பௌத்தம் – குஷிநகரில் புத்தர்

சொர்கத்திலிருந்து புத்தர் பூமிக்குத் திரும்பிய நாள் என இந்தியாவிலும், பௌத்தமதத்தைப் பிரதான மதமாகக் கொண்ட தாய்லாந்து, மயன்மார், கம்போடியா, ஸ்ரீலங்கா, தென்கொரியா, பூட்டான் போன்ற  நாடுகளிலும் கொண்டாடப்படும் விசேஷமான தினம் இன்று (20/10/21). ’அபிதம்மா தினம் ’(Abhidhamma Day). தான் மறைந்த பிறகு, மூன்று மாதங்களுக்குப் பின் இந்த நாளில்தான், இந்தியாவின் குஷிநகரில் புத்தர் மீண்டும் காட்சியளித்தார் என்கின்றன பௌத்த இலக்கியங்கள்.

Ramabhar Stupa was built over a portion of the Buddha's ashes on the spot where he was cremated by the ancient Malla people.
ராமாபர் ஸ்தூபி, குஷி நகர், உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்திலுள்ள குஷிநகரில் உள்ள மகாபரிநிர்வாணா பௌத்த கோவிலில் ‘அபிதம்மா தினம்’ வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது. பௌத்தமதத்தினர் பலர்,  பிஷுக்கள் ஆகியோர் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, பூட்டான், நேப்பாள், மயன்மார் ஆகிய நாடுகளிலிருந்து குஷிநகருக்கு வந்து புனிதவிழாவில் கலந்துகொண்டனர்.  6 அடி நீள புத்தர் சயனக்கோலத்தில் அழகாகக் காட்சிதருகிறார் இங்கு. இந்த பரிநிர்வாணா புத்தர் சிலை 1876-ல் பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, பின் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.  உலகெங்குமுள்ள பௌத்தர்கள் தங்களின் புனிதஸ்தலங்களில் மிகவும் விசேஷமானது எனக் குஷிநகரைக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள  ஹிரண்யாவதி ஆற்றின் கரையிலே, புத்தர் தன் கடைசிக்காலத்தை, தன் அன்யோன்ய சிஷ்யர்களுடன் கழித்திருக்கிறார். தன் அந்திமசமயத்தில் புத்தர் குஷிநகரில், அங்கிருந்த மரங்கள் நிறைந்த ஒரு தோப்புக்கு வர, அங்கு பூத்துக்குலுங்கிய  ’சால மரங்களின்’ (Sala trees) பேரழகில் லயித்தவாறு அந்த இடத்திலேயே அவர் படுத்திருக்க அவரது உயிர் பிரிந்ததாகவும்,  அதே இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் ’மகாயான மகாபரிநிர்வான சூத்திரம்’ (Mahāyāna Mahāparinirvāṇa Sūtra) எனும் பௌத்தநூல் கூறுகிறது.  இங்குள்ள ’ராமாபார் ஸ்தூபி’ (Ramabar Stupa) கட்டப்பட்டுள்ள இடத்தில்தான், குஷிநகர் பிரதேசத்தில் அக்காலத்தில் வசித்துவந்த ‘மல்லர்’ (Mallas) இனத்தினரால், கௌதம புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. ’மல்லர்’ இனத்தலைவனான குஷிநகரை அப்போது ஆண்ட மன்னனே புத்தர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னமாக இந்த ராமாபார் ஸ்தூபியை நிறுவியவன்.

