புறாவுக்கு ஒன்னத்தையும் போட்றாதீங்க!

எங்கள் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்து உள்பக்கமாகபோய்த் திரும்பி நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அடுக்குமாடிச்சுவரின் உயரத்தில், அந்த சிறிய போர்டு கண்ணில் பட்டது. Don’t feed the pigeons. அடப்பாவிகளா! புறாவுக்கு சாப்பிட ஒன்றும் போடக்கூடாதா? பிச்சைக்காரனுக்கும் காசு, கீசு போட்றக்கூடாது. நாய் வாசலில் பசியோடு நாளெல்லாம் பட்டினியாகப் படுத்துக்கிடக்கட்டும். எதையும் போடாதே. நாம் மட்டும் நல்லா இருப்போம்.. டேய், நடக்கக்கூடிய காரியமா இது?

அந்தக்காலத்து மாடப்புறாக்கள் தான் இந்தக்காலத்து கோபுரப் புறாக்கள், அப்பார்ட்மெண்ட்டுப் புறாக்கள். இவைகள் மரங்கள் பக்கம் போகாது குடியிருக்க. கோயில் கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என உயர்ந்த கட்டிட அமைப்புகளில் வாழும். இந்தக்கால அடுக்குமாடிக் கட்டிடங்களின் உச்சிகள், மொட்டை மாடிகள் இவை ஜோடி ஜோடியாய்க் குடும்ப வாழ்வு நடத்த வசதியாகிப்போகின. கட்டிடங்களின் பால்கனிகளில் இங்குமங்குமாக அவ்வப்போது இவை பறக்கும். சிலசமயங்களில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ஙூம்..ஙூம்.. என ஒரு அழுத்தமான ஒலியில் முனகும். இவற்றின் வாழ்வு முறை அது. வேறென்ன செய்துவிடுகின்றன இந்தப் புறாக்கள்? இவை உன்னிடம் என்ன அல்வாத்துண்டையா தினம் தினம் கேட்கின்றன? இதுகளுக்காக மூலையில் கொஞ்சம் தானியத்தைத் தூவினால் என்ன, குறைந்தா போய்விடுவாய் நீ? ஏனிந்தக் கொலவெறி?

மெத்தப்படித்த உனது புத்திசாலித்திட்டங்கள் நாடெங்கும் பல காடுகளை சீராக அழித்துவருகின்றன; இயற்கை வளங்களை சூறையாடுகின்றன. வளமான வாழ்விடங்கள் அமைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, விலங்குகளின், பறவைகளின் இருப்பிடங்களைக் கபளீகரம் செய்கிறாய். கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் என்று ஏதேதோ முன்னேற்றமொழி பேசியே ஏரி, குளங்களையும் தூர்த்து மூடுகிறாய். இயற்கையை இப்படி சீண்டிவிட்டுக்கொண்டே நாளெல்லாம் வாழ்கிறாய். நவீனம் என்கிறாய்; நாகரிகம் என்கிறாய். என்னே என் திறமை என்று மார்தட்டிக் கொள்கிறாய். இடையிடையே பழம்பெருமையும் பேசி பம்மாத்து வேலை செய்கிறாயடா நீ! திடீரென எங்காவது சுனாமி, புயல், பூகம்பம் என இயற்கை சீற்றம் காட்டிவிட்டால், ஐயோ, அம்மா என்று அலறுகிறாய். ஓஸோனில் விழுந்தது ஓட்டை; உலகமே அழியப்போகிறதென்று என்று பேத்தினாய் ஒருமுறை! வான்வெளியின் கருங்குழி என்னையே பார்ப்பதுபோல் தெரிகிறதே என்கிறாய். அழிவுக்குழிகளை உன்னைச் சுற்றியும் நீயே தோண்டிவைத்திருக்கிறாய். திடீரென்று எல்லாக்குழியும் என்னயே பார்க்கிற மாதிரி இருக்கிறதே என்றால், என்னதான் செய்வது?

ஐந்தறிவை மட்டும் வைத்துக்கொண்டு, எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையேயும், விலங்குகள் எல்லாம் தங்கள் வாழ்வை சரிவர நிர்வகித்துவருகின்றன. உனக்குப் புரியாததா இது? ஆறை வைத்துக்கொண்டு அலட்டும் உன்னிடம் இந்த அடிப்படை சாமர்த்தியம் கூட காணப்படவில்லையே? மாண்புமிகு மனிதா! உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு எங்கே வேகமாகப் பறந்துகொண்டிருக்கிறாய்? புதிய உலகம் படைப்பதற்கா? இல்லை, இந்தக் கிரஹத்தின் கணக்கை ஒருவழியாக செட்டில் செய்துவிட்டு, வேற்றுக்கிரஹத்தில் போய் உட்காருவேன் என்கிறாயா?

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. இந்த
மண்ணைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடா
கடந்து செல்லவும் முடியலைடா…

**

மோதியும் காக்காவும்

நகைச்சுவை : ஏகாந்தன்

நாட்டு நெலவரம் ஒண்ணுஞ் சரியில்லண்ணே! குப்புசாமியுடன் காலைநடை நடந்துவந்துகொண்டிருந்த சிங்காரம் அங்கலாய்த்துக்கொண்டான்.

ஏண்டா நீ இப்புடி அலுத்துக்கறே காலங்கார்த்தாலே…என்றார் குப்புசாமி, துண்டை உதறித் தோளில்போட்டுக்கொண்டே.

விடிவுகாலம்னு ஒன்னு வரணும்ணே.. என்றான் சிங்காரம் தொடர்ந்து.

விடிஞ்சுதானடா எளுந்து பல்ல வெளக்கிட்டு வர்ற.. இன்னும் என்னத்த விடியறது?

நம்ம இந்தியாவப்பத்தி சொன்னேன்ணே.. தமிள்நாட்டு லச்சணமும் ஒன்னும் சொல்லிக்கிறாப்ல இல்ல.

வடக்கே ஏகப்பட்ட சதி நடக்குதப்பா..! அதான் தமிள்நாட்டுல அவனவன் கட்சியப்புடி, ஆட்சியப்புடின்னு அலயுரானுங்க. ஒரே குளறுபடி..

எடப்பாடிதான் ஆள்றாருல்ல ?

என்னத்தப் பெரீசா ஆள்றாரு எட்டப்பாடி..நீயும் கண்டுகளிச்சுப்பிட்டே. பொம்மலாட்டம் நடக்குது. மேல ஒக்காந்துகிட்டு ஆட்டிவெக்கிறானுங்க..

யாருண்ணே, மோடியையா சொல்றீங்க?

