒருவன் தன் தந்தையின் அறிவுத் தாக்கம் இல்லாதவன். சராசரி மனிதனாகவே வாழ்ந்துவந்தான். ஆனால், அவரது இன்னொரு மகனான கமால், ராம பக்தனாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே சென்று ராமாயணப் ப்ரசங்கம் செய்துவந்தான். கமாலின் இதிகாசக்கதை சொல்லும் விதம் பாமரர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கபீர் தன் ஆன்மீகப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்துவந்தார். தன் நெசவுத்தொழிலை விடாமல் செய்துவந்தார். ஒருமுறை காசியிலிருந்த ராமர் கோவிலிலிருந்து, ராம்லாலாவுக்கு (ராமர் விக்ரஹம்) வஸ்திரம் செய்யச்சொல்லி, கபீர் வீட்டுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள். செய்து தருவதாக ஏற்றிருந்தார்கள் கபீரின் குடும்பத்தினர். கபீர்தாஸ் தன் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தில் ஆழ்ந்திருந்தார். கை மட்டும் விடாது வேலை செய்துகொண்டிருந்தது. மதியம்போல் வீடு திரும்பிய அவருடைய மகன் கமால், அவர் இன்னும் நெய்து கொண்டிருப்பதையும், நெய்யப்பட்ட துணி மிக நீண்டிருப்பதையும் பார்த்தான். தன் தந்தையிடம் ” போதுமப்பா. அந்த ராமர் விக்ரஹம் சிறியது தான்.. நீ நெய்திருப்பது மிகவும் நீளம். போதும். நிறுத்தப்பா” என்றான். அவரும் நெய்வதை நிறுத்தி, அதை அறுத்து, ’வஸ்திரத்தை எடுத்துப்போய் கோவிலில் கொடுத்து வா’ என்றார். துணி நீளமாக இருப்பதை திரும்பவும் சுட்டிக்காட்டினான் கமால். ‘நீ போய் கொடுத்துவிட்டு வா’ என்றார் கபீர் மீண்டும். கமால் வஸ்திரத்தை எடுத்துகொண்டு கோவிலில் கொண்டுபோய் கொடுத்தான். அந்த மென்மையான துணியை ராம்லாலாவின் மீது சுற்றினார் கோவில் பண்டிட்ஜி. வஸ்திரத்தை ராமர் விக்ரஹத்தின்மீது சுற்றச்சுற்ற அது வாங்கிக்கொண்டதாய்ப் பட்டது! நன்றாக சுற்றி அணிவித்ததும் ஒரு அங்குலம் கூட மிச்சமில்லாமல் கனகச்சிதமாக இருந்தது. ராமபிரான் மீது அழகாய் ஜொலித்தது. பண்டிட்ஜி வஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கமால் அசந்துபோனான். வீட்டிற்குத் திரும்பி அப்பாவிடம் நடந்ததை ஆச்சரியத்துடன் சொன்னான். துணி நெய்துகொண்டிருந்த கபீர் நிமிர்ந்து கமாலைப் பார்த்தார்; சொன்னார்: ”நாம் கொடுக்கும் எதுவும் அவனுக்கு அதிகமில்லை”.

தன் குருவின் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டிருந்த கபீர், தன் வாழ்நாள் முழுதும் தன்வீடு தேடி வந்த சாது, சந்நியாசிகளுக்கு அன்னமிட்டு வந்தார். அவர்களை மிகுந்த வாஞ்சையுடன் நடத்தினார். அதனாலேயே ஒரு இடத்தில் இப்படிச்சொல்கிறார்: ‘ சாயி! (கடவுளே), நான் மற்றும் என் குடும்பத்தினர் பசியாறவும், வீடுதேடிவந்த சாது பசியோடு திரும்பிப் போகாமலிருக்கவும், எவ்வளவு தந்தால் போதுமோ, அவ்வளவே கொடு’ என வேண்டுகிறார். கபீர்காலத்திய மெய்ஞானிகளான ஞானதேவரும், நாமதேவரும் கபீரின் வீடுதேடி வந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்திருக்கிறது கபீரின் குடும்பம்.

கபீர் துணிவிற்கச் சந்தைக்குச்செல்லும்போதெல்லாம், அங்குவரும் சாதாரண மக்களை, வியாபாரிகளை எல்லாம் பார்த்துப் பேசுவதும், கேட்டவருக்கு நிலைமைக்கு ஏற்றபடி அறிவுரை கூறுவதும் உண்டு. அவருடைய போதனைகள் மற்றும் கவிதைகள் மக்கள் புழங்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டவை. அவருடைய கவிதைமொழி என்பது ஹிந்தி, போஜ்புரி, ப்ரஜ் பாஷா, அவதி, ராஜஸ்தானி ஆகிய பேச்சுமொழிகளின் (dialects) கலவை. சத் விஷயங்கள், தத்துவக் கருத்துக்கள் அவருள் வசன கவிதைகளாய் வடிவம் பெற்று வாய்மொழியாய் வந்தவை. எழுதப்பெறாதவை. அவரோடு தினசரி அளவளாவிய சாதாரண மனிதர்களாலும், அவரது பிற்காலத்திய சீடர்களாலும், மனதில் கொள்ளப்பட்டு, ரசிக்கப்பட்டு, சுவாரஸ்யமான கதைகள் போல, வாய் வழியாக, சொல்வழக்காக மற்றவர்க்கு இவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இப்படித் திரட்டப்பட்டதுதான் ‘தோஹா’ எனப்படும் அவருடைய ஈரடி வெண்பாக்கள், சாகி (Saakhi) (sanskrit : Saakshi – witness) எனப்படும் கவிதைகள்.