குஷிநகரின் புராணப்பெயர் குஷாவதி. ராமபிரானின் இரு மகன்களில் ஒருவனான மன்னன் குஷனின் ஆட்சியில், அவன் பெயரால் இந்நகரம் புராணகாலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. (’குஷ்’ எனும் ஒருவகை புல் மண்டிக்கிடந்த பிரதேசமானதால் இது ‘குஷாவதி’ என அந்தக்காலத்தில் வழங்கப்பட்டது எனச் சொல்வோருமுண்டு). கி.மு. 3-5-ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்த நகரில் பல பௌத்தவிஹாரங்களும் ஸ்தூபிகளும் இருந்தன. பேரரசன் அசோகன் பலவித பௌத்த நினைவுச்சின்னங்களை குஷிநகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிர்மாணித்திருக்கிறான். பிற்கால மொகலாயப் படையெடுப்புகளின்போது இவை தாக்குதலுக்குள்ளாகி, சிதைவுற்றன. கவனிப்பாரற்று சில நினைவுச்சின்னங்கள் மண்ணிலும் புதைந்துபோயின. Buddha relics  என அழைக்கப்படும் கௌதம புத்தரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட (அவர் பயன்படுத்திய சில பொருட்கள், அவருடைய எலும்புகள், சாம்பல் போன்றவை) குஷிநகர் பகுதியில்  பிரிட்டிஷ் காலத்தில் பூமிக்கடியிலிருந்து தற்செயலாக ஒரு மரப்பெட்டியில் கிடைத்திருக்கிறது.

குஷி நகர் சர்வதேச விமானநிலையம்

புகழ்பெற்ற மகாபரிநிர்வாணா புத்தர் கோவிலோடு, 19-20ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து, சீன, ஜப்பானிய கட்டிடக்கலைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ள புத்தர்கோவில்களும் குஷிநகரிலும்  சுற்றிவரவும் காணப்படுகின்றன. இவையன்றி இந்துமதக் கடவுள்களுக்கான குருகுல்லா ஆஸ்தான், குபேர் ஆஸ்தான், சமண மத தீர்த்தங்கரர்களுக்கான தேவ்ரஹா ஆஸ்தான் போன்ற கோவில்களும் குஷிநகரில் இருக்கின்றன. இந்தியாவில் மதங்கள்பற்றி, குறிப்பாக பௌத்தமதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும், இளம் பௌத்த பிக்ஷுக்களும், மாணவர்களும் குஷிநகருக்கு அடிக்கடி வந்து போகின்றனர். சிறப்பான சர்வதேச பௌத்த சுற்றுலாத்தலமாக சமீபகாலங்களில் குஷிநகர் மாறியிருக்கிறது.

குஷிநகரில் சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டு, பௌத்தர்களின் புனித நாளான ’அபிதம்மா தின’மான இன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்துவைக்கப்பட்டு, தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன், பிரதமர் மகாபரிநிர்வானா கோவிலுக்குச் சென்று புத்தரை வழிபட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். சுற்றுலாவாசிகளை வெகுவாகக் கவர்ந்துவரும் குஷிநகரின் வளர்ச்சியோடு, உத்திரப்பிரதேசம், பீஹாரின் பௌத்தம் தொடர்பான பகுதிகளின் தொழில், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களும் சமீபகாலத்தில்  முன்னெடுக்கப்பட்டு, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குஷிநகர் ஏனைய முக்கிய நகரங்களுடன் விமானவழி இணைக்கப்படவுள்ளது.

**

’சொல்வனம்’ இதழில் கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

கவிஞர் ஆர்.எஸ். தாமஸ்

பிறப்பு: 1913-ல் கார்டிஃப் (Cardiff),  வேல்ஸ்.

வேல்ஸ் (British Wales) பிராந்தியத்தின் கிராமிய வெளியில், வேல்ஷ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஒரு பாதிரியாக இளம் வயதிலிருந்தே பணியாற்ற ஆரம்பித்து, பல வருடங்களாக சர்ச் பணியில் ஆழ்ந்திருந்தவர் ஆர்.எஸ். தாமஸ்.