அந்த ஆளுதான். தாடியும் மீசையுமா ..மொகமே சரியில்லே. அன்னிக்கே நெனச்சேன், இந்த ஆளப்போயி நாட்டுக்குப் பிரதமராக்கிருக்கானுங்களே.. என்ன ஆகப்போகுதோன்னு. இப்ப என்னடான்னா, தமிள்நாட்டயே பிடிச்சிருச்சு சனி..

இங்கின ஒரு சந்தேகம்ணே. சனிபகவானோட வாகனம் காக்காவா, புறாவா?

என்னடா சிங்காரம்! இதுலயும் ஒனக்கு சந்தேகந்தானா? காக்காதான்டா சனியோட வாகனம். ஆனா, அந்தக் காக்காவோடக் கதையக் கேட்டீன்னா..

சொல்லுங்கண்ணே, சொல்லுங்க. காக்கா வடை கத தானே!

அடச்சீ.. சும்மா கெடறா! டீக்கே இன்னும் வழியக் காணோம். வடைக்கிப்போயிட்டான்..

பின்ன, காக்காவுக்குல்லாம் வேற என்ன கதைண்ணே இருக்கமுடியும்?

இருக்கு..இருக்கு. ஒனக்குத்தான் ஒரு எளவுந்தெரியாது.

சொல்லுங்கண்ணே. காலங்காத்தால ஒங்களப் பாக்காட்டி என்னமோ மாதிரி இருக்கு. பாத்தா டென்சன ஏத்திப்புடுறீக ..

சரி விடுறா. அது ஒரு சோகக் கதை..

சோகக்கதையா? அப்பிடி என்னதான் நடந்திருச்சு அதோட வாள்க்கையில?

சரி, அதயும் சொல்லிடுறேன்.. கேளு கவனமா. இந்தக் காக்கா இருக்குதே காக்கா.. அது மொதல்ல வெள்ளையாத்தான் இருந்துச்சாம்.

வெள்ளக் காக்காவா? ஆரம்பமே சூப்பரு!

ஆமா. அது என்ன பண்ணிருக்கு..ஒரு நாள் குஜராத் பக்கமா பறந்துருக்கு.

குஜராத்தா? அங்கிட்டுல்லாம் ஏண்ணே போய்ப் பறக்குது இந்தக் காக்கா?
தமிழ்நாட்டுக்குள்ளயே நம்பளமாதிரிக் கெடந்து தொலச்சா என்ன?

டேய்! கேளுடா ஒளுங்குமொறயா. குஜராத்துலயும் எத்தன வீடுங்க இருக்கு. எல்லாத்தயும் விட்டுட்டு இதுபோயி ஒக்காந்துச்சு ஒரு வீட்டு மேலே.

எந்த வீட்டு மேலேண்ணே?

மோடி இருக்காரே மோடி. அவரு வீட்டுக்கூரை மேலபோயி ஒக்காந்திருச்சு.

ஏண்ணே இப்பிடில்லாம் நடக்குது?

எல்லாம் விதிதான். வேறென்ன..காக்காவ மட்டும் விட்ருமா? ஒக்காந்த சனியன் சும்மா இருக்கக்கூடாதா?

என்னண்ணே பண்ணிச்சு?

கா..கா ..-ன்னு கத்திப்பிடிச்சு.

அடடா, அப்பறம்?

வீட்டுக்குள்ளேருந்து மோடி வெளியில வந்துட்டாரு.

ஐயய்யோ!

எங்கேந்து சத்தம் வருதுன்னு திரும்பினவரு, காக்காவப் பாத்துப்புட்டாரு.. அவ்வளவுதான். ஒரே பார்வை. வெள்ளையா இருந்த காக்கா கருப்பாயிருச்சு!

அடி ஆத்தீ! ஆனா, மத்த காக்கால்லாம் தப்பிச்சிருச்சு..இல்லண்ணே?

அடக் கூமுட்டை! எல்லாந்தான் கருப்பாப்போச்சு.. பாத்தது யாரு? எதையாவது சரியாப் புரிஞ்சிக்கிறியாடா நீ?

அண்ணே!

அம்மா போயிட்ட சமயத்தில மோடி இறுதிச்சடங்குக்கு சென்னை வந்தாருல்ல. ஞாபகமிருக்கா மறந்துபோட்டியா?

என்னண்ணே இப்பிடிக் கேட்டுப்புட்டீக.. நல்லா ஞாபகம் இருக்குண்ணே.

அப்ப மத்தவங்களமாதிரி மலர்வளையத்த வச்சுட்டு சும்மாப் போனாரா அவரு? சசிகலாவக் கூப்பிட்டு துக்கம் விசாரிச்சாரு.

நீங்க என்னண்ணே இதுக்குல்லாம் போயி கொற சொல்லிக்கிட்டு. அவர் செஞ்சது சரிதானே..

டேய்! முளுசாக் கேளுடா மூதி! அதோட நிறுத்தியிருந்தாருன்னா சரிதான். ஆனா அவரு மேற்கொண்டு என்ன செஞ்சாரு? பேசிக்கிட்டே சசிகலாவோட தலைல கைய வச்சாரு! பொறவு என்னாச்சு? சசிகலாவுக்கு என்ன நடந்துச்சு பாத்தியா ?

பெங்களூரு ஜெயில்ல ஒக்கார வச்சிருக்காங்கண்ணே!

அதோட முடிஞ்சுதா கதை? அம்மா ஆசையா வளர்த்த அதிமுக என்னாச்சு? மூணு துண்டாப்போயி மொடங்கிக்கெடக்குதா இல்லயா மூலையிலே?

ஆமாண்ணே.. நாசமாப்போச்சு கச்சி!

இதுல்லாம் போறாதுன்னு, தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்ன மேல பிரச்ன.. இம்புட்டாவது நிம்மதி இருக்காடா?

துளிக்கூட இல்லண்ணே! தமிழ்நாடே தொவண்டுபோய்க் கெடக்குது.

இப்ப புரியுதா எல்லாத்துக்கும் யாரு காரணம்னு?

மோடிதான்ணே !

சரி, சரி; ரத்தினம் கடை வந்திருச்சு. ரெண்டு சிங்கிள் டீக்கு சொல்லு!

தோளிலிருந்த துண்டை எடுத்து பெஞ்சின்மேல் விசிறிவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தார் குப்புசாமி.

**

சுஜாதா – கவிதை மனம் !

