காலை நகர்கையில்

இரவு மறைந்த கொஞ்சநேரத்திலேயே
இன்னொரு நாளுக்காகப் பரபரக்கும்
நகரத்தின் காலைப்பொழுதொன்றில்
குண்டுகுழிகளைத் தவிர்த்து
நிதானமாக நடக்கிறேன் ஓரமாக
கொக்கரக்கோ என்ற திடீர்க் கூவல்
கவனம் சிதைத்துச் சிலிர்ப்பூட்டியது
நகரத்தின் மத்தியில் சேவலா – இல்லை
கனவுபோன்ற கிராமத்தில்தான் நான்
களிப்பாக நடந்துகொண்டிருக்கின்றேனா
திரும்பிப் பார்க்கையில்
தெறித்தது கண்ணில்
கொல்லப்படுவதற்காகப்
பெருங்கூண்டொன்றில்
சிறைவைக்கப்பட்டிருந்த சேவல்தான்
விவரம் புரியாமல்
கழுத்தை உயர்த்திக்
கம்பீரம் காட்டியிருக்கிறது
இதுமட்டுமல்ல
புவிவாழ் ஜீவன்கள்
அத்தனையுமே அப்பாவிகள்தான்
மனிதன்மட்டுமே
பாவி

**

பிரிந்தோம் .. சந்தித்தோம் .. !

இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக அமைப்பில், அரசியல் எப்போதும் களைகட்டத் தவறுவதில்லை. அதுவும் சமீபகால தமிழக அரசியல் பரபரப்புக் கூடாரமாக ஆகிவிட்டிருக்கிறது. சீன் வேகவேகமாக மாறுகிறது. பாத்ரூம் போய்வருமுன் என்னென்னமோ நடந்துவிடுகிறது மேடையில். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு பொறுமையின் பூஷணங்களாய் மக்கள்.

அதிகாரத்தைத் தன் வசம் வைத்திருக்கும் கட்சியின் இருகூறுகள், இருபாதிகள், தேங்காய்மூடிகள் சேர்ந்துவிட்டன ஒன்றாய். அவருக்கு இந்தப் பதவி. இவருக்கு அந்தப் பதவி. அவருக்கு, இவருக்கு என இன்னும் புதுசு புதுசா சில பதவிகள்/பொறுப்புகள். படபடக்கும் மீடியா ஒரேயடியாகக் கவிகிறது வெள்ளைச்சட்டைகளின் மேல். பரபர காமிராக்களுக்கு முன் வாயெல்லாம் பல்லாகக் கட்சித்தலைகள். அழுத்தமான கைகுலுக்கள். அதிமுக அரசியல்வாதிகளின் பிக்னிக் ஸ்பாட்டான ஜெயலலிதாவின் சமாதியில் நெருக்கம். உருக்கம். வணக்கம். ஒரு தாய் மக்கள். சுபம்.

எதிர்க்கட்சி என்று ஒன்றும் இருக்கிறது இங்கே. அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஸ்டீரியோ-டைப் கமெண்ட் ஒன்று போட்டுவிடுகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறும் சில்லரை எதிர்க்குரல்களும் அவர்கள் பங்குக்கு மிர்ச்-மசாலா சேர்க்கத் தவறுவதில்லை: மோதியின் சாகசம்..அமித் ஷாவின் சூழ்ச்சி..டெல்லியின் ஆசீர்வாதம். சுருக்கமாக, பணம், பகட்டு, அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு. தொழில் முனைப்பு மீடியாவுக்கு. காதில் பூவும், தீராத பொழுதுபோக்கும் தமிழனுக்கு.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு தயாராக இருந்த கமல் ஹாசன் ட்வீட்டிவைத்தார்: காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர் குல்லா! தற்பொழுது கோமாளிக் குல்லா தமிழனின் தலையில்! போதுமா இன்னும் வேண்டுமா? – என்றெல்லாம் உசுப்பிவிட்டுள்ளார் ஹாசன். தமிழ்நாட்டின் ஏகபோக அரசியல் கவிஞரான மனுஷ்யபுத்திரன் ஏதாவது எழுதிவைப்பாரோ முகநூலில்? பதறவேண்டாம். அப்படி அவர் ஏதும் எழுதினால், சாரு நிவேதிதாவின் பக்கத்தில் சாவஹாசமாகப் படித்துக்கொள்ளலாம்.

