உலக ஜுடோ சேம்பியனான இந்திய சிறுமி!

உலக ஜுடோ கேடட் சேம்பியன்ஷிப் போட்டிகள் சில நாட்கள் முன்பு போஸ்னியா-ஹெர்ஸகோவினா (Bosnia Herzegovina) நாட்டுத் தலைநகரான ஸரயேவோவில் (Sarajevo) நடைபெற்றன. இந்தியப் பெண் அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் 16-வயது சிறுமி லிந்த்தோய் சனம்பம் (Linthoi Chanambam) பிரேஸிலின் கடும் சவாலை எதிர்கொண்டு உலக சேம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

2018-ல் தேசிய சப்-ஜூனியர் போட்டிகளில் இவர் சேம்பியன் ஆனபோது, சரி, இந்தியாவில் எதிர்கால ஜூடோ ஸ்டாராக வர வாய்ப்பு இந்த சிறுமிக்கு இருக்கிறது என்கிற அளவில் கணித்திருந்தார்கள், ஜூடோ வல்லுநர்கள். கடந்த ஆண்டு நவம்பரில் தன் 15-ஆவது வயதில், தேசிய சேம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார்.  ஜூலையில் தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த போட்டிகளில் ஆசிய ஜூனியர் ஜூடோ சேம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி அதிர்வுகளை ஏற்படுத்திய லிந்த்தோய், உலக சேம்பியன்ஷிப் அரங்கிலும் போட்டுத்தாக்குவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். பிரேஸிலின் அந்த அனுபவ வீராங்கனை (15 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டவர்) பியாங்கா ரெயிஸ் (Bianca Reis) தன் இந்திய எதிரியை சரியாகப் பார்த்திருக்கக்கூடமாட்டார். பின்னே? சர்வதேச ஜூடோ அனுபவம் கூடிய எதிர்கால சேம்பியனை, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் யாரோ ஒரு குட்டிப்பெண் எதிர்ப்பாள் என்பதிருக்கட்டும், புரட்டிச் சாய்ப்பாள் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்?

எப்படி ஆரம்பித்தது இந்த சாதனைப்பயணம்? லிந்த்தோய் மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கருகிலுள்ள  மயாங் எனும் சிற்றூரில் ஒரு சாதாரண விவசாயியின் மகள். அவரது 3 பெண்களில் நடுவில் வந்தவர். சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோதே தன்னை ஒரு சிறுவனாகவே உணர்ந்ததாகவும், பசங்களுடன் சேர்ந்து ஓட்டம், கால்பந்து போன்றவற்றில் கலந்துகொள்வதே வழக்கம் என்கிறார்.  இதைக் கவனித்த விளையாட்டு ரசிகரான அப்பா சந்தோஷப்பட்டதோடு, அருகிலுள்ள ஜூடோ பள்ளியில் சேர்த்துவிட்டார் தன் பெண்ணை. அங்கே சிறுமியின் எனர்ஜி, வேகம், உடல்மொழி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஓரிரு வருடங்களில், 11 வயது சிறுமியாய் லிந்த்தோய் இருக்கையில், அங்கு வருகிறார் ஒரு நிபுணர்.  IIS (Inspire Institute of Sports, Bangalore)-ன் இளம்பிஞ்சுகள் உலகத்தில் எதிர்கால வீரர்களைக் கண்டறியும் ஜூடோ கோச்/நிபுணர் மமுகா பஸிலாஷ்விலி.(Mamuka Basilashvili-ஜார்ஜியா நாட்டவர்) கண்டதும் உடனே புரிந்துகொண்டார் சிறுமி லேசுப்பட்டவளல்ல என்று! கஷ்டப்பட்டு குடும்ப அனுமதி பெற்று, சிறுமியை பெங்களூருக்கு அழைத்துவந்து, ஸ்போர்ட்ஸ் இன்ஸ்ட்டிடியூட்டில் 2017-ல் ஜூடோ பயிற்சிக்காக சேர்த்துவிட்டார்.

படம்: இந்தியாவின் ஜூடோ இளவரசி !

