அது  அடியேனால் முடியாது

 

வந்தது கோபம் அவளுக்கு. ’இது என்ன, தினமும் ஒரே ஊர் வம்பாப்போச்சே.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி வந்து ஏதாவது குற்றம் சொல்லிட்டுப்போறா.. யார்யாருக்குத்தான், எத்தனைதான் பதில் சொல்வது? போனால்போகிறதுன்னு இனிமேல் விடமுடியாது. இப்பிடி விட்டுத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கு.  இப்பவே இதுக்கு  ஒரு வழி பண்ணிடறேன்..’ என்று உள்ளே போனாள். பெரிய கயிறை எடுத்துக்கொண்டுவந்தாள். அம்மாவின் பரபரப்பு நடவடிக்கைகளைப் பரிதாபமாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் அப்பாவிப் பிள்ளை. தன் சிறுபாலகனின் அழகுசிந்தும்  முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்  தாய்.  வெண்ணெய் திருடியவனை இன்று தண்டித்தே ஆக வேண்டும். கொஞ்சம் பார்த்தாலும் கோபம் போய்விடுமே! கோபமிகுதியால், பிஞ்சு உடம்பில் அழுந்த, கயிறைச் சுற்றிக் கட்டினாள். அவனை இழுத்துக்கொண்டுபோனாள். அம்மாவின் இழுப்புக்கேற்றவாறு சின்னக்கால்களால் தடுமாறிக்கொண்டே வேகவேகமாக நடந்தான் பால்மணம் மாறாப் பாலகன். அங்குமிங்கும் பார்த்தவளின் கண்களில் உரல் ஒன்று தென்பட, அதோடு சேர்த்து பையனைக் கட்டிவிட்டாள். அவனை ஏறிட்டும் பார்க்காமல், குறையாத கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே போனாள் அம்மாக்காரி.. வேறு ஏதோ காரியமாய்.

உரலோடு பிணைக்கப்பட்டவன் உலகளந்தவனாயிற்றே. பொடியனாக இருந்தால் என்ன! கண்களை உருட்டி அம்மா போய்விட்டாள் என்பதை உறுதிசெய்துகொண்டான். வயதை மிஞ்சிய சக்தியோடு உரலை அனாயாசமாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் இரண்டு மருதமரங்கள் பக்கம் பக்கமாக நின்றுகொண்டிருந்தன. அந்த இடுக்குக்குள் புகுந்தான். வெளியே வந்தான். உரல் மாட்டேன் என்றது. மாட்டிக்கொண்டது. திரும்பிப் பார்த்தவன் தன் பலத்தால் ஒரு இழு இழுக்க, மரங்கள் அதிர்ந்தன. முறிந்தன. விழுந்தன. குபீரென அவற்றிலிருந்து வெளிப்பட்டார்கள் இரண்டு இளைஞர்கள். யாரவர்கள்?  சாபம் ஒன்றினால் மருதமரமாய்ப் பிறக்குமாறு விதிக்கப்பட்டவர்கள். சாபம் கொடுத்தது? எல்லாம் நாரத மகரிஷிதான். பாலகிருஷ்ணனால் சாபவிமோசனம் என அருளப்பட்ட, குபேரனின் குமாரர்கள்தான் இப்படி வெளிவந்தார்கள். நன்றியறிதலோடு குழந்தைக் கிருஷ்ணனைக் கைகூப்பி வணங்கினார்கள். மெல்லச் சிரித்தான் கள்ளமிகு சிறுவன். சுய உருவம் பெற்ற சுகத்தில், வானத்திலேறி மறைந்தார்கள் இருவரும்.

இந்த நிகழ்வை ’கோபால விம்ஸதி’ (Twenty verses on Gopala) என்கிற தன் படைப்பின் பாசுரமொன்றில் (பாசுரம் 7) குறிப்பிட்டு, இப்படி மரமாகச் சபிக்கப்பட்ட குபேரனின் குமாரர்களை சாப விமோசனம் செய்த குழந்தையே, பெருமானே! உன்னை தியானிக்கின்றேன். உனது திருவடியில் அடியேனின் வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்’ எனச் சொல்லி நிறுத்துகிறார் வேதாந்த தேசிகன்.

பொதுவாக இந்தமாதிரி சுவாரஸ்யமான கதைகளை, அழகாக, அற்புதமாக வர்ணிக்கும் கவியாயிற்றே அவர்.. இவ்வளவு சுருக்கம் ஏன் எனக் கேள்வி வரும், அவரது பாசுரங்களைப் படித்து அனுபவித்திருப்பவருக்கு.  ’அளவிலா சக்தியையுடைய ப்ரும்மமாகிய உன்னை, கோபத்தில் இப்படிக் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டாளே உன் தாய் யசோதை. அதனைச் சொல்லமுயன்றேன். ஆனால், அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறதே.. அதனை வர்ணிப்பதா? என்னால் முடியாது. எனக்கு அந்த சக்தியில்லை அப்பா..’ என்று நந்தகோபாலனிடம் சொல்கிறார் வேதாந்த தேசிகன் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

**

நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது

 

 

முதுகிலேறிய  பையும்

மொபைல்திரையில் கண்ணுமாய்

முறுவலித்தோ முணுமுணுத்தோ

முன்னால் ஊரும் வாலிபங்கள்

முறுக்கோடு நடந்துபார்க்கும் பெரிசுகள்

முக்குகளில் முட்டவரும் ஆட்டோக்கள்

பஞ்சவர்ணப் பளபளப்பாய்க் கார்கள்

பிஞ்சுமுகங்களை அள்ளிக்கொண்டு

மஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி

குறுக்குமறுக்குமாய் டூ-வீலர்ப் பிசாசுகள்

குப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்

மாநகராட்சியின் வேலைக்கார யுவதி

வியப்போடு பார்த்துக்கொண்டு ஓரத்தில்

வெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை

**

நீங்களும் இவ்வுலகில் …

 

இங்கிதம் தெரிந்த நண்பர்கள்.  நம்மில் பலருக்கு அதற்குத் தகுதியில்லை என்றாலும்,  எப்போதும் விஸ்வாசம் காட்டுபவர்கள். ஒன்றும் தராவிட்டாலும் ஓரவஞ்சனை செய்யாதவர்கள். அவர்களில், சிலருக்குத்தான் இருக்க வீடுண்டு, கொஞ்சுவதற்கு மனிதருண்டு. பலருக்குப் படுக்கக்கூட சரியான இடமில்லை. அன்போடு பார்க்கவும் யாருமில்லை. இன்னல்பல இருந்தாலும் இதமானவர்கள். இந்தப் பெரிய உலகில், சிறிய உருவோடு ஓரமாக அலைபவர்கள். மனிதன் சலிப்போடு ‘சீ! போ.. அந்தப் பக்கம்!’ என்று எரிந்து விழுந்தாலும், முகம் சுழிக்காதவர்கள், மனதில் வைத்துக்கொள்ளாதவர்கள். கொஞ்சம் தள்ளி நின்று அவனையே ஆர்வத்தோடு பார்ப்பவர்கள். அபலைகளாக இருக்கலாம். ஆனால் அன்பு தெரிந்த உயிர்கள்..

கிராமத்தில் வளர்ந்த இரு நாய்களின் நினைவு தட்டுகிறது. உன்னதமான உயிர்கள். எப்போதும் நேசம். விடாத பாசம். இறுதிவரை. பெங்களூரில் காலை நடையின்போது சில நாய்களை கவனித்திருக்கிறேன். யாராலும் வளர்க்கப்படாதவைகள். தெருநாய்கள். இருந்தாலும் ஒரு கட்டிடத்தையோ கடை வாசலையோ சார்ந்தே அவை இருக்கின்றன. அதன் வாயிலில்தான் படுக்கும். பகலில் உலவிக் கண்காணிக்கும். யார் நியமித்தது? தனக்குத்தானே தன் பணியென நியமித்துக்கொண்டு அந்த இடத்தின் பாதுகாப்பிற்கென விசுவாசமாக இருக்கும் நாய்கள். கடந்து செல்லும் மனிதர்களைக் கவனிக்கும். வேறு நாய்கள் அந்த இடத்தில் கடந்தால் குலைக்கும். ’’போ ..அந்தப்பக்கம்.. இந்தப்பக்கம் வராதே! இது என் ஏரியா’ என்பதுபோல். ஒரு ஏடிஎம் வாசலில் கொஞ்சம் வழிவிட்டு, ஒரு நாய் அமர்ந்திருக்கிறது. அது ஏடிஎம்-இன் காவலாளியின்பால் விசுவாசத்துடன் இருக்கிறது, அந்த இடத்தோடு தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டதாய், அமர்ந்திருக்கிறது என்பது தெரிகிறது. அந்த செக்யூரிட்டி எப்போதாவது பிஸ்கட் போடுவாரோ? இருக்கலாம். ஆனால் அந்த நாய் அங்கேதான் படுக்கிறது. கண்காணிக்கிறது. சம்பளமில்லா ஆனால்,  விஸ்வாசம் கோடிக்கோடி எனக் காண்பிக்கும் அப்பாவி ஜீவன். பல சமயங்களில் காவலாளி தன் டூட்டியிலிருந்து அம்பேல்! நாயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அங்குமிங்கும் கவலையின்றி சுற்றிவிட்டு எப்போதாவது திரும்பி வந்து தன் நாற்காலியில் உட்காருவார். நாய் நகலாது அந்த இடத்தை விட்டு. இது என் இடம். இதனைப் பார்த்துக்கொள்வது என் கடமை என வரித்துக்கொண்டுவிட்டது மனதில். அங்கேயே பழியாய்க் கிடக்கும். தூங்காது கணமும். வயிற்றில் பசியோடு வருவோர், போவோரைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒரு நாள். காலை நடையிலிருந்து வீடு நோக்கித் திரும்புகையில் ஒரு காட்சி. சாலையின் இடப்புறம் வரிசையாக அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுகள், அவற்றின் வண்ண, வண்ண  கேட்டுகள். அத்தகைய ஒரு காம்ப்ளெக்ஸ் வாசலில், நின்றுகொண்டிருக்கும் காவலாளி அங்கிருக்கும் ஒரு நாய்க்கு பிஸ்கெட் போடுகிறான். அது ஆனந்தமாய் சாப்பிடுகிறது. மேலும் மேலும் அதன்முன் தூக்கிப் போடுகிறான். அடுத்தக் கட்டிட வாசலில் இன்னுமொரு நாய். சாம்பல்நிறத்தில் ஒல்லியாய்.. நல்ல பசியில் இருக்கிறதுபோலும். இந்தப் பக்கம் நடக்கும் பிஸ்கெட் வினியோகத்தை ஆவலோடும் ஏக்கத்தோடும் பார்க்கிறது. தன்னையறியாமல் அதன் கால் மேல் தூக்குகிறது, நடக்க எத்தனிப்பதுபோல்.  ஒரு கணம். அந்த கேட்டுக்குப்போய் நாமும் ஒரு பிஸ்கெட் வாங்கி சாப்பிடுவோமா என்பதுபோல் ஒரு துடிப்பு அதனுள். ஆனாலும் அடக்கிக் கொள்கிறது. தன் கேட்டை விட்டு ஒரு இன்ச் அசையவில்லை. அந்த நாய் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் கேட்டிலேயே சோகத்தோடு நிற்கிறது. அதற்கு பிஸ்கெட் போட ஒருவருமில்லை. எல்லோருக்குமா கிடைக்கும் பிஸ்கெட்? மேலும் நினைவாக நடக்கிறேன். மெதுவாகக் கடந்து செல்லும் கார் ஒன்றின் ஜன்னலிலிருந்து அழகிய வெள்ளைநாய் ஒன்று ஆனந்தமாக எஜமானியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, எல்லாவற்றையும் பார்த்தவாறே பயணிக்கிறது. ஓ! நாய்க்கும் உண்டல்லவா விதி ?