மரபுவழிக் கவிதைகளிலும் மனதை இழந்தவர்தான் சுஜாதா. தொல்காப்பியம், சிவவாக்கியர், நேரிசை வெண்பா என்றெல்லாம் தேடித்தேடி வாசித்து மகிழ்ந்தவர். சாதாரணத் தமிழ் படிப்போருக்கும் மரபுக்கவிதைகளின் மகத்துவம், கருத்துவளம் தெரியாமல் போய்விடக்கூடாதே என்பதற்காக, எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறள், புறநானூறு போன்றவற்றிற்கு எளிய தமிழில் உரை எழுதியவர். இதற்காகவும் அவர் விமரிசிக்கப்பட்டதுண்டு. தமிழ்ச் சூழலில் நீங்கள் பேனாவைக் கையிலெடுத்தவுடனேயே, திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்; அதிலும் நீங்கள் கொஞ்சம் கவனிக்கப்பட்டுவிட்டால், புகழ்பெற்றுவிட்டால், ஐயோ, தாங்கமாட்டார்கள்.

சுஜாதா

சமகாலத்தமிழ்க் கவிதையை, குறிப்பாக அதன் மாறிவரும் வடிவங்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார் சுஜாதா. பல இளம் கவிஞர்களை இனம் கண்டு ஊக்குவித்தவர். மனுஷ்ய புத்திரன், நா.முத்துக்குமார் போன்றவர்கள் சுஜாதாவின் கண்டுபிடிப்புகளே என்றெல்லாம் தெரிந்ததை இங்கு சொல்லி போரடிக்கப்போவதில்லை.

ஆனந்த விகடனில் வெளியாகி வாசகர்களை வெகுவாக ஈர்த்த அவரின் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத்தொடர் புத்தகமாக விகடனால் பின்பு வெளியிடப்பட்டது. அதன் முதற்பகுதியை சில வருடங்கள் கழித்துப் படித்திருக்கிறேன். அதில் ஆங்காங்கே புதிய கவிஞர்களின் வார்த்தை ஜாலங்களைத் தெளித்துவைத்திருக்கிறார் சுஜாதா. மார்கன், முகுந்த் நாகராஜன், மகுடேஸ்வரன், போன்ற கவியுலகின் அப்போதைய புதுமுகங்களை அங்கேதான் தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கட்டுரைகளுக்கு நடுவிலே ‘எ.பி.க.’ (எனக்குப் பிடித்த கவிதை) எனக் குறியிடப்பட்ட box item வரும். அதில் தன் மனம் கவர்ந்த கவிதைகளைக் காட்டியிருப்பார். ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று..’ எனச் செல்லும் ப்ரமிளின் காலத்தை வென்ற ‘காவியம்’ என்கிற கவிதையும், ஆத்மாநாமின் அருமையான ‘கடவுள்’ கவிதையும் ‘கற்றதும் பெற்றதும்’ புத்தகத்தில்தான் எனக்குத் தரிசனம் தந்தன. அனாயாசமாக எழுதப்பட்ட முகுந்த் நாகராஜனின் சிறுகவிதைகளையும் (குறிப்பாக குழந்தைகள்பற்றி) அதில் படித்து வாசிப்பின்பம் எய்தியிருக்கிறேன். தமிழ் பேசும் ஜனங்கள் கிடைக்கமாட்டார்களா என ஏங்கவைக்கும் ஜப்பானில் உட்கார்ந்துகொண்டிருக்கையில், உங்கள் கையில் சுஜாதா கிடைத்து, அதிலும் அவர் ஹைலைட் செய்த கவிஞர்களும் படிக்கக் கிடைத்தால் எப்படியிருக்கும்? வாழ்க்கையில் இன்பம் என்பது இப்படி சில நிமிஷங்களாய் வந்து, நம்மைப் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்..

முகந்தெரியா இளம் கவிஞர்களின் கவிதைகளைத் தேடிப் படித்துப்பார்த்ததோடு மட்டுமல்லாமல், இலக்கியமேடைகளில் அவற்றைக் குறிப்பிட்டுப் புகழ்ந்த பெருந்தகை சுஜாதா. தொண்ணூறுகளில் புதியவர்களில் பலர் தங்கள் எழுத்துக்களை அவருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டதுண்டு என்று தெரிகிறது. எல்லாவற்றையும் படித்துப்பார்க்க தனக்கு நேரம் இருப்பதில்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார் மனிதர். நேரிடையாகத் தன்னிடம் காட்டப்பற்றவற்றைப் படித்து அதில் எது கவிதை, எது இல்லை, சாதாரண வரிகளிலிருந்து கடைசிவரியில் கவிதையாக ஒன்று எப்படி மாறியிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுதுவதற்கு எளிதானதுபோல் மயக்கும் புதுக்கவிதை உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல என்று எழுதக் கை பரபரக்கும் புதியவர்களுக்கு அறிவுறுத்த முயன்றிருக்கிறார். மனம் சோர்ந்தவர்கள் உண்டு; தெளிந்தவர்களும் உண்டு. கல்யாண்ஜி, கலாப்ரியா, ஆத்மாநாம், ப்ரமிள் போன்றவர்களின் கவிதைகளைப் படிக்காமல், கவிதை எழுத ஆரம்பிக்காதீர்கள் என்றும் அவசரக்குடுக்குகைகளை எச்சரித்துள்ளார் சுஜாதா.

சில நேர்காணல்களில், உரையாடல்களில், தான் கவிதைகள் எழுதியிருப்பதாக அவர் சொல்கிறார். (சுஜாதாவின் கவிதைகள் என்று தனியாகப் புத்தகம் வந்திருப்பதாகத் தெரியவில்லை. யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்.) மரபுவழிப் பாக்களை சுஜாதா முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறதே! அவர் எழுதிய இரண்டு நேரிசை வெண்பாக்களில், கருத்தோடு அங்கதமும் சேர்ந்துகொள்கிறது :

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

அடுத்தது, 1980-ன் இந்திய அரசியல் பின்னணி. எமெர்ஜென்சி போய், மொரார்ஜி தேசாயின் ஆட்சி. படியுங்கள்:

மீசா* மறைந்து எமர்ஜென்ஸிவிட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டெல்லாரும்
…………. குடிக்க வாரும்!

(*இந்திராகாந்தியின் அடக்குமுறை – MISA சட்டம்)

எண்பதுகளில் அவருடைய ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்து ஆச்சரியப்பட்டேன். குமுதத்தில் என்பதாக நினைவு. ஏழைச்சிறுவர்கள் தங்கள் வயிற்றுக்காக நகரங்களில் அல்லாடுவதுபற்றியது; மனதைப் படுத்திய கவிதை. சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி அவரது சிந்தனை ஒரு கவிதையாக அப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒருவழியாக அதனை நெட்டில் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். கீழே:

உடன்

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

**
(குறிப்பு: ‘உடன்’ என்கிற தலைப்பில் தான் எழுதிய கவிதையை, ‘உடல்’ எனப் பிரசுரித்து அதனை உடல் கவிதையாக்கிவிட்டார்கள் என ஒரு இடத்தில் சுஜாதா குறித்திருந்ததைப் படித்த நினைவு.)

