ஐபிஎல்: 200 +களில் பஞ்சாப், ராஜஸ்தான் !

இதுவரை 3 போட்டிகளில் ஐபிஎல் டீம் ஸ்கோர் 200-ஐத் தாண்டியிருக்கிறது. ஷார்ஜாவில் நடந்த நாலாவது போட்டியில் இது முதலில் நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 216 எடுக்க, அதைத் தாண்ட முடியாமல் 200 ரன்னில்  இன்னிங்ஸை  முடித்து தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டாவது தடவை கே.எல்.ராஹுல் தலைமியிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதனை பெங்களூர் அணிக்கு எதிராக செய்துகாட்டியது. பஞ்சாப் 206. கோஹ்லியின் பெங்களூர் பரிதாபமாக 109 மட்டுமே அடித்து மண்ணைக் கவ்வியது. 200-ஐ ஸ்கோர் தாண்டிய வைபவம், மூன்றாவது முறையாக நேற்று ஷார்ஜாவிலே நடந்தது.

பஞ்சாப் VS ராஜஸ்தான்.  பஞ்சாப் முதலில் பேட் செய்ய, கேப்டன் ராஹுலும், மயங்க் அகர்வாலும் ராஜஸ்தான் பௌலர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். சிறிய மைதானமான ஷார்ஜா சிக்ஸர்களை வாரிவாரி வழங்க, இருதரப்பிலும் பௌலர்கள் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். 50 பந்துகளில் 106 அடித்து (7 சிக்ஸர்கள்) ராஜஸ்தானைத் திணறவைத்தார் அகர்வால். ராகுல் 69. நிகோலஸ் பூரன் 8 பந்துகளில் 25 எனத் தூள்கிளப்ப பஞ்சாபின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 223 என உயர்ந்து, ராஜஸ்தானைத் துன்புறுத்தியது.

ஓப்பனர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அதிரடி விக்கெட்கீப்பர்/பேட்ஸ்மன் ஜோஸ் பட்லரை (Jos Butler) கேப்டன் ஸ்மித்துடன் இறக்கித் துவக்கியது ராஜஸ்தான். பட்லரை, (வெஸ்ட் இண்டீஸின்) காட்ரெல் 7 பந்துகளில் வீட்டுக்கு அனுப்பினார். சஞ்சு சாம்ஸன் இறங்குகையில் சிக்ஸர் எதிர்பார்ப்பு எகிறியது. சிஎஸ்கே-யை இதற்கு முந்தைய போட்டி ஒன்றில் இதே மைதானத்தில், 9 சிக்ஸர் விளாசி அலறவைத்த பேட்ஸ்மன்!  வேகமாக ஆடிய ஸ்மித் 50-ல் அவுட்டானவுடன், உத்தப்பாவுக்கு பதிலாக ராகுல் தெவாட்டியா (Rahul Tewatia, Haryana)வை அனுப்பியிருந்தார் ராஜஸ்தான் கேப்டன். ஒருபக்கம் சாம்ஸன் சிக்ஸர்-பௌண்டரி என வாணவேடிக்கை காட்டுகையில், தெவாட்டியா லெக்-ஸ்பின்னர் பிஷ்னோயை சிக்ஸர் அடிக்கமுயன்று முடியாமல், சிங்கிள் ஓடிக்கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

Rahul Tewatia Vs Sheldon Cottrell

பேட்டிங் ப்ரொமோஷன் ஃப்ளாப் ஆகிவிட்டதா என ராஜஸ்தான் எண்ணுகிற வேளை. 17-ஆவது ஓவரில், 85-ரன் எடுத்து சாம்ஸன் அவுட்டாக, ஸ்கோர் 161-ல் இருந்தது. 224 என்கிற இலக்கு ஹிமாலய உச்சியாய் மின்னியது. ராஜஸ்தானுக்கு ஜெயிக்கிற ஆசையே போயிருக்கும். சாம்ஸனின் இடத்தில் இறங்கிய உத்தப்பா இரண்டு பௌண்டரி அடித்தார். தெவாட்டியா மட்டையும் கையுமாக முழித்துக்கொண்டிருக்க,  வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) பந்துவீச வந்தார். அந்த சில நொடிகளில் எந்த பூதம் வந்திறங்கியது தெவாட்டியாவுக்குள்? பஞ்சாப் எளிதாக ஜெயித்துவிடும் என்கிற தோரணையில், காட்ரெல் பௌன்சர் வீச, இதுவரை அரைத்தூக்கத்திலிருந்த தெவாட்டியா ஒரு சுழற்று சுழற்றி, பந்தை லாங்லெக் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார்! அடுத்த ஆவேசப்பந்து, ஸ்கொயர்-லெக் திசையில் சிக்ஸர் என அலறியது. மைதானம் புரண்டு திரும்பிப் பார்த்தது. யாரிந்த ஹரியானா! மூணாவது பந்தை லெந்த்தில் வேகமாகக் காட்ரெல் வீச, லாங்-ஆஃப் திசையில் பறந்தது சிக்ஸ்! பௌலர் காட்ரெல்லுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போலிருந்தது. பஞ்சாப் கேப்டன் முழிக்க ஆரம்பித்திருந்தார். சாமியாட்டம் ஆடிய தெவாட்டியா 4-ஆவது, 6-ஆவது பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார். ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்துக்கும், கோச்சிற்குமே ஒன்றும் புரியவில்லை. என்ன! ஜெயிச்சுடுவோம் போலிருக்கே!

31 பந்துகளில் 51 ரன்னில் 7 சிக்ஸர் விளாசி தெவாட்டியா வெற்றியின் விளிம்பில் ராஜஸ்தானைக் கொண்டுவந்தபின்,  அவுட்டானார். அடுத்துவந்த ஜொஃப்ரா ஆர்ச்சர் இரண்டு சிக்ஸர், டாம் கர்ரன் ஒரு பௌண்டரி என விளாசியதால் 224-ஐக் கடந்த ராஜஸ்தான் மறக்கமுடியாத வெற்றி பெற்றது.

அடிபட்ட புலியான கோஹ்லியின் பெங்களூர், இன்று (28/9/20) ரோஹித்தின் மும்பையைத் தகர்க்குமா, இல்லை தகர்ந்துவிடுமா என்பது கேள்வி!