நாயை, யாருமில்லா நாயின் ஒரு நாளை, கவனித்துப் பார்ப்பது என்பது நமது வாழ்க்கையையே தள்ளி நின்று நாம் அவதானிப்பது  போன்றது. எத்தனை வசவுகள், அடிகள், உதைகள், ஏளனப் பார்வைகள்..அவமானங்கள். எத்தனை எத்தனைப் பட்டினிப் பகல்கள், படுக்க இயலா இரவுகள்.. இருந்தும், கழிக்கவேண்டுமே இவ்வுலக வாழ்க்கையை அதுகளும்.

ஒரு விஷயம் எங்கோ படித்த நினைவு. வியட்நாம் மக்களிடையே ஒரு நம்பிக்கை. படாதபாடெல்லாம் பட்டு இறுதியில் இவ்வுலக வாழ்வைத் துறக்கும் நாய்கள் அடுத்த ஜென்மத்தில் மனிதர்களாகப் பிறக்குமாம். பொதுவாகவே நாயின் அடுத்த ஜென்மம் மனிதன் என்கிற நம்பிக்கை அங்கே. எவ்வளவு தூரம் சரி என அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. தான் வாழ்வதற்காக, பிற உயிர்களை மனம் கூசாது துவம்சம் செய்யும் மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.

நேற்று (26/8/19) செய்தி மீடியாவை மேய்கையில் கண்ணில்பட்டது. அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று, நண்பனுக்கு ஒன்று என நாளை ஒதுக்கிய மனிதன், போனால் போகிறதென்று இதற்கும் ஒரு நாளை ஒதுக்கிவிட்டானே! International Dogs Day.. ஆச்சரியம்தான். விஸ்வாசத்தைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத ஜீவன்களே.. உங்களுக்கு இதெல்லாம்  எங்கே புரியப்போகிறது ?

**

எப்போதும் அருகிலிருக்கும் அன்னை

 

நாதனுக்குப் பக்கத்திலேயே இருக்கிறாள் எப்போதும். காதல் மட்டுமா காரணம், பதியைக் கணமும் பிரியாமல்  இருப்பதற்கு?  வேறொன்றும் இருக்கிறது.

இந்தப் பெருமாள்  இருக்கிறாரே, கடினமானவர். அழுத்தம் ஜாஸ்தி. அவர் இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவ்வளவுதான். ஏகப்பட்ட  கெடுபிடி காட்டக்கூடியவர். ஒரு ஜீவன் தவறுசெய்துவிட்டால்தான் என்ன?  போனால்போகிறது என அவனை விடுவதில்லை. பிடித்துத் தண்டித்து அவனை சரிப்படுத்தவேண்டும், திருத்தவேண்டும் எனும் பிடிவாதம் இவருக்கு.  இப்படிக் கறாராக இருக்கலாமா? பாவம், இந்த மனித ஜென்மங்கள். அவர்களும்தான் என்ன செய்வார்கள்.. ஏற்கனவே எத்தனையோ கஷ்டங்களில் வாழ்நாளெல்லாம் உழல்கிறார்களே. ஏதோ தெரியாமல் தப்புத்தண்டா  செய்துவிட்டார்கள் என்பதற்காக விரட்டி விரட்டியா  தண்டனை கொடுப்பது? அந்தக் குழந்தைகள்தான் பாவம் என்ன செய்யும், எங்கே போய் நிற்கும் ? –  என்று எப்போதும் தன் குழந்தைகளை நினைத்துக் கவலைப்படுகிறவள் தாயார். தன் குழந்தைகள், அவர்கள் யாராகிலும், எந்த நிலையில் இருப்பவர்களானாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு அவளால் உட்கார்ந்திருக்கமுடியாது. அதனால் சிந்திக்கிறாள் – என்னுடைய நாதன் தண்டிப்பதிலேயே குறியாக இருந்தால், இந்தக் குழந்தைகளுக்கு அதுவே நித்திய ஆபத்தாகப்போய்விடுமே.  அவர்களைக் கொஞ்சம் பயமுறுத்திவைப்பதற்காக, ஏதாவது சின்னதாக ஒரு சோதனையைக் கொடுத்துவிட்டு, விட்டுவிடலாம் அல்லவா? அதுபோதுமே பாவம், அதுகளுக்கு..  என்று மனித ஜீவன்களுக்காக தன் மணாளனான மகா விஷ்ணுவிடம்  என்றும் மன்றாடுபவள் மகாலக்ஷ்மி.

இல்லைம்மா, உனக்கு இது புரியவில்லை.. அவன் அப்படியெல்லாம் சுலபமாகத் திருந்தமாட்டான். அவன் இருக்கும் மனநிலையே வேறே..  அவன் செய்துவிட்ட காரியத்துக்கு, ஏதாவது தண்டனை கொடுத்தால்தான், கடும் சோதனையில் புரட்டிப் புடம்போட்டால்தான் கொஞ்சமாவது புரியும். நல்லபடியாக மாறுவான்.. என்று பெருமாள் வாதிடும்போதெல்லாம் உடன்படமாட்டாள் தாயார். ’அதெல்லாம் அப்படி ஒன்றுமில்லை. அவன் நல்லவன்தான். ஏதோ தெரியாமல் அசட்டுத்தனமாகத் தப்புக் காரியம்  செய்துவிட்டான்.  தண்டனை அது இதுன்னு ஏதாவது பயங்கரமாகக் கொடுத்து அவனைப் படுத்தவேண்டாம். பேருக்கு ஏதாவது கொஞ்சம் கஷ்டம்கொடுத்து சோதித்துவிட்டு, விட்டுவிடுங்கள். இனிமேல் அப்படியெல்லாம் பண்ணமாட்டான் குழந்தை..’ என்று தன் குழந்தையாகிய மனித ஜீவனுக்காகப் போராடி பெருமாளின் மனம் இளகச் செய்கிறாள் அன்னை. இதையும் மீறி, தப்பு செய்த மனிதனுக்கு பெருமாள் தண்டனையே கொடுத்துவிட்டாலும், அதை அந்த ஜீவன் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் கொஞ்சம் எளிதாக்கிக்கொடுக்கிறாள்; கஷ்டப்பட்டாவது அந்த சோதனைக் கட்டத்தைக் அவன் தாண்டிச் செல்லுமாறு கருணைபுரிகிறாள்  தாயார். ஜீவர்கள், பெருமாளிடம் வகையாக மாட்டிக்கொண்டு, கடுமையாகத் தண்டிக்கப்பட்டுவிடாதபடி,  அவர்களுக்குக் கருணைகாட்டிக் காப்பதற்காகவே, பெருமாள்பக்கத்திலேயே எப்போதும் இருப்பவள்  பிராட்டி. நம் எல்லோரின் அன்னை.

வேதாந்த தேசிகன்,  ராமானுஜர்பற்றி எழுதிய  ’’எதிராஜ சப்ததி’-எனும் 74 பாசுரங்கள் அடங்கிய படைப்பின் ஆரம்பத்தில், ஆதி ஆச்சார்யர்கள் எல்லோருக்கும் முதலில் வணக்கம் சொல்கிறார். பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனை முதல் குருவாக, ஆச்சார்யராகக்கொண்டு வணங்கிவிட்டு, பிறகு தாயார் மகாலக்ஷ்மி, அதற்குப் பின் விஷ்வக்‌ஷேனர், நம்மாழ்வார் எனப் பின் தொடரும் ஆச்சார்யர்களை ஒவ்வொருவராக வணங்கிச் செல்கிறார். அப்போது அன்னை மகாலக்ஷ்மியை  வணங்கும்போது, இந்த உலகின்மீது, உயிர்கள்மீது அவள் காட்டும் கருணைபற்றி சிந்திக்கையில், மேற்கண்டவாறு உருகுகிறார், வேதாந்த தேசிகன்.