Welsh Poet R.S. Thomas

வேல்ஸின் சூழ்ந்து படர்ந்திருக்கும் நீல மலைகள், ஆறுகள், அப்பாவி மக்களென இயற்கையின் வண்ணங்கள் அவரில் பெரிதும் வியாபித்துக்கிடந்தன. மெருகேற்றி அவரை உருவாக்கி ஒரு கவிஞனாய் வெளியுலகிற்கு ஒரு கட்டத்தில் காண்பித்தன. மண்ணின் மைந்தனாக இல்லாமல், உலகளாவிய கவிஞனாக நீ இருக்கமுடியாது எனும் ஆங்கிலேயக் கவி ராபர்ட் ஃப்ராஸ்டின் கூற்றை ஆமோதிப்பதுபோல் தன் தாய்மண்ணான வேல்ஸ் நிலத்தை, மனிதர்களை தொடர்ந்து தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்தவாறே இருந்தார் அவர். பணியாற்றுமாறு நேர்ந்த வேல்ஸ் சர்ச்சின் பணிசூழல், செயல்பாடுகள் ஒருபுறம், மாறா நம்பிக்கையுடன் வந்து சென்ற ஒன்றுமறியா மனிதர்களின் வாழ்வு மதிப்பீடுகள் மறுபுறம் எனவும், பொதுவாக தேசத்தின் கலாச்சாரச் சீரழிவுபற்றிய கவலையும் விரவிக்கிடக்கின்றன அவரது கவிதை வெளியில். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவராக பிரசித்தி பெற்றிருந்த தாமஸ், நோபல் பரிசுக்கெனப் பரிந்துரைக்கப்படலாம் எனும் பேச்சும் இருந்தது ஒரு கட்டத்தில். பிரிட்டிஷ் ராணியின் கவிதைக்கான தங்க மடலை 1964-ல் பெற்றார்.  2000-ல் மறைந்தார்.  

ஆர்.எஸ். தாமஸின் சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவர்பற்றிய என் மேற்கண்ட குறிப்போடு அந்தக் கவிதைகளை ‘சொல்வனம்’ இலக்கிய இதழ் வெளியிட்டிருக்கிறது. நன்றி: ’சொல்வனம்’.

சொல்வனத்தின் நடப்பிதழில் காணப்படும் தாமஸின் கவிதைகளில் மூன்றைக் கீழே தருகிறேன்: ( மற்றவைகளை சோம்பல்படாமல், சமர்த்தாக ‘சொல்வனம்’பக்கம்போய் வாசிப்பீர்களல்லவா ! https://solvanam.com )

அ வ ர் க ள்

அவர்களது கைகளை

என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்

அழுத்தமான கைகள்

அன்பில்லை அவற்றில்,

வலிய வரவழைக்கப்பட்ட

ஒரு மென்மையைத் தவிர.

கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து

வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

சோகத்துடன் தங்கள் துக்கங்களை

எனது பின்வாசலருகே

கொண்டுவந்து வைத்துவிட்டு

வாயடைத்து நிற்கிறார்கள்.

பகலொளியின் பிரகாசத்தில்

வீசும் காற்றில்

அவர்களைப் பார்க்கையில்,

அவர்களின் கண்களின் ஈரத்தில்

அவர்களின் அழுகைக்கான

காரணம் புரிகிறது

தங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்களோடு

மல்லுக்கு நிற்கிறார்கள் அவர்கள்..

தினமும் வானம் நீரைப் பிரதிபலிக்கிறது

நீர், வானத்தை.

தினமும் அவர்களது போராட்டத்தில்

நான் நிற்கிறேன் அவர்கள் பக்கம்,

அவர்களது குற்றங்களையும்

என்னுடையதாக ஏற்றுக்கொண்டு.

வீட்டிலிருந்து, வாழ்விலிருந்து

நினைவுகளிலிருந்துகூட

அவர்களால் வெளியேற்றப்பட்டுவிட்ட

அவர்களது ஆன்மாவுக்கு,

பின் எப்படித்தான் நான் சேவை செய்வது ?

**

வ ரு த ல்

கடவுளின் கையில்

ஒரு சின்னஞ்சிறு உலகம்.

பார் இங்கே.. என்றார்.

பார்த்தான் மகன்.