அடுத்த சீனுக்குக் கொஞ்சம் டயம் ஆகலாம்
காத்திரு தமிழனே காத்திரு
வெயிலில் எப்போதும் வேர்த்திரு
உனக்கும் கிடைக்கலாம் ஒருநாள் ‘தமிழ் திரு’ . .

**

க்ரிக்கெட் : பலே பாண்ட்யா!

மூன்றே நாளில் முடிவுகண்டது ஸ்ரீலங்காவிற்கெதிரான கண்டி டெஸ்ட் மேட்ச். இந்திய வெற்றி. 3-0 என தன் மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ஸ்ரீலங்கா. ஸ்ரீலங்கா இந்த தொடரில் உண்மையில் க்ரிக்கெட் விளையாடியதா? நினைவுக்கு ஒன்றும் சரியாக வரவில்லை. முதல் டெஸ்ட்டில் நுவான் ப்ரதீப், பின்பு கொஞ்சம் ஹெராத், கருணரத்னே, குஸால் மெண்டிஸ் என நாங்களும் விளையாடுவோம் க்ரிக்கெட் என்றார்கள். மற்றவர்கள் ஏதோ சினிமாவில் கௌரவ நடிகர்கள் போல் வந்தார்கள்; சென்றார்கள். போதாக்குறைக்கு காயங்களினால் விளையாட முடியாத நிலையில் ப்ரதீப், லக்மல், சமீரா போன்ற வீரர்கள். கடைசி போட்டியில் மகா கேவலமாக இருந்த ஸ்ரீலங்க ஆட்டத்தில், லக்ஷன் சந்தகன் (Lakshan Sandakan) சுழல்வீரர்) மட்டும் உயிர்ப்போடு வெளிப்பட்டார். புதிய கேப்டனான தினேஷ் சண்டிமாலின் நிலை பரிதாபம். அவருடைய கேப்டன்சி மோசமில்லை. ஆனால், பேட்டிங் ஃபார்மில் அவருமில்லை. தொடரின் இறுதியில் நேர்காணலில் அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இந்திய பேட்டிங்-குறிப்பாக துவக்க ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஷிகர் தவண் இரண்டு சதங்கள் விளாசி, நல்ல துவக்கம் தந்தார். ரஹானே, புஜாரா, கோஹ்லி, ராஹுல் வழக்கம்போல் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதைச் செய்தனர். Silver lining என்பார்களே அது ஹர்தீக் பாண்ட்யாதான் (Hardik Pandya). ஏற்கனவே இந்தியாவுக்காக ஒரு-நாள், டி-20 போட்டிகளில் கவனிக்கத்தக்கப் பங்களிப்பு செய்தவர். முதன்முறையாக, இந்தத் தொடரில்தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார். 6,7 என்கிற இடங்களில் அஷ்வின், சாஹா வருவதால், அணியின் பேட்டிங் வரிசையில் பாண்ட்யாவுக்குக் கிடைத்தது 8-ஆவது இடம். பையன் சளைக்கவில்லை! போட்டுத்தள்ளிவிட்டார் ஸ்ரீலங்காவை.

