பிறிதொரு உலகம்.. பிறிதொரு உண்மை..

… ஒன்றும்  மாறவில்லை என்பதுபோல் இருக்கிறது. சில சமயங்களில் திடீரென உணர்கிறேன்.. இங்கேதான் எங்கோ இருக்கிறார், உடம்புரீதியாகத் தென்படாவிட்டாலும்…

மரணம்பற்றிய பயம் அவரில் போய்விட்டிருந்தது. வாழ விரும்பினார். குழந்தைகளோடு நேரம் செலவிட ஆரம்பித்திருந்தார். ஒரு சிறு வனத்தை உருவாக்க ஆசையிருந்தது. சமூகசேவையில் ஈடுபடவும் விருப்பம்..

மதம்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்ட இஸ்லாமியர் அல்லர் அவர்.  Never a typically religious person. அதனால் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று அர்த்தமல்ல. மதம் என்பது அவருக்கு ஆன்மீகம். தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை இருந்தது. தன்னைப்பற்றிய, இந்த உலக வாழ்வைப்பற்றிய ஆழ்ந்த பயணத்தில் இருந்தார். இந்த உலகம் தாண்டிய  வேறொரு உலகை, பிறிதொரு உண்மையை -a parallel world, a parallel reality- தேடிக்கொண்டிருந்தார்.  வாழ்வின் இத்தகைய கட்டத்தில் நிறையப் படித்துக்கொண்டும் இருந்தார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், உபநிஷதங்கள் என அவரது வாசிப்பு அலைந்தது …

கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு மறைந்த இந்தியத் திரைஉலகின் உன்னதக் கலைஞனான இர்ஃபான் கான் பற்றி அவரது மனைவி ஸுதாபா சிக்தர் சமீபத்தில், அன்னாரது ஓராண்டு நினைவார்த்தமாக சொன்னதில் கொஞ்சம்தான் மேலிருப்பது.

**

யாருக்கும்

யாருக்கும் விசிறியல்ல

யாருக்காவது சிஷ்யனா

அல்லவே அல்ல

அலாதியான இந்த உலகில்

சிலரைப் பார்க்கிறேன்

சிலரைக் கேட்கிறேன்

சிலரை வாசிக்கிறேன்

சிலரைப் போகிறபோக்கில்

புரிந்துகொள்கிறேன்

நான்பாட்டுக்கு

நடக்கிறேன்

**

ராமன் பேசுவதை நிறுத்திவிடுவான்..

ராமன் காட்டிற்குச் சென்ற சில தினங்களிலேயே, புத்ரசோகம் தாங்காது தசரதச் சக்ரவர்த்தி புலம்பிப் புலம்பிக் காலமாகிவிட்டார். அப்போது கேகய நாட்டில் தன் தாத்தாவின் அரண்மனையிலிருந்த பரதனும், தம்பி ஷத்ருக்னனும், குலகுரு வஸிஷ்டர் அனுப்பிய அவசர தூதினால் (உண்மை நிலவரம் தெரிவிக்கப்படாது, ஒரு அதிஅவசர காரியத்திற்காக உடனே நாடு திரும்பவேண்டும் என மட்டும் சொல்லப்பட்டு), கடும் வேகம் காட்டி அயோத்தி திரும்பிவிட்டனர். அயோத்தி தந்த காட்சியோ ஆன்மாவைக் கலங்கடித்தது. அண்ணன் ராமனின் வனம் ஏகுதல், தந்தையின் மரணம், காரணப்பின்புலங்கள் என்றெல்லாம் அறிந்தபின், பரதன் என்ன செய்வதென அறியாது துவள்கிறான். அண்ணன் காட்டில். அப்பன்  மேல்வீட்டில். நான் ஏன் இன்னும் இந்த நாட்டில்? – கதறுகிறான் ராமனின் தம்பி. குலகுரு வஸிஷ்டர் பரதனை ஆசுவாசப்படுத்தி, தேற்ற முயல்கிறார்:

ராமபிரான் வழிபட்ட ராமேஸ்வரத்தில் வன்னி சூர வதம் விழா! - Lord Rama  worshipped sacred place of vanni soora festive | Samayam Tamil

”பரதா! கலங்காதே. நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து இனி வருந்தி என்ன பயன்? இப்பூமியில் மனிதன் தன் வாழ்நாளில் தவிர்க்கமுடியாத, ஜோடி உண்மைகள் மூன்று: பசியும்-தாகமும், மோஹமும்-சோகமும், வயோதிகமும்-இறப்பும். இவற்றை யார்தான் தவிர்த்துவிடமுடியும்?” இப்படி பரதனை சமாதானப் படுத்த முயன்றுகொண்டிருக்கையில், ஷத்ருக்னன் வருத்தம் மேலிட பரதனைக் கேட்டான்: “அண்ணா! மக்களுக்கெல்லாம் வழிகாட்டியாக, பாதுகாவலனாக, நற்கதியாகவும் விளங்கினானே அண்ணா ராமன்? அவனையும், அவனது அருமை மனைவியையும் சேர்த்துக் காட்டிற்குப் போகுமாறு விதித்துவிட்டார்களே? தர்மவழி நடக்காத, தன் மனைவியின் பேராசைக்குட்பட்டு தவறாக நடந்துகொண்ட தந்தையை, வீரம், கம்பீரம், தர்மசிந்தனைக்குப் பேர்போனவனான லக்ஷ்மணன் ஏன் தடுக்கவில்லை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. ஐயோ!” என மேலும் சோக மேகத்தைப் பரவ வைத்தான். (உண்மையில், ராமனை வனவாசம் செய்யவைக்கும் தசரதச் சக்ரவர்த்தியின் திடீர் முடிவைக் கேள்வியுற்ற லக்ஷ்மணன் அதிர்ச்சியுற்றான். அவர் மேல் பெருங்கோபம் கொண்டான். சக்ரவர்த்தியை, பெண்பேச்சு கேட்டு ஆடும் ’அதர்மி’ என இகழ்ந்தான். ராமனிடம் சென்று ‘வழிதவறிய மன்னனின் வார்த்தையை மதிக்கவேண்டியதில்லை. காட்டுக்குப்போகவேண்டிய அவசியம் உனக்கில்லை. நீயே முடிசூட்டிக்கொள். மக்களும் அதையே விரும்புவர். உனை எதிர்ப்போர் எவராயினும், தேவரேயாயினும் அவர்களைத் தாக்கி அழிப்பேன்!’ என ஆக்ரோஷமாக சூளுரைத்தான். அண்ணனோடு வாதிட்டான்.. என்பதெல்லாம் அயோத்தியில் அப்போது இல்லாத பரதனுக்கும், ஷத்ருக்னனுக்கும் தெரிந்திருக்கவில்லை.)