இறுதி உண்மையான பரப்பிரும்மத்தின் நேரடி அனுபவ நிரூபணமாக ‘சாகி’ கவிதைகள் கபீரின் வழிவந்தவர்களால் கொள்ளப்படுகின்றன. ‘சாகி’ யை மனனம் செய்வதும், பாடுவதும், அதன் வரிகள் காட்டும் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமே ஒருவனை ஆன்மீக உயர்தளத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்புகிறார்கள். இவையும் மற்றவையும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு பிற்காலத்தில் வெளியிடப்பட்டன. கபீருடைய சிஷ்யர்களுள் முக்கியமானவர்களான பாகோதாஸ் (Bhaagodas), தர்மதாஸ் என்கிறவர்களே கபீரின் வாய்வழிக்கவிதைகளத் தொகுப்பதில் பிரதான பங்கு வகித்தவர்கள். கபீரின் காலத்தில்தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பும் வலிமையும் பெற்றது. சீக்கியர்களின் 5-வது குருவான, குரு அர்ஜுன் சிங் கபீரின் கவிதைகளை ஆழ்ந்து கற்று, அதன் உண்மைத்துவத்தில் மயங்கியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை (சுமார் 500 கவிதைகள்) சீக்கியர்களின் புனிதநூலான ‘குரு க்ரந்த்சாகிப்’ பில் குரு அர்ஜுன் சிங் சேர்த்தார்.

ஆழமான ஆன்மீகத்தை, கடினமான தத்துவத்தை எளிதான வார்த்தைகளில், ரத்னச்சுருக்கமாகத் தருவதில் வல்லவர் கபீர். அன்றைய சமய, சமூகவாதிகளுடன் முரண்பட்டிருப்பினும், ’சத்’ விஷயங்களை நேரடியாக, நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன ஆன்மீகவாதி கபீர்தாஸ். மதச்சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் இருந்த பகட்டையும், பாசாங்கையும், போலித்தனங்களையும் சாடினார் கபீர். ’கடவுள் ‘காபா’ விலோ (மெக்கா), கைலாசத்திலோ இல்லை; உனக்குள்தான் இருக்கிறான். முடிந்தால் தேடி அறிந்துகொள்!’ என்று அதிரடியாகச் சொன்னதால் மரபுவழி முஸ்லிகளும், இந்துக்களும் இவர்மீது கடும்கோபத்தில் இருந்தனர்.

சந்த் கபீர்தாஸின் இறுதிக்காலம் இப்படிக் கழிந்ததாகக் கூறப்படுகிறது:

காஜிகளும் மௌல்விகளும், ஹிந்துப்பண்டிதரில் பலரும் அவரை விமரிசித்துவந்தாலும் – அவருடைய இறுதிக்காலத்தில், பெரும்பாலான ஹிந்துக்களாலும், தெய்வநம்பிக்கையுடைய எளிய முஸ்லிம்களாலும், இஸ்லாமின் உயர் பிரிவினரான சுஃபிக்களாலும், ’மெய்ஞானி’ என அடையாளம் காணப்பட்டு போற்றப்பட்டார் கபீர். காசியைவிட்டு வெளியேறிய கபீர், மகரில் (Maghar village, near Gorakhpur) 1518-ல் காலமானபோது, அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்பதில் ஹிந்து, முஸ்லிம் இனத்தவரிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த சூடான வாக்குவாதத்தினிடையே கபீரின் புன்னகை முகம் தோன்றியதாகவும், அவர்களை சண்டைப்போட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது, சடலத்தைப் போர்த்தியிருக்கும் துணியை விலக்கிப் பார்க்குமாறு சொல்லி மறைந்தாராம் கபீர். குழப்பத்துடன் இருதரப்பினரும் துணிவிலக்கிப் பார்த்தபோது, உடம்பு இருந்த இடத்தில் மலர்க்குவியல் இருந்திருக்கிறது. பரவசமான இருதரப்பினர்களும் அவரவர் முறைப்படி கபீரை வணங்கி, ஒருபாதியை அவர்களும், மறுபாதியை இவர்களும் எடுத்துக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் ஒடினார்கள் எனவும் கூறப்படுகிறது !

சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் மிகுந்த கபீரின் வாழ்க்கை இப்படி இருக்க, இனி நாம் அவருடைய கவிதைகளுக்குள் கொஞ்சம் சென்று அவர் என்ன சொன்னார், அதை எப்படிச்சொன்னார் என அறிய முயற்சிப்போம் (தொடரும்)

**

கபீர்தாஸ்: டெல்லி சுல்தானோடு மோதல்

முந்தைய பதிவுகள் ‘’காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?’, ’கபீர்தாஸ்-ஆன்மீகத் தேடல்’-ஆகியவற்றைத் தொடர்ந்து:

மனதினில் உண்மை அன்பின்றி, உத்வேகமான ஆன்மீகத் தேடுதல் இல்லாமல், வெறுமனே சாஸ்திரம் அறிந்த பண்டிதர் என்றும், மௌல்வி, முல்லா, காஜி என்றெல்லாம் தினம் பேசித் திரிவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இதைவிட படிக்காத, ஒன்றும் தெரியாத, ஆனால் தன் கடமையை ஒழுங்காக செய்பவன், அவன் ஒரு வண்ணானோ, தச்சனோ, தொழிலாளியோ, சாதாரண குடும்பஸ்தனோ யாராக இருப்பினும், அவன் இறைவனின் அருகில் இருப்பவன் என்றார். இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களால் மௌல்விகளும், காஜிகளும், ஹிந்து பண்டிதர்களில் சிலரும் இவர்மீது கடும் எரிச்சல் கொண்டனர். மதவாத முஸ்லிம்கள் இவரை ’காஃபிர்’ (மத நம்பிக்கையற்றவன்/ கோழை) எனத் தாக்கினர். இதற்கு கபீர், வாயில்லா ஜீவன்களைக் கொல்பவனும், அடுத்தவர் சொத்தை அபகரிப்பவனும், வெளிவேஷம்போட்டு,ஏய்த்து வாழ்பவனே காஃபிர் என்றுத் திருப்பித் தாக்கினார்.