முதல் இரண்ட் போட்டிகளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 600-க்கும் மேலே எடுத்துவிட்டது. துவக்க, மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள் நன்றாகச் செய்திருந்ததால், பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அதிகமில்லை. அப்படியும் போன மேட்ச்சில் குறிப்பிடத்தக்க, run-a-ball அரைசதம் விளாசியிருந்தார். கடைசிப்போட்டியில் தவண், ராஹுலுக்குப்பின் இந்தியாவின் பேட்டிங்கில் ‘தம்’ இல்லை. புஜாரா, ரஹானே எளிதாக வெளியேற்றப்பட, கோஹ்லியும் பெரிசாக ஒன்றும் செய்துவிடவில்லை. அஷ்வின், சாஹா ஆகியோர் மட்டையைச் சுழற்ற வேண்டியதாயிற்று. அஷ்வின் வீழ்ந்தபின் இறங்கினார் பாண்ட்யா. சாஹாவும் சொற்பமாக சரிந்துவிட இந்தியா 400-ஐத் தொடுமா என்பது தொடரில் முதல் முறையாக சந்தேகத்தை கிளப்பியிருந்தது. புதிதாகச் சேர்ந்திருந்தார் குல்தீப் யாதவ். கொஞ்சம் சுமாராக ஆடக்கூடிய உத்திரப்பிரதேச ஆல்ரவுண்டர். அவர் அடுத்த முனையில் ஆடும்வரை, தன் வழக்கத்துக்குப் புறம்பாக, அந்தக்காலத்து ரவி சாஸ்திரி போல் அதிநிதானமாக ஆடினார் பாண்ட்யா. ஸ்ரீலங்க பௌலர்களுக்கு தாங்கள் சிறப்பாகப் பந்துவீசுவது போன்றதொரு ப்ரமை. குல்தீப்பும் விழுந்துவிட, ஷமியும், உமேஷ் யாதவும்தான் பாக்கி என்கிற நிலையில், விஸ்வரூபம் காண்பித்தார் பாண்ட்யா. புஷ்பகுமாராவின் ஒரு ஓவரில் 4,4,6,6,6 என ஸ்ரீலங்காவை சிதறவிட்டார். என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ளுமுன் தொண்ணூறுகளில் ப்ரவேசித்துவிட்டார். உமேஷ் யாதவைத் துணையாக வைத்துக்கொண்டு ஸ்ரீலங்காவின் சிறந்த பௌலரான சந்தகனை சாத்தினார் ஒரு சாத்து. 91-லிருந்து 97. ஓ! செஞ்சுரி அடித்தேவிடுவாரோ? யாதவ் அந்தப்பக்கம், இந்தப்பக்கமாக சிங்கிளுக்காக ஓடிப்பார்க்க, அவருக்கு நிதானம் சொன்னார் பாண்ட்யா. இப்படி ஒரு தில்லா? இரண்டு ரன்கள். அடுத்து அந்த ஸ்ட்ரெய்ட் ஃபோர். 86 பந்துகளில் ஒரு டெஸ்ட் செஞ்சுரி! (108, 8 பௌண்டரி, 7 சிக்ஸர்). அவருடைய கேரியரின் முதல் first-class century-யே இந்த டெஸ்ட் சதம்தானாம். எப்படி நம்ப ஆள்? வீரேந்திர சேஹ்வாக் பார்த்திருக்கிறார் போலிருக்கிறது; ‘குங்-ஃபூ பாண்ட்யா!’ என்றார் ட்விட்டரில் அடுத்த நாள்!

இந்தத்தொடரில் பாண்ட்யாவுக்கு போதுமான பௌலிங்கை கோஹ்லி தரவில்லை. ஸ்பின்னர்கள், ஷமி, உமேஷ் என கவனம் செலுத்தினார். கிடைத்த சொற்ப ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, நன்றாக ஃபீல்டிங்கும் செய்திருக்கிறார் பாண்ட்யா. செல்லவேண்டிய தூரம் அதிகம் எனினும், இந்தியாவுக்கு ஒரு உயிர்ப்பான டெஸ்ட் ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டார் எனவே தோன்றுகிறது.

**

ஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா !

