தேடும் மனிதன் தேடுகிறான்

பெருமை பொங்கி வழியும் இப்பேருலகில்
தான் ஒன்றுமே இல்லையோ
என்கிற கலக்கம் கொஞ்ச நாளாய்
அதுவாக இதுவாக எதுவாகவோ எல்லாம்
இருப்பதாகக் காட்ட முயன்றான்
முகநூலுக்குள் நுழைந்தான்
அவசரமாக அகத்தைத் தேடும்
அயராத முயற்சியில்
நிலைத்தகவல்கள் இத்யாதிகள்
அலை ஏதும் கிளப்பவில்லை
ட்விட்டருக்குள் புகுந்து
லைட்டரை ஆன் செய்தான்
பத்தியது கொஞ்சம்
புகையும் வந்ததுபோல் இருந்தது
புகைவளையத்திற்குள்
துழாவினான் தன் முகப்பரப்பை
தேடினான் இல்லாத ஒளிவட்டத்தை
புகைமண்டலம் கலைய ஆரம்பித்தது
வெற்று வெளிதான்
விஷமமாய்ச் சிரித்தது

**

மாறும் காட்சிகள்

நீ
நான்
நிழல்
என்ன நடந்துவிட்டது இப்போது
விலகிவிட்டதா உருவநிழல்
இல்லை என்றாகிவிட்டதா
அனைத்தையும்
தன்னகத்தே கொண்டிருக்கும்
அது இருக்கிறதே
எப்போதும்போலவே
என்ன கவலை
இழக்கப்படவில்லை எதுவும்
இடமாற்றம் கண்டுள்ளதாக
அறியப்பட்டுள்ளது

**

எங்கிருக்கிறாய் ?

எட்டிப்பறி
தட்டிப்பறி
இழுத்துப் பறி
அடித்துப் பறி
எப்படியோ பறி
வாயில் போட்டுக்கொள்
தின்று களி
இப்படித்தான் எப்போதும்
வாழவேண்டுமா

பழத்தைத்தான் பறிக்கிறேன் என்று
மரத்தையே துவம்சம் செய்யாமல்
சற்றுத் தூர நின்று
பழுத்துக் குலுங்கும் மரத்தை
ஆசையாகப் பார்க்கலாம்
அதனழகில் ஒன்றி
அதுவாகவேகூட ஆகிவிடலாம்
பசி தீர்ந்துவிடுமா என்று படபடக்கிறாய்
தீர்க்கவேண்டிய அவசியமில்லாது
பசியற்ற ருசியற்ற
பவித்ரமான நிலை ஒன்றுக்கு
அழைத்துச் செல்லக்கூடும் அது
அறிந்தே மாறிட அவகாசம்
அதற்கேற்ற உத்வேகம்
இருக்கிறதா உன்னிடம்?

**

அப்பால்…

மூளையின் வேலைநிறுத்தத்தை
முன் வைக்கிறது
முட்டாளின் மௌனம்.
ஞானியின் மௌனமோ
மனம், புத்தி என்கிற
லௌகீக நிலைகளுக்கு
அப்பாற்பட்டது
அதில் ஆழ்ந்திடுமோ
அனுபவம் கொள்ளுமோ
அடங்க மறுக்கும்
இந்த மனம்

**

அவனும் இவனும்

எதற்கெடுத்தாலும் கடவுளை வேண்டிக்கொள்வாயா? உன் புலம்பலைக் கேட்பதைத்தவிர அவருக்கு வேறு வேலை இல்லையா, என்ன? என்றான் அவன்.

வேண்டினால் என்ன? எனக்கு அப்படித் தோன்றுகிறது. வேண்டுகிறேன். அவர் கேட்கட்டுமே? கடவுள் மனித அம்மா அல்ல. ‘போய்த்தொலை சனியனே! எப்பப்பாத்தாலும் தொண தொணன்னுகிட்டு’ என்று அடித்துவிரட்ட. அவர் தெய்வம். எல்லாவற்றையும் அக்கறையோடு, பொறுமையோடு கேட்பார்- இவன் சொன்னான்.

கேட்கிறாரா? கேட்டு என்ன செய்கிறார்? ஏதாவது நடந்திருக்கிறதா அதனால்?

கேட்கவில்லை; அவர் ஒன்றும் செய்யவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்? அவரது செய்கைகள், சிந்தனைகள் சூட்சுமமாக அல்லவா இருக்கும்? உனக்குப் பக்கத்திலிருப்பவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், செய்தான் என்பதே உனக்குத் தெரியமாட்டேன்கிறதே! கடவுளுடைய சிந்தனை, செய்கைபற்றி நீ எப்படித் தெரிந்துகொள்வாய்?

அது சரி! என்றான் அலுப்புடன் அவன்.

**