இருக்கையில் இருக்கையில் . . .

நான் கடையனா
இருந்துவிட்டுப் போகிறேன்
கடைசி என்பதும்
ஒரு இருக்கைதானே
எண்ணில் என்ன இருக்கிறது
இருக்கைதானே முக்கியம்

***

ஆறாவது . . .

பஞ்ச பூதங்களால் ஆனது
இந்த உடல்
சரி
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உடலை
மனம் என்ற ஒன்று படுத்துகிறதே
அதை உருவாக்கிய
அந்த ஆறாவது பூதம்
எங்கே அது

கவிதை, நாவல் பற்றி…

”கவிதையைக் குறித்து எனக்கு சந்தேகம் உண்டு” என்கிறார்.ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகப்புகழ் பெற்ற நாவலான ‘போரும் அமைதி’யும் (War and Peace ) என்கிற நாவலிலும் நிறையப் பிழைகள் உள்ளன. அதைச் சரிகட்டும் பொருட்டுதான் அதில் பின்னுரை- ஒன்றல்ல, நான்கு இணைக்கப்பட்டுள்ளது. நாவலையும் எழுதி அதற்குப் பின்னுரையும் ஒருத்தன் எழுதினால் என்ன அர்த்தம்? என்பது அந்த தமிழ் எழுத்தாளரின் நியாயமான கேள்வி!

இப்படியெல்லாம் சொல்வது யார்? சமீபத்தில், தமிழக அரசின் ‘திரு.வி.க.’விருது’க்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழின் மூத்த படைப்பாளியான அசோகமித்திரன்தான் அவர். சில அருமையான நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழுக்குத் தந்தவர். வயதான காலத்திலும் எழுதுவதை இன்னும் தொடர்கிறார். தன் படைப்புகள் பற்றியும் இன்றைய எழுத்து பற்றியும் அவர் பேசுகிறார் ‘தி இந்து’ நாளிதழில் 25.1.14-அன்று வெளியாகி இருக்கும் நேர்காணலில். தெரிந்துகொள்ள வேண்டியவை அவரது இலக்கியம் சம்பந்தமான கருத்துகள்.

***
***

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ‘சாரல்’ விருது

தமிழின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான ‘சாரல்’ இலக்கிய விருது வழங்கப்படுகிறது என்பது தமிழ் வாசகர்களுக்கு வந்திருக்கும் ஒரு இனிமையான செய்தி. ஜேடி-ஜெர்ரி சகோதரர்களால் ஆண்டுதோரும் இலக்கிய சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, ரூ.50000/-மும், பதக்கம் ஒன்றும் கொண்டது. விருது வரும் ஜனவரி 25-ஆம்தேதி சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (அண்ணாசாலை, ஸ்பென்சர் ப்ளாசா எதிரில்) கவிஞருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ இலக்கிய விருதும் விக்ரமாதித்யனுக்கு கிடைத்திருக்கிறது.

கவிஞர் விக்ரமாதித்யன், திருநெல்வேலி தமிழுக்குத் தந்த நற்கொடை. இவரது 16-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளும், சிறுகதை, கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. ’இதயம் பேசுகிறது’, ‘தராசு’ போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்துள்ளார். சினிமா அனுபவமும் உண்டு இவருக்கு. பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைக்காரராக நடித்துள்ளார் விக்ரமாதித்யன்.

எழுத்தாளர் ஜெயமோகன் விக்ரமாதித்யனின் கவிதைகள் குறித்து இவ்வாறு தன் தளத்தில் எழுதுகிறார்: “அவரது கவிமொழி மிக நெகிழ்வானது, சரளமானது. உள்ளோடும் இசை கொண்டது. அதற்கேற்ப அடுக்கி வரும் சொற்களால் ஆனது. நீட்டிச்சொல்லும் பேச்சுத்தன்மை கொண்டது. அத்துடன் பெரும்பாலும் படிமங்கள் இல்லாமல், நேரடியான கவிக்கூற்றையே கவிதையாக முன்வைத்தார் விக்ரமாதித்யன். அதுவே அவரது கவிதைகளின் தனித்தன்மை.”

“நவீன கவிஞர்களில் மிகுந்த இயல்பெழுச்சியுடன் எழுதக்கூடிய சிலரில் கவிஞர் விக்ரமாதித்யனும் ஒருவர்…சமகாலத் தமிழ் வாழ்வின் சிக்கல்களும் அதில் அகப்பட்டுத் திணறும் மனதின் கோலங்களும் விக்ரமாதித்யனின் பாடுபொருட்கள்… எதார்த்தமானது, சமகாலத் தன்மையுடையது என்ற இரண்டு வரையறைகளால் விக்ரமாதித்யனின் கவியுலகை அடைந்துவிடலாம்” என்கிறார் தமிழின் இன்னொரு நவீனக் கவிஞரான சுகுமாரன்.

