தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களாக எங்குபோனாலும் இருபத்தி இரண்டு, இருபத்தி இரண்டாக காட்டிக்கொண்டு திரிந்தார்கள். அது என்ன இருபத்தி இரண்டு? லக்கி நம்பரா? இல்லை. இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எனத் தங்களை பாவித்துக்கொண்ட, தங்களை ஒரு குழுவாக மக்களிடம் காண்பிக்கத் துப்பில்லாமல், ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, காட்டிக்கொண்டு திரிந்த பெரிய(!), சிறிய கட்சிகளின் அமைப்பு. அந்த மூட்டைக்குள் காணப்பட்ட நெல்லிக்காய்களின் எண்ணிக்கைதான் அந்த இருபத்தி இரண்டு.
தேர்தல் முடிந்தது. இந்தியா முழுதுமாக, பெரும்பாலான வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு தலைவனின் கட்சி, அது ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியின் அரியணைக்குத் திரும்பிவிட்டது. பொதுவாகச் சொல்லப்படும் anti-incumbency ஓட்டுக்கள், இந்த முறை ஆளும் கட்சிக்கான pro-incumbency ஓட்டுகளாக மாறிவிட்டன! அதிசயம், ஆனால் உண்மை.
மேலே குறிப்பிட்ட அந்த ‘எதிர்க்கட்சிகள்’ எனும் மூட்டைக்கு, இப்போது என்ன ஆயிற்று? ’எக்ஸிட் போல்’ வந்த நாளிலிருந்தே மூட்டையின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன், முழுதாக அவிழ்ந்து விழுந்துவிட்டது. நெல்லிக்காய்கள் சிதறி மூலைக்கொன்றாக ஓடிவிட்டன. பரிதாபம்.

மேற்சொன்ன 22 நெல்லிக்காய்களில் சாம்பிளுக்குக் கொஞ்சம் பார்த்துவிடுவோமா? பொதுத் தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமை காண்பித்து மேடையேறி, மக்களைக் கேலி செய்வதுபோல் கையசைக்கும் இந்த எதிர்க்கட்சித் தலைகள் யார்? இதில் முன்னால் நிற்பது ஒரு காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் -ஆக மதிப்புடன், செல்வாக்குடன் இருந்து, பின்னர் காங்கிரஸ் (இந்திரா), காங்கிரஸ் (ஆர் (ராம்-ஜெகஜீவன் ராம்) எனப் பிளவுபட்டு, மீண்டும் இந்திய தேசீய காங்கிரஸ் என தேர்தல் ஆணையப் பதிவுகளில் காணப்பட்டாலும், பொதுவாக இந்திரா காங்கிரஸ் எனவே அறியப்பட்டு, இப்போது சோனியா-ராகுல் காங்கிரஸாக சிறுத்துக்கிடக்கும் ஒரு கட்சி. இதன் ’நேத்தா’ அதாவது தலைவர்தான் ராகுல் காந்தி. யார் இவர்? என்ன அடையாளம்? நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராகாந்தியின் பேரன், தென்னாட்டு வழக்கப்படி ‘அம்மை சோனியா’வின் மகன் இப்படித்தான் செல்கிறது அவரது அரசியல் அடையாளங்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, அவரை காங்கிரஸின் தலைவராக, ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போது, பிரதம(ர்) வேட்பாளராக ‘ஆக்க’, நிறுவ, அவரது அம்மா சோனியா காந்தி செய்து வரும் முயற்சிகள், சாகஸங்கள்.. சொல்லி மாளாது. ஆனாலும் உருப்படியாக ஏதும் நிகழவில்லை. எழுதிக்கொடுத்ததைத் தூங்கமூஞ்சித்தனமாக படிப்பதும், அல்லது ‘கிராமத்து சாமியாடி’யைப்போல் ஆவேசத்துடன் மேடையில் கூச்சலிடுவதும்தான் இந்த 15 ஆண்டுகளில் அவர் ‘கற்று’க்கொண்டது. சொல்லிக்கொடுத்த சொல்லும், கட்டிக்கொடுத்த சோறும் – எத்தனை நாளைக்கு வரும்? சோனியா காந்திக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. ஏனெனில், அவர் தமிழரல்லவே!
நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் பிரச்சாரங்களின்போது, ராகுல் காந்தி, ஒரு தேசிய கட்சியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக என்னென்ன பேசினார், எப்படியெல்லாம் சத்தம் போட்டார்! நாட்டின் பிரதமருக்கெதிராக, எந்தவித மரியாதையோ, கவனமோ இன்றி, அவர் பேசிய பேச்சுக்கள், வெறும் ஏச்சுக்கள். நரேந்திர மோதியின் முதல் வெற்றியை (2014) ஜீரணிக்கமுடியாத காங்கிரஸ், அவரது ஏழ்மையான பின்புலத்தை ஆரம்பத்திலிருந்தே (2014) ஏளனம் செய்து வந்தது. அதன் விளைவாக வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, பிரதமரை ‘சாய்வாலா’ (Chaiwala) என்று கிண்டலடித்தார்கள் காங்கிரஸ்காரர்கள். மற்ற ஜால்ரா கட்சிகளும் சேர்ந்துகொண்டன எனத் தனியாக சொல்லத் தேவையில்லை. இந்த வார்த்தையின் த்வனியை, ‘tone’-ஐ, அது பிரதமரை நோக்கி சொல்லப்பட்ட விதத்தை – தமிழர்போன்ற ஹிந்தி-பேசா மாநிலத்தவர் சரியாக உணரமாட்டார்கள். ’பிரதமரா இவன்? ’டீ வித்த பய!’. என்பதுதான் அது.
பிரதமர் மோதி தன்னுடைய 5 வருட ஆட்சியை நன்றாகவே செய்து முடித்துவிட்டார். 2019 பொதுத்தேர்தலில் நிற்கிறார். எதிர்ப்பது அதே ராகுல் காந்தியும் மற்ற பழைய ‘கதாபாத்திரங்களும்’. இப்போதும் மோதியை பிரதமர் எனக் குறிப்பிடவே மனமில்லை காங்கிரஸுக்கு. ராகுல் சொல்கிறார்: ’அவர் சும்மா ஒரு ’சௌக்கிதார்’தான்!’ chowkidar-காவலாளி என்கிற ‘அகராதி’ மொழிபெயர்ப்பு அல்ல இங்கே கவனிக்கப்படவேண்டியது. அதாவது, மோதியை பிரதமர் என்றெல்லாம் அழைக்கவேண்டியதில்லை. ’வெறும் காவலாளி, கேட்கீப்பர் மாதிரிதான்யா அவரு!’ என்ற பொருள்பட ஒரு கிண்டல், கீழ்த்தரமாகப் பார்த்தல்தான், அந்த வார்த்தையை ராகுல்காந்தி சொன்ன விதத்தில் காணப்பட்ட அம்சம். ஆனால் மோதி, அந்த ஏளன வார்த்தைப் பிரயோகத்தை சாமர்த்தியமாகத் தன் போக்குக்குத் திருப்பிவிட்டுவிட்டாரே.. ’அவர்கள் சொல்வது சரிதான். இவ்வளவு பெரிய தேசத்தைப் பாதுகாக்க, அதற்கு காவலிருக்க ஒருத்தன் வேண்டாமா? அது நான்தான். ஆகவே ’ சௌக்கிதார் ’ என்று என்னைக் கூப்பிடுவதும் சரிதான்’ என்றார் மோதி!