கபீரின் புகழ் பாமரர்களிடையும், மெய்யறிவு தேடுபவர்களிடமும் பரவப் பரவ, அவருக்கு எதிரிகள் அதிகமானார்கள். கண்மூடித்தனமான சம்பிரதாயங்கள், சடங்குகளைத் தாக்கியதும், மதப்பிரசாரகர்களின் போக்கிலிருந்து விலகி, முரண்பட்டு, நேரிடையாகக் கடவுள்பற்றிய, தத்துவ உண்மைகளை சாதாரணர்களுக்கு போதித்ததும் இதற்குக் காரணம். ஒரு ஹிந்து குருவின் சிஷ்யர் கபீர் என்கிற உண்மையும், தன் கவிதைகளில் அல்லா எனக் குறிப்பிடாமல், அங்கங்கே ராம் என்றும் ஹரி என்று குறிப்பிடுவதும் இவர்களின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது. இதனால் இஸ்லாமிய மௌல்விகளும், காஜிக்களும், அப்போது ஆண்டு வந்த டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் அவன் காசி வருகைதந்தபோது முறையிட்டனர்.

சிக்கந்தர் லோடி ஆஃப்கானிஸ்தானின் புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவன். கொடுங்கோலன். எதிரிகளை இம்சிப்பது, அவமானப்படுத்துவது என ஆனந்தம் கொள்பவன். இவனிடம் காஜிக்களும் மௌல்விகளும், “அல்லாவுக்கும், இஸ்லாமுக்கும் எதிராகச் செயல்படுவதாக” கபீருக்கு எதிராகக் கொளுத்திப்போட்டனர். சிக்கந்தர் லோடி-கபீர் சந்திப்பு இவ்வாறு செல்கிறது:

கபீரை இழுத்துவர ஆணையிடுகிறான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னைக் கூட்டிச்செல்ல வந்த சுல்தானின் ஆட்களிடம் கபீர் கூறுகிறார்: ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என் பிழைப்பிற்காக நெய்கிறேன் துணிமணி,. நான் எதற்கு உங்கள் சுல்தானின் தர்பாருக்கு வரவேண்டும்? ” அதற்கு வந்த காவலர்கள் சொல்கிறார்கள்: “எல்லோரும் உனக்கு எதிராகக் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். உன் அம்மாகூட சுல்தானிடம் உனக்கெதிராகக் கூறியிருக்கிறாள். நீ வந்துதான் ஆகவேண்டும். இல்லை என்றால் கட்டி இழுத்துப்போவோம்”. கபீர் பதிலாக “ உங்கள் பாதுஷாவைக்கண்டு எனக்கு பயமில்லை. அரசனும் பிச்சைக்காரனும் எனக்கு ஒன்றுதான். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், உங்களுடன் வருகிறேன்” என்று சொல்லி ஆயத்தமாகிறார். சாதாரணமாக ஒரு முஸ்லிம் பெரியவரைப்போல் முகத்தில் சிறுதாடி, தலையில் ஒரு சிறுதொப்பியுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து நெய்து கொண்டிருக்கும் அவர், இன்று கொஞ்சம் விசேஷமாக மாறுகிறார்: தலையில் ஒரு நீலநிற டர்பன் -அதில் ஒரு மயிலிறகு வைத்துக்கொள்கிறார். கழுத்தில் ஒரு துளசிமாலை. நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டு!” வாருங்கள் போகலாம்! ” எனக் கிளம்பினார் கபீர்.சுல்தானின் ஆட்கள் அவரைக்கூட்டிப் போவதைப் பார்த்த, விஷயம் கேள்விப்பட்டவர்களும் கலவரமாகி, அவர் பின்னே செல்கின்றனர்.

காசியின் பொது இடம் ஒன்றில் தன் தர்பாரோடு உட்கார்ந்திருக்கிறான் சுல்தான். அவன் முன் நிறுத்தப்படுகிறார் கபீர். கூட வந்திருக்கும் சிறு கூட்டம் கண்டு குழம்பி சுல்தான் கேட்கிறான் காஜியிடம்: ”யார் இவர்கள் எல்லாம்?”. காஜி சொன்னான் :”அவர்கள் கபீரின் பேச்சை தினம் கேட்பவர்கள். அவருடைய ஆதரவாளர்கள் போல் தெரிகிறது.”. சுல்தான் அலட்சியமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டு கை காட்ட, காஜி கபீரிடம் சொல்கிறான்: ”ஓ! மஸ்தானா! இது நம் பாதுஷா ! உன் தவறுக்கு பாதுஷா முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேள். கருணை உள்ளம் கொண்ட பாதுஷா உன்னை மன்னித்துவிடுவார்!”

கபீர் கேட்கிறார்: ‘பாதுஷாவா? எந்தமாதிரி பாதுஷா ! ஒரே ஒரு பாதுஷாவைத்தான் எனக்குத் தெரியும். அவன் என்னுள்ளே இருக்கும் ராம். அவனே கருணை உள்ளவன். பாதுஷாவைப் பிச்சைக்காரனாக்கவும், பிச்சைக்காரனை பாதுஷாவாக்கவும் தெரிந்தவன். எல்லாம் வல்லவன். அவனையே பணிபவன் நான்!”.