ஷத்ருக்னன் இப்படி துக்கமும், குழப்பமுமாய் சிதைந்திருந்த நிலையில், எல்லாத் துன்பத்திற்கும் மூலகாரணமான கூனி, அங்கு வந்து கொண்டிருந்தாள். ’பரதன் நாடு திரும்பிவிட்டான். ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்துகொள்ளப்போகிறான். ராஜ்யத்தில் நமக்குத்தான் இனி மாலை, மரியாதை எல்லாம்.. ஆஹா!’ என மனதில் குதூகலித்தவாறு. அப்போது எப்படி இருந்தாளாம் அவள்? தன் மேனியிலே நறுமன சந்தனத்தைத் தடவிக்கொண்டு, கைகேயி அளித்த உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வரிசையாக அணிந்திருந்தாள். இடுப்பிலே தங்க ஒட்டியாணமும் மின்னுகிறது. அலங்கரிக்கப்பட்ட கிழக் குரங்காய், அசைந்து ஆடியவாறு  கூனி வந்துசேர்ந்தாள் என்பது ரிஷி வால்மீகியின் வர்ணனை!

பரதனும், ஷத்ருக்னனும் இருக்கும் பிரும்மாண்ட அரண்மனைப் பகுதியின் வாசலை அவள் நெருங்கியபோது, காவலாளிகள் கப்பென்று பிடித்து, ஷத்ருக்னனிடம் கொண்டுவந்து நிறுத்திச் சொன்னார்கள்: ”பட்டத்து இளவரசன் ராமன் காட்டில் வதைபட, உங்களது தந்தை ஆவி பிரிய, ராஜா இல்லாது நாடே கலங்கித் தவிக்க காரணம் இவளே. கொடியவளான இவளை, இரக்கம் காட்டாது இஷ்டப்படி தண்டியுங்கள்!”

”சக்ரவர்த்திக்கும், என் அன்பு சகோதரர்க்கும் தாங்கமுடியாத் துன்பம்  தந்த படுபாவியின் கொடுஞ்செயலுக்கேற்ற தண்டனை தரப்படும்!” என்று சீறியவாறு பாய்ந்து அவளைப் பிடித்து அழுத்தினான் ஷத்ருக்னன். ’ஐயோ.. நாம் நினைத்தபடி அல்லாமல், வேறேதோ நடக்கிறதே’ என உணர்ந்தவளாய், பீதியில் அந்த அரண்மனையே குலுங்கும்படி ஓலமிட்டாள் கூனி. அவளோடு வந்த அவள் தோழிகள், ஷத்ருக்னன் தங்களையும் கொன்றுபோட்டுவிடுவான் என மிரண்டு, சிதறி ஓடினார்கள்.  கருணையும், தர்மசிந்தனையும் மிகுந்த கோஸலையின் நினைவு வர, அவளது பாதங்களில் போய் விழுந்து காப்பாற்றும்படி அரற்றினார்கள்.

குற்றவாளியை விடாது தண்டிக்கும் குணமுடையவனான ஷத்ருக்னன், சிவந்த கண்களில் கோபம் தெறிக்க, தரையில்  விழுந்து புரண்ட கூனியைப் பிடித்து இழுத்து உலுக்கினான். அவளது ஆபரணங்கள் அறுந்து சிதறின. அவள் மேலும் ஊளையிட, அதைக்கேட்டு கைகேயி பதறிப்போய் அங்கு ஓடி வந்தாள். அவளையும் மிரட்டும்  வகையில் ஷத்ருக்னன் பேச, அவள் பயந்துபோய் பரதனிடம் தஞ்சம் புகுந்தாள்.

தன்னிடம் ஓடிவந்த தன் தாயை அமைதிப்படுத்திய பரதன், கொலைவெறியில் இருக்கும் தம்பி ஷத்ருக்னனைத் தடுப்பதுபோல் கையுயர்த்திப் பேசலானான்: “தம்பி ஷத்ருக்னா! சாந்தம்.. சாந்தம்! மனுஷ இனம் மட்டுமல்ல. எந்த வகை உயிராயினும் பெண்ணினம் கொல்லத் தகாதது. சாஸ்த்ரம் அப்படித்தான் சொல்கிறது. எனவே அந்தக் கிழவியைத் தண்டிக்காதே.. மன்னித்துவிடு!” அருகிலிருக்கும் தன் தாயைப் பார்த்துக்கொண்டே அதிர்ந்தான் பரதன்: “கொடும்பாபம் செய்த இவளை நான் உடனே கொன்றுபோட்டிருப்பேன்.  செய்யவில்லை. ஏன் தெரியுமா? தர்மவழியில் மட்டுமே செல்பவனான நம் அன்புக்குரிய மூத்த சகோதரன் ராமன், தாயைக் கொன்ற என் செயலை நினைத்துப் பெரிதும் துவண்டுபோவான். என்னைப் பார்க்காது, பேசாது தவிர்ப்பான். என்னால் அதைத் தாங்கி உயிர் வாழ முடியாது.  இந்தக் கூனியை நீ கொன்றால், விளைவு அவ்வாறே மோசமாகும். அதனை ராமன் அறிய நேர்கையில், நம்மை சந்திக்கையில், முகம்கொடுத்துப்  பேசமாட்டான். வந்திருக்கும் துன்பங்கள் போதாதா? ராமனது அன்பையும் இழக்கும் துர்பாக்யம் நமக்குத் தேவைதானா?” என்று கண்கலங்கக் கேட்டான் பரதன். உடனே ஷத்ருக்னன் கையை உதறிக் கூனியை விடுவித்தான். அங்கிருந்து  போய்விடுமாறு உறுமினான்.