எங்கோ வெகுதூரத்தில்,

நீரினுள் பார்ப்பதுபோல்,

வறண்டு வெடித்திருந்த

செந்நிற பூமியைப் பார்த்தான்.

விளக்குகள் அங்கு எரிந்தன.

பெரும் கட்டிடங்கள் தங்கள்

நிழலைப் பரப்பியிருந்தன

பாம்பைப்போல் நெளிந்து மின்னும்

ஆறொன்று ஒளிவீசி ஓடிக்கொண்டிருந்தது

அந்த மலைப்பகுதியின்  குன்றின்மீது

ஒரு மொட்டை மரம்

வானத்துக்கே துக்கம் தந்து நின்றிருந்தது.

பலர் அதனை நோக்கி

தங்கள் மெலிந்த கைகளை

நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தார்கள்,

காணாமற்போன வசந்தம்

அதன் கிளைகளுக்குத் திரும்பவேண்டுமென

இறைஞ்சுவதுபோல.

அந்த மகன்

அவர்களைப் பார்த்தான்.

என்னை அங்கே போகவிடுங்கள் என்றான்

**


ம ற் றொ ன் று

தூரத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தின்

ஏதோ ஒரு பகுதி ஒரேயடியாகப் பொங்க,

விளக்கில்லாத, துணையேதுமில்லாத

அந்தக் கிராமத்தின் கரையோரத்தில்

சீறும் அலைகள் எழுவதும் வீழ்வதும்,

எழுவதும் வீழ்வதுமான சத்தத்தை

அதிகாலையில் தூக்கமின்றி

படுத்தவாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சில மணிநேரத்துக்கு, சில நாட்களுக்கு

சில வருஷங்களுக்கு என்றல்ல –

என்றென்றைக்குமாகவும் நமது பிரர்த்தனைகள்

தன் மீது மோதிமோதி விழுந்து நொறுங்குமாறு

இருந்துகொண்டிருக்கும் அந்த மற்றொன்றும்

தூங்காமல்தானிருக்கிறது

என்கிற நினைவும் கூடவே ..

**

டி-20 உலகக்கோப்பை 2021

ஐபிஎல் முடிந்த சூட்டோடு சூடாக, அமீரகத்தில் ஆரம்பித்துவிட்டது இன்று (17-10-2021) டி-20 உலகக்கோப்பைக்கான போட்டிகள். ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் முதல் மேட்ச்சில் , ஓமன், பாப்புவா நியூ கினீயைத் தோற்கடித்துவிட்டது. இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து, பங்களாதேஷை எதிர்த்து ஆடிவருகிறது.

ICC T-20 World Cup

உலகின்  டாப்-8 கிரிக்கெட் நாடுகளின் அணிகள் இரு பிரதான குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

Group-1 : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா.

Group-2 : இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூஸிலாந்து.

இவை தவிர, மேலும் இரண்டு குழுக்கள் உண்டு – இப்படி:

Group A: ஸ்ரீலங்கா, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா.

Group B: பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, ஓமன், பாப்புவா நியூ கினீ.

இந்தியா விளையாடும் உலகக்கோப்பையின் முதல் மேட்ச் 24/10/2021 (ஞாயிறு) துபாயில் நடக்கும். பரமவைரியான பாகிஸ்தானுடன் ஆட்டம். ரசிகர்களின் ஆட்டபாட்டங்களும் ரசமாக இருக்கும்! இப்படி ஐசிசி-யின் மெகா டூர்னமெண்ட்டுகளில் மட்டும், பாகிஸ்தான், இந்தியா மோதிக்கொள்வது வழக்கமாகிவிட்டிருக்கிறது, சமீப காலமாக. காகிதத்தில், கோஹ்லியின் இந்தியா, பாபர் ஆஸமின் பாகிஸ்தானைவிட (குறிப்பாக பேட்டிங்கில்) வலுவானதாகத் தெரிகிறது. டி-20 உலகில், எந்த நாளில் என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாது. ஞாயிறு வரட்டும், வந்து சொல்லட்டும் கதை!