**

பாடலுக்கு இசை : கய்யாம்

 

பாலிவுட் பட உலகில் சுமார் 40 வருடம் இசையமைப்பாளராக, மனம்  விடாது மீட்டும் பல பாடல்களைத் தந்தவர். முகமது ஜஹூர் கய்யாம் ஹஷிமி. சுருக்கமாக கய்யாம் (Khayyam). பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பள்ளி செல்ல விருப்பம் இல்லாமல் திரை இசையில் மயங்கிக் கிடந்திருக்கிறார் பையன்! 14 வயதில் பள்ளியிலிருந்து ஓட்டம் பிடித்து லாகூர் சென்று (அப்போதைய இந்தியா) அங்கிருந்த பஞ்சாபி பட இசையமைப்பாளரான பாபா சிஷ்டியிடம் சேர்ந்து இசையமைக்கும் நுட்பங்கள் சில கற்றார்.  பாபாவின்  உதவியாளராக நான்கு வருடங்கள். கிடைத்த சிறு சிறு வாய்ப்புகள் திருப்தியளிக்கவில்லை. டெல்லியிலிருந்த தன் மாமாவிடம் அவர் வந்து சேர்கையில் அவருக்கு வயது பதினேழுதான். மாமாவும்  பையனை பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்க்கப் பார்த்தார். ஆனால் கய்யாமின் இசைபக்தியைக் கண்டதும் மனமாறியது. இசை பயில அனுப்பினார். கய்யாமுக்கு கொஞ்சம் நிம்மதி. நம்மை புரிந்துகொண்ட ஒரு ஆத்மாவும் இருக்கிறதே.. சில டெல்லி வருடங்களுக்குப்பின், தன் லட்சிய நகரமான பம்பாய்க்கு வந்து சேர்ந்தார் கய்யாம்.

பம்பாயின் திரை உலகம் கனவுப் பாத்திரங்களால் ஆனதாக இருந்தது. அதாவது கலைஞர்களே கனவில்தான் பேசினார்கள், நடித்தார்கள், நடந்துகொண்டார்கள். இசையுலகம்..? கேட்கவே வேண்டாம்! இளைஞன் கய்யாமுக்கு எல்லாம் பிடித்துப்போயிற்று. ஆனால் நிறையப்பேருடன் சம்பந்தப்படவேண்டியிருந்தது. பணிந்துபோகவேண்டியிருந்தது.  உழைக்கவேண்டியிருந்தது. ரஹ்மான் எனும் இன்னுமொரு இளம் இசையமைப்பாளருடன் ஜோடி சேர்ந்து இசையமைக்க முற்பட்டார் கய்யாம். இருவரும் தங்கள் பெயரை ஷர்மா-வர்மா என மாற்றி வைத்துக்கொண்டனர். கய்யாம் -ஷர்மா. ரஹ்மான் -வர்மா. கவனியுங்கள் அப்போதே பாலிவுட்டில் பஞ்சாபி தாக்கம் அதிகம்! 1948ல் வந்த ஹீர் ராஞ்சா எனும்  ஹிந்தி படத்திற்கு இசை இந்த ஷர்மாஜி-வர்மாஜி ஜோடி ! படம் ஏதோ ஓடியது. ஆனால் வர்மாஜியும் ஓடிவிட்டார் – பாகிஸ்தானுக்கு. இந்தியப் பிரிவினைக் காலகட்டம். ரஹ்மான் பாகிஸ்தானைத் தனது நாடாக தேர்வு செய்தார். காணாமற்போனார்! கய்யாம்? இந்தியா எனது நாடு. பம்பாயே என் உலகம் என்றார். எப்போதும் இசையில் பேசினார். பழகினார். தூங்கினார். விழித்தார். ஹிந்தி திரையுலகம் அவரை ஏறிட்டு நோக்கியது. வாய்ப்புகள் நெருங்கின.

பாலிவுட் இசையமைப்பாளர் கய்யாம்

கய்யாமின் இசை இந்தியத் திரைவானில் தவழ ஆரம்பித்தது. ஆங்காங்கே பல இடங்களில் ரீங்கரித்தது. 1953-ல் வெளிவந்த ஹிந்திப் படம் Footpath-ல் புகழ்பெற்ற ஹிந்திக் கவிஞர் ’மஜ்ரூ சுல்தான்பூரி’யின் பாடல். மீனா குமாரியின் அருகாமைக்காக, திலீப் குமார் ஏங்கிப் பாடுவதாக திரையில் அமைந்தது. தலத் மஹ்மூதின் இனிய குரலில் இசையில் விளையாடியிருக்கிறார் கய்யாம்: ‘ஷாம் ஏ கம் (gham: சோகம்) கி கஸம்.. அவுர் கம்கீன் ஹை ஹம்.. ஆ..பி..ஜா.. ஆ..பி..ஜா.. ஆஜ் மேரே சனம்..(இந்த மாலைப்பொழுது தரும் சோகத்தின்மீது ஆணையாக சொல்கிறேன்.. வா.. வா..   இன்று வந்துவிடு என் காதலியே..) ‘ என்று கேட்போரை உருக்கிவிடும் பாடல். கய்யாம் செய்த கமால்!

1958-ல் இரண்டு, மூன்று இப்படி: ராஜ்கபூர், மாலா சின்ஹா நடித்த ஹிந்திப்படமான ’ஃபிர் சுபஹ் ஹோகி’ (திரும்பவும் பகல்வரும்) படத்தின் பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. உருது/ஹிந்திக் கவிஞர் சாஹிர் லூதியான்வியின் வரிகளில் நாட்டு நடப்பின் விவரிப்பு, ஹீரோவின் வாயிலிருந்து பாட்டாக கய்யாமின் இசையில் திரையில் பவனிவர, ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். தங்களுக்குள் ’ஹம்’ பண்ணிக்கொண்டுபோனார்கள். கய்யாமின் இசையில் முகேஷ் பாடிய  அந்தப் பாடல் : ‘சீன் (cheen) ஓ அரப்(Arab) ஹமாரா..ஹிந்தூஸ்தான் ஹமாரா..ரேஹ்னே கி கர் நஹி ஹை.. சாரே ஜஹான் ஹமாரா..!’ (சீனாவும் அரேபியாவும் நமது தான்! ஹிந்துஸ்தானும் நமதே! வசிப்பதற்குத்தான் வீடில்லை.. எல்லா நாடுகளும் நமதே..!) லூதியான்வியின் கிண்டல், கேலி பாமர மக்களைக் கிளுகிளுக்கவைத்தது. கய்யாமின் இசை படத்தை நோக்கி இழுத்தது. கடவுளையும் விடவில்லை சாஹிர் லூதியான்வி இன்னொரு பாட்டில்! ‘ஆஸ்மான் பே குதா (khudha: கடவுள்).. அவுர் ஜமீன் பே ஹம்.! ஆஜ் கல் ஓ இஸ்த்தர… தேக்த்தாஹி கம்..!’ (வானத்திலே சாமி.. பூமியிலே நாம்.. இப்பல்லாம் இந்தப்பக்கமா பாக்கறதில்லை (சாமி)..! ) லூதியான்வி-கய்யாம்-முகேஷ்-ராஜ்கபூர் எனக் காம்பினேஷன் ரசிக மனங்களை அள்ளிச்சென்றது. ஹிந்தி திரை இசையில் தன்னை நிறுவிக்கொண்டார் கய்யாம்.

1967-ல் வெளியிடப்பட்ட ‘ஆக்ரி கத்’ (Aakri khat -கடைசிக் கடிதம்). ராஜேஷ் கன்னாவின் முதல் படம். கய்யாமின் இசையில் இந்திரானி முகர்ஜி பாடுவதாக அமைந்தது இந்த பிரபலமான பாட்டு:  ‘பஹாரோ.. மேரா தில் சவாரோ.. (வசந்தமே! என் மனதையும் (கொஞ்சம்) கவனியேன்..). கவிஞர் கைஃப் ஆஸ்மி (நடிகை ஷாபனா ஆஸ்மியின் அப்பா) எழுதிய கவிதை வரிகளுக்கு ஆனந்த இசை நம்ம கய்யாம்.  இந்தப் படத்திற்குப்பின் ஏழெட்டு வருடங்களுக்கு திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் கய்யாம். என்னவோ தெரியவில்லை. மீண்டு வந்தபோது,  மேலும் படங்கள் கிடைத்தன. நெகிழவைத்த இசையும் வந்து சேர்ந்தது ரசிகர்களுக்கு. அத்தகைய பல பாடல்களில் சில:

  1. Angry young man Amitabh Bachchan உச்சம்தொட்டிருந்த காலகட்டம். அடிதடியும், ரத்தமுமாக எத்தனை நாளைக்குத்தான் அமிதாப்பைக் காட்டுவது? ஒரு கோபக்கார வாலிபன் என்பதைத் தாண்டி, அவனுக்குள் ஒரு மனமும் உண்டு. அதில் உணர்வுகளும்.. என ’கபி.. கபீ..’ (Kabhi Kabhie..) பட இயக்குனர் யஷ் சோப்ரா காட்ட நினைத்தார். எப்படி? சவாலான கட்டம். இயக்குனர், கய்யாமை நெருங்கினார். ’கய்யாம் சாஹிப்! ஏதாவது செய்யுங்கள்..!’ அந்த ஒரு  பாட்டில் அமிதாபை வேறொரு உலகத்து மனுஷனாகக் காட்டிவிட்டார் கய்யாம். ’கபி..கபீ.. மேரே தில் (dhil) மேன்.. கயால் ஆத்தா ஹை…! கே ஜைஸே துஜ்கோ பனாயா கயா ஹை மேரே லியே..!’ (அவ்வப்போது என் மனதில் (அந்த) சிந்தனை வருகிறது.. எனக்காகத்தான் நீ படைக்கப்பட்டிருக்கிறாயோ என்பதாக…)  ஸாஹிர் லூதியான்வியின் வரிகளைத் தன் மென்னிசையில் குழைத்து, அமிதாபின் ஆக்ரோஷ பிம்பத்தை அசால்ட்டாக மாற்றி, வேறுவண்ணம் தீட்டிவிட்டார் கய்யாம். பாட்டு தூள் கிளப்பியது. ரசிகப்பட்டாளம் அசந்துபோய் நின்றது. க்யா கானா (ghaana) ஹை! ஏ கௌன் ஹை பாய், மியூஸிக் மாஸ்டர் ?

புகழின் உச்சியில் இருந்த ராஜேஷ் கன்னா  மஜூன் எனும் தன் புதுப்படம் ஒன்றிற்காக, கய்யாம் ஒரு பாடலுக்குப்போட்ட இசையில் மயங்கி, 1979-ல் அவருக்கு ஒரு காரைப் பரிசளித்திருக்கிறார். ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் வெளிவரவே இல்லை. இருந்தும் விஸ்வாசமாக, ராஜேஷ்  கன்னாவுக்கு அடுத்தடுத்து மூன்று படங்களில் இசை அமைத்துக்கொடுத்தார் கய்யாம்.