தர்மம், நீதிபற்றி பலபேசும் ஸ்ம்ருதி  சொல்கிறது: ஆச்சார்யன் (குரு), தந்தை, தாய், மூத்த சகோதரன் ஆகியோரை, தர்மவழி செல்லும் மனிதன் ஒருவன் அவமதிக்கலாகாது. அவர்களின் காரியங்களால் அவனுக்கு எத்தகைய துன்பம் நேரிட்டாலும், அவர்கள் அவமதிக்கப்படக்கூடாது.

**

ஆண், பெண்ணுக்கு நடத்தும் .. !

“ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம்.. சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை…

எவனும் தனது சொந்த ஸ்த்ரீயை அலக்ஷ்யம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டுவருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி, வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண்மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண்சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்…!

இந்தத் தொழில்கள் உயர்வென்றும், சோறாக்கி, துணிதோய்த்து, கோயில்செய்து கும்பிட்டு, வீடு பெருக்கி, குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண்மக்கள் நினைக்கிறார்கள்.

வியபிசாரிக்குத் தண்டனை இஹலோக நரகம். ஆண்மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்.. பரஸ்த்ரீகளை இச்சிக்கும் புருஷர்களுக்கு எல்லையில்லை என்று, நான் சற்றே மறைவிடமாகச் சொல்லுகிறேன். அதனால், அவர்கள் பத்தினிகளை நேரே விழித்து நோக்க யோக்யதையில்லாமல் இருக்கிறார்கள். பூமண்டலத்தின் துக்கம் இதிலேதான் ஆரம்பமாகிறது. வீட்டிலே துரோகம் இருந்தால் வெளியே எப்படி நேராகும்? வீடுகள் சேர்ந்துதானே ஊர் உண்டாகிறது? …”

1917-லேயே, ஆண்களின் யோக்யதைபற்றி  இப்படிப் பகர்ந்திருக்கிறார் சுப்ரமணிய பாரதி -‘மிளகாய்ப்பழச் சாமியார்’ வாயிலாக ! சுதேசமித்திரன் இதழில் வெளியான அவரது சிறுகதையின் பிரதான பாத்திரம், அந்தக்கால புருஷ சிந்தனை, செயல்பாடுகள்பற்றி இப்படி விசனப்படுவதாக வருகிறது.

இப்போது ஆண்கள்? பலர், ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாதென்று, ஹைடெக் துரோகம் செய்து ’த்ரில்லாக’ வாழ்கிறார்கள். பெண்மக்களின் நெஞ்செரிச்சல், நேர்கோட்டில் நீண்டு… நகர்கிறது.

**

மஹாகவி பாரதி சிறுகதை: வேப்பமரம்

மஹாகவி பாரதியின் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. 1919 – லான தமிழ் எழுத்து, பாரதியின் எழுத்து. பகிர்கிறேன் :

சிறுகதை: வேப்பமரம்

இளவேனிற்காலத்தில் ஒரு நாள். காலை வேளையில், நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்தூரம் சுற்றிய பி்றகு என் உடம்பிலே சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன். இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயரந்து நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

நான் தூங்கிக் கொண்டிருக்கையிlல், “ஏ மனிதா, ஏ மனிதா! எழுந்திரு.. எழுந்திரு!” என்று அமானுஷிகமாக ஒலியொன்று கேட்டது. இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவது விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன். 

விழித்து, “யார் கூப்பிட்டது?” என்று கேட்டேன்.

“நான் தான் வேப்பமரம்.. நான் தான் கூப்பிட்டேன்! எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.

உடனே நான் யோசிக்கலானேன்:

“ஓஹோ, ஓஹோ! இது பேயோ, பிசாசோ! யக்ஷர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியரோ, வனதேவதைகளோ! யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்பமரம் எங்கேனும் பேசுவதுண்டோ? அட, போடா, பேயாவது? அதெல்லாம் சுத்தக் கட்டுக்கதையன்றோ? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலையடையவில்லை. இன்னும் கனவு நிலையிலே தானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனையொலி” – இங்ஙனம் நான் யோசனை செய்துகொண்டிருக்கையில்,  “ஏ மனிதா, ஏ மனிதா! எழுந்திரு..” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று. 

“நீ யார்?” என்று பின்னுங் கேட்டேன். 

“நான் வேப்பமரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக்கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன் !” என்று மறுமொழி வந்தது. 

அப்போது நான்: “சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லியி்ருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ்விஷயம் நமக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். ஆதலால் இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்” என்றெண்ணிக் கண்ணைத் திறந்துகொண்டெழுந்து நி்ன்றேன். 

(உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)

எழுந்து நின்று கொண்டு: “வேப்பமரமே! உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிதரைப்போல் நெஞ்சு, வாய், தொண்டை, அண்ணம், நாக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாதபோது, மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே? எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே! அடி நாக்கில்லாதவர்கள்  ஊமையாய்ப் போகிறார்களே. அப்படியிருக்க நீ மனித சரீரமேயில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன். 

அப்போது வேப்பமரம் சொல்லுகிறது:

“கேளாய், மானுடா! மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு. எனக்கு உடம்பெல்லாம் வாய்! மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக்கருவிகள் மனிதரைப் போலவேயிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண  ஸ்திதியில் அவை  அவசியந்தான். ஆனால், நான் ஸாதாரண மரமில்லை. நான் அகஸ்த்ய முனிவரின் சிஷ்யன். தமிழ் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது…”

வேப்பரம் பி்ன்னுஞ் சொல்லுகிறது:

“நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா, கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானாகிறது. நான் இளமரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒரு நாள் வஸந்த காலத்தி்ன்போது, இராவேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக்கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இராவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக்கொண்டு பிரம்மாநந்தத்தில் மூழ்கியிருந்தேன். அப்போது  பதினாறு வயதுடைய, மிகவும் அழகான மனித ஆண் பிள்ளையொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனிதரில்லையென்பது எனக்குத் தெளிவாய்விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து  விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக்கொருவர்  பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில் அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணியம்மனும். அகஸ்த்யர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால் அவர் காமரூபி. அதாவது, நினைத்தபோது நினைத்த வடிவந் தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணியம்மனும் அப்படியே. ஆதலால் அவ்விருவரும் அப்போது அதிசுந்தரமான மனுஷ்ய ரூபந்தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால், தாம்ரபர்ணி மறைந்துவிட்டாள்….”

