உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் இந்தியா

பஞ்சாபின் மொஹாலி நகரில் நேற்று இரவு (27-3-16) நடந்த கத்திமுனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவைத் தகர்த்தது. டி-20 உலகக்கோப்பை செமி-ஃபைனலில் நுழைந்தது. மீண்டும், விராட் கோஹ்லியின் இணையற்ற ஆட்டத்திறன், இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்யவந்து அதிரடியாக 51 ரன்களை 4 ஓவர்களிலேயே எடுத்துவிட்டது. ரவி அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சாதுர்யமான பௌலர்களை ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அஷ்வினின் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch). 5-ஆவது ஓவரில். நேஹ்ராவிடம் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) அவுட்டானார். ஃபின்ச் தொடர்ந்து விளாச, திருப்பிக்கொண்டுவரப்பட்ட அஷ்வின், டேவிட் வார்னரை வெளியே இழுத்து தோனியிடம் ஸ்டம்ப்ட் ஆகவைத்தார். திடீரென யுவராஜ் சிங்கை பௌலிங்கில் நுழைத்தார் தோனி. பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தோனியிடம் கேட்ச் கொடுக்கவைத்துக் காலி செய்தார் யுவராஜ். ஆனால், பொதுவாக ஸ்பின்னர்களைத் தாக்கி ரன்னெடுக்க வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய விளையாட்டு வியூகத்தை (gameplan) உணர்ந்தார் தோனி. அஷ்வினுக்கு 2 ஓவர்களுக்கு மேல் தரவில்லை. ஜடேஜா, யுவராஜுக்கும் தலா 3 ஓவர்களே தந்தார். ரெய்னாவிடம் பந்தைக் கொடுக்கவேயில்லை!

சாமர்த்தியமாக தன் வேகப்பந்துவீச்சாளர்களைச் சுழற்றினார் இந்தியக் கேப்டன். திரும்பி வந்த பும்ராவும், ஹர்தீக் பாண்ட்யாவும், தங்கள் சாகஸங்களினால் பௌண்டரிகள் பறக்காமல் பார்த்துக்கொண்டனர். பேட்ஸ்மன்கள் ஓடி, ஓடியே ரன் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஃபின்ச் 43 ரன்னில் விழுந்தவுடன் வந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), நன்றாக ஆடினார். அவரைத் தன் மந்தவேகப் பந்தொன்றில் ஏமாற்றி, பெயில்களை முத்தமிட்டார் பும்ரா. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சிக்குப்பின் பாண்ட்யா, நேஹ்ராவிடம் ரன் எடுக்க ஆஸ்திரேலியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா 180-க்குக் குறையாமல் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் கெடுபிடி பௌலிங்கிற்கு முன்னால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வியூகம் வீழ்ந்தது. 160 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மொஹாலியில், பந்து அதிகம் எழாமல் கீழேயே தங்கி சிரமம் தரும் மந்தமான பிட்ச்சில், 161 என்பது சிக்கலான இலக்கு. ஆனால், குவார்ட்டர் ஃபைனல் எனக் கருதப்பட்ட இந்த முக்கியமான போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டம் அபத்தமாக இருந்தது. 49 ரன்களில் 3 விக்கெட்டுகள். வழக்கம்போல், ரோஹித், தவன், ரெய்னா மைதானத்தில் நின்று ஆடவில்லை. அருமையாக பந்து வீசிய ஷேன் வாட்சன் (Shane Watson) ரோஹித், ரெய்னாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர்களின் மோசமான ஆட்டத்தினால், விராட் கோஹ்லியின்மீது மனஅழுத்தம் மேலும் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஆஸ்திரேலிய பௌலிங் வெகுதுல்லியம். ஃபீல்டிங் அதிகூர்மையாக. யுவராஜ் கொஞ்ச நேரம் நின்றார். சிங்கிள்களில் ரன் எடுக்கமுயன்றார். கணுக்கால் பிரச்னையோ என்னவோ, கோஹ்லியோடு ஈடுகொடுத்து ஓடி ரன்னெடுக்க அவரால் இயலவில்லை. ஒரு சிக்ஸருக்குப்பின் அடுத்த பந்தை சோம்பேறித்தனமாக லெக்-சைடில் தூக்கப் பார்த்தார். வேகமாக நகர்ந்த வாட்சன், இறங்கிய பந்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். யுவராஜ் அவுட்டாகையில் இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டது. மோசமான ஆட்டநிலை. பலருக்கு யுவராஜ் அவுட் ஆனது `அப்பாடா!` எனத் தோன்றியது.

பாண்ட்யாவை அனுப்புவதற்குப் பதிலாக மஹேந்திர சிங் தோனி தானே இறங்கினார். தோனியின் வருகை, ஏகப்பட்ட அழுத்தத்திலிருந்த கோஹ்லியின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ச்சியது. ஜோஷ் ஹேசல்வுட்டின் (Josh Hazlewood) ஓவரில், மின்னலாக இரண்டு, இரண்டு ரன்களாக நாலுமுறை பறந்தார்கள் தோனியும், கோஹ்லியும். பௌண்டரி ஒன்று சீறியது கோஹ்லியிடமிருந்து கடைசி பந்தில். இந்தியாவின் ஆட்டத்தில் உயிரோட்டம் தென்பட்டது.

ஜேம்ஸ் ஃபால்க்னர் (James Faulkner) ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இறுதி-ஓவர் பௌலர்(death-over bowler). அவரை எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிறது அவரது ரெப்யுடேஷன். ஆனால் அந்த இரவில், கோஹ்லிக்குள் ஏதோ ஒரு பூதம் இறங்கியிருந்தது ஃபாக்னருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. முதல் 2 பந்துகளில் இடது, வலதாக பளார், பளார் எனப் பறந்தன பௌண்டரிகள். மொஹாலி அதிர ஆரம்பித்தது. ரசிகர்களின் மூவர்ண டர்பன்கள் மேலெழுந்தன. இளம் பஞ்சாபி யுவதிகளின் கீச்சுக்கீச்சுக் கூச்சல்கள் போதை ஏற்றியது. Surreal atmosphere! விளைவு? பதற்றம் கண்ட ஃபாக்னரின் அடுத்த பந்தின்மீது பாய்ந்தார் கோஹ்லி. லாங்-ஆன் திசையில் உயர்ந்து வானில் கோபம்காட்டிய பந்து, ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கியது. 19 ரன்கள் வந்தன ஃபால்க்னரின் ஓவரில்(18th over). வெற்றிப்பாதையில் தான் இருப்பதான கனவில் அதுவரை மிதந்திருந்த ஆஸ்திரேலியாவிற்குத் தரை தட்டுப்பட்டது; தடுமாறியது. 19-ஆவது ஓவரை வீசிய நேத்தன் கோல்ட்டர்-நைல் (Nathan Coulter-Nile)-ஐ கோஹ்லியும் தோனியும் தாவிக் கிழிக்க, 16 ரன்கள் இந்தியாவிடம் சேர்ந்தது. ஆஸ்திரேலிய வாபஸி பயணம் உறுதிசெய்யப்பட்டது!