ராகுல் காந்தி & கோ.விற்கு ஏகப்பட்ட கடுப்பு. இந்த ஆளை என்னதான் செய்வது? இன்னும் எப்படி அவமானப்படுத்துவது? இப்போது வேறுவிதமாக ஆரம்பித்தார் ராகுல் காந்தி. மேலும் ஆத்திரத்தோடு மோதியைக் குறிப்பிட்டு, ’சௌக்கிதார் (ச்)சோர் (Chor) ஹை!’ என்றார். அதாவது ‘காவல்காரன் ஒரு திருடன்’! – இப்படிப் பிரதம மந்திரியைப் பார்த்து ஏதோ ஆத்திர, அவசரத்தில் ஒரு மேடையில், ஒருமுறை சொன்னதோடு நிறுத்திக்கொண்டாரா ? இல்லை. ஒவ்வொரு மீட்டிங்கிலும் கத்திக்கொண்டே போனார் ராகுல் காந்தி. மக்களுக்கு அதில் வெறுப்பேறும் வரை கத்தினார். பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில், அவரது ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒரு பகுதியினர் திருப்பி ‘மோதி! மோதி!’ எனக் குரல் எழுப்பி, ராகுலை பயமுறுத்தும்வரை அது போயிற்று! என்ன செய்வார், அவரும்? பேசுவதற்கு அவரிடம் வேறு சரக்கில்லை. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே போனால் மோதியின் பிரச்சாரமும் இந்த நிலைக்குக் கீழே போய்விடுமே. பதில் சொல்லாமல் விட்டுவிட்டாலோ, ஒத்துக்கொண்டதுபோல், பம்முவதுபோல் பொதுமக்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆகவே, மோதி ஒரு காரியம் செய்தார். தன்னுடைய நெருக்கடியான தேர்தல் மீட்டிங்குகளுக்கிடையில், ‘Mein bhi Chowkidar!’ ‘நானும் ஒரு காவல்காரன் தான்!’ எனும் நிகழ்ச்சி/மீட்டிங் ஒன்றை டெல்லியில் ஏற்பாடு செய்தார். (இந்த சமயத்தில் பல மோதி ஆதரவாளர்கள், ரசிகர்கள், ட்விட்டர் அக்கௌண்ட்டுகளில், தங்களின் பெயருக்கு முன்னால் ‘Chowkidar’ எனச் சேர்த்துக்கொள்ள, அதுவே ட்ரெண்டாகிப்போனது!). ’மே(ன்) பி சௌக்கிதார்’ நிகழ்ச்சியில் 5000-த்துக்கும் மேற்பட்ட அசல் சௌக்கிதார்கள் கலந்துகொண்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நாட்டின் வெவ்வேறு மூலையிலிருந்து ‘சௌக்கிதார்’ வேலைபார்ப்பவர்கள் பிரதமரோடு கலந்துரையாடினார்கள். அதில் ஒரு உரையாடலை ‘டைம்ஸ் நௌ’ சேனலில் கேட்க நேர்ந்தது. அதன் தமிழ் ஆக்கத்தைக் கீழே தருகிறேன்:
பிரதமர் மோதிக்கு, அன்றைய நிகழ்ச்சியின்போது, நாட்டின் ஏதோ ஒரு டவுனிலிருந்து ஃபோன் வருகிறது. சௌக்கிதாராக (காவலாளி) ஏதோ கம்பெனியிலோ, ஆஃபீஸிலோ வேலைபார்க்கும் ஒரு தொழிலாளி பேசுகிறார்:
சௌக்கிதார் : ‘ப்ரதான் மந்த்ரி சாஹிப்! (பிரதம மந்திரி அவர்களே!) நான் சௌக்கிதார் தேவேந்திர சிங் பேசுகிறேன். நமஷ்கார்!’
நரேந்திர மோதி: நமஷ்கார்! மேற்கொண்டு சொல்லுங்கள் ..
சௌக்கிதார்: நான் ஒரு சாதாரண சௌக்கிதார். இங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆப்.. தேஷ் கே ப்ரதான் மந்த்ரி! (நீங்களோ நாட்டின் பிரதம மந்திரி!). உங்களையும் ’சௌக்கிதார்’ என்கிறார்கள்! இது எப்படி இருக்கிறது?