கேடட் (U-18) சேம்பியன்ஷிப் தங்கப்பதக்கத்தை வென்ற லிந்த்தோய் சொல்கிறார்: ’ஏதாவதொரு பதக்கத்தை இங்கிருந்து கொண்டு செல்லவேண்டும் எனத்தான் இங்கே வந்திருந்தேன். அதற்காக மேடையில் சாகவும் தயாராக இருந்தேன்!’ தங்கத்தை வென்றவுடன் ஒரு குட்டிச் சிங்க கர்ஜனை கொடுத்த சிறுமி அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். தன் கோச்சைக் காணவில்லையே என்ற அதிர்ச்சி, ஏமாற்றம். பிறகுதான் என்ன நடந்தது எனத் தெரிந்திருக்கிறது. ஃபைனல் போட்டியின் போது ரெஃப்ரீயின் தவறினால் சில பாய்ண்டுகளை இழந்திருக்கிறார் லிந்த்தோய். அதனால் அரங்கில் கோபப்பட்டுப் பேசியிருக்கிறார் கோச் மமுகா. அரங்கத்துக்காரர்கள்  அவரை எச்சரித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு லாவகத்தில் ப்ரேஸில் வீராங்கனையை நொடியில் கீழே சாய்த்திருந்த லிந்த்தோய்க்கு ‘இப்போன்’ (ippon -ஜப்பானிய பாணியில் அதிக பாய்ண்ட்டுகள்) கொடுத்திருக்கவேண்டும்.  ஆனால் வஸா-அரி (Wasa-ari) எனும் இரண்டாவது க்ரேடிங் பாய்ண்ட்தான் அவருக்கு ரெஃப்ரீயால் தரப்பட்டது. இன்னும் ஒரு நிமிஷம் தானே இருக்கிறது, என் சிஷ்யையை ஜெயிக்கவிடாமல் செய்கிறார்கள் என ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சத்தம்போட்ட, இந்திய கோச்சை அங்கிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அரங்கத்துக்குள் அவர் இனி நுழையக்கூடாது என்கிற தடையையும் விதித்துவிட்டார்கள். இந்தியாவாவது, ஜூடோவில் ஜெயிப்பதாவது என்கிற அலட்சியம், அக்ரமம்தான், வேறென்ன.

ஆனால் தங்கத்தை வென்றுவிட்ட லிந்த்தோய், அவரது கோச் மமுகா இருவரையும் சர்வதேச ஜூடோ சங்கம் மாலையில் நேர்காணலுக்கு அழைத்தது. கோச்சிற்குத் தடை விதித்த ஆட்ட, அரங்க ஏற்பாட்டாளர்களுக்கு  ரொம்ப அவமானமா போயிருச்சாம்.. இது எப்படியிருக்கு!

2024-ல் நிகழவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஏதாவது ஒரு மெடலைத் தூக்கிவிடவேண்டும் என்பதுதான் என் ஆசை! என்கிறார் மணிப்பூர் மாமனுஷி லிந்த்தோய் !

**

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: ஜெய் ஹிந்த் !

அனல் பறந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில், ஆயிரக்கணக்கில் ஸ்டேடிய ரசிகர்கள் மூவர்ணத்துடனும், பச்சை-வெள்ளையுடனும் ஆர்ப்பரிக்க, துபாயில் நேற்று இரவு (28-8-22) இந்தியா பாகிஸ்தானைப் பழிதீர்த்தது! ஆல்ரவுண்டர்கள் ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் வெற்றி வியூகங்களில் தங்களின் பங்கு எவ்வளவு கூர்மையானது என மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காண்பித்தார்கள்.  இவர்களின் ஆட்டத்திறனும், மன உறுதியும் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் கைப்பிடியிலிருந்த ஆட்டத்தை அஸால்ட்டாக லாவி  இந்தியாவின் கைக்கு மாற்றியது. கிரிக்கெட் இரவின் அதீத போதை உலகெங்குமுள்ள இந்திய ரசிகர்களைக் கிறுக்கிறுக்கவைத்தது! கடைசி ஓவர் சிக்ஸரில் வெடித்த இந்திய வெற்றி 11:40-க்கு பெங்களூரில் எங்கள் ஏரியாவில் வாணவெடிகளை படார் படாரென  மேலுயர்ந்து சிதறவைத்தன. தூங்காத இளைஞர்கள், சிறுவர்கள் வீதிகளில் வந்து கோஷமிட்டுக்கொண்டிருந்தார்கள். இது சிலபல இந்திய நகரங்களில் நிகழ்ந்திருக்கும்தான்.

