ICC Women’s World Cup: செமிஃபைனலில் இந்தியா

மெல்பர்னில் நேற்று (27/2) மகளிர் டி-20 போட்டியில், இந்தியா நியூஸிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் செமிஃபைனலில்  பிரவேசித்திருக்கிறது.

முதலில் பேட் செய்த இந்தியா ஷெஃபாலியின் தாக்குதலினால், துவக்கத்தில் ரன்களை வேகமாகக் குவித்தது. ஆனால் ஷெஃபாலி  14-ஆவது ஓவர் வரை விளையாடியும் இந்திய ஸ்கோர் 140-ஐக்கூட எட்டமுடியவில்லை. காரணம் ஷெஃபாலி, தான்யா  தவிர மற்ற வீராங்கனைகள், பிட்ச்சிற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். இந்த மேட்ச்சில் ஸ்ம்ருதி மந்தனா ஆடியும் ஒரு புண்ணியமும் இல்லை. இப்படி ஆடினால் எப்படி 150-160 என்கிற அளவுக்கு ஸ்கோரை உயர்த்தமுடியும்? ஏனெனில் இனிவரும் போட்டிகளில் இப்படி வழிந்தால் ஒப்பேற்றமுடியாது.

நியூஸிலாந்து வீராங்கனைகளின் வெண்ணெய் விரல்களால் ஷெஃபாலிக்கு 3 ‘லைஃப்’ கிடைத்தது! அப்படியும் அவரால் அரைசதத்தை எட்டமுடியவில்லை. அவரது 46 தான் இந்திய அணியில் டாப் ஸ்கோர். அதில் 4 பௌண்டரிகளோடு வழக்கம்போல் 3 சிக்ஸர்கள்! அடுத்ததாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனான தான்யாவின் 23. நன்றாக ஆடும் ஜெமிமாவும் 10 ரன்களில் காலி. தீப்தி, வேதாவினால் நின்று ஆடமுடியவில்லை. கேப்டன் கௌர் இந்தியா விளையாடியிருக்கும் 3 மேட்ச்களிலும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. செமிஃபைனலிலாவது ஏதாவது செய்வாரா நமது தலைவி? இந்தியக் கோச் டபிள்யூ.வி.ராமனின் முகத்தில் கவலைக்கோடுகளின் குடியேற்றம்..

நியூஸி ஸ்டார் அமேலியா !

134 என இந்தியா கொடுத்த டார்கெட், நியூஸிலாந்துக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருந்திருக்கவேண்டும். ஆனால், விரைவிலேயே நியூஸிலாந்து 34க்கு 3 விக்கெட் என ஆனதால் தடுமாற்றம். க்ரீன் (24), மார்ட்டின்(25) நிலைமையை சரிசெய்ய முயன்றார்கள். இருந்தும் இந்திய ஸ்பின்னர்கள் -பூனம், ராதா, ராஜேஷ்வரி- விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தினர். 90க்கு 5 என சரிந்துவிட்ட ஸ்கோரை, ஆல்ரவுண்டர் அமேலியா கேர் (Amelia Kerr) தன் கையில் எடுத்துக்கொண்டார். இந்தியாவின் சிறந்த பௌலரான பூனம் வீசிய 18-ஆவது ஓவரிலேயே தன் வேலையைக் காண்பித்தார். 4 பௌண்டரிகள். பந்தை நன்றாக ஸ்பின் செய்யவிட்டுத் தள்ளி நின்றுகொண்டு ஃபைன் லெக் திசையில் தூக்கிவிட்டு அசத்தினார். நேற்று அமேலியாவின் பிறந்தநாளா! அவரே நியூஸிலாந்தை ஜெயிக்கவைத்துவிடுவார் போலிருந்தது. நியூஸி அணியே அவரிடமிருந்து இந்த ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை நியூஸிலாந்து வெற்றிக்கு. ஷிகா பாண்டே மிதவேகத்தில் வீசினார். முதல் பந்தே பவுண்டரி என அலறியது. அடுத்தடுத்து டைட் செய்தார் ஷிகா. 5-ஆவது பந்தில் கேர் ஒரு ஃபோர்! கடைசி பந்தில் 4 எடுக்கவேண்டும் என்கிற நியூஸி நெருக்கடியில், ஷிகா ஒரு யார்க்கரைப் போட்டு நியூஸி ஷோவை ஸ்விட்ச்-ஆஃப் செய்தார். ஜென்சன் ரன் அவுட்.இருந்தும் 1 லெக்-பை. அமேலியா கேர் 34 நாட்-அவுட் என நிற்க, இந்தியா 3 ரன்னில் தப்பிப் பிழைத்தது; நுழைந்தது செமிஃபைனலில்.

இப்போதிருக்கும் நிலைப்படி பார்த்தால், அடுத்த க்ரூப்பிலிருந்து இங்கிலாந்து செமிஃபைனலில் அனேகமாகப் புகுந்துவிடும். செமிஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அல்லது பாகிஸ்தானோடு மோத வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்திவிட்டது என்றபோதிலும். பார்ப்போம் பெண்களின் கதை எப்படி வளரப்போகிறது என.

**  

மறுபிறவிச் சிந்தனைகள், சுஜாதா ..

 

மறுபிறவி! அல்லது அடுத்த ஜென்மம். மரணத்திற்குப் பின் வரவிருப்பதாக நம்பப்படும், பல மதங்களிலும் சுட்டிக்காட்டி பயமுறுத்தப்படும் ஒரு ’பின்தொடரும் வாழ்க்கை’ (after-life). அப்படி ஒன்று இருக்க சாத்தியமிருக்கிறது என்று, எதற்கெடுத்தாலும் ப்ரூஃப் தேடும் விஞ்ஞானமே ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் ஏதேதோ பேசுவதாகத் தோன்றிய சிறுகுழந்தைகள் சில, தங்கள் முன் ஜென்ம நிகழ்வுகள் சிலபற்றிப் பெற்றோரிடம் கூறியிருக்கின்றன. தத்ரூபமாக வர்ணித்துள்ள சில சம்பவங்கள், இடங்கள். இன்ன இடத்தில் நான் முன்பு இருந்தேன். இன்னார் என் கணவர், அல்லது உறவினர், இந்தக் காரணத்தினால் அல்லது இப்படித்தான் அப்போது இறந்தேன்.. முந்தைய வாழ்வில் வாழ்ந்த ஊர், வீடு பற்றிய விபரங்கள்.  மூன்று, நான்கு வயதிருக்கும் முன்ஜென்ம நினைவோடு வந்திருக்கும் இந்தக் குழந்தைகளை அதுகளின் பெற்றோர் அந்த ஊருக்கெல்லாம் அழைத்துச் சென்றதில்லை. சில இடங்கள்பற்றி அவர்களுக்கே தெரியாது. அதிர்ச்சி. அப்படி ஒரு ஊரில், இப்படி ஒரு வீடு,  அடையாளங்கள் உண்டா, இந்தப் பிள்ளை திருப்பித் திருப்பிச் சொல்லிவருகிறதே – எனப் போய்ப் பார்த்தால், அவை சரியாக இருந்திருக்கின்றன. சொந்த ஊரிலேயே அலைந்திராத  குழந்தைக்கு தொலைதூர ஊர்/இடம்பற்றி எப்படித் தெரிந்தது? விளக்க முடியாத, விளங்கிக்கொள்ளவும் தெரியாத விஞ்ஞானம், பகுத்தறிவு,  வசதியாக மாட்டிக்கொண்டு, திருதிருவென முழித்த சம்பவங்கள். அப்பொழுதும் இருந்தன. இனியும் வரும்..

