கிரிக்கெட்: ஆஸ்திரேலியா மீண்டும் உலக சேம்பியன்

மாதகாலமாக மனதை ஆக்ரமித்திருந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் நேற்று(29-03-2015) மெல்போர்னில்(Melbourne Cricket Grounds, Australia) முடிவுக்கு வந்தது. எத்தனையோ கணிப்புகள், யூகங்கள், எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி, ஆஸ்திரேலியா 5-ஆவது முறையாக உலக சேம்பியன் ஆகிவிட்டது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டி ஒரு லீக் மேட்ச் போல ஆனது ஏமாற்றமே. முதலில் ஆட ஆரம்பித்த நியூஸிலாந்தின், வேகமாக ரன் குவிப்பதற்கு பேர்போன ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) வழக்கம்போல்தான் ஆட முயற்சித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchel Starc) அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தார். His nagging stump-to-stump express deliveries told a different story. அவரை வழக்கம்போல் அடித்து விளையாட முயற்சித்த மெக்கல்லம் முதல் ஓவரிலேயே க்ளீன் போல்ட். இதுவே நியூஸிலாந்தின் ஆரம்ப அதிர்ச்சி. அடுத்துவந்த கேன் வில்லியம்ஸன் (Kane Williamson) விளையாடுகிற மூடிலேயே இல்லை போலிருந்தது. விரைவில் 2 விக்கெட்டுகளை இழந்தும் மார்ட்டின் கப்ட்டிலும் (Martin Guptill) முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும்(Ross Taylor) கவனமான ஆட்டம் ஆட ரன்கள் ஒரு வழியாக வர ஆரம்பித்தன. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹாசல்வுட்(Josh Hazlewood) என பௌலிங்கை ஆரம்பித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க்ளார்க் (Michael Clarke), வேகமாகக் கைவசம் இருந்த பௌலிங் ஆயுதங்களை மாற்றி மாற்றி உபயோகப்படுத்தினார். மிட்செல் ஜான்சனும்(Mitchel Johnson), ஸ்பின்னர் க்ளென் மேக்ஸ்வெல்லும்(Glen Maxwell) விரைவில் இறக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை ஆரம்பமுதலே இறுக்க ஆரம்பித்தது. மேக்ஸ்வெல்லின் சாதாரண, ஸ்பின் ஆகாத முதல் பந்தை கேஷுவலாக அடிக்கப்போய் க்ளீன்போல்ட் ஆனார் துவக்க ஆட்டக்காரரான கப்ட்டில். நம்பிக்கை நட்சத்திரமான க்ராண்ட் எலியட்(Grant Elliott) களமிறங்கினார். தடுமாறிய நியூஸிலாந்தை, டெய்லருடன் சேர்ந்து விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தார். நிதானமான சிங்கிள்களும், அவ்வப்போது நல்ல ஷாட்டுகளுமாக ஆடி ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆஸ்திரேலிய பௌலர்களின் திறமையைத் தன் சாதுர்யமான பேட்டிங்கினால் மழுங்கச்செய்து தான் யார் என்பதை நிறுவி வந்தார் எலியட். டெய்லருடன் சேர்ந்து 110 ரன் என நியூஸிலாந்துக்கு ஒரு கௌரவமான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். Grant Elliot was the only saving grace for New Zealand.

டெய்லர் 40 ரன்களில் அவுட் ஆனவுடன் நியூஸிலாந்துக்குத் வரப்போகும் சோகமுடிவின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. அதிரடியாக ஆடி நியூஸிலாந்தை மீட்கவேண்டிய கோரி ஆண்டர்சனும்(Corey Anderson), ல்யூக் ரோன்க்கியும் (Luke Ronchi) மைதானத்துக்கு வந்தார்கள். ஸ்கோர்போர்டில் முட்டையிட்டு வெளியேறினார்கள். பின்னே நியூஸிலாந்து எப்படி ஆஸ்திரேலியாவைச் சமாளிக்கமுடியும்? பொறுமையுடன் சிறப்பாக விளையாடிய எலியட்டின் விக்கெட்டையும் ஆஸ்திரேலியா ஒருவழியாக வீழ்த்தியது. அவர் 82 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அணிக்குத் தன் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அவர் மட்டும் போதுமா உலகக்கோப்பையை வெல்ல? துண்டைக்காணோம், துணியைக்காணோம் என மற்றவர்கள் ஓட, நியூஸிலாந்து 183-ல் ஆல் அவுட். ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் ஃபாக்னர்(James Faulkner) சிறப்பாக பந்து வீசினார்கள்.

இப்போது ஆஸ்திரேலியாவின் கண்களுக்கருகில் உலகக்கோப்பை தெரிய ஆரம்பித்தது. கொஞ்சம் நிதானமாக ஆடினால் போதும். அதை அவர்கள் செய்தார்கள். நியூஸிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லத்தைப்போல, ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்சும் (Aaron Finch) பூஜ்யத்தில் காலியானார். ஆனால், நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), மேட் ஹென்றி (Matt Henry) சிறப்பாக பந்துவீசியும் வார்னர் 45, கேப்டன் க்ளார்க் 74 என எடுத்துவிட்டனர். ஆஸ்திரேலியாவின் most reliable No.3-ஆன ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) நிதானத்தின் அளவுகோல். பொறுமையாக நின்று ஆடி, ஆஸ்திரேலியாவை வெற்றிபீடத்திற்கு அழைத்துச்சென்றார். 3 பவுண்டரிகளே அடித்து 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாதிருந்தார் அவர்.

உலகக்கோப்பையின் ஃபைனல் மேட்ச், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அதற்கு, எதிர்த்து விளையாடிய நியூஸிலாந்து தாக்குதல் ஆட்டத்தை வழக்கம்போல் வெளிப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அந்த அணியில் 4 பேட்ஸ்மன்களால் பூஜ்யத்தைத் தாண்டமுடியவில்லை. உலகக்கோப்பை ஃபைனலில், ஒரு அணியில் 4 பேர் ’டக்’-அடித்தால் விளைவு என்னாகும்? அதுதான் நடந்தது. அதிகம் முயற்சி செய்யவேண்டிய, சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, கோப்பையை அபேஸ் செய்தது ஆஸ்திரேலியா! ஃபைனலில் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர் அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பையின் தொடர்நாயகன்: வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா).

இந்த உலகக்கோப்பை மீண்டும் நிறுவியிருப்பது தொழில்பூர்வ அணுகுமுறைக்கு, கடும் பயிற்சி, உழைப்புக்கு என்றும் வெற்றிதான் என்பதே. Australia was the most hard-working professional team that was fully focused on winning the Cup. Most deservedly, it has won. சிறப்பான அணியைத் தேர்வு செய்து, தீவிரமாக வெற்றியை நோக்கி உழைத்த, தகுதிமிகுந்த அணியான ஆஸ்திரேலியா வெற்றிக்கனியை சுவைத்தது. நியாயமான நிகழ்வு.