துபாய் மேட்ச்சின்போது கொடிகளின் ஆட்டபாட்டம் (Courtesy; DNA, Mumbai)

டாஸை வென்று பாகிஸ்தானை உள்ளே அனுப்பிய இந்தியா, வேகவேகமாக எதிரியின் விக்கெட்டுகளுக்கு வேட்டு வைத்தது. பும்ரா, ஷமி டீமில் இல்லை என்கிற உணர்வே ஏற்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட பாக். கேப்டன் பாபர், ஃபகர் ஜமன், குஷ்தில் ஷா போன்றவர்கள் அடிக்கவிடாமல் வெளியேற்றப்பட, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்(43) பொறுப்பாக ஆடினார். துணை ஓரளவு கொடுத்தவர் இஃப்தகார்அஹ்மது (28). மற்றவர்கள் சும்மா ’ஆயாராம்.. கயாராம்’ தான்! புவனேஷ்வர் குமார், ஹார்திக் பாண்ட்யா. அர்ஷ்தீப் சிங் என இந்திய வேகப்பந்துவீச்சு விளையாடிக் காண்பித்தது. ஒரு கட்டத்தில் 130-க்கருகில் பாகிஸ்தான் சமாப்தி ஆகிவிடும்போலிருந்தது. 10, 11 எண்வரிசையில் ஆடிய பாக். பௌலர்கள் சிக்ஸர், பௌண்டரி எனக் காட்டியதால் 147 வரை போய்விட்டது. புவனேஷ்வர் குமார் 4, பாண்ட்யா 3, அர்ஷ்தீப் சிங் 2, ஆவேஷ் கான் 1 எனப் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தார்கள். ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்காதது ஆச்சரியம். கேட்ச்சுகளை நழுவவிட்டதும் காரணம். இந்திய ஃபீல்டிங் மோசமாகத்தான் இருந்தது.

இந்தியா 148-ஐத் துரத்துகையில், முதல் பந்தில் ரோஹித் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் வீட்டுக்கு ஓடிவிட்டார் துணைக் கேப்டன் ராஹுல்! ஃபார்மைத் தேடும் கோஹ்லி அடுத்தாற்போல். இந்த விக்கெட்டும் எந்த நிலையிலும் விழுந்துவிடும் என ரசிகர்கள் சலித்திருக்க, வெகுநாட்களுக்கப்புறம் கோஹ்லி சில நல்ல ஷாட்களை ஆடி ஆச்சர்யப்படுத்தினார். ரன்கள் ஆரம்பத்தில் ஏற அவர்தான் காரணம். ஃபார்மில் வந்துவிட்டார்யா நம்ப பழைய கேப்டன், இன்று மேலும் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாகையில் சிக்ஸர் அடிக்க பிரயத்னப்பட்டு பாக் ஸ்பின்னர் நவாஸிடம் வீழ்ந்தார். சேர்த்த ரன்கள் 35. டீஸண்ட். நாலாவதாக ஆடவந்தார் ரவீந்திர ஜடேஜா. தூக்கி விளாசும் திறனுள்ள ஜடேஜாவால் நிதானமாகவும் ரன் சேர்க்கமுடியும் என்பதே காரணம். அவர் ஏமாற்றவில்லை. முதலில் சூர்யகுமாருடன் சிறிய பார்ட்னர்ஷிப். அப்புறம் பாண்ட்யாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவுக்கு வெற்றி வாங்கித்தந்தபின் தான் வெளியேறவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு வந்திருந்தார்போலும். அடுத்த பக்கம் பாண்ட்யா நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்பதில் கவனம் காட்டி நிதானம், அவ்வப்போது அதிரடி என பாகிஸ்தானுடன் பந்துவிளையாட ஆரம்பித்திருந்தார். ஜெயித்துவிடலாம் என மனப்பால் குடித்திருந்த பாகிஸ்தானுக்கு இப்போது வியர்வை மழை. இவன்களைப் பிரித்தாலொழிய வெற்றி சாத்தியமில்லை என்பதைப் புரிந்தவாறு அபாரமாக பந்துவீசியது, ஃபீல்டிங் செய்தது எதிரி அணி. ஒரு கட்டத்தில் பௌண்டரி வரும் என்றே தோன்றவில்லை. ஜடேஜாவும், பாண்ட்யாவும் சிங்கிள், சிங்கிளாக வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரே காந்தாக காந்திய துபாயின் மோசமான சீதோஷ்ண நிலை மைதானத்தில் அனல் அலைகளைப் பரப்பிவைத்தது.

