நமது நாட்டில், விலங்கினப் பாதுகாப்பு விழிப்புணர்வுபற்றி சிலர் பேசிவருகிறார்களே தவிர, அபூர்வ வனவிலங்குகளைத் தோலுக்காகவும், வெற்று டாம்பீகத்துக்காகவும் வேட்டையாடிக் கொல்வது இன்னும் நின்றபாடில்லை. சில சமயங்களில் கிராமத்து மக்களே கொல்கிறார்கள். கேட்டால், ஒரு சிறுத்தைப்புலி ஊருக்குள்ளே வந்துருச்சு.. ஆட்டுக்குட்டியைத் தூக்கிட்டுப் போயிருச்சு. போனவாரம் ஒரு பிள்ளையைக் காணோம். அதனாலதான் இந்த தடவ மாட்டினப்போ, அடிச்சுக் கொன்னுட்டோம்னு பெருமைபடச் சொல்கிறார்கள். செத்த விலங்கோடு செல்ஃபீ எடுத்துக் கிளுகிளுக்கும் அறிவீனர்களை, கிராமப்புறங்களிலும் சமீபகாலத்தில் பார்க்கமுடிந்தது. காட்டு யானைகளும் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதாகவும் அவ்வப்போது நியூஸ். வனத்தை எல்லாம் அழித்துக்கொண்டே இருந்தால், யானைகளும், சிறுத்தைகளும், ஒநாய்களும் ஊருக்குள்ளேதான் வரும்? அதுகளின் வாழ்வாதாரத்தை, வசிக்குமிடத்தைத் திருடிக்கொண்ட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், சுகிக்கிறீர்கள் என நேரிடையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள, அதுகளும் ஆசைப்படும்தானே!
ஒரு கட்டத்தில், இந்திய நாட்டில் சிங்கங்களே இல்லாமல் செய்துவிடுவார்களோ என்கிற மோசமான நிலை. இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது என்கிறது சர்வே ஒன்று. குஜராத்தின் ’கிர்’ காடுகளில் (Gir Forests, Gujarat) சட்டவிரோத வேட்டைக்காரர்களிடமிருந்து தப்பித்து வசிக்கின்ற மிச்சமிருக்கும் சிங்கராஜாக்கள், ராணிகளை, சில வருடங்களாக அரசாங்கம் சரிவரப் பாதுகாக்க ஆரம்பித்ததால், 2018-ல் சுமார் 600 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னதாக 523 என்கிறது புள்ளிவிபரம். யார் புண்ணியத்திலோ கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.

’ராயல் பெங்கால் டைகர்’ எனப் பெருமிதமாக அழைக்கப்படும் இந்தியப் புலிகளின் எண்ணிக்கை 2010-ல் மோசமாக இருந்தது. அரசாங்கத்துக்கு மனிதர்களைக் கவனிக்கவே நேரமில்லை, புலியாவது எலியாவது? 1706 புலிகளே மொத்தம் இருந்திருக்கின்றன. இந்தியா போன்ற, ஒருகாலத்தில் கொடும் வனவிலங்குகளுக்குப் பேர்போன நாட்டுக்கு இது மிகவும் சிறிய புலித்தொகை. கடந்த சில வருடங்களாக ’தேசிய புலி வளர்ப்பு ஆணையம்’ (National Tiger Conservation Authority, NTCA) தன் செயல்பாடுகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருப்பதால், விளைவு நல்லதாக மாற ஆரம்பித்திருக்கிறது. இந்திய அரசினால் 2019 ஜூலையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட ’2018 புலி சென்ஸஸ்’, புலிகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் இதுவரை 48 புலிகள் வனாலயங்கள் (Tiger Reserves) இருந்தன. இப்போது அஸ்ஸாமில் மேலும் ஒன்றும் (ஏற்கனவே ஒன்றிருக்கிறது), அருணாச்சலப்பிரதேசத்தில் ஒன்றுமாக சேர்க்கப்பட்டு மொத்தம் 50 புலிகள் வனாலயங்கள் உள்ளன. இதில் மிகப்பெரியது நாகார்ஜுன சாகர்-ஸ்ரீசைலம் வனம் ஆந்திராவில் உள்ளது. பரப்பு 3296 சதுர கி.மீ. நாட்டின் பல்வேறு வனப்பகுதிகளில் 2967 புலிகள் வசிப்பதாக சென்ஸஸ் சொல்கிறது. இந்தியப் புலித்தொகை, உலகின் மொத்த எண்ணிக்கையில் 75 % என்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இந்தியா ஒன்றுதான் புலிகளைப் பாதுகாக்கவெனத் தனிப்படை அமைத்த நாடு! சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படை (Special Tiger Protection Force (STPF) எனப் பெயர். புலிகள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் – மத்தியப் பிரதேசமும் (526), கர்னாடகாவும்(524), உத்தராகண்டும்(442) முன்னணியில் இருக்கின்றன. மேலும் மஹாராஷ்ட்ரா (312), மற்றும், இது ஆச்சரியம் – தமிழ்நாட்டிலும் புலிகள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றன. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, கலக்காடு-முண்டந்துறை வனப்பகுதிகள் புலிகள் வாழும் இடங்கள். 264 புலிகள் அங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஜாக்ரதை!
கொடும்விலங்குகளின் பட்டியலில் வரும் சிறுத்தைப்புலிகளும் (Leopards) இந்தியாவில் நிறைய உலவுகின்றன. இவை ‘Indian Leopard’ எனும் வகையில் வருபவை. சமீபத்திய விலங்கு சென்சஸ் இப்படிக் குறிக்கிறது: அஸ்ஸாமின் வனங்களில்தான் நிறைய சிறுத்தைப் புலிகள் – 2487. ஆனந்தமாக வசிக்கின்றன போலும். அடுத்தாற்போல் வருவது மத்திய பிரதேசம் -1817. மேலும் குஜராத்தில் 1359, கர்னாடகாவில் 1129. அந்தந்த மாநில அரசுகள் சிறுத்தைகளுக்கான வாழ்விடங்களான வனங்களின் பரப்பைப் பெரிதுபடுத்த முயற்சித்தால், இந்திய சிறுத்தைப்புலி இனமும் வளரும், வாழும்.
ஜனரஞ்சகமான ’காட்டுவிலங்கு’ நம்ப யானை. ஊர்களிலும் சாதுவாக உலவும் வகை குறிப்பாக – விஷ்ணு கோவில்களில்! இதுகளின் தொகை நாட்டில் எப்படி? கர்னாடகாதான் யானை வளர்ப்பில் டாப் மாநிலம். 6049 யானைகள். அடுத்த இடம் அஸ்ஸாமிற்கு – 5719. மூன்றாவதாக வருவது சிறு மாநிலமான கேரளா – 5706. ஒருவழியாக, தமிழ்நாடும் இந்த லிஸ்ட்டில் வந்துவிட்டது எனத் தமிழன் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான் – 2761 யானைகள் வசிக்கின்றன.