வேப்பமரம் சொல்லுகிறது: “கேளாய், மானுடா! கவனத்துடன் கேள். தாம்ரபர்ணியம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள். அகஸ்த்யர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில், இப்போது நீ நிற்குமிடத்தில் படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர். எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திகளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கி்றாரென்பதை அறியாமல், ஜலக்கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையி்லிருக்கிறாரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று. அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் – அந்த மரத்தின் கீழேயுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்லபாம்பு ‘ஹுஸ்’ என்ற சீத்காரம் செய்துகொண்டு, அகஸ்த்யர் படுத்திருந்த இடத்தை  நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன். ’ஐயோ! இந்தக் கொடிய பாம்பு, இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால், தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கிவிடுவார்’ என்றெண்ணி, அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர் மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பும் அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று. அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்து, கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையைச் சுற்றிக்கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே, ஒன்றும் செய்யாமல் பரம ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணையெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறி்ப்போய் சாதாரணத் தோலாய்விட்டது. இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்யதையில்லாமல், ஊமை மரமாய்ப் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பி அவர் காலின்மீது சில மலர்களையும் இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்தி என்னை  நோக்கி :

‘வேப்பமரமே!’ என்று கூப்பிட்டார்.

வேப்பமரம் பின்னுங் கதை சொல்லுகிறது:- கேளாய், மானுடா, கவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னையறியாமல் என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், ‘ஏன் முனிவரே?’ என்ற தமிழ்ச் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய்விட்டது. மாற்றிப் பிறக்க, வகையறிந்து கொண்டேன். வேப்பமரப் பிறவி போய் எனக்கு மனிதப் பி்றவியுண்டாயிற்றென்று தெரிந்து கொண்டேன். உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்ன, மாறாவிட்டாலென்ன? நான் உடம்பில்லை. நான் ஆத்மா. நான் போதம். நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சி்த்தம் மாறிப்போய், எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்துவிட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமா? கோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர், எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார். எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல்  அவருடைய பாதத்தின் மீது வர்ஷித்தேன். அவர் மி்கவும் மகிழ்ச்சி பூத்தவராய் ”ஏ, வேப்ப மரமே! நேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராம நதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில், நீ பார்த்து பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான்  ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால் சிறி்து நேரத்திற்கு முன்பு நான் யோக சமாதியிலிருந்த போது, இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி, என்னை எழுப்பும் பொருட்டாக என் மீது நின் இலைகளையும் பூக்களையும்  சொரிந்தாய். இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷிபோதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும், ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்!” என்றார். அது முதல் நான்  அவர் கூறிய சக்திகளெல்லாம் பெற்று யாதொரு கவலையுமில்லாமல், யாதொரு பயமுமில்லாமல், ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்பமரம் சொல்லிற்று. உடனே நான் அந்த வேப்பமரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன். “உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது. அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி:- “உனக்கெப்படி அகஸ்த்யர் குருவோ, அப்படியே நீ எனக்கு குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை, நீ எனக்கருள் புரியவெண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

“கொடுத்தேன்!” என்றது வேப்ப மரம்…

இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூங்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்து நின்றேன். எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் கருவிகளும் வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும், ஒந்திகளும் ஆடியோடிக்கொண்டிருந்தன. காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும், ஒளிக்கடலிலே களித்தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும், ஒரு பெண் குயிலும் ஒன்றுக் கொன்று காதற் பாட்டுகள் பாடிக்கொண்டிருந்தன.

ஆண்குயில் பாடுகிறது:-

“துஹூ, துஹூ, துஹு

துஹூ, துஹூ, துஹு

ராதா ரே.”

[இதன் பொருள்:-

நீ, நீ, நீ

நீ, நீ, நீ

ராதை யடீ.]

“துஹூ, துஹூ, துஹு

ராதா க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.”

வேப்பமரம் தனது புதிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்” என்றெண்ணியெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று. வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

**

குறிப்பு: சுப்ரமணிய பாரதியால் ஜூன் 26, 1919-ல் எழுதப்பட்ட கதை (’சித்தார்த்தி (வருஷம்) ஆனி 7’ எனத் தேதியைக் குறிப்பிட்டுள்ளார்). ஆரம்பத்தில் கண்டெடுக்கப்படாத பாரதியின் இந்தச் சிறுகதை, பெ. தூரன் அவர்களால் கவனிக்கப்பெற்று பாரதி சிறுகதைத் தொகுப்பொன்றில் இணைக்கப்பட்டது எனத் தெரிகிறது.