‘கவி புனைய முனைவோரே, உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்பதுபோல் அறைகூவல்விடும் அவருடைய இன்னுமொரு கவிதை ஓடுகிறது இப்படி:

கவிஞர்களே இவ்வருஷம்

கவிஞர்களே ! இவ்வருஷம் குறைத்துக் கொள்வோம்
கவிதைகளில் தேன்தடவல் நிறுத்திக் கொள்வோம்
செவிகளுக்கு இனிமைதரும் செய்யுள் வேண்டாம்
சினிமாவுக்(கு) எழுதிவரும் பொய்கள் வேண்டாம்
உவமைகளைத் துப்புரவாய் நீக்கிப் பார்ப்போம்
உலகத்தைத் திருத்துவதைப் போக்கிப் பார்ப்போம்
சிவபெருமான், சீனிவாசர் முருகன் மீது
சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் …

அரசியலில் மாறுதலைச் சாட வேண்டாம்
ஆளுநர்கள், முதல்வர்களைப் பாட வேண்டாம்
பரிசுதரும் தலைவர்களைத் தேட வேண்டாம்
பட்டிமன்றம் கவிராத்திரி கூட வேண்டாம்
வரிச்சுமைகள், பெண்ணுரிமை, தமிழின் இனிமை
வாரொன்று மென்முலைகள், வளையல் சப்தம்
முரசறைந்த பழந்தமிழர் காதல், வீரம்
முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் …

இத்தனையும் துறந்துவிட்டால் மிச்சம் என்ன
எழுதுவதற்கு என்றென்னைக் கேட்பீர் ஆயின்
நித்தநித்தம் உயிர்வாழும் யத்தனத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய சிலவரிகள் கிடைக்காவிட்டால்
மூன்றுலட்சம் ‘ ராமஜெயம் ‘ எழுதிப் பார்ப்போம் !
**
எப்படிச் சொல்லியிருக்கிறார் கவனித்தீர்களா ?

ஹைக்கூ என்பது கவிதைகளில் ஒரு வகைமை. சின்னஞ்சிறு கவிதைகள். ஜப்பானிய ஆதிமூலம். Cute and short. புதிய தலைமுறைக் கவிஞர்களுக்காக ‘ஹைக்கூ எழுதுவது எப்படி?’ என சில விதிகளை விளக்கி, சிறிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் சுஜாதா. அதில் முக்கியமாக அவர் குறிப்பிடுவது:

ஹைக்கூ கவிதை சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் அல்லது பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும்.
அவசரத்துக்கு, குறிப்பிட ஏதுவாக அவரெழுதிய ஹைக்கூ கவிதைகள் கிடைக்கவில்லை. ஆனால் ’ சைஃபிக்கூ’ எனப்படும் வகையில் அவர் எழுதிய ஒன்று மாட்டியது. அதாவது, சையன்ஸ் ஃபிக்‌ஷன் ஹைக்கூ. (Science Fiction Haiku – Scifiku) :

சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப் பூட்டினேனா?

**
அமெரிக்க நவீனயுகக் கவிஞர்களின் (American modern poets) கவிதைகளின் மேல் சுஜாதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. Robert Frost, Ogden Nash என்றெல்லாம் அடிக்கடிக் குறிப்பிட்டிருக்கிறார். “கவிதையை மொழி பெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது” என்கிற சுஜாதா, Robert Frost-ன் கவிதைகளை எளிய மொழியில், அழகு சிதறாமல் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார் பாருங்கள்.

கவனிக்கவேண்டிய பின்னணி:19-ஆம் நூற்றாண்டின் இறுதிபோல் தோன்றுகிறது. அமெரிக்காவின் கிராமத்துவெளி. இளைஞன் ஒருவன், தான் போகுமிடத்துக்குக் காதலியைக் கூடவரக் கெஞ்சுகிறான். ஃப்ராஸ்ட்டின் மனதில்தான் என்ன ஒரு மென்மை..

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.

கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்- அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரம் ஆகாது. நீயும் வாயேன்.

**
’கணையாழி’ இலக்கிய இதழில் கடைசிபக்கக் கட்டுரை எழுதிவந்த சுஜாதா ஒருமுறை அதில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ’ ’நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக்கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவறவிடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.’

எத்தனைத் தங்க மனசு இவருக்கு. இவரைப்போல எவரும் தமிழில் இனி வருவரோ ?

**

ஏகாந்தன் சிறுகதை : ஈரம்

’ஈரம்’ என்கிற எனது சிறுகதை ‘எங்கள் Blog’ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

லிங்க்: https://engalblog.blogspot.com/2017/09/blog-post.html

நன்றி: எங்கள் Blog

**

சுடரே, சொல்வாய்

சாமியைக் கும்பிடக்கூட
ஆசாமியிடம் விண்ணப்பித்தாகவேண்டிய
அதீத அவலம்
அமலா
அனந்தா
பத்மநாபா
பாரினில் மனிதர்க்கிப்படிப்
பாதகமேன்
பறையுமோ பரந்தாமா?

**

சுஜாதா – ஸ்டைல், substance . .

சுஜாதாவின் புனைவுகளில், அறுபதுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக்கிடந்த வாசகர்களைக் கிளப்பி, எழுந்து உட்காரவைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து ஸ்டைலை தூக்கிக் கடாசியவர் சுஜாதா. அந்த வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரது பங்கு அலட்சியப்படுத்த முடியாதது. அவரது காலகட்டத்தில் மரபுசார் எழுத்தாளர்கள், விமர்சகர்களின் தாக்குதல்கள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சளைக்காது அவற்றை அவர் இயல்பாக எதிர்கொண்டார். மரபை மீறுகிற, இலக்கணத்தை அனாயாசமாக சிதைத்து எழும் இந்தவகை எழுத்துபற்றி அவர் சொல்கிறார்: ‘மொழி என்பது ஒரு தொடர்புக்கான சாதனமே. புதிய விஷயங்களைச் சொல்லவேண்டுமென்றால் இலக்கணத்தை வளைக்கவேண்டும். மரபை ஓரளவு ஒத்துப்போகும்போது இது தவறல்ல என்றே நினைக்கிறேன். மேலும் எழுத்து வாசகரின்றி நிறைவு பெறுவதில்லை. என் வாசகர்கள் ஒரு குழப்பமான விதத்தில் பேசினால், புதிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உபயோகித்தால், அதை எழுதுவதில் என்ன தவறு?’ என்று கேட்கிறார் சுஜாதா.