சோம்பலே குணம்!
பள்ளிக்குழந்தைகளாக காட்டுவிலங்குகளைப்பற்றிப் படிக்கையில், பெரிதாக மனதில் கற்பனை செய்துகொண்டு, சிங்கம், புலி, கரடி என அடுக்குவதுண்டு. அந்தக் கரடி வகை நாட்டில் எப்படி இருக்கிறது? இந்தியத் துணைக்கண்டத்தை (Indian Sub-continet) சார்ந்த கரடிகள் பிரதானமாக ஐந்து வகைப்படும்: Sloth Bear (சோம்பல் கரடி), Sun Bear, Moon Bear, Asian Black Bear and Himalayan Brown Bear. பெயருக்கேற்றபடி இந்தியாவின் வடபகுதியில், மாபெரும் ஹிமாலயப் பள்ளத்தாக்குகளில் கறுப்பு, பழுப்பு நிற ஹிமாலயன் கரடிகள் பெருமளவில் காணப்படுகின்றன. Sloth Bear அல்லது சோம்பல் கரடி தேனுண்ணும் வகை. தேன்கூடுகளைத் தேடிக் குடித்துவிட்டு மரத்திலேறி மணிக்கணக்கில் தூங்கும். சோம்பல் கொஞ்சம் ஜாஸ்தி! கரடிகளின் எண்ணிக்கை பற்றி அதிகாரபூர்வ கணக்கெடுப்பு ஏதும் இல்லை எனினும், இந்தியாவின் வெவ்வேறு வனப்பகுதிகளில் மொத்தம் சுமார் 20,000 கரடிகள் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. கரடி வகைகளும் இந்திய அரசின் பாதுகாக்கப்படும் விலங்கினங்களின் (Protected Species) பட்டியலில் வருபவை. Wildlife (Protection) Act, 1972-ன்படி, மற்ற அபூர்வ, கொடிய விலங்குகளைப்போலவே கரடிகளையும், வேட்டையாடுதல், பிடித்து சித்திரவதைப்படுத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம்.

(குஜராத்)
காட்டு மிருகங்கள் என்றால் மேலும் மனதில் வருபவை, ஓநாய்கள், நரிகள்! சிறுவகை விலங்குகள், ஆடுகள் போன்றவையை உணவாகக் கொண்டவை இந்த ஓநாய்கள். மத்திய இந்தியாவில் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, சிறுகுழந்தைகளைக் கவ்விக்கொண்டு ஓநாய்கள் ஓடிவிட்டதாகச் செய்திகள் வந்து பீதிகிளப்புவதுண்டு. இந்திய ஓநாய்கள் பெரிதும் காணப்படும் மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்னாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம். 2000-த்திலிருந்து 3000 வரை இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்பது அனுமானம்.

நாடுமுழுதும் உள்ள பெரும்பாலான வனங்களில் வசிக்கும் விலங்கு எனினும், கிழக்கு இந்தியாவின் காடுகளில் வசிக்கும் ’வங்காள நரி’ (Bengal Fox) என அழைக்கப்படும் நரி இனம், ஒரு பிரபல வகை. இவற்றைத் தாண்டி, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் அதிகம் தென்படுகின்றன நரிகள். கர்னாடகா, தமிழ்நாடு ஆகி மாநிலங்களில் காட்டுப்பகுதிகள் தொழிற்சாலைகள், புறநகர்ப்பகுதிகளாக வேகமாக மாற்றப்படுவதால், நரிகளின் வாழ்விடம் சிதைக்கப்பட்டு அவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது.
சிங்கம், புலி, கரடிகளோடு பல்வேறு அரிய விலங்கினங்களையும் ஒழுங்காகப் பாதுகாத்து வளர்க்க, புதுப்புது வனப்பகுதிகளை உருவாக்கவும், ஏற்கனவே இருக்கும் காடுகள் காணாமல்போய்விடாமல் பாதுகாக்கவும், தேசிய/மாநில வனவிலங்குப் பாதுகாப்புத்துறைகளின் முனைப்பான நடவடிக்கைகள் அதி அவசியமாகிறது.
**