***

99 Songs

தொண்ணூற்றி ஒன்பது பாடல்கள்? ஏன் ஒன்னு கொறஞ்சு போச்சா? – என அசட்டுத்தனமாகக் கேட்கவேண்டாம். ஏப்ரல் 16-ல் திரையரங்கிற்கு வரவிருக்கும் (கொரொனா சனியன் வேற!) ஒரு romantic musical  படத்தின் பெயர் இது. கதை? நூறு பாடல்களை  அந்த வாலிபன் எழுதவேண்டுமாம்.. சிலதையாவது பாடிக் காண்பிக்கவேண்டியிருக்குமோ.. அப்போதுதான் காதலியை அடையலாமாம். என்ன ஒரு வில்லத்தனமான கண்டிஷன், அதுவும் இந்தக் காலத்தில்! ஸ்டார்பக்ஸின் குளுகுளுவில் உட்காரவைத்து, குக்கீஸோடு ஒரு கப்புச்சினோ வாங்கிக் கொடுத்தால், அல்லது ஹாக்கி போக்கி (Hokey Pokey), கொரமங்கலாவுக்கு அழைத்துப்போய், மூலையில் உட்காரவைத்து ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து அவள் அழகை அருகிருந்து தரிசித்தால்.. போதாதா? காதலி மயங்கமாட்டாளா, கிடைக்கமாட்டாளாமா? ஒருவேளை சராசரித் தமிழ்ப்பெண்ணோ? ஃபேமஸ் தியேட்டர் ஒன்றின் பக்கம் தள்ளிக்கொண்டுபோய்.. ஒரு விஜய் படம் அல்லது அஜீத் படம்? என்ன, இதெல்லாமும் பிடிக்காதாமா.. என்ன ஒரு கஷ்டம்? 100 பாடல்களை முதலில் எழுதிக் காமிடா நீ.. என்றால் என்ன அர்த்தம்? ஹீரோவைக் களேபரப்படுத்தித் திக்குமுக்காடவைக்கத் திட்டமா?

சங்கீதப்பைத்தியமான அந்த வாலிபன் பக்குவப்படப் பக்குவப்பட, அவனது பாடல்களும் மாற்றம் காண்கின்றன. அவன் தரும் இசையும். காதலி எப்படி எதிர்கொள்கிறாள்? பெயருக்கேற்றபடி துள்ளும் பாடல்களோடு காதல் கதை என்பது நிச்சயம். எஹான் பட் (உச்சரிப்பைக் கவனிக்கவும்: Ehan Bhat) என்கிற, முதன்முறையாக, திரையில் எட்டிப் பார்க்கப்போகும், குரல் கொடுக்கும் காஷ்மீரி இளைஞன் ஒருவன் நாயகன்!

Ehan Bhat with A.R. Rahman
ரஹ்மானுடன் எஹான் பட்

ரஹ்மானின் திட்டத்தில் தான் வந்ததெப்படி. பாடகர் எஹான் பட் : ”கூச்ச சுபாவமுள்ள ஒரு காஷ்மீரி இளைஞன் நான். ஏதோ ஆடிஷன் எனக் கூப்பிட்டார்கள். ஐந்தே நிமிடம்தான். போகச்சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரெனத் தகவல் – நீ தேர்வாகிவிட்டாய், வா, சென்னைக்கு. ரஹ்மான் சாரின் ப்ராஜெக்ட் எனக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்! காலை 10 மணிக்கு வரச்சொன்னார்கள். 9 மணியிலிருந்தே அவரது ஸ்டூடியோ வாசலில் நடுக்கத்தோடு அன்று உட்கார்ந்திருந்தேன். சற்றுநேரத்தில் உள்ளே கூப்பிட்டனுப்பினார்கள். அங்கே ரஹ்மான் சாரும், (இயக்குனர்) அஷுதோஷ் கௌவாரிகரும் இருந்தார்கள்.”

”ரஹ்மான் சார் அதிகம் பேசமாட்டார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். நானோ இதற்கெல்லாம் புதுசு. கூச்சம். தயக்கம் எல்லாம் எனக்குள். ஆனால்.. சாருக்கென்ன? அவருக்குமா கூச்சம்? ரஹ்மான் சார் மெல்ல என்னைப் பார்த்தார். பின் சுவரைப் பார்க்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்தோடு அவரை ஏறிட்டு நோக்கினேன். சுவரைப் பார்த்தேன்!  ’அரேஞ்சுடு மேரேஜு’க்காகப் பெண் பார்க்கப் போய் விழிப்பதாய் உணர்ந்தேன்.. நெளிந்தேன். ஒரே குழப்பம். டென்ஷன்..” என்கிறார் பட்.

Edilsy Vargas images
நாயகி !

அதெல்லாம் சரி.. ஹீரோயின்?  எடில்ஸி வர்காஸ் (Edilsy Vargas) ! அமெரிக்க மாடல் அழகி. ஏற்கனவே Lotoman, La Soga, Pimp Bullies போன்ற படங்களில் ’நடித்த’ அனுபவம் உண்டாமே.. சில டிவி நிகழ்ச்சிகள்/ கமர்ஷியல்களும் வந்திருக்கிராரம்.. ம்ம்… இவருக்கு முன்னாடி நம்ம கத்துக்குட்டிப் பையனை நிறுத்தி அழகு பார்க்கலாமா! அப்படித்தான் செய்திருக்கிறார் ரஹ்மான். ஜோடி எப்படி, படம் எப்படி எனப் படம் பார்த்தால்தான் சொல்லமுடியும்..

ரஹ்மான் என்ன சொல்கிறார் : ”பத்துவருடத்திற்கும் மேலாக மனதில் இருந்தது இது. ஒரு புதிய குரலை அறிமுகப்படுத்துவது, புதுவிதமாக -ஸ்டீரியோ-டைப் தமிழ்/பாலிவுட் படங்களிலிருந்து வேறுபட்டு ஒன்றைத் தயாரிப்பது, இசை தருவது, திரைக்குக் கொண்டுவருவது.. மக்கள் எப்படி வரவேற்பார்கள்?  சொல்வது கடினம். வென்றால் மேலே.. இல்லையென்றால் நான் காலி!”

**

ஸஞ்சயனுக்கு மட்டும் ஏன்?

