இந்திய விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக செய்யப்பட்ட பலவருட முயற்சிக்குப் பின் ஒருவழியாக ஃப்ரான்ஸ் நாட்டின் அதிநவீன போர்விமானமான ரஃபால் (Rafale Fighter planes) (ஆர்டர் செய்த 36-ல் முதல் 5) விமானங்கள் – இந்தியா வந்து சேர்ந்துவிட்டன. இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில், நேற்று மதியம் வந்திறங்கின. உலகளவில், பயங்கர தாக்குதல் சக்தியும், துல்லியமும் கொண்ட நவீனப் போர்விமானமாகப் பார்க்கப்படுகிறது ரஃபால். ‘தங்க அம்புகள்’ (Golden Arrows) என அழைக்கப்படும் அம்பாலா விமான தளத்தின் போர்விமானப்பிரிவில் (squadron) இந்தப் புதுவருகை விரைவில் தேசப்பணிக்காக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா, கொரோனா எனப் புலம்பித் திரியும் நாட்களுக்கு மத்தியில், நாட்டின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அதிரடி முடிவின் விளைவு. இந்திய வான்படையையும், மக்களையும் மகிழவைத்த நல்ல செய்தி.
இதற்கு முன் விமானப்படையை நவீனப்படுத்தவென சீரியஸான முயற்சி எடுக்கப்பட்டது 21 வருடங்கள் முன்பு. ரஷ்யாவின் (அப்போதைய) நவீனப் போர்விமானமாகிய ’சுகோய்-30’-களை 1998-ல் இந்தியா வாங்கியது. அது ஐ.கே.குஜ்ரால் (ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு) இந்தியப் பிரதமராக இருந்தபோது நடந்தது!

என்ன சிறப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் இந்த போர்விமானத்தில்? அதனுடைய மிகப்புதிய, நவீன ராடார் சிஸ்டங்களை (next gen avionics) த் தாண்டி, ரஃபால் தன்னகத்தே கீழ்க்கண்ட அசுரத்தனமான ஆயுதங்களை இணைத்துக்கொண்டு, நிமிஷங்களில் எதிரி இலக்குகளைத் தாக்கவல்லது:
1)மீடியர் (Meteor) எனப்படும் நவீன ஏவுகணைகள். இவை வானிலிருந்து-வான் இலக்குகளை சுமார் 150 கி.மீ. தொலைவிலிருந்தே துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நமது போர்விமானங்களை, தளங்களை எதிரி விமானங்கள் நெருங்கும் முன்பே ரஃபால் ராடார் சிஸ்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சில நிமிடங்களில் அவை துவம்சம் செய்யப்படும்! பிரிட்டன், ஸ்பெய்ன், இத்தாலி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் பாதுகாப்புக்குத் துணைபோவது இந்த வகை ஏவுகணைகள்.
2) SCALP Cruise Missile- நமது நாட்டின் எல்லைக்குள் இருந்தவாறே 300 கி.மீ. தூரம்வரை உள்ள தரை இலக்குகளை சில நிமிடங்களில் நொறுக்கிவிடும் அழிவு ஆயுதங்கள் இவை. குறிப்பாக சீனா எல்லைப்பகுதியில் ஓவராகத் துள்ளி, எல்லைச் சண்டை என்கிற நிலையிலிருந்து ‘போர்’ என்கிற நிலைக்குத் தீவிரம் அடைந்தால், நமது எல்லை ஓரத்தில் பறந்துகொண்டிருக்கும் ரஃபால் விடுவிக்கும் ஏவுகணைகள் 7-8 நிமிடங்களில் 300 கி.மீ வரை பாய்ந்து சீனாவின் உட்பகுதி இலக்குகளை அழித்துவிடும் சக்தி வாய்ந்தவை. பாகிஸ்தான்? இதற்கெல்லாம் ஒரு விளக்கம் தேவையா!
3) MICA ஏவுகணைகள்: வானிலிருந்து-வான் இலக்கிற்கு 100 கி.மீ. தொலைவில் தாக்கி அழிக்கும் நவீன ராடார் பொருத்தப்பட்ட அதிதுல்லிய ஏவுகணைகள்.
4) சமீபத்தில் சீனாவுடனான கசப்பான எல்லை அனுபவத்திற்குப் பின், இந்திய ராணுவம், குறிப்பாக வான்படை வெகுவாக முடுக்கிவிடப்பட்டு ஆயத்த நிலையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ’எமர்ஜென்சி பர்ச்சேஸ்’-ஆக, லேட்டஸ்ட் வர்ஷன் ‘ஹம்மர்’ (Hummer) ஏவுகணைகளை ஃப்ரான்ஸிடம் இந்தியா ஆர்டர் செய்திருக்கிறது. இவை ‘Highly agile Medium range air-to-ground missiles’ ஆகும். அதாவது அதிதுல்லியமாக சில நொடிகளில், தரை இலக்குகளைத் தாக்கக்கூடியவை. விரைவில் இந்தியா வந்து சேரும். இந்த ஏவுகணைகள் எளிதாக ரஃபால் விமானத்தில் பொருத்தப்பட்டு, விமானவழித் தாக்குதலின்போது சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள தரை இலக்குகளை நொடியில் தகர்த்துவிடும்! லடாக் பகுதியிலோ, வேறு எல்லைப் பகுதியிலோ, எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் எதிரிப் படைகள், அவர்களின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகளைப் போட்டுத்தள்ள, மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது இந்திய விமானப்படையின் தீர்வு.
ரஃபால் ஜெட்களுக்கு சமமாக சீனாவிடம் அத்தனை நவீனப் போர்விமானங்கள் இப்போது இல்லை. அவர்களிடம் இருப்பதில் ரஃபாலின் திறனுக்கு சற்று அருகில் வரக்கூடியது சீனாவின் ’J-10’ Fighter planes தான். நவீன வான்படைத் தொழில்நுட்பரீதியாகப் பார்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட ’J-7’ ஜெட்டுகளை, தன் அடிமை பாகிஸ்தானுக்கு சீனா விற்றிருக்கிறது!
இந்து மகாசமுத்திரக் கடல்வெளியில், தென்சீனக் கடல்பகுதியில் என அங்குமிங்குமாகத் தன் வாலை விரித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சீனாவுக்கு, இந்தியா நட்பு நாடுகளுடன் சேர்ந்துகொண்டு, நாலாபுறமும் நின்று ‘பதிலடி’ கொடுக்க ஆயத்தமாகவேண்டிய காலமிது. இதற்கான ராஜீய, மூலோபாய முன்னெடுப்புகள் (diplomatic, strategic endeavours) நமது இந்திய அரசினால் எடுக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் நேரடி ஒத்துழைப்பு, அவசர செயல்பாடுகள் தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படைக்கான நவீனமயமாக்கலும் கூடவே விரைந்து நிகழவேண்டும். அதுதான் பாரதத்தை தெற்காசியப் பிரதேசத்தில் வலுவான சக்தியாக, மேலும் பாதுகாப்பான தேசமாக ஆக்கும்.
**