**

அமீரகத்தில் ஐபிஎல்

ஐபிஎல் இந்தியாவில் நடந்தாலென்ன, அமீரகத்திலோ, அமெரிக்காவிலோ,  ஆஃபிரிக்காவிலோ நடந்தால்தானென்ன.. கொரோனா கால குழப்பங்களுக்கிடையே, ஐபிஎல்-ஐ நடத்த முடிந்ததே ஒரு பெரும் சாதனை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மனும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னரும் நேற்று துபாயில்(Dubai) இதையே கூறினார். இந்திய மற்றும் அமீரகக் கிரிக்கெட் போர்டுகள் பாராட்டுக்குரியவர்கள். மாசக்கணக்கில் முடங்கியிருந்தும்  துருப்பிடித்துவிடாமல், ஃபிட்டாக வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆரோக்யமாக இருங்கள், அதிரடியாக ஆடுங்கள். மைதானத்தில் உட்கார்ந்திருப்பது ஐபிஎல் நிர்வாகிகள், அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மட்டும்தானா.. இருக்கட்டுமே. கண்காணா ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள், இறைவனைப்போலவே! டி-20 மேஜிக் தெறிக்கட்டும் எங்கும்..

கோவிட்-19 தாக்குதல்.. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆடாததால் சிஎஸ்கே பலவீனமடைந்துவிட்டதாக ஒருபக்கமாகக் கிளம்பிய விமரிசனம், புலம்பல்.   எல்லாவற்றையும் தாண்டி, செப்டம்பர் 19-ல் நடந்த ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கான தேர்வில் தேர்வுக்கமிட்டி மற்றும் கோஹ்லி & கோ.வினால் தவிர்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு(71),  சிஎஸ்கே-வுக்காக மிடில்-ஆர்டரில் விளாசி தன் ஆட்டத்தரத்தை மீண்டும் நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூப்ளஸீ(Faf du plessis 58 N.O.) இறுதிவரை கவனமான ஆட்டத்தைக் காண்பித்தார். சென்னை அணியை கோட்டைக் கடக்கவைத்தார். மும்பை அணியில் க்விண்ட்டன் டி காக் (Quinton de Kock)(33) மற்றும் சௌரவ் திவாரி(42) ஓரளவு ஆடியும், சென்னையை சாய்க்கப் போதுமானதாக இல்லை. ரோஹித் சொற்ப ரன்களில் கவிழ்க்கப்பட்டார். பௌலர்களில் பியூஷ் சாவ்லா (ஸ்பின்னர்) மற்றும் லுங்கி இங்டி (வேகப்பந்துவீச்சாளர்) சென்னைக்காக ஜொலித்தார்கள்.

இரண்டாவது IPL மேட்ச்! பஞ்சாப் – டெல்லி மோதல். என்ன சொல்வது இந்த மேட்ச்சைப்பற்றி.  முதலில் ஆடிய டெல்லி ஆரம்பத்திலேயே திணறித் தடுமாறியது. பஞ்சாபின் பௌலிங் -குறிப்பாக முகமது ஷமியின் வேகம்- தூள்கிளப்பியது. ஷ்ரேயஸ் ஐயர் 39, ரிஷப் பந்த் 31 அடித்து நிலைமையை சரிசெய்யமுயன்றும் போதாதுபோல் தெரிந்தது. இறுதிக் கட்டத்தில் நுழைந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்(53) மைதானத்தைக் கொளுத்திவிட்டார். 150-ஐத் தாண்டி இரண்டே ஓவர்களில் டெல்லியைக் கொண்டு சென்றார். டெல்லியின் 157/8 பஞ்சாபை நிறுத்த முடியுமா?

பேட்டிங்கில் பஞ்சாப் அணி ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.  விக்கெட்டுகள் சரிய (டெல்லிக்காக முதல் தடவையாக ஆடும் அஷ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்), மயங்க் அகர்வால் மட்டும் தனியொரு ஆளாக எதிர்த்தாடினார். வெற்றிக்கு 13 ரன் என்று கடைசி ஓவரில் நுழைத்தார் பஞ்சாபை. அதிலும் 12 ரன்களை அவரே எடுத்தும்விட்டார். இன்னும் இரண்டு பந்துகள் 1 ரன் தேவை என்கிற வெற்றிமுகம். ப்ரீத்தி ஸிந்தாவின் முகத்தில் தாமரைப்பூ! ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டத்தின் கதையை, தோசையைத் திருப்பிப் போட்டதுபோல் போட்டுவிட்டார் டெல்லியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பஞ்சாப் டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தார். குலை நடுங்கியது பஞ்சாபுக்கு. மேட்ச் டை(tie), Super Over !

எலிமினேட்டர் சூப்பர் ஓவரில் பஞ்சாபைத் தெறிக்கவிட்டார், முதலில் ஓவர் போட்ட டெல்லியின் சூப்பர் ஓவர்-ஸ்பெஷலிஸ்ட் ககிஸோ ரபாடா (Kagiso Rabada). மூன்று பந்துகளில் 2 ரன் கொடுத்து,  பஞ்சாப் கேப்டன் ராகுலையும், நிகோலஸ் பூரனையும் (Nicholas Pooran) தூக்கிவிட்டார். தன் பதிலில் டெல்லி, எளிதாக 3 ரன் எடுத்து மேட்ச்சை வென்றது.

இத்தோடு முடியவில்லை கதை. ஐபில் கமிஷனிடம் பஞ்சாப் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடைசி ஓவரில் பஞ்சாபின் க்றிஸ் ஜார்டன் எடுத்த 2 ரன்களில் ஒரு ரன்னைத்தான் அனுமதித்தார் அம்பயர் நிதின் மேனன். ரன் ஓடுகையில் ஜார்டன் கோட்டை பேட்டினால் சரியாகத் தொடவில்லையாம். ஆனால் ’ரீ-ப்ளே’ என்று ஒன்று இருக்கிறதே.. டெக்னாலஜி! அது காட்டிவிட்டது உண்மையை. ஜார்டனின் பேட் கோட்டிற்குள்தான் வைக்கப்பட்டது! இந்த தவறான ரன் -கழித்தல் இல்லாதுபோயிருந்தால், பஞ்சாப் 20-ஓவர்களிலேயே ஜெயித்திருக்கும். வீரேந்திர சேஹ்வாக்கும் அம்பயரின் தவறைச் சாடியுள்ளார்.