சுல்தான் சிக்கந்தர் லோடி மேலும் குழப்பமடைந்து காஜியிடம் கேட்கிறான்: “ இங்கே என்ன நடக்கிறது? எந்தவிதமான பேச்சுவார்த்தை இது?” கபீரின் பதிலால் எரிச்சலுற்றிருந்த காஜி மன்னனுக்கு பதில் சொல்கிறான்: “ பாதுஷா ! இவன் உங்களைப் பணிய மறுக்கிறான். யாரோ ’ராம்’ என்கிறான். அவனைத்தான் பணிவானாம்! “ சுல்தானுக்குக் கோபம் வெறியாய் மாறுகிறது. முதல்தடவையாகக் கபீரை நேருக்கு நேர் பார்க்கிறான்; உறுமுகிறான்:

”டேய் ! நீ இனி உயிரோடு இருக்கமாட்டாய் ! எந்த ராம் வந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று பார்த்துவிடுவோம்”. கபீர் பதிலாக சில வார்த்தைகளை இறைவனை நினைத்துச் சொல்கிறார். சுல்தான் வெறியுடன், ”ஏய்! நீ நரகத்துக்குத்தான் செல்வாய்!” தன் படைவீரர்களைப் பார்த்து “ இவனை மரக்கட்டைகளோடு சேர்த்துக்கட்டுங்கள். இந்த நதியில் வீசுங்கள்!” என்று கர்ஜிக்கிறான். அருகில் கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரர்கள் சுல்தானின் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். சுல்தானும், காஜியும், கோழிச்சொன்ன அடிப்பொடிகளும் குஷியாகப் பார்த்திருக்க, கபீரோடு வந்தவர்கள் அரண்டு போயிருந்திருந்தார்கள், மரக்கட்டைகளுடன் கபீர் சங்கிலிகளால் கட்டப்பட்டு கங்கையில் வீசப்படுகிறார். பார்க்கிறார்கள் எல்லோரும். கட்டை சடக்கென அமிழ்ந்து பின் நீர்மட்டத்தில் மெல்ல எழுகிறது. கொஞ்ச நேரத்தில் மேலே ஏதோ அசைவு… சங்கிலிகள் பிரிந்துகொள்ள, கபீர் எழுந்து உட்கார்ந்து கொள்வது தெரிகிறது! படகு போல் கட்டை மிதக்கிறது. ஜலாசனம் தெரிந்தவர் கபீர்!

சுல்தான் பதற்றத்தோடு பார்த்திருக்க, காஜி அலருகிறான்: ”பாதுஷா! இவன் ஒரு மஹா மாயாவி! சித்து வேலைகளில் கெட்டிக்காரன். இவனை இப்படியெல்லாம் கொல்ல முடியாது. நெருப்பில் போட்டால்தான் சாவான்” என்கிறான். கபீர் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார். மீண்டும் கட்டப்பட்டு, கட்டைகள் எரிய, அதில் கிடத்தப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் கட்டைகள் எரிந்து முடிந்தன. நெருப்பு அணைந்தது. புகைமண்டலம். ஆனால் கபீருக்கு ஒன்றும் ஆகவில்லை. சுல்தான் அரண்டு போய் காஜியைப் பார்த்து சீறுகிறான். காஜி ஒரு உபாயம் சொன்னான் இப்போது: ”நம் படையில் ஒரு வெறிபிடித்த யானை இருக்கிறது. அதனை உபயோகித்து சிலரை நாம் கொன்றிருக்கிறோம். இவனைக் கீழே கிடத்தி யானையை மிதிக்கவிட்டுத் தீர்த்துவிடுவோம்!” . சுல்தான் சம்மதிக்க, போதைபானம் கொடுத்து வெறியேற்றப்பட்ட யானை கொண்டுவரப்படுகிறது அங்கே. கட்டப்பட்டிருக்கும் கபீர் தரையில் கிடத்தப்பட்டிருக்க, வெறிபிடித்த யானையை ஏவுகிறான் யானைப்பாகன் சுல்தானின் உத்தரவுப்படி. யானை பயங்கரமாகப் பிளிறுகிறது. கபீரை உற்றுப் பார்க்கிறது. அதன் கண்களில் ஒரு மிரட்சி. ஏதோ கொடிய சிங்கம் ஒன்றைக் கண்டதாய் யானை மிரண்டு பின்னோக்கி நகர்கிறது. எத்தனைதான் பாகனால் ஏவப்பட்டும், பயந்து பிளிறியது. வேகமாகப் பின்வாங்கியது.

சுல்தானின் குருவான ஷேக் டாகி என்பவன் நடந்தவற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். விஷயம் தெரிந்தவன். சித்து, யோகநிலைகளைப்பற்றி ஓரளவு அறிந்தவன். குனிந்து சுல்தானின் காதுகளில் சொல்கிறான். “ கபீர் உண்மையில் சக்தி வாய்ந்த ஒரு ஃபகீர். அல்லாவின் கருணை அவருக்கு நிறையவே இருப்பதாகத் தெரிகிறது பாதுஷா! அவரைக் கொல்ல உங்களால் முடியாது. அவரைப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்வதே நல்லது. இல்லையெனில் கபீரைப்போன்ற ஃபகீரினால் பெரும் ஆபத்து உங்கள் ராஜ்யத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் உயிருக்கேகூட ஆபத்து வரலாம்!”.ஷேக் டாகி இப்படியெல்லாம் பேசுபவனில்லை. ஒரேயடியாக மிரண்டான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னை சுற்றித் தலை குனிந்து நின்றிருந்த காஜியையும், மௌல்விகளையும் திட்டி விரட்டிவிட்டான். கபீரை உடனே கட்டிலிருந்து விடுவிக்கச் சொன்னான். தன் இருக்கையில் இருந்து பயந்துகொண்டே எழுந்தான். கபீரின் முன்னே அடியெடுத்து வைத்து அவரைப் பணிந்து, “இந்தக் காஜியும் , மௌல்விகளும் முட்டாள்கள்! தங்களைப்போன்ற சாது, சன்த்துக்களை(sants) அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு வேண்டிய பொற்காசுகள், இருக்க இடம் தருகிறேன். தவறுக்கு என்னை மன்னித்தருளுங்கள்!” என்று பயந்துகொண்டே நைச்சியமாகச் சொன்னான். கபீர் நிதானமாக அவனைப் பார்த்தார். சொன்னார்: ”நீ சொன்னபடி இவற்றையெல்லாம் உன்னால் தரமுடியும். இருந்தும் இவை எதுவும் எனக்கு அவசியமில்லை. நீ உன்பாட்டுக்குப் போ. நான் என்வழியில் செல்கிறேன்!” என்றார். தன்கூடவந்தவர்கள் மகிழ, அவர்களுடன் வீடு திரும்பினார்.
(தொடரும்)

கபீர்தாஸ்: ஆன்மீகத் தேடல்

(‘காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?’-விலிருந்து தொடர்ச்சி..)