மொஹாலி கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஃபாக்னர் 20-ஆவது ஓவரின் முதல்பந்தை தோனியை நோக்கி வீசினார் என்று சொல்லிமுடிப்பதற்குள், பந்து லாங்-ஆன் பௌண்டரியைத் தாண்டிப் பாய்ந்தது. இந்தியா உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்தது. விராட் கோலி தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைக்க முற்பட்டார். கீழே மண்டியிட்டுக் குனிந்துகொண்டார். தோனி வந்து கொஞ்சநேரம் அப்படியே இருக்கவைத்துப் பின் தூக்கிக் கட்டிக்கொண்டார். 82 நாட்-அவுட். 9 பௌண்டரி, 2 சிக்ஸர். 39 பந்துகளில் அரைசதம், அடுத்த 12 பந்துகளில் 32 மின்னல் ரன்கள். விராட் கோஹ்லியிடமிருந்து வீறுகொண்ட இந்தியாவுக்காக.

தலைகொள்ளாப் பிரச்னைகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவதில்லை பிரதமர் நரேந்திர மோதி! மேட்ச் முடிந்த நொடிகளுக்குள் தான் அனுப்பிய ட்வீட்டில் கோஹ்லியின் அபார இன்னிங்ஸையும், தோனியின் பிரமாதமான தலைமையையும் புகழ்ந்திருக்கிறார். இந்தியாவின் அடுத்த மேட்ச்: 31 மார்ச். மும்பை. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் செமிஃபைனல். மேலும் பொங்கலாம் உணர்ச்சிகளின் பிரவாகம்.

**

இந்தியா-பங்களாதேஷ் : கடைசி பந்து – கேப்டனே ! முந்து !

நேற்று(23-3-16) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வீசிய கடைசி பந்தில் பங்களாதேஷின் கதை முடிந்தது. கூடவே, இந்தியாவின் கோப்பை வாய்ப்பு உயிர் பெற்றது.

ஸ்பின் எடுக்கும் பெங்களூர் பிட்ச்சில் இந்தியா முதல் பேட்டிங்கிற்காக இறங்கியது. ஷிகர் தவனும், ரோஹித் ஷர்மாவும் அதிரடியாக ஆரம்பித்தார்கள். ரசிகர்கள் சிக்ஸர், சிக்ஸர் எனக் கூச்சலிட, தவனும், ரோஹித்தும் குஷியாகி ஆளுக்கொரு சிக்ஸர் பறக்கவிட்டார்கள். 42 ரன்கள் சேர, என்ன அவசரமோ? அதுவரை நன்றாக விளையாடிய ரோஹித்தின் தலைக்குள் திடீரென சூடேறியது. Sudden rush of blood! அபாரமாக வீசிக்கொண்டிருந்த முஸ்தாஃபிசுர் ரஹ்மானின்(Mutafizur Rahman) ஒரு பந்தை, அவருடைய தலைக்குமேலேயே சிக்ஸர் அடிக்க அடாவடி முயற்சி! நேராக உயர்ந்த பந்து, ஃபீல்டரின் கைகளில் சொகுசாக இறங்கியது. அவுட். இன்னொருமுறை ஏமாற்றினார் ரோஹித்(18 ரன்கள்). விராட் கோஹ்லி வந்து செட்டில் ஆவதற்குள், எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார் தவன் (23 ரன்கள்). இந்தியாவின் நல்ல ஆரம்பம், திடீரென சொதப்பல் நிலைக்குத் தள்ளப்பட்டது.

பங்களாதேஷ் பௌலிங் வெகு கூர்மையாக இருந்தது. முஸ்தாஃபிசுர் ரஹ்மானுடன் சேர்ந்து அல்-அமீனும், ஸ்பின்னர்கள் ஷுவகாதா சோம்(Shuvagata Som), ஷகிப்-உல்-ஹசன் ஆகியோரும் பிரமாதமாக வீசினர். இந்திய பௌண்டரிகள் தடுக்கப்பட்டன. இந்த நிலையிலும் கோஹ்லியும், ரெய்னாவும் உழைத்தனர். ஆனால் விரைவிலேயே, ரெய்னா 30 ரன், கோஹ்லி 24 ரன் என வெளியேற்றப்பட்டனர். ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) ஆவேசமாகத் தாக்கினார். 2 பௌண்டரி. 1 சிக்ஸர். 15 ரன்கள். பாண்ட்யாவின் ஆக்ரோஷம், சௌம்யா சர்க்காரின் (Soumya Sarkar) நம்பமுடியாத கேட்ச்சில் முடிவடைந்தது. யுவராஜ் சிங் மைதானத்திற்கு வந்தார். 6 பந்தில் 3 ரன். மூச்சுத்திணறிக் காலியானார். ஜடேஜா, தோனி, அஷ்வின் ஏதோ கொஞ்சம் சேர்த்து இந்திய ஸ்கோரை 146-க்குக்கொண்டுவந்தனர். போதாது. இந்தியாவுக்கு முக்கியமான மேட்ச். குறைந்த பட்சம் 160-ஆவது எடுத்திருக்க வேண்டும்.

147 எடுத்து ஜெயித்து, இந்தியாவை உலகக்கோப்பையில் முன்னேறவிடாமல் செய்வது பங்களாதேஷின் இலக்கு! வேகமாக ஆரம்பித்தார் தமிம் இக்பால். பும்ராவின் ஒரு ஓவரில் 4 பௌண்டரிகள். 35 ரன்களில் அவரைத் தூக்கினார் ஜடேஜா. இந்திய ஸ்பின்னர்கள் அஷ்வின், ஜடேஜா, ரெய்னாவும் நல்ல பங்களிக்க, பங்களா 95-க்கு 5 விக்கெட்டுகள் என்றானது. சௌம்யா சர்க்கார் 21 ரன்களில் விழ, முஷ்ஃபிகுர் ரஹீம்(Mushfiqur Rahim) மொகமதுல்லாவுடன் சேர்ந்து இலக்கை நோக்கி பங்களாதேஷை செலுத்தினார். இந்தியாவா, பங்களாதேஷா என அதிர்ஷ்ட தேவதை இங்கும் அங்கும் கண்ணை உருட்டிக்கொண்டிருந்த வேளை. 19-ஆவது ஓவரை கெடுபிடியாக வீசி வெறும் 6 ரன்களே கொடுத்தார் பும்ரா(Bumrah).