1981-ல் முஸாஃபர் அலியின் திறனான இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஹிந்தி க்ளாசிக் படம் ’உம்ராவ் ஜான்’ (Umrao Jaan).  உருது எழுத்தாளர் மிர்ஸா ஹதி ருஸ்வா-வின் ’உம்ராவ் ஜான் அதா’ (Umrao Jaan Ada) எனும் புகழ்பெற்ற நாவல்தான் இப்படிப் படமாக்கப்பட்டது.  கவிதை உள்ளம்கொண்ட நாட்டியக்காரி உம்ராவ் ஜான் -கதையின் மையப் பாத்திரம். உம்ராவ் ஜானாக  நடிப்பில் ஜொலித்தார் ரேகா. கூடவே ஃபாரூக் ஷேக், நஸிருத்தீன் ஷா. ஆஷா போன்ஸ்லேயின் போதைக் குரல். கய்யாமின் கனவான இசை. ரசிகர்கள் சொக்கி விழுந்தனர். படம் பயங்கர ஹிட். உருதுக் கவிதைகளாலான ‘க்ளாசிக்’-வகைப் படமாதலால், முதலில் தயங்கியிருக்கிறார் பாடகி ஆஷா போன்ஸ்லே. கய்யாம், ஆஷாவை உற்சாகப்படுத்தி ரேகாவுக்காக பாடச் செய்திருக்கிறார். விசேஷமாக, அந்த மூன்று பாடல்கள் இசைப்பிரியர்களைக் கிறங்கவைத்தவை:

’இன் ஆங்க்கோன் கி மஸ்தி’ (இந்தக் கண்களின் போதை..),  ’யே க்யா ஜகா ஹை தோஸ்தோன்..’ (இது என்னமாதிரி இடம், நண்பர்களே), மற்றும் ’தில் (dil ) (ச்)சீஸ் க்யா ஹைன்.. ஆப் மேரி ஜான் லீஜியே..!’ (மனமென்ன பெரிய மனம்! என் உயிரையே நீ எடுத்துக்கொள்ளேன்..!) – உருதுக் கவிஞர் ஷஹ்ரியார் (Shahryar)-ன் ரசமான கவிதைகளைக் கொண்ட படம். கவிதைகளுக்கு இசை கொடுப்பதென்றால் அலாதி இன்பம் கய்யாமுக்கு. மணிக்கணக்கில் ஆழ்ந்துபோய் இசையமைப்பார்.

1977, 1981 ஆகிய வருடங்களில் மூறையே கபி..கபீ..,  உம்ராவ் ஜான் ஆகிய படங்களுக்காக ஃபிலிம்ஃபேரின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் அவரிடம் வந்துசேர்ந்தன. உம்ராவ் ஜானுக்காக தேசிய விருதும் மற்றும் 2007-ல் சங்கீத நாடக அகாடமி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2011-ல் தேசிய உயர் விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினால் கௌரவிக்கப்பட்டார் கய்யாம்.

கய்யாம் பழகுவதற்கு மென்மையானவராக அறியப்பட்டவர். ஜக்ஜீத் கௌர் எனும் பஞ்சாபிப் பாடகியை மணந்துகொண்டார் (1954).  பிரதீப் என அவர்களுக்கு ஒரே மகன். 2012-ல் காலமாகிவிட்டார். மகனின் தர்ம உள்ளத்தை மனதில் கொண்டு, தன் சொத்துபூராவையும் ’கய்யாம்-ஜக்ஜீத் கௌர் அறக்கட்டளை’ என ஒன்றை நிறுவி எழுதிவைத்தார். இளம் இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்களுக்கு உதவியாக இது மும்பையில் இயங்கிவருகிறது.

ஆகஸ்டு 19-ல் கய்யாம் தன் 92-ஆவது வயதில் காலமானபோது, மக்களுக்கு இசையின்பத்தை வழங்கிய கலைஞருக்கு அரசு மரியாதையுடன் மும்பையில் அடக்கம் நடந்தது. கவிஞர்கள் குல்ஸார், ஜாவத் அக்தர், பாடகர் சோனு நிகம், நடிகை பூனம் தில்லோன் போன்ற பாலிவுட் பிரபலங்கள், நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கரும், அமிதாப் பச்சனும் கய்யாமின் அபார இசையமைப்பை அன்போடு ட்விட்டரில் நினைவுகூர்ந்தார்கள்.

இசையமைப்பாளர் கய்யாமின் மறைவுக்கு இப்படி அஞ்சலி  செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோதி: ’கய்யாம் சாஹிப் நமக்களித்த இனிமையான இசைக்காக இந்தியா அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறது. வளர்ந்துவரும் இசையமைப்பாளர்கள், கலைஞர்களுக்கான அவரது கொடை என்றும் நினைவுகூரப்படும்’.

**

Picture courtesy: Google

பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும் இதை மறைக்க முடியுமா

 

ஜெய் ஹிந்த் ! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே! எங்கள் பக்கமும் கொஞ்சம் பாருங்கள்.  உங்கள் ஆதரவு …- எனச் செல்கிறது இந்திய சுதந்திர தினத்தன்று சர்வதேச வெளியிலிருந்து பெறப்பட்ட வாழ்த்துச்செய்தி ஒன்று.

யார் இது? எங்கிருந்து பேசுகிறார்கள்? என்ன பிரச்னை – என்றெல்லாம் வெளிநாட்டு நடப்புகள்பற்றி அதிகம் அறிந்திராத ஒரு சராசரி இந்தியன்-அதிலும் தமிழன் – ஆச்சரியப்படுவான் இல்லையா? சரி, மேலே பார்ப்போம்.

பாகிஸ்தானின் தென்மேற்குப்பகுதிப் பக்கம் கண்ணை ஓட்டினால், கனிமவளத்திற்குப் பேர்போன, இயற்கை அழகும் சேர்ந்து காணப்படும், பின் தங்கிய பழங்குடிமக்கள் வாழும் பலூசிஸ்தான் பிராந்தியம் பிரதானமாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடு எனச் சொல்லிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு சீனா அடிக்கடி அலைந்து திரியும் மலைப்பிரதேசம். அரசியல் சிக்கல் நிறைந்த, கொந்தளிக்கும் ஆதிவாசிகளைக்கொண்ட கரடுமுரடான மலைப்பிராந்தியம். ’நாங்கள் பாகிஸ்தான் அல்ல. பலூசிஸ்தான்! ஆகஸ்டு 11, 1947-லேயே பிரிட்டிஷ் அரசு எங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டது. எங்கள் நாட்டை அநியாயமாக ஆக்ரமித்துக்  கொடுங்கோலாட்சி செய்துவருகிறது பாகிஸ்தானிய ராணுவம். பலூசிஸ்தானிகள் வருஷக்கணக்காக அநியாயமாக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையிலிருந்து நாங்கள் விடுபட,  சர்வதேச ஒத்துழைப்பு தேவை’ என்கிறார்கள் உலக பலூசிஸ்தான் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.

1948-லிருந்து விட்டுவிட்டு பல அரசியல் எதிர்ப்புகள் போராட்டங்களை பாகிஸ்தானின் ஆட்சிக்கெதிராக நடத்திவருகிறார்கள் பலூசிஸ்தானிகள். 2003 -க்குப்பின் இவை வெகுவாக உத்வேகம் பெற்றிருக்கின்றன. மனிதஉரிமைகள் தொடர்பான வன்முறைகள், ஒடுக்குதல்கள் பலூசிஸ்தான் மக்களின் மீது பாகிஸ்தானிய ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன என்கிற புகார்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வலுத்துவருகின்றன. தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்கிற சாக்கில் பாக். ராணுவம் பலூச் பழங்குடிமக்களை இஷ்டத்துக்குத் தாக்கியும், அழித்தும் வருவதாக சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கின்றன செய்திகள். அடக்குமுறை ஆட்சியில் காணாமற்போன பலூசிஸ்தானிகளின் எண்ணிக்கை 5000-க்கும் மேல் என 2009-ல் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது.

2016-ல்  சுதந்திரதின விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பலூசிஸ்தான், பாகிஸ்தான்-வசமிருக்கும் காஷ்மீர் பகுதி போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளில் பாகிஸ்தானின் அடக்குமுறைகள்பற்றி லேசாகத்தான் குறிப்பிட்டார்! தங்களது கஷ்டங்கள்பற்றிப் பேசியதற்காக இந்தியப் பிரதமரைப் பாராட்டி பலூசிஸ்தான் தலைவர்கள் சிலர் ஏதோ சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான். பலூசிஸ்தான் தலைவர்களில் இருவரைப் பிடித்து உள்ளே தள்ளிவிட்டது பாகிஸ்தான்.  அண்டைநாடான ஆஃப்கானிஸ்தானும், பலூசிஸ்தானில் பாக். ராணுவம் செய்யும் அட்டூழியங்கள்பற்றி சில வருடங்களாகவே குரல் கொடுத்துவருகிறது. பங்களாதேஷ், பலூசிஸ்தானில் ஆதிவாசிகளுக்கு எதிரான மனித-உரிமை மீறல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்றிருக்கிறது.

மேலும் இப்போது, பலூசிஸ்தான் பிரச்னையை ஐ.நா. உட்பட ஏனைய சர்வதேச அரங்குகளுக்குக் கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும் என்கிற கோரிக்கையை பலூச் இயக்கக்காரர்கள் பகிரங்கமாக வைத்துள்ளார்கள். ஏற்கனவே நீண்ட நாளைய இரத்தஅழுத்தத்திற்காக சீனாவிடம் மருத்துவம் பெற்றுவரும் பாகிஸ்தானால் இதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என்ன செய்ய,  congenital problems..

நியூயார்க்கின் ’டைம்ஸ் ஸ்கொயர்’ சதுக்கத்தில் ஒரு போஸ்டர்..