சுஜாதாவின் நாவல்கள் வெவ்வேறு வகைகளைச் சார்ந்தவை.1963-ல் எழுத ஆரம்பித்த சுஜாதா தன் முதல் நாவலான நைலான் கயிறை 1968-ல் எழுதினார். ’முடிந்தவரை மற்ற எழுத்தாளர்களிலிருந்து நான் வேறுபட முயன்றேன். அந்த நாவல் என்னை ஒரு வித்தியாசமான எழுத்தாளனாக நிறுவியது’ என்கிறார். ஒரு கொலைக்கதை அது. மிகவும் சிறிய, சமயங்களில் தொடர்பற்ற வாக்கிய அமைப்புகளுடன் புது எழுத்து உத்தி தாங்கி வெளிவந்தது. இன்னொரு நாவலான ’காகிதச் சங்கிலிகள்’ மனித உறவுகளின் நிலையற்ற தன்மையைப் பேசுகிறது.அதில் வரும் ஒரு நோயாளி, கிட்னி ட்ரான்ஸ்ப்ளாண்ட்டிற்காகக் காத்திருக்கிறார். உறவினர்கள் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள்; கவலைப்படுகிறார்கள். ஆனால் யாரும் கிட்னியை தானம் தர முன்வராது தாமதிக்கிறார்கள். நோயாளி இறந்துவிடுகிறார். (’காகிதச் சங்கிலிகள்’ நாவலைப் படித்த ஒருவர் சுஜாதாவுக்கு ஃபோன் போட்டு அரைமணிநேரம் உருக்கமாகப் பேசி, இறுதியில் அடக்கமுடியாமல் அழுதுவிட்டாராம்). ’காயத்ரி’ எனும் நாவல் ஒரு பெண்ணின் அர்த்தமற்ற திருமணவாழ்வைக் கதைக்களமாக எடுத்துக்கொள்கிறது. ’24 ரூபாய் தீவு’ என்னும் இன்னுமொரு நாவலில் ஒரு பத்திரிக்கைக்காரன் ஏதோ ஒரு குற்றத்தை விசாரிக்கப்போய், வேறேதோ வம்பில் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். ’பிரிவோம்..சந்திப்போம்’ என்ற நாவல் ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. முதல் பகுதிக்குப்பின் கொஞ்சம் இடைவெளி விட்டு இரண்டாம் பகுதி வெளிவந்தது. காரணம், அந்தக் கதையின் பின்பகுதி யு.எஸ்.-ல் நடைபெறுவதாக உள்ளது. எனவே சுஜாதா யு.எஸ் போய்த் திரும்புவதுவரை கதை நிறுத்தப்பட்டிருந்ததாம்!(ஆனந்த விகடன் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது). தமிழ்ச்சூழலில், ஒரு எழுத்தாளரின் பாப்புலாரிட்டியின் உச்சம்.

தன் எழுத்தினால் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார் சுஜாதா. ’ரத்தம் ஒரே நிறம்’ என்கிற சுஜாதாவின் கதை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நாடார்களைப்பற்றியது. அமெரிக்க சமூகவியலாளரின் ஆய்வுக்கட்டுரைகளின் பின்னணியில்தான் அதனை சுஜாதா எழுதியிருந்தார். தங்களது பழைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க விரும்பாத நாடார் சமூகத்தினரில் சிலர், எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். மிரட்டல் கடிதங்கள், ஃபோன் கால்கள் பத்திரிக்கை ஆசிரியருக்கு வந்தன. எழுத்தாளருடைய கையைத் துண்டித்துவிடப்போவதாகவும் பயமுறுத்தல்கள். பிறகு, தான் கதையை மாற்றி எந்த சமூகத்தினரையும் குறிப்பிடாமல் எழுதியதாகச் சொல்கிறார் சுஜாதா. திருப்தியடைந்துவிட்டனர் நம் மக்கள்.

சுஜாதாவின் கதைத் தலைப்புகளும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனபோலும். அவருடைய தலைப்புகள் சமூகநியதிகளை மீறும் போக்குகளைக் கொண்டிருக்கின்றன அல்லது வாசகர்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டும்படி அமைந்துள்ளன என்றெல்லாம்கூட விமர்சனங்கள். பாவம், தமிழில் எழுதுவதில், ஒரு பாப்புலர் எழுத்தாளராயிருப்பதில் உள்ள சிரமங்கள்தான் எத்தனை, எத்தனை! சுஜாதா கதைகளின் சில தலைப்புகள்: ’இளமையில் கொல்’, ’தப்பினால் தப்பில்லை’, ’ஆ!’, ’நில், கவனி, தாக்கு!’, ’வசந்தகாலக் குற்றங்கள்’. சுஜாதா திருப்பிக்கேட்கிறார்: ’ஏன் ஒன்றிரண்டு நாவல்களையே பார்க்கிறீர்கள். முப்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் நான் எழுதியிருக்கிறேனே..’ என்கிறார். மேலும் ‘நீங்கள் கூறுகிற தலைப்புகள் கதையின் mood-ஐ ஒருவகையில் உணர்த்துகின்றனதான். நான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் கூர்ந்து கவனிப்பதைச் செய்கிறேன். இதில் அறநெறிக்கு – moralizing-க்கு இடமில்லை. மனிதருக்கு வாழ்வில் நீதி என்பது ஒவ்வொரு கணமும் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மொத்த வாழ்க்கையே unfairதான். அப்படி இருந்தாலும் வாழ்க்கை என்பது precious. அப்போது நியதிகளோடு, நீதியோ, ஒழுக்கங்களோ வாழ்க்கையைவிட உயர்ந்ததாகிவிடமுடியாது’ என்பது அவரது வாதம்.

எழுதுவதற்காக ஏதேனும் உத்திகள் வைத்திருக்கிறாரா அவர்? சுஜாதா சற்று விபரமாகச் சொல்கிறார்: ஒரு எழுத்தாளனுக்கு நல்ல அப்ஸர்வேஷன் பவர் வேண்டும். நான் ஆண்டுக்காண்டு இதை வளர்த்துவருகிறேன். எனது கண்களையும், காதுகளையும் எப்பொழுதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். கதைகளையும், கதைகள் அல்லாதவற்றையும் எப்பொழுதும் வாசிப்பேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகின்றது. ஒருவருக்கு எதைப்பற்றித் தெளிவாகத் தெரிகிறதோ, அதைப்பற்றியே எழுதவேண்டும். எழுத்து என்பது அவரது தோலிலேயே ஊறிப்போய்விடவேண்டும். ஒருவர் எழுதும்போது தன்னை வெளிப்படுத்திக்கொள்வதாகத்தான் பொருள்- எனச் சொல்கிறார்.

சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் கதைகள் துப்பறியும், சஸ்பென்ஸ் போக்குகளைக்கொண்டு வாசகர்களை வெகுவாக வசீகரித்தவை. அவருடைய சராசரி வாசகர்களைத் தாண்டி, சக எழுத்தாளர்களில் சிலரையும் இவை கவர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சந்திப்பில் எழுத்தாளர் வாஸந்தி சுஜாதாவிடம் கேட்டாராம்: ’கணேஷ்-வஸந்த் கதையை எப்போது தொடருவீங்க!’ (ஆனந்த விகடனில் வெளியான ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில், ஓரிடத்தில் சுஜாதா). தன்னுடைய த்ரில்லர் வகைக் கதைகள் பற்றி சுஜாதா மேலும், ‘சஸ்பென்ஸ்’ என்பதற்கு வழக்கமான பொருளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. சஸ்பென்ஸ் என்பது அடுத்து என்ன நடக்கும் என வாசகனை நினைக்கவைப்பதும் அதற்கு தயார்ப்படுத்துவதும்தான். நான் நகைச்சுவையோடு எழுதுவதை விரும்புகிறேன் . அவ்வாறு எழுதுவது சற்றுக் கடினமானது. எனினும் அதுவே நல்ல எழுத்து.’ என்கிறார்.

தன் உரைநடை ஸ்டைல்பற்றி சுஜாதா மேலும் விவரிக்கிறார்: உரைநடையை ஒரு craft என்கிற அளவில், தொடர்ந்து பரீட்சை செய்து பார்க்கிறேன். க்ரைம் த்ரில்லர்ஸ் மட்டும் நான் எழுதுவதில்லை. எனக்குக் கவிதையில் அளவுகடந்த ஈடுபாடு உண்டு. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் (பிரபல தமிழ் எழுத்தாளர்களால் சிலாகித்துக் குறிப்பிடப்படும் சுஜாதா சிறுகதைகள்: ’நகரம்’, ’ஃபிலிமோத்ஸவ்’, ’எல்டொராடோ’ ஆகியவை. மகாகவி பாரதி நூற்றாண்டுவிழா நினைவுத் தொகுப்பாக வெளியிடப்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் ‘பாரதி சிறுகதைகள்’ (’பாரதி பதிப்பகம்’-பாரதியைக் குறிப்பிட்டு, முன்வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள்) என்கிற தொகுப்பில் சுஜாதாவின் ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது). சில நல்ல சிறுகதைகள் அவரது ’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ தொகுப்பில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றான ‘வேதாந்தம்’ என்கிற கதை தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது. சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கான கட்டுரையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிச்சுவிட்டிருக்கிறார் இப்படி– தமிழ்நாட்டு அரசியலின் முக்கியமான பகுதியான 60-களில் நிகழ்ந்த ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் எந்த ஒரு எழுத்தாளராலும் பதிவு செய்யப்படவில்லை, அதைப்பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.. (தமிழ் இலக்கியத்தில் இப்படியெல்லாம் சில பெரிசுகள்!)

ஒரு சாதாரண செய்திகூட கதையாகிவிடுமா? சுஜாதாவின் சிந்தனை இப்படிச் செல்கிறது: நான் ஒரு கிராமத்துப்பெண்ணை கவனிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். தன் முதுகில் இரண்டுவயதுக் குழந்தையோடு எப்போதும் புலம்புகிறாள். கணவனைத் திட்டுகிறாள். அவன் ஒரு குடிகாரன். அவளை அடிக்கடி உதைக்கிறான். இதைப் பார்த்தது பார்த்தபடியே நான் எழுதினால், பத்திரிக்கைச் செய்திபோல்தான் இருக்கும். ’அவளது கணவன் கெட்டவன். அவள் மிகவும் துன்பப்படுகிறாள்..’ –இப்படி இருக்கும். இதையே வாசகர்களைச் சிந்திக்கவைக்கும்படி, அதே சமயம் சுருக்கமாகவும் தரவேண்டும். அவள் தன் குழந்தையைப் பார்த்து ‘ராஜா! நீயாவது குடிக்காதே.. என்னையும் அடிக்காதே!’ என்று எழுதினால் பத்திரிக்கைச் செய்தியே கதையாகிவிடுகிறது.

தன் எழுத்துப்பற்றி தொடர்கிறார்: ‘சிலநேரங்களில்தான், கதையை நான் எழுதுவதற்கு பதிலாக, கதையே என்னை எழுதுமாறு தூண்டும். இவ்வாறு எழுதுவது சிறப்பாகவும் அமையும். உங்களுக்குக் கதை தெரியும். எப்படி முடியும் என்றும் தெரியும் ஆனால் இடையில் திடீரென்று சில கேரக்டர்களும் வருவதுண்டு. சிலவேளைகளில் இந்த கேரக்டர்களே கதையில் முக்கிய இடத்தை வகிக்கலாம். உதாரணமாக அவர் குறிப்பிடுவது- ‘பத்து செகண்ட் முத்தம்’ என்கிற கதை. இதில் வரும் ஃபோட்டோகிராபர் கேரக்டரைக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் ‘நான் எதையும் எழுதுவதற்கு சரிதானா என்று ஒப்பாய்வு செய்துவிடுவேன். எழுத்துகள் எப்பொழுதும் ஆகாயத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. அவற்றை பூமிக்கு இழுத்து வந்துவிடவேண்டும்’ என்கிறார்.

சுஜாதாவின் சில கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. காயத்ரி, ப்ரியா, இது எப்படி இருக்கு, கரையெல்லாம் செண்பகப்பூ போன்றவை. காயத்ரி, ப்ரியா போன்றவை வெற்றிப்படங்கள். ஒரு எழுத்தாளரின் கதையைப் படமாக்கும்போது கதையின் தரம் குறைந்துவிடுகிறது என்கிற விமர்சனம் குறித்து சுஜாதாவின் பதில்: கதையைப் படமாக்கும்போது எங்களால் ஏதும் செய்யமுடியாது. அந்த ஆட்டத்தின் விதிகளே வேறு. இதுபற்றி தீவிரமாகச் சிந்திப்பதானால், நமது கதைகளை யார் யார் வாசிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும். வாசிப்பது என்பது அறிவார்ந்த நிலை. இது மத்தியதர, மேல்தர மக்களால் மட்டுமே ஆகக்கூடியது. (இதனை சுஜாதா எண்பதுகளில் சொல்லியிருக்கிறார்; இன்றும் இந்த நிலையே நீடிக்கிறது). படங்களோ மீதியுள்ள மக்களையும் போய்ச்சேரவேண்டும். அவர்கள் பட விமர்சனங்களை வாசிக்கப்போவதில்லை.