சித்திரம் : மேதை சர் ஜான் டென்னியல் (நன்றி :கூகிள்)

மனிதன் தொன்றுதொட்டு இந்த மறுபிறவி அல்லது ‘அடுத்த வாழ்க்கை’ (after-life) பற்றி நினைத்து ஏங்கியிருக்கிறான், மருண்டிருக்கிறான், குழம்பியிருக்கிறான், பயந்தும் இருக்கிறான், அவனவனுடைய இந்த உலக வாழ்வின் அனுபவங்களின், மிரட்சிகளின் பின்னணியில். ‘’ ஒரே மயக்கம்.. அம்மம்மா.. போதும், போதும், ஏன் இனி மறுபிறவி..! ‘ என்கிற திரைப்பாடல் வரி வேற, நேரங்காலம் தெரியாமல்…

அது சரி, இதுபற்றி பல மேதைகள், அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கும்  ஏதேதோ அவ்வப்போது தோன்றியிருக்கிறதே, என்னதான் சொன்னார்கள்..

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் சொல்கிறார்: “இறப்புக்குப் பின்னான ‘மறுவாழ்க்கை’ நிச்சயம் உண்டு என நம்புகிறேன். இறந்தவர்களின் ஆத்மாக்கள் உலவுகின்றன..”

“தாதுப்பொருளாக இருந்திருக்கிறேன். பிறகு தாவரமாக ஆனேன். மறைந்தேன். மிருகமாக ஆனேன். இறந்தேன்,  மனிதனாகவும் ஆகியிருக்கிறேன். இறந்ததினால் எப்போது, என்ன குறைவு வந்தது எனக்கு? – பாரசீக, சுஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமி.

“இதற்குமுன் பல ஆயிரம் தடவை நான் இந்த உலகில் இருந்திருக்கிறேன் என்பதில் நம்பிக்கை உண்டு; மீண்டும் பலமுறை திரும்பவும் செய்வேன்..” கதே (Goethe, German philosopher, writer)

”நமது மூளை ஒரு கம்ப்யூட்டர் போன்றது. அதன் உறுப்புகள் தேய்ந்தபிறகு உடைகிறது, செயலற்றுவிடுகிறது. உடைந்துபோன கம்ப்யூட்டர்களுக்கு சொர்க்கமோ அடுத்த உலகமோ இல்லை – ஸ்டீஃபன் ஹாக்கின், பிரிட்டிஷ் இயற்பியல் மேதை, விண்ணாய்வாளர்.

Tropic of Cancer, Tropic of Capricorn போன்ற தடைசெய்யப்பட்ட நூல்களை எழுதி சர்ச்சைகளைக் கிளப்பிய கடந்த நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளரான ஹென்ரி மில்லர் என்ன இப்படிக் கூறியிருக்கிறார் : ”இறப்பா? அப்படியெல்லாம் ஒன்றில்லை! யாரும் இறப்பதில்லை.. வேறொரு தளத்தில்  ஒரு முழுமையான உணர்வுவெளியை, உங்களுக்குத் தெரிந்திராத ஒரு புது உலகை அடைந்துவிடுகிறீர்கள்..”

The Pilgrimage, The Alchemist போன்ற பிரபல நூல்களின் ஆசிரியரான ப்ரஸீலிய எழுத்தாளர் பால் கோயெல்ஹோவுக்கு?  எந்த சந்தேகமுமில்லை: “ அடுத்த பிறவி என்பது உண்டு. நிச்சயம்.”

அறிவியல் புதினங்களுக்காக உலகளாவிய மதிப்புபெற்ற ஐசக் அஸிமோவ்-வுக்கு இதில் நம்பிக்கையில்லையாம். அத்தோடு விடவேண்டியதுதானே. மறுபிறவி என்று ஒன்று இருந்துவிட்டால்.. என ஒருவேளை அவர் மனம் சிந்தித்திருக்குமோ? மேலும் சொல்கிறார்: ” நரகத்தின் சித்திரவதைகள் இருக்கட்டும். சொர்கத்தில் ஒரேயடியாக bore அடிக்குமே..!” உம்மை யார் ஐயா அங்கே கூப்பிட்டது!

’ஆப்பிள்’ நிறுவனத்தின் நிறுவனரும், PC எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு/தயாரிப்புகளில் புரட்சிகள் செய்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் தன் உயிர் பிரிகையில், கண்கள் எங்கோ நிலைத்திருக்க,  முணுமுணுத்த வார்த்தைகள்..”Oh..wow.. Oh..wow..” என்ன நடந்திருக்கும்.. கதவு திறந்ததோ? காட்சி தெரிந்ததோ?

இன்னுமொரு எழுத்தாளரை, இந்த விஷயம் எப்படியெல்லாம் சீண்டியிருக்கிறது பாருங்கள் :

”  .. ஆனால் டி.என்.ஏ.(DNA) ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத, நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’ (agnostic)-ஆக, அதாவது, கடவுள் இருப்பைப்பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால், இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன், தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுதவேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல. வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்துவைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.”

இறப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன், ‘கற்றதும் பெற்றதும்’ தொடருக்கான ஒரு கட்டுரையில் சுஜாதா!

**

ICC Women’s T-20: இந்தியப் பெண்களுக்கு இன்னுமொரு வெற்றி

ஆஸ்திரேலியாவின் பர்த் (Perth) மைதானத்தில் நேற்று (24/2/2020) இந்திய மகளிரணி பங்களாதேஷை வென்றது.