பாகிஸ்தானிடமிருந்து தங்களது சுதந்திரம் என்கிற வெகுநாளைய கோரிக்கையை, நியூயார்க், லண்டன் போன்ற சர்வதேச அரங்குகளுக்கு இருப்பிடங்களாக அமைந்திருக்கும்  நகரங்களிலும் அவ்வப்போது  ஆர்ப்பாட்டங்களை நடத்தி பிரபலப்படுத்திவருகிறார்கள் பலூசிஸ்தான்காரர்கள். கடந்த சில வருடங்களாக சர்வதேச அமைப்புகளின் கவனத்துக்கு அடிக்கடிக் கொண்டுவரப்படும் விஷயமிது. தங்கள் நாட்டில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ள, முழுப்பூசணிக்காயை சோற்றில் அமுக்கி மறைக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு இது, திருகுவலியைத் தர

லண்டன்  டாக்சிகளில் விளம்பரம்

ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்க செனட்டில் (பார்லிமெண்ட்) சில குடியரசுக் கட்சி (அதிபர் ட்ரம்ப்பின் கட்சி) செனட்டர்கள் 2012-லிருந்தே சுதந்திர பலூசிஸ்தான்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். பலூசிஸ்தான் தனி நாடாக ஆகிவிட்டால், எப்படி அது, தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் பரவுவதைத் தடுக்க அமெரிக்காவுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் உதவிகரமாக அமையும் என்பதுபற்றி சிந்தித்ததின் விளைவு இது. இந்தியாவின் வலிமையைக் காட்டி அடிக்கடி பாகிஸ்தானை பயமுறுத்திக்கொண்டு,  ஒருபக்கம் உதவி, மறுபக்கம் சுரண்டல் எனக் கூத்தடிக்கும் சீனா, தன் நாட்டிலிருந்து பலூசிஸ்தானின் குறுக்காக 62 பில்லியன் டாலர்கள் செலவில் நெடுஞ்சாலை ப்ராஜெக்ட் ஒன்றை ஆரம்பித்து போட்டுக்கொண்டிருக்கிறது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நெடும்பாதை  (CPEC-China Pakistan Economic Corridor) என அழைக்கப்படும் இந்த ப்ராஜெக்ட், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவப்போவதாக ஒரு வெளிப்பூச்சு பூசிவைத்திருக்கிறது சீனா! உண்மையில், இதன்மூலம் சீனாவின் வணிக, மற்றும் ராணுவ ஏற்றுமதிகள் சீனப் பகுதியிலிருந்து பலூசிஸ்தானின் குறுக்காக சாலைவழியாக க்வாதார் (Gwadar) துறைமுகம்வரை எளிதில் வந்தடைந்து, அங்கிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமையும். இப்போதிருக்கும் கடல்வழி ஏற்பாடுகளின்படி தொலைதூரம் பயணிக்கவேண்டிருக்கிறது சீனாவுக்கு. இந்து மகாசமுத்திரம்வழி சீன வணிக மற்றும் போர்க்கப்பல்கள் இந்தியாவின் தெற்குப்பகுதியில் சுற்றிவந்து வளைந்துசெல்ல நேர்வதால், அவை எப்போதும் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளின் கண்காணிப்பில் சிக்குகின்றன. இது தனது தில்லுமுல்லு  சிவிலியன் மற்றும் ராணுவ ஏற்றுமதிகளுக்கு இடையூறாக அமைந்துவருகிறது என்பது சீனா வெகுநாட்களாகவே மிகவும் தவிர்க்கவிரும்பும் ஒரு விஷயம். சுதந்திர பலூசிஸ்தான் அமைந்து அது அமெரிக்க நட்பு நாடாக ஆகிவிட்டால், தெற்கு ஆசியப் பகுதியில் சீனாவின் கொட்டத்தை ஒடுக்க அது வழிசெய்யும் என்பது அமெரிக்க செனட்டர்கள் சிலரின் வாதமாக இருந்துவருகிறது. இத்தகைய நெருக்கடிகளாலும், பலூசிஸ்தான் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கிவருவதோடு, இது சர்வதேசப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுக்காதிருக்கவேண்டுமே என்பதில் பாகிஸ்தானும், அதன் எஜமானனான சீனாவும் அதிகவனமாக இருக்கின்றன.

காஷ்மீர் தொடர்பான இந்திய அரசியல் சாஸனப் பிரிவு 370-ன் நீக்கம் என்கிற இந்திய அரசின் முடிவை,  ஒரு பெரும்பிரச்னையாக ஜோடித்து அலம்பல் செய்ய எண்ணிய பாகிஸ்தான், தங்களது சுதந்திர தினத்தை (ஆகஸ்டு 14) ‘காஷ்மீருக்கான ஆதரவு’ நாளாக அறிவித்ததோடு, இந்திய சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாள்’ எனவும் அறிவித்தது. அப்போதாவது யாராவது நம் பக்கம் திரும்புவார்களா, இந்தியாவை விமரிசிப்பார்களா  என்கிற நப்பாசை! ம்ஹூம். பாச்சா பலிக்கவில்லை.

இத்தகைய சூழலில், உலக பலூசிஸ்தான் இயக்கம், ஆகஸ்டு 14-ல் வந்த பாக். சுதந்திர தினத்தை  ‘கறுப்பு தினம்’-ஆக அறிவித்து பிரச்சாரம் செய்திருக்கிறது. கூடவே, பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ‘பலூசிஸ்தானுக்கான ஆதரவு நாள்’ -ஆக சர்வதேச வெளியில் அறிவித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கான பலூசிஸ்தானிகளின் ட்விட்டர் மெஸேஜை, லட்சத்துக்கும் அதிகமானோர் மறு-ட்வீட் செய்து வாழ்த்தியிருக்கிறார்கள். ’ஐ.நா. விற்கு அவசியம் எடுத்துச்செல்ல வேண்டிய விஷயம் பலூசிஸ்தான் மக்களின் பிரச்னை’ என்பது சுதந்திர பலூசிஸ்தானுக்கான ஆதரவுக் குரல்களின் சாராம்சம். ஒரு கையைப் பாகிஸ்தானின் தோளில் போட்டுக்கொண்டு, இன்னொரு கையினால் பலூசிஸ்தானின்  கனிமவளத்தை நோண்டிக்கொண்டிருக்கும் சீனாவையும், பலூசிஸ்தானிகள் எச்சரித்திருக்கிறார்கள்: ’சீனாவே! எடு கையை! எங்கள் நாட்டைத் தொடாதே!’

இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்குள் நுழைத்து, ’கொஞ்சம் கொதிக்கவைத்துப் பார்க்கலாம்’ என சட்டையைக் கிழித்துவிட்டுக்கொண்டு அலையும் பாகிஸ்தானுக்கு, பலூசிஸ்தானிகளின் போராட்டங்கள், அவர்களது இயக்கத்திற்கு பாகிஸ்தானுக்கு வெளியே பெருகும் ஆதரவு போன்றவை மேலும் உளைச்சலை அதிகமாக்கியிருக்கிறது. தனது அரசியல் எதிரிகளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், முன்னாள் ஜனாதிபதி ஜர்தாரி ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்கு/ஜெயில், முன்னாள் அதிபர் முஷாரஃபிற்கு எதிராக தேசதுரோக வழக்கு என வரிசையாக  உள்நாட்டு அரசியல் எதிரிகளை மாட்டிவிட்டதால், ’நான்தான் இனி பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதமர்’ எனக் குறுக்குக் கணக்குப்போட்டுக்கொண்டிருக்கிறார் இம்ரான் கான்.  ராணுவத்தின் கழுகுப்பார்வையின் கீழ் இயங்குவது ஒன்றும் கிரிக்கெட் வியூகமல்ல என ஓரளவாவது அவருக்குப் புரிந்திருக்கும்.

அபூர்வமாகத் தனக்குக் கிடைத்துவிட்ட பிரதமர்-பதவி நாற்காலியை இறுகப் பிடித்துக்கொண்டு வியர்க்க வியர்க்க உட்கார்ந்திருக்கும் இம்ரான் கானுக்கு உருதுப் புத்தகங்களைப் படிக்கவே நேரமிருப்பதில்லை. ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்று வள்ளுவன் தமிழில் அறிவுறுத்தியதைப் படிக்கவா இம்ரானுக்கு வாய்ப்பிருக்கும் ? ம்ஹும்.. சான்ஸே இல்லை !

**

தகவல்கள்/படங்களுக்கு நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஃப்ரண்ட்லைன் மற்றும் கூகிள்.

சுஷ்மா ஸ்வராஜ்: மக்களின் மந்திரி

 

கலாச்சார மேன்மை, பெருமிதம், மென்மை என ஒரு இந்தியப் பெண்ணாக தன்  குணாதிசயங்களை வெளிப்படுத்தியவாறேதான், நாட்டின் மாண்புமிகு பிரதிநிதியாக சர்வதேசவெளியிலும் கம்பீரமாக வலம் வந்தார் அவர். வண்ணம் மின்னும் சில்க் அல்லது பருத்திப் புடவை, பொருத்தமான ஒரு ஜாக்கெட், பளிச்சென பிரகாசிக்கும் நெற்றிப் பொட்டு எனக் கவர்ந்துவிடும் தோற்றம், ’இந்திய வெளியுறவு மந்திரி’ என, இந்தியாவைப்பற்றி சரியாக ஏதும் அறிந்திராத அன்னியருக்கும்கூட தூரத்திலிருந்தே அறிமுகப்படுத்திவிடும்.

2014 லிருந்து 2019 ஏப்ரல் வரை நரேந்திர மோதியின் முதல் சர்க்காரில் வெளியுறவு மந்திரியாக பாராட்டத்தக்க விதமாகப் பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். அரசியல் வாழ்வில் பல ‘முதல்’களைக் காண்பித்தவர். தன் இளம்வயதில்(25) கேபினட் மந்திரியான முதல் பெண் (ஹரியானா அரசில் கல்வி அமைச்சர், 1977) என்கிற பெருமையோடு அரசியல்வாழ்வின் ஆரம்பம். தலைநகர அரசியலில் நுழைந்து தேர்ந்தபின், டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர் (1996). தேசிய அரசியல் கட்சியின் முதல் பெண் கொள்கைபரப்பு செயலாளர், லோக் சபாவில் (பார்லிமெண்ட்) முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர். ஒரு முழுநேர -ஐந்தாண்டுக்காலம்- இந்தியாவின் வெளியுறவு அமைச்சராகப் பணிபுரிந்த முதல் பெண்மணி எனப் பட்டியல் நீளும்.