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக்கேப்டன்), கே.எல்.ராஹுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ராஹுல் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்தீக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஷர்துல் டாக்குர்.  (டாக்குர், அக்ஷர் பட்டேலுக்குப் பதிலாகக் கடைசிகட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். Fast bowling allrounder in form – என்பதால்.)

**

ஐபிஎல் 2021: சென்னை சேம்பியன்ஸ் !

ஐபிஎல் சரிதத்தில் நான்காவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏகப்பட்ட மஞ்சள் சட்டைகள் பளபளத்த துபாய் மைதானம், தோனியின் சென்னைக்கு அதிர்ஷ்டகரமாக ஆனது.

Story
Ganguly presents IPL Trophy to Dhoni

டாஸ் ஜெயித்த கொல்கத்தாவின் மார்கன், சென்னையை உள்ளே அனுப்பியதன் காரணம், தனது பௌலர்கள் வித்தை காட்டுவார்கள்; விறுவென விக்கெட்டுகள் விழும்; ஸ்கோர் ரொம்ப எம்பிவிடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கைதான். கேகேஆர்-இன் பலமே அவர்களின் பௌலிங்தான் என்று கடந்த சில போட்டிகள் சொல்லியிருந்தன.  ஆனால் துபாயின் கதை வேறானது. பவர்ப்ளேயில் எந்த அழுத்தமுமின்றி கெய்க்வாடும், டூ ப்ளஸீயும் ஆடினார்கள். கெய்க்வாட் 61-ல் விழுந்தாலும், அடுத்துவந்த ராபின் உத்தப்பாவும், டூ ப்ளஸீயும் சென்னையின் ஸ்கோர் தொய்ந்துவிடாமல் அபாரமாக ஆடினார்கள். உத்தப்பா போனால், இதுகாறும் சரியாக ஆடாத மொயீன் அலி நொறுக்கினார். இப்படியே ஸ்டெடியாகப்போய் 192 என வந்து கொல்கத்தாவை அயரவைத்தது சென்னையின் ஸ்கோர்.

Champions CSK !

அமீரக ஆட்டங்களில், கொல்கத்தா அணியில் பேட்டிங் என்றால் அதன் துவக்க ஆட்டக்காரர்கள்தான் என்றாகிவிட்டிருக்கிறது. நேற்றும் வெங்கடேஷ் ஐயர் (50), ஷுப்மன் கில் (51) ஜோடி சென்னையின் பௌலிங்கை ஒருகை பார்த்து தூள்கிளப்பியது. அவர்கள் போன வேகத்தில் 193 என்கிற இலக்கு வேகமாகக் கரைந்தது. ஆனால், ஒவ்வொருவராக இருவரும்  வெளியேற்றப்பட்டபின், கொல்கத்தாவின் மிடில்-ஆர்டர் வெளிச்சத்தில் கண்கூசி ஆட்டங்கண்டது. சுனில் நாரேன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், மார்கன், ஷகிப் உல் ஹசன் – எல்லாம் ஆறாம் வகுப்பு பிள்ளைகள் போல அடுத்தடுத்து சரிந்து சென்னையின் வெற்றியை சுலபமாக்கினார்கள்.

சிஎஸ்கே-யின் பௌலிங்கில், ஷர்துல் டாக்குர் நன்றாகப்போட்டு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் 18-ஆவது ஓவரில் நோ-பால், வைட், வைட் என வரிசையாகப் போட்டு, இறுதி கட்டத்தில் தோனியின் கடுப்புக்கு உள்ளாகி, கொஞ்சம் காமெடி சேர்த்துவைத்தார்! ஹாசல்வுட், ஜடேஜா ஆளுக்கு 2 எடுத்தார்கள்.  தீபக், ப்ராவோவும் நன்றாக வீச, 27 ரன் வித்தியாசத்தில் தோற்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். அதிகபட்ச ஸ்கோர் 86 விளாசிய சென்னையின் ஃபாஃப் டூ ப்ளஸீ (Faf du Plessis) ஆட்டநாயகன்.