கடைசி ஓவர். பங்களாதேஷுக்கு தேவை 11 ரன்கள். யோசனைக்குப்பின் தோனி, ஹர்தீக் பாண்ட்யாவிடம் கடைசி ஓவரைத் தந்தார். அவரும் நேஹ்ராவும் பாண்ட்யாவுக்கு ஆலோசனை வழங்கினார்கள். பாண்ட்யா ஒரு சுவாரஸ்யமான பேர்வழி. டென்ஷன் எதுவும் அவரிடம் இல்லை ! பந்தை கையில் வாங்கி லேசாகச் சிரித்துக்கொண்டார் ! ஆனால் சீட் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, மூச்சு போவதும் வருவதுமாய் இருந்தது. இதயம் நின்று நின்று துடிக்க, மூவர்ண ரசிகர்கள் சிலர் வானைப்பார்த்து பிரார்த்தனை செய்வது தெரிந்தது.

முதல் பந்தில் மொகமதுல்லா ஒரு சிங்கிள். இரண்டாவது, மூன்றாவது பந்தில் பௌண்டரி விலாசினார் ரஹீம். கூடவே, பௌலிங் போட்ட பாண்ட்யாவைப் பார்த்து ஆவேசமாகக் கையை ஆட்டி சவால் விட்டார். ஏளனமாக ஏதேதோ கூவி சூடேற்றினார். பாண்ட்யா இடுப்பில் கைவைத்து பங்களாதேஷின் கொக்கரிப்பை நிதானமாகப் பார்த்தார். பின் நடந்து சென்றார். திரும்பி ஓடிவந்து அடுத்த பந்தை சூடாக வீசினார். ஷார்ட்-பிட்ச் (short-pitched)ஆகி சீறியது பந்து. ரஹீம், சிக்ஸர் என நினைத்து அலட்சியமாகத் தூக்க, பந்து உயர எழுந்தது. தவனின் ஏந்திய கைகளில் விழுந்தது. தலையைக் குனிந்துகொண்டு ரஹீம் வெளியேறுவதை பாண்ட்யா பார்த்திருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. 2 பந்துகள். 2 ரன்கள். பாண்ட்யாவின் அடுத்த பந்தை இப்போது மொகமதுல்லா வானில் பறக்கவிட்டார். முடிந்தது நம் கதை என இந்திய ரசிகர்கள் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டார்கள். சிலர் இரவு வானில் வெள்ளைப் பந்தைப் பார்த்து விழித்தார்கள். உயர எழுந்த பந்து பௌண்டரிக்குள்ளேயே இறங்க, கவ்விப் பிடித்தார் ஜடேஜா. பிடித்ததும் தரையில் உருண்டார். உருண்டார். உருண்டார்! ரோஹித் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பங்களாதேஷ் ரசிகர்கள் பேந்தப்பேந்த விழித்தார்கள். என்ன நடக்கிறது?

கடைசி பந்து. பங்களாதேஷ் ஜெயிக்க 2 ரன்கள். ஒரு ரன் எடுத்தால் மேட்ச் ட்டை (Tie). இந்தியா தோற்றால் பெரும் சிக்கல். கேப்டன் தோனி பாண்ட்யாவிடம் வந்து பேசினார். நேஹ்ராவும் ஏதோ சொன்னார். சீரியஸ்தனத்தை அறிந்திராத பாண்ட்யாவின் முகம் இறுகியது. மைதானமே உறைந்திருந்தது. ஓடிவந்து போட்டார் பாண்ட்யா கடைசிபந்தை. Medium pace. Back of a length delivery. Outside the off-stump. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே எம்பி அடிக்க முயன்ற பங்களாதேஷின் சோம்(Som) பந்தைக் கோட்டை விட்டார். தோனியின் கையில் பந்து. பங்களாதேஷ் அவசரமாக 1 ரன் எடுக்க ஓட, தோனியின் சமயோஜித புத்தி கூர்மை காட்டியது. பந்தை எறிந்தால் குறி தவறக்கூடும். எதிர்திசை பேட்ஸ்மன் கோட்டைத் தொடுமுன், பாய்ந்து ஓடி, ஸ்டம்ப்பை பந்தோடு சேர்த்தடித்தார் தோனி. ஸ்டம்ப்பின் LED `இந்தியா வெற்றி!` எனப் பிரகாசித்தது.முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். கடைசி 3 பந்துகளில் WWW. எப்படி இருக்கு பாண்ட்யா ஓவர்!

உலகக்கோப்பைக் கனவு பூமிக்குள் புதைந்ததுவிட, வெளிறிய முகத்துடன் வெளியேறியது பங்களாதேஷ். இந்தியாவுக்கு இருக்கிறது இன்னுமொரு வாய்ப்பு 27-ந்தேதி ; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. பார்ப்போம்.

**

இந்திய அணி ! இருக்கு இனி !

உலகக்கோப்பை மேட்ச்சில் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டோம் என்கிற போதை தலைக்குள் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். இந்த மிதப்பில் தரையில் கால்படாது அடுத்த மேட்ச்களில் இந்தியா இறங்கினால், சரிந்து விழ வாய்ப்புகள் அதிகம். உஷார் மனநிலை தேவை.

மகத்தான வெற்றியின்போது ஒன்று நிச்சயம் நடந்துவிடுகிறது. அணியின் பலவீனங்கள், குறைகள் பூசி மெழுகப்பட்டுவிடுகின்றன. தொழில்பூர்வ அணுகுமுறையில் பார்த்தால், வெற்றியைத் தாண்டி நாம் எங்கெங்கே சொதப்பி இருக்கிறோம் எனத் தெரியவரும். ஆசியக்கோப்பை போட்டிகளிலிருந்தே நாம் ஆரம்பித்தோம் என்றால், அணியின் ஒவ்வொரு பலமான வெற்றி, சாதனைக்குப் பின்னும் ஒரே ஒருவர் பெரும் அரணாக நின்று இந்தியாவைக் காப்பாற்றிவருவது கண்கூடு. விராட் கோஹ்லி. இந்தியாவுக்காக, கொஞ்சகாலத்துக்குமுன் சச்சின் டெண்டுல்கரும், அதற்கும் முற்பட்ட காலத்தில் சுனில் கவாஸ்கர், விஷ்வனாத் ஆகியோரும் சாகஸமாய்ச் செய்து வந்த வேலை! முன்னணி வீரர்கள் நொறுங்கிவிட்ட நிலையிலும், நிதானம், பொறுமையோடு பெரும் தாக்குதல்திறன் கொண்டு விளையாடும் இந்தியாவின் வைஸ்-கேப்டன் கோஹ்லி. கொண்டாடப்படவேண்டிய மேதமை. சந்தேகமில்லை.