ஸ்பின்னை நன்றாக ஆடக்கூடிய, தன் வசமும் நல்ல பௌலர்களை வைத்திருக்கும் மகளிர் அணி பங்களாதேஷ். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே போட்டியில் கடுமை தெரிந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் கேப்டன் ’நாங்கள் பேட்டிங்’ என்றார் முதலில். பிறகு என்ன நினைத்தாரோ ஃபீல்டிங் செய்வோம் என்றார்.. சிந்தனைக் குழப்பம்! இந்தியாவின் ஷெஃபாலியும், விக்கெட் கீப்பர் தான்யாவும் மட்டையுடன் இறங்கினார்கள்.  வைரல் ஜுரத்தினால் ஆடவில்லை ஸ்ம்ருதி மந்தனா. இந்தியாவுக்கு அதிர்ச்சி. அவருக்கு பதிலாகப் புகுந்தார் (வங்கத்தின்) ரிச்சா கோஷ் (Richa Ghosh)

ஷெஃபாலி வர்மா ஒவ்வொரு மேட்ச்சிலும் தன் சர்வதேச வருகையைப் பறைசாற்றி வருகிறார். வர்ணனையாளர்கள் அவரை இந்திய ’பவர்-ஹிட்டர்’ என்கின்றனர். சேஹ்வாக்-ஸ்டைல் அதிரடியில் ஷெஃபாலி, பங்களாதேஷை ஆரம்பத்திலிருந்தே தாக்க ஆரம்பித்தார். ஒரு 16-வயது சிறுமி கொஞ்சம் ஜாக்ரதையாக ஆரம்பிக்கவேண்டாம், எதிரணியின் சீனியர் பௌலர்களை மதிக்கவேண்டாம்.. ம்ஹூம்! அதெல்லாம் இவருக்கு ஆகாது.. Defensive push, prod என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே எகிறவிட்டு சீண்டிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சை (ஜஹானரா ஆலம், பன்னா கோஷ்) கவர், பாய்ண்ட் திசைகளில் அனாயாசமாகப் பறக்கவிட்டார். ஸ்பின்னர் நுழைக்கப்பட்டபோது தலைக்குமேலே தூக்கிவிட்டு ஸ்டேடியத்தில் விழவைத்தார் – சிக்ஸ்.  பங்களாதேஷ் ஃபீல்டர்கள் ஷெஃபாலியின் பேட், ஆகாசம், பௌண்டரி என வேடிக்கை பார்க்கவேண்டியிருந்தது. 19 பந்துகளில் 39 ரன்கள். 2 பௌண்டரி, 4 சிக்ஸர். ஷெஃபாலியின் ஆட்டத்தின்போது இந்திய ஸ்கோர் 53 (5 1/2 ஓவர்கள்) என இருந்தது! அவர் அவுட் ஆனபின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அமைதியாக ரன் சேர்த்தார். 34 ரன்களில் (2 பௌண்டரி, 1 சிக்ஸ்) ரன் -அவுட் ஆனபின் மற்றவர்களின் சரிவு. வேதா, தீப்தியின் குழப்ப ஓட்டத்தில் கோமாளித்தனமான ரன் -அவுட். 16 வயது ரிச்சா 14 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர்களில் வேதா கிருஷ்ணமூர்த்தி 11 பந்துகளில் 20 நாட் -அவுட் என விளாச, இந்தியா ஸ்கோர் 142-த் தொட்டது. இப்போதைக்கு உலகக்கோப்பையின் அதிகபட்ச ஸ்கோர்.

143 என்கிற இலக்கை எட்டக்கூடிய அளவுக்கு பங்களாதேஷிடம் பேட்ஸ்மன்கள் உண்டு என்பதால் இந்தியா கவனமாக பௌலிங் செய்தது. இந்திய ஃபீல்டிங்கின் தரம் மோசம். கேட்ச்சுகள் நழுவின. பங்களாதேஷ் ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் சிங்கிள்கள், அவ்வப்போது பௌண்டரி என இலக்கு நோக்கி தீர்மானமாக நகர்ந்தது.  ஆனால், இந்திய ஸ்பின்னர்களின் வருகை பங்களாதேஷ் மிடில் ஆர்டரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ராஜேஷ்வரியும், பூனமும் சுழற்றி, சுழற்றி வீச, விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில் கடைசி ஓவரில் 22 ரன் எடுத்தால் வெற்றி என்கிற நிலை பங்களாதேஷுக்கு. மிதவேகப் பந்துவீச்சாளர் ஷிகா பாண்டேயிடம் பந்தைக்கொடுத்தார் இந்தியக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ருமானா அஹ்மதை முதல் பந்திலேயே ’யார்க்’ செய்தார் ஷிகா. அடுத்தடுத்த பந்துகளில் அவர்களால் முண்டமுடியவில்லை. பங்களாதேஷ் 124 தான் எடுத்தது; 18 ரன் வித்தியாசத்தில் வென்று இந்தியப் பெண்கள் முத்திரை பதித்தார்கள். 

பங்களாதேஷிற்காக மின்னிய நட்சத்திரங்கள் விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானா (35) மற்றும் முர்ஷிதா காதும் (Murshida Khatum) (30). முர்ஷிதா எதிர்காலத்தில் பங்களாதேஷுக்கு திறனான வீராங்கனையாக வளரக்கூடும்.  பௌலிங்கில் கேப்டன் சல்மா காதுன் மற்றும் அணியின்  ஒரே ஹிந்து வீராங்கனை பன்னா கோஷ் (Panna Ghosh) -தலா 2 விக்கெட்டுகள். இந்தியத் தரப்பில் வீழ்த்திய விக்கெட்டுகள் பூனம்  3, ஷிகா, அருந்ததி  தலா 2. ராஜேஷ்வரி  1. மோசமான பௌலிங் கைங்கர்யம் தீப்தி . ரன்களை எதிரிக்குக் கொடுப்பதில் தாராளம்!

மையுண்ட விழிகளுடன் ஜஹானரா..!

பங்களாதேஷி மங்கைகளில் ஜஹானரா ஆலம்,   மைதீட்டிய விழிகளுடன், மஞ்சள்-பழுப்பு வண்ணத்தில் மாடலைப்போல் தோன்றியது, ஆட்டத்தின் கவர்ச்சிக் காட்சி! என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பூனம் யாதவ் நெற்றிக் குங்குமம் இல்லாமல் மைதானத்தில் இறங்குவதில்லை. அவர் ஒருவரே இந்திய அணியில் அப்படி!

பர்த் ஸ்டேடியம் சில இடங்களில் பஞ்சாபின் பாங்ரா நடனக்கூடம் போல் தோன்றியது! இந்திய சீக்கியர்கள் நிறையப்பேர் ட்ரம்களுடனும், குறிப்பாக சீக்கியப் பெண்கள், சிறுமிகள் பாரம்பரிய அலங்கார உடைகளில் வந்திருந்ததோடு அவ்வப்போது ஆடியும் காண்பித்தனர்! ஆஸ்திரேலியாவையே போட்டுத்தாக்கிய இந்திய மகளிர் அணியைக் குஷிப்படுத்தவேண்டாமா! இன்னொரு பக்கத்தில் பச்சை-சிவப்பு பங்களாதேஷ் ரசிகர்கள் புலிப்பொமைகளுடன் நடனமாடத் தயாராக இருந்தனர். வாய்ப்புதான் கிடைக்கவில்லை!