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

விக்ரமாதித்யனின் கவிதைகள் சில :

நகரம்

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
***

பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்

***

எது குறித்தும்
எனக்கொன்றும் வெட்கமில்லை
வெட்கப்பட
நானொன்றும் குழந்தையில்லை
வெட்கப்பட வேண்டியதும்
நானில்லை

நான்
பெய்யும் மழை
வீசும் காற்று
எரியும் தீ
வழங்கும் பூமி
கவியும் வானம்

இங்கே
இடங்கெட்டுக் கிடக்கலாம்
சூழல் நாறித் தொலைக்கலாம்
இயல்பு அழிந்திருக்கலாம்
தன்மை மாறியிருக்கலாம்
முறைமை திரிந்திருக்கலாம்

முட்டாள்களுக்கும்
முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும்
மனத்தையும்
முழுசாகக் காப்பாற்ற முடியாமல் போகலாம்

சுட்டு விரல் நீட்டி
கொட்டி முழக்கி
எத்தைக் காட்டி
வித்தகம் பேசுகிறீர்கள்
செத்தபிறகு
சிவனென்றும்
சுயம்புலிங்கமென்றும்
சொல்லிக்கொண்டிராதீர்கள்

எரிகிறபோதே
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு
நாலும் பேசும்தான்
நல்லது
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்…

***
நேசம்

அதிசயமாக இருக்கிறது
இன்னும்
அப்பாக்கள்
பையன்களைப்பற்றிக்
கவலைப்படுகிறார்கள்

ஆச்சரியமாக இருக்கிறது
இன்றும் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு
கூழ்வற்றல் போட்டுக்
கொடுத்தனுப்புகிறார்கள்

நம்பமுடியவில்லை
இன்றும்
வாசகர்கள்
கவிஞனைத் தேடிவந்து பார்த்துப் பேசுகிறார்கள்

அபூர்வமாக இருக்கிறது
இன்னும் வாடியமுகம் செருப்பில்லாத பாதங்களை
வகைக்கும் மனுஷர்கள் இருக்கிறார்கள்
மழைபொழிவதும் மண்ணில் விளைவதும் மக்களுக்கே

***
க” எழுத்து கவிதை

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
***

தமிழ் எழுத்தாளர்கள் தென்படும் டி.வி. நிகழ்ச்சிகள் !

இன்று மாலை தற்செயலாக வீட்டில் இருக்கையில், தமிழ்ச் சானல்களில் என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது எனப் பார்க்க, ஏனோ தோன்றியது. பார்த்தால் ‘சன்’னில் மனுஷ்யபுத்திரன் புதிய தமிழ்ப் புத்தகங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக விழாவை ஒட்டிய நிகழ்ச்சி. அது முடிந்தவுடன் டிவியின் கழுத்தை நெறித்துவிட வேண்டியதுதான் என நினைத்திருக்கையில் ஒரு ஆச்சரியம்போல் அடுத்து வந்தது பிரபல எழுத்தாளரின் இண்ட்ர்வியூ. சாருநிவேதிதா! அட! பொங்கல் சமயத்தில் தமிழ் எழுத்தாளர்களையும் அழைக்கலாம் என நமது சானல்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டதா! நடிக, நடிகைகளைக் கட்டிக்கொண்டு புலம்புவதுதானே ஜனரஞ்சகமான விஷயம். ம்ம்..ஏதோ தெரியாமல் காண்பிக்கிறார்கள் போல! அடுத்த அரை மணி ஒழுங்காகப் போகும்போலிருக்கிறதே.. பார்ப்போம் என ஆர்வமானேன்.

தமிழ்நாட்டவரின் காணாமற்போன வாசிப்புப் பழக்கம்பற்றிக் கவலைப்பட்டார் சாரு நிவேதிதா. தமிழனுக்கு இலக்கியப் படைப்புகளில் ஆர்வம் இல்லை. பிரபல எழுத்தாளர்களின் தமிழ்ப் புத்தகங்கள் 1000-2000 கூட விற்காத தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய அவரது வருத்தம் உரையாடலில் நன்கு தெரிந்தது. முகநூல் போன்ற நெட்வொர்க்குகளில் எழுதப்படும் தமிழ் சகிக்க முடியாததாக உள்ளது என்று சாடினார் சாரு. சும்மா ‘தமிழ்’, தமிழ்’ எனக் கூவிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. இளைஞரிடம் தமிழ் வளர ஏதாவது செய்யவேண்டும். தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களும் தமிழ் மொழிப் பாடத்தில் ஒரு தேர்வு எழுதி அதில் கட்டாயம் தேர்வாக வேண்டும் எனக் கொண்டு வர வேண்டும் என்கிற அவரது யோசனை, இன்றைய சூழ்நிலையில் அவசியம் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