தமிழ் சினிமா உலகோடு வெகுவாகத் தொடர்பில் இருந்த எழுத்தாளர் அவர். இயக்குனர் ஷங்கரின் ’முதல்வன்’, ’சிவாஜி’, ’இந்தியன்’ போன்ற படங்களுக்கு சுஜாதாதான் வசனகர்த்தா. ஷங்கர் ஓரிடத்தில் சொல்கிறார்: ’நான் கதைகள், புத்தகங்கள் எனப் படிக்க ஆரம்பித்தது சுஜாதாவின் புத்தகங்களிலிருந்துதான். பின்னர், நான் திரைப்படங்களில் பணியாற்றத் துவங்கியபோது, ‘இந்தியன்’ திரைப் படத்துக்காக அவரை வசனம் எழுதவைக்க வேண்டும் என்று அவரிடம் போனோம். அப்போது அவர் குமுதம் ஆசிரியராக இருந்தார். பெரிய எழுத்தாளராச்சே என்ற யோசனையுடன் போன எனக்கு அவரது எளிமையும் சுலபமான அணுகுமுறையும் ஆச்சரியம் தந்தது. விஷயத்தைச் சொன்னதும், ‘ஓ பண்ணலாமே… ஒரு நாளைக்கு கதை சொல்லிடுங்க… வேலையை ஆரம்பிச்சிடலாம்’ என்றார். தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூட அவர் என்னிடம் கேட்கவில்லை. அதுபற்றிக் கேட்டபோது, ‘உங்க முந்திய படத்து டயலாக் ரைட்டருக்கு என்ன கொடுத்தீங்களோ, அதையே கொடுங்க போதும்’ என்றார்.

பத்திரிக்கைக்காரர்களோடு மட்டுமல்லாமல், மாணவர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்களான நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், நடிகை சுஜாதா, நடிகை லட்சுமி, இயக்குனர் மகேந்திரன் ஆகியவர்களோடும் இலக்கியம், சினிமாபற்றியெல்லாம், வெவ்வேறு காலகட்டங்களில் விவாதித்துள்ளவர் சுஜாதா.

**

மீண்டும் சுஜாதா . .

கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது திரும்பவும் கையில் கிடைத்திருக்கிறார் சுஜாதா. பொதுவாகவே உயிர்ப்பான எழுத்து அவருடையது. அவருடைய எழுத்தின் சாகஸம், அவர் மறைந்த பின்னும் வாசகர்களை அவரைத் தேடி வரவைக்கிறது.
சமீபத்திய சென்னை விசிட்டை முடித்துவிட்டு, பெங்களூர் திரும்ப லால்பாக் எக்ஸ்ப்ரெஸைப் பிடிக்குமுன் கொஞ்சம் நேரம் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன். வார, மாத இதழ்களாக முன்வரிசையில் கடை பரப்பியிருந்தார்கள். வழக்கமான பத்திரிக்கைகளைத் தாண்டியும் கேள்விப்பட்டிராத சில பத்திரிக்கைகள். பெங்களூரில் தேடியும் தென்படாத தீராநதியை வாங்கிக்கொண்டு, மேற்கொண்டு நோக்கினேன். கடைக்குள்ளே புத்தகங்களின் வரிசை. உள்ளே போய்ப் பார்க்கலாமா, தமிழ் புத்தகம் தேவை என்று சொன்னேன். சிலவினாடிகள் என்னைப் பார்த்துவிட்டு, பெரியமனசுபண்ணி உள்ளே அனுமதித்தார் கடைக்காரர். புத்தகம் வாங்க வருபவர்களை, புத்தகம் விற்பவர்களே வேற்றுக்கிரக வாசிகள்போல் பார்க்கும் வினோதமான மாநிலம் தமிழ்நாடு! அன்றிருந்த அந்த சூழலில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை.

மிகச்சிறிய கடை அது. ஆங்கிலப் புத்தகங்கள், தமிழ்ப்புத்தகங்கள் மட்டுமே பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தனவே தவிர, தமிழ் எழுத்தாளர்கள் வரிசையாக வகைப்படுத்தப்படவில்லை. பாலகுமாரன், இந்திரா சௌந்திரராஜன், இன்னும் ஏதேதோ பேர்களோடு முண்டியடித்துக்கொண்டு ஒரு மூலையில் சாய்ந்திருந்தார் சுஜாதா. எனக்குப் பழக்கப்பட்ட சில தலைப்புகளோடு மேலும் சில சுஜாதாக்கள். ‘விவாதங்கள் விமர்சனங்கள்’ என்கிற அவருடைய புத்தகம் ஒன்று தென்பட்டது. அதனை எடுத்து உள்ளே வேகமாகக் கண்களை ஓட்டினேன். வெவ்வேறான காலகட்டத்தில் சிறுபத்திரிக்கைகளுக்கு சுஜாதா கொடுத்த நேர்காணல்களும், சில பிரபலங்களுடனான அவரது உரையாடல்களும் கொண்ட ‘விசா’ வெளியிட்டிருக்கும் 250+ பக்கங்களில் ஒரு சிறு புத்தகம். வாங்கிவந்தேன்.

வருகிற வழியிலேயே லால்பாகின் ஏசி சேர்காரின் சுகத்தில் அடிக்கடி பாடாவதி டீ, காஃபியைக் குடித்துக்கொண்டு, கவிதை, கட்டுரை என தீராநதியைத் தீர்த்தேன். வீட்டுக்கு வந்து சில நாட்களுக்குப்பின் சாவகாசமாக சுஜாதாவைக் கையிலெடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறேன். பிரபங்களும், பத்திரிக்கைக்காரர்களும் அவரோடு உரையாடியிருக்கிறார்கள். எழுபது/எண்பதுகளில் அவர் கொடுத்த நேர்காணல்கள். ஏதேதோ பெயர் தெரியாப் பத்திரிக்கைகளுக்கும்கூடப் பேட்டி கொடுத்திருக்கிறார். பத்திரிக்கையா முக்கியம்? சுஜாதா தன் எழுத்தைப்பற்றி, பொதுவாக இலக்கியம், சினிமா போன்ற விஷயங்கள்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதல்லவா நாம் தேடுவது.