தோனியின் கைக்கு திரும்பியது ஐபிஎல் கோப்பை . நேற்றைய இரவில் (15/10/2021), பெண்கள், குழந்தைகள், ஆண்களென மங்கல மஞ்சளாகிவிட்டிருந்தது துபாய். போடு விசில ..!

ஐபிஎல் இறுதி ஆட்ட ஸ்கோர்: CSK: 192/3      KKR: 165/9

**  

ஐபிஎல் 2021 – கோப்பை யாருக்கு?

IPL – ன் அழகிய கொழுகொழு மொழுமொழு கோப்பை யார் கைக்குப் போகப்போகிறது? தோனியா? மார்கனா? இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியவரும். குற்றம் கூறுதல், அலசல்கள் கூடவே வர்ணனையாளர்கள், ரசிகர்களிடையே தூள்கிளப்பும்!

யாரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR), இறுதிப்போட்டியில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லைதான். எதிர்பாராததைத் தருவதுதானே டி-20 -ன் வேலை!

போனவருடம் தடுமாறித் தத்தளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்த வருடம் துபாய் ஃபைனலில் கம்பீரமாய் நிற்கிறது. இதுவரை அவர்கள், குறிப்பாக 2021-ன் இரண்டாம் பாதியில் ஆடிய ஆட்டம், வெற்றிகளுக்கு மூலகாரணமென ஒருவரை குறிப்பிடலாமென்றால் அது நிச்சயம் தோனியல்ல. சென்னை ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் அந்த கௌரவத்தைத் தட்டிச்செல்கிறார். கூடவே, டூ ப்ளஸீ, ப்ராவோ, ஷர்துல் டாக்குர், ஜோஷ் ஹாஸல்வுட், தீபக் சாஹர் ஆகியோரும் மிளிர்ந்தார்கள்.

அமீரக ஆட்டங்களில் கொல்கத்தா அணி எதிர்பாரா வெற்றிகளைத் தட்டியது. குறிப்பாக பந்து கீழே தங்கும், தடுமாறி முன்னேறிக் கம்பைத் தொடப் பார்க்கும் ஷார்ஜா மைதானத்தில் அவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட்கள் என நிரூபித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் கொல்கத்தா அணியின் மெண்ட்டரான ப்ரெண்டன் மக்கல்லம். முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரராக எதிரணி பௌலர்களை அலறடித்த பெருமையுண்டு அவருக்கு. அவரின் சாதுர்ய டீம் செலெக்‌ஷன் கொல்கத்தாவுக்குக் கை கொடுத்திருக்கிறது. சுனில் நாரய்ன், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் உல் ஹஸன் என அதிரடி ஸ்பின்னர்களையும், லோக்கி ஃபெர்குஸன், ஷிவம் மாவி ஆகிய துல்லிய வேகப்பந்து வீரர்களையும் வைத்துக்கொண்டு பலமான எதிரணிகளைப் புரட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் ஐபிஎல் ஃபைனலுக்கு.

தோனியின் சிஎஸ்கே , கேகேஆர்-ஐ கேஷுவலாக எதிர்கொள்ள வாய்ப்பில்லை. கொல்கத்தா அணிக்கு துபாய் பிட்ச் சவாலாக அமையக்கூடும். கொல்கத்தாவின் மிஸ்டரி ஸ்பின்னர்கள் சென்னை பேட்ஸ்மன்களை அடித்துச் சாய்ப்பார்களா? அல்லது சென்னையின் வேகப்பந்துவீச்சு கொல்கத்தாவின் பேட்ஸ்மன்களை குறிப்பாக அவர்களின் தள்ளாடும் மிடில்-ஆர்டரைப் (ரன் எடுக்கத் திணறும் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் ஆய்ன் மார்கன்) பதம் பார்த்து, வெற்றியை நோக்கி சென்னையை நகர்த்துமா? பெரும் குழப்பம் தரும் டி-20 கேள்விகள் !