கபீரின் கவிதைகளுக்குள் நுழையுமுன், அவருடைய ஆன்மீகப் பயணத்தின் ஆரம்ப அத்தியாயத்தைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

15-ஆம் நூற்றாண்டில் பனாரஸ் எனப்படும் இன்றைய வாரணாசி (காசி) உன்னதமாயிருந்தது. அங்கு ஹிந்து, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதங்களைச் சார்ந்த சாஸ்திரம் அறிந்த, கற்றறிந்த பண்டிதர் நிறையப்பேர் வசித்துவந்தனர். சாதுக்களும், சந்நியாசிகளும் ஏகாந்தமாய் சுற்றித்திரியும் ஊரானது அது. கூடவே முல்லாக்களும், மௌல்விகளும், சித்துவேலை செய்பவர்களும், யோகிகளும் ஏகமாய் நடமாடிய காலம். வசதியாய் வாழும் குடும்பத்துச் சிறுவர்கள் நல்ல ஆச்சார்யர்களிடம், குருக்களிடம் கல்வி பயில அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பப்பட தன் குடும்பநிலை அனுபதிக்காதபோதும், நல்லதொரு குரு தனக்கு வேண்டுமே, குருவின்றி அவனை அறிவதெப்படி என அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே தவிக்கிறான் கபீர். அம்மா, அப்பாவின் பேச்சைக்கேட்டு, அவர்களுக்கு உதவியாக வீட்டுத்தொழிலைச் செவ்வனே செய்துவந்தாலும், அவன் உள்ளம் தேடுதலைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது. குருவேயே சிந்தனைக் கருவாகக் கொண்ட அவன் மனம், கிடைக்காத குரு நினைந்து அன்றாடம் அல்லலுற்றது.

அப்போது காசியில் ஸ்ரீராமானந்த தீர்த்தர் என்னும் ஆச்சார்யர் வாழ்ந்துவந்தார். பேருக்கேற்றபடி சீரிய ராம பக்தர். எளிய வாழ்வும் ராம ஜபமும் தவிர, வேறு ஒன்றும் அறியாதவர். அவருடைய உன்னத பக்தியும், பாடம் கற்றுத்தரும் முறையும் அவருக்கு புகழ் சேர்த்தது. கற்றோரும், சாதாரண மக்களும் அவரை காசியின் உயர்ந்த குரு என மதித்தனர், போற்றினர். இதுபற்றியெல்லாம் ப்ரக்ஞை ஏதும் இன்றி எளிமையாய் அவர் வாழ்ந்து வந்தார். தன் சிஷ்யர்கள் சிலருக்கு ஆன்மீகப் பாடங்கள் கற்பித்துவந்தார். சிறுவனான கபீர்தாஸ் ஸ்ரீராமானந்தர்பற்றிக் கேள்விப்பட்டு மனம் மிக மகிழ்ந்தான். எப்படியும் அவருடைய சிஷ்யனாகி, உபதேசம் பெற்றுவிடவேண்டும் என்கிற வேட்கை அவன் மனதில் தீயாய்ப் பற்றிக்கொணடது.

தான் ஒரு முஸ்லிம் குடும்பத்திலிருந்து வந்தவனாயிற்றே, பாலபாடம் கூட பயிலாதவனாயிற்றே, தன்னை ஸ்ரீராமானந்தர் சிஷ்யனாக சேர்த்துக்கொள்வாரோ என்கிற அச்சமும், கவலையும் சிறுவனான கபீரிடம் இருந்தது. ராமானந்தரின் சிஷ்யர்கள் , பெரும்பாலும் பிராமண அல்லது ஹிந்து உயர்குலப்பிள்ளைகள். நகரின் ஒதுக்குப்புறத்தில், ஒரு மரத்தின் அடியில் மாலையில் கூடி அவர் வருகைக்காகக் காத்திருப்பார்கள். அப்படி ஒருநாள் காத்திருக்கையில், மரங்களின் பின்புறத்திலிருந்து நிழலோடு நிழலாக வெளிப்பட்டான் சிறுவன் கபீர். அந்த குருவின் சிஷ்யர்களின் கடைசி வரிசையில் தான் போய் உட்கார்ந்து கொள்ளலாம், பாடம் கேட்கலாம் என நினைத்து, தயங்கித் தயங்கி முன்னேறினான். அவனைக் கவனித்துவிட்ட குருவின் சிஷ்யர்கள், அவனுடைய முஸ்லிம் தோற்றம் கண்டு குழம்பி, ‘’டேய்! யார் நீ! ஏன் இங்கே வந்திருக்கிறாய்?’ என்று எரிச்சலுடன் கேட்டனர். அதற்கு கபீர், தான் அவர்களின் குருவிடம் தன்னை சிஷ்யனாக ஏற்குமாறு வேண்டிக்கொள்ள வந்திருப்பதாகவும், அவரிடம் பாடம் கற்க விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூறினான். இதைக்கேட்ட அவர்கள் பெரிதாகச் சிரித்துக் கபீரைக் கேலி செய்ததோடு “ நீயெல்லாம் இங்கே வரப்படாது. போ..போய்விடு உடனே ” எனத் துரத்திவிட்டனர். அவமானமும் அழுகையும் மேலிடக் கபீர்தாஸ் அந்த இடம் விட்டு அகன்றான். வீடு செல்லவும் மனமில்லாமல், என்ன செய்வது இனி என்கிற மன உளைச்சலில் கங்கைக்கரைப் பக்கம் சென்றான். அங்கே படித்துறையில் உட்கார்ந்து, அலைந்து திரியும் சாதுக்களை, தியானத்திலிருந்த சந்நியாசிகளை, நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு ஒரு குரு கிடைக்கும் பாக்யமே இல்லையோ என நினைத்து் மனம் வெம்பி அழுதான். பொழுது போகப்போக, பசியும், தூக்கமும் மேலிட, படியிலேயே படுத்து உறங்கிப்போனான்.