கால் சுளுக்கை/வலியை வாழ்வில் முதன்முறையாக அனுபவிக்கும் அப்பாவி பாக். வீரர்கள்!

18-ஆவது ஓவர் போடப்படுகையில் இந்தியா ஜெயித்துவிடும்போலிருக்கிறதே என்கிற பதற்றம் பாகிஸ்தானி கேம்ப்பில் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஓவரைப் போட்ட பாக். பொடியன் சர்வதேச டி-20 யில் முதல் மேட்ச் ஆடிய நஸீம் ஷா.  தன்னை  அபார பௌலராக (வந்தவுடனேயே ராஹுலின் விக்கெட்டை எடுத்தாகிவிட்டதல்லவா), நஸீம் காட்ட முயற்சித்ததில் தவறில்லை. ஆனால் தான் ஒரு சிறந்த நடிகனும்கூட எனக் காட்டி விருது பெற முயன்றதுதான் எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஒருசேர மைதானத்தில் பரப்பியது. ஃபீல்டிங், பௌலிங்கின் போது கால் சுளுக்கு ஏற்படலாம்தான். அதற்காக இப்படியா? ஓடிவந்து பந்துவீசிய பின் கால் நொண்டல், சுளுக்கு.. ஆ… ஓ… என்றுமுகத்தை அஷ்டக்கோணாலாக வைத்துக்கொண்டு, பிட்ச்சில்உட்காந்து, சரிந்து புரண்டது நாடகத்தின் உச்சபட்ச காட்சியானது. பாக்.  டீமின் ஃபிஸியோ (மருத்துவ உதவி) மைதானத்துக்கு ஓடிவந்து அவரை கவனித்துக்கொண்டிருக்கையில், பாக். டீமே அவரைச் சுற்றிக்கொண்டு என்னவோ அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதுபோலான சீன்களை ஏற்படுத்தியதும்,  ஆட்டத்தை அளவுக்கு அதிகமாக நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியதும், நெருக்கடி நேரத்தில்  ரசிகர்கள், கிரிக்கெட் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அம்பயர்களின் நிலையைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மருத்துவ டீம் வந்து காலைப்பிடித்துவிட்டு, ஸ்ப்ரே அடித்து சரிசெய்துவிட்ட அகன்ற பின்னும், பௌலரின் ஆக்டிங் டிராமா தொடரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு வலி இருந்திருந்தால், ஆடமுடியாத நிலையென்றால்  நஸீம் பெவிலியன் திரும்பியிருக்கவேண்டும். பௌலிங்கைத் தொடர்ந்திருக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லையே. அவருக்கு பதிலாக அந்த ஓவரின் மீதிப் பந்துகளை வேறொரு பௌலரைவைத்துப் போடச்சொல்லி பாக். கேப்டன் ஓவரை முடித்திருக்கவேண்டும். இதுதான் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் உலகெங்கும் நடப்பது. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் டீமல்லவா? கிரிக்கெட் மட்டும்தானா அவர்களுக்கு தெரியும்! நிற்கமுடியாமல், நடக்கமுடியாமல் சில நிமிடங்களுக்கு முன் வேதனை காண்பித்த நஸீம், அடுத்த பந்திற்காக ஒன்றுமே நடக்காததுபோல் இப்போது தூரத்திலிருந்து பேட்ஸ்மனை நோக்கி வேகமாக – எஸ்.. வேகமாக ஓடிவருகிறார். கவனியுங்கள். காலில் பிரச்னை இல்லைபோலிருக்கிறதே! அதே வேகம். அதேமாதிரி இயல்பான பந்துவீச்சு. ஓடுகையில், பந்தை வீசுகையில் அவர் முகத்தில் எந்த வேதனையும் காணப்படவில்லை. வீசியபின் இந்திய பேட்ஸ்மன் அடித்தோ, தடுத்தோ ஆடி ரன் ஓட முயற்சிக்கையில், உடனே நஸீமின் நாடக மீட்சி: முகக்கோணல், ஒற்றைக்கால் நடனம். கீழே உட்கார்வது.. காலைப்பிடித்துக்கொண்டு ஆ.. ஊ..ஐயோக்களுக்கு நடுவே ஜடேஜாவுக்கு எதிராக எல்பிடபிள்யூ அவுட் கேட்கிறார் அம்பயரைப் பார்த்து! அம்பயரும் குழப்பத்தில் டென்ஷனில் விரல் உயர்த்த, இந்திய அணியில் டென்ஷன். ரிவ்யூ.. ஜடேஜா நாட்-அவுட்! இன்னும் ஒரு பந்து பாக்கி. மீண்டும் காலில் எந்தப் பிரச்னையும் தெரியவில்லை ஓடிவந்து வீசுகிறார் நஸீம். நாடகத்தைத் தொடர்ந்து பார்த்த எரிச்சலில் கடுப்பாகியிருந்த ஜடேஜா, முன்னே வேகமாக நகர்ந்து, பந்தை ஆவேசமாகத் தூக்கினார் பௌலரின் தலைக்குமேலே.. பந்து  சிக்ஸர்..சிக்ஸர் என்று அலறியவாறு ஸ்டேடியத்தில் போய் விழுந்தது.  நஸீமின் சூப்பர் நாடக ஓவர் சிக்ஸரில் முடிந்தது. காலையில் ஹைலைட் பார்க்கையில் இந்த நாடகப் பகுதியை ஸ்டார் சேனல் அகற்றிவிட்டு, ஏதோ அமைதியாக மேட்ச் நடந்ததுபோல் காட்டிக்கொண்டிருந்தது.