**

Ind-NZ Tests : இந்தியப் படுதோல்வி

நியூஸிலாந்திற்கெதிராக சமீபத்தில் ஒரு-நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பரிதாபமாகத் தோற்ற பின்பு கேப்டன் கோஹ்லி சொன்னது நினைவுக்கு வருகிறது:  ’ஒரு-நாள் தொடர்’ தோல்வியை ஒரு பெரிய விஷயமாக நாங்கள் பார்க்கவில்லை. இப்போதெல்லாம் டி-20-யும், டெஸ்ட் கிரிக்கெட்டும்தான் முக்கியம்..!’ இன்று அதிகாலை (24-2-2020) நியூஸிலாந்து முதல் டெஸ்ட்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதின் மூலம், விராட் கோஹ்லியின் முகத்தில் கரியை நன்றாகக் குழைத்துப் பூசிவிட்டது!

Virat Kohli &
Bishen Singh Bedi
-sharing memoirs !

பேஸின் ரிசர்வ் மைதானம், வெலிங்டன், நியூஸிலாந்து. இப்படித்தான் இங்கே ஒருமுறை (Feb. 1976) டெஸ்ட் மேட்ச்சைக் கேவலமாகத் தோற்றது இந்தியா. ஸ்பின்னர் பிஷன் சிங் பேதி (Bishen Singh Bedi) இந்தியக் கேப்டன். இந்திய அணியில் அப்போதும் ஜாம்பவான்கள் இருந்தார்கள்.  சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஷ்வனாத், மொஹீந்தர் அமர்நாத், ஆகியோருடன் திலீப் வெங்சர்க்கார், ப்ரிஜேஷ் பட்டேல், கிர்மானி …எனச் சென்றது அந்த அணி. இரண்டாவது இன்னிங்ஸில், 27 ஓவருக்குள் 81 ரன்னில் இந்தியா ஆல் அவுட்! மேட்ச்சைத் தோற்ற கடுப்பில் இந்தியக் கேப்டன் பிஷன் சிங் பேதி சொன்னது: Basin Reserve is the worst cricket ground in the world!

நல்லகாலம், இன்று தோற்ற கோஹ்லி இப்படி உளறவில்லை. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் மேட்ச் இது. பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் என பலவீனமான அணிகளுக்கெதிராக வென்று பாய்ண்ட்டுகளைக் குவித்திருந்த இந்தியாவின் முதல் தோல்வி. உண்மையின் விஸ்வரூபம். நியூஸிலாந்தின் பௌலிங் அட்டாக்கைத் தாங்கமுடியாமல், முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ஆல் அவுட்! அவமானம். கோஹ்லி, புஜாரா, ரஹானே, விஹாரி போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஆடியும் இதைத்தான் தரமுடிந்ததா? பிட்ச் அவ்வளவு மோசமா? பின்னே, நியூஸிலாந்து எப்படி 348 எடுத்தது? அதன் டெய்ல்-எண்டர்களே நூறுக்கும் அதிகமாக அடித்து நிமிர்த்திவிட்டார்களே இந்திய பௌலிங்கை? சரி, இரண்டாவது இன்னிங்ஸிலாவது சுதாரித்துக்கொண்டதா இந்தியா? ம்ஹூம். முக்கி, முனகி 191 வரை சென்றது. ஆக, உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியினால் இரண்டு இன்னிங்ஸிலும் 200-ஐத் தாண்ட முடியவில்லை. நிதர்சனம்.

கோஹ்லிக்கு ஏதேனும் பாடம் கிடைத்ததா? கோச் ரவி சாஸ்திரி எங்கே போனார்? டெஸ்ட்டின் ஆரம்பத்தில் என்ன சொன்னார் சாஸ்திரி-யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா : ‘உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என்கிற பெயருக்கேற்றவாறு இந்தியா ஆடவேண்டும்..’ கேட்க சுகமாக இருந்திருக்கும். ஆனால் இதுவா நடந்தது? நியூஸிலாந்தின்  ஸ்விங் பௌலர்களான டிம் சௌதீ (Tim Southee), ட்ரெண்ட் பௌல்ட்(Trent Boult), தன் முதல் மேட்ச்சை ஆடிய ஜேமிசன் (Kyle Jamieson), ஆகியவர்களின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் நெளிந்தனர் இந்திய பேட்ஸ்மன்கள் (மயங்க் அகர்வால், அஜின்க்யா ரஹானே தவிர. அகர்வாலின் இரண்டாவது இன்னிங்ஸ் 58-தான் இந்தியாவின் தரப்பிலிருந்து மேட்ச்சில் அடிக்கப்பட்ட ஒரே அரை சதம்). 2, 19 என  வழிந்த கோஹ்லி, தன் பேட்டிங் அழகுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே. இந்திய பேட்டிங் லட்சணம்பற்றி சுருக்கமாக கோஹ்லி சொன்னது: ”ப்ரித்வி ஷா நல்ல ஸ்ட்ரோக் ப்ளேயர். தனக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடித்திருப்பார். அடுத்த மேட்ச்சில் சரிசெய்துகொள்வார்!” ஓ! ப்ரித்வி ஷா சரியாக விளையாடினால் அடுத்த மேட்ச் நம் கைக்கு வந்துவிடுமா? கோஹ்லி-சாஸ்திரி think-tank இப்படித்தான் வேலை செய்கிறதா!  கோஹ்லிக்கு சர்தார்ஜி பிஷன் சிங் பேதியே பரவாயில்லையே! இதை எழுதும் வரை சூப்பர் கோச் சாஸ்திரியிடமிருந்து கமெண்ட் இல்லை. பாத்ரூமிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ?

சுருக்கமான ஸ்கோர்: India First inngs: 165. Second: 191. New Zealand First inngs: 348. Second: 9/0. NZ Won by 10 wkts.

**

ICC T-20 Women’s World Cup : இந்தியாவின் அதிரடி ஆரம்பம்

மகளிர் டி-20 கிரிக்கெட்டின் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. உலகின்  9 முக்கிய கிரிக்கெட் தேசங்களோடு 10-ஆவது நாடாக, அதிசயமாக தாய்லாந்து!   இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிகின்றன. Group A: ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ். Group B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து. இந்திய மகளிர் அணிக்கு  முன்னணி பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur) தலைமை தாங்குகிறார்.