மாலை பாடம் எடுத்த ராமானந்தரிடம், முஸ்லிம் சிறுவன் ஒருவன் அவருடைய சிஷ்யனாக முயன்ற கதைபற்றி அவருடைய சிஷ்யர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. இரவு வீடு திரும்பிய அவர் ஒரு மாதிரி உணர்ந்தார். படுத்தபின்னும் சரியாகத் தூக்கம் வரவில்லை. பின்னிரவின் சிறுதூக்கத்தில், கனவு ஒன்று கண்டார் ராமானந்தர். அதில் அழகான, தேஜஸ் மிகுந்த முகத்துடன், துடிப்பு மிக்க இரண்டு இளைஞர்கள் தன் வீடு விட்டு வெளியேறியதாகத் தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தார் ராமானந்தர். வீடு விட்டு அகன்ற சகோதரர்கள் போல கனவில் வந்தவர் யார்? ராம, லக்ஷ்மணர்களா அவர்கள்? செய்வதறியாது குழம்பினார். ஏதாவது பகவத் அபச்சாரம் (கடவுட்குற்றம்) நிகழ்ந்துவிட்டதோ என நெஞ்சில் பயம் கொண்டார். மேலும் தூக்கம் பிடிக்காமல், ஸ்நானம் செய்து வருவோம் என அவ்வதிகாலையில் கங்கைக்கரை நோக்கிச் சென்றார் அவர். இருள் இன்னும் சரியாக விலகாத நிலையில் குளித்துறைப் படிக்கட்டுகளில் தடுமாறி இறங்கினார் ராமானந்தர். திடீரென எதையோ மிதித்துவிட்டதாகப் பதற்றமடைந்த அவர், ‘ஹே ராம்! ஹே ராம்!’ என்று அவன் பெயரைச் சொல்லியவாறே இன்னும் இருந்த இருளினால், சரியாகப் பார்க்கமுடியாமல் தண்ணீரை நோக்கிச் சென்றார். அவர் பாதம்பட்ட, தூங்கிக்கொண்டிருந்த சிறுவனோ, திடீரென விழித்தெழுந்து, தன்னைக்கடந்து செல்பவர் ஸ்ரீராமானந்தர் என உணர்ந்து தெய்வதரிசனம் கண்டதாய் பரவசமானான். “ஹே ராம்! ஹே ராம்! எனத் தானும் சொல்லியே அவர் போகும் திசைநோக்கிக் கைகூப்பினான் சிறுவனான கபீர்.

அன்று மாலை ராமானந்தரின் வருகைக்காக அவருடைய சிஷ்யர்கள் காத்திருந்தபோது, தூரத்தில் ஏதோ நிழலாடியது. வந்துகொண்டிருப்பது அதே முஸ்லிம் சிறுவன் எனக்கண்டு, சினம் கொண்டு சிஷ்யர்கள் விரட்ட முயன்றனர். இந்தமுறையோ கபீர் அங்கிருந்து நகல்வதாக இல்லை. குருவைத் தரிசிக்காமல் தான் செல்வதற்கில்லை என்று அடம்பிடித்து அங்கேயே இருந்தான். வயதான குருவும் வந்துசேர்ந்தார் கொஞ்ச நேரத்தில். சிஷ்யர்கள் கபீரை தள்ளிக்கொண்டுபோய் அவரெதிரே நிறுத்தினார்கள். அப்பாவிச் சிறுவனுக்கெதிராகப் போட்டுக்கொடுத்தார்கள். ராமானந்தர் கோபமுற்றார். ”யார் நீ? எதற்காக இங்கு வந்து தொல்லை தருகிறாய்?” என்று சிறுவன் கபீரிடம் வினவினார் குரு. அதற்குப் பதிலாக, தான் அவரையே குருவாக மனதில் கொண்டிருப்பதாகக் கூறிய கபீர், முதல்நாள் மாலையும், அன்று அதிகாலையும் நடந்தவற்றை மெல்லப் பணிவுடன் கூறினான். அவர் பாதம் தன் மேல் பட்டதால் குருவின் பாத தீட்சை தனக்குக் கிடைத்துவிட்டதாகவும், அவர் சொன்ன ராம நாமமே தனக்கு குருவிடமிருந்து தரப்பட்ட மந்திரமாகத் தன் மனதில் கொண்டு, அதை ஜெபித்தே, அவரிடம் வந்துள்ளதாகவும் சொன்னான். சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமானார் ராமானந்தர். இருந்தும், முகத்தில் கோபம் காட்டி, ’இதுதான் குருவிடம் வந்தடைகின்ற முறையா’ எனக் கேட்டார். குருவின் கோபம்கண்டு பயந்த சிறுவன், அவர் பாதம் பணிந்து, தான் ஒன்றும் அறிந்திராதவன் என்றான்; எனினும் தான் கூறியது அனைத்தும் உண்மைதான் என்றும் சொல்லிக் கலங்கிய கண்களுடன் அவர் முன் கைகட்டி நின்றான் கபீர். கோபம் தணிந்த ராமானந்தர் சிறுவனைக் கூர்ந்து நோக்கினார். ஏதோ உள்ளுணர்வு தாக்க, அவர் மனம் கனிந்தது. அவனை மற்ற சிஷ்யர்களுடன் உட்கார்ந்து பாடம் கேட்க அனுமதி அளித்தார். இதுவே என் பாக்யம் என மனதில் நினைத்து குருவை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, மற்றவர்களுடன் உட்கார்ந்து கொண்டான் கபீர். அவர் சொல்லிக்கொடுத்த ராம மந்திரத்தை மனதில் தீபமென ஏற்றினான். அவரையே தெய்வம் எனக்கொண்டது அவனுடைய பிள்ளை உள்ளம். அவருடைய போதனைகளை வெறும் வார்த்தைகளாகக் கேட்காமல், உணர்வுபூர்வமாகக் கேட்டறிந்து, விரைவிலேயே குருவின் ஆத்மார்த்தமான சிஷ்யர்களுள் ஒருவனாக மாறினான் சிறுவன் கபீர். இப்படித் துவங்கியது கபீர் தாஸின் ஆன்மீகப் பயணம்.

