வார்த்தைகளை சரியாக நான்
புரிந்துகொள்ளவில்லை என்று
நீ சொல்வது சரிதான்
கண்வழி உரையாடலில்
கலந்து களித்திருக்கையில்
வாய் பேசிய வார்த்தைகளில்
கவனக்குறைவு ஏற்பட்டிருக்கலாம்தான்
என்ன செய்வது?
நம் வாயில் ஏதுமில்லை
நாம் இதற்கெல்லாம் காரணமில்லை
**
வார்த்தைகளை சரியாக நான்
புரிந்துகொள்ளவில்லை என்று
நீ சொல்வது சரிதான்
கண்வழி உரையாடலில்
கலந்து களித்திருக்கையில்
வாய் பேசிய வார்த்தைகளில்
கவனக்குறைவு ஏற்பட்டிருக்கலாம்தான்
என்ன செய்வது?
நம் வாயில் ஏதுமில்லை
நாம் இதற்கெல்லாம் காரணமில்லை
**
’அரிதாக’ என்று ஏன் எழுதினேன் என்றால் அப்படித்தான் இங்கு காலங்காலமாக நடந்துவருகிறது. தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமரிசகர்கள், கட்டுரையாளர்கள் போன்ற மொழிக்கு வளம்சேர்க்கும் படைப்பாளிகள் பொதுவாகவே அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருபது முப்பது வருஷத்துக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் தமிழ்ப் படைப்பாளிகளைக்கூட தமிழ்நாட்டில் பரவலான பொதுவாசகர்களுக்குத் தெரிவதில்லை என்பது நாம் வாழும் காலத்தின் சோகம். அவர்களது படைப்பிற்கேற்ற மதிப்பு, அங்கீகாரம் வாழ்நாளில் இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, அலட்சியம், அவமானம், எள்ளல் இவைதான் வெகுதாராளமாக அவர்கள்மீது நம்மவர்களால் வசைபோலப் பொழியப்படுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கேற்றதற்காக, தங்களது வாழ்நாளை அதற்கென செலவழித்ததற்காக, நாட்டின் வாழ்நாள் பரிசு அவர்களுக்கு இவைதான்.
இத்தகைய நம்பிக்கை இழக்கவைக்கும் சூழலில், ஒரு மெலிதான ஆச்சரியம் தரும் வகையில், இந்த டிசம்பர் மாதம் தமிழ் இலக்கிய உலகின் விருது மாதமாக ஆகிவிட்டது! பல வருடங்களாக தங்கள் படைப்புகள் மூலம் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்துவரும் தமிழின் மூன்று சிறந்த இலக்கிய ஆளுமைகளுக்கு கீழ்க்கண்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன :
எழுத்தாளர் பூமணி – 2014-ஆம் ஆண்டிற்கான ‘சாகித்ய அகாதெமி விருது’–’அஞ்ஞாடி’ தமிழ் நாவலுக்காக.
கவிஞர் ஞானக்கூத்தன் – ’விஷ்ணுபுரம் விருது’
எழுத்தாளர் ஜெயமோகன் – ’இயல் விருது’
மேற்கண்டவற்றில் சாகித்ய அகாதெமி விருது பாரத அரசினால் வருடாவருடம் இந்திய மொழிகளில் சிறப்பான இலக்கியப் படைப்புக்காக வழங்கப்படுவது.
ஒரு இருநூறு ஆண்டுக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியின் வாழ்க்கை மாற்றங்களை, அடித்தட்டு மக்களின் கோணத்திலிருந்து அலசுகிறது பூமணியின் ’அஞ்ஞாடி’ என்கிற நாவல். ஆசிரியரின் எழுத்தில் கரிசல் மண்ணின் மாறாத மணம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புடைய புத்தகங்கள், ஆவணங்களை ஆழ்ந்து படித்து, ஆராய்ந்து அருமையாக இந்த நாவலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டின் சாதிக் கலவரங்களின் கள ஆய்வு நூலாகவும் இந்த நாவல் வாசிக்கப்படுகிறது. தேசிய விருதிற்கு மிகவும் தகுதியான தமிழ் எழுத்தாளர். இவரது இதர படைப்புகளாக ‘நைவேத்தியம்’, ’பிறகு’ ஆகிய முக்கியமான நாவல்களும், ’நொறுங்கல்கள், ’ரீதி’, ’வயிறுகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்காக (National Film Development Corporation), ‘கருவேலம்பூக்கள்’ என்கிற குறும்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார்.