வெற்றியை சிக்னல் செய்யும் பாண்ட்யா. வெதும்பிப் பார்க்கும் பாகிஸ்தான்!

19-ஆவது ஓவரை ஹாரிஸ் ராஃப் போட்டபோது, ஃபுல் சார்ஜில் இருந்த பாண்ட்யா விறுவிறுவென  பௌண்டரி பௌண்டரியாக  விளாசிவிட்டார். பாகிஸ்தானின் முகம் பேயறைந்ததுபோலாகிவிட்டது. பச்சை-வெள்ளைகளில் படபடப்பு, கிறுகிறுப்பு. 20-ஆவது ஓவரைபோட்ட ஸ்பின்னர் முகமது நவாஸ் அருமையாக வீசியிருந்தார் ஏற்கனவே. நவாஸின் முதல் பந்தில் ஜடேஜா அவுட் ஆகி இந்திய அணிக்கு/ரசிகர்களுக்கு டென்ஷன் தர, அடுத்துவந்த கார்த்திக் ஒரு ரன் எடுத்து அடுத்தபக்கம் ஓடினார். இப்போது ஈக்வேஷன்: 4 பந்தில் 6 ரன். பாண்ட்யா நவாஸின் அடுத்த பந்தை கவர் பக்கம் அடிக்க, உடனடி ஃபீல்டிங். ரன் எடுக்கவாய்ப்பில்லை. கார்த்திக் டென்ஷனாக, பாண்ட்யா மேலும்கீழுமாகத் தலையாட்டுகிறார்: கவலைப்படாதப்பா. .நான் இருக்கேன்ல.. 3 பந்துகள் பாக்கி, 6 ரன் தேவை இந்திய வெற்றிக்கு. முடியவில்லை என்றால் பச்சை-வெள்ளைப் பரவசம்தான். நவாஸ் ஓடிவந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்திப்போட, சரியாகப் பந்தின் திசை, வேகத்தைக் கணித்திருந்த பாண்ட்யா அனாயாசமாக உயரே தூக்கினார். மைதானமே திடுக்கிட்டு இரவு வானில் வெள்ளைப்பந்தை அன்னாந்து பார்க்க, ஸ்டேடியத்திற்குள் சீறிப் பாய்ந்தது சிக்ஸர்! இந்தியக் கொடிகள் மேலே மேலே ஆடி அசைய, ரசிகர்களின் கொண்டாட்டம் துபாய் இரவுக்குக் கிளுகிளுப்பூட்டியது!

இப்படியாக வந்துசேர்ந்தது இந்தியாவுக்கு வெற்றி 5 விக்கெட் வித்தியாசத்தில். ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பாண்ட்யாவுக்கு. விக்கெட்கீப்பராக உயரத் தவ்விப் பிடித்த ஒரு அபூர்வ கேட்ச்சிற்காக தினேஷ் கார்த்திற்கு பரிசு. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பாண்ட்யாவும், ஜடேஜாவும் தீர்க்கமான திறமையான ஆல்ரவுண்டர்கள் என்பதை இந்த ஹை-டென்ஷன் மேட்ச் உறுதிசெய்திருக்கிறது மீண்டும்.

