மெல்போர்ன் (Melbourne, Australia) நகரத்தில் 29-1-2016 அன்று நடைபெற்ற இரண்டாவது டி-20 ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா தொடரையும் வென்றது. வெகுநாளைக்கப்புறம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நிகழ்த்தியிருக்கும் தொடர் வெற்றி இது.
நேற்றைய ஆட்டத்திலும் முதலில் பேட் செய்ய நேர்ந்த இந்தியாவுக்கு ஷிகர் தவன் (Shikar Dhawan), ரோஹித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தனர். 68 பந்துகளில் 100 ரன்களை எட்டிய இந்தியா, ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு தண்ணி காட்டியது. தவன் வேகமாக விளாசிய 42 ரன்களுக்குப்பின் களத்துக்கு வந்த விராட் கோஹ்லி ஆரம்பத்திலிருந்தே நல்ல மூடில் இருந்ததாகத் தோன்றியது. விறு விறு வேகம் காண்பித்த கோஹ்லி முதலில் ஷர்மாவுடனும், இறுதியில் தோனியுடனும் இணந்து சிறப்பாக ஆடினார். அருமையாக ஷாட்கள் விளையாடிய ஷர்மா 60 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். தோனி(Dhoni) கடைசி ஓவரில் வீழ்ந்தபோதும், கோஹ்லி 33 பந்துகளில் 59 ரன்களை அனாயாசமாக அள்ளினார். இந்தியா 184 என்கிற உயரத்தில் தன் ஸ்கோரைக் கொண்டுபோய் நிறுத்தியது. ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது.
பதிலளிக்க வந்த ஆஸ்திரேலியா, இந்த மேட்ச்சை இந்தியாவிடம் இழந்துவிடக்கூடாது என்கிற பரபரப்பில் இருந்தது. அதிரடி ஆட்டத்துடன் தன் கதையை ஆரம்பித்தது. குறிப்பாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் (Aaron Finch). அருமையான ஆட்டம். ஆரம்பத்தில் பந்துவீசிய ஆஷிஷ் நேஹ்ராவும், ஜஸ்ப்ரித் பும்ராவும் (Jasprit Bumrah) தாக்கப்பட்டனர். இளம் இந்திய வீரர் பும்ராவை ஆஸ்திரேலியர்கள் குறி வைத்திருந்தது தென்பட்டது. 10-ஓவருக்குள் 94 ரன்கள்! ஆனால் தோனி, ஸ்பின்னர்களை இறக்கிவிட்டதும், ஆஸ்திரேலியா தடவ ஆரம்பித்தது. அதன் ஆதிக்கம் ஆட்டம் கண்டது. பனிவிழுந்த இரவில் (பகல்-இரவு ஆட்டம் இது-இந்தியா இரவைல் பௌலிங் செய்தது ), ஈரமும், பிசுபிசுப்பும், ஸ்பின் பௌலிங்குக்கு எதிராகவே இருந்தது. ஆயினும் அஷ்வின், ஜடேஜா, யுவராஜ் சிங் ஆகியோர் மிகுந்த லாவகத்துடன் பந்து வீசினர். சாதுர்யமான சுழல்பந்துவீச்சு. எதிர்கொள்ளமுடியாத ஆஸ்திரேலிய விக்கெட்டுகள், ஆடிக் காற்றிலே வேப்பம்பூ போல் உதிர ஆரம்பித்தன.
இந்திய வீரர்கள் இடையிடையே மோசமாக ஃபீல்டிங் செய்து எரிச்சலை ஊட்டினர். அஷ்வினின் பந்துவீச்சில் ஃபின்ச் அடித்த பந்து, `பிடி` என்பதுபோல தவணின் கையில்போய் விழுந்தது. அவருக்கு அது பிடிக்கவில்லையோ ! தடுமாறி கேட்ச்சை நழுவவிட்டார். அஷ்வின் தலையைப் பிய்த்துக்கொண்டார். வேறென்ன செய்ய? ஆனால், சில அற்புதங்களும் நிகழ்ந்தன: ஜடேஜாவின் பந்துவீச்சில், பௌலரின் தலைக்குமேலாக ஆக்ரோஷமாக ஷேன் வாட்சன் தூக்கி அடித்தார். தீக்கதிராய் சீறிய பந்தை உயர்த்திய கையுடன் எம்பி மின்னலாக லாவினார் ஜடேஜா. வாட்சனுக்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை போலும். சில நொடிகள் பிரமை பிடித்து நின்றார். பின் நடையைக் கட்டினார். இன்னொரு சுவாரஸ்யம்: யுவராஜ் வீசிய சுழல்பந்தை சிக்ஸர் அடிப்பதற்காக கோட்டிற்கு வெளியே பாய்ந்த மேக்ஸ்வெல் அதை நழுவவிட, பந்து தோனியின் கையில் சிக்கியது. மின்னல்வேகத்தில் ஸ்டம்ப்பிங்! சில சமயங்களில் இப்படியும் செய்வாரு நம்ம கேப்டன் !
