தேடித் தேடியே …

புதிதாகக் குடிவந்த இடத்தை
பொழுதுபோகாமல் சுற்றிப் பார்த்தேன்
குட்டித்தெருக்களில்
வட்டமிட்டபோது
புதுசு புதுசாகக் கண்ணில்பட்டன
ஏகப்பட்ட தெருநாய்கள்
நீளமும் குட்டையுமாய்
பெரிசும் சிறிசுமாய்
கருப்பும் சிவப்புமாய்
ஆசையாக வாங்கி வளர்த்து
அம்போ என்று விட்டுவிட்டார்களோ
விதவிதமாய் முகத்தைவைத்துக்கொண்டு
விசித்திரமாய் சத்தம் எழுப்புகின்றன
எந்தெந்த நாடுகளின்
இறக்குமதி வடிவங்கள் இவை
நாட்டு நாய்களெல்லாம் எங்கே?
தேடினாலும் எளிதாகத் தென்படுவதில்லை
நாட்டில் மனிதர்களும்கூடத்தான்

**

ஸ்விட்ஸர்லாந்து எனும் சுகானுபவம்

திரைப்படங்களில் நிறையப் பார்க்க நேர்ந்ததாலும், அதுபற்றிய சுவாரஸ்யக்கதைகள் பரவிக்கிடப்பதாலும், `வாழ்வில் ஒருமுறையாவது அங்கு போக நேர்ந்தால் எப்படி இருக்கும் !` எனும் குளுகுளு கற்பனைகளை அடிக்கடி மனதில் ஓடவிடும் அழகுநாடு. ஐரோப்பாவின் நன்கு தீட்டப்பட்ட வைரம். ஆசைக்கனவுகளைக் கிளர்ந்தெழச்செய்யும் உலகின் அபூர்வமான ஒரு பிரதேசத்தில் சொற்பகாலம் இருந்திருக்கிறேன். அதனுள்ளான எனது பயணங்கள், அனுபவங்கள், அவதானிப்புகள் குறித்து நான் எழுதிய `ஸ்விட்ஸர்லாந்து: ஸ்வர்க்கத்தில் சிலவருடங்கள்` எனும் கட்டுரை நடப்பு `சொல்வனம்` இணைய இதழில் வெளிவந்துள்ளது. (இதழ்:160 ; தேதி:30-10-2016). சொல்வனம் இதழில் நுழைந்து ஸ்வட்ஸர்லாந்தில் பயணிக்க வாசகர்களை வாஞ்சையுடன் அழைக்கிறேன்.

-ஏகாந்தன்

லிங்க்: http://solvanam.com/?p=47138

நன்றி: சொல்வனம்