வார்த்தைப் பரிமாறலின் நடுவே அங்கங்கே அவர் சுவாரஸ்யமாகத் தொட்டுச்சென்ற சிலவற்றைப் பார்ப்போம். படிகள் என்கிற ஒரு சிற்றிதழோடு தமிழின் சமகால எழுத்துபற்றிக் கலந்துரையாடுகிறார். பேச்சு மரபு எழுத்து, புதிய வகை எழுத்து, மாற்றங்கள் எனச் செல்கிறது. ‘ஏன் அகிலன், நா.பா., சாண்டில்யன், சிவசங்கரி போன்ற ஃபார்முலா எழுத்தாளர்களை உங்களால் ரசிக்க முடியவில்லை?’ என்கிற கேள்விக்கு சுஜாதா சொல்கிறார்: ’புதிய எழுத்தாளர்களில் மிகப் பலரை நான் ரசிக்கிறேன். ஃபார்முலா எழுத்தாளர்களின் ஃபார்முலா ரகசியத்தை மிகவும் தெரிந்தவன் என்கிற ரீதியில் என்னால் அவர்களை ரசிக்கமுடியவில்லை. செயற்கைத்தனமான எழுத்தை என்னால் மிகச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடமுடிகிறது. இதே காரணத்தினால்தான் என்னால் வண்ணநிலவன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்களை ரசிக்கமுடிகிறது. அவர்கள் எழுத்தில் இருக்கும் sincerity-யினால் என்றுகூடச் சொல்லலாம். Good writing is also an exercise in style’ என்கிறார். ’அசோகமித்திரனின் எந்தக்கதைகளை ரொம்ப ரசித்தீர்கள்?’ என்கிற கேள்விக்கு சுஜாதா: ‘வழி’ என்று ஒரு கதை. மற்றும் புலிக்கலைஞன், எலி, விமோசனம் – நிறையக் கதைகள்’.

இலக்கியத்தில் சிறுகதை வகைமைபற்றி, சிறுகதையில் சொல்லப்படும் ‘message’-பற்றிப் பேச்சு தொடர்கிறது. சுஜாதா சொல்கிறார்: ’சிறுகதை என்பது ஓர் முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.. அந்த முரண்பாடு உண்மையானதாக, பிரச்சாரமில்லாமல் செயல்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். நல்லகதைகளில் அந்த முரண்பாடு மிகவும் பொதிந்து மறைந்திருக்கும்’ என்கிறார். மேலும், ’சிறுகதையில் ‘message’ கூடாது என்று சொல்லவில்லை. அது ‘implied’-ஆக, அமுக்கலாய் இருக்கவேண்டும்’ என்றவர், தன்னுடைய ‘கரைகண்ட ராமன்’ ஆரம்ப எழுத்தாளருக்குப் பாடமாகக்கூடிய நல்ல கட்டிட அமைப்புக்கொண்ட கதை என்கிறார். இப்போது ’நிறையப்பேர் நல்ல சிறுகதை எழுதுகிறார்கள் என்றவர் பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், லா.ச.ரா. போன்றோரை உதாரணங்களாகக் குறிப்பிடுகிறார். ’இப்படி 50-60 பேர் இருப்பார்கள். எல்லோருடைய நல்ல கதைகளையும் தொகுத்துப் போடலாம். அப்படிப்போட்டால் என்னுடையது ஒண்ணு, ரெண்டு தேறும்’ என்கிறார் சுஜாதா!

தன்னைக் கவர்ந்த தமிழ் நாவலாசிரியர்கள்/நாவல்கள் என்பதாக அவர் குறிப்பிட்டவை: ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’, சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, நீலபத்மனாபனின் ‘தலைமுறைகள்’ , தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.

சமகாலத் தமிழ் மொழியில் இலக்கிய விமரிசனம் என்பதாக ஒன்று இருக்கிறதா? அப்படியிருப்பின் அந்த வகைமைபற்றி என்ன சொல்கிறார் சுஜாதா? ’விமரிசனத்தில் நிறையப்பேர் எழுதுகிறார்கள்தான். Deep–ஆக யார் எழுதுகிறார்கள்? Objective-ஆக எழுதுபவர்கள் இருப்பதாகத் தெரியலே.. சிலர் எழுதுவதில் அவர்களுடைய சொந்தக் கோபங்களெல்லாம் நிறைய வந்துடுது..’

இந்தப் புத்தகத்தில் சுஜாதாவழி பல சுவாரஸ்யங்கள் வாசகருக்குக் கிடைக்கின்றன. சோ-வின் துக்ளக் பத்திரிக்கை சுஜாதாவை பேட்டி கண்டிருக்கிறது என்பது ஆச்சரியம். துக்ளக்கின் ஒரு கேள்வி: ’திடீரென்று சுஜாதா என்ற பெண் பெயருக்குள் ஒளிந்துகொண்டது ஏன்? உங்களுக்கு சொந்தப் பெயரிலேயே எழுதும் தைரியம், தன்னம்பிக்கை இல்லையா?’ சுஜாதா பதில் சொல்கிறார்: ’ஒளிந்துகொண்டிருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ‘சாகே’ என்கிற புனைபெயரில் ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதினார். ‘சாகே’ என்றால் மது ஊற்றித் தருகிற பெண் என்று அர்த்தம். புனை பெயரில் செக்ஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘கரிச்சான்குஞ்சு’ என்றுகூடப் புனைப்பெயர் இருக்கிறது..’

சோ மேலும் கேட்கிறார்: ’பெண் பெயரில் எழுதுகிற நீங்கள் பெண்களைப்பற்றி நிறைய வர்ணிப்பதால்தான் உங்களுக்கு மவுசு ஏற்படுகிறது என்கிறேன்?’ அதற்கு சுஜாதா சொல்கிறார்: ’அப்படியில்லை. சுஜாதா என்பவர் பெண் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்…’ ’எழுத்தில் உங்களது சாதனைகள் என்ன?’ எனும் சோவின் கேள்விக்கு சுஜாதாவின் பதில்: ‘நீங்கள் என்னைப் பேட்டி காணுகிற அளவுக்கு நான் வளர்ந்திருப்பதே ஒரு சாதனைதானே?’

’உங்கள் சாதனைகள்பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்?’ தொடர்கிறார் சோ.

’சில கதைகளைக்குறித்து நான் பெருமைப்படுகிறேன். ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வில் நான் ஏராளமான உத்திகளைக் கையாண்டிருக்கிறேன். {ஆனந்தவிகடனில் வெளியான தொடர். பின்னர் அதே பெயரில் படமாகவும் வெளிவந்தது (1981)}. அதற்காக நாட்டுப்பாடல்களைப்பற்றி நிறையப் படித்தேன். அவற்றை ஆய்வு செய்து அந்தத் தொடரில் பயன்படுத்தினேன்’ என்று தெளிவாக்குகிறார் சுஜாதா.

(தொடரும்…)

ஏகாந்தன் சிறுகதை : ‘சருகுகள்’

‘சொல்வனம்’ இதழில் (02 செப்டம்பர், 2017) எனது சிறுகதை ‘சருகுகள்’ வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

இணைப்பு:
http://solvanam.com/?p=50149

நன்றி: சொல்வனம்

– ஏகாந்தன்