மோதி: (சிரிக்கும் சத்தம் கேட்கிறது). Achchaa hi lag rahaa hai ! – நன்றாகத்தான் இருக்கிறது!
சௌக்கிதார்: ஆனால் உங்களைப்போய் ‘(ச்)சோர் (Chor-திருடன்) என்று சொல்கிறார்களே.. இது சரியில்லை, சாஹிப் !
மோதி: நீங்கள் சாதாரண இந்தியக் குடிமகன். உங்களுக்கு சரியில்லை என்று தோன்றுகிறது. நல்லது. ஆனால் அவர்கள் ’சௌக்கிதார் (ச்)சோர் ஹை!’ என்றுதான் ஒவ்வொரு இடத்திலும் என்னைப்பற்றி ஏளனமாகப் பேசி வருகிறார்கள். என்னை மட்டுமல்ல, சௌக்கிதார் பணியிலிருக்கும் உங்களைப்போன்ற நேர்மையான தொழிலாளர்களை, ஏழைகளை எல்லாம் அவமதிக்கிறார்கள். இத்தகையோர்தான் தாங்களே திருடிவிட்டு, போலீஸ் வரும்போது ’சௌக்கிதார் மீதுதான் சந்தேகம். கைதுசெய்யுங்கள்’ என்று உங்கள் பக்கம் கைகாட்டும் முதலாளிகள். இவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
சௌக்கிதார்: சாஹிப்! எங்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும். நாங்கள் அநியாயமாக அடிபட்டுவருபவர்கள். இருந்தும் பிழைப்புக்காக தினம் தினம் அதே வேலையை எங்களால் முடிந்தவரை, நேர்மையாக செய்துகொண்டிருப்பவர்கள்.
மோதி: உங்களைப்போன்ற சாதாரணர்களின் நேர்மையில்தான் இந்தியா என்கிற மகான் தேசம் நிற்கிறது. வாழ்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சௌக்கிதார்: ஆப் சிந்தா மத் கரோ சாஹிப்! (நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா!) நாங்கள் உங்கள் பக்கம் தான் இருக்கிறோம். எங்களைப்போல நாடெங்கும் தொழிலாளர்கள், சாதாரண மக்கள் (Aam Janta) எப்போதும் உங்கள் பக்கம்தான்.
மோதி: தன்யவாத்!(நன்றி) நமஷ்கார்!
– இப்படிச் சென்றது ஒரு இந்தியக் குடிமகனுடனான, பிரதமர் மோதியின் கலந்துரையாடல் அன்று (மார்ச் 31, தல்கத்தோரா ஸ்டேடியம், டெல்லி).
காங்கிரஸின் ராகுல் காந்தியும், ஏனைய எதிர்க்கட்சித்தலைவர்களும் மோதிக்கு எதிராக, அவரை அவமானப்படுத்தி அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக செய்த ஆவேச, அபத்தப் பிரச்சாரம் அவர்களுக்கே வினையாக முடிந்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேலும் கீழே சென்றார். ஃபானி புயலின்போது பிரதமரின் ஃபோன் காலை மம்தா ஏற்கவில்லை. ஃபோனையே எடுக்கவில்லை. பதிலை அடுத்தநாள் இப்படிச் சொன்னார்: ‘நீங்கள் ஒரு எக்ஸ்பைரி பிரதமர் (Expiry PM). நான் ஃபோன் எடுக்கவேண்டிய அவசியமில்லை!’ பதவியில் இன்னும் இருக்கும் ஒரு பிரதம மந்திரியைப் பார்த்து, ஒரு முதலமைச்சரின் எவ்வளவு முறையற்ற, கீழ்த்தரமான கமெண்ட் இது என கவனியுங்கள். அரசியலின் மிகமோசமான, கீழ்த்தர நகர்வுகளில் இதுவும் ஒன்று. மேலே குறிப்பிட்ட இந்த 22 எதிர்க்கட்சி உதிரிகள், இப்படித்தான் ஆளாளுக்கு, இந்தியப் பிரதமர் மீது எந்த ஒரு மரியாதையோ, முறையோ இன்றி, அவரை நரேந்திர மோதி எனும் தனி நபராகவே கருதி, தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் கீழ்நிலையை அடைய, அடைய ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று. ஒரு எதிர்க்கட்சித்தலைவரின் லட்சணமா இது? இத்தகைய கடுமையான துர்பிரச்சாரத்தின் விளைவாக, அதற்கு நேர் எதிர்விகிதத்தில் நரேந்திர மோதியின் புகழ் மக்களிடையே வளர்ந்துவந்ததை அறியவில்லை இந்த அசடுகள். அரசியல் வியூகம் தெரியா எதிர்க்கட்சிகளின் அடிமுட்டாள்தனம் இது.