ஆனால் சர்வதேச அளவில் ஒரு முன்னணி கிரிக்கெட் அணி என்கிற நிலையிலிருக்கும் இந்தியா, எப்போதும் ஒருவரையே நம்பி காலம் தள்ள முடியுமா? கிரிக்கெட் ஒரு அணி-விளையாட்டல்லவா? இதர அனுபவ பேட்ஸ்மன்கள் அணியில் என்னதான் செய்கிறார்கள்? நியூஸிலாந்துக்கெதிராக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா எதிர்ப்புத்திறன் காட்டி பொறுப்புடன் ஆடியிருந்தால், இந்தியா 79-ல் ஆல்-அவுட்டாகி அவஸ்தைப்பட்டிருக்குமா? இந்திய பேட்ஸ்மன்கள், சர்வதேச அனுபவமற்ற நியூஸிலாந்து ஸ்பின்னர்களிடம் எப்படியெல்லாம் தடவினார்கள் என்பதை வீடியோ போட்டுப் பார்த்தார்களா? மேற்சொன்ன மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என்ன சாதித்தார்கள்? கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது. இந்த மூவரின் தடுமாற்றம் ஒருபுறமிருக்க, கீழ்வரிசையில் ஆடும் ஆல்ரவுண்டர்களான பாண்ட்யாவும், ஜடேஜாவும் தோனிக்குத் துணைபோகாமல், துவண்டார்கள். இந்த பலவீனங்களை இந்திய அணி ஒருமித்து உட்கார்ந்து ஆராயவேண்டும். பயிற்சி எடுத்து, உடனே சரிசெய்யவேண்டும். செய்யாவிட்டால், உலகக்கோப்பை ஒரு கனவாகிவிடும்.

நாளை (23-3-2016) பெங்களூரில் நடக்கவிருக்கிறது பங்களாதேஷுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த மேட்ச். பெங்களூரில் இதுவரை 120-155 என்கிற ரீதியில்தான் அதிகபட்ச ஸ்கோர் செல்கிறது. பிட்ச்சானவுடன் பந்து வேகமாக திருப்பம் காணும் மைதானத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதே மைதானத்தில்தான் வெஸ்ட்-இண்டீஸ் ஸ்பின்னர்கள் சாமுவேல் பத்ரீயும்(Samuel Badree), சுலைமான் பென்(Suleiman Benn) –னும் ஸ்ரீலங்காவை 122-ல் சுருட்ட வழிசெய்தார்கள். ஆதலால், நாளை மேட்ச்சில் ஜடேஜா, அஷ்வின், ரெய்னாவுக்கு நிறைய வேலை இருக்கிறது. யுவராஜின் பார்ட்-டைம் ஸ்பின்னையும் தோனி உபயோகப்படுத்தக்கூடும். இந்திய பேட்ஸ்மன்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பங்களாதேஷின் டாப் பௌலர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் (Mustafizur Rahman) காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார். அந்த அணியில் ஷகிப்-உல்-ஹசன், முகமதுல்லா, சக்லைன் சஜீப் ஆகிய ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். பெங்களூரில் இவர்கள் இந்திய பேட்ஸ்மன்களை சோதனைக்குள்ளாக்குவார்கள்.

அடுத்துவரும் இரு போட்டிகளில் (எதிராக: பங்களாதேஷ், ஆஸ்திரேலியா), விராட் கோஹ்லியைத் தாண்டியும் இந்தியா என்னென்ன செய்ய முடியும்? ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, ஹர்தீக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் எத்தகைய பேட்டிங்கை வெளிக்கொணர்வார்கள்? நமது பௌலர்களின் சாகஸங்கள் தொடருமா? இனி வரும் நாட்கள் இனிதே அரங்கேறுமா? இந்தியா ஆர்வமுடன் சீட்-நுனியில் உட்கார்ந்து பார்க்கிறது.

**

உலகக்கோப்பை : பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

19-3-2016 அன்று கல்கத்தாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில், இந்தியா பாகிஸ்தானை மீண்டும் சாய்த்தது. உலகக்கோப்பை போட்டிகளில் (ஒரு-நாள் கோப்பை தொடர் உட்பட), பாகிஸ்தானுக்கு எதிராக இது இந்தியாவின் 11-ஆவது வெற்றி. ஒரு அபூர்வமான சாதனை.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பாகிஸ்தானை முதலாவது பேட்டிங் செய்யச் சொன்னார். காலையில் கல்கத்தாவில் பெய்த மழையினால் பிட்ச்சில் ஈரப்பதன் இருந்தது. மேட்ச் 18-ஓவராகக் குறைக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த குளிர்ச்சி வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் துணைபோகும் என்பது கணிப்பு. பாகிஸ்தானின் துவக்க வீரர்கள் வெகு ஜாக்ரதையாகத்தான் துவங்கினர். இந்திய பௌலிங்கை தொடங்கிய ஆஷிஷ் நேஹ்ராவும் அஷ்வினும் பிட்ச்சின் வேகம், திருப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு சிறப்பாக வீசினர். ரன்கள் வர அடம் பிடித்தன. சிங்கிள், இரண்டு ரன்கள் என ஸ்கோரை மெதுவாக எடுத்துச்செல்கையில் சுரேஷ் ரெய்னாவிடம் வீழ்ந்தார் ஷர்ஜீல் கான். 38-க்கு ஒரு விக்கெட். இந்தியாவுக்கு எதிராக சாதித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் தன்னை முன்னே கொண்டு வந்தார் பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரீதி. ஹர்தீக் பாண்ட்யாவின் பௌலிங்கை அவர் தாக்க முயற்சிக்கையில், கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்தவர்களில் ஷோயப் மாலிக், உமர் அக்மல் இந்திய வேகப்பந்துவீச்சிற்கு எதிராகத் தாக்குதல் செய்தனர். 13, 14 –ஆவது ஓவர்களில் (பாண்ட்யா, பும்ரா) ரன்கள் வேகமாக வர ஆரம்பித்தன. ஆனால் பாகிஸ்தானின் சாகசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. நேஹ்ராவிடம் மாலிக் சரணடைய, ப்ரமாதமாக ஸ்பின் செய்த ஜடேஜாவிடம் அக்மல் வீழ்ந்தார். பாகிஸ்தானின் எதிர்ப்புக் கதை இத்தோடு முடிவடைந்தது. இந்திய பௌலர்களின் சாதுர்யமான பந்துவீச்சில், 18 ஓவர்களில் திக்கித் திணறி 118 ரன்கள் தான் முடிந்தது பாகிஸ்தான் அணியினால்.