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவிருக்கும் ‘விஷ்ணுபுரம்’ விருது, விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினரால் ஒவ்வொரு வருடமும் தமிழின் சிறந்த ஆளுமைக்கு வழங்கப்படுவது. கடந்த அரைநூற்றாண்டு காலகட்டத்தின் தமிழின் மிகச்சிறந்த நவீனக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன் இந்த விருதிற்கு மிகவும் ஏற்றவர். சமகால வாழ்வின் அவசரங்களை, அதீதங்களை, விசித்திரங்களை அவதானித்து, தனக்கே உரித்தான ஒரு அங்கதத் தொனியுடன் கவிதையாய் வரையும் கவிஞர். மீண்டும் அவர்கள், சூரியனுக்குப் பின்பக்கம், பென்சில் படங்கள், அன்று வேறு கிழமை போன்ற இவரது கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
’இயல் விருது’ கனடா நாட்டின் இலக்கியத்தோட்டம் அமைப்பு, கனடாவின் டொரண்ட்டோ பல்கலைக்கழகம் (தெற்காசிய மொழிப் பிரிவு) ஆகியவற்றால் உலகெங்குமுள்ள தமிழ் படைப்பாளிகளின் சீரிய படைப்பாற்றல், இலக்கியப்பணியை பாராட்டும் விதமாக வழங்கப்படுவது. சுமார் முப்பது வருடங்களாக சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமரிசனம் எனப் பல தளங்களில் இயங்கிவரும் தமிழின் சிறந்த சமகாலப் படைப்பாளிகளில் ஒருவரான ஜெயமோகனுக்கு வழங்கப்படவுள்ளது 2014-ஆம் ஆண்டிற்கான ‘இயல் விருது’. ‘பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை, காடு, ஏழாம் உலகம், ரப்பர் ஆகிய நாவல்களும், ‘அறம்’ என்கிற சிறுகதைத்தொகுப்பும் இலக்கிய விமரிசகர்களால் பாராட்டப்பெற்ற இவரது படைப்புகள். ஒரு பத்தாண்டுக்கால இலக்கியப் ப்ராஜெக்ட்டாக எடுத்துக்கொண்டு, மகாபாரதத்தை, நவீனத் தமிழ் உரைநடையில் அவருக்கே உரித்தான எழுத்துப்பாணியில் ’வெண்முரசு’ என்கிற பெயரில், பத்துப் பகுதிகளில் பெரும் செவ்வியல் நாவலாக தற்போது வடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.
விருது பெறவிருக்கும் ஆளுமைகளான திருவாளர்கள் பூமணி, ஜெயமோகன், ஞானக்கூத்தன் –இவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
**
டெல்லியின் டிசம்பர்க் குளிரின்
நடுநடுங்கும் காலைப்பொழுதினில்
ஒரு நாளும் இல்லாத திருநாளாக
எங்கள் வீட்டுப் பக்கத்துப் பார்க்கில்
கிளிகள் வந்தமர்ந்தன பாடின
காக்கைகளையும் புறாக்களையும்
பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டதே
எங்கே போயின கிளிகளெல்லாம் என்கிற
எண்ணம் சில நாட்கள் முன்புதான் வந்தது
ஆண்டுதோறும் ஆண்டாளின் இளந்தோளில்
அமர்ந்து மகிழ்ந்திருக்கும் பச்சைக்கிளியே
மார்கழித் திங்கள் பிறக்க
மாதவனைப் பாடி மகிழ
இன்னும் இரண்டே நாள்தான்
எனத் தெரிவிக்கத்தானா
இந்தக் காலைக் கூப்பாடு ?
**
உல்லாசமாகக் கேட்பதற்கு
மின்விசிறியின் சப்தம்கூடத்
தடங்கலென அதனையும்
நிறுத்திவிட்டாயிற்று
இருந்தும் எங்கிருந்தோ சன்னமாகக்
குழந்தையின் அழுகுரல்
கட்டடத்தொழிலாளியின்
காட்டமான உளிச்சத்தம்
தெருவில் சீறும் மோட்டார்பைக்
மேகங்களுக்கிடையில் உறுமும் விமானம்
இவற்றிற்கெல்லாம் இடையில்தான்
மென்மையாகத் தீண்டுகிறது உன் பியானோ
இல்யா பெஷெவ்லி
இடைஞ்சல்களுக்கிடையில்
ஒரு சிற்றின்பம்
மன்னிக்கவும்
ஒரு சிறு இன்பம் !
_______________________________________
Ilya Beshevli – Russian Composer, Pianist.
காட்டிக்கொள்ளத்தான் எப்போதும் முயற்சி
பலவற்றை உலகத்திற்காகவும்
சிலவற்றை நமக்கு நாமேகூட
காட்டிக்கொள்ளத்தான்
எதையாவது எப்படியாவது நிறுவத்தான்
எப்போதும் இந்த மெனக்கெடுதல்
இப்படி யார்யாரிடமோ எதெதையோ
காண்பிக்க முயற்சித்துக்கொண்டிராமல்
உள்ளதை உள்ளபடியே ஏற்று
வெறுமனே இருக்கமுடியுமா
அலட்டிக்கொள்ளாமல்
சும்மா கிடக்கமுடியுமா
கிடந்துகொண்டே மானுட வாழ்வைக்
கடக்கமுடியுமா
**