இரண்டு நாள் முன்பு நடந்த முதல் மேட்ச்சில் நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆடிய ஆட்டம் கடுமையான மோதலை வெளிக்கொணர்ந்தது. ஸிட்னியில் (Sydney) முதன்முதலாக, பெண்கள் மேட்ச் ஒன்றிற்கு 18 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் வந்திருந்து அமர்க்களப்படுத்தினர். இந்திய மூவர்ணக்கொடிகளும், நீலச்சட்டைகளும் மினுமினுக்க, அரங்கெங்கும். ஆஸ்திரேலியர்கள் நிறையப்பேர்  தங்களது அணியைப் பெருமையுடன் ஊக்குவிப்பதைக் காணமுடிந்தது. பள்ளி சிறுவர்கள் அதிகமாக அமர்ந்து ஆர்ப்பரித்தது கோலாகலத்தைக் கூட்டியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியப் பெண்கள், இந்திய அணியை முதலில் பேட் செய்யச் சொன்னார்கள். இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷெஃபாலி வர்மா (Shefali Verma), ஸ்ம்ருதி மந்தனா அதிரடி பேட்டிங் செய்பவர்கள். அதிலும் ஷெஃபாலி சர்வதேசக் கிரிக்கெட் உலகில்  நுழைந்திருக்கும் ஒரு சிறுமி போன்றவர். 16-ஆவது வயதுக்குள் கடந்த மாதமே பிரவேசித்தவர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்யாமல் மீளப்போவதில்லை என கங்கணம் கட்டி நுழைந்திருந்தாரோ? மந்தனா வழக்கத்துக்கு மாறாக அமைதிகாக்க, ஷெஃபாலி சுழற்றினார் பேட்டை. 29 ரன்களில் அவுட்டானார் எனினும் அதில் 5 பௌண்டரி, 1 சிக்ஸ் ! ஷெஃபாலி அவுட்டானதும்தான் கொஞ்சம் ஆசுவாசமூச்சு விட்டது ஆஸ்திரேலியா. அதற்குப்பின் மந்தனா, கேப்டன் கௌர் என இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மன்களை சொற்ப ஸ்கோரில் வீட்டுக்கு அனுப்பியது. ஸிட்னியின் ஸ்லோ-பிட்ச்சிற்கு ஏற்றபடி ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா சிங்கிள்களாக ஓடி ரன் சேர்த்தனர். ஷெஃபாலி போனபின்பு இந்தியாவுக்கு ஒரே பௌண்டரிதான் வந்தது. இந்திய அணி 132 -க்கு 4 விக்கெட் என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. தீப்தி 49 நாட்-அவுட்.

Spin magician
Poonam Yadav

வலிமையான ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இது ஊதித்தள்ளிவிடக்கூடிய இலக்குதான். அப்படி ஒரு மலர்ந்த புன்னகையாக, பேட்டிங்கைத் துவக்கி நன்றாக ஆடியது ஆஸ்திரேலியா. 133 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில், ஒரு கட்டத்தில் 66/2 என இருந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 67 ரன்கள்தான் தேவை. 8 விக்கெட்கள் கைவசம். அப்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், இந்திய சுழல் மந்திரவாதி பூனம் யாதவிடம் கொடுத்தார்: போடுடி பந்தை! என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்..

ஆஸ்திரேலியாவின் விக்கெட்கீப்பர் ஹீலி (Alyssa Healy) அபாரமாக அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்தார். தன் முதல் ஓவரிலேயே அவரைத் தூக்கி வீசினார் பூனம்.  அடுத்த ஓவரில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். மூன்றாவது பந்திலும் விக்கெட் வந்திருக்கவேண்டியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் கார்ட்னரின் (Ashleigh Gardner) ஸ்டம்பை உரசி, பெயிலை விழவைத்தது. ஆனால் பந்து இரண்டு முறை பௌன்ஸ் (bounce) ஆனதாக அம்பயரால் தீர்ப்பளிக்கப்பட்டு நாட்-அவுட் என்றனர். பரவாயில்லை. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தைத் தாக்கிவிட்டார் பூனம். ஆட்டம் கண்ட நிலையில் 133-ஐ நோக்கி மெல்ல நகரப் பார்த்தது ஆஸ்திரேலியா. அதிரடி காட்டமுயன்ற கார்ட்னரை,  ஷிகா பாண்டே காலி செய்தார். பூனம் யாதவ் 4 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 115 ரன்களில் பரிதாபமாகத் தோல்விகண்டது.(A. Healy 51, A.Gardner 34). மீடியம் பேசர் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும், இன்னொரு ஸ்பின்னரான ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gaekwad) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு ரன் அவுட்கள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் முகங்கள் உறைந்துபோய்விட்டிருந்தன.

பூனம் யாதவின் பௌலிங் சாகஸத்தை devilish spin என்கிறது, ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று. ஆறு வருஷங்களாக இந்திய அணிக்காக ஆடிவரும் சீனியர் வீராங்கனை. கடந்த வருடம் காயத்தினால் ஆடமுடியாது தவித்தார். உலகக்கோப்பைக்கு முன்னர்தான் தகுதிபெற்று அணியில் சேர்க்கப்பட்டவர்.

இந்திய அணியின் வலிமையான அம்சம் ஸ்பின் பௌலிங் (பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட்). ஸிட்னியைத் தவிர்த்து மற்ற மைதானங்களில் ஸ்பின் எடுபடாது போகலாம். அப்போது இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி ஆகியோர் உழைக்கவேண்டியிருக்கும். பேட்டிங்கில் ஸ்ம்ருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues( மற்றும் தான்யா பாட்டியா (Tanya Bhatia)  ஆகியோரின் பங்களிப்பு டி-20 உலகில் ஆர்வமாகப் பார்க்கப்படும்.

ஒரு இனிய மகளிர் உலகக்கோப்பை ரசிகர்களுக்காக, கண்முன்  விரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடுத்த மேட்ச் பங்களா தேஷுக்கு எதிராக 24/2/2020 அன்று. ஸ்பின் பௌலிங்கும், பேட்டிங் திறமைகளும் போட்டிபோடலாம். ரசிப்போம்.  

**

Tat Sat ..

It is 

The inexorable

Arduous process of

Eligibility and qualification..

A journey through long

Seemingly endless stretches of

Chilling, eerie darkness

Before he arrives

At an unthinkable point in time

When he happens to

Squint his small, little eyes

To eventually see it

Feel it

Relish it 

The light

At the end

Of it all

**

சஞ்சாரம்

போதும்.. போதும்

போய்விடலாம்

போய்விடலாமா

ஆமாம்..  போய்விடலாம்

அது சரி..

இருத்தல் என்பதுதானென்ன

அழகான இந்த உலகிலிருந்து

மெல்ல மெல்ல

விலகிப் போதல்தானே

விலகி விலகி

விடுபட்டுப் போய்விடல்

இருக்கும்போதும்

இல்லாது

போனபிறகும்

இனிதே தொடரும்

வாழ்தல்..