காலை எழுந்தவுடன் காஃபி குடித்துக்கொண்டே ரிலிஜியஸாக நெட்டைத்தட்டிவிட்டு தமிழ் மீடியா உலகுக்குள் அலைகிறேன். நாட்ல எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டுருக்கு? நம்ப தமிழ்நாட்ல ஆட்சி என்று ஒன்று நடந்துவருகிறது. சரி. கட்சி? அதைப்பற்றித் தெரிந்துகொள்ள முயன்றால் காலைக் காஃபியின் மணமும் கதறிக்கொண்டு வெளியேறிவிடும். எக்கேடுகெட்டாலும் ஒழியட்டும். பொதுமக்களுக்கே வரவர கட்சிகள்மேல ஈர்ப்பு விட்டுப்போயிடுச்சு. நமக்கெதற்கு காலைல வயித்துவலி?

வேறென்ன விசேஷம்? உருகியும், அணைத்தும், அழுதும், முத்தமிட்டும் ரசிகர்களின் கனவுலகில் ஏகப்பட்ட அளவுக்கு எகிறிக்கொண்டிருந்த ஓவியா, ’பிக் பாஸி’லிருந்து வெளியேறுவார்..வார்…வெளியேறியேவிட்டார். தன் மென்மையான குணநல வெளிப்பாட்டினால் ரசிகர்களின் மனவெளியில் கோலோச்சிய ஓவியா நிகழ்ச்சியிலேயே இல்லையா? செம கடுப்பில்இ ருக்கிறார்கள் ஓவியா ரசிகர்கள். அவரின் சோகக் கதையைக்கேட்டு கமல் ஹாசனும் கண்கலங்கினார் (பெண் என்றாலே நெகிழ்பவராயிற்றே. ஓவியாவுக்காக உருகாவிட்டால் எப்படி?) ஏன், ப்ரொக்ராமை நடத்தும் ஸ்டார் விஜய் சேனலுக்கேகூட ஓவியா வெளியேறியது பிடிக்கவில்லையாமே. ‘’ஆரவ்வை என்னால் மறக்கமுடியாது. அவர் என்னிடம் வருவார்!’’ உணர்ச்சியின் உச்சத்தில்ஓவியா வார்த்தைகளை விட்டுவிட, ’என் மகள் அப்படிப்பட்டவளல்ல. நிஜத்தில் அவளுக்கு நடிக்கத் தெரியாது !’ என்று சாவகாசமாக அறிவிக்கிறார் அவருடைய அப்பா. (இவரைப்போய் யாருய்யா இண்டர்வியூ எடுத்தது?) மேலும் பிக் பாஸ் அறிவிப்புகள்/யூகங்கள். ஜூலியும் வெளியேறிவிட்டார். ஓவியாவை திருப்பிக்கொண்டுவர முயற்சி? ’ஓவியாவைப்பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்!’ – நடிகர் சித்தார்த் (இவரு இப்ப எங்கேர்ந்து வந்தாரு?) பாரதியின் புதுமைப்பெண் போன்றவர் ஓவியா-ஆதலினால் காதல் செய்தார்! –இயக்குனர் சீனு ராமசாமி. அட! அட! இந்த ஓவியா யாரயும் விட்டுவைக்கல போலருக்கே. க்ரிக்கெட்டில் ’பாரத் ஆர்மி’ மாதிரி, தமிழ்நாட்டில் இப்போது ’ஓவியா ஆர்மி’ ஒன்று உருவாகிவிட்டதாமே. ஓவியா இல்லாத பிக் பாஸ், ஜெயலலிதா இல்லாத அதிமுக, சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் என்றெல்லாம் ஏதேதோ எண்ணித் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி ஓவியா, ஓவியா என மீடியா அலை அலையாக மேலெழுப்ப, நான் திக்குமுக்காடி, மனதுக்குள் அவராகவே மாறி அவரது எமோஷன்களை, உளைச்சல்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றியது. சே! இந்த மீடியாக்கள் நம்மை கொன்றுப்போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வார்கள். இன்னொரு காஃபி கிடைத்தால் பரவாயில்லை. மனமெல்லாம் ஓவியா..மனைவியிடம் போய் காஃபியா? விண்ணப்பிப்பதில் அர்த்தமேதுமில்லை. இதற்குப் பதில் இன்னொரு ஆதார் கார்டிற்கு விண்ணப்பித்துப் பார்க்கலாம். இந்திய அரசு இளகிய அரசு; கொடுத்தாலும் கொடுத்துவிடும்.