19-ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஆஸ்திரேலியாவின் கழுத்தில் கை வைத்தார் ஆஷிஷ் நேஹ்ரா. இதுவரை விக்கெட் எடுக்கமுடியாமல் தவித்திருந்த பும்ராவிடம், தோனி கடைசி ஓவரை வீசுவதற்காகப் பந்தைக் கொடுத்தார். சவாலை ஏற்ற பும்ரா, 3 கூர்மையான யார்க்கர்களை வீசி ஆஸ்திரேலியாவை மூச்சுத் திணறச்செய்தார். எதிரணி ஜெயிக்க வாய்ப்பற்றுப்போன நிலையில், 6 ரன்கள் மட்டும் கொடுத்து 2 ஆஸ்திரேலிய வீரர்களைக் கடைசி ஓவரில் காலிசெய்தார். இந்தியாவை வெற்றிப்படிகளில் ஏற்றிவைத்தார் ஜஸ்ப்ரித் பும்ரா.
58000-க்கும் மேற்பட்ட ரசிகர் கூட்டம் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் உற்சாகத்தில் பொங்கி வழிந்தது. இந்திய வம்சாவளி ரசிகர்களுக்கு அருமையான கிரிக்கெட் விருந்து. அவர்கள் இந்தியக் கொடிகளை அசைத்தாட, இந்திய வீரர்களின் உற்சாகம் கரைபுரண்டது. அதன் விளைவு அவர்களின் ஆட்டத்தில் தெரிந்தது. அடுத்த போட்டி சிட்னியில் நாளை(31-1-2016).
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் அபார சாதனை: 29-1-2016 வெள்ளிக்கிழமை மங்களகரமாக முடிந்தது இந்தியாவுக்கு. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலேயே, டி-20 பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில், மித்தாலி ராஜ் (Mithali Raj) தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை 2-0 என்கிற கணக்கில் வென்றது. சிறப்பாக ஆடிய மித்தாலி, அவுட் ஆகாமல் 37 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி மேடையில் ஏற்றி வைத்தார். சிறப்புப் பங்களிப்பு செய்த மற்ற இந்திய வீராங்கனைகள்: மந்தனா (பேட்ஸ்வுமன்), ஜூலன் கோஸ்வாமி (Jhulan Goswami) (பௌலர்). முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில், வலிமை மிகுந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி சரித்திரம் படைத்தது இந்தியப் பெண்கள் அணி. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு சிலமணி நேரங்கள் முன்பு, அதே நகரில் நமது பெண்கள் நிகழ்த்தினார்கள் இந்த சாதனையை ! இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் பற்றி: தமிழ்நாட்டைச் சேர்ந்த, இந்திய வான்படையில் பணிபுரியும் துரை ராஜ் என்பவரின் மகள். ராஜஸ்தானில் பிறந்த மித்தாலி ராஜ், ஹைதராபாதில் வசிக்கிறார். பெண்கள் ஒரு-நாள் சர்வதேச கிரிக்கெட்டில் 5000-க்கும் மேல் ரன்கள் விளாசிய உலகின் இரண்டாவது பேட்ஸ்வுமன் மித்தாலி ராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர். சர்வதேச மகளிர் கிரிக்கெட் சாதனைகளுக்காக மத்திய அரசின் அர்ஜுனா விருதும், பத்மஸ்ரீ விருதும் வென்றவர்.இவ்வளவு சாதித்தும், குடத்திலிட்ட விளக்குபோன்று ஆரவாரமின்றி வாழ்பவர் மித்தாலி ராஜ்.
இந்தியப் பத்திரிக்கைகள், நேஷனல் டிவி சேனல்கள் மித்தாலி ராஜின் சாதனைகளை இதுவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் செய்த அரும்பெரும் பாக்யம்!
**