கிரிக்கெட் உலகக்கோப்பை 2015, பல சாதனைகளை முன்வைத்தது. முதன்முறையாக உலகக்கோப்பையில் இரட்டை சதம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு. க்ரிஸ் கேல் (Chris Gayle)(வெஸ்ட் இண்டீஸ்), மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill)(நியூஸிலாந்து). உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மன்: மார்ட்டின் கப்ட்டில் (நியூஸிலாந்து). அதிகபட்சமாக ஒரு பௌலர் வீழ்த்திய விக்கெட்டுகள் 22. சாதனையில் இருவர் பங்குகொள்கின்றனர்: மிட்செல் ஸ்டார்க் (Mitchel Starc) (ஆஸ்திரேலியா), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult)(நியூஸிலாந்து). ஒரு ஃபீல்டரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச கேட்ச்சுகள்: 9 – ரிலீ ரொஸ்ஸோ (Rilee Rossouw) தென் ஆப்பிரிக்கா). பேட்ஸ்மன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்: 26 – க்ரிஸ் கேல்(வெஸ்ட் இண்டீஸ்). ஒருமேட்ச்சில் ஒரு பௌலர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் (10ஓவர்களில்): 7 – டிம் சௌதீ (Tim Southee) (நியூஸிலாந்து). இப்படி நிறைய.

இன்னும் நாலு வருடங்களுக்குப்பின் 2019-ல் வரவிருக்கிறது அடுத்த கிரிக்கெட் உலகக்கோப்பை. நிகழவிருப்பது இங்கிலாந்தில். இந்த உலகக்கோப்பையில் சிறு நாடுகளான (Non-Test playing countries or Associate Members of ICC) அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து போன்ற அணிகளைத் தவிர்க்கவேண்டும்– அதாவது, டெஸ்ட் விளையாடும் 10 வலுவான அணிகள் மட்டுமே உலகக்கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படவேண்டும்- என ஒரு கோரிக்கை, சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலில் விவாதிக்கப்படவுள்ளது. அடுத்த நான்காண்டுகளில், சர்ச்சைக்குரிய ஃபீல்டிங் ரூல் உட்பட சில முக்கியமான விளையாடுமுறை மாற்றங்களும் ஏற்படலாம்.

இந்தியாவும், அடுத்த உலகக்கோப்பைக்கான தீவிர முயற்சிகளில் இப்போதிலிருந்தே இறங்குவது நல்லது. வேகப்பந்துவீச்சுக்கு உகந்த க்ரீன் பிட்ச்சுகள் (green pitches), புதிய, திறமைமிகுந்த வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு, அவர்களுக்கான தொழில்ரீதியான பயிற்சிகள் (professional training facilities) என இந்திய கிரிக்கெட் போர்டு இப்போதிலிருந்தே முனையவேண்டும். தகுந்த ஏற்பாடுகள் மாநில அளவில் செய்யப்படவேண்டும். Long term plans and efficient implementation and execution would be of paramount importance. சரியான தேர்வு, தீவிரப் பயிற்சி, தொழில்பூர்வ அணுகுமுறை (professional approach)- இவற்றிற்கு மாற்று வேறு ஏதுமில்லை.

**

உலகக்கோப்பை: இந்தியா இல்லாத ஃபைனல்

மெல்போர்னில் 29-3-2015-ல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி. இந்தியா இல்லாத ஆட்டம். நிலவில்லா வானம்போல, கனியில்லா மரத்தைப்போல! இது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் சுற்றுப்புறத்திலிருக்கும் எண்ணற்ற இந்திய / இந்திய வம்சாவளி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாரத் ஆர்மி போன்ற இந்திய ரசிகர் அமைப்பினர் ஏகப்பட்ட டிக்கெட்டுகளை இருப்பில் வைத்துக்கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருப்பார்கள். என்ன செய்வது இந்திய அணியின் ஒரு மோசமான தினம் ரசிகர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

சரி, இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கும் இரு பெரும் அணிகளைக் கொஞ்சம் பார்க்கலாம். ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா. பௌலிங், பேட்டிங், ஃபீல்டிங் மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் most professional team. Presently, Cricket’s most feared team. அணியின் பலம் என பௌலிங்கைக் குறிப்பாகச் சொல்லலாம். மிட்ச்செல் ஸ்டார்க்(Mitchel Starc), ஜோஷ் ஹாசல்வுட்(Josh Hazzlewood), மிட்ச்செல் ஜான்சன்(Mitchel Johnson), ஜேம்ஸ் ஃபாக்னர்(James Faulkner), ஷேன் வாட்சன்(Shane Watson) என துல்லியமும்(accuracy) வகைமையும்(variety) வெகுவாகக் காட்டும் வேகப்பந்துவீச்சாளர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை. போதாக்குறைக்கு, மைதானம் ஸ்பின் எடுக்குமானால், பந்துபோடுவதற்குத் தோதாக க்ளென் மேக்ஸ்வெல்(Glen Maxwell), ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) போன்ற part-time but, effective Spinners. பேட்டிங்கில் டேவிட் வார்னர்(David Warner), மேக்ஸ்வெல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அணியின் சிறப்பு அம்சம். ஒருவேளை விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாற நேர்ந்தாலும், நிதானமாக அணியை அழைத்துச்செல்லும் திறனுடைய, ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் க்ளார்க், ஷேன் வாட்சன் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் உண்டு. பௌலர்களில் ஸ்டார்க், ஜான்சன், ஃபால்க்னர் திறமையாக, தேவைப்பட்டால் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய வல்லவர்கள். இன்னுமொரு சிறப்பம்சம்: அணியில் கிட்டத்தட்ட அனைவரும் சிறந்த ஃபீல்டர்கள். இப்படியொரு அணி இருக்கையில் அது ஃபைனலில் வராதிருக்க முடியுமா? இத்தகைய அணியிடம்தான் இந்தியா தோற்றது.

அந்தப் பக்கம் நிற்பது இன்னொரு host-ஆன நியூஸிலாந்து அணி. பல முயற்சிகளுக்குப்பின் முதன் முறையாக உலகக்கோப்பையின் ஃபைனலில் முகம் காட்டியிருக்கிறது. நியூஸிலாந்து இதுவரை உலகிலுள்ள சுமாரான கிரிக்கெட் அணியாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக நிலைமை மாறி, நியூஸிலாந்து டீம் குறிப்பாக ஒரு-நாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடிவருகிறது. நல்லதொரு பேட்டிங், பௌலிங் காம்பினேஷனோடு நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டிகளுக்கேற்றபடி செட்டாகி உள்ளது. கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) உலகக் கிரிக்கெட்டின் சிறப்பான அதிரடி வீரர்களில் ஒருவர். க்ரிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ்(AB de Villiers), மேக்ஸ்வெல்(Maxwell) வகை. கூடவே அவருடன் ஆட்டத்தைத் துவக்கும் மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptill) நிதானமான துவக்கத்தைத் தரும் அனுபவ வீரர். நிலைமைக்கு ஏற்றபடி, அதிரடிக்கு மாறும் திறமை உண்டு. மிடில் ஆர்டரில் வரும் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர், க்ராண்ட் எலியட்(Grant Elliott, hero of the first Semi-final) ஆகியோர் திறன்மிகுந்த ஆட்டக்காரர்கள். டீமின் பின்ச் ஹிட்டராக(Pinch hitter) வருபவர் கோரி ஆண்டர்சன்(Corey Anderson). அணிக்குத் தேவைப்படுகையில் மிதவேகப் பந்துவீச்சாளராகவும் பயன்படுபவர். மிகவும் துல்லியமாக யார்க்கர்கள்(Yorkers) போட்டு கதிகலங்கவைக்கும் பௌலர் டிம் சௌதீ (Tim Southee). (உலகக்கோப்பையின் லீக் மேட்ச்சில் 7 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தின் முதுகெலும்பை முறித்த ஆசாமி ). அணியின் தலைசிறந்த ஸ்விங் பௌலர் ட்ரெண்ட் போல்ட்(Trent Boult). இவரை எதிர்த்து பேட் செய்வது எதிரணியின் பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம். இவர்களோடு, கைலி மில்ஸ், (Kyle Mills), மைக்கேல் மேக்லெனகன் (Michel Mccleneghan) ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் துணை. மேட்ச்சின் இக்கட்டான நிலையிலும் தன் அனுபவமிக்க, கட்டுப்பாடான சுழல்வீச்சினால் விக்கெட்டுகளை சாய்க்கும்/ ரன்களைக் கட்டுப்படுத்தும் திறனுடையவர் டேனியல் வெட்டோரி(Daniel Vettori). ஃபீல்டிங்கிலும் நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு சளைத்தவர்கள் அல்ல. டாப்கிளாஸ். வேறென்ன தகுதி வேண்டும், உலகக்கோப்பையை வெல்வதற்கு என்றுதான் நியூஸிலாந்து ரசிகர்கள் கேட்பார்கள்.