Dev Dutt Padikkal

நேற்று (21-9-20) துபாயில் நடந்த பெங்களூர் Vs ஹைதராபாத் போட்டியில் சுறுசுறுப்பு அதிகமில்லை. பெங்களூர் அணி,  கர்னாடகாவின் 20-வயது ஓப்பனர் தேவ் தத் படிக்கல் (Dev Dutt Padikkal) – ஆரோன் ஃபிஞ்ச் ஜோடியுடன் பேட்டிங்கை ஆரம்பித்தது.  படிக்கல் தன் முதல் ஐபிஎல் போட்டியில் அனுபவ வீரரைப்போல,  சுதந்திரமாக பேட்டை சுழற்றினார். ரன்கள் வேகமாக வந்தன. இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்கால மிடில்-ஆர்டர் பேட்ஸமனாக உருவாகக்கூடுமோ எனத் தோன்றுகிறது.  படிக்கல் 56, டி வில்லியர்ஸ் 51 – டாப் ஸ்கோர்கள். 163 என்பது ஹைதராபாதுக்கு, பெங்களூர் கொடுத்த இலக்கு.  ஹைதராபாதின் மிடில்-ஆர்டரில் தம் இல்லை. ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோவின் (Jonny Bairstow)  61 தான் உருப்படியான ஆட்டம். யஜுவேந்திர சாஹலின் ஸ்பின்னில் பேர்ஸ்டோ விழுந்தவுடனே, ஹைதராபாத் ஆட்டம் கண்டது. விக்கெட்டுகள் நில்லாது ஓடின. முக்கியக் கட்டத்தில் சாஹல் 3 விக்கெட் எடுத்து, முறித்துப்போட்டார் ஹைதராபாதை. இறுதியில் 10 ரன் வித்தியாச வெற்றி கோஹ்லியின் பெங்களூருக்கு.

இன்று இன்னுமொரு க்ளாசிக் ? தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ். மேட்ச் ஷார்ஜாவில். சென்னை அணியில் 20-வயது அதிரடி பேட்ஸ்மன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) இருப்பாரா?  கோவிட்-19 நெகடிவ்-ஆகி, தப்பிவந்திருக்கும் வீரர். அவர் உள்ளே வந்தால் முரளி விஜய் வெளியே! சிறிய மைதானம் ஷார்ஜா. சிக்ஸர்கள் பறக்கும்!

**

வல்லிக்கண்ணன் கவிதைகள்

சுப்ரமணிய பாரதியிலிருந்து, அவருக்குப் பின் வளர்ந்து செழித்த  தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றை, ஒரு சிறந்த கட்டுரை நூலாக தமிழ் இலக்கியத்தில் பதித்த ஆளுமை வல்லிக்கண்ணன். நா.பார்த்தசாரதிதான், தான் நடத்திவந்த  ’தீபம்’ இலக்கிய இதழில் இதனை ஒரு கட்டுரைத் தொடராக 1977-ல் வல்லிக்கண்ணனை  எழுதவைத்தார். 1978-ல் சாகித்ய அகாடமி வல்லிக்கண்ணனுக்கு ’புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற இந்த நூலுக்காக விருது வழங்கி கௌரவித்தது.

2006-ல் மறைந்த வல்லிக்கண்ணன், சிறுகதை, நாடகம், நாவல் என நிறைய எழுதியிருக்கிறார் எனினும் தன் கட்டுரை நூல்கள் சிலவற்றிற்காகக் கவனிக்கப்பட்டவர்.  பாரதி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் தாக்கத்தில் இளம் வயதிலிருந்தே கவிதைகளை எழுதிவந்தவர்.  எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இலக்கிய இதழில் இவரது புதுக்கவிதைகள் வெளிவந்தன. அவரே,  ‘அமரவேதனை’ என்கிற தலைப்பில் வல்லிக்கண்ணனின் முதல் கவிதை நூலை 1974-ல் ‘எழுத்து பிரசுரமாக’ வெளியிட்டார்.  அறுபதுகளின் இறுதி, எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கவிதைகளைக்கொண்ட ‘அமரவேதனை’ யை சமீபத்தில் புரட்டியபோது சில,  மனம் கவர்ந்தன.  வாசியுங்கள் அன்பர்களே:

அறிஞர் ஆந்தை 

ஆந்தை ஒன்று
மரத்தில் இருந்தது
அறிஞர் ஆந்தை
அதிகம் பார்த்தது
பார்க்கப் பார்க்க
கூச்சல் குறைத்தது
கூச்சல் குறையவும்
கூரிய காதால்
அதிகம் கேட்டது
அதனால் பின்னர்
உண்மை தெரிந்து
தன்னை அறிந்து
உலகை உணர்ந்தது.
பேச்சை வளர்க்கும்
பெரியவர் பலரும்
ஆந்தையைப் போல
ஆழ்ந்து அடங்கிடில்
அமைதி வளரும்
உலகம் உய்யுமே!

**

பண்பு ஒன்றே !

விளக்கைப்போட்டேன்
கொசுக்கள் ஆய்ந்தன
இனிப்பைக் கொட்டினேன்
ஈக்கள் மொய்த்தன
மிட்டாய் நீட்டினேன்
குழந்தைகள் சூழ்ந்தன
புல்லைச் சிதறினேன்
ஆடுகள் சேர்ந்தன
பணத்தைக் காட்டிடில்
மக்கள் கூடுவர்
பார்க்கப் போனால்..
பண்பு ஒன்றே !

**

அமர வேதனை

சிலுவையில் செத்த
ஏசுவின் புண்கள்
மீண்டும் கொட்டுது ரத்தம்
மீண்டும் மீண்டும்
உயிர்க்கும் நித்தம்

குண்டடிபட்ட
காந்தியின் இதயம்
மீண்டும் கக்குது ரத்தம்
துயரால் சாகும் நித்தம்

உண்மைக்காக
உரிமைக்காக
மனிதருக்காக
செத்த சாக்ரடீஸ், லிங்கன்
புத்தன் வகையரா
அத்தனை பேரின் ஆத்மாவும்
அமைதியற்றுத் தவிக்கும்
என்றும் என்றும்..

நித்தம்
சத்தியம் கொலைபடல் கண்டு
உரிமை பறிபடல் உணர்ந்து
மனிதரை மனிதர்
தாக்குதல், நசுக்குதல்
கொல்லுதல் கண்டு..
மண்ணில் அங்கும் இங்கும்
எப்பவும் போர்வெறி
நரித்தனம் நாய்த்தனம்
பயில்தல் அறிந்து..
மனிதர்
மனிதம் மறந்தது கண்டு..

**

சென்னைக்கு வந்த சிவன்

சென்னைக்கு வந்து சிவமானான்
அன்றொரு புலவன்
சென்னைக்கு வந்தான், சிவமானான்!
சென்னைக்கு வந்தேன், என்னானேன்?
இன்று நான்
சென்னைக்கு வந்து என்னானேன்?