**

U-19 Cricket World Cup : கை நழுவிய கோப்பை

தென்னாப்பிரிக்காவில் நேற்று இரவு முடிந்த ஃபைனலில் இந்தியாவைத் தோற்கடித்த பங்களாதேஷ், முதல்தடவையாக U-19 உலகக் கோப்பையை வென்றது. Potchefstroom -ன் ஸென்வெஸ் பார்க் மைதானத்தில் கிரிக்கெட் நடந்தது என்பதைவிட, வாய்ச்சவடால்களும், வெறித்தனங்களும் அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக  ஃபைனலின் கடைசிப் பகுதியில் காணப்பட்ட வன்மம், ஐசிசி-யின்  கடும் கவனத்துக்கு வந்திருக்கிறது. பங்களாதேஷின் கொண்டாட்டம் என்பது மைதானத்தில் ரௌடித்தனம் என்கிற அளவுக்குப் போய்விட்டது எனவே தோன்றுகிறது. Their reaction was dirty – என்று ‘லேசாக’க் குறிப்பிட முனைகிறார் இந்தியக் கேப்டன் ப்ரியம் கர்க் (Priyam Garg). பங்களாதேஷ் கேப்டன் அக்பர் அலி ”What happened, should not have happened. I am sorry on behalf of the team..” என்று தடுமாறிச் சொல்லியிருக்கிறார். மேட்ச் ரெஃப்ரீயிடம் முறையீடு செய்யப்போன, அதிர்ச்சியிலிருந்த இந்திய மேனேஜ்மெண்ட்டிடம், மேட்ச்சின் video footage-ஐப் பார்த்து முடிவெடுக்கவிருப்பதாக சமாதானப்படுத்தியிருக்கிறது ஐசிசி.

Bangladesh lifts U-19 World Cup

கிரிக்கெட் கோணத்தில் பார்க்க, மேட்ச்சில் என்னதான் நடந்தது? டாஸ் வென்ற பங்களாதேஷ், முதலில் பந்துவீச்சு என்றது. மைதானத்தின் ஈரப்பதம் வேகப்பந்துவீச்சுக்கு இசைவானது என்கிற அதன் முடிவு சரி என்றவாறு, அதீத நிதானம் காட்டி ஆட ஆரம்பித்து ரன் எடுக்கமுடியாமல் தடுமாறியது இந்தியா.  இரண்டாவது ஓவரிலேயே பங்களாதேஷ், தங்கள் எதிரியான இந்திய அணியை எப்படி அணுகப்போகிறது என்கிற ஹிண்ட் கிடைத்தது. ஷொரிஃபுல் இஸ்லாமின் பந்தொன்றை முன் வந்து தடுத்தாடினார் திவ்யான்ஷ் சக்சேனா.  உடனே பாய்ந்து வந்து பந்தை எடுத்த இஸ்லாம் ஏதோ  ரன் -அவுட் செய்யமுயற்சிப்பதாகக் காட்டி சக்ஸேனாவின் தலையை நோக்கி வேகமாகப் பந்தை எறிந்தார். சக்ஸேனா உடனே குனிய, பந்து விக்கெட்கீப்பரிடம் சென்றது. இங்கே நிற்கவில்லை இஸ்லாம். சக்ஸேனாவை நெருங்கி, அவர் முகத்துக்கெதிரில் ஏதோ முணுமுணுத்துக் கடுப்பேற்றியது தெரிந்தது. மேட்ச் முழுதும் இஸ்லாம் அளவுமீறிய sledging-ல் ஈடுபட்டு இந்திய பேட்ஸ்மன்களின் கவனத்தைக் கலைக்க முயன்றார். (இறுதியில் நடந்த fracas-லும் ஷொரிஃபுல் இஸ்லாமின் பங்கு தனித்து வெளிப்பட்டது.)

இந்தியாவின் அளவுக்கதிகமான தடுப்பாட்டம் அதை நிர்கதியில் கொண்டுபோய்விடும் என துவக்கத்திலேயே சிக்னல் கிடைத்தது. முதல் பவர் ப்ளேயில் (1-10 ஓவர்கள்) இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 26 ரன்கள்.  முட்டாள்தனமான அணுகல். அடுத்த கட்டங்களிலும் இந்த ‘கவனமான’ ஆட்டம் தொடர்ந்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அவ்வப்போது ஆவேசமாக மட்டையை சுழற்றினார். திலக் வர்மா (நம்பர் 3) பொறுப்பாக, ஆனால் மெதுவாக ரன் சேர்க்க முயன்று 38 ரன்னில் அவுட்டானார். அடுத்தமுனையில் வலிமை காண்பித்த   ஜெய்ஸ்வாலோடு, சேர்ந்து ஆட ஒரு பேட்ஸ்மன் கிடைத்தால்தானே. கேப்டன் ப்ரியம் கர்க், சித்தேஷ் வீர், அன்கொலேகர் ஆகியோர் தெண்டம். 20-30 ரன் எடுக்கக்கூட மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களால் முடியவில்லை என்றால் பங்களாதேஷுக்கு சவாலான ஒரு டோட்டலை எப்படிக் கொடுக்கமுடியும்? 22 ரன் எடுத்து விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மன் ஜுரெல் வீழ்ந்தவுடன், தொடர்ந்து சரிவுகள். போதாக்குறைக்கு மடத்தனமான ஒரு ரன்-அவுட் வேறு. அன்கொலேகரும், ஜுரெலும் தேவையில்லாத சிங்கிள் எடுக்க முயன்று, ஒரே பக்கத்தில் கோட்டைத் தொடமுயற்சித்த அபத்தக் காட்சி! யாருக்கு ரன் -அவுட் கொடுப்பது என்றே ஆன்-ஃபீல்டு அம்பயர்களால் முடிவு செய்ய முடியவில்லை! இதுவா உலகக்கோப்பை  ஃபைனலில் பேட்டிங் செய்கிற லட்சணம்? ஜெய்ஸ்வால் மட்டும் ஒளிர்ந்தார். அபாரமாக ஆடி, 88 ரன் எடுத்து அவர் அவுட் ஆனவுடன், அடுத்துவந்த இந்திய பேட்ஸ்மன்கள் விழித்தார்கள். க்ரீஸில் ‘நிற்க’ முயன்றார்கள். பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சு – குறிப்பாக ஷொரிஃபுல் இஸ்லாம் – அவர்களை அங்கே தங்கவிடவில்லை. ஆஃப் ஸ்பின்னர் ரகிபுல் ஹாஸன் (Rakibul Hassan)  அளவாக, அருமையாக வீசி இந்தியர்களை இறுக்கினார். சிங்கிள்  எடுத்தாலே சாதனை என்கிற அளவிற்கு போய்விட்டிருந்தது நிலைமை! இறுதியில் கடைசி 7 இந்திய விக்கெட்டுகள் 21 ரன்களில் பறிபோனதென்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 177-ல் இந்தியா ஆல் அவுட். அவிஷேக் தாஸ் 3, ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்கள்.