கிட்டத்தட்ட சம அளவு எதிரிகள் போல் இரு அணிகளும் தென்பட்டாலும், ஆஸ்திரேலிய வீரர்களிடம் தங்களை யாராலும் வெல்லமுடியாது என நினைக்கும் அளவிற்கு, overconfidence பரவலாகத் தென்படும் குணங்களில் ஒன்று. நியூஸிலாந்து போன்ற துடிப்பான வீரர்களைக்கொண்ட, உத்வேகமிக்க டீமுக்கெதிராக ஆஸ்திரேலியாவைக் கவிழச்செய்யும் மனப்போக்குதான் இது.

இன்னொரு விஷயம். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா பார்த்து அலுத்துப்போன நியூஸிலாந்து அல்ல இப்போதிருப்பது. This New Zealand is for real. முதல் 10 ஓவர்களிலேயே தன் அசுரவேக பேட்டிங்கினால் எதிரியைக் கதிகலங்கவைக்கும் மெக்கல்லத்தை ஒரு 15-16 ஓவர்களுக்குள் ஆஸ்திரேலியா எடுக்காவிட்டால், ஆஸ்திரேலியாவின் வீர சரித்திரம் ஒரு முடிவுக்குக்கொண்டு வரப்படும். நியூஸிலாந்தின் போல்ட்-சௌதீ-வெட்டோரி தாக்குதலை ஆஸ்திரேலியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்தது இறுதிப்போட்டியின் கதி. தன் ஒட்டுமொத்த திறமையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா விளையாடும் எனினும், உள்ளுணர்வு ஏதோ சொல்வது போல் தோன்றுகிறதே.. உலகக்கோப்பை நியூஸிலாந்தின் கைகளில்தான் ஜொலிக்கப்போகிறது என்பதுபோல்..! யார் கண்டார்கள், ஒருவேளை அப்படி இல்லாமலும் போகலாம். என்ன அவசரம்.This is cricket’s premier international event. ஒருநாளுக்கும் குறைவான அவகாசம்தானே..பொறுத்திருப்போம், நடக்கப்போவதை ரசித்துப் பார்த்திடுவோம். நாமெல்லாம் கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டின் மஹா மஹோ ரசிகர்களல்லவா!

**

கிரிக்கெட் செமிஃபைனல்-2: இந்தியாவின் வெளியேற்றம்

26-3-2015. சிட்னி (Sydney, Australia). உலகக்கோப்பை இரண்டாவது செமி ஃபைனல் ஆஸ்திரேலியா-இந்தியா. எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது? இன்று இந்தியாவின் நாள் இல்லை. தோனி டாஸ் தோற்றவுடனே அது கிட்டத்தட்டத் தெரிந்துவிட்டது. டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் இந்தியா செய்திருந்தால் கதை வேறாகியிருக்கலாமோ என்னவோ?

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை வேகமாக இழந்தாலும், ஆரோன் ஃபின்ச்(Aaron Finch), ஸ்டீவ் ஸ்மித்தின்(Steve Smith) திறமையான ஆட்டத்தில் நங்கூரம் பாய்ச்சியது. நமது வேகப்பந்துவீச்சாளர்களின் திறமை எங்கே போனது திடீரென்று? ஸ்மித் சதமடித்துவிட்டார். அவர் அவுட் ஆகையில் ஸ்கோர் 198-க்கு 2 என்றிருந்தது. 350-ஐத் தாண்டுமோ என்கிற அச்சம் அப்போதே இருந்தது. ஆயினும் யாதவும் அஷ்வினும் நன்றாகப் பந்துபோட்டதில் நடுவிலே விக்கெட்டுகள் விழுந்தன. இருந்தும் ஃபின்ச் 81, மற்றவர்கள் ஆங்காங்கே 20-களாகத்தட்டித்தட்டி, ஆஸ்திரேலியாவை 328 வரை கொண்டு சென்றுவிட்டனர்.

இந்தியாவுக்கு 329 என்பது சவாலான இலக்குதான். ஆனாலும் கடுமையாக முயன்றிருந்தால் நமது இளம் வீரர்களால் அடைய முடியாத ஒன்றல்ல. ஆனால் என்ன நடந்தது? 75 ரன் துவக்க பார்ட்னர்ஷிப் கிடைத்தும், தவன், ரோஹித்தின் வீழ்ச்சிக்குபின் ஆட வந்த முக்கிய ஆட்டக்காரர்களான கோஹ்லி, ரெய்னா வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 108 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. ஏகமாகக் கூடியிருந்த ரசிகர்களின் முகத்தில் சோகம் அப்ப ஆரம்பித்தது. கேப்டன் தோனியும், ரஹானேயும் அதிஜாக்ரதையாக விளையாடி, நிலைமையைச் சீர்திருத்த முயன்றார்கள். ரஹானேயை ஸ்டார்க் (Starc) 44 ரன்களில் எடுத்துவிட்டார். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த தோனி 65 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானது, அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் இன்று இல்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்தது. அடுத்து வந்த 5 இந்திய பேட்ஸ்மென் எப்போது க்ரீஸுக்கு வந்தார்கள்? என்னதான் செய்தார்கள்? என்ன ஆகிவிட்டது இந்த டீமுக்கு? 233-ல் இந்தியா ஆல் அவுட். உலகக்கோப்பையின் ஃபைனலில் நியூஸிலாந்தை சந்திக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. (தோனி மட்டும்தான் எடுத்தார் அரைசதம். தவன், ரோஹித், ரஹானே நல்ல ஸ்கோருக்கு முயற்சி செய்தனர் எனலாம்.ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை).

எவ்வளவு முக்கியமான கட்டத்தில் எப்படி ஒரு தோல்வி? எங்கே போய்ச் சொல்வது இந்த வேதனையை? இந்த உலகக்கோப்பையில் வரிசையாக 7-க்கு 7 ஜெயித்த அணிதானா இது? போயும் போயும் இந்த அகங்காரம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவா இப்படி மோசமாக ஆடவேண்டும்? என்ன ஒரு துரதிர்ஷ்டம்?

இந்தியாவிலும், உலகெங்கிலும் இருக்கும் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தங்கள் அணி செமி ஃபைனலில் தோற்றுவிட்டது என்பது எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். இருந்தும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்; பதற்றத்திலிருந்து விலகி, நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். மஹேந்திர சிங் தோனியின் மிகச் சிறந்த தலைமையில், அணிவீரர்களின் ஒட்டுமொத்த உழைப்பில், 8 மேட்ச்சுகளில் 7-ஐ வென்றிருக்கிறது இந்தியா என்கிற உண்மையை யாரேனும் அலட்சியப்படுத்த முடியுமா? எந்த வெற்றியும் எளிதில் கிடைத்ததல்லவே? உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றல்லவா இது.