அரசியல் அதிகாரம் தரும் அகங்காரம், ஆணாதிக்க மனப்பான்மை, பாரபட்சம் மிக்க இந்திய அரசியலில் தனி ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்தி பல சவால்களை சந்தித்து மேலெழுந்தவர் சுஷ்மா. எந்த ஒரு இக்கட்டான நிலையிலும், தான் சார்ந்திருந்த கட்சியைத் தாண்டி,  ஒரு நேர்மையான மனுஷி என்கிற தன் சக்தியையும், கம்பீரத்தையும் பாதுகாத்து முன்னகர்ந்த பெருமை அவரது சிறப்புகளில் ஒன்று. விஷய ஞானத்தோடு கடுமையாக சொற்போரில் ஈடுபட்டு எதிரிகளைத் திக்குமுக்காடவைக்கும் திறன் எளிதாகக் கைவந்திருந்தது. பார்லிமெண்ட்டின் தர்க்கங்களின்போது அப்போதைய ஆளும் கட்சிகளை (காங்கிரஸ், ஜனதா தளக் கூட்டணி) கிழிகிழியெனக் கிழித்தாலும், அரசியல் அரங்குக்கு வெளியே அனைவரிடமும் புன்னகையுடன் இதமான அன்பும் நேசமும் காட்டியவர். இதனாலேயே எதிர்த்துநின்ற கட்சித் தலைவர்களில் சிலர்,  பாரதீய ஜனதாவை உள்ளூர வெறுத்தாலும், தனிப்பட்ட முறையில் இவரிடம் மிகவும் மரியாதையாகப் பழகினார்கள். பார்லிமெண்ட்டில் முக்கிய விவாதங்களின்போது, அவ்வப்போது வெடித்துத் தூள்கிளப்பும் சுஷ்மா ஸ்வராஜை அதிகவனமாக எதிர்கொண்டார்கள். (’சாவதான்! யே ஔரத் கத்தர்னாக் ஹை பாய்..!’ – ஜாக்ரதை! இந்தப் பெண் ஆபத்தானவர்!)

1996-ல் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எதிர்க் கட்சித் தலைவியாகப் பணிபுரிந்த சுஷ்மா ஸ்வராஜ், அப்போதைய ஜனதா தளக் கூட்டணி அரசின் கோமாளித்தனங்களை பார்லிமெண்ட் வாதம் ஒன்றில் கடுமையாகச் சாடினார். ‘இந்த லட்சணத்தில் போய்க்கொண்டிருந்தால், ரொம்ப நாளைக்கு இங்கே வண்டி ஓட்டமுடியாது!’ என பிரதமர் தேவகௌடாவை எச்சரித்து பலத்த கரகோஷத்தைக் கிளப்பிவிட்டார் சுஷ்மா!

2013-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது எதிர்க்கட்சி இடத்திலிருந்து பிரதமருடன் காரசாரமான வாதத்தில் ஈடுபட்டார் சுஷ்மா ஸ்வராஜ். கவித்துவமான பார்லிமெண்ட் நிகழ்வாக அது அமைந்துவிட்டது!  சுஷ்மாவை சமாளிக்க நினைத்த பிரதமர் மன்மோகன் சிங், மொகலாய காலத்து பர்ஷியக் கவிஞரான மீர்ஸா காலிப் (Mirza Ghalib)-இன் கவிதை ஒன்றிலிருந்து எடுத்துவிட்டுப் பார்த்தார். பதிலாக  பஷீர் பாதர் (Bashir Badr) எனும் புகழ்பெற்ற  ஹிந்திக் கவிஞரின் கவிதை ஒன்றிலிருந்து இப்படி எடுத்துக் கூறினார் சுஷ்மா: ’விஸ்வாசம் என்பது உங்கள் கணக்கில் இருந்ததில்லை. துரோகம் என்பது எங்களிடம் இருந்ததில்லை. வாழ்க்கை இரண்டுவித இசைவுகளால் ஆனது. ஒன்று உங்களின் நினைவில் இல்லை. மற்றது எங்களின் நினைவில் இல்லை!’’

1999-2004 காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயியின் மத்திய அரசில் சுகாதாரம், குடும்ப நல அமைச்சராகவும் பின்பு செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பணிபுரிந்தார் சுஷ்மா ஸ்வராஜ். சுகாதார, குடும்பநல அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் இருக்கும் புகழ்பெற்ற எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத்தைப்போன்று பிறமாநிலங்களில் ஐந்து  எய்ம்ஸ் மையங்கள் அமைய அனுமதி வழங்கினார். அவர் செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகப் பதவி வகிக்கையில் இந்திய சினிமா வெறும் ‘படத் தயாரிப்பு’ அல்லது ’பாலிவுட்’ எனப் பொதுவாக அழைக்கப்படுவதைத் தாண்டி, ’இந்திய திரைப்படத் தொழில்துறை’ (Indian Film Industry) என ஒரு industry-க்கு உரிய மரியாதை, தகுதி நிலையை மத்திய அரசு சார்பில் வழங்கியவர் சுஷ்மா ஸ்வராஜ். இதனை பாலிவுட்டின் ஷாபனா ஆஸ்மி போன்ற சிறந்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் இன்றும் வாஞ்சையுடன் நினைவுகூறுகிறார்கள். கோடம்பாக்கத்திற்கு இதெல்லாம் அவ்வளவு எளிதாகப் புரியாது!

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் (Julie Bishop)-உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

ஐ.நா. மற்றும் ஓ.ஐ.சி. (OIC-Organization of Islamic Countries) போன்ற சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் கருத்துநிலைபற்றி தெளிவாகப் பேசியிருக்கிறார் இவர். நியூயார்க்கில், ஐநா- ஜெனரல் அசெம்பிளியில் (2015) சர்வதேசப் பிரதிநிதிகளோடு பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமர்ந்திருக்க, காஷ்மீரில் தீவிரவாதம் பற்றி சீறிய சுஷ்மா சொன்னார்: (பாகிஸ்தான் பிரதமரைப் பார்த்து) ’மும்பை குண்டுவெடிப்புக் காரணகர்த்தாவான லத்தீஃப் உங்கள் நாட்டில்தான் உலாவிக் கொண்டிருக்கிறான். எங்களுக்குத் தெரியும். ’தில்’ இருந்தால் தீவிரவாதியைப் பிடித்துத் தண்டியுங்கள். அது சரிப்படாது உங்களுக்கென்றால், எங்களிடம் அனுப்பிவிடுங்கள். நாங்கள் ‘பார்த்துக்கொள்கிறோம்’. ஒருபக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் தொடரும் பயங்கரவாதம் என கைகோர்த்துக்கொண்டு நடக்கமுடியாது!’ என்று எச்சரித்து முழங்கினார். நவாஸ் ஷெரீஃப் தலைகுனிந்திருக்க, மற்ற நாட்டின் பிரதிநிதிகள் புருவத்தை உயர்த்தி இந்திய வெளியுறவு அமைச்சரை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அபுதாபியில் சர்வதேச இஸ்லாமிய அமைப்பு நடத்திய ’ஓஐசி’ கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக இந்தியா அழைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோதி, வெளியுறவு மந்திரியான சுஷ்மாவை அங்கு அனுப்பிவைத்தார். கூட்டத்தில் பேசிய சுஷ்மா இப்படி ஆரம்பித்தார்: ’ இவ்வுலகில் ஞானத்தின் ஊற்றுக்கண் ஆகவும், அமைதியின் கலங்கரை விளக்கமாகவும், பல்வேறு மதங்கள், நம்பிக்கைகளின் பிறப்பிடமாக, உறைவிடமாகவும் விளங்குகிற, இப்போது உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஆகிவிட்ட இந்தியா என்கிற மாபெரும் நாட்டின் பிரதிநிதியாக உங்கள் முன் நான் வந்திருக்கிறேன். 185 மில்லியன் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளைக் கொண்ட, 1.2 பில்லியன் இந்திய மக்கள் சார்பாக, உலக இஸ்லாமியக் கூட்டமைப்பின் பொன்விழாவிற்கு எங்கள்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதத்தினால் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துபற்றி, தொடரும் அவலம்பற்றி பேச ஆரம்பித்த சுஷ்மா மேலும் கூறினார்: ’தீவிரவாதத்திற்கு எதிரான உலக நாடுகளின் ஒருமித்த நடவடிக்கைகள் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானதல்ல.  அப்படி இருக்கமுடியாது என நாங்கள் நினைக்கிறோம்’ என்றார்.

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட இந்தியப் பெண் உஸ்மாவை சந்தித்து தேற்றும் சுஷ்மா ஸ்வராஜ்

2014 லிலிருந்து 2019 ஏப்ரல் வரை அவர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிறைப்பட்ட, மாட்டிக்கொண்டு மீளமுடியாத நிலையிலிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்திய தூதரகங்களை முடுக்கிவிட்டு இரவு, பகலாகச் செயல்படவைத்தார். சம்பந்தப்பட்ட நாட்டு அமைச்சர்களுடன், தலைவர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு, இந்திய சகோதர, சகோதரர்களை மீட்டு, தாய்நாடு திரும்ப வழிவகுத்த பெருமை சுஷ்மா ஸ்வராஜை சேரும்.வேலைக்கென சவூதி அரேபியா சென்று அங்கு ஒரு தனி ஆளிடம் அடிமையாக வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட கர்னாடகாவின் ஜெஸிந்தா என்கிற நர்ஸ், நைஜீரிய கடற்கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இந்திய மாலுமிகள் ஐவர் (ஏப்ரல் 2019), சிரியாவில் போரில் சிக்கிக்கொண்ட 65  இந்தியத் தொழிலாளர்கள், ஈராக்கில் டிக்ரிஸ் நகரில் போரின்போது சிக்கித் தவித்த 42 இந்திய நர்ஸுகள், தவறுதலாக இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் பிடிபட்டு, பலவந்தமாக ஒரு பாகிஸ்தானியால் திருமணம் செய்துகொள்ளப்பட்டு, அங்கே ஜெயிலிலும்  உழன்ற உஸ்மா அஹமது என்கிற இந்திய இஸ்லாமியப் பெண்ணை விடுவித்துக் கொண்டுவந்தது(2018) –  எனப் பல இந்திய நாட்டவரைத் தன் தனிப்பட்ட உயர்மட்ட முயற்சியால், உந்துததால் விடுவித்து இந்தியாவுக்குப் பத்திரமாகக் கொணர்ந்தவர் சுஷ்மா.  இதைப்போலவே பாகிஸ்தானிலிருந்து யாராலோ கடத்தப்பட்டு இந்தியாவில் விடப்பட்ட பாக். சிறுவன்  ஒருவன் மத்தியப்பிரதேசத்தின் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவனை டெல்லிக்கு வரவழைத்து சந்தித்து ஆசுவாசப்படுத்தி, பாகிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பியும் வைத்தார்  இந்திய வெளியுறவு மந்திரி.