ஸ்ரீ ராமானந்தரின் உபதேசத் தாக்கம் கபீரின் மனதை எப்போதும் நிறைத்திருந்தது. தன் குருவை நினைத்து சில கவிதைகளில் அவர் உருகுவது தெரிகிறது. ஒரு முறை இப்படி ஒரு சிந்தனை அவர் மனதில் எழுந்து திடுக்கிடவைத்தது: ”குருவும், கோவிந்தனும் (பரம்பொருளைச் சொல்கிறார்) ஒருசேர, ஒரே நேரத்தில் என்முன் தோன்றிவிட்டால், நான் யாரை முதலில் வணங்குவேன்? ஐயகோ! யாரை முதலில் வணங்குவேன்!’ எனச் சிந்தித்துப் பதறுகிறது அவர் மனம். பிறகு சட்டெனத் தெளிந்து அவரே தொடர்கிறார்: ”குருவுக்குத்தான் என் முதல் வணக்கம். ஒன்றும் அறிந்திராத இந்த அப்பாவிக்கு கோவிந்தனைக் காட்டியவர் அவரே அல்லவா?” என்கிறார். (தொடரும்)

**

காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?

க்யூபாவின் தலைநகரான ஹவானாவில் வசித்திருந்தபோது, அங்கே அபூர்வமாகத் தென்பட்டு பழக்கமாகியிருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டுக்குப்போயிருந்தோம். ஆர்.எஸ்.பாண்டே. ராதே ஷ்யாம் பாண்டே? சரியாக நினைவில்லை. உத்திரப்பிரதேச ஆசாமி. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மனைவி மீனா பாண்டே. சுவாரஸ்யமான ஜோடி. எனது மனைவியும் உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்தவள், படித்தவள் என்பதால் ஒரு நெருக்கம், affinity உண்டாகியிருக்கலாம். (மீனாஜியின் தந்தை ஒரு ஹிந்தி மொழி அறிஞர். ஆனால் மீனா பாண்டேயிடம் சாகித்யம் நெருங்கவில்லை.) அவர்கள் வீட்டிலோ, எங்கள் வீட்டிலோ சந்திக்கையில், மீனாஜியும் என் மனைவியும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் அவர்களது வீட்டுக்குச்செல்கையில், அவரது வீட்டு பால்கனியில் அமர்ந்து க்யூபாவின் ’க்ரிஸ்தால்’ கொஞ்சம் அருந்திக்கொண்டு, நானும் பாண்டேயும் பேசிக்கொண்டிருப்போம். ஏதேதோ பொதுவான விஷயங்களுக்கிடையில், க்யூபாவின் கடல் எல்லைக்குள் ONGC-யின் சர்வதேசப்பிரிவான OVL (Overseas Videsh Ltd) –ன் ஆழ்கடல் எண்ணெய் வள ஆய்வு பற்றி, க்யூப அரசு நிறுவனங்களுடனான கலந்தாடுதல், அதில் உள்ள தீராசிக்கல்கள்பற்றியெல்லாம் பேச்சு சுற்றிவரும்.

இப்படி நாங்கள் ஒரு மாலை பேசிக்கொண்டிருக்கையில், இந்த இரண்டு பெண்மணிகளும் சமையற்கட்டில் சமோசா செய்துகொண்டே, சாப்பாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவிஷயத்தில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. என்ன அது? கபீர் தாஸ்! பனாரஸ் எனப்படும் காசியில், 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்ஞானி. அந்தக் காலகட்டத்திலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான, அதனால் பல சிரமங்களுக்குள்ளான தத்துவவாதி.

உத்திரப்பிரதேசத்தின் 60,70-களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் கபீர்தாஸின் பாடல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவை தன்மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதாகவும் என் மனைவி சொல்வாள். அப்போதெல்லாம் அதன் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை என்றும், இப்போது அவை உள்ளார்ந்த பொருள் கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும் அடிக்கடி சொல்வதுண்டு. தோஹா (doha) எனப்படும், பாமரனுக்கும் ஆன்மிகம் சொல்லும் கபீரின் ஈரடி வெண்பாக்கள் வடநாட்டின் சாதாரண மக்களிடையே பிரசித்தமானவை. பேச்சுமொழி வழக்கில் கலந்து பரவியவை. இன்றும் காலங்கடந்து சிரஞ்சீவியாக உள்ளவை; ஆத்மார்த்தமாய் பேசப்படுபவை. சீக்கிய மதகுருக்களால் தங்களின் புனித நூலான குருக்ரந்த் சாஹிப் (Gurugranth Sahib) –இலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன கபீரின் தத்துவ, ஆன்மிகப் பாடல்கள்.

அந்த மாலையிலும் என் தர்மபத்தினிதான் கபீரை எடுத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. இடையிலே மீனாஜி பதில் சொல்வது காதில் விழுகிறது: “கபீரின் ஞானத்தைப்பற்றி நீங்கள் எவ்வளவு பேசுகிறீர்கள். எனக்கென்னவோ அவர் ஒரு முட்டாள் எனத் தோன்றுகிறது!“

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்!“ என்றாள் என் மனைவி திடுக்கிட்டு.