119 என்கிற இலக்கு பார்க்க எளிதாகத் தோன்றினாலும் இந்த மாதிரி குறைந்தபட்ச ஸ்கோரை எட்ட முனைகையில்தான் இந்தியா பரிதாபமாகத் தன் முதல் மேட்ச்சைத் தோற்றது. இந்தியர்கள் அதை நினைவில் வைத்திருந்தனர். ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் அதிக கவனம் தேவைப்பட்டது. இருந்தும், ரோஹித் ஷர்மா ஏதோ ரஞ்சி ட்ராஃபி மேட்ச் விளையாடுவது போல் அலட்சியம் காண்பிக்க, 10 ரன்களில் அவர் ஆமீரிடம் அவுட் ஆனார். விராட் கோஹ்லி களமிறங்கி ஜாக்ரதையாகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். முகமது சமியின் வேகப்பந்துவீச்சு அதி துல்லியமாக இருந்தது. தடுமாறிய ஷிகர் தவன் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சமியின் அடுத்த பந்து ரெய்னாவின் பெயில்களைப் பறக்கவிட்டது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட். 23 -க்கு 3 விக்கெட் இழப்பு. நிலைமை திடீரென மோசமானது இந்தியாவுக்கு. பாகிஸ்தான் உற்சாகத்தில் உயிர்பெற்றது. அடுத்து யுவராஜ் சிங். கோஹ்லியும் யுவராஜும் நிலைமையை சீர்செய்வதில் கவனம் செலுத்தினர். மேற்கொண்டு நஷ்டம் ஏற்படாமல் சிங்கிள், இரண்டு என பந்துகளை இடது, வலதாக வேகமாகத் தட்டிவிட்டு ஓடினர். அவ்வப்போது கோஹ்லியின் பௌண்டரி. இந்த ஜோடி நிலைத்துவிடும் போலிருக்கிறதே என்கிற பதற்றம் பாகிஸ்தானிடம் தெரிந்தது.

குழம்பி இருந்த பாக். கேப்டன் அஃப்ரீதி பௌலிங்கை வேகமாக மாற்றினார். தானே ஸ்பின் போட்டார். ஷோயப் மாலிக்கை ஸ்பின் போட அழைத்தார். மாலிக்கின் அந்த ஓவரில் கோஹ்லி அடக்கி வைத்திருந்த ஆவேசத்தைத் திறந்துவிட்டார். ஒரு சூப்பர் சிக்ஸர். இந்திய ரசிகர்கள் தவ்விக் குதிக்க அடுத்த பந்து பாய்ந்து பௌண்டரியை முத்தமிட்டது. தலையைச் சொறிந்த அஃப்ரீதி, அடுத்த ஓவரை வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸிடம் கொடுத்தார். முதல்பந்தை எதிர்கொண்ட யுவராஜ், அனாயசமாக ரியாஸை சிக்ஸருக்குத் தூக்கினார். அந்த ஓவரில் ரன்கள் வேகமாக வந்தன. அதே ஓவரின் கடைசிபந்தில் மேலும் ஒரு சிக்ஸருக்காக அவசரம் காட்டிய யுவராஜ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 23 பந்துகளில் 24 ரன்கள். பாகிஸ்தான் கதையின் முடிவுரையை எழுத இறங்கினார் கேப்டன் தோனி. சூடுபிடித்திருந்த கோஹ்லி பௌண்டரிக்கு பந்தை விரட்ட, இலக்கு நெருங்கியது. ஒரு ஹிமாலய சிக்ஸர், ஒரு சிங்கிள் எனப் பாகிஸ்தானைப் பணியவைத்தார் தோனி. 7 பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் ப்ரமாதமான ஆட்டம் காண்பித்த கோஹ்லி 55 ரன்களுடன் இறுதிவரை அவுட் ஆகாதிருந்தார். பேட்டரி சார்ஜாகியிருந்த இந்திய ரசிகர்கள் பறக்காத குறையாகத் துள்ளினர்.

இந்தியாவுக்கெதிராக உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்னுமொரு துயர் தரும் தோல்வி. என்ன செய்வது – பாதுகாப்பு என்று சாக்குபோக்கு சொல்லி, தர்மசாலா மைதானத்தைத் தவிர்த்து, பாகிஸ்தான் ஆசையாகக் கேட்டுவாங்கிய கல்கத்தா மைதானம் அதற்கு ராசியாக அமையவில்லை.

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, Calcutta) மைதானம் நிரம்பி நுரைத்திருந்தது. சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலியுடன் வந்து இந்திய அணிக்கு உசுப்பேத்திக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் மற்றும் முகேஷ்-ட்டினா அம்பானி தம்பதிகள் இந்தியக் கொடியை உல்லாசமாக அசைத்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் பகுதியிலிருந்து திடீரென முளைத்த வானவேடிக்கைள் கல்கத்தாவின் இரவு வானத்தில், பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவின் கிரிக்கெட் ஆளுமையை ப்ரகாசமாக எழுதிவைத்தன.

**

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முகத்தில் விழுந்த குத்து!

டி 20 கிரிக்கெட் தன் வேலையை காண்பித்துவிட்டது. முதல் போட்டியிலேயே முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவை, நியூஸிலாந்து ஆச்சரியமாக, அதிரடியாக வீழ்த்தியது. காரணம்? ஸ்பின் !
முந்தைய கட்டுரையிலேயே (கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்) சொல்லியிருந்தேன். இந்திய பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்து ஸ்பின்னர்களான இஷ் சோடியையும்(Ish Sodhi), மிட்செல் சாண்ட்னரையும்(Mitchell Santner) அலட்சியம் செய்யாது கவனமாக ஆடவேண்டும். ஆடினார்களா நமது பயில்வான்கள்? இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தார்கள். முடிவு? அவமானகரமான தோல்வி.

முதலில் ஆடிய நியூஸிலாந்து, இந்திய பிட்ச்சில், நமது ஸ்பின்னர்களை ஆடுவது பற்றி நன்றாக ஹோம்-ஒர்க் செய்து வந்திருந்தது. நேஹ்ரா, பும்ரா ஆகியோருடன் இந்திய ஸ்பின்னர்களான அஷ்வின், ரெய்னா, ஜடேஜா திறமையாகப் பந்துவீசினார்கள். நியூஸிலாந்து, அதிரடியும் காண்பிக்க இயலாமல், தடுப்பாட்டமும் ஆடமுடியாமல் தட்டுத்தடுமாறித்தான் முன்னேறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்து 126 வரை கொண்டு சென்றுவிட்டார்கள். கோரி ஆண்டர்சன்(Corey Anderson) 34 ரன்கள். இறுதியில் இறங்கிய ல்யூக் ரோன்ச்சி(Luke Ronchi) அதிரடியாக 21. 127-க்குள் நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்தியது இந்திய பௌலர்களின் சாதனைதான். எனினும், திருப்பி ஆட வருகையில் இந்திய பேட்ஸ்மன்கள் திறன் காட்டவேண்டாமா?
விராட் கோஹ்லியையும்(23 ரன்கள்), தோனியையும்(30 ரன்கள்) தவிர மற்ற ஆட்டக்காரர்கள் ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்துவந்ததுபோல் தடவினார்கள். நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோடி ஆகிய ஸ்பின்னர்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சினார்கள். ஏதோ ஷேன் வார்ன் ஸ்பின் போடுவதுபோல் போட்டார்கள் சாண்ட்னரும், சோடியும். செங்குத்தாக ஸ்பின் ஆன பந்துகளைத் துரத்தி கேட்ச் கொடுப்பது, அல்லது கோட்டுக்கு வெளியே சென்று சுழலைத் தகர்க்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆவது என இந்தியர்கள் ஒவ்வொருவராகத் தற்கொலை செய்துகொண்டார்கள். ரோஹித், தவண், ரெய்னா, யுவராஜ், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோரிடம் இந்தியா இத்தகைய பேட்டிங்கையா எதிர்பார்த்தது? அதுவும் உலகக்கோப்பையில்? தலையில்தான் அடித்துக்கொள்ளவேண்டும். நாக்பூர் ரசிகர்களுக்கு ஏண்டா இவ்வளவு சிரமப்பட்டு இந்த மேட்ச்சுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.