பாக். சிறுவனை ஆசுவாசப்படுத்தி அவனுடைய நாட்டிற்கு அனுப்பிவைக்கும் சுஷ்மா .

இதய, சிறுநீரக உயர் மருத்துவ சிகைச்சைக்காக இந்தியா வர விரும்பிய, தன்னோடு ட்விட்டரில் நேரடியாகத் தொடர்புகொண்ட தனிப்பட்ட பாகிஸ்தானி பிரஜைகளுக்கு சுஷ்மா உடனே பதில் சொன்னதோடு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்புகொண்டு, பாகிஸ்தானி நோயாளிகளுக்கான ’இந்திய மருத்துவ விசாக்கள்’ கிடைக்கச்செய்தார். இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா நேரடியாக ட்விட்டரில் தொடர்புகொள்ளத் தக்கவர் என அறிந்த பாகிஸ்தானிகள் சிலர் இப்படித் தொடர்புகொண்டு கைமேல் பலன் கண்டனர். ஷா ஸாஹிப் இக்பால் என்கிற ஒரு பாகிஸ்தானி பிரஜை, தன் சொந்தக்காரப் பையன் ஒருவனின் இதய அறுவைசிகிச்சை இந்தியாவில் நடக்க, இந்திய மருத்துவ விசா தந்து உதவும்படி 2017-ல்  இப்படி சுஷ்மாவுக்கு ட்வீட் செய்தார்: “After Allah, you are our last hope.. Kindly allow your  Islamabad Embassy (meaning Indian High Commission) to issue us medical visa.”( அல்லாவுக்கு அடுத்தபடியாக உங்களைத்தான் நம்பியிருக்கிறோம். இஸ்லாமாபாதில் (பாக்.தலைநகர்) உள்ள இந்திய தூதரகத்தில் சொல்லி எங்களுக்கு ஒரு ‘மருத்துவ விசா’ கிடைக்க, கருணைகூர்ந்து உதவுங்கள்). சில மணிநேரங்களில் அந்த பாகிஸ்தானி நண்பருக்கு இந்திய அமைச்சர் சுஷ்மாவிடமிருந்து பதில் ‘ட்வீட்’ வந்தது: ‘இந்திய தூதரகத்திடம் பேசிவிட்டேன். உங்களுக்கு நாளை இந்திய மெடிக்கல் விசா கிடைத்துவிடும்.’ மறுநாளே அவருக்கு மெடிக்கல் விசா வழங்கப்பட்டது. இப்படி எத்தனையோ ட்விட்டர்-வழி உதவிகளை அண்டைநாட்டுக்காரர்களுக்கு செய்திருக்கிறார் சுஷ்மா. பாகிஸ்தானி குழந்தைகள் பலர், இந்திய உயர்-மருத்துவ உதவிபெற்றுத் தங்கள் நாட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்பது பாகிஸ்தானிலிருந்து சுஷ்மா ஸ்வராஜுக்கு வந்திருக்கும் ட்விட்டர் மெஸேஜ்களிலிருந்து தெரிகிறது என்கிறது ‘இந்தியா டுடே’ இதழ்.

சுஷ்மா ஸ்வராஜ் காலமான செய்தி கேட்டதும் சில பாகிஸ்தானிகள் அவர் செய்த உதவிகளை அன்புடன் நினைவு கூர்ந்தனர்.  ஃபியாத் (Fiyaat) என்கிற ஒரு பாகிஸ்தானிப் பெண்மணி இப்படி ட்விட் செய்திருக்கிறார்: ’மேடம் சுஷ்மா ஒரு இரும்பு மனுஷியாக அறியப்பட்டவர். அப்படித்தான் அவர்பற்றிய பிம்பம் எங்களுக்கு. ஆனால் அவர்,  எத்தனையோ பாகிஸ்தானிகளுக்கு மனமிறங்கி உதவி செய்திருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தியடைய அல்லா அருள்வாராக.’

இன்னுமொரு பாகிஸ்தானி நண்பர்  ட்வீட் செய்திருக்கிறார்:  We as Muslims, don’t believe in ’Dusra Janam’.  But if there’s any, I would want Sushma Swaraj to be born in Pakistan and become a politician here.  Such a talented human she was, the best India could get as their FM. (முஸ்லிம்களான எங்களுக்கு அடுத்த பிறவியில் நம்பிக்கையில்லை. அப்படி ஒன்று இருந்தால், சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் பிறந்து அரசியல்வாதியாக வேண்டும் என்பது என் விருப்பம். அவ்வளவு திறன்மிகுந்த மனுஷி (அரசியல்வாதி)  அவர். ஒரு அருமையான வெளியுறவு மந்திரியாக இந்தியாவுக்குக் கிடைத்தவர்.  (ட்வீட் மெசேஜ்களுக்கு- நன்றி: இந்தியா டுடே).

எல்லைக்கு இருபுறத்திலும் அவருக்குக் கிடைத்த அன்பு, வாழ்த்துக்கள் ஆகியவற்றை 2017-ல் கவனித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழான ‘The Wall Street Journal’  சுஷ்மா ஸ்வராஜை,  ‘India’s best-loved politician’ (இந்தியாவின் ‘மிகவும் நேசிக்கப்படும் அரசியல்வாதி’) என வர்ணித்தது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மைக் பாம்பியோ (Mike Pompeo) ‘சுஷ்மா ஸ்வராஜ் எங்களது அருமையான நண்பர். ஜனநாயக வழிதான் அமைதிவழி என்கிற  கொள்கையை எங்களோடு பகிர்ந்துகொண்டவர் அவர்’ என்று அஞ்சலி செய்திருக்கிறார். சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன்,   ’சுஷ்மா ஸ்வராஜ் ஆச்சரியப்படவைத்த ஒரு உணர்வுபூர்வமான அரசியல் தலைவி. உலகெங்கும் பரவியிருக்கும் தன் நாட்டு மக்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர்’ என்றிருக்கிறார்.

ஐநா ஜெனரல் அசெம்பிளி தலைவரான மரியா ஃபெர்னாந்தா எஸ்பினோஸா (Maria Fernanda Espinosa) இப்படிச் சொன்னார்: ’சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் வித்தியாசமான ஒரு பெண், அரசியல் தலைவி.  அவரை இந்தியாவில் ஓரிருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவரது நேசமான நினைவு என்றும் என் மனதிலிருக்கும்.’

ட்விட்டரில் தூள்கிளப்பி மக்கள் சேவையாற்றிய சுஷ்மா ஸ்வராஜ், அரசியலிலிருந்து ஓய்வுபெற்றபின்,  தன் கடைசிநாளிலும் அன்றைய நாட்டு நடப்புகளைக் கவனித்துவந்திருக்கிறார். காஷ்மீர் இந்தியாவுடன் முழுதாக இணைய பெரும் சிக்கல் ஏற்படுத்திய, சர்ச்சைக்குரிய அரசியல் சாஸனப் பிரிவு 370-ஐ பாரதீய ஜனதா அரசு பார்லிமெண்ட் வாக்கெடுப்பு வெற்றிமூலம் தூக்கி வீசிவிட்டதை அறிந்த சுஷ்மா ஸ்வராஜ், தன் மறைவுக்கு சில மணிநேரமுன்பு பிரதமர் மோதிக்கு அனுப்பிய மெஸேஜ்: ’நன்றி பிரதம மந்திரி அவர்களே! மிக்க நன்றி. இந்த நாளைக் காண்பதற்காகத்தான் வாழ்நாள் முழுதும் நான் காத்திருந்தேன்!’

**

Pictures courtesy: Google

அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன் ..

 

13-14 ஆம் நூற்றாண்டு காலகட்டம். காஞ்சீபுரம். ஏனைய திருமால் கோவில்களைப்போலவே அப்போது புகழ்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலிலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை, ஆராதனைகள் நிகழ்ந்த காலம். காஞ்சிப் பெருமாள் கோவிலின் சன்னிதியில் இராப்பத்து, பகற்பத்து உத்சவத்தின்போது, திருமாலின்மீது பக்திமிகுதியால் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அமுதமான பாசுரங்களும் ஓதப்படவேண்டும் என்று வேதாந்த தேசிகன் முன்வைத்தபோது, காஞ்சீபுரத்தில் ஒரு சாரார், வடமொழியில் மட்டுமே ஓதுதல் இருக்கவேண்டும்; வேறுவகையில் மாற்ற சாஸ்திரத்தில் இடமில்லை  என அடம்பிடித்தனர்.  வடமொழியைப்போலவே நமது தமிழ்மொழியும் தெய்வமொழியே என அவர்களுடன் வாதித்த தேசிகன், பன்னிரு ஆழ்வார்கள் திருமாலை நினைந்துருகிப் பாடிய அழகுமிகு பாசுரங்கள் பக்திப் பிரவாகத்தோடு, வேதங்களின் கருத்தாழத்தையும் கொண்டிருப்பவை என்று எடுத்துரைத்தார். ஆதலால் பெருமாளின் சன்னிதியில் பாடப்பட மிகவும் உகந்தவை எனப் புரியவைத்து, எதிர்ப்பாளர்களை மசியவைத்து, ஏற்றுக்கொள்ளவைத்தார் தேசிகன். அவர் காலத்தில்தான் தமிழின் இறையமுதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முதன்முறையாக காஞ்சி வரதனின் சன்னிதியில் சீராக ஒலிக்கத்தொடங்கின.