“பின்னே என்ன? காசியில் இறந்தால் மோட்சம் என்பார்கள். கடைசிகாலத்தைக் காசியில் கழித்து அங்கேயே உயிர்விடவென எத்தனையோ பேர் இன்றும் காசிக்கு வருகிறார்கள். கபீர் காலமெலாம் காசியிலேயே வாழ்ந்தவர். தன் கடைசிகாலத்தில் அப்பேர்பட்ட காசியை விட்டுவிட்டு, எங்கோ மூலையில் ஒரு கிராமத்தில்போய் வாழ்ந்து அங்கேயே உயிரைவிட்டாரே.. முட்டாள் என்று சொல்லாமல் இவரை வேறென்ன சொல்லி அழைப்பது !“

என் மனைவி நிதானமாக மீனாஜிக்கு விளக்குவதைக் கேட்டேன். காசி நகரம், மோட்சம் அருளும் விஸ்வநாதர் வீற்றிருக்கும் இடம். காசியின் ஸ்தல விசேஷத்தைப்பற்றித் தெரியப்படுத்த, வலியுறுத்த அவ்வாறு கூறப்பட்டது. இது சராசரி மனிதர்களுக்காகக் சொல்லப்பட்டதே ஒழிய, தன்னை உணர்ந்த ஞானியருக்கு இது பொருந்தாது. ஞானநிலைபெற்று ஜீவமுக்தி அடைந்தோருக்கு எல்லா இடமும் ஒன்றுதான், புனிதஸ்தலம் என்பதாக தனியாக ஏதுமில்லை- என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். இருந்தும், திருமதி. பாண்டேயின் தலைக்குமேலேதான் இவை பயணித்திருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். ஆன்மிகம் இப்படி இருக்க, அவர் செய்திருந்த லௌகீக சங்கதிகளான சமோசாவும், சட்னியும், ஹவானாவின் அந்த இதமான மாலையில் பிரமாதமாகத்தான் இருந்தன.

சரி, கபீர்தாசரிடம் வருவோம். முறையான படிப்பறிவில்லாதவரான கபீர், இளம் வயதில் தனக்கொரு நல்ல குரு கிடைக்கவேண்டுமே என ஏங்கியவர். இறுதியில், காசியில் அப்போது மிகவும் மதிக்கப்பட்ட ஞானகுருவான ஸ்ரீ ராமானந்தரிடம் சேர்ந்து தீட்சை பெற்றார். இவருடைய பாடல்கள், கூற்றுகளில் ராம், கோவிந்த் என்றெல்லாம் வார்த்தைகள் பரம்பொருளைக் குறித்து வந்தாலும், ஒரு மரபுவழி இந்திய ஞானி அல்லர் கபீர். மாறாக மரபுகள், சடங்குகளை, கண்மூடித்தனமான பின்பற்றுதலை, விமரிசித்தவர்; எள்ளி நகையாடியவர். காசியில் அப்போது ஹிந்து, இஸ்லாமிய சமயத்தினர் அதிகம் வசித்து வந்தனர். ’இறுதி உண்மை’ எனப்படும் பரப்பிரும்மம், பரம்பொருள்பற்றி அறிந்துகொள்வதற்கான கடும் சிரத்தை, ஆழமான தேடல் இன்றி, வெறுமனே சாஸ்திரங்களையும், புனிதநூல்களையும் படித்துவிட்டுத் தன்னைப் பண்டிதர் என்றும், மௌல்வி என்றும், ஆன்மிக வழிகாட்டி எனவும் கூறித் திரிந்தவர்களைக் கடுமையாகச் சாடினார் கபீர்தாஸ். ஆதலால், ஹிந்து மதத்தினர், இஸ்லாமியர் என இருதரப்பினரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்; விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். ஆனால் அதுபற்றிப் பெரிதாக அவர் பொருட்படுத்தியதில்லை.

ஒரு ஏழை நெசவுத்தொழிலாளியாக, ஒரு குடும்பஸ்தனாகக் காலம் கழித்த கபீர், காசியின் சந்தைத் தெருக்களில், முச்சந்திகளில் எங்காவது உட்கார்ந்து எதையாவது கதைத்துக்கொண்டிருப்பார். வாயைத்திறந்தாலே வசனகவிதைகள் தெறிக்கும். ஆன்மிக, தத்துவ முத்துக்கள். சிந்தனையைச் செம்மைப்படுத்தும் வார்த்தைகள், அதுவும் பாமரர்களின் புழக்க மொழியில், சுவைதரும் சொல்வழக்கில். படிப்பறிவில்லாத பாமரர்கள், வியாபாரத்திற்காக சந்தைக்கு வருபவர்கள் என பல தரப்பினரும் கபீர் முன் கூடி அவர் என்ன சொல்கிறார் என ஆவலோடு கேட்பது வழக்கம். பண்டிதர்களும்கூட தொட பயப்படும் இவ்வளவு உயர்ந்த, தத்துவார்த்த கருத்துகளை, படிப்பறிவில்லா சாதாரணர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில், விதத்தில் கபீரைத் தவிர வேறு யாரால் கூறமுடியும்?

இப்படி அவர் பாடிய பாடல்கள், வாய்மொழியாக மக்களிடையே வெகுவாகப் பரவின. பிராபல்யம் அடைந்தன. நாளடைவில் சீரான மொழிவடிவம், அச்சுவடிவமும் பெற்றன. கபீர் தாசரின் புகழ்பெற்ற ‘தோஹா’ எனப்படும் இரண்டடிக் கவிதைகளிலிருந்து சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம் .
(தொடரும்)

**

ஜீவிதம்

கொழுந்துவிட்டு சீறுகிற நெருப்பு
எரித்தழித்தல் என் ஆக்கம்
திணிப்பதாக கிண்டுவதாக கிளறுவதாக
கோபமுண்டு உன் மீது – இருந்தும்
உன் செயலின் சீண்டுதலில்
ஊழித்தீயென உயர்கிறேன்
வளர்கிறேன் அழிக்கிறேன்
வானத்தையும் பூமியையும்
ஜுவாலையால் இணைக்கிறேன்

**