மாயக்கிருஷ்ணன் தன் அழகிய அறையில், மின்னும் தங்கக்கட்டிலில் சயனம் கொண்டிருக்கிறான், தனது தேவி ஸத்யபாமாவின் மடியில் தலையையும், கால்மாட்டில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனின் மடியில் தன் திருப்பாதங்களையும் வைத்துக்கொண்டு. திரௌபதியும் அப்போது அங்கிருக்கிறாள். பொற்கட்டிலின் கால்பக்கத்தில், கீழே, தரையில். அர்ஜுனனின் பாதங்களை மெல்ல எடுத்துத் தன்  மடியில் வைத்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். நால்வரும் ஏகாந்தமான சூழலில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த மாவீரன் அபிமன்யூ, கண்ணனைப் பார்க்க விரும்புவதாய், உள்ளே செய்தி அனுப்பினான். கிருஷ்ணன் காதுகொடுத்துக் கேட்டான். அனுமதி மறுத்தான். சிறிது நேரம் கழிந்தது. நகுலனும், ஸகதேவனும் அவ்வழியே வந்தனர். கண்ணன் அங்கிருப்பதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டவுடன், கண்டு பேசிவிட்டுப்போக விரும்பினர். செய்தி அனுப்பினர். உள்ளே வந்து பார்க்க அவர்களுக்கும் ஏனோ, கிருஷ்ணனின் அனுமதி கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் போய்விட்டனர்.

கொஞ்ச நேரம் மேலும் கழிந்தது. காவலாளி வாசலில் வந்து தயங்கி நின்றான். ஸஞ்சயன் வெளிவாசலில் வந்திருப்பதையும், கிருஷ்ணனை தரிசிக்க விண்ணப்பித்ததையும்  பகவானிடம் சமர்ப்பித்தான்.  ‘உடனே அவனை உள்ளே அனுப்பு!’ என்றான் கண்ணன். உள்ளே வந்து பணிந்து வணங்கினான் ஸஞ்சயன். ஏகாந்த தரிசனம் கண்டு பூரித்தான். கொஞ்சம் பேசியிருந்துவிட்டு அகமகிழ்ந்து அகன்றான்.

எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஸத்யபாமாவுக்கு மனசு குறுகுறுத்தது. ஒரு சஞ்சலம். கேட்டேவிட்டாள் கண்ணனிடம். ”நகுலனுக்கு இல்லை. சஹதேவனுக்கும் இல்லை. நம் குழந்தை அவன்.. அந்த அபிமன்யூவையும் உள்ளே வர விடவில்லை. ஸஞ்சயன்மேல் மட்டும் ஏனிந்தப் பரிவு? அவனுக்கு மட்டும் ஏன் அனுமதி அளித்தீர்?” என்றாள் சற்றே படபடப்பாக.

கண்ணனின் அழகு வதனம், மொட்டவிழ்ந்த மென்னகையால் மேலும் மிளிர்ந்தது. ஸத்யபாமாவை வாஞ்சையோடு பார்த்தான் பரந்தாமன். திருவாய் மலர்ந்தது: “ஏனென்றால்.. அவன் ஒரு ஞானி!”

**

லோகத்தில் ராமன் !

நாட்டைவிட்டே ராமனை – அந்த பகவான் ஸ்ரீராமனைத்தான் சொல்கிறேன் – ஒருவழியாக விரட்டிவிடுவது எப்படி என சில ‘தீய சக்திகள்’  திட்டமிட்டு, திட்டமிட்டு மண்டைகாயும் வேளையில்,  ஒரு ஓவியக் கண்காட்சி நடக்கிறதாம். எதைப்பற்றி? தசரத ராமன், சீதாராமன், simply ஸ்ரீராமன்பற்றி.  உலகின் சிலபல பகுதிகளில் ஆர்வமாகப் பேசப்படும்,  கொண்டாடப்படும் இதிகாசமான ராமாயணம் விவரித்த, இந்த தேசத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளவரசனின் வாழ்க்கைச் சித்திரங்களெனக் காட்சிகளை கண்முன்னே விரிக்கும் ஓவியங்கள் (சில சிற்ப வேலைப்பாடுகளும் கூடவே) மட்டும் அடங்கிய ஒரு கண்காட்சி. துவங்கி, நடந்து வருகிறது 13-ஆம் தேதி வரையில் (காலை 11 – மாலை 6 மணிவரை). எங்கே? இதென்ன கேள்வி? ராமபிரானை ஏசியும், அவன் உருவப்படத்தின் மீது சிலவற்றை வீசியும் வெறுப்பு ஊர்வலம் எடுத்த வரலாறும், சிறப்பும் மிக்க தமிழ்நாட்டிலா இதெல்லாம் நடக்கும்?

தனித்துவமான காவியக்கருத்து, கலாச்சார உட்பொருளைத் தாங்கி, அழகு ஓவியங்களாகக் காட்சிப்படுத்தும் இந்தக் கலைக்கண்காட்சி தேசத்தலைநகரான புதுதில்லியில் நடந்து வருகிறது என்கிறது The Statesman நாளிதழ். ’ஜெய் ஸ்ரீராம்’ எல்லாம் கூடாது… இங்கே அது எடுபடாது’ எனக் கொக்கரித்த மட ’மமதா’வின் வங்காளத்திலும் இப்போது தேர்தல் நடக்கிறதே.. அங்கே கதை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை  அங்கேயிருந்தே வெளிவரும் இந்தியாவின் பழம்பெரும் நாளிதழ் ஒன்றிலிருந்தே படிப்போம், கொஞ்சம் லோக்கல் ஃப்ளேவரைத் தெரிந்துகொள்வோம் எனச் சென்றபோது… கண்ணில்பட்டான் – இப்போதெல்லாம் எல்லோர் வாயிலிருந்தும் விழுந்து புறப்படும் அப்பாவி ராமன்! புருஷர்களில் உத்தமன் எனச் சொல்லிக்கொண்டால் இந்தக்காலத்தில் யாருக்குப் புரியும்? புரிந்தால்தான் போற்றப்படுவானா, உத்தம வில்லன்கள் உலவித் திரியும் இந்த இந்தியப் பெருநாட்டில்?