மேற்கொண்டு செய்திகளைக் கண் மேய்ந்தது. ஜியோவோடு போட்டிபோடும் ஏர்டெல். ம்ஹும்! ரொம்ப முக்கியம். மோதி-அமித் ஷாவினால் காங்கிரஸுக்கே நெருக்கடி!- பின்ன என்ன செய்யணும்கிறீர் ஜெயராம் ரமேஷ். அரசியல்ல நெருக்கடிகூட இருக்கக்கூடாதா ? நல்லா இருக்குய்யா நீர் சொல்றது! மேல..மேலப் போனதில் தட்டுப்பட்டார் ஒருவர். விஜய்சேதுபதி. ’யாரு?’ என்று என் மனசைக் கேட்டுவைத்தேன். ’’அட நம்ம விஜய் சேதுபதி..சூப்பர் ஆக்டரு! விக்ரம் வேதாவுல கலக்கிருக்கார்ல..தெரியாது? மொதல்ல நீ தமிழ்ப் படங்கள கொஞ்சம் உருப்படியாப் பார்க்கப்பாரு..அப்பறமா சீனா-இந்தியா, வடகொரியா-அமெரிக்கா, சிரியா-ஈராக்னு உலக அமைதியப்பத்தில்லாம் கவலப்படலாம்!’’ – மனசு என்னை வன்மையாகக் கண்டித்தது. காலையிலேயே அர்ச்சனை? கேட்டுக்கொண்டேன்; மனசின் அடக்குமுறை ஆட்சியில்தானே இருக்கிறேன் நான்? இப்ப என்ன விஜய்ரகுபதி..சாரி, விஜய் சேதுபதியா…சரி, அவரப்பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்? சிந்தனையோடு மேலே கண்களை ஓட்டினேன். ’’புதிதாக பிஎம்டபிள்யூ வாங்கினார் விஜய் சேதுபதி. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்…’’ ஓ..! ’’அவர் வாங்கியிருக்கும் காரின் நிறம் வெள்ளை..அவரது மனதைப்போலவே!’’ மேலும் உருகி எனது செண்டர்-டேபிள் மீதெல்லாம் வழிந்தது தமிழ்மீடியா. எனவே, கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு வாழ்வெல்லாம் புலம்பிப் புண்ணாகிக் கதை ஓட்டுவோரே.. விடாதீர்கள்.
முன்னேறுவதற்குக் கடுமையாக முயலுங்கள். அப்படி ஒருவேளை முன்னேறியேவிட்டால், மறக்காமல் வாங்கிவிடுங்கள் ஒரு பிஎம்டபிள்யூ. ஞாபகம் இருக்கட்டும் கலர் வெள்ளை. உங்கள் வெள்ளந்தி மனசோடு மேட்ச் ஆகணும் இல்லையா?

**

குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

இதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்!’ என்கிறார்! அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன.

தமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான நடிப்பாற்றலுடையவர்களில் ஒருவர். சராசரிக் கலைஞர்களைப்போலல்லாமல் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்து இறங்குபவர். ஆரம்பத்திலிருந்தே இறைமறுப்புக் கொள்கையில் விசுவாசம் காட்டுபவர். தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் மனிதர். நெடுங்காலமாகவே, நல்ல எழுத்துக்கு மனம் கொடுப்பவராக இருக்கிறார். தமிழ் எழுத்துலகில் முன்பு சுஜாதா, தற்போது ஜெயமோகன் எனத் தொடர்ந்து அணுக்கமாயிருப்பவர் கமல் ஹாசன். கவிதை எழுதும் திறனும் வாய்த்திருக்கிறது. சினிமா என்கிற கலையைப்பற்றி கூரிய அறிவுள்ளவராக விமர்சகர்களாலும் அறியப்படுகிறார். தற்கால சினிமா, அதன் பல்வேறு துறைகள் சார்ந்த மாற்றம்பற்றி நுட்பமாக, தீவிரமாகப் பேசும் வல்லமை அவரிடம் காணப்படுகிறது. டிவி நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டி, அடுத்த தளத்திற்கு விவாதக்களத்தை எடுத்துச் செல்லக்கூடியவர். ஆனால் அதனை விரும்பாதவர்களாக, தாங்கமுடியாதவர்களாக, பேட்டியாளர்கள் கேள்வியை மாற்றியோ, அல்லது அசடுவழிந்தோ நேர்காணல்களை பேருக்கு நடத்திச்செல்வதை, தேசிய சேனல்களில் சிலவருடங்களாகக் கண்டு வருகிறேன். ஒன்று – கமல் ஹாசன் எடுத்துவைக்கும் கருத்துக்கள், அவரிடம் காணப்படும் துறைசார்ந்த அறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு பேட்டியாளர்களிடம் சரக்கில்லை. அல்லது – அவ்வளவு விஸ்தாரமாக நேர்காணல் செல்வதை அந்த சேனலே விரும்பவில்லை என இதற்கான காரணங்கள் இருக்கக்கூடும்.

தான் சார்ந்த துறைதாண்டியும், ஜனநாயகம், குடியரசு, மக்களுரிமை, தனிமனித உரிமை என அக்கறைகொள்ளும் மனிதராகத் தன் அடையாளத்தை அமைத்துக்கொண்டுள்ளவர் கமல் ஹாசன். ஆனால் இவைபற்றி பொதுவெளியில் முன்பெல்லாம் அதிகமாக, தீவிரமாக அவர் ப்ரஸ்தாபித்ததில்லை. கடந்த டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த அசுரவெள்ளத்தின்போது கொஞ்சம் வாய் திறந்து மக்களின் துன்பம்பற்றிப் பேசியும், நேர்காணல்கொடுத்துமிருந்தார். அப்போதும் அவர் சொன்னவை சரியாகப் புரிந்துகொள்ளப்படாமலும் அல்லது திரித்து சொல்லப்பட்டும் சிக்கல் ஏற்பட்டபோது, அதனை அவரே விளக்கித் தெளிவுபடுத்தவேண்டியதாயிற்று. தனது விமர்சனத்தைக் கவிதையாக சமூக தளங்களில் அவர் எழுதிவிட்டாலோ கதையே வேறு. ’ஐயோ, தலைவா! என்ன எழுதியிருக்கீங்க, புரியலையே!’ என அவரது ரசிகர் குழாமே அலறுகிறது! அவரோ, பிறரோ பிற்பாடு அதனை விளக்கிச்சொல்லவேண்டிய நிலை. ஒரு சமயத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், யாரோ எழுதிய கவிதை ஒன்று முகநூலில் உலாவர, கமல் ஹாசனின் கவிதை அது என முந்திரிக்கொட்டை மீடியாவில் முதலில் குறிப்பிடப்பட்டது. பிறகு கமலே ‘அதை நான் எழுதவில்லை’ என வேகமாக மறுக்கும்படியும் ஆனது. ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போதும் தமிழ் இளைஞர் எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் துணைபோகுபவராக அறியப்பட்டவர் கமல்.

மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்குத் திரும்பிய ஆளுமையான ஜெயலலிதாவின் அதிர்ச்சி மறைவுக்குப்பின், தமிழ்நாட்டில் ஒரு குழப்பமான, ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. விதம்விதமான அரசியல் பித்தலாட்டங்கள், குட்டைகுழப்பல்களுக்குப் பதமான நிலமாகப்போய்விட்டது தமிழ்மண். இதனைப் புரிந்துகொள்ள எவரும் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அரசியல் நிபுணராக ஆகவேண்டியதில்லை. முதன் முதலில் இந்த அவலநிலைபற்றிக் கவலைப்பட்டுக் கருத்துச்சொன்னவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஒரு மர்மமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று சொல்லி எண்ணற்ற தன் ரசிகர்களோடு, நடுநிலையாளர்கள், அரசியல் விமரிசகர்களையும்கூட கவனிக்குமாறு செய்தார் அவர். அப்போது சில அரசியல்வாதிகளால் ரஜினி மட்டம் தட்டப்பட்டார். பிறகு கொஞ்ச நாட்கள் சென்றபின் ‘சிஸ்டம் சரியில்லை’ என ரஜினி தடாலெனச் சொன்னபோது, எங்கே இந்தமுறை அரசியல் களத்தில் குதித்தேவிடுவாரோ எனப் பேச்சு தீவிரமாக அடிபட ஆரம்பித்தது. அத்தகைய வாய்ப்புபற்றிய மனத்தோற்றமும்கூட, சில அரசியல் குழுக்களுக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய குழப்பும் அரசியல் பற்றி, முன்னேற்றம் தடுக்கும் மலிந்துபோன ஊழல்பற்றி குரலுயர்த்திப் பேச ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன் ; மனம் திறந்து, சமூகத்தளங்களில் கருத்துக்களை முன்வைக்கிறார். ’’முந்திச்செல்வதல்ல, முன்னேற்றத்தின்பின் செல்வதுதான் பெருமை’’ என முழங்குகிறார். ஊழல் புகார்களைப் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மின்முகவரிக்கே நேரடியாக அனுப்புமாறும் கோரி பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார்! மக்கள்நலன்மீது உண்மையான அக்கறையுடன் பேசும், கேள்விகேட்கும் நல்மனங்கள் – அவர்கள் யாராயினும் – ஊக்குவிக்கப்படவேண்டும். பொதுஆதரவு அவர்களுக்குத் தரப்படவேண்டும். இந்த ரீதியில்தான், இந்திய ஜனநாயகத்தில், மாநில முன்னேற்றத்தில், அக்கறைகொண்ட கமல் ஹாசன் போன்ற கட்சிசாரா பிரபலங்கள், பொதுவெளியில் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டும். ‘நேற்றுத்தானே கமல் இந்தக் கேள்வியைக் கேட்டார், முந்தாநாள் ஏன் கேட்கவில்லை?’ என்பது போன்ற குருட்டுவாதங்கள் இங்கே அர்த்தமற்றவை; மக்கள்மேடையின் முன் அவை எடுபடாது.

ஊழலுக்கெதிராக கமல் ஹாசன் எழுப்பும் நேரிடையான கருத்துக்கள், சமூகவலைத்தள விமர்சனங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு, குறிப்பாக அவருடைய பரவலான ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்களுக்கோ இவை தீராத குடைச்சல்களாக மாறியிருக்கின்றன. ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திய வாயோடு, அங்கிங்குமாக உலவிய அவரது கட்சிப் பிரமுகர்களெல்லாம், கமல் ஹாசனை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, இப்போது இஷ்டம்போல் எதிர்வசனம் பேசிவருகின்றனர். ’தமிழ்நாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் கமல் ஹாசன்? அரசியலில் நேரடியாகக் குதிக்க தைரியம் உண்டா?’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கமல் ஹாசனின்மீது பாய்ச்சல். கேலி, கிண்டல். கமல் ஹாசனும் விடாமல் ‘இந்த ஆட்சி தானாகவே கலையும்..’ என்று விவாதத்தை முடுக்கிவிடுகிறார். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த மீடியாவின் வாயில், வேகவேகமாக அவலை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருதரப்பினரும்! கேட்கவேண்டுமா இனி?

**