பங்களாதேஷின் மீர்பூரில் நேற்று (27-2-2016) நடந்த ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. `இந்தியா-பாகிஸ்தான் க்ளாசிக்` என இரண்டு நாடுகளின் மீடியாவினால் வெகுவாக பில்டப் கொடுக்கப்பட்ட மேட்ச். உண்மையும் அதுதான். இந்த இரண்டு நாடுகளும், சர்வதேச போட்டிகளில் எப்போதாவதுதான் மோதுகின்றன. ஆதலால் இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சம். இவர்கள் மோதினால் களத்தில் அனல் பறக்கும். பறந்தது நேற்றும்.
Hottest match of the Asia Cup. மேட்ச் ஆரம்பிக்குமுன்பே இருதரப்பிலும் வீரவசனங்கள் வீசப்பட்டன. இந்திய பேட்டிங்கை திணறவைப்பதற்கென பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டினால் வடிவமைக்கப்பட்டது மீர்பூரின் க்ரீன்பிட்ச். ஆசியகோப்பையின் முதல் மேட்ச்சில் இந்தப் பிட்ச்சிலேயே, ரோஹித், பாண்ட்யாவின் அதிரடியால் இந்தியா 166 ரன்கள் விளாசியது. தாக்குப்பிடிக்க முடியாமல், தான் விரித்தவலையில் தானே சிக்கி உயிரைவிட்டது பங்களாதேஷ். அதே க்ரீன் பிட்ச் இன்றும் மிரட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சுக்குப் புகழ்பெற்ற டீம் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. வகாப் ரியாஸ், முகமது சமி, முகமது இர்ஃபான். கூடவே, சூதாட்டத்தில் சிக்கி, சில ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த முகமது ஆமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில். அவரது அதிவேகப்பந்துவீச்சு, கூர்மையானது, சவாலானது என்பதை இந்தியர்கள் அறிந்தே இருந்தார்கள். இந்தியாவை க்ரீன் பிட்ச்சில், வேகத்தினால் நொறுக்கத் திட்டமிட்டிருந்தது பாகிஸ்தான்.
டாஸை வென்ற தோனி, பாகிஸ்தானை முதல் பேட்டிங்குக்கு அனுப்பினார். பாகிஸ்தான் அசால்ட்டாக இறங்கியது. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்படி? 35 வயதான ஆஷிஷ் நேஹ்ரா. கர்வம் மிகுந்த பாகிஸ்தானிகளுக்கு, அனுபவமில்லாத புதுக் கன்னுக்குட்டிகளாகத் தோன்றிய பும்ரா, பாண்ட்யா. பூ! இவ்வளவுதானா? இன்னிக்கு இந்தியாவை நொறுக்கிருவோம் என்கிற மிதப்பில் இருந்தனர் பாகிஸ்தானிகள். அவர்கள் ஆட்டத்தை துவக்கிய விதம் அதனைச் சொல்லிற்று. நேஹ்ரா முதல் விக்கெட்டை எளிதாக தூக்கியும், பாகிஸ்தான் ஸ்கோர் வேகமாக 20-ஐத் தாண்டியது. அந்த சமயத்தில், பாகிஸ்தான் அறிந்திராத ஜஸ்ப்ரித் பும்ராவின்(Jasprit Bumrah) பந்துவீச்சின் துல்லியம் பாகிஸ்தானின் மனதில் திகிலைக் கிளப்பியது. அவருடைய குழப்பும் ஆக்ஷன், வேகம், யார்க்கர் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தானின் வயிற்றைப் பிசைந்தது. 22-வது ரன்னில் இரண்டாவது பாகிஸ்தான் விக்கெட்டை பிடுங்கினார் பும்ரா. அவருடைய 3 ஓவர்களில், 2 ஓவர்களைப் பாகிஸ்தானிகளால் தொடக்கூட முடியவில்லை. மெய்டன் ஓவர்கள். சுழலுக்கு மீர்பூர் மைதானம் துணைபோகாது. எனினும் ஜடேஜா, யுவராஜ் சிங், அஷ்வின் இறக்கப்பட்டனர். ஜடேஜா ரன் கொடுப்பதில் கஞ்சன் ஆனார். 2 விக்கெட்டுகளையும் கைபற்றினார், பாகிஸ்தானின் நிலைமை மோசமாகியது. ஜடேஜா, கோஹ்லி இவர்களின் ஃபீல்டிங் மைதானத்தில் தூள் கிளப்பியது. குர்ரம் மன்சூரும், டி-20 ஸ்பெஷலிஸ்ட்டான பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரிதியும்(Shahid Afridi) வேகமாக ரன்–அவுட்செய்யப்பட்டனர். மத்திய, கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவின்(Hardik Pandya) பந்துவீச்சு அபாரம். 3 விக்கெட்டுகளை சுருட்டி எறிந்தார். பாக். விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது மட்டுமே சிறப்பாக ஆடி 25 ரன் சேர்த்தார். தட்டுத்தடுமாறி 83 ரன்னெடுத்து சுருண்டது; இந்தியாவை நினைத்து மருண்டது பாகிஸ்தான்.