இப்படியான சூழலிலும், ’சன்ஸ்கார் பாரதி கலா சங்குல்’ (Sanskar Bharati Kala Sankul) எனப்படும் டெல்லியின் புதிய கலைமேம்பாட்டு நிறுவனம் ஒன்று, ’லோக் மே(ன்) ராம்’ (லோகத்தில் ராமன்) எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கலைக்கண்காட்சியை, ’இந்திய லலித் கலா அகாடமி’யின் உதவியுடன் முன்னெடுத்து நடத்திவருகிறது. பிரதானமாக 25 ஓவியங்கள் ராமபிரானின் இதிகாசகால பாரதத்தை மீட்டெடுத்துக் கண்முன் வைக்கப் பிரயத்னப்படுகின்றன. அவற்றில் சில:

Lok Mein Ram' art exhibition brings to life varied facets of Lord Ram - The  Statesman
கண்ணாடிச் சிற்பமாக ‘ராம் சேது’’ – ராமர் பாலம்

முதலில் கவர்வது மரம்/கண்ணாடியினாலான ’ராம் சேது’ ராமர் கட்டிய பாலம். ராம்.. ராம்.. என்கிற வார்த்தைகள் கூட்டமாக ஊர்ந்து அவன் பாதவழி காட்டுகின்றன. அருகில் ராம பாதுகைகள். டெல்லியின் National Gallery of Modern Art -ன் இயக்குநர் அத்வைதா கதநாயக் உருவாக்கிய சிற்பம். (மேலே). ‘சபரியின் தபஸ்’ மற்றும் ‘அகலிகை சாபவிமோசனம்’ ஆகிய காட்சிகளைத் தரும் குத்லயா ஹீரேமத்தின் (Kudlaya Heeremath) அழகு மிளிரும் ஓவியங்கள். புகழ்பெற்ற ஓவியர் பாலாஜி உபாலே (Balaji Ubale)-யின் ஓவியங்கள் இரண்டு : ‘சபரியுடன் ஸ்ரீராம்’ – சபரி ருசி பார்த்துக்கொடுத்த பழத்தை ராமன் சாப்பிடப்போகிறான்.. அடுத்தது,  ’ஆதிவாசி ராம்நாமியும் ஸ்ரீராமனும்’. இதில் : தன்னை வனத்தில் சந்தித்துப் பரவசப்பட்ட ’ராம்நாமி’ எனும் ஆதிவாசியை அன்போடு அணைத்துக்கொள்ளும் ராமன்! தத்ரூப ஓவியங்கள். இன்னொன்று இப்படி ஒரு காட்சியைத் தருகிறது: அழகு ஆபரணங்களை அணிந்துகொண்டு குறுகுறுவெனத் தெரியும் குழந்தை ராமன், அரண்மனைத் தோட்டத்தில் யானை, குதிரை என மரப்பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனது கொள்ளை அழகை அருகிருந்து பிரமிப்போடு பார்க்கும் தோட்டத்துக் கிளிகள் ! – கிஷன் ஸோனி எனும் கலைஞரின் கைங்கரியம்.  ’காணாமற்போன சீதை’ என்கிற தலைப்பில் பார்கவ் குமார் குல்கர்னி வரைந்த ஒரு ஓவியம்: மனைவியை இழந்த, தேடித் தேடிக் கலைத்த கணவனாக ராமன்.. சோகம் ததும்பும் முகத்தோடு ஆகாசத்தைப் பார்க்கிறான் – கடவுளின் துணைக்காக ஏங்குகிறானா? அருகில் ஒரு மரக்கிளையில் கையை வைத்துக்கொண்டு விரக்தியோடு அண்ணாவைப் பார்க்கும் லக்ஷ்மணன். இன்னொன்று அபிஷேக் ஆச்சார்யாவின் ‘ஷிவ் தனுஷ்’ எனும் ஓவியம்  மஹாவீரன் ராமன் சிவ தனுஷை அலட்சியமாகத் தூக்குகிறான்.. அரண்மனை சபையின் ஆச்சரியப் பார்வை. சீதா ஸ்வயம்வரக் காட்சி கண்முன்னே. விஜய் சந்த்ரகாந்த் எனும் ஓவியர் ’ராவண்-ஜடாயு யுத்’  காட்சியை பிரமாதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறாராம்: சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒருகாலகட்டத்தின் வான் யுத்தத்தில், சூர்யக்கதிர்கள் பொன்னொளி பரப்ப, சீதையைக் கவர்ந்து செல்லும் அரக்கர் தலைவன் ராவணன் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கும் ஜடாயு! சிலிர்க்கவைக்கும் போர்க்காட்சி. பிறிதொரு ஓவியம்: ராவணனின் தலைநகரம் கோபக்கார அனுமனால் தீக்கிரையாக்கப்படுகிறது..தலைப்பு: ‘லங்கா தஹன் (Lanka Dahan) – லால் சந்த்ர சூர்யவன்ஷி-யின் கைவண்ணம்.  இப்படி,  கடந்துபோன காலத்தைக் கலையழகோடு மீட்க முனையும் ஆக்கங்கள், அயோத்தியில் கடந்த இரண்டு வருடங்களாக வரையப்பட்ட சித்திரங்களாக. லலித் கலா அகாடமியின் அருமையான முயற்சி/பங்களிப்பு.

டெல்லியில் இருந்தால் இப்போது அங்குபோய் இத்தகைய அபூர்வ ஓவியக் கண்காட்சியைக் கண்டுகளித்திருக்கலாம். பெங்களூரில் இருந்துகொண்டு என்ன செய்ய? சரி, இரவில் ஐபிஎல் பார்ப்போம்… சூர்யகுலத் தோன்றல் – மும்பை இண்டியன்ஸின் சூர்யகுமார் யாதவ் எப்படி ஆடுவாரோ !

**

சைக்கிள்ல வந்தாரு !

பிரபல  தமிழ் நாளேடுகளின்  ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !”