Scores: Pak :147 all out. India: 148 for 5.

கொசுறு: இந்திய நடிக நடிகைகளும் வண்ணம் சேர்த்தனர் துபாய் ஸ்டேடியத்தில் நேற்று:

இந்தியா பாக் ஆட்டத்தை உற்றுப் பார்க்கும் விஜய் தேவரகொண்டா, (லெஜண்ட் சரவணன் புகழ்(!) ஊர்வசி ரௌத்தேலா !

**    

இந்தியா-பாகிஸ்தான் சூப்பர் க்ளாஷ்!

துபாயில் குதிக்கும்  ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் முன்னிலையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதுகிறது இன்று(28-8-22). இது ஆசியகோப்பை 2022-ன் (டி-20) கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டி. நேற்றைய முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஸ்ரீலங்காவை அடித்துச் சாப்பிட்டுவிட்டது, பத்தே ஓவரில்!

அபூர்வமாகவே இப்போதெல்லாம் மோதும் இரண்டு வலிமையான கிரிக்கெட் நாடுகளின் அணிகளில், இரண்டுபக்கமும் பார்த்து ரசிக்கவேண்டிய ஆட்டக்காரர்கள் சிலர் இருக்கிறார்கள். ரசனை என்று பார்த்தால் pure cricketing pleasure. ஒரு நல்ல ரசிகன் இப்படித்தான் இந்த ஹை-வோல்ட்டேஜ் போட்டியை பார்த்து குதூகலிப்பான்.  

இந்திய கிரிக்கெட் மீடியா என்னடா என்றால் ஒருமாதகாலமாகவே கோஹ்லி.. கோஹ்லி என்று புலம்பிக்கொண்டிருக்கிறது. கோஹ்லிக்கு ஃபார்ம் போயிடுச்சாம். வருஷக்கணக்கா அவரிடமிருந்து ஒரு செஞ்சுரி இல்லை. வருவதும் போவதுமாயிருக்கிறார். ஆசியக்கோப்பையிலாவது அடிப்பாரா? ஒரு அரைசதம் போதும்..அதுக்கப்புறம் அவரைப் பிடிக்கமுடியாது!.. -இப்படி விதவிதமான பேத்தல்கள். கோஹ்லியை நம்பியா  தற்போதைய இந்திய அணி இருக்கிறது? அல்லது ரோஹித்தையோ, ராஹுலையோ நம்பித்தானா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அடிக்கவும் ஜெயிக்கவும் அருமையான வீரர்களுண்டு என்று கடந்த சில மாதங்களில் நடைபெற்ற டி-20, ஒரு-நாள் தொடர்கள் காட்டியிருக்கின்றன. இந்தியாவின் ரிஸர்வ் ப்ளேயர்களின் அணிவகுப்பு மற்ற அணிகள் பொறாமைகொள்ளவைப்பது.

Pak’s present Captain & India’s former Captain !

கடந்த இரண்டு வருடங்களாக (மாதங்களல்ல) பெரிதாக ஸ்கோர் செய்யாத விராட் கோஹ்லி ஆசியாகோப்பைக்கான இந்திய அணியிலே சேர்க்கப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களான சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன் போன்றவர்களில் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கலாம். எந்த ஒரு அணியும் ஃபார்மை முன்வைத்தேதான் வீரர்களை அணியில் சேர்க்கும். அப்போதுதானே எதிரியை அடித்து நொறுக்கி  வெற்றிபெற முடியும்? எவ்வளவு பெரிய வீரனாயினும்  பழைய ரெப்யுட்டேஷனில் எத்தனை நாள் -இங்கே வருடங்கள்-  வண்டி ஓட்டமுடியும். அடித்து ஆடமுடியாத வீரருக்கு அணியில் என்ன வேலை என்று யார் கேட்டாலும் நியாயமான கேள்விதானே. இப்படியான பின்னணியில் விராட் கோஹ்லி. பாவமாகவும் இருக்கிறது ஒருபக்கம்.