வெண்பொடி போர்த்திய மேனி
சடைபட்ட கூந்தல்
மண்பட்ட ஆடை பூண்டான்
பித்தனெனத் திரியும் சிவமானான்
தமிழைப் போற்றிய புலவன்

ஓட்டல்தோறும்
உணவெனும் பேரில் 
கண்ட நஞ்சையே தின்னக் கற்றேன்
வீதிகள் திரியக் கற்றேன்
வெறிநோக்கும் பெற்றேன்
உடலெனும் பேரில்
எலும்புகள் சுமந்து நின்றேன்
எதையும் எண்ணிச் சிரித்தல் கற்றேன்
இவையும் சிவனின் பண்புகள்தானே!

**

யாரே அறிவர்?

ஒரு இல்
ஒரு வில்
எனக் கொள்கைகொண்டு
வாழ்ந்து காட்டினை
ராமா! நின்
ராஜ்யம் இங்கு
வரல் வேண்டுமென
விரும்பினர் பலரே
விரும்புவோர்
இன்றும் உளரே

எனினும்
இன்று நீ
இந்நாட்டிடை வந்திடில்
உன் நிலை என்னாகுமோ
யாரே அறிவர்?
மீண்டும் கானகம்
ஏகிட நேருமோ
இருட்டடிப்பில்  ஆழ்வையோ?
அன்றிக்
குண்டடிபட்டுச் சாவையோ..
யாருக்குத் தெரியும்?

ரகரகத் துணைவியர் பலப்பலர்
சுரண்டிப் பிழைத்திட
உற்ற கருவிகள் பலப்பல
எத்தி உயர்ந்திட
நாவலித்தீடு நயம் நிறை
சொற்கள் மிகப்பல பல
கொண்டு வாழ்ந்திடும்
அரசியல் தலைவர்கள், மேதைகள்
வளர்ந்திடும் இந்நாட்டில்
பிழைக்கத் தெரியாப் பித்தென
பரிகசிப்புக்கு உள்ளாவையோ?
ஏ ராமா!
உன் நிலை என்னாகுமோ
யாரே அறிவர் ?

**

கு. அழகிரிசாமியின் ‘மானம்’ சிறுகதை

ஏற்கனவே இந்த தளத்தில் பதிந்திருந்த கு.அழகிரிசாமியின் ’அன்பளிப்பு’ சிறுகதை நிறைய வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் ஆச்சரியம். அழகிரிசாமி அழகுத் தமிழின் அருமையான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். இன்று காலையில் படிக்க நேர்ந்த அவரது இன்னுமொரு சிறுகதை வித்தியாசமானது. கீழே, வாசிப்பின்பத்திற்காக :

சிறுகதை: கு. அழகிரிசாமி

மானம்

இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பத்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப்போல, இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை, அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான் செல்லும் இரயில் நிற்காது போகும் இரயிலடிகளின் மர்மத்தை, இரயில் கடப்பதற்கு முன்னமேயே பிடிபடுவதற்கு முயற்சிப்பதாய், அவன் பார்வை அந்த இரயிலடிகளின் மேல் பாயும். அப்போது அவனுக்கு மட்டும் இரயில் ஒரு விநாடி நின்று போவதுபோல், அவனின் சிந்தையில் இரயில் கட்டுண்டு இருக்கும். இரயில் நிற்காத அந்த இரயிலடிகளில் ஆட்களில்லாது வெறிச்சோடிப் போய் இருக்கும் தனிமையில், எங்கிருந்தோ ஒரு நாய் ஓடி வந்து, ஏதோ திசை நோக்கி இருக்கும் தனிமையின் தொலைவை நீட்டிப்பதுபோல் தோன்றும் அவனுக்கு. அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய இரயிலில் தான் மட்டும் தனியாய்ப் பிரயாணம் செய்தால், தன் தனிமையில் இரயில் பயணமும் நில்லாக் காட்சியாய் ஓடிப் போவது இன்னும் துல்லியமாகும் என்றெல்லாம் உள் தர்சனம் செய்து கொண்டிருப்பான்.

இந்த இரயில் பயணம் அவன் வெகுகாலம் கழித்துப் போவதாக அவனுக்கு திடீரென்று நினைவு கொண்டது. மதுரைக்குச் செல்லும் வைகை விரைவு இரயில் வண்டி ஆயத்த நிலையில் புறப்படத் தயாராக இருக்கும். ஒரு மிக நீளமான இயந்திர நாய், பாய்ச்சலுக்குத் தயாராக இருப்பது போல் அவனுக்கு உள்ளத்தில் சிலிர்ப்பு ஏற்படும். ”இது என்ன? இந்தக் கடைசி நிமிஷத்தில் மூட்டை முடிச்சோடு ஏழு பேர்கள், வெளி கிரகத்திலிருந்து வந்து குதிப்பது போல் உள்ளே அவசர அவசரமாய் நுழைகிறார்களே. மனிதர்கள் ஏன் அவசரத்தையும் துரிதகதியையும் விரும்பி தழுவிக் கொள்கிறார்கள்? காலத்தையே கால்செருப்பாய் போட்டுக் கொண்டு, ஆளாய்ப் பறக்கிறார்களோ?” என்று அவன் நினைப்புகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அவனிருக்கும் இருக்கைக்குப் பக்கத்திலேயும், எதிரேலேயும் என்று உட்கார்ந்திருப்பர். அது ஒரு பெரிய குடும்பமாயிருக்கும் எனறு ஊகிப்பதற்கு எந்தக் கால அவகாசமும் அவனுக்குத் தேவையில்லை. அவன் இருக்கைக்கு எதிரில் அமர்ந்தவர்கள் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும். அவர்கள் அண்மையில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் என்று அவன் ஊகித்துக் கொண்டான். அந்த இளம் பெண் வகிடெடுத்த நெற்றியில் பொட்டு வைத்திருப்பாள். சல்வார் சூட் போட்டிருந்தாலும் கல்யாணம் செய்து கொண்டுவிட்ட பின்னால், அது அவள் துடுக்குத்தனத்தைக் கொஞ்சம் குறைத்துக் காட்டுவது போல் இருக்கும் அவனுக்கு. இளைஞனிடம் ஒரு புது மாப்பிள்ளை முறுக்கு இருப்பதை, அவன் அவளிடம் பேசும் காதல் கலந்திருக்கும் கண்களில் கொஞ்சம் கர்வம் கலந்திருக்கும் தோரணையிலும்- அவர்கள் அவளின் பெற்றோர்களாக இருக்க வேண்டும்- அவளின் பெற்றோர்கள் இருக்கும் இருக்கைகளிலிருந்து ஒதுங்கி வந்து மனைவியோடு  எதிர் இருக்கைகளில் தேர்ந்தெடுத்து இளைஞன் அமர்ந்து கொண்டதிலிருந்தும், அவன் புரிந்து கொள்வதற்கு அரிதாக இல்லை. அவளுடைய பெற்றோர்களோடு அவளுடைய சகோதரன், அண்ணியும், அவர்கள் குழந்தையும் கூட வந்திருப்பார்கள்.