84 என்கிற எளிதான இலக்குடன் ஆட வந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி, ஆமீரின் வடிவில் காத்திருந்தது. 147 கி.மீ வேகம், யார்க்கர், இன்-ஸ்விங்கர் என அனல் கக்கினார் ஆமீர். துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே இருவரையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல், முதல் ஓவரிலேயே வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன், ரெய்னா ஒரு முட்டாள்தனமான ஷாட்டை உயர அடித்து கேட்ச் கொடுத்து இந்தியாவின் தலைவலியை அதிகப்படுத்திவைத்தார். விராட் கோஹ்லியோடு சேரவந்தார் யுவராஜ் சிங். முகமது இர்ஃபான், முகமது ஆமீர் ஜோடியின் பிரமாத பந்துவீச்சு இருவரையும் தடுமாறவைத்தது. பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் நன்றாக அமைந்துவிட, ரன்கள் வர சண்டித்தனம் செய்தது. பௌண்டரி, சிக்ஸர் எல்லாம் அடிக்கமுடியும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. ஆமீரின் துல்லியவேகம், ஷார்ட்-பிட்ச் பௌலிங்கினால் யுவராஜுக்கு மூச்சு போய் வந்தது. அவர் நின்று விளையாடினார் என்பதைவிட, நாட்டியமாடினார் என்று சொல்லலாம். ஆமீர், இர்ஃபான், ரியாஸ் இவர்களின் ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு குனிவதும், வளைவதும், நெளிவதுமாக பொழுதைப்போக்கினார் யுவராஜ். அடுத்த முனையில் வாய்ப்புக்காகக் காத்திருந்த கோஹ்லி, ஆமீரின் கடைசி ஓவர், ரியாஸின் ஆரம்ப ஓவர்களில் திடீரெனப் பட்டாசாய் வெடித்தார். பௌண்டரிகள் பறந்தன. அவருடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் க்ளாசிக் க்ரௌண்ட் ஷாட்டுகளால், சரிந்திருந்த இந்திய ரசிகர்கள் எழுந்து உட்கார்ந்தனர். மூவர்ணக்கொடிகள் மீண்டும் உயர்ந்தன; அசைந்தன.
49 ரன்களில் கோஹ்லி அவுட்டாகையில் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது.ஹர்தீக் பாண்ட்யா பூஜ்யத்தில் காலியாக, தோனி வந்தார். அடித்தார் பௌண்டரி. வெற்றி மேடையில் இந்தியா ஏறி நின்றது. விராட் கோஹ்லி ஆட்ட நாயகன்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சில் தான் கில்லாடி என மீண்டும் நிரூபித்தது. எங்கள் பேட்டிங் இதற்கெல்லாம் சளைத்ததல்ல என்று நெஞ்சை நிமிர்த்தியது இந்தியா. விராட் கோஹ்லி குறிப்பிட்டதுபோல், உலகின் அருமையான வேகப்பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானின் முகமது ஆமீர் ஒருவர் என்பதை நேற்றைய போட்டி காண்பித்தது. இந்திய புதுமுகங்களான பும்ராவும், பாண்ட்யாவும் ப்ரெஷர் மேட்ச்சுகளிலும் தங்களால் வெளுத்துவாங்கமுடியும் எனச் சாதித்துக் காட்டினர். இந்த டி-20 மேட்ச்சில் ஒரு விசித்திரம்: இரண்டு அணியிலிருந்தும் ஒரு சிக்ஸர்கூட வரவில்லை! இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் க்ளாசிக் பசித்திருந்த ரசிகர்களுக்கு அமோக விருந்தாக அமைந்து விட்டது.
**