அரைமணியில் அவசரம் அவசரமாக இந்த நேர்காணல் முடிக்கப்பட்டபோது, மனது தொடர்ந்து சிந்திக்கலானது. ஒரு விஷயம் மனதில் அப்போது தைத்தது. சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தாளர்களை நிகழ்ச்சிகளுக்கு டி.வி. சானல்கள் அழைக்கையில், 18-20 நிமிடம் என அவர்களுக்குக் கொடுத்தால் போதாது. இவர்களிடம் தமிழ் வாசகனுக்குச் சொல்வதற்கென நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அவற்றை சுவாரஸ்யமாக, தீர்க்கமாக சொல்லவும் இவர்களால் முடியும். ஒரு 45-நிமிடமாவது இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கப்பட்டால்தான், விளம்பர அவஸ்தைகளைத்தாண்டி, உருப்படியாக ஒரு 30 நிமிடமாவது இவர்களுக்கும், கேட்கும் வாசகர்/ ரசிகர்களுக்கும் கிடைக்கும். எப்போதாவதுதான் வரும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்குவது அவசியமானது.

ஆனால், இதைப் பற்றி எல்லாம் இந்தச் சானல்களுக்கு யார் சொல்வது? சொன்னால்தான் கேட்டுவிடப் போகிறார்களா என்ன?

***

சரக்கு இருந்தா….!

பழைய படம் ஒன்று-எம்.ஜி.ஆர் நடித்த ’குலேப காவலி’யா? அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து சீனில் ஒரு பாட்டு ; அதில் ரெண்டுவரி இப்படி வரும்: “சரக்கு இருந்தா அவுத்து விடு! இல்ல, சலாம் போட்டு ஓடிவிடு!..” ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும் இந்த உலகம் சரக்கு (அட! அந்த சரக்கை சொல்லலைப்பா!) இருப்பவர்களைத்தான் மதிக்கிறது. இப்போதெல்லாம் சரக்கு இல்லாத கேசுகளும் மக்களைக் குழப்பறதுக்குன்னே மேடைக்கு வந்துவிடுகிறதுகள். அதற்குத்தான் எச்சரிக்கை மேல்குறிப்பிட்ட வரிகளில். சரக்கு இல்லாமல், ஒரு திறமையும் இல்லாமல் அலட்டிக்கொள்பவனே, போதும் நீ காட்டிய அபத்தம்! உடனே இடத்தைக் காலிபண்ணு. போவதற்கு முன் இங்கு எவனிடம் திறமை தெரிகிறதோ அவனுக்கும், பார்த்துக்கொண்டிருக்கும் ஜனங்களுக்கும் ஒரு சலாம் போட்டு ஓடிவிடு என்கிறது இந்த உலகம். அது அப்படிச் சொல்வதும் சரிதான். இந்த சராசரிகளும், ’சராசரிக்குக் கீழ்’களும் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை.

இருந்தாலும் மேதமையை, உயர்திறமையை உடனே அடையாளம் காண்பதில்லை, அங்கீகரிப்பதில்லை, மதிப்பதில்லை இந்த சமூகம். வெறும் தோற்றத்தை வைத்து, ஏழ்மை, எளிமையைப் பார்த்து ஒரு கவிஞனை, கலைஞனை, திறனாளனை, மேதையை அது உதாசீனப்படுத்தப் பார்க்கிறது. பல உழைப்புகள், கஷ்டங்களைத் தாண்டி, மேடை ஏற இருப்பவனை, அவனுடைய திறனை வெளிப்படுத்துவதற்கு முன்னமேயே கேலி செய்து, கிண்டல் செய்து, அலட்சியப்படுத்தி சீனில் இருந்து அகற்றிவிடப் பார்க்கிறது. விரட்டி விட்டுவிட முயற்சிக்கிறது. இந்தத் தடங்கல்களையெல்லாம் தாண்டி ஒருவன் தன் திறமையை, மேதமையை நாலு பேருக்கு முன் வெளிப்படுத்திவிட்டால், முன்பு கேலிசெய்த அதே சமூகம் இப்போது தடுமாறுகிறது. தயங்குகிறது. பின் மெல்ல கைதட்ட ஆரம்பிக்கிறது. அதற்கப்புறம் ஒரே ஹீரோ ஒர்ஷிப் தான். அதிலும் நமது சமூகத்தை மிஞ்சும் அமைப்பு எங்கும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் இப்படி என்றில்லை. இந்த உலகமே இப்படித்தான். ஆனானப்பட்ட ஷேக்ஸ்பியரையே, அவரது மொழிவல்லமை, மேதமையை அறியாமல், ஓரங்கட்டி, குதிரை லாயத்தில் உட்கார்த்தியிருந்தது அவர் வாழ்ந்த சமூகம். பிழைப்பிற்கு எதை எதையோ செய்யவைத்தது. மொஸார்ட் போன்ற இசை மேதை எல்லாம் தங்கள் திறமை வெளிப்படும் உச்சகாலத்திலும், கவனிப்பாரன்றி, தெருவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, வாழ்வின் விளிம்பில் இருந்துகொண்டு, தன்னை மறந்து, தங்கள் தங்கள் கலையில் லயித்திருந்தனர். அவர்களது காலத்தில் அவர்களை, அவர்களிடம் குடிகொண்டிருந்த கலையை இனம் கண்டுகொண்டவர்களில்லை. கேலிசெய்யப்பட்டும், சமூகத்தால் பழிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தனர். அவர்களது மறைவுக்குப் பின் உலகம் தூக்கத்திலிருந்து விழித்ததுபோல், அவர்களையும், அவர்களோடு ஜீவித்திருந்த கலையையும் இனம் கண்டு கொண்டது. அவர்களைப் பாடியது…ஆஹா…என்றது. ஓஹோ.. என்றது. இது உலகின் இயல்பு.