வைகை இரயில் வண்டி இறக்கை கட்டிப் பறப்பதுபோல் பறந்து கொண்டிருக்கும். ஒரு பறவை அதன் மேல் குறுக்கே பறந்து, அதைக் கேலி செய்வதுபோல் இருக்கும். ஆரம்பத்தில் நீயா நானா என்று ஒரு இருக்கை வரிசையில் நான்கு பேர் உட்கார்ந்திருக்கும் இறுக்கமும், இட நெருக்கடியும் கொஞ்சம் குறைந்தது போலிருக்கும். பயணிகள் அவரவர் நினைவோட்டத்தில் இருப்பது போல் இருக்கும். இரயில் ஓட்டத்துக்கு இணையாய் எத்தனை நினைப்பு ஓட்டங்கள் என்று அவன் அதிசயித்துக் கொண்டிருப்பான். எதிரிலிருந்த குடும்பத்தின் செயல்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. தம் செயல்பாடுகளை மற்றவர்கள் கவனிப்பார்களே என்ற பிரக்ஞை குடும்பத்தினருக்கு இல்லாததே, அவனை அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்குத் தூண்டுதலாயிருக்கும். குடும்பத்தினர் இரைந்தும் சிரித்தும் பேசிக் கொண்டிருப்பது  விகாரமாயும், இரயில் விரைந்தோடி இரையும் தாள கதியோடு ஒத்துப் போகாதது போலும், அவனுக்குத் தோன்றும். குழந்தையைவேறு சீண்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் வீட்டில் தாங்கள் கொஞ்சாத கொஞ்சலும், சீண்டாத சீண்டலும் பெற்றோர்கள் இந்த மாதிரியான இரயில் பயணங்களில் மேற்கொள்வது பயணங்களில் நேரம் கிடைப்பதாலா, அல்லது பயணத்தில் தம் பொழுது கழிவதற்கான ஏதுவாகவா என்று அவன் யோசிக்கலானான். குழந்தையோ அவர்களின் கொஞ்சலையும் சீண்டலையும் பிடிக்காததுபோல சிணுங்கவும், குழந்தையின் தாய் குழந்தை தூங்கட்டுமென்று ஒரு சேலையை எடுத்து தன் இருக்கைக்கு மேலேயே தூளி கட்ட முயல்வாள். முடியாது திணற, அவளின் கணவன் வெற்றிகரமாக தூளி கட்டி முடித்துவிட்டு, ஒரு பெருமிதம் கொள்வது போல் தன் மனைவியைப் பார்ப்பான்.

இரயில் ஓட ஓட, காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். கொளுத்தும் வெயில் வேட்டி, கருவேல முட்செடியில் சிக்கிக் கிழிபட்டுக் கொண்டிருக்கும். கூட்டமாய் இருக்கும் சில பனை மரங்கள். தள்ளி ஒரு பனை மரம் மட்டும் தனியாய்ச் சூரிய வெயிலைக் குடித்துக் கொண்டிருக்கும். இரயில் கழிவறைப் பக்கம் தன் அவலத்தைக் கூனிக் குறுகி முகத்தை எப்போதும் குறுக்கிய கால்களுக்குள் புதைத்துக் கொண்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்த இளமை பறிபோன பிச்சைக்காரி எங்கே போனாள்? எங்கு போய்ச் சேர்வது என்று தெரியாமல் பயணிக்கும் அவளுக்கு, எங்கு போய்ச் சேர்ந்தாலும், அங்கு போய்ச் சேர்வதுதானா? சாப்பாட்டுக்குத் தயாராகி விட்டிருக்கும் குடும்பம். சாதம், சாம்பார் , முட்டை, தயிர் என்று பரிமாறல்கள் தொடங்கியிருக்கும். தனியாய் அவன் எதிரில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இளந்தம்பதிகளுக்கு முதல் பரிமாறல் நடக்கும். மற்றவர்களின் பசியைத் தூண்டி விடுவது போல் இருக்கும், அவர்கள் பரிமாறுவதும் உண்பதுமாய் இருப்பது. இந்தப் பசியாறலுக்கு முன்னமேயே குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க் கொண்டிருக்கும் இரயில் காண்ட்டீன் ஊழியர்கள், பஜ்ஜி,பலகாரம் காபி, டீ என்று குடும்பத்தினரிடம் நடந்த வியாபரத்தில் அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டனர். குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை குடும்பத்தினர், தொல்லையில்லையென்று விரும்புவதுபோல் தோன்றும் அவனுக்கு. இளந்தம்பதிகள் தங்களுக்குள்ளேயே விடாது பேசிக் கொண்டே வந்து கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் பிறருக்கும் வேறு யாரிடமும் பேசவேண்டிய அவசியமின்றி விஷயங்கள் ஏராளமாய் இருக்க, எப்படி அந்த விஷயங்கள் அவர்களுக்கு சுவாரசியமாகின்றன என்று ஆச்சரியப்படுவான். அதனால் தான் பேச முயன்றாலும் அது அவர்களுக்கு சுவாரசியமில்லாமலும், இடைஞ்சலாகவும் இருக்கும் என்ற காரணத்தால் அவன் அவர்களைக் கண்ணோட்டம் செய்வதையும்கூட,  ஒரு நாகரிகத்தோடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான்.

