ஆரம்ப மேட்ச்சில் கொல்கத்தாவிடம் காலியான சென்னை. டெல்லியிடம் அடி வாங்கிய மும்பை. 200-க்கு மேல் எடுத்தும் பஞ்சாபிடம் பலியான பெங்களூரு! ஐபிஎல் 2022-ன் அதகளம் ஆரம்பம்.
தற்போது ஐபிஎல்-ன் இரு புது அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரபல முகங்களில் ஒருவராயிருந்த ஹார்திக் பாண்ட்யா முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார், குஜராத்திற்காக. அவரது நண்பர் கே.எல்.ராஹுல் லக்னோவின் கேப்டன். இரண்டும் சமபல அணிகளாகத் தோன்றுகின்றன என்றாலும் களத்தில் கதை என்னவோ ..

குஜராத் அணியில் (நியூஸிலாந்தின்) லாக்கி ஃபெர்குஸன், முகமது ஷமி, வருண் ஆரோன் -முக்கிய வேகங்கள். ஸ்பின்னில் இருக்கிறார் டாப் மேன் ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்). ஆல்ரவுண்டர்கள் விஜய் ஷங்கர், ராஹுல் தெவட்டியாவும் கூடவே. பேட்டிங் ஷுப்மன் கில், ஹார்திக் பாண்ட்யா, (ஆஸ்திரேலிய) மேத்தியூ வேட் (Mathew Wade) என்று மையம் கொள்கிறது. லக்னோவில் ராஹுல், (தென்னாப்பிரிக்காவின்) குய்ண்ட்டன் டி காக், (வெஸ்ட் இண்டீஸின்) எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே ப்ரதானம். ஆல்ரவுண்டர்களாக ரஞ்சியில் சண்டைபோட்டுக்கொண்ட தீபக் ஹூடாவும், ஹார்திக்கின் அண்ணன் க்ருனால் பாண்ட்யாவும். வேகவீச்சு முக்கியமாக துஷ்யந்தா சமீரா (ஸ்ரீலங்கா) மற்றும் இந்திய அணியின் புதுவருகையான ஆவேஷ் கான் என இருவரின் கைகளில். ஸ்பின்னில் ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) தன் வேலையைக் காட்டுவார் என எதிர்பார்க்கலாம், எதிர் அணி ரஷீத் கானிடம் எதிர்பார்ப்பதைப் போல – கிட்டத்தட்ட.
ஹார்தீக் பாண்ட்யா இன்று பௌலிங் போடுவாரா என்பது ரசிகர்களின் மனதில் திண்டாடும் கேள்வி. அவருடைய கேப்டன்சி எப்படியிருக்கும் எனக் கவனிப்பதிலும் ஆர்வம் நிறையப்பேருக்கு. ஹார்தீக் vs ராஹுல் – கள வியூகங்களையும் கவனிப்போம்..!
**