ப்பூ..! 178 தானா எடுக்க வேண்டும் உலகக்கோப்பையை வெல்ல! பங்களாதேஷிற்கு ஒரே குஷி. துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய வேகப்பந்துவீச்சை அனாயாசமாகத் தாக்கி ரன் சேர்த்தார்கள். இந்தியாவின் ஸ்பின் ஸ்டாரான ரவி பிஷ்னோய் வரும்வரை ஆட்டம்போட்டார்கள். பிஷ்னோய் லெக்-ஸ்பின் 5 ஓவர் போட்டார். 4 பங்களாதேஷ் பேட்ஸ்மன் உடனடியாக பெவிலியன் வாபஸ்! Classic leg spin on show. இதில் ஜுரெல் நிகழ்த்திக்காட்டிய மின்னல்வேக ஸ்டம்பிங்கும் அடங்கும். தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போலிருந்தது இப்போது பங்களாதேஷிற்கு. பிஷ்னோய் ஒரு பக்கம் பங்களாதேஷிகளைப் போட்டு இறுக்க, அடுத்தபக்கத்தில் இந்திய வேகப்பந்துவீச்சு நேரங்காலம் தெரியாமல் சொதப்பியது.  எக்ஸ்ட்ரா ரன்கள்வேறு இந்தியாவின் நிலையை மோசமாக்கியது. தொடையில் தசை இறுக்கம் எனச் சொல்லி பாதியில் வெளியேறியிருந்த பர்வேஸ் இமோன்  இப்போது திரும்பிவந்து ஆடினார். பிஷ்னோயின் கடைசி இரண்டு ஓவர்களை ஜாக்ரதையாகத் தடுத்தாடி, விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். கேப்டன் அக்பர் அலி விவேகத்துடன் அதிரடியைத் தவிர்த்து சிங்கிள் சிங்கிளாக ஓடியதோடு, எதிர் நிற்கும் பேட்ஸ்மனை நிதானப்படுத்திக்கொண்டு ஆடியது பங்களாதேஷ்  வெற்றிக்கு வழிவகுத்தது. இறுதிப் பகுதியில் சுஷாந்த் மிஷ்ரா 2 மற்றும் ஜெய்ஸ்வால் ஒரு  விக்கெட் வீழ்த்தியும் பங்களாதேஷை நிறுத்த இந்தியாவால் முடியவில்லை. ஃபீல்டிங்கும் மோசம். இமோன் 47-ல் விழுந்தார். பங்களாதேஷ் ஸ்கோர்  163/ 7 என இருக்கையில், மழைவந்து பூச்சி காட்டியதால், ஆட்டம் கொஞ்சநேரத்துக்கு  நிறுத்தப்பட்டது. திரும்பி பங்களாதேஷ் வருகையில், DL-முறையின்படி அவர்கள் 170 எடுத்தால் வெற்றி என்ற நிலை. பங்களாதேஷ் பதற்றம் காட்டாது தட்டித் தட்டி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடிய அணி. கேப்டன் அக்பர் அலி 43 நாட்-அவுட். பங்களாதேஷுக்கு முதல் உலகக்கோப்பை இது.  அக்பர் அலி பங்களாதேஷின் overnight hero !

ஆட்டநாயகனாக பங்களாதேஷின் அக்பர் அலி, தொடர் நாயகனாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருதுபெற்றனர்.

Tailpiece :  இறுதிக்கட்ட டிராமாபற்றி தங்களுக்கு வந்த வாசகர் கருத்துகளில்,  ‘டாப் கமெண்ட்’- ஆக   ’டைம்ஸ் ஆஃப் இண்டியா ‘ நாளிதழ் இதனை வெளியிட்டுள்ளது :

”Hateful people overall. No class, no manners, whatsoever. Winning 1 or 2 matches out of hundreds of matches, that too in under 19, when India’s Sr team has beaten them black and blue so many times but never behaved like wild animals. This speaks a lot about their upbringing, education and overall traits as human beings. Shameful is a very soft word for them.”

 ..

U-19 உலகக்கோப்பை : பாகிஸ்தானை விரட்டிவிட்ட இந்தியா

கடும்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட செமிஃபைனலை இந்திய வீரர்கள் அனாயாசமாகக் கையாண்டு, பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டார்கள். கிரிக்கெட் பண்டிட்கள்கூட இப்படி ஒரு பாக். annihilation-ஐ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 250-280 வரையான ஸ்கோரை மனதில் கொண்டு நிதானமாக ஆடத் துவங்கியது. 250 என்கிற ஸ்கோரை பாகிஸ்தான் எட்டினால், அது இந்தியாவுக்கு சவாலாக முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே வர்ணனையாளர்கள் உதிர்த்துவந்தார்கள்! துவக்க ஆட்டக்காரர் ஹைதர் அலியின் 56 மற்றும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்த பாக். கேப்டன் ரொஹெய்ல் நாஸிரின் 62 ஆகியவற்றைத் தவிர, இந்த 50-ஒவர் மேட்ச்சில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து காண்பிக்க ஒன்றுமில்லை!  இந்திய பௌலர்கள் மிகவும் துல்லியமாக வீசி, பாக். பேட்ஸ்மன்களை நெருக்கிக்கொண்டே இருந்தார்கள். பாகிஸ்தான் தூக்கி அடிக்க முயல்கையில் அவர்கள் அவுட் ஆகி வெளியேறினார்கள். அருமையான இந்திய ஃபீல்டிங்கும் துணைநின்றது. சக்ஸேனாவின் ஒற்றைக் கை டைவிங் கேட்ச் டாப்-க்ளாஸ். திணறி, மூச்சுவாங்கிய பாகிஸ்தான்,  172-ல் உயிரை விட்டது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட், அன்கொலேகர் மற்றும் ஜெய்ஸ்வால் தலா ஒரு விக்கெட்  எனப் பாகிஸ்தானை சித்திரவதை செய்தார்கள்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