சரி விடுங்கள். இந்திய அணியின் பலமென்ன? பேட்டிங். ரோஹித், ராஹுல், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ். கூடவே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ம்… தீபக் ஹூடா! சமீபத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த ஜெம். எந்த நிலையிலும் எதிரியை விளாசக்கூடிய வெள்ளைப்பந்து வீரர். ஃபினிஷர் என அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக் ஒரு சில போட்டிகளில் சேர்க்கப்படலாம். இப்படிப்பட்ட வரிசையில் ஃபார்மில் இல்லாத கோஹ்லியும் இருக்கவேண்டும் என்றால் யாராவது ஒரு முக்கியமான வீரர் பெஞ்சில் இருக்கவேண்டியிருக்கும். என்ன கஷ்டம்டா இது!

பௌலிங்கில் இந்தியா வீக் எனப் பார்ப்பவருக்குத் தோன்றும். வேகப்புலிகள் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், ஷமி இல்லாதது பளிச்செனத் தெரிகிறது. பெரும்பாலும் புவனேஷ்வர் குமார், இளம் அர்ஷ்தீப் சிங் ஆகியோரையே விக்கெட் எடுக்க, ரன்னை கட்டுப்படுத்த -குறிப்பாக பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில்- இந்தியா நம்பவேண்டியிருக்கும். ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கிவிட்டால் ஆபத்தாகிவிடும். பாண்ட்யாவின் பந்துவீச்சு கூர்மையாக கவனிக்கப்படும். ஸ்பின்னர்களில் ஜடேஜா ரன்னைக் கட்டுப்படுத்துபவர். யுஸி சாஹலும், ரவி அஷ்வினும் எதிரி விக்கெட்டை எந்நேரமும் தூக்க வல்லவர்கள். ஆனால் 3 ஸ்பின்னர்கள் ஒரே போட்டியில் ஆடும் வாய்ப்பு குறைவு.

இந்தியாவுக்கு சவால் விடும் பாகிஸ்தானின் அணி? அவர்களுக்கும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன்ஷா அஃப்ரீடி காயம் காரணமாக இல்லை. ஹாசன் அலி அனுபவ பௌலர். கூடவே இரண்டு கத்துக்குட்டி பௌலர்கள். முன்னாள் பாக் ஸ்பின்னர் (டெண்டுல்கர் புகழ்!) அப்துல் காதிரின் மகன் உஸ்மான் காதிர் லெக்ஸ்பின்னராக அணியில். இவரோடு ஹாரிஸ் ரௌஃப், வைஸ்கேப்டன் ஷதாப் கான் போன்றவர்களும் ஸ்பின் போடுவார்கள். எவ்வளவு தூரம் இவர்களின் பௌலிங் இந்திய வீரர்களிடம் எடுபடும் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். பாகிஸ்தானின் பலம் என்பது சந்தேகமின்றி அவர்களது பேட்டிங். கேப்டன் பாபர் ஆஸம் அபார ஃபார்மில் இருக்கிறார். மீடியாவுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கும் விராட் கோஹ்லி நேற்றைய இண்டர்வியூவில் பாபரை தற்போதைய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மன் எனப் புகழ்ந்திருக்கிறார். அவருடன் ஆட்டத்தை துவக்கும் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் முகமது ரிஸ்வான் ஆவேச ஆட்டக்காரர். அடுத்தாற்போல் வரும் ஃபகர் ஸமன் ஒரு க்ளாசிக் பேட்ஸ்மன். இந்தியாவுக்கெதிராக இவரது பேட்டிங் தடுமாறும் வாய்ப்பு குறைவு. பின் வருபவர்கள் ஹாரிஸ் ரௌஃப், ஆசிஃப் அலி, ஷதப் கான், குஷ்தில் ஷா..- இந்திய பௌலிங்கை அவ்வளவு தொந்திரவு செய்ய மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. என்றாலும் டி-20 கிரிக்கெட்டில் எப்ப என்ன நடக்கும் என்று கணிப்பது கஷ்டம். அதுதான் இங்கே த்ரில்லே !

தூள்பறக்கும் ஆட்டம் காணக் கிடைக்கும் என நம்பலாம். முடிவு? யாருக்குத் தெரியும்!

Captains in today’s match : Rohit Sharma (India), Babar Azam (Pakistan)

Star Sports , 1930 hrs (IST)

**   

பராகுவேயில் காந்தி !