வெற்றி, தோல்விகள், விளையாட்டிலும், வாழ்விலும் சகஜமே. எக்கச்சக்கமான தருணத்தில், தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டதால் ஒரு அயர்வு, சோர்வு வரும்தான். இருந்தும், தளர்ந்து உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. இந்திய வீரர்கள் மேலும் மேலும், தங்களைக் கடின பயிற்சியினால், உழைப்பினால் மேம்படுத்திக்கொள்ளட்டும். கொஞ்சகால இடைவெளிக்குப் பின், வெற்றி தேவதை அவர்களை மீண்டும் சந்திக்கும்.

சீரிய ரசனையையுடைய கிரிக்கெட் ரசிகர்களே, 29 மார்ச் அன்று, சிறப்பான இறுதிப்போட்டியை நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் விருந்தளிக்கும் என எதிர்பார்ப்போம்.

**

கிரிக்கெட்: ஃபைனலில் நியூஸிலாந்து

ஆஹா! What a match! கடைசியில் அந்த ஒரு நிமிஷம், அந்த ஒரு பந்து, தன் வேலையைச் செய்து காட்டிவிட்டது. நியூஸிலாந்தின் கனவை மேலே மேலே தழைக்கச் செய்தது. தென்னாப்பிரிக்காவின் கனவுலகில் இடியாய் இறங்கியது. நவீன விளையாட்டின் இரு எதிர்முகங்கள் இவைதான்: ஒன்று ஏங்கவைக்கும் எழில்முகம். இன்னொன்று கிழித்துத் தொங்கவிடும் கோரமுகம்.

24 மார்ச், 2015. நியூஸிலாந்தின் ஆக்லண்ட் (Auckland) மைதானம். நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா –இரண்டு அணிகளும் முதன்முறையாக உலகக்கோப்பை ஃபைனலில் காலடி எடுத்துவைக்க, முனைப்போடு போட்டிபோட்ட செமிஃபைனல் விளையாட்டு. ஆரம்பத்திலேயே அழுத்தம் அலை அலையாக இரு அணிகளின் மீதும் ஏறுவது தெரிந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா தடுமாற, துவக்க ஆட்டக்காரர்களை ஒவ்வொருவராய் விரைவிலேயே இழந்தது. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) இருவரையும் காலி செய்தார். டூ ப்ளஸீயும்(Faf du Plessis), ரொஸ்ஸொவும் (Rossouw) மேற்கொண்டு நஷ்டமின்றி நிதானமாக ரன் சேர்த்தனர். ரொஸ்ஸொ 39-ல் அவுட்டாக, கேப்டன் டி வில்லியர்ஸ்(AB de Villiers) களத்தில் இறங்கினார். அவரும் டூப்ளஸீயும் சோர்ந்துபோயிருந்த ரன் விகிதத்தை உசுப்பி உயர்த்திச்சென்றனர்.

பாழாய்ப்போன மழை இடையிலே வந்து தன் விளையாட்டைக் காண்பித்தது. பொன்னான நேரத்தைத் தின்றது. ஆட்டம் மீண்டும் துவங்கியபின் ஆட்டமிழந்தார் டூ ப்ளஸீ. 107 பந்துகளில் 82 ரன். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்(David Miller) 18 பந்துகளில் 49 என உச்சத்துக்குச் சென்றார்(3 சிக்ஸர், 6 பௌண்டரி). ஆனால் உடனே அவுட்டும் ஆனார். டி வில்லியர்ஸ் அடுத்த முனையில் அபாரமாக ஆடினார். அவர் 65 ரன் எடுத்து அவுட் ஆகாதிருந்த நிலையில், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் (மழையினால் நேரம் வீணானதால்), 43-ஓவர்களில் அம்பயர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள். கோரி ஆண்டர்சன் (Corey Anderson) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டத்தின் நடுவில் மழைவந்து ரகளை செய்தால், நவீன கிரிக்கெட்டின் தலைவிதியான டக் வொர்த்/லூயிஸ் (Duckworth/Lewis) விதி உடனே தலைவிரித்து ஒரு ஆட்டம் போடும். அந்த விதிப்படி, நியூஸிலாந்து வெற்றிக்கு 298 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 298-ஐ நோக்கிய தன் கடும், நெடும் பயணத்தை வேகமாகத் தொடங்கியது நியூஸிலாந்து. கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லத்தின் (Brendon McCullum) ஃபிலாசஃபி இது: முதல் 10 ஓவரிலேயே வருவது வரட்டும்; போட்டுச் சாத்து ! இந்த முக்கியமான மேட்ச்சிலும் அவரது தத்துவத்தில் தொய்வில்லை. நியூஸிலாந்து முதல் 5 ஓவர்களில் 71 ரன் என சீறிப் பாய்ந்தது. தென்னாப்பிரிக்க பௌலர் டேல் ஸ்டேனுக்கு(Dale Steyn) செம அடி! அவருடைய ரெப்யுடேஷன் தூள்..தூள். 26 பந்துகளில் 59 ரன்கள்(8 பௌண்டரி, 4 சிக்ஸர்) என உறுமிய மெக்கல்லம் அவுட்டானதும், ரன் விகிதம் சரிந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன், ஸ்பின், வேகம் என பௌலர்களை மாற்றி, மாற்றித் தாக்க போன மேட்ச்சில் இரட்டை சதம் அடித்த கப்ட்டில் (Guptill), வில்லியம்சன், டெய்லர் என நியூஸிலாந்து விக்கெட்டுகள் விறுவிறுவென நடையைக் கட்டின.

இந்த நிலையில் மைதானத்தில் இருந்தார் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் க்ராண்ட் எலியட்(Grant Elliott). கொஞ்ச வருடங்களாக இவரை நியூஸிலாந்து மறந்துவிட்டிருந்தது. 36 வயதான இவரை நியூஸிலாந்து செலக்டர்கள் திடீரென நினைவில் கொண்டுவந்து, தேர்ந்தெடுத்து உலகக்கோப்பைக்கு அனுப்பிவைத்தார்கள். தென்னாப்பிரிக்காவில் பிறந்து, நியூஸிலாந்தைத் தன் புகுந்தவீடாக மாற்றிக்கொண்டவர் எலியட். நியூஸிலாந்திற்கான தன் நன்றிக்கடனைக் காட்ட இந்த நாளைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார் போலும். விக்கெட்டுகள் பறிபோய்க்கொண்டிருந்த நிலையிலும் நிதானம் இழக்கவில்லை. அவ்வப்போது கவனமாக ஷாட்டுகளையும் விளையாடி ரன் சேர்த்தார். அதிரடிவீரரான ஆண்டர்சனுடன் சேர்ந்து 103-ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து தொய்ந்துகொண்டிருந்த நியூஸிலாந்தின் இன்னிங்ஸைத் தூக்கி நிறுத்தினார் எலியட்.