நாக்பூரின் புதிய பிட்ச்சில், பயிற்சி மேட்ச்சில் ஸ்பின் எடுத்ததும், விக்கெட்டுகள் சரமாரியாக ஸ்பின்னர்களிடம் பறிபோனதையும் நியூஸிலாந்து கவனித்து வைத்திருந்தது. தங்களுடைய மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌதீ(Tim Southee), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) ஆகியோரை நியூஸிலாந்து ஆட்டத்தில் சேர்க்கவே இல்லை. (இதனை இந்திய வீரர்கள் கவனித்தார்களா?) மாறாக, தங்களுடைய கத்துக்குட்டி ஸ்பின்னர்களான சாண்ட்னர், சோடி ஆகியோரை அணியில் சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான நேதன் மெக்கல்லமும்(Nathan McCullum) இருந்தார். நியூஸிலாந்தின் gameplan என்ன, நாக்பூரின் ஆடுதளத்தின் நிலை(condition of the pitch) என்ன என்பதைப்பற்றி நமது பேட்ஸ்மன்கள், தொழில்பூர்வமாகச் சிந்திக்கவில்லை. அதற்கான முனைப்பையும் காட்டாது முட்டாள்களைப்போல ஆடினர். அதனால்தான் இந்திய பௌலர்கள் சேம்பியன்களாகப் பந்துவீசியும், இந்திய பேட்ஸ்மன்கள் (தோனி, கோஹ்லி தவிர்த்து), பலி ஆடுகளாக மாறிப்போனார்கள். நியூஸிலாந்தின் 3 ஸ்பின்னர்கள் 9 இந்திய விக்கெட்டுகளைச் சுருட்டி எடுத்தார்கள். சாண்ட்னர் பந்துவீச்சு அதிப்ரமாதம் (4 விக்கெட்டுகள்). 79 ரன்களில், 19-ஆவது ஓவரிலேயே இந்தியா ஆல்-அவுட் ஆனது. எப்படி இருக்கு நம்ப லட்சணம்?

டி-20 மேட்ச்சுகளில் நியூஸிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை என்பது பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தியா தோற்றது ஒரு அதிர்ச்சியல்ல. ஆனால் எவ்வளவு மோசமாக விளையாடித் தோற்றோம் என்பதை நமது பேட்ஸ்மன்கள் தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ, அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது. தொழில்ரீதியாக, இந்திய பேட்ஸ்மன்கள் பிட்ச்சுக்கு ஏற்றபடி, எதிரணியின் திட்டங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியவில்லை எனில், இந்த உலகக்கோப்பையில் நாம் அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியாது. இந்தியாவின் க்ரூப் மிகவும் வலிமையானது. நமது அடுத்த ஆட்டங்கள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்த்து. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. அதிர்ச்சிகளை அள்ளிக்கொடுக்கும் டி-20 உலகக்கோப்பை !
**

கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்

இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் ஜூனியர் டீம்களின் தகுதிச்சுற்று முடிவடைந்துவிட்டது. சூப்பர் 10 எனப்படும் டாப்-10 பங்கேற்கும் போட்டிகள் நாளை (15-3-2016) துவங்குகிறது. முதல் போட்டி இந்தியா நியூஸிலாந்துக்கிடையே நாக்பூரில் நடக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில், இந்திய டி-20 அணியின் வெற்றிகளில் – ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே கிழித்துப்போட்டது, ஆசியகோப்பையை பங்களாதேஷில் வென்றது – போன்றவை சிறப்பான வெற்றிகளாக மின்னுகின்றன. எனினும், இவைகளை 1 ½ மாதகாலத்துக்கு நாம் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில், இனி நாம் காணப்போவது டி-20 உலகக்கோப்பை. உலகக்கோப்பை என்றால் உலகக்கோப்பை. மறுபேச்சு இருக்கமுடியாது.

உலகின் டாப் டி-20 கிரிக்கெட் அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, தற்போதைய சேம்பியனான வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றைக் கருதலாம். ஆனால், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளைக் குறைத்து மதிப்பிடுதல் நல்லதல்ல. மேலும் டி-20 –வகை கிரிக்கெட்டில், திடீரெனக் கதை எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். பௌலிங் செய்யும் அணியின் ஒரு மோசமான ஓவர், வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்துவிடலாம். அதாவது இறுதி ஓவர் ஒன்றில், ஒரு பேட்ஸ்மன் தன் திறமையை எல்லாம் திடீரெனெ வெளிக்கொணர்ந்து சிக்ஸருக்குமேல் சிக்ஸராக வானவேடிக்கை நிகழ்த்தினால், அந்த அணிக்கு கிட்டாத வெற்றியும் கிட்டிவிடக்கூடும். எந்த அணி எப்போது எகிறும், எது சரியும் என மதிப்பிடல் நிபுணர்களுக்கும் சவாலான காரியம்.