173 என்கிற இலக்குடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா (Divyaansh Saxena)வுடன், இந்தியா சவாலை ஏற்று ஆட ஆரம்பித்தது. பாகிஸ்தான் எடுத்தஎடுப்பிலேயே ஆக்ரோஷமாக வேகப்பந்து வீசி இந்திய துவக்கத்தை சிதைக்க முயன்றது. ஜாக்ரதையாக ஆடிய இந்திய துவக்க வீரர்கள், பிரதானமாக சிங்கிள்ஸ், அவ்வப்போது ஒன்றிரண்டு பௌண்டரி என கூலாக முன்னேறிக் கொண்டிருந்தது பாகிஸ்தானுக்குக் கடுப்பை ஏற்படுத்தியது. என்ன முட்டிமோதியும், விக்கெட்டோ விழுவதாயில்லை. பாக். கேப்டன் நாஸிர், வேகம், ஸ்பின் என மாற்றி மாற்றி வியூகம் அமைக்கப் பார்த்தார். பாச்சா பலிக்கவில்லை. அதற்குள் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், தான் யாரென பாகிஸ்தானியருக்குக் காண்பிப்பதில் முனைந்தார். ஷார்ட்-பிட்ச் பௌலிங் போட்டு முகத்துக்கு நேராக பந்தை எகிறவைத்து எரிச்சலூட்டிய பாக். பௌலர் அப்பாஸ் அஃப்ரீதி (Abbas Afridi)யை, குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தார். போதாதற்கு ஸ்பின்னர் ஆமீர் அலியும் ஜெய்ஸ்வாலின் கோபத்திற்குப் பலியாக, பாக். ஃபீல்டிங் குழம்பித் தடுமாறியது. பௌண்டரி, சிக்ஸர் எனப் பறந்தன. அடுத்த முனையில் சக்ஸேனா அதிநிதானமாக தட்டிக்கொண்டே  வந்து 50-ஐத் தொடுகையில், 80-ஐத் தாண்டி சீறினார் ஜெய்ஸ்வால். இறுதியில் ஜெய்ஸ்வாலின் ஒரு அனாயச சிக்ஸரில்,  இலக்கைத் தாண்டியது இந்தியா.

உலகக்கோப்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் சதம் இது : 105 ரன்கள், 8 பௌண்டரி, 4 சிக்ஸர்களுடன். ஆட்டநாயகன் விருதும் கையில் வந்தது. IPL 2020-க்காக இவரை வாங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் குஷியாகியிருக்கும்! கூட ஒத்துழைத்து பாக். பௌலர்களை மழுங்கவைத்த சக்ஸேனாவும் (59 நாட்-அவுட்) பாராட்டுக்குரியவர். இந்தியா  விக்கெட் இழப்பு ஏதுமின்றி ஜெயித்து, பாகிஸ்தானை உலகக்கோப்பையைவிட்டு விரட்டிவிட்டது! பாகிஸ்தானின் கோச், மேனேஜர் முகங்கள் பார்க்க சகிக்கவில்லை. பாக். ரசிகர்கள் போன இடம் தெரியவில்லை. தங்களது நாட்டில், பாக். பௌலர்கள் கடும் விமரிசனத்துக்கு உட்படுவார்கள். கேப்டன் ரொஹெய்ல் நாஸிர், ஹைதர் அலி ஆகியோர் நன்றாக ஆடியவர்கள்; யாரும் குறை சொல்லமுடியாது.

நாளை (6-2-2020) நடக்கவிருக்கும் இரண்டாவது செமிஃபைனலில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியோடு இந்தியா, U-19 உலகக்கோப்பைக்கான ஃபைனலில் பிப்ரவரி 9 அன்று ஆடும். ஞாயிறு மதியம் 1.30 (IST) ’ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3’ நினைவிலிருக்கட்டும் !

**

இந்தியா – பாகிஸ்தான் : U-19 உலகக்கோப்பை

இன்னுமொரு Clash of the Titans ..  இந்தியா – பாகிஸ்தான் யுத்தம்! இன்று (04-02-2020) தென்னாப்பிரிக்காவின் போட்ஷெஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom)  மைதானத்தில் விளையாடப்பட்டு வருகிறது, இரு பரம எதிரிகளுக்கிடையேயான செமிஃபைனல் மேட்ச். இரு தரப்பிலும் துடிப்பான இளம் வீரர்கள். காலிறுதியில் வலிமையான ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா எனத் தூக்கிக் கடாசிவிட்டு இந்தியா அரையிறுதியில் நுழைந்திருக்கிறது. பாகிஸ்தான் அணியும் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே எனக் கடந்து இந்தியாவை முக்கியமான மேட்ச்சில் சந்திக்கிறது.

இந்திய அணியின்  பேட்ஸ்மன்களில் பிரதானமானவர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ப்ரியம் கர்க் (Priyam Garg) (கேப்டன்), திலக் வர்மா, த்ருவ்  ஜுரெல் (Dhruv Jurel, WK) என்போர். 140 கி.மீ.க்கு மேல் பந்துவீசும் கார்த்திக் தியாகியோடு, ஆகாஷ் சிங், சுஷாந்த் மிஷ்ரா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கவனிக்கத்தக்கவர்கள். திறன்காட்டிவரும் ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) மற்றும் மும்பையின் அதர்வா அன்கொலேகர் (Atharva Ankolekar, Allrounder) தூள் கிளப்ப வாய்ப்பிருக்கிறது – பாகிஸ்தான் ஸ்பின்னை அருமையாக ஆடும் என்றபோதிலும். துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் லெக்ஸ்பின் பௌலரும்கூட. (ரவி பிஷ்னோய் ஏற்கனவே ஐபிஎல் 2020-ல் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.) வெஸ்ட் இண்டீஸின் வர்ணனையாளர் இயான் பிஷப் இவரை Wizard of the Ball என அழைக்கிறார்! பிஷ்னோயும், தியாகியும் பாகிஸ்தானுக்கெதிராக என்ன செய்யவிருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

இந்தியாவுடனான செமிஃபைனலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாக பாகிஸ்தான் சொல்கிறது. ரொம்ப சரி! பாகிஸ்தான், தங்கள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரொஹெல் நாஸிர் (Rohail Nazir), ஹைதர் அலி, முகமது ஹாரிஸ் போன்ற பேட்ஸ்மன்களை நம்பியுள்ளது. பௌலிங்கில் முகமது வாஸிம், இர்ஃபான் கான், முகமது ஆமீர் கான் (வேகப்பந்து வீச்சாளர்கள்) மற்றும் ஆமீர் அலி, காஸிம் அக்ரம் ஆகிய ஸ்பின்னர்கள் பிரதானமானவர்கள்.

இதனை எழுதிக்கொண்டிருக்கையில், பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது. 2 விக்கெட் இழப்பிற்கு 95 என நிதானம் காட்டுகிறது. ஹைதர் அலி அரைசதம்! பாகிஸ்தானி ரசிகர்கள்,  தென்னாப்பிரிக்க மாணவர்களுக்கு பாகிஸ்தானிய கொடிகளைக் கொடுத்து, ‘பாகிஸ்தான்..பாகிஸ்தான்’ கோஷம் போடவைத்து மைதானத்தைக் கலகலப்பாக்கிவருகிறார்கள். இந்திய ரசிகர்களில் சில சர்தார்ஜிகள், சில பள்ளி மாணவர்கள் என சிறு கூட்டம் மூவர்ணக் கொடியை அசைத்துவருகிறது.. தென்னாப்பிரிக்காவின் அந்தப்பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ரசிகர்கள் மிகக்குறைவுதான். இருந்தாலும் மேட்ச் த்ரில்லிங்காகப் போக வாய்ப்பிருக்கிறது.. பார்ப்போம்.

**