இப்போது இரயில் விழுப்புரம் இரயிலடியில், நெடுஞ்சாலையில் ஓடி ஒரு நாய் களைத்துப் போய் நிற்பதுபோல் நின்று கொண்டிருக்கும். அவனும், குடும்பத்தினரும் இருக்கும் இரயில் பெட்டியில் ஏறி, உள்ளே ஒரு திருநங்கை நுழைவாள். அவளைத் தொடர்ந்து இன்னும் சிலர் நுழைவார்கள். அவள், வாளிப்பையும் வாயாடலையும் சேர்த்து கூட்டிக்கொண்டே நுழைவதுபோல் இருக்கும். அவளின் ஈர்ப்பு ஆணில் பெண்ணின் நிழலும், பெண்ணில் ஆணின் நிழலும் சேர்ந்த பரிமாணத்தில் அமைவதாயும், தன்னுள்ளிருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து பிரக்ஞை வெளியில் பிரத்தியட்சமாய்க் காணும் பரவசமாய் அது மாறுவதாயும், அவன் உணர்ந்தான். அவளின் வாளிப்பில் இருக்கும் நேரடித்தனம் பொய்யானதென்பது அவள் வாழும் வாழ்க்கையின் உண்மையில் அடிபட்டுப் போகும் என்று நினைத்தான். அதே சமயத்தில் அவனுக்கு, அவள்மேல் பயம் கொண்டது. அந்த பயம், அவளின் வசீகரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் மாயையின் நிழலில் மனம் கொள்ளாது இருள்வதால் என்பதாலிருக்கும். மிகவும் கலகலப்பாக வந்துகொண்டிருக்கும் திருநங்கை, கை தட்டுவாள். ஒவ்வொரு இருக்கையில் இருப்பவர்களிடமும் கை தட்டிக் காசு கேட்கும் அவளின் செயலை, பிச்சை எடுப்பது என்ற ரீதியில் எடுத்துக் கொள்ள முடியாது என்று அவனுக்கு மனத்தில் படும். ஒரு பிரத்தியேகமான மன, உடல் ரீதியில் தாம் வாழும் வாழ்க்கையின் அங்கீகரிப்பை, இப்படி அவள் உரிமையோடு எதிர்பார்க்கும் விதமாகக் காலந்தோறும் பழகி விட்டாளோ என்று அவனுக்கு ஒரு ஐயம். அவள் தன்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறாள். ஏன் ஜ்வாலையை அள்ளிக் கொண்டு வருகிறாள்? எந்தக் காட்டைக் கொளுத்தப்போகிறாள்.. என்று அவன் மனம் உன்மத்தம் கொள்ளும்.

அவன் இருக்கும் இருக்கை வரிசைக்கே வந்து விட்டாள். காமதேவன் இந்திரன் அவளிடம் எந்த வில்லைக் கொடுத்து விட்டுப் போனான்? அவள் கண்களில் முதலில் பட்டது, அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் இளந்தம்பதியினர்தான். அவள் இந்திர வில்லைக் கண்களில் வளைத்துக் கைகளில் சொடுக்கி காண முடியாத மலர் பாணங்களை எய்வது அவர்களுக்குத் தெரியவில்லையா? அந்த மலர் பாணங்கள் அவர்கள் மேல் வாழ்வின் வசந்தங்களைப் பொழிந்து உன்மத்தம் கொள்ளவைப்பது, அவர்களுக்குப் புரியவில்லையா? அவள் கை நீட்டிக் கேட்பது காசுக்கா? இல்லை அது இந்திர வரமா? எத்தனை விநாடிகள் காத்திருக்கும் இந்திர வரம் என்பதுபோல், காதலில் தழுவத் தயக்கப்படுவது போல் இருக்கும் இளந்தம்பதிகளிடமிருந்து, அவனிருக்கும் இருக்கை வரிசையில் வேறு யாரையும் அணுகாது நகர்ந்து போவாள், அடுத்த இருக்கை வரிசைக்கு அந்தத் திருநங்கை.

பெண்ணின் தந்தைக்கு என்ன யோசனையோ? நகர்ந்து போய்க்கொண்டிருக்கும் திருநங்கையை மறுபடியும் கூப்பிட்டார். அவளிடம் “நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க; கூடிய சீக்கிரம் தாயும் பிள்ளையுமாகனும்” என்று சொன்னதும், அவள் கைகளை உயர்த்தி இளந்தம்பதியினரின் உச்சந் தலைகளின் மேல் சுற்றுகள் சுற்றி வாழ்த்துவாள். இந்திரன் வானிலிருந்து வாழ்த்தி, திருநங்கைக்கு மந்திரத்தைச் சொல்லச் சொன்னதுபோல் அவனுக்குத் தோற்றம் கொள்ளும். இளம் தம்பதிகள் இன்னும் அழகாகி, காதல் கொண்டு மயங்குவதுபோல் அவனுக்குத் தோன்றியதில், ஒரு வரம்பை மீறின அச்சமும் கூடும். மகிழ்ந்துபோன பெண்ணின் தந்தை, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, வாழ்த்திய திருநங்கையிடம் கொடுத்தார். காற்றடைத்த பாலீதின் பை வெடித்ததுபோல் அவள்,  “கூலிக்காக நான் வாழ்த்தறதில்ல” என்று வெடித்து பெண்ணின் தந்தையை முகமெடுத்தும் பார்க்காமல், அடுத்த விநாடியே புறப்படப் போகும் இரயில் வண்டியிலிருந்து இறங்குவாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் தந்தையின் மனம் அதிர்ந்ததோ இல்லையோ, அவன் மனம் அதிர்ந்தது. அவனின் ஆடைகளைத் திருநங்கை களைந்து எடுத்துக் கொண்டு போனது போல் அவன், அவளைக் கனவு போல் பார்ப்பான். மானம் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; ஆண் பெண் உறுப்புகளல்ல என்று பளிச்சென்று அவன் மனத்தில் ஒரு மின்னல் ஓடி இறங்கும். புறப்படும் இரயில் வண்டியும் ஒரு விநாடி அதிர்ந்து நின்று, மறுபடியும் இரயிலடியை விட்டுப் புறப்பட்டது போலிருக்கும் அவனுக்கு. திருநங்கை மறையும் வரை இரயில் ஜன்னல் வழியே, இரயில் நடைமேடையில் அவள் ஒருத்தி என்பதுபோல, அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பான் அவன்.