ஆயினும் ஓவர்கள் குறைந்துகொண்டே வந்தன. தென்னாப்பிரிக்கா பிடியை இறுக்க முயன்றது. டென்ஷன் தீயாகப் பத்திக்கொண்டு போனது. அதிஅழுத்தத்தின் காரணமாக தென்னாப்பிரிக்க வீரர்கள் எளிதான கேட்ச்சுகளை, ரன்–அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டார்கள். ஆண்டர்சனை ரன் -அவுட் செய்யும் அரிய வாய்ப்பை டி வில்லியர்ஸே டென்ஷனால் நழுவவிட்டார். இடையிடையே அனல் பறக்கும் அருமையான ஃபீல்டிங்குகளையும் தென்னாப்பிரிக்கர்கள் நிகழ்த்தினர். பௌண்டரிக்குப் பறக்கும் பந்துகள் பாய்ந்து நிறுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்க வீரர்களிடம் எப்படியும் ஜெயித்துவிடவேண்டும் என்கிற உத்வேகம் நெருப்பாய்க் கனன்றது. நியூஸிலாந்தும் விடுவதாயில்லை. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கும் சரிசம எதிரிகள். விடாக்கண்டன் Vs கொடாக்கண்டன்!

நியூஸிலாந்து தட்டுத்தடுமாறி இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கையில் கோரி ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த ரோன்க்கியும்(Ronchi) உடனே அவுட் ஆக, டேனியல் வெட்டோரி (Daniel Vettori) க்ரீஸில் வந்து இறங்கினார். ஒரு மலையைப்போலே ஒருபக்கம் நின்று, பெரும் பொறுமை காட்டி சாதுர்யமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தார் எலியட். கடைசி ஓவர் வந்தது. டேல் ஸ்டேனிடம் பந்தைக்கொடுத்தார் டி வில்லியர்ஸ். புத்திமதி சொன்னார். 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்கவேண்டும் நியூஸிலாந்து. ஒரு பந்தை வெட்டோரி பின்பக்கம் தட்டிவிட பௌண்டரி. அப்புறம் சிங்கிள்கள். ஐயோ, இன்னும் இரண்டே பந்துகள். எடுக்கவேண்டிய ரன்கள் 5. மைதானமே நாற்காலியைவிட்டு எழுந்துகொண்டது. நியூஸிலாந்தால் முடியாதோ? தென்னாப்பிரிக்கா ஜெயித்து ஃபைனலில் நுழைந்துவிட்டது போலிருந்தது. ஸ்டேனிடமிருந்து விதியைத்தாங்கி வேகமாக இறங்கியது 5-ஆவது பந்து. வாழ்வா? சாவா? உயிரையே வெறுத்து அந்தப் பந்தைத் தூக்கி அடித்துவிட்டார் நியூஸிலாந்தின் எலியட். பந்து பேட்டின் மத்தியில் பட்டு புஸ்வானமாகச் சீறியது. மைதானத்தைத் தாண்டி சிக்ஸர் என்றது. ஸ்டேடியத்துக்குள் நியூஸிலாந்தின் மத்தாப்பாய் மலர்ந்தது! நியூஸிலாந்து 299. 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார, அபூர்வ வெற்றி. ஆட்டநாயகன் க்ராண்ட் எலியட் 84 ரன்னெடுத்து அவுட் ஆகாதிருந்தார். (7 பௌண்டரி, 3 சிக்ஸர்).

களிப்பு, கொண்டாட்டம், நியூஸிலாந்துக்கு. தென்னாப்பிரிக்க வீரர்களோ துவண்டுபோய் மைதானத்திலேயே சுருண்டு கிடந்தனர். கடைசி பந்தை வீசிய ஸ்டேன் தலையில் கைவைத்து தரையில் விழுந்துவிட்டார். வெற்றி ஷாட்டுக்குப்பின் கூட்டத்தை நோக்கிக் கையசைத்த எலியட், ஆறுதலாக பௌலர் ஸ்டேனின் தோளில் தட்டிக்கொடுத்தார். மோர்னீ மார்க்கெல்(Mornie Morkel) கண்கலங்கி இடிந்துபோயிருந்தார். கேப்டன் டி வில்லியர்ஸின் கண்கள் சிவந்திருந்தன. முகம் வாடிப்போயிருந்தது. பேசுவதற்கு சிரமப்பட்டார். என்ன போராடி, எப்படியெல்லாம் விளையாடி என்ன பயன்? ஃபைனலுக்குப் போக முடியவில்லையே!

கிட்டத்தட்ட ஃபைனல் என அழைக்கத்தக்க விறுவிறுப்பான ஆட்டம். Two well-matched teams at each other’s throat! Cricket drama at its explosive best. இரு அணிகளும் தீவிரமாய்ப் போராடினார்கள். தங்கள் அணிக்குத்தான் வெற்றி எனப் பெரும் முயற்சி செய்தார்கள். இருந்தும் ஒரு அணிதானே இறுதிப்போட்டிக்குச் செல்லமுடியும்? நியூஸிலாந்து, இதற்குமுன் உலகக்கோப்பையில் 6 முறை செமி-ஃபைனலுக்கு வந்தும் மேலே முன்னேற முடியாத அணி, இந்தமுறை கடும் முயற்சியில் காரியத்தை சாதித்துக்கொண்டுவிட்டது.

சோர்வோடு வீடு திரும்பினாலும், தன் நாட்டிற்காகக் கடைசிவரை உயிர்கொடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டி வில்லியர்ஸும் அவரது அணியினரும், சிறப்புமிக்க, சாதனை வீரர்கள்தான். சந்தேகமில்லை.

**

உலகக்கோப்பைக் கிரிக்கெட்: வேகமும் ஆவேசமும்

கிரிக்கெட்டின் மகா நிகழ்வு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை. தற்போது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெற்றுவருவது. இந்தப் போட்டியின் நாக்-அவுட் நிலையில்(knock-out stage) வீர, தீர சாகசச் செயல்கள் சில, கிரிக்கெட் வீரர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

முதல் இரண்டு குவார்ட்டர்-ஃபைனல்களும்- தென்னாப்பிரிக்கா-ஸ்ரீலங்கா, இந்தியா-பங்களாதேஷ் குறிப்பிடத்தக்க சாதனைகள்/நிகழ்வுகள் இன்றி நிறைவுபெற்றன.(ஸ்ரீலங்காவை 133 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்கா பெண்டெடுத்தது ஒருவிதமான சாதனைதான் எனினும்).

அடுத்து 20-3-2015-ல் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் குவார்ட்டர் ஃபைனல் பொசுக்கென்று, எளிதான ஆஸ்திரேலிய வெற்றியாக முடிவடைந்தாலும், அதன் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக, மறக்கமுடியா அனுபவமாக அமைந்தது! பாகிஸ்தானின் 213 என்கிற சாதாரண ஸ்கோரை அலட்சியமாக ஆஸ்திரேலியா எதிர்கொண்டு பேட்டிங் செய்தபோதுதான் அது நடந்தது. பாகிஸ்தான் குறைந்த ரன்கள் எடுத்திருந்தபோதிலும், தோற்க நேர்ந்தாலும் ஆஸ்திரேலியாவை ஒருகை பார்த்துவிடவேண்டியதுதான் என்கிற நினைப்பில் பந்து வீசியதாகத் தோன்றியது. குறிப்பாக பாகிஸ்தானின் இடதுகை-வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் (Wahab Riaz).