முடிவு எப்படியாகினும், கடும் போட்டி துபாயில் இன்றிரவு. கிரிக்கெட் ப்ரேமிகளுக்கு ஒரு அருமையான டி-20 க்ளாஸிக் வாய்க்கக்கூடும் !

**

‘பதாகை’யில் கவிதைகள்

கீழ்வரும் என் இரு கவிதைகள், ‘பதாகை’ இலக்கிய இதழில் (அக்டோபர் 11, 2021) பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி : பதாகை https://padhaakai.com

காற்றினிலே

தன்வீட்டு வாசலில்
ஒரு அந்திப்பொழுதில்
தனியாக உட்கார்ந்திருக்கிறான்
அந்த வயதான மனிதன்
கண் மங்கி நாளாகிவிட்டது
காது நன்றாகக் கேட்கிறது
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள்
கேட்க ஆரம்பிக்கின்றன
அவனுக்கு எதிர்த் தெருவில்
அவர்கள் நெருங்க நெருங்க
அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில்
உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை
உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள்
கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ
காதுகளை மென்னொலி அலைகள்
கதகதப்பாய் வருடுகின்றன
சிலிர்த்துக்கொள்கிறான்
மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க
மயக்கும் குரல்கள் மங்கி மறைய
பெருமூச்சு விடுகிறான்
தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள்
தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக

**

ஜீவிதம்

கவிழ்க்கப்பட்ட நிலையில்
விசித்திர மதுக்கோப்பை
இந்த பிரம்மாண்ட ஆகாசம்
அதிகமாக நக்ஷத்திரமும்
மிதமாக சந்திரனும்
கொஞ்சமாக சூரியனுமாய்
கிறங்கவைக்கும் காக்டெய்ல்
களிப்போடு இதழ் பொருத்தி
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன்
கந்தர்வ போதையில்
கரைகிறது காலம்

**

’சொல்வனம்’ இதழில் இரண்டு கவிதைகள்

மேலெழுந்தபோது

குப்பைகூளங்களைத்
திமிறித் தள்ளிவிட்டு
குதூகலமாய் எழுந்து
கொஞ்சமாக உயர்ந்திருந்தது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
தன்னைத் தீண்டப்பார்க்கும்
தென்றலின் விஷம விரல்களை
மெல்ல விலக்கியது செடி
சீண்டும் ஸ்பரிசமேபோல்
தன்மேல் படரும் சூரியகிரணங்களை
காணாததுபோல் இருந்தும்
மெல்ல மெல்ல மேல்வந்து
ஒரு நாள் உன்னைத் தொடுவேன்
எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது
இவ்வளவையும் நான்
ஆசையாக அள்ளிக்கொண்டிருக்கும்
அபூர்வ வேளையில் நல்லவேளை
யாரும் பின்னால் வந்து நின்று-
இந்தச் செடியின் இலையை
அரைச்சுக் குடிச்சா
இடுப்புவலி போயிரும் சார்
என்று இன்னும் சொல்லவில்லை

**

முகநாடகம்

சரியாக அணிந்துகொள்ளவில்லை
என்பதான திடீர் உணர்வினால்போல்
முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து
மீண்டும் போட்டுக்கொள்வதாய்
ஒரு தருணத்தை அமைத்து
எதிரே கடக்கப்போகும்
எனக்குன் தளிர் முகத்தை
காண்பித்து மறைத்த
உன் குறுநாடகம்
கொரோனாவின் பின்புலமின்றி
சாத்தியமாகியிருக்குமா என்ன?

**

என் மேற்கண்ட இரு கவிதைகள் ’சொல்வன’த்தின் நடப்பிதழில் வெளிவந்துள்ளன. நன்றி: சொல்வனம்.

மேலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளுக்கு, சென்று வாசியுங்கள் : https://solvanam.com