**

நன்றி: sirukathaigal.com

தென்சீனக் கடலில் சீனாவின் ஆட்டம்

ஒட்டுமொத்த உலகிலும் தீயைப்போட்டுக் கொளுத்தி கொரோனா வேடிக்கை பார்த்துவரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் (மார்ச் 2020-க்குப் பின்னான போதாதகாலம்), தெற்கு ஆசியாவின் சில இடங்களில் நோண்டிப் பார்த்தது போதாதென, மேலும் சில தடாலடி நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. தென் சீனக்கடலில்  நீர்வழிகள், இயற்கைவளமிக்க நிலத்திட்டுகளைச் சுற்றி இருக்கும் பரப்புகள் சிலவற்றிற்கு வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தைவான், மலேஷியா, ப்ருனெய் (Brunei) போன்ற நாடுகள் பல வருடங்களாக உரிமை கோரிவருகின்றன. திடீரெனக் கிளம்பி, பேயாட்டம்போட்டுவரும் கொரோனாவோடு பல நாடுகள்  ஒரு நிழல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், தென்சீனக் கடல்பகுதியின் சிறுநாடுகளின் உரிமைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு தன் போர்க்கப்பல்கள், ஆய்வுக்கப்பல்களை அனுப்பி அங்கே முகாமிட்டு நீர்வளங்களைக் குடையத் துவக்கிவிட்டது சீனா. குறிப்பாக இரண்டாவது உலகமகாயுத்தத்திற்குப் பின், யாருக்குச் சொந்தம் என்கிற சர்ச்சைகளுடன் ஜீவிக்கின்றன  பாரஸெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள் (Paracel, Spratly islands). (ஒருகாலத்தில் ஜப்பானால் ஆட்சி செய்யப்பட்டவை). இவற்றின் அருகில், செயற்கை நகரம் ஒன்றை சீனா உருவாக்கிவருவது தெரிந்தது. அதற்கு ஸன்ஷா நகர் (Sansha city) எனப் பெயர் சூட்டலும் நடந்திருக்கிறது. (ஸ்ப்ராட்லி தீவுப்பகுதி இதுவரை மனிதனால் துருவப்படாத, எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளம் கொண்டது எனக் கணிக்கப்பட்டிருக்கிறது). போனவருடமே இந்த நீர்ப்பரப்பில் சீனக் கடற்படையுடன் பிரச்னைகளை சந்தித்திருந்த அண்டை நாடான வியட்நாம், தன் அதிகாரபூர்வ எதிர்ப்பையும் சீனாவுக்குத் தெரிவித்திருந்தது. அதைப்போலவே சர்ச்சைக்குரிய கடற்பிராந்தியம் தொடர்பாக முன்னொரு முறை ஃபிலிப்பைன்ஸோடும் சீனா மோதிப் பார்த்திருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், ட்ரம்ப்பின் அமெரிக்கா அலர்ட் ஆனது. தனது கடற்படையின் 7-ஆவது அணியின் போர்க்கப்பல்கள் சிலவற்றை தியகோ கார்சியா (Diego Garcia) கடற்தளத்திலிருந்து தென்சீனக்கடலுக்கு அனுப்பி நிலைகொண்டது. ஏற்கனவே சீனாவின் அதிரடி ராஜீய, ராணுவ நடவடிக்கைகளினால் கடுப்பிலிருந்த ஆஸ்திரேலியா, தன் போர்க்கப்பல் ஒன்றை அங்கு செலுத்தி, அமெரிக்கக் கப்பற்படையுடன் சேர்ந்துகொண்டு (யுத்தப்) ’பயிற்சிகளை’ ஆரம்பித்தது. சீனாவின் ரத்த அழுத்தம் எகிறிவிட்டது!

சுயமான வெளியுறவுக் கொள்கையோடு செயல்படாமல், அமெரிக்காவழி (அதாவது ட்ரம்ப்  அரசின்வழி) சர்வதேச அரசியல் செய்வதாக ஆஸ்திரேலியாவை விமரிசித்தது சீனா. ஆஸ்திரேலியா அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, சில வாரங்களில்,  கல்வான் (Galwan) எல்லைச்சண்டை சமயத்தில், இந்திய மகாசமுத்திரம் மற்றும் சுற்று நீர்ப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுடன் கப்பற்படைகள்- ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக இந்துமகா சமுத்திரப் பகுதிகளில்  நீர்வழிப் போக்குவரத்து, பாதுகாப்பு பற்றிய  புரிதல் இருக்கிறது. பெரிதாக முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், சில வாரங்களுக்கு முன் அமைதியாகத் தன் போர்க்கப்பல் ஒன்றை தென்சீனக் கடலுக்கு அனுப்பிவைத்தது இந்தியா. கூடவே சர்வதேச விதிமுறைப்படி,  கடல்வழிப் போக்குவரத்துகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது.  தென்சீனக் கடல்பிராந்தியத்திலும் அது தங்குதடையின்றி நடைபெறவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றது. சம்பந்தப்பட்ட நாடுகளின் இத்தகைய strategic moves, மூலோபாய நடவடிக்கைகள், அறிக்கைகள் சீன ராணுவ அமைச்சகத்தில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற பேரரசுகளுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் சீனா, மற்ற பிராந்திய  நாடுகளோடு அவ்வப்போது மோத நேர்ந்தால் தனக்குப் பரவாயில்லை, பெரிய நஷ்டம் ஒன்றும் வந்துவிடாது என்பதான கணக்குகளுடன் ஆங்காங்கே காயை முன்னகர்த்திவருகிறது. எந்த ஒரு மகா யுத்தமும், முதலில் இப்படிச் சிறு சிறு மோதல்கள், சண்டைகளில்தான் ஆரம்பிக்கும் என மனித சரித்திரம் தெளிவாகக் கூறும். ராணுவ பலத்துடன் முஷ்டியை உயர்த்திவரும் ஷி ஜின்பெங் (Xi Jinpeng), சரித்திரம் படித்தவரல்ல. இனியும் அதையெல்லாம் படிக்க, அவருக்கு நேரமில்லை. கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்ட்டோ படித்துத்தான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பாதையில் முன்னேறி இப்போதிருக்கும் நிலைக்குவந்திருக்கிறார். அதனால் அவருடைய தலைமையில் இயங்கும் சீனா, மேலும் சச்சரவுகள்,  மோதல்கள் என்கிற வகையில் தொல்லைகளைத்தான்  தரும் என எதிர்பார்த்து, தன்னை ராணுவரீதியாக ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது  தெற்காசியா.

**

 

அடங்க மறுக்கும் சீனா ?

டிசம்பர் 2019-ல் ஒட்டுமொத்த உலகத்துக்கு எதிராக, தான்தோன்றித்தனமாக, குள்ளநரித்தனமாகக் கிளப்பிவிட்ட வைரஸ் நிழல் யுத்தம், ஹாங்காங் மக்களின்மீதான அடக்குமுறைகள், தைவானுக்கு எதிரான சவால்கள், ராணுவ பயமுறுத்தல்கள், இந்தியாவோடு ஒருபக்கம் பொருளாதார உறவு, மற்றொரு பக்கம் எல்லை அத்துமீறல்கள் என சீனாவின் சமீபகால நடவடிக்கைகள் ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருப்பது வல்லரசு நாடுகளின் தலைவர்களால், பாதுகாப்பு வல்லுநர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டே வருகிறது.  அதற்கு எதிர்சவாலாக, குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவை மட்டுப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. சர்வதேச வெளியில்,  யாரும், எதற்கும் நம்ப விரும்பாத, ஆபத்தான  நாடு அது என்கிற நிதர்சனம் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கொரோனா உள்புகுந்து அழித்துவிட்ட வல்லரசுகளின் பொருளாதார அடித்தளத்தை, அதன் கட்டுக்கடங்கா பின் விளைவுகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, உலக அரங்கில் ஒரே வல்லரசாக பொங்கி எழுவதற்கான சரியான தருணம் இது என கம்யூனிஸ்ட் சீனாவின் அதிபர் க்‌ஷி ஜின்பிங் (Xi Jinping) நோட்டம்விட்டிருப்பதாகத் தெரிகிறது. தன் வெகுநாள், ரகசிய முயற்சியான  பிராந்திய ‘விஸ்தார’ நோக்குடனான (expansionist motives)  சதித்திட்டங்களை ஒவ்வொன்றாக, வேகமாக அமுல்படுத்துவதற்கு உரிய காலம்  கனிந்துவிட்டது என முடிவுசெய்து காரியங்களை ஆரம்பித்துவருகிறது சீனா. இது எங்கே போய் முடியும் என இப்போதும் எவரும் சரியாகக் கணிக்க இயலாது.

