யாம் பெற்ற இன்பம் !

பெருமாளுக்குக் கல்யாண உத்சவம்
செய்துவைக்க ஒரு ஆசை மனதில்
பக்திமட்டுந்தானா காரணம்
அவனும் பட்டுவிட்டுப் போகட்டுமே
நாம் படுகிற கஷ்டமெல்லாம்
என்கிற நல்லெண்ணமும்தான் !

**

சோலாப்பூர்

ஞாபகமிருக்கிறதா அப்பா!
வருஷா வருஷம் மார்கழிக் குளிரில்
செம்பாட்டூர் வந்து கடை போடுவார்களே
பந்தலில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தொங்க
ஜனங்களின் கண்கள் ஆச்சரியப் பெரிசாக
கூவிக் கூவி ஏலம் போடுவார்களே
தரமான போர்வை சோலாப்பூர் போர்வை
போனா வராது பொழுதுபட்டாத் தங்காது
ஒருதரம் ரெண்டுதரம் மூணுதரம்
கொடுங்கய்யா கொடுங்க பணத்தை
பிடிங்கய்யா பிடிங்க சோலாப்பூர்
ஞாபகம் வருகிறதா அப்பா
அதே சோலாப்பூர் தான்
அதில்தான் நின்று இளைப்பாறிக் கிளம்புகிறது
நான் பயணிக்கும் ரயில் வண்டி

**

கோடைப்பாடல்

அடர்பச்சை மரத்தினில்
மஞ்சள்மூக்கு மைனாக்கள்
மனம்விட்டுப் பேசுகின்றன
மயங்கி விளையாடுகின்றன
அனல்பறக்கும் மதியவேளை
அவசரமாய் அணுகுமுன்
கீச்சுமூச்சுப் பாட்டுக்கச்சேரியை
வேகமாய் முடித்துக்கொள்கின்றன
மழை மேகம் கூடிவருமோ
மாதங்கள் பல கழியுமோ
வரப்போகும் துளிகள் விண்ணிலிருந்தோ
வதைபடும் உயிர்களின் கண்ணிலிருந்தோ

**

போகிறபோக்கில்..

ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது
நகர்ந்துகொண்டிருக்கிறது காலம்

ஆணென்றும் பெண்ணென்றும்
அதுவென்றும் இதுவென்றும்
வந்துகொண்டிருக்கின்றன
போய்க்கொண்டிருக்கின்றன
பல்வேறு வடிவங்களில் உயிர்கள்

ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது
நகர்ந்துகொண்டிருக்கிறது காலம்

**

மமதை ஏன் மனிதனே !

நீ மட்டுந்தானா உயர்வாய் சிந்திப்பவன்
நீலனை வானில் தேடிக் கைகூப்புகிறவன்
மரங்களும் செடிகொடிகளும்கூடத்தான்
தலை உயர்த்திப் பார்க்கின்றன
வானத்தை நோக்கியே காலமெலாம் வளர்கின்றன
பலவிதமான பூக்களை உயர உயரமாய் ஏந்தி
பரந்தாமன் ஏற்பான் எனப் பரவசமாய் நிற்கின்றன
பூஜிப்பவன் நீ மட்டும்தான் என நினைத்தாயா !

**

சிரிக்கலாம் காலம்

எப்போதும் குலைக்கும் தெருநாய்
எப்போது மூடும் உன் திருவாய்
சட்டெனக் கேட்டுவிட்டான் அவன்
துணுக்கென்றது இவனுக்கு
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
ஆழச் சிந்திக்கையில் அது புரிந்தது
உண்மைதான் அவன் சொன்னதும்
உறவென்றும் அன்பென்றும் பந்தபாசமென்றும்
உணர்த்துவதாய் எண்ணி இவன் பேசுகையில்
உளறுவதாய்த் தோன்றியிருக்கிறது அவனுக்கு
இவனின் புகட்டு மொழிக்கும்
அவனின் பகட்டு வழிக்கும் இடையில்
அன்பினாலும் நிரப்ப முடியாத
அகன்ற பள்ளத்தாக்கு
பாதகம் ஒன்றுமில்லை
பதட்டப்பட ஏதுமில்லை
காலம் ஒன்றும் அதிகமில்லை
கதை முடிந்துவிடும் ஒருநாள்
கிடத்தப்படுவான் இவன் ஒரு மூலையில்
உடனகற்றி அவர்கள் எரிப்பார்கள்
உள்ளுக்குள் கள்ளமாய்ச் சிரிப்பார்கள்

**

மண்ணில் மனிதர்கள்

சரித்திரம் ஆய்ந்தால்
சட்டெனப் புரிந்திடும்
மனிதர் வாழ்வின்
மகத்துவம் தெரிந்திடும்

பட்டத்து இளவரசன் எனக்
கொட்டம் அடித்தவர்
திக்குமுக்காடித்
திசையற்றுப் போயினர்

எனக்கு நிகர் நானே என
எகிறிக் குதித்தவர்
தடயம் ஏதுமின்றித்
தன்னாலே மறைந்தனர்

பகட்டும் செருக்கும்
பலநாள் வாழ்ந்ததில்லை
அகந்தையும் ஆணவமும்
அதிக நாள் நிலைத்ததில்லை

—————————
மேற்கண்ட கவிதை டோக்கியோ பொங்கல் மலரில் வெளிவந்தது