1327-ல் கொடுங்கோலனான மொகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரின் (Malik Kafur) தலைமையில், துருக்கர் படை, எண்ணற்ற செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தென்னாடு நோக்கி வந்தது. பல சிற்றரசுகளை வீழ்த்திய மாலிக் காஃபூர், ஸ்ரீரங்கத்தின் செல்வம்பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் தாக்கி அழித்துச் சூறையாடினான். ஊரை சிதறவிட்ட காஃபூரின் நாசகாரப் படைகள், அரங்கனின் கோவிலை நோக்கி முன்னேறினர்.  மதவெறியனான மாலிக் காஃபூரின் படைகளை, கோவிலைப் பாதுகாத்து நின்ற வைணவர்களும் அரங்கனின் ஏனைய அடியார்களும் கடுமையாக எதிர்கொண்டு போராட, பொதுமக்களும் சேர்ந்துகொண்டனர். இறுதியில், சுமார் 12000-க்கும் மேற்பட்ட  ஸ்ரீரங்கத்து அடியார்களும், மக்களில் ஒருபகுதியினரும் கோவில் வாசலிலேயே மாலிக் காஃபூர் படைகளினால் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் தாக்கப்படும் தகவல் முன்னரே தெரியவந்து, கோவிலின் மூலவர் விக்ரகம்  அழிக்கப்பட்டுவிடாதபடி பாதுகாக்க, மூலவர் சன்னிதிக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பி அதன் முன்னே வேறொரு போலி விக்ரகமும் செய்துவைத்து, இப்போது நாம் தரிசித்து மகிழும் ஸ்ரீரங்கநாதனை, மூலவரைக் காத்தவர், சிற்பக் கலை, கட்டிடக்கலை ஆகியவற்றிலும் தேறியிருந்த வேதாந்த தேசிகன்.  கோவிலின் உத்சவப் பெருமாள், தாயார் விக்ரஹங்களை மாலிக் காஃபூரின் சைன்யங்கள் சிதைத்துவிடாதபடி, எடுத்துக்கொண்டு ஓடிவிடாதபடி,  ஆச்சாரியர்களின் சிறு  குழு ஒன்று மறைத்து  எடுத்துக்கொண்டு, இரவோடு இரவாக திருமலைக்குக் கால்நடையாகப் பயணித்துவிட்டனர்.  முதுபெரும் வைணவ ஆச்சார்யரான சுதர்ஷன பட்டர் எழுதிய  ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கவுரையின் ஏடுகளை எடுத்துக்கொண்டு, பட்டரின் புதல்வர்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் மேலக்கோட்டை (கர்னாடகா) நோக்கிப் பயணமானார் தேசிகன்.

தென்னாட்டை அழித்தும், சூறையாடியும் கொண்டாடிய மொகலாயப் படைகள் வடக்கு நோக்கி ஒருவழியாக விரட்டப்பட்டபின்னும், சுமார் 48 வருடங்கள் ஆகின ஸ்ரீரங்கமும், சுற்றுப்பிரதேசங்களும் முழுதுமாக இயல்புநிலைக்குத் திரும்ப. அப்போது செஞ்சியை ஆண்ட மன்னனின் தளபதியான போப்பனாரியன் (Boppanaaryan)  உதவியால் அரங்கனின் திருக்கோவிலுக்கு உத்சவ மூர்த்திகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கோவில் திறக்கப்பட்டு, போலிச்சுவர் அகற்றப்பட்டு, மூலவர் காட்சி தர,  மக்கள் பெரிதும் மகிழ, பூஜைகள் நிகழ ஆரம்பித்தன. அப்போது ஒரு நாள், தமிழுக்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களின் சிலாரூபங்களை அழகாகச் செய்த பக்தர்கள் சிலர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்ய ஆசையாக எடுத்துவந்தனர். அதற்கும் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பன்னிருவரில் ஓரிரு ஆழ்வார்களைத் தவிர, மற்றோர் அந்தணர் அல்லாதோர் என்பது அவர்களது குதர்க்க வாதம். அப்போது அங்கு வந்திருந்த வேதாந்த தேசிகன், எதிர்ப்பவர்களை சந்தித்து சாந்தப்படுத்தி விளக்கலானார். வெவ்வேறு ஊரிலிருந்து, வெவ்வேறு பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும், நாம் வணங்கும் அதே திருமாலைத்தான், அரங்கனைத்தான் ஆழ்வார்களும் சரணடைந்தார்கள். அவனையன்றி வேறு நினைவின்றி வாழ்ந்து மறைந்த மகான்கள் அவர்கள். அத்தகைய திருமால் அடியாரை,  தாழ்ந்தோர் எனக் கூறுவது மட்டுமல்ல, அப்படி நினைப்பதே கூட பாபத்தில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும் என அறிவுறுத்தி, எதிர்த்த அசடுகளைப் பணியவைத்தார் தேசிகன். அதன்பின்னரே அரங்கனின் கோவிலில் ஆழ்வார்களின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி பூஜை செய்யப்பட்டன, என்கின்றன கர்ணபரம்பரைக் கதைகள். ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின்மூலம்,  வேதங்களில் மறைபொருளாகப் பேசப்படும் இறைரகசியங்கள் பலவற்றைத் தான் அறிந்ததாகக் கூறியவர் தேசிகன்.

அந்தக் காலகட்டத்தில், சமூகத்தின் ஒருசாரார் மட்டுமே வேதசாஸ்திரங்களைப் பயிலவேண்டும் என்கிற அபிப்ராயம், பாமரர்களைத் தாண்டி பண்டிதர்களிடமும் வெகுவாகக் காணப்பட்டது. ராமானுஜரைக் கொண்டாடிய வேதாந்த தேசிகன் அதனை மறுத்து வாதம் செய்தார்.அதனால் கடுமையாக விமரிசிக்கப்பட்டார்.  வேதங்கள், உபநிஷதங்கள் ஆகிய பண்டைய சாஸ்திரங்கள் மனிதன் இம்மண்ணுலக வாழ்வைக் கடந்த, ஞானத்தின் உயர்நிலையான பிரும்மத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறைகளைக் காட்டுபவை. ’இறுதி உண்மை’ எனப்படும் பிரும்மத்தைப்பற்றிப் பேசுவதால் வேத சாஸ்திர தத்துவங்கள் அனைவருக்கும் பொதுவானவை என தர்க்கம் செய்தார் தேசிகன். இறைவழி செல்வோர் யாராகிலும், பெண்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடியதுதான் அத்தகைய வேதங்கள், பிரமாணங்கள் போன்றவை எனத் தெளிவுபடுத்தினார் அவர். அதோடு நில்லாமல், சாதாரணருக்கும் புரியும்படியாக  வேதக்கருத்துக்களின் சாரத்தை சுருக்கமாக  ‘சில்லரை ரகஸ்யங்கள்’ எனும் நூலாக (மணிப்பிரவாள நடையில்) இயற்றினார்  தேசிகன்.

சமஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகிய மொழிகளிலும், மணிப்ரவாளத்திலும் (தமிழ், சமஸ்க்ருதம் கலந்த மொழிநடை)  பல புகழ்பெற்ற பக்தி நூல்களைப் புனைந்த தூப்புல் ஞானி வேதாந்த தேசிகன், தாய்மொழியான தமிழில் ஏதும் எழுதவில்லையா என ஆச்சரியப்பட்டுக் கேட்பவர் உண்டு. தமிழ் மொழியின்மீது மிகுந்த மதிப்பும், திராவிடவேதம் என அழைக்கப்படும் பிரபந்தங்களைப் படைத்த ஆழ்வார்களின்பால் ஆழ்ந்த பக்தியுமுடைய தேசிகன், தமிழில் எழுதாமல் எப்படி இருந்திருப்பார்? எழுதியிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல.  24 தமிழ் நூல்கள். அவற்றில் ஐந்து நூல் தொகுப்புகள் காலப்போக்கில், நமக்குக் கிடைக்காதுபோயின. மீதியுள்ள பத்தொன்பதில் சில கீழே:

கீதார்த்த சங்கிரகம், சரம சுலோகச் சுருக்கு ஆகிய நூல்கள் – கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன்னை சரணாகதி அடைந்து அமைதிபெறுவதுபற்றி சொன்ன உபதேசங்களின் சுருக்கம்.

திருமந்திரச் சுருக்கு, துவயச் சுருக்கு ஆகியவை – (மந்திரப்பொருளின் சுருக்கமான விளக்கம் தரும் நூல்கள்)

அடைக்கலப் பத்து – ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் விளக்குகிற சரணாகதித் தத்துவம்பற்றிய  நூல்.

அத்திகிரி மகாத்மியம், அத்திகிரி பஞ்சகம் – காஞ்சீபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாள்பற்றிய வரலாற்றுச் சுருக்கம், துதிப்பாடல்கள்

மும்மணிக்கோவை – பரப்பிரும்மமாகிய நாராயணனைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு

நவரத்தினமாலை – திருவஹீந்திரபுரம் பெருமாள்பற்றிய பாடற்தொகுப்பு

பிரபந்த சாரம் – திருமாலைப் பாடிய ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதம், அவர்கள் இயற்றிய நாலாயிரப் பிரபந்தத்தின் சிறப்புபற்றி வர்ணிப்பது.

வைணவ தினசரி – திருமாலின் தொண்டனானவன் தினசரி கடைபிடிக்கவேண்டிய பக்திசார்ந்த நெறிமுறைகள் பற்றி விளக்கும் நூல்

ஆகார நியமம் – வைணவனானவன் தன் தினசரி சாப்பாடு விஷயத்தில் எப்படிக் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், கொள்ளவேண்டிய உணவு, தள்ளவேண்டிய விஷயங்கள் ஆகியனபற்றி அறிவுறுத்தும் நூல்

நாற்பது வருஷ நீருக்கடி வாசத்திற்குப்பின், இப்போது மேல்வந்து அடியார்களுக்குக் காட்சிதரும் அத்திகிரி வரதன்பற்றி வேதாந்த தேசிகன் இயற்றிய தமிழ்ப் பாடல்களில் இரண்டு கீழே:

பத்தி முதலா மவற்றிற் பதியெனக்குக் கூடாமல்

எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம் போல்

முத்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

 

வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி

வாழி எத்திராசன் வாசகத்தோர் – வாழி

சரணாகதி என்னும் சார்வுடன் மற்றொன்றை

அரணாகக் கொள்ளாதார் அன்பு

 

-வேதாந்த தேசிகன்

**