மேலும், இந்திய கிரிக்கெட் பிட்ச்சுகளின் கதையே வேறு. நிறைய ரன்கள் வரும். என்றாலும் ஸ்பின்னர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் நிறைய பங்கிருக்கும். நாக்பூரில் நாளைய முதல் போட்டியில் ஆடும் இந்தியா, நியூஸிலாந்து – இரண்டு அணியிலும் தரமான ஸ்பின்னர்கள் உண்டு. இந்திய அணியில் அநேகமாக அஷ்வின், ஜடேஜா விளையாடலாம். நியூஸிலாந்து தரப்பில் சுழல்பந்துவீச்சில், மிட்செல் சாண்ட்னர், நேதன் மெக்கல்லம், இஷ் சோடி ஆகியோர் நிச்சயம் இந்தியர்களுக்கு சோதனை தருவர். நியூஸிலாந்து அதிரடி ஆட்டவீரர்களுக்கு முன், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஆஷிஷ் நேஹ்ரா (Ashish Nehra) (அல்லது முகமது ஷமி), ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஆகியோர் கடுமையான சோதனைக்குள்ளாவர். அக்னிப்பரீட்சைதான். கேப்டன் தோனி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை(Mohamed Shami) நேஹ்ராவின் இடத்தில், முதல் போட்டியில் இறக்கிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஹ்ரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஷமியோ காயத்துக்குப்பின் சர்வதேசப்போட்டிக்குத் திரும்புகிறார். அவர் எப்படி பந்துவீசுவார் எனக் கணிப்பது எளிதல்ல. பும்ராவும், பாண்ட்யாவும் உலகக்கோப்பைக்குப் புதியவர்கள். ப்ளேயர் செலக்‌ஷனில், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், அனுபவமிக்க நேஹ்ராவைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். என்ன செய்யப்போகிறார் தோனி?

பேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சமநிலையில் இருக்கின்றன. நியூஸிலாந்தின் சூப்பர் ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த பாதிப்பு தெரியாதபடி ஆட, மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptil), கேப்டன் வில்லியம்சன்(Kane Willamson), கோரி ஆண்டர்சன்(Corey Anderson), காலின் மன்ரோ(Colin Munroe) ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அனுபவமிக்க ராஸ் டெய்லர்(Ross Taylor) சிறப்பாக ஆடக்கூடியவர். இந்திய பௌலர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்காமல் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவண், கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் பலமான பேட்டிங் தூண்கள். மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் யுவராஜ் சிங் எப்படி ஆடப்போகிறார்? அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா? பெரும் சஸ்பென்ஸில், நகத்தைக் கடிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். புதிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும்.

நியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சு, ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), டிம் சௌதீ(Tim Southee), ஆடம் மில்ன(Adam Milne) ஆகியோரின் திறமையில் ஒளிவீசுகிறது. கூடவே நியூஸிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான 23-வயதான இஷ் சோடி(Ish Sodhi) சிறப்பாக லெக்-ஸ்பின் போடக்கூடியவர். இடதுகை ஸ்பின்னரான மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner)-க்கு இக்கட்டான நிலையில் விக்கெட் வீழ்த்தும் திறமை உண்டு. இவர்களை இந்தியர்கள் அலட்சியம் செய்யாமல் கவனித்து ஆடுவது அணிக்கு நல்லது.

மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான மேட்ச்சாக நாளைய (15-3-2016) போட்டி இருக்கும் எனத் தோன்றுகிறது. எந்த அணி மனஅழுத்தத்தை நுட்பமாக சமாளித்து, களத்தில் சிறப்பாக ஆடுகிறதோ, அது வெல்லும்.

**

காணா இன்பம் . .

உறக்கம் கலைந்தபின்னும்
உற்சாகமாயிருந்தேன்
அதிகாலை நேரத்தின்
அடுக்கடுக்கான எண்ணங்களினூடே
கண்டேன் கவிதையின்
தத்ரூபக் காட்சியை
எழுந்துவந்து எழுதாது
ஏனோ விட்டுவிட்டேன்
தப்பி ஓடிவிட்டது எனைத்
தனியே தவிக்கவிட்டு
நிலையில்லாத மனதின் திரையில்
நிறையவே ஓடுகின்றன இப்பவும்
கலகலத்துச் சிரிக்கின்றன
கட்டற்ற எண்ணங்கள்
கவிதையைத்தான்
காணவில்லை

**

அந்தம்

சில வாரங்களாக கிரிக்கெட் கட்டுரைகள் எழுதும்படி ஆனது. கொஞ்சம் ஓவர்-டோஸ் ஆகிவிட்டதோ! சரி, கவிதைக்கு மீண்டு வருவோம். சின்னதாக ஒன்று கீழே :

அந்தம்

ஏதோ நினைக்கிறோம்
ஏதோ சொல்கிறோம்
ஏதேதோ செய்கிறோம்
ஏதோ இருக்கிறதென்று
எங்கெங்கோ சென்று
என்னவாகவோ
முடிந்திடுவோம் ஒருநாள்

-ஏகாந்தன்

டி-20 ஆசியகோப்பை: இந்தியா சேம்பியன்

நேற்று(06-03-16) டாக்காவில் (Dhaka, Bangladesh) ஆசியகோப்பையின் இறுதிபோட்டியில், இந்தியா 6-ஆவது முறையாக கோப்பையை வென்றது.

மழையின் ஊடுருவலினால், 15-ஓவர் மேட்ச்சாக மாற்றப்பட்ட போட்டியில் பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்தது. கோப்பையை எப்படியாவது வெல்லவேண்டும் என்கிற பதற்றம் ஆட்டக்காரர்களிடமும், உற்சாகம் பங்களாதேஷ் ரசிகர்களிடமும் பெருகி இருந்தது. ஷகிப்-உல்-ஹசன் 21 ரன்கள், ஷபீர் ரஹ்மான் 32, முகமுதுல்லா 33 என மிடில் ஆர்டர் சிறப்பாக ஆடியதால் 120 ரன் எடுத்தது. 15 ஓவரில் ஓரளவு நல்ல ஸ்கோர்தான் இது. இந்திய பௌலர்களில் அஷ்வினும், பும்ராவும் ரன்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக வீசினார்கள்.

121 எடுத்தால் கோப்பை என்கிற இலக்குடன் இறங்கியது இந்தியா. ரோஹித் ஷர்மா ஒரே ரன்னில் அவுட் ஆக பங்களாதேஷ் ரசிகர்களின் குதூகலம், கோஷம் வானை எட்டியது. அடுத்து வந்த விராட் கோஹ்லியை வேண்டுமென்றே கூச்சலிட்டு சீண்டினார்கள் பங்களாதேஷ் ரசிகர்கள். ஆனால் ஷிகர் தவணுடன் இணைந்த விராட் கோஹ்லி ரிஸ்க் எடுக்காது, விவேகத்துடன் ஆடினார். அவ்வப்போது தவணும், கோஹ்லியும் பௌண்டரியைத் தொட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் சீராக ஏறியது. சிறப்பான ஸ்ட்ரோக்ப்ளேயை வெளிப்படுத்திய தவண் 60 ரன்களில் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி, 13-ஆவது ஓவரில் அவுட்டானார். இந்திய வெற்றிக்கு 22 ரன்கள் தேவை. அடுத்து ரெய்னாவோ, யுவராஜ் சிங்கோ வந்திருக்கவேண்டும். ஆவேசமாக ஆட்டத்தை முடித்துவைக்க, கேப்டன் தோனியே வந்து இறங்கினார். 14-ஆவது ஓவர் அல்-அமீன் ஹுசைனால்(Al-Amin Hossain) வீசப்பட்டது(இதுவரை மிகத் துல்லியமாக பந்துவீசியவர்). தோனி எதிர்கொண்ட முதல் பந்து பறந்தது சிக்ஸருக்கு. பங்களாதேஷ் ரசிகர்களின் அட்டகாசம், ஆரவாரம் அத்தோடு அடங்கியது. இரண்டாவதில் சிங்கிள். பேட்டிங் முனைக்கு வந்த கோஹ்லி, கேப்டனின் மூடைப் புரிந்துகொண்டு அடுத்த ஷாட்டில் 3 ரன்கள் ஓடி, அந்தப்பக்கம் போய் நின்றுகொண்டார். நாலாவது பந்தை அலட்சியமாக கவர் திசையில் தூக்கினார் தோனி. பௌண்டரி. வெற்றிக்கு இன்னும் 5 ரன்கள்.அல்-அமீன் வீசிய அடுத்த பந்தை மிட்விக்கெட் திசையில் ஆகாசத்தில் பறக்கவிட்டு பங்களாதேஷின் துள்ளலை முடிவுக்குக் கொண்டுவந்தார் தோனி. இன்னுமொரு பந்தும், ஒரு ஓவரும் பாக்கியிருந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக கோப்பையை வென்றது தோனியின் இந்தியா.

