முந்தைய பதிவில் எழுத்தாளர் ஆர்.சூடாமணிபற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தோம்.
அவருடைய எண்ணற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘இணைப் பறவை’ நடுத்தர வகைக் குடும்பம் ஒன்றின் உறவுநிலைகளின் ஆழமான இழைகளை கூர்ந்து பார்க்க முனைகிறது. குறிப்பாக வீட்டின் பெரியவரான தாத்தாவின் நடவடிக்கைகளை சிலநாட்களாக அவரது பேத்தி, வளர்ந்து பெண்ணாகி நிற்கும் ஸ்ரீமதி, அவதானிக்க ஆரம்பித்திருக்கிறாள். மற்றவர்களும் – அதாவது பிள்ளை, மருமகள், பேரன்கள் என வீட்டினுள் உறவாடும் உறவுகள் – அவர் அருகிருந்தும், ஒரு அந்நியரைப் பார்ப்பதைப்போல் பார்க்கின்றனர். எளிதாகப் புரிபடாத, சூட்சும ஆழங்களா மனிதரின் குணாதிசயத்தில்? ஏன் இப்படி இருக்கிறார் ? ஒருவேளை, புத்திகித்தி பிசகிவிட்டதா ?
எப்போதிலிருந்து இது? வீட்டின் பெரியமனுஷியான பாட்டி, அந்தக் குடும்பத்தின் எல்லா அம்சங்களிலும் அங்கம் வகித்தவள், தாத்தாவைக் கண் இமைக்காமல் நாளெல்லாம் கவனித்துக்கொண்ட ஜீவன், பொதுவாக குடும்பத்தில் எல்லாமுமாயிருந்த வயதான பாட்டி, காலமாகிவிட்டாள் சில நாட்கள் முன்பு. வெளியே அப்படித் தெரியாவிட்டாலும், அந்த வீடே குழப்பக் கூடாரமாகத்தான் மாறிவிட்டது. அச்சு கழண்ட வண்டியாய் நிலை தடுமாறுகிறது. பாட்டியின் மறைவு படுத்தும்பாடை அவரது பேத்தி உள்ளுக்குள் ஆழமாக வாங்கிக்கொள்கிறாள். வீட்டிற்குள் உலவிக்கொண்டே, பாட்டியில்லாத தாத்தாவை உன்னிப்பாக கவனித்துவருகிறாள். இடையில் துக்கம் கேட்டு வருகிறவர்களைவேறு சமாளிக்கவேண்டியிருக்கிறது…
ஒரு நாள் இப்படித்தான். வாசல் ஜன்னலிலிருந்து யாரோ வருவதைப் பார்த்து, உடனே வீட்டின் கொல்லைப்புறம்போய் நின்றுவிடுகிறார் தாத்தா. பேத்தி ஸ்ரீமதி தாத்தாவைத் தேடிவந்து சேதி சொல்லி முன்கூடத்திற்கு அழைக்கிறாள்:
’உங்களைப் பார்க்கத்தானே அவா..’
எனக்கு யாரையும் பார்க்க வேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சிடு..
உங்களைப் பார்க்காம போவாளா?
ஏதானும் காரணம் சொல்லேன்.. எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லேன்.
நம்பவே மாட்டா…
அப்ப நான் செத்துப்போயிட்டேன்னு சொல்லு.. போ.
ஸ்ரீமதி மறுபேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனைபேர் வந்துவிட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன். பாடம் ஒப்பிக்கிற மாதிரிதான்… ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால், தாத்தாவுக்கு எப்படி இருக்கும்?
அவள் எவ்வளவுதான் பேசித் தடுத்தாலும், துக்கம் கேட்கவந்திருந்தவர் போகாமல் தாத்தாவைத் தேடிக்கொண்டு பின்கட்டுக்கு வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் தாத்தாவிற்குள் ஒரு விறைப்பு. வந்தவர் துக்கம் கேட்க, தாத்தா அதனை அலட்சியப்படுத்தி வானத்தைப் பார்த்தால் மழை வருவதுபோலில்லை எனப் பேச்சை மாற்றுகிறார். வந்தவர் சோகப்புலம்பலைத் தொடர, தாத்தா ’ஒங்க ரெண்டாவது பையன் போன இண்டர்வியூ என்ன ஆச்சு, பாங்க் வேலயாத்தானே அந்த இண்டர்வியூ’ என்றெல்லாம் கேட்டு வந்தவரைத் திணற அடித்து அனுப்பிவிடுகிறார். துக்கம் கேட்கவந்தவர் வாசலுக்கு வந்து வெளியேறுகையில் தன் நண்பர்களுடன் தாத்தாவைப்பற்றிச் சொல்வது ஸ்ரீமதியின் காதில் விழுகிறது: “என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !”
ஸ்ரீமதி கொல்லைப்புறம் திரும்பி அங்கு நின்றிருக்கும் தாத்தாவைப் பார்க்கிறாள். தாத்தா எச்சரிக்கிறார்:
“இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை” என்றார் தாத்தா.
“சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்”
ஒரு ராத்திரி வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் தாத்தா வரவில்லை. கொல்லைக்கட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார். தாத்தாவின் பிள்ளை ரங்கனும் மாட்டுப்பெண் கனகமும் பேசிக்கொள்கிறார்கள்:
“இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்” என்றார் ஸ்ரீமதியின் தந்தை.
“சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு” என்றான் ஸ்ரீமதியின் தம்பி.
“பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா”
……
“இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து” என்றாள் ஸ்ரீமதியின் தாய்.
“பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுதுட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது” என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.
“அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் , நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?”
“நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா”
“நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது” என்கிறாள் கனகம், ஸ்ரீமதியின் அம்மா.
இன்னொரு நாளில் தாத்தாவின் பேரக்குழந்தைகள் ஸ்ரீமதியும் வாசுவும் அவர்கள்மாட்டுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்:
ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “எனக்கே தெரியலேடா ?” என்றாள்.
“பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே.”
“ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது”
“அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது …” என்கிறான் ஸ்ரீமதியின் தம்பி.
இப்படி ஒவ்வொருவர் வாயிலும் தினம் விழுந்தெழுகின்ற தாத்தா. கவலைப்பட்டு நோகும் ஸ்ரீமதி.. ஏதேனும் புரிந்துகொள்ளமுடிந்ததா அவளால் தன் தாத்தாவைப்பற்றி ? தொடர்ந்து படியுங்கள் ..ஆர்.சூடாமணியின் ‘இணைப் பறவை’
லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2010/07/blog-post.html
நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.
**