59 ரன்களுக்கு 3 விக்கெட் என்கிற தடுமாற்ற நிலையில் ஆடவந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், மிடில் ஆர்டர் ஆட்டக்காரருமான ஷேன் வாட்சன்(Shane Watson). (ஏற்கனவே அதிவேகப்பந்தினால் சீண்டி, துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரைத்(David Warner) தூக்கியிருந்தார் வஹாப்). வாட்சனை ஒரு அதிரடி பௌன்சர் மூலம் வரவேற்றார். வாட்சன் அவசரமாகத் தலையைத் தாழ்த்தி பந்தைப் பின்புறம் போகச் செய்தார். அடுத்த பந்தை 150 கி.மீ வேகத்தில் பௌன்ஸ் (bounce) செய்தார் வஹாப் ரியாஸ். பந்து வேகமாகக் குத்துப்பட்டு, சீறி மேலெழுந்து வாட்சனின் காதைக் கிழிக்காத குறையாக வெளியேறியது. மூன்றாவதும் வீர, தீர பௌன்சர்! வாட்சன் பதறிக் குனிய, பந்து வேகமாக முகத்துக்கு நேரே எகிறியது. வஹாப் ஏளனமாக வாட்சனைப் பார்த்தார்; சிரித்தார்; கிண்டலாகக் கைதட்டினார். வாட்சனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆடுகளம் அதிர்வு களமானது. நடப்பது கிரிக்கெட்டா? யுத்தமா? அடுத்த பந்துகளும் வேகமாகச் சீற, வலையில் விழ மறுத்தார் வாட்சன். பதில் சொல்லவில்லை. ரன் எடுப்பதையும் தவிர்த்தார்.

வஹாப்பின் அடுத்த ஓவரில் சூடு மேலும் தலைக்கேறியது. வாட்சன் வஹாப்பின் துல்லியமான பௌன்சர் தாக்குதலில் கதிகலங்கி நிற்க, அந்தப்பக்கம் அமைதியே வடிவமாய் ஸ்டீவ் ஸ்மித். அனல் பறக்கும் வஹாப்பின் வேகப்பந்துவீச்சை, அடிக்காமல் தலைதாழ்த்தி, உடம்பை வளைத்து பந்து தன்மீதோ, பேட்டின் மீதோ படாமல் மீண்டும் தவிர்த்தார் வாட்சன். வஹாப் எரிச்சலின் உச்சத்துக்குச் சென்றார். வாட்சனின் அருகில் வந்து முகத்தில் இடிக்காத குறையாகக் கத்தினார். அவருடைய உடல்மொழி, முகபாவத்தில் என்ன சொல்லியிருப்பார் என எளிதாக யூகிக்கமுடிந்தது: ‘ஏண்டா, பம்முறே! தலையைக் குனிஞ்சுக்கறே! ஏறி அடிக்கவேண்டியதுதானே! கைல பேட்டு வச்சிருக்கீல்ல!‘ என்கிற கிண்டல்தான் அது! இது ரொம்பவே ஓவர். வாட்சன் மிகுந்த சிரமத்துடன் தன்னை அடக்கிக்கொள்வது தெரிந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டார். மைதானத்து வீரர்களிடமும் ரசிகர்களிடமும் அதிஅழுத்தம் தெரிந்தது. மீண்டும் ஓடிவந்து பௌன்சர் வீசினார் வஹாப். மேலும் பொறுக்கமுடியாது வாட்சன் அதை லாங்-லெக்கில் ஹூக் செய்ய, பந்து உயரத்தில் எகிறியது. கீழே கை நீட்டியிருந்த ஃபீல்டர் ராஹத் அலி பந்தைப்பிடித்து டென்ஷனில் நழுவவிட்டார். வஹாப்பின் high class pace expedition ஃபீல்டரின் விளக்கெண்ணெய்த்தனத்தால் வீணானது. வாட்சன் பெருமூச்சுவிட, வஹாப் ரியாஸ் தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறை. 4 ரன்னிலேயே வீட்டுக்குப் போயிருக்க வேண்டும் வாட்சன். கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் என்று இதைத்தான் சொல்வது.

டென்ஷன் ஓவராகப் பத்திக்கொள்ள கேப்டன் மிஸ்பா-உல் ஹக் பௌலிங்கை மாற்றினார். கொஞ்சம் அமைதி. இதற்குள் ரன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர் வாட்சனும், ஸ்மித்தும். சிறிது இடைவெளிக்குப்பின் வஹாப் மீண்டும் வந்தார் பந்து போட. வாட்சனுக்கு மேலும் பௌன்சர் டோஸ். ஒரு பௌன்சரை ஹூக் செய்து 4 ரன் எடுத்தார் வாட்சன். வஹாப்பைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரித்தார். வஹாப் திருப்பி ஏதோ கோபமாகச் சொல்ல, கேப்டன் மிஸ்பா தலையிட்டு, அம்பயரிடம் சொல்ல, பிரச்சினை கட்டுக்குள் வந்தது. ஆனால் அடுத்த பந்தை அதிவேகத்தில் பௌன்ஸ் செய்ய, அதனைக் குனிந்து பின்னே போகவிட்டார் வாட்சன். பந்துபோட்ட வேகத்தில் வாட்சனைப் பார்த்து முறைத்தார்; மிரட்டிவிட்டு சென்றார் வஹாப் ரியாஸ்.

இப்படி பௌலர்-பேட்ஸ்மனுக்கிடையேயான, ஒரு ஆக்ரோஷ யுத்தம் உலகக்கோப்பையில், முதன் முறையாக, அபூர்வமாகக் காணக் கிடைத்தது. It was a highly controlled, yet top quality intimidatory fast bowling seen in the world stage in recent times.
வஹாப்பின் பௌலிங் பிரமாதமான தாக்கும் வேகப்பந்துவீச்சு என்பதில் சந்தேகமில்லை. எனினும், அவருடைய உடல்மொழி, அளவுக்குமீறிய வார்த்தைவீச்சு ஆகியவை கிரிக்கெட்டில் பொதுவாகக் காணப்படுகிற sledging என்கிற வார்த்தையால் தாக்கி அவமானப்படுத்துதல் நிலையையும் தாண்டியதாக அமைந்தது. In a way, there was poetic justice. Wahab Riaz has given the Aussies, a strong dose of their own medicine! (முன்னதாகத் தான் பாகிஸ்தானுக்காக பேட்டிங் செய்கையில் தன்னை மோசமான வார்த்தைகளால் வாட்சன் கேலி செய்தார் என்றும், அந்த வன்மமான மனநிலையில்தான், தான் அவருக்கு அப்படிப் பந்து வீசியதாகவும் வஹாப் பின்னர் குறிப்பிட்டார்). மேட்ச் ரெஃப்ரீ (Match Referee) இருவரிடமும் விளக்கம் கேட்டு, அபராதம் விதித்து, பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்.

ஸ்டார் சேனலில், நேரடி வர்ணனையின்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ப்ரெட் லீயும்(Brett Lee), ஷேன் வார்னும்(Shane Warne), வஹாப் ரியாஸின் அபாரமான பந்துவீச்சைப் புகழ்ந்தார்கள். ஆஸ்திரேலியக் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், வஹாப்பின் பந்துவீச்சைப்பற்றிப் பின்னர் குறிப்பிட்டு, தான் இதுவரை இத்தகைய கடுமையான பௌலிங்கைச் சமீபகாலத்தில் சந்தித்ததில்லை என்றார்.

இது இப்படியிருக்க, 21-3-15-ல் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான காலிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து துவக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptil) ஆடிய ஆவேச ஆட்டம் மனதில் நின்றது. உலகக்கோப்பையின் நாக்-அவுட் ஸ்டேஜில் இரட்டை சதம் அடித்து நியூஸிலாந்து ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார் கப்ட்டில். 237 runs in 163 balls; 11 sixers and 24 fours. An incredible effort by any standard. ஏதோ ஒரு பூதம் அவருக்குள் இருந்துகொண்டு மட்டையை இஷ்டத்துக்கும் சுற்றுவதுபோல் தெரிந்தது! வெகுகாலத்துக்கு இந்த உலகக்கோப்பை ரெக்கார்டு மிஞ்சப்படாதிருக்கும் எனத் தோன்றுகிறது.