நமது தமிழ்நாட்டில் கணித மேதை ராமானுஜன், மகாகவி பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பிரமிள், ஆத்மாநாம், வண்ண நிலவன் போன்றோரெல்லாம், வறுமை, வதைக்கும் துன்பம் எனக் கடினமான வாழ்க்கையிலும் தங்கள் மேதமையை, கலைத்திறனை உலகிற்குக் காட்டியவர்கள். எழுத்தன்றி, இசையன்றி, வேறு பல துறைகளிலும் வல்லுனர்கள், மேதைகள் உண்டு. கவிஞன், எழுத்தாளன், கலைஞன், மேதை என்பவனின் பாதை எப்போதும் கரடுமுரடாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக அவனது ஆரம்ப காலங்களில். இந்தமாதிரி வகையெல்லாம், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்தோ, நடுத்தர வர்க்கத்திலிருந்தோதான் பெரும்பாலும் வருகிறார்கள். சிலர் வயத்துப்பாட்டுக்கே வழியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களை அடித்துப்புரட்டி, புடம்போட்டு, புடம்போட்டு, மெல்ல மேடையை நோக்கி நகர்த்துகிறது. இவர்களில், வாழ்வின் அடிதாங்காமல் மனம் பிறழ்ந்தவரும், மேடையையே பார்க்காதவரும், குடத்திலிட்ட விளக்கென வாழ்ந்து, விலாசமின்றி மறைந்தவரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

என்றும் ஓயாத தொல்லை…

எது கிடைக்கவில்லையோ
அதுதான் அற்புதம்
அதுதான் வேண்டுமாம் இந்த மனசுக்கு

செய்வதற்கோ ஏதுமில்லை
சும்மா இருக்கவும் விட மாட்டேன்கிறது
என்னடா இது !
இதைக் கட்டிக் கொண்டு
இன்னும் எத்தனை நாள்தான் அழுவது

***

அந்த நிலா

நினைவலைகளில் நீந்திக் களைத்து
மனக் கண்களால் மாய்ந்து மாய்ந்து தேடி
உயிரெல்லாம் ஒடுங்கி நின்றபின்
ஒன்று மட்டும் தெளிவாய் ஒளிர்ந்தது
நான் ஒன்றுமே இல்லை என்பதும்
நீ மட்டுமே எல்லாம் என்பதும்
வானத்து வசீகர நிலவாய்
மனதில் குளிர்ந்து பிரகாசித்தது
***
(’அந்த நிலா’வும் ‘கதைக்குள் கதையாக’வும் காங்கோ தமிழர் மின்னிதழில் வெளியானது)

கதைக்குள் கதையாக

ஏகாந்தமான அதிகாலையில்
இரவு சிணுங்கும் வேளையில்
சேவல் கூவுவதைக் கேட்பது ஒரு அனுபவம்
பிறிதொரு தருணத்தில் பிரியமான நேரத்தில்
குயில் கூவுவதும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்பும் தனித்தனி அனுபவம்
அனுபவம் என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான்
எந்த அனுபவம் எப்போது யாருக்கு நிகழும்
அனுபவித்தவனிடத்தில் அது எதனை நிகழ்த்தும்
என்னவெல்லாம் அவனுக்குக் கொண்டுவரும்
யாருக்கய்யா இதெல்லாம் தெரியும்..?

இருத்தலின் நிதர்சனம்

கூச்சம் தயக்கம் செயலின்மை

இவற்றின் ஒட்டு மொத்தக் கூட்டு நான்

இந்தக் கூட்டல் கழித்தல் உலகில்

அவசர ஆரவாரப் பிரதேசத்தில்

செய்வதற்கு ஒன்றுமில்லை எனக்கு

இருந்தும் இருக்கிறேன்

இருக்குமாறு

பணிக்கப்பட்டிருப்பதால்

***