தேர்தல் தினத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு , பிரிய தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது, வாக்களிப்பு எப்படிப் போகிறது, அப்பாவி மக்களுக்குச் சிரமம் ஏதும் தரப்படவில்லையே.. என்கிற  சிந்தனை கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் மீடியாவில்.  என் கண்ணில் பட்ட -புண்யம் பல செய்திருக்கவேண்டும் யான்- பரவசக் காட்சிகளில் சில இவை.  சரி, சரி.. தாண்டிப் போவோம் என்றால்,  விட்டுவிடுவார்களா அவ்வளவு எளிதாக?  ”நடிகர் அஜீத்  கோபம்! செல் ஃபோனை ரசிகரிடமிருந்து பிடுங்கினார்.  திருப்பிக் கொடுத்தார்.. மன்னிப்புக் கேட்ட அஜீத்!”  “ரஜினி, கமலை மிஞ்சிய விஜய், அஜீத் ! “நடந்தே  வாக்குச்சாவடிக்கு வந்த பிரபல நடிகர்  விக்ரம்..” அடடா.. அடடா… தமிழ்நாட்டின்  ரசனை, பொதுஅறிவை  வேகவேகமாக வளர்ச்சிப்பக்கம் அழைத்துச்செல்ல என்னவெல்லாம் செய்கிறது இந்த மீடியா.  கடும் தேசப்பணி..

தேர்தலுக்கு அடுத்த நாள். இப்போதாவது செய்திகள்,  அவற்றின் உள்ளீடுகள் மாறித்தொலைந்ததா என்றால்,  இன்னும் இல்லை!   மக்களின்  சிந்தனையை மேலும் மேலும் அதே நேர்க்கோட்டில் அழைத்துச்சென்று புரட்டிப்போடும் செய்திச் சரடுகள்: “அஜீத் போட்டிருந்த மாஸ்க்!  விஜய் ஓட்டிவந்த சைக்கிள்! பின்னணியில் இப்படி ஒரு  குறியீட்டு அரசியலா?”  தேர்தல் இரவில், எப்படியெல்லாமோ புரண்டு படுத்து ஒருவாறு தூங்கி, எழுந்து காலையில் டீ/காப்பி குடிக்க வந்திருக்கும், காத்திருக்கும்  டமிளன் ,கையில் பேப்பரைத் தூக்கிப் பிடித்து  படிக்க ஆரம்பித்தால், அவனை சீண்டும், சிதறடிக்கும்  கேள்விகள் . அஜீத்தின்  முகக்கவசம் கருப்பு, நாடா சிவப்பு! ஆ.. அந்தக் கட்சிக்குத்தான் போட்டாரா? விஜயின் சைக்கிளின் நிறம் – கருப்பு ..அப்புறம் அதில் கொஞ்சம் சிவப்பு.. புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு !   விக்ரம் ஏன் நடந்தே… வந்தாரு?   லாக்டவுனின்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்தே,  நடந்தே  சென்றதை நினைவுபடுத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாரோ.. என்னே ஒரு புத்திசாலித்தனம்.. சீயான் ! 

அவன் கண்ணில் படுகிறது இன்னொரு நியூஸு. பார்த்திபன் ஓட்டுப் போடவே வரலியாமே! பாவம், அவரும்  ஏதாவது காரணம் வச்சிருப்பாரு..! – என வாழ்க்கையின்  ‘இருத்தல்’பற்றிய பெருங்கேள்விகள்  விடாது துரத்த, டமிளன் வேகவேகமாக டீ யை உறிஞ்சி கிளாஸைக் கீழே வைக்கிறான்.  தூண்டிவிடப்பட்ட சிந்தனை வளர்ந்து பெருக,  ’இன்னொன்னு போடப்பா !’ எனத் தீவிரமாக ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டே,  மேலும் மேய்கிறான், பேப்பரில்..

மே 2-ஆம் தேதின்னு ஒரு நாள் வரப்போகுதே சீக்கிரம்? அது என்னென்ன சொல்லப்போகுதோ?  அதன்பின்  என்னென்ன செய்வானோ, யோசிப்பானோ? சினிமா, அரசியல்னு மாறி மாறித் தாக்கும் சித்தாந்தப் புயல்களினூடே இந்த அப்பாவியின் வாழ்க்கைதான் எப்படி, எப்படியெல்லாம் திரும்புமோ,  தூக்கியடிக்கப்படுமோ ..

**

டியர் மிஸ்டர் தமிழ் வாக்காளரே !

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் நாள் இதோ உங்கள் முன். ஓட்டுப்போடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை என்றெல்லாம் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் உங்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியாததா!

இருப்பினும் –

ஓட்டுப்போடுமுன் மனதில் குழப்பம் இல்லாது, தெளிவாக இருங்கள். யாருடைய மிரட்டல், உருட்டல்களையும் காதில் வாங்கிக்கொள்ளவேண்டாம். பணியவேண்டாம். நாட்டுக்காக, தேச முன்னேற்றத்தை, அதன் வளர்ச்சியை சிந்தையில் வைத்து தேசபக்தியோடு வாக்களியுங்கள். வாக்களிக்கத் தவறாதீர். மேலும், உங்களது ஓட்டு ரகசிய ஓட்டு. அதை யாருக்குப் போட்டேன், எதற்காகப் போட்டேன்  என யாருக்கும் விளக்கவேண்டிய அவசியம் ஏதும் உங்களுக்கு இல்லை. நீங்கள்தான் இந்நாட்டு மன்னராயிற்றே!

ஓட்டுச்சாவடியும் அதன் சுற்றுப்புறமும் பொது இடங்கள். ஆதலால், விவஸ்தை கெட்ட மிஸ்டர் கொரோனா அங்கு உலவக்கூடும். உங்களோடு ஒட்டி உறவாட அவர் முயற்சிப்பார்தான். உஷார்! முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். அதைச் சரியாக அணியுங்கள். கூடுமானவரை இடைவெளிவிட்டு நில்லுங்கள். நகருங்கள். அதுதான் உங்களுக்கும், சார்ந்தோருக்கும் நல்லது.

வாக்களித்த பின்னும், முகக்கவசம் அணிந்தவாறே பாதுகாப்பு உணர்வுடன் வெளியே வாருங்கள். வாய்க்குக் கீழே இறக்கிவிட்டுக்கொண்டு வம்பளந்து செல்லவேண்டாம். ஜாக்ரதை! பின் தொடர்ந்து ’அவர்’ வரக்கூடும்!

வீடு திரும்பியபின் கை, கால்களை, முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ மறக்காதீர்கள். ஒரு ஸ்நானம் செய்ய முடிந்தால், மேலும் நல்லது !

ஜெய் ஹிந்த்!

**