செமி-ஃபைனலில், ஆஸ்திரேலியாவோடு இந்தியாவும், தென்னாப்பிரிக்காவோடு நியூஸிலாந்தும் மோதவிருக்கின்றன. உலகின் டாப் நான்கு அணிகள். க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), டி வில்லியர்ஸ் (de Villiers), ரோஹித் ஷர்மா, கப்ட்டில் (Guptil), மெக்கல்லம் (Mc Cullum), கோரி ஆண்டர்சன் (Corey Anderson) போன்ற போட்டியின் கதியையே மாற்றும் வீரர்கள் (game changers) பங்கேற்கும் அற்புதமான போட்டிகள். இன்னும் என்னென்ன ஆத்திர, ஆக்ரோஷங்கள், வாண வேடிக்கைகள், பாக்கியிருக்கிறதோ, யாரறிவார் !

**

உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

இன்று(19-3-2015) மெல்போர்னில்(Melbourne Cricket Grounds, Australia) நடந்த காலிறுதிப்போட்டியில் இந்தியா பங்களாதேஷை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கிரிக்கெட் உலகக்கோப்பை 2015-ன் அரையிறுதியில் காலெடுத்துவைத்துள்ளது.

டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். நீலநிற ஜெர்ஸியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மைதானத்துக்குள் பிரவேசித்தனர். ஸ்டேடியம் எதிர்பார்ப்பில் பொங்கிவழிய, இந்திய, பங்களாதேஷ் கொடிகள் ஆடி அசைந்தன. பங்களாதேஷ் வேகப்பந்துவீச, ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் நிதானமாக இந்திய இன்னிங்ஸை ஆரம்பித்தனர். 75-run opening partnership. ருபெல் ஹுஸெய்ன் ஆக்ரோஷமாக பந்துவீசினார்.வேகம் காட்டமுடியாமல் குழம்பிய தவன், ஸ்பின்னர் ஷகிப்-அல்-ஹஸனிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோஹ்லி தாக்குப் பிடிக்கவில்லை. ரஹானே நிதானமாக ஆடமுயன்றும் 19 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். A mini collapse in the middle! பங்களாதேஷ் உற்சாகமானது. சிறப்பாக, கட்டுக்கோப்பாக பந்துவீசியது.

28-ஆவது ஓவரின் முடிவில், 114-க்கு 3 விக்கெட் என்று மந்தமாகச் சென்றது இந்திய ஸ்கோர். ரஹானேக்குப் பின் களத்தில் வந்திறங்கினார் சுரேஷ் ரெய்னா. அடுத்த முனையில் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தார் ரோஹித். இருவரும் அதிவேகமாக ஆட ஆரம்பித்தனர். அடுத்த 16 ஓவர்களில் அசுரவேகம் காட்டி, 122 ரன் சேர்த்தனர். 40-ஆவது ஓவரில் 90 ரன்னில் இருந்த ரோஹித் ஷர்மா, ருபெல் ஹுஸெய்ன் ஃபுல்டாஸை(fulltoss) தூக்கப்போய் மிட்-விக்கெட்டில் பிடிபட்டார். ஆனால் அம்பயர்கள் அதனை உயரமாக எழும்பிய பந்தாகக் கருதி நோ-பால் (No-ball) என அறிவிக்க, ரோஹித் தப்பினார். டிவி ரீ-ப்ளேயில் அந்த பந்து இடுப்புவரைதான் எழும்பியது எனத் தெரியவந்தது. 57 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த ரெய்னா லெக்-சைடில் சில அபாரமான ஷாட்டுகளை விளையாடினார். ரெய்னாவின் வீழ்ச்சிக்குப்பின் வந்த தோனி அதிக நேரம் நிற்கவில்லை. இடையில் சில சூப்பர் ஷாட்டுகளை விளையாடிய ரோஹித் ஷர்மா 137 ரன்னில் டஸ்கின் அகமதின் யார்க்கருக்கு(yorker) பலியானார். 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் ரோஹித்தின் பேட்டிங்கில் பறந்தன. தோனிக்குப்பின் ஆட வந்த ஜடேஜா பௌண்டரிகளையும் சிங்கிள்களையும் வேகமாக அள்ளினார். அவரும் அஷ்வினும் சேர்ந்து ஸ்கோரை 302-க்குக் கொண்டுவந்து இந்திய இன்னிங்ஸை முடித்தனர். பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அகமதுவும், ருபெல் ஹூஸெய்னும் சிறப்பாக பந்துவீசினர்.

மெல்போர்ன் மைதானத்தில் 303 என்கிற இலக்கைத் துரத்துவது எந்த ஒரு அணிக்கும் எளிதானதல்ல. பங்களாதேஷ் தன் பங்குக்கு அதனைச் செய்ய முயன்றது. வேகமாக ஆரம்பித்த துவக்க வீரர் தமிம் இக்பால் 25 பந்துகளில் 25 ரன் எடுத்து யாதவின் பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஜடேஜாவின் சூபர் த்ரோ (super throw)-வில் ரன் –அவுட்டானார் இம்ருல் கேயெஸ். பங்களாதேஷின் சிறந்த இளம்வீரரான மஹமதுல்லாவும், சௌம்யா சர்க்காரும் நிலைமையைச் சீர் செய்ய முயன்றார்கள். இருவரும் நன்றாக ஆடியும், அதிக நேரம் நீடிக்க முடியவில்லை. மஹ்மதுல்லா 21 ரன்களும், சர்க்கார் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இந்தியா தனது பிடியை மேலும் இறுக்கியது. தோனி ஸ்பின்னர்களை இறக்கிவிட்டு, பங்களாதேஷ் வேகமெடுக்கமுடியாமல் அழுத்தம் கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லையெனினும், அஷ்வின் 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷகிப்-அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களைத் தடுமாறச்செய்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகள் இடையிடையே விழுந்துகொண்டிருக்க ஷப்பிர் ரஹ்மான்(Shabbir Rahman), நாசர் ஹுசைன்(Nasir Hosdain) இருவரும் வேகமாக ரன் எடுத்து 50 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள். ஆயினும் எட்டவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் இருந்தது. பங்களாதேஷின் பதற்றம் உச்சத்தில் இருந்தது. 45-ஆவது ஓவரில் யாதவ் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் தூக்கிவிட, பங்களாதேஷ் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உலக்கோப்பையிலிருந்து வெளியேறியது. உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்த உலகக்கோப்பையில் இது, இந்தியாவின் 7-ஆவது தொடர்வெற்றியாகும். தனிப்பட்ட முறையில், கேப்டன் தோனிக்கு இது 100-ஆவது ஒரு-நாள் விளையாட்டு வெற்றி (100th win in One-day internationals). நாளை நிகழவிருக்கும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் காலிறுதியில் வெல்லும் அணி, இந்தியாவை செமி-ஃபைனலில் சந்திக்கும்.

இன்னும் இரண்டே போட்டிகள். வென்றால் இந்தியாவின் கைகளில் உலகக்கோப்பை தகதகவென மின்னும். அதிர்ஷ்ட தேவதையே, உன் அழகுப்பார்வையை இந்தியாவின் மீதே தொடர்ந்து வைத்திரு தாயே !

**

கிரிக்கெட்: கம் ஆன், இந்தியா !