இந்த ஆசியத் தொடரில் சிறப்பம்சங்கள்: இந்தியாவின் சரியான அணுகுமுறை சாதித்த தொடர்வெற்றிகள். பாகிஸ்தானின் பரிதாப ஆட்டம். ஸ்ரீலங்காவின் அதிர்ச்சி தரும் வீழ்ச்சி. பங்களாதேஷின் சிறப்பான ஆட்டத்திறன். டி-20 ஆட்டங்களில் பங்களாதேஷ் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவைத் தவிர வேறெந்த அணியிடமும் பங்களாதேஷ் தோற்கவில்லை. அதிரடி ஆட்டத்திறன் கொண்ட சௌமியா சர்க்கார், ஷபீர் ரஹ்மான், முகமதுல்லா ஆகிய பேட்ஸ்மன்கள், முஸ்டாபிஸுர் ரஹ்மான், அல்-அமீன் போன்ற துல்லியமான பௌலர்கள் ஆகியோரின் வருகையால் பங்களாதேஷ் நல்லதொரு டி-20 அணியாக உருவெடுத்து வருகிறது. உலகக் கோப்பையில் பங்களாதேஷ் பெரிய அணிகளை வீழ்த்த வாய்ப்பிருக்கிறது என்றே கொள்ளவேண்டும். எதிர்காலத்தில், இதன் ஆட்டம் கவனிக்கத் தக்கதாக அமையும்.

**

டி-20: இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு அப்பால்..

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசியகோப்பை டி-20 போட்டிகளில் நேற்றைய போட்டியையும் சேர்த்து 4 தொடர்வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. வீழ்த்தப்பட்ட அணிகளில் பாகிஸ்தான், ஸ்ரீலங்காவும் அடங்கும். மார்ச் 6-ம் தேதி ஆடப்படவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா பங்களாதேஷோடு மோதவிருக்கிறது.

இதுவரை இந்தியாவின் ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்தோருக்கு சில விஷயங்கள் பளிச்செனப் பட்டிருக்கும். அவற்றில் முதன்மையானது விராட் கோஹ்லியின் ப்ரமாத ஃபார்ம். எதிரி யாராயிருப்பினும், பௌலர்கள் எத்தகையோராயிருப்பினும், ஒவ்வொரு மேட்ச்சிலும் செம சாத்து சாத்திவருகிறார் துணக்கேப்டன் கோஹ்லி. அந்த அருமையான ஆட்டத்தை அவர் உலகக்கோப்பைக்குள் கொண்டுசெல்வது இந்தியாவுக்கு நல்லது. இதற்கடுத்தாற்போல் நன்றாக விளையாடிவரும் இந்திய பேட்ஸ்மன் ரோஹித் ஷர்மா.

Rohit Sharma is a mercurial player. வீரேந்திர சேஹ்வாக் மாதிரி எனச் சொல்லலாம். தாக்க ஆரம்பித்தார் என்றால் கண்மண் தெரியாமல் தாக்கக்கூடியவர். நம்பமுடியாத ஷாட்களை விளாசிடும் திறமை அவருக்குண்டு. அடுத்தவாரம் இந்தியாவில் துவங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பையில் ரோஹித் எவ்வாறு ஆடுவார் –குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கெதிராக அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் எனப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகிறார்கள்.

நடந்துவரும் ஆசியக்கோப்பை மேட்ச்சுகளில், மேற்சொன்ன இருவரையும் தவிர இந்திய பேட்டிங்கில் சிலாகிக்கும்படியாக எதுவும் நிகழவில்லை. ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டம் போதுமானதாகத் தெரியவில்லை. தோனி, ஜடேஜா ஆகியோருக்கு சரியான வாய்ப்பு வரவில்லை. யுவராஜ் சிங் ஸ்ரீலங்காவுக்கெதிராக நன்றாக ஆடினார். காரணம் அவருடைய சிறந்த ஷாட்டுகள் ஸ்பின்னர்களுக்கெதிராக வெளிப்பட்டன. தரமான சர்வதேச வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி சமாளிப்பார் என்பது ஒரு கேள்விக்குறி. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்திய பந்துவீச்சில் புதியவர்களான ஜஸ்ப்ரித் பும்ராவும்(Jasprit Bumrah), ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவும்(Hardik Pandya) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால் இவர்கள் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில், கடும் சோதனைக்கு உள்ளாவார்கள். Test by fire. இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கும் சீனியரான ஆஷிஷ் நேஹ்ரா நன்றாகப் பந்துவீசி வருகிறார்.

நேற்றைய போட்டியில், பௌலர்கள் ஹர்பஜன் சிங், பவன் நேகி (Pavan Negi), புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. யூ.ஏ.இ. (ஐக்கிய அரபு அமீரகம்) ஒரு வலுவற்ற டீம். ஆதலால் அவர்களுக்கு இது ஒரு பயிற்சி ஆட்டம் போன்றது மட்டுமே.

உலகக்கோப்பையில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேட்ஸ்மன்களை மட்டுமே நம்பி இந்தியா கதை ஓட்டமுடியாது. ஆதலால், ஞாயிற்றுக்கிழமை (6-3-16) ஆடப்படவிருக்கும் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்த இருவர்களையும் தாண்டி இந்திய பேட்ஸ்மன்கள் சோபிப்பது அவசியம். குறிப்பாக தவண், ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, ஜடேஜா ஆகியோரின் ஆட்டம் பெரிதும் கவனிக்கப்படும். பார்ப்போம்.

**