இந்தியா, கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 24-8-15-ஆம் தேதியன்று, 278 ரன் வித்தியாசத்தில், ஸ்ரீலங்காவை வீழ்த்தித் தொடரை சமன் செய்தது. முதல் டெஸ்ட்டையும் இந்தியா வென்றிருக்கவேண்டும். ஆனால் முதல் மூன்று நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, 4-ஆவது, 5-ஆவது நாட்களில் தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஸ்ரீலங்காவின் தினேஷ் சண்டிமாலின் (Dinesh Chandimal) புத்திசாலித்தனமான பேட்டிங், கடைசி நாள் விளையாட்டில் இந்திய பேட்ஸ்மன்களின் மோசமான ஆட்டம் – போன்றவை, இந்தியாவின் கைப்பிடியிலிருந்த மேட்ச்சை ஸ்ரீலங்காவிற்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. அந்த அதிர்ச்சித் தோல்வியிலிருந்து விரைவிலேயே விடுபட்டு, இரண்டாவது டெஸ்ட்டை முனைப்போடு இந்திய அணி ஆடி வெற்றி கண்டதற்கு, கேப்டன் கோஹ்லியின் ஆக்ரோஷமான முன்னெடுப்பு நடவடிக்கைகள், வியூகங்களே முக்கியக் காரணம்.
`அதிகபட்ச ரன்கள், 20 விக்கெட்டுகள், வெற்றியை நோக்கிய அதிரடி முன்னேற்றம்` என்கிற விராட் கோஹ்லியின் எளிதான, ப்ராக்டிக்கலான கிரிக்கெட் சித்தாந்தத்தின் விளைவு இந்த வெற்றி. இத்தகைய கொள்கையை அவர் கொண்டிருப்பதோடு, தன் அணியினரையும் அதை நம்பவைத்து, அதற்காக அவர்களைக் கடுமையாக உழைக்கும்படிச் செய்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம்.
சர்வதேச அளவில் சிறப்புமிகு ஆட்டக்காரர்களில் ஒருவரும், ஸ்ரீலங்காவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனும் ஆன குமார் சங்கக்காரா(37), இந்த டெஸ்ட் மேட்ச்சுடன் தன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டார். அவருக்கான `வழியனுப்பு டெஸ்ட்`(Farewell Test)-ஐப் பார்க்க, விடைதந்து கௌரவிக்க, ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுடன, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கொழும்பு பி.சரவணமுத்து ஸ்டேடியத்தில் இருந்தனர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மேட்ச்சில், ஸ்ரீலங்கா இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றது ஸ்ரீலங்கர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தந்திருக்கும். என்ன செய்வது? கிரிக்கெட் எந்த ஒரு அணிக்கும், எந்த நேரத்திலும் திடீர் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது தெரிந்ததுதானே !
இந்த வெற்றிக்கு இந்திய அணியின் கூட்டுமுயற்சி காரணம் எனினும் அஷ்வின், மிஷ்ரா ஆகிய ஸ்பின்னர்களின் பங்களிப்பு சிறப்பானது. இருவரும் 14 ஸ்ரீலங்கா விக்கெட்டுகளைக் கபளீகரம் செய்தார்கள். துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராஹுல், முரளி விஜய்யின் பங்களிப்பும் பாராட்டத் தகுந்தது. ராஹுல் முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக சதம்(108) அடிக்க, முரளி விஜய் இரண்டாவது இன்னிங்ஸில் 82 அருமையான ரன்களை எடுத்து நல்ல துவக்கம் தந்தார். அஜின்க்யா ரஹானே பொறுப்பாக ஆடி, தன் பங்குக்கு ஒரு சதம் சேர்த்துக்கொண்டார்(126). கோஹ்லி, ரோஹித் ஷர்மா, சாஹா ஆகியோரின் ஆட்டமும் இந்திய அணிக்கு `ப்ளஸ்`. இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த முள்முனைப் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்குத் துணையாக மறுமுனையில் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்து வீசினார்கள்.
வெற்றி அணியின் இரண்டு பேர், கடைசி போட்டியில் காயம் காரணமாக ஆடமாட்டார்கள். அவர்கள்: துவக்க வீரர் முரளி விஜய், விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா. கர்னாடகாவின் கருண் நாயரும், மத்தியப்பிரதேசத்தின் நமன் ஓஜாவும் இவர்களுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கேப்டன் கோஹ்லி பேசியிருப்பதைக் கவனிக்கையில், செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) மூன்றாவது டெஸ்ட்டில், துவக்க ஆட்டக்காரராக இறங்கலாம் எனத் தெரிகிறது. சாஹாவுக்கு பதில், நமன் ஓஜா (Naman Oja) விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.
கோஹ்லி & கம்பெனி அடுத்த மேட்சிலும், கிரிக்கெட் வியூகத்துடன், சிறந்த உழைப்பு, வெற்றிக்கான முனைப்பு காட்டினால், ஸ்ரீலங்காவை லங்க மண்ணிலேயே வீழ்த்தி, டெஸ்ட் தொடரை வெற்றிகொண்ட பெருமையைத் தட்டிச் செல்லலாம். கேப்டன் கோஹ்லிக்கு இருக்கிறதா அந்த யோகம்? இன்னும் இரண்டே நாட்கள்தான். புதிய காட்சிகளுக்குத் தயாராகுங்கள்!
**