கிரிக்கெட் உலகக்கோப்பையின் காலிறுதிக் கட்டம் (CWC-Quarterfinals) வந்துவிட்டது. 14 அணிகளாக இருந்த நிலை மாறி, 8 பெரும் அணிகளாகச் சுருங்கிவிட்டது. இனிதான் இருக்கு வேடிக்கை. இதுவரை ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் 2 பாயிண்ட்டுகளோடு போயிற்று ; அடுத்த மேட்ச்சில் பார்த்துக்கொள்ளலாம் என ஒரு அணி இருந்திருக்கமுடியும். இனிமேல் அது நடக்காது. எந்த மேட்ச்சில் இனி தோற்றாலும், தோற்ற அணி அடுத்த ஃப்ளைட் பிடித்து வீடு திரும்பவேண்டியதுதான். கனவு கலைந்துவிடும்.

முதல் காலிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஸ்ரீலங்காவும் மோதுகின்றன. 19-3-2015-ல் நடக்கவிருக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்தியா பங்களாதேஷைச் சந்திக்கிறது. அடுத்தடுத்த நாட்களில், ஆஸ்திரேலேயா-பாகிஸ்தான், நியூஸிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மோதவிருக்கின்றன. நேரடியாகப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள், டிவிக்குமுன் தவமிருப்பவர்கள், பார்களில்(Bars), டீக்கடைகளில், தெருமுனைகளில் உட்கார்ந்து கிரிக்கெட் விவாதம்செய்பவர்கள், அரட்டை அடிப்பவர்கள் என விதவிதமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்..ம வேட்டை!

சரி, நம்ம கதக்கு வருவோம். இந்தியா சந்திக்கும் பங்களாதேஷ் இப்போது மிகவும் முன்னேறிய டீமாவாக விளங்குகிறது. பயிற்சியாளர் ஹதுருசிங்க (Chandika Hathurusingha) இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது. எதிரி டீமின் பலத்தைக் கண்டு அயர்ந்துவிடாமல், தைரியமாக, சுதந்திரமாக விளையாட பங்களாதேஷ் வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார். அவரது உந்துதலில், இளம் பங்களாதேஷ் வீரர்களான மகமுதுல்லா (Mahmadullah), சௌம்யா சர்க்கார்(Sowmya Sarkar), தஸ்கின் அகமது(Taskin Ahmed), ருபெல் ஹொசைன்(Rubel Hossain) போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களோடு பழைய புலிகளான ஷகிப்-அல்- ஹஸன் (Shakib-al Hasan), தமிம் இக்பால்(Tamim Iqbal), முஷ்ஃபிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) ஆகியோரும் தங்களது பேட்டிங் திறமையால், அணிக்கு வலு சேர்க்கின்றனர். கேப்டன் மஷ்ரஃபே மொர்தாஸா (Mashrafe Mortaza)(ஆல்-ரவுண்டர்) ஒரு திறமையான அணித்தலைவராகத் தன்னை வெளிப்படுத்திவருகிறார். இதன் ஒட்டுமொத்த விளைவாக, அனுபவ அணியான இங்கிலாந்தை வெளியே தள்ளிவிட்டு, பங்களாதேஷ் உலகக்கோப்பைக் காலிறுதியில் முதன்முறையாக பிரவேசித்துள்ளது.

தற்போதைய உலக சேம்பியனான இந்தியா சந்திக்கவிருப்பது இந்த அணியைத்தான். மஹேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி ஒரு Professional team –ஆக இந்த உலகக்கோப்பையில் நன்கு இயங்கிவருகிறது. ஆதலால் தன் பலம், பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்த தலைமையின் கீழ் விளையாடி வருகிறது இந்தியா. இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக அமைந்துள்ளது முகமது ஷமி, உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு. ஷிகர் தவன், விராட் கோஹ்லி, அஜின்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னாவோடு, கேப்டன் தோனியும் இந்திய அணியை அவ்வபோது தன் திறமையான பேட்டிங்கினால் கைதூக்கிவிடுகிறார். (தோனியின் தலைமைப்பண்புகளை, குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் அவர் தன் அணியை திறனாக முன்னடத்திச் செல்வதை, முன்னாள் ஆஸ்திரேலியக் கேப்டனும், கிரிக்கெட் நிபுணருமான இயான் சேப்பல் (Ian Chappel) சமீபத்தில் புகழ்ந்திருக்கிறார்). Strong plus points; So far, so good.

கொஞ்சம் கவலைப்படும்படி சில விஷயங்கள் இருக்கின்றன. முதலில் நமது துவக்கவீரர்களின் பங்களிப்பு. இந்த லெவலில் இது போதாது. ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் உருப்படியாக இதுவரை பார்ட்னர்ஷிப் கொடுக்கமுடியவில்லை (அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் தவிர). துவக்கவீரர்கள் துவண்டால் எப்படி இந்திய அணி தடுமாறும் என்பது வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டங்களில் நன்றாகத் தெரிந்தது. தோனி, ரெய்னா, கொஞ்சம் அஷ்வின் எனக் கைகொடுத்திராவிட்டால் இந்தியாவை சிக்கலுக்குள் தள்ளியிருக்கவேண்டிய மேட்ச்சுகள் இவை. இதேபோல், பேட்டிங்கின் கீழ்நிலை வரிசையில் (lower middle order) ரவீந்திர ஜடேஜா, அஷ்வினுக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. வந்த வாய்ப்புகளில் அவர்கள் சரியாக விளையாடவில்லை. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜாவிடமிருந்து பெரும் பங்களிப்பு, வரும் குவார்ட்டர் ஃபைனலிலும் அடுத்த மேட்ச்சுகளிலிலும் இந்தியாவுக்கு தேவைப்படும்.

மற்றொரு விஷயம். இந்தியாவின் Reserve Bench. அதாவது, இதுவரை பெஞ்சில் உட்கார்ந்து இந்தியா விளையாடுவதை வேடிக்கை பார்க்குமாறு செய்யப்பட்டிருக்கும் ரிசர்வ் வீரர்களான அம்பத்தி ராயுடு (Ambati Rayudu), அக்ஸர் பட்டேல் (Axar Patel), ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny) மற்றும் புவனேஷ்வர் குமார். முதல் ரவுண்டு மேட்ச்சுகளில் இவர்கள் ஆங்காங்கே ஓரிரு போட்டிகளிலாவது சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் உலகக்கோப்பையில், பெரிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் கொஞ்சமாவது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதைத்தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற அணிகள் முதல் ரவுண்டில் செய்தன. ஆனால் இந்தியா முதல் 6 போட்டிகளில், ஏனோ, ஒரு ரிசர்வ் ப்ளேயருக்குக்கூட வாய்ப்பு தரவில்லை. திடீரென முக்கிய வீரர்களில் யாருக்காவது காயம், கீயம் ஏற்பட்டு விளையாட முடியாதுபோனால், இந்த பெஞ்ச்வீரர்களில் ஒருவர் மைதானத்தில் இறங்கவேண்டியிருக்கும். அவர்களது அனுபவமின்மை அப்போது தெரியவரும். போதிய பங்களிப்பு-பேட்டிங்கிலோ, பௌலிங்கிலோ அவர்களால் செய்யமுடியாது போகலாம் என்பது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். கடுமையான நெட் ப்ராக்டீஸ்(net practice) செய்து தங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை இவர்களுக்கு இப்போது.

காலிறுதிக்காகக் காத்திருப்போம். மெல்போர்னில்(Melbourne) களத்திலிறங்கி கவனமாக விளையாடட்டும் இந்தியா. மேலும் ஒரு வெற்றியோடு மேலே செல்லட்டும்!

**