இயற்கைவளம் மிகுந்த தென்சீனக்கடல் பகுதியில் ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேஷியா, தைவான், வியட்நாம், ப்ரூனெய் (Brunei) என வரிசையாக ஒவ்வொரு நாட்டோடும் கடல்வழி மோதல்கள், சவால்கள். ட்ரம்ப்பின் அமெரிக்கா ஆவலுடன் இதனை கவனித்துக்கொண்டிருக்கிறது. ஜப்பானும்தான். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ, சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென்சீனக் கடலில் தன் இஷ்டத்துக்கு மேய்வதை அனுமதிக்கமாட்டோம் என எச்சரித்திருக்கிறார். அமெரிக்க, ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களோடு, இப்போது இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு எல்லைப்பகுதிகளில் லடாக்கிலிருந்து அருணாச்சல் வரை சீனா தன் வாலை நீட்டி வைத்திருக்கிறது. 1950-களின் இறுதியில் ‘பஞ்ச்ஷீல்’ கொள்கை, ‘இந்தியா-சீனா பாய்-பாய் (Bhai-Bhai) எனப் பிதற்றிய கோமாளி கோஷங்களில், சீனப் பிரதமர் ஸௌ-என்லாயின் (Zhou-Enlai) தொடர்ந்த பல்லிளிப்பில், பகட்டுகளில் முட்டாள்தனமாக விழுந்து நொறுங்கிய பிரதமர் நேரு, வெளியுறவு மந்திரி கிருஷ்ண மேனன் ஆகியோரின் பலவீனமான இந்தியத் தலைமை, 1962 யுத்தத்திற்குப் பின் இந்தியாவை ஒரு ஏமாளியாக, பலவீனனாக சர்வதேச அரங்கில் காண்பித்திருந்தது. அதன் கடுமையான பின்விளைவுகள் இந்தியாவை இன்னும் விட்டபாடில்லை. 1962 அக்டோபரில், சீனா காண்பித்த கயமைத்தனத்திற்குப் பின், நீண்ட இந்திய எல்லைப்பகுதிகளில் அத்துமீறல்கள் தொடர்ந்து  நீடித்தே வருகின்றன. சீனா எல்லை மீறுவதும், இந்திய எதிர்ப்பும், தடுப்புமுயற்சிகளும்,   அதன்பின்னான இருதரப்பு படைத் துணைத்தளபதிகள்-நிலைப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துத் தொடர்வதும்,  கடைசியில் அவை ஒன்றுமில்லாமல் போவதும், கடந்த  30 வருடங்களுக்கும் மேலாக ஒரு ராணுவ வழக்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு (Galwan valley) எல்லைச்சண்டைக்குப்பின், தீவிர பேச்சுவார்த்தைகள் இரு ராணுவத் தரப்பினரிடையே ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. அமெரிக்கா இந்த விஷயத்தில் சீனாவை எச்சரித்தபோதெல்லாம், ‘இது எங்களுக்குள்ளேயான இருதரப்பு பிரச்னை. நாங்கள் ‘பேசி’த் தீர்த்துக்கொள்வோம்’ என அவ்வப்போது கூறிவருகிறது சீனா. ஆனால் அதன் எல்லை செயல்பாடுகள் நேரெதிரானவை. ஆகஸ்டு 30-ஆம் தேதி மீண்டும் சில இடங்களில் அத்துமீறப் பார்த்தது. இந்த முறை இந்திய ராணுவ வீரர்கள் கணிசமான அளவில், வான்படையின் பின்னணியோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்ததால், வேறுவழியின்றி சீனா பின் வாங்கியிருக்கிறது. மேலும் இந்த முயற்சிக்குப்பின், இந்திய வீரர்கள் கல்வான் மலைப்பகுதியின் மூலோபாயமான குன்றுகளை வளைத்ததோடு,  அங்கே போய் தயாராக நிலைகொண்டுவிட்டார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீனா, எரிச்சலில் இருக்கிறது!

ஷாங்காய் பாதுகாப்புக் கூட்டமைப்பின் (Shanghai Cooperation Organization) வருடாந்திர கூட்டத்திற்காக ரஷ்யா சென்றிருக்கிறார் இந்திய ராணுவ மந்திரி. மாஸ்கோவில் ரஷ்ய ராணுவ மந்திரியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது இந்தியா கேட்டுக்கொண்டபடி, பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதில்லை என ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. இதற்குப்பின் இந்திய-சீன ராணுவ மந்திரிகளும் தங்களது அணியினருடன் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். எல்லைப்பிரச்னை நிச்சயம் பேசப்பட்டிருக்கும். விளைவு? பெரிதாக ஒன்றும் சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்த நிலையில், தேர்தலை சந்திப்பதில் பிஸியாகிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா, சீனாவுக்கிடையே எல்லை நிலைமை மோசமாகிவருகிறது எனக் கூறியிருக்கிறார். இருநாடுகளிடமும் பேசி, ஒத்துழைக்க நாங்கள் தயார் என அறிவிப்பு வேறு!  இது ஒருபுறமிருக்க, அமெரிக்க தேர்தல் சமயத்தில் (நவம்பர் 03, 2020), வாஷிங்டனில் நிகழக்கூடிய அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்களை எல்லையின் பல்வேறுபகுதிகளில் கொடுக்கத் திட்டமிட்டிருக்கலாம். சீனாவின்  அடிவருடி, சம்ச்சா (Chamcha)வான பாகிஸ்தான் மேற்கு எல்லையில் அதே சமயத்தில் தன் விஷமத்தைக் காண்பிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இந்திய ராணுவக் கூட்டமைப்பின் தளபதி (CDS), ’எந்தத் தரப்பிலிருந்தும், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்நிலையில் இருக்கிறது’ என சிலநாட்கள் முன்பு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

**