தேர்தல் முடிவுகள் வந்து, நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற்றதை அறிந்தவுடன், இந்த 22-ல் பலர் காணாமற்போய்விட்டார்கள். டெலிவிஷன் சேனல் பக்கம் வந்து ஏதாவது சொல்லக்கூட ஒருவருக்கும் தைரியமில்லை. இவர்கள்தான் மோதிக்கு பதிலாக நாட்டை ஆளத் துடித்த தலைவர்கள்! ராகுல்காந்தி மட்டும் அன்று மாலை (மே 23), ஏதோ தயார்செய்துகொண்டுவந்தபடி, பத்திரிக்கையாளர் முன் நாலுவார்த்தை சொல்லிவிட்டு ஓடிவிட்டார். ’ராஜினாமா ! ராஜினாமா!’ என்று ராகுல் குதிக்க, காங்கிரஸ் தலைவர்கள் எனும் சம்ச்சாக்கள் ‘ஐயோ! ராஜினாமா செய்யாதீர்கள். கட்சி என்னாகும்? உங்களை விட்டால் எங்களுக்கு ஏது விமோசனம்!’ என்று அவரது காலடியில் விழுந்து கெஞ்சாத குறையாக, நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டார்கள் காங்கிரஸ் கட்சியில். எதிர்பார்க்கப்பட்ட ‘ட்ராமா’ அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு இது போகும். பிறகு ’பழைய குருடி, கதவைத் திறடி!’ -கதைதான்..
மேற்கு வங்கத்தின் அடிபட்ட புலியான மம்தா பானர்ஜி, தான் இன்னும் விழுந்துவிடவில்லை எனக் காண்பிப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் சொல்லிவருவார். தன்னை எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகராக காட்டி இந்தியா பூராவும், வலம்வந்துகொண்டிருந்த ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவிற்கு நித்திய வயிற்றுவலியாக ஜெகன் மோகன் ரெட்டி அமைந்துவிட்டார். அவரது கட்சி ஆந்திராவில் வலுவான மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்துவிட்டது. மஹா கட்பந்தன் (Maha Gat bandhan-மகா கூட்டணி) எனக் கூவிக்கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் என்போரின் விலாசம் தற்போதைக்குத் தெரியவில்லை! டெல்லியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் கேஜ்ரிவால் ஏழுக்கு ஏழையும் பாரதீய ஜனதாவிடம் இழந்துவிட்டு, விழிபிதுங்கிக் கிடக்கிறார். ஓரிரு மாநிலங்கள் தவிர, எதிர்க்கட்சிகளின் நிலைமை இந்தியாவெங்கும் மோசம்.
இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயகத்துக்கு, வலிமையான, பொறுப்பான எதிர்க்கட்சி அமைந்திருத்தல் மிக அவசியம். அப்போதுதான் ஆளும் கட்சியின் திட்டங்களை, செயல்பாடுகளை தேசீய உணர்வோடு, ஆக்கபூர்வமாக விமரிசிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அப்படி அமையவில்லையே இப்போது, என் செய்வது?
**
கார்ட்டூன்களுக்கு நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், கூகிள்.
**