செய்தி ஊடகத்தை அந்தக் காலையில் ஊடுருவிக்கொண்டிருந்தபோது ஏகப்பட்ட குற்றச் செய்திகளின் கோலாகலங்களுக்கிடையே கண்ணில் பட்டது இது: இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்  பராகுவே (Paraguay) நாட்டில் மஹாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார்.  பராகுவேயின் தலைநகரான அஸுன்சியோ(ன்) (Asuncion) -ல், பராகுவே நதிக்கரையில் (ஹாட் டூரிஸ்ட் ஸ்பாட்) காந்தி இப்போது எழுந்தருளியிருக்கிறார்! தென்னமெரிக்க நாடுகளோடான இந்தியாவின் உறவு உலக அரங்கில் மிகவும் முக்கியமானது என்று சில நாட்கள் முன் ஜெய்சங்கர் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்தியா பராகுவேயிடமிருந்துதான் தன் தேவையில் 94% சோயா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. பதிலுக்கு வாகனங்கள், வாகன உதிரிஉறுப்புகள், மருந்துகள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துகொள்கிறது பராகுவே. இந்திய யோகா செண்ட்டர்கள் பிரபலமாகி வருகின்றன. சுமார் 1000 இந்தியர்கள் (பெரும்பாலும் குஜராத்திகள், சிந்திகள்) வசிக்கிறார்கள் அங்கே.

படம்: காந்தி சிலையை திறந்துவைத்தபின் பராகுவே, இந்திய அதிகாரிகள், நண்பர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர்

அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய தென்னமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு முன் பிரேஸில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா, பனாமா, பராகுவே, உருகுவே, காஸ்ட்டா ரிகா (Costa Rica), க்யூபா, சிலே (Chile) போன்ற நாடுகளின் டெல்லியிலுள்ள தூதர்களை அழைத்து விருந்து கொடுத்து, இந்தியாவுடனான அந்த நாடுகளின் உறவு குறித்து கலந்து ஆலோசித்தார் அமைச்சர் ஜெய்சங்கர்.  அதன் பின்னர்தான் வெளியுறவு அமைச்சரின் தென்னமெரிக்க சுற்றுப்பயணம் ஆரம்பித்தது. எதையும் துவங்குமுன் நன்றாக பின்புல விஷயங்களைத் தெரிந்துகொண்டு, ஹோம்வொர்க்கை  முறையாக செய்துவிட்டுப் போவதுதான் அவரது வழக்கம். இந்திய வெளியுறவுத்துறையில் ஒரு தேர்ந்த டிப்ளோமாட்டாக பணியாற்றிய காலத்திலிருந்தே அவருள் ஊறி விளைந்திருக்கும் ஒரு நல்ல குணம். (ஜப்பானின் தலைநகரில் அவரோடு சில மாதங்கள் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு).

காந்தி சிலை திறப்பு செய்தியைப் பார்த்தவுடன், எனது க்யூபா ஞாபகங்கள் மெல்ல நினைவில் மீண்டன. 2007-ஆம் வருடம் மே மாதத்தில் க்யூபாவின் தலைநகர் ஹவானாவின் கலாச்சார சின்னமான பழைய ஹவானா எனும் பகுதியில் கடற்கரையை ஒட்டிய பார்க்கில், கவி  ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை இந்திய தூதரால் திறந்துவைக்கப்பட்டது. இந்திய-க்யூபா கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிட்ட சின்னம்போல் அது அங்கு அமைந்திருக்கிறது. ஹவானாவின் முக்கிய வீதிகளில் ஒன்றான கிந்த்தா அவெனீதா (Qinta Avenida)-வில் மஹாத்மா காந்திக்கு ஒரு சிலை வெகுகாலமாக இருக்கிறது. காந்தி ஜெயந்தியை நாங்கள் -அதாவது இந்திய தூதரகத்தினர், க்யூப அதிகாரிகள், நண்பர்கள்- இங்கேதான் கொண்டாடுவோம். எனவே, க்யூபாவில் காந்தியும் உண்டு, தாகூரும் உண்டு. இருவரும் க்யூபர்களால் பெரிதும் மதிக்கப்படும் புகழ்பெற்ற இந்தியர்கள். கடற்கரை ஆட்டபாட்டங்கள், ஆரவார ட்ரம்ஸ் இசைக்கு நடுவே, ரம்மின் தீவிர சுவைக்கும் சுருட்டுப் புகைவளையங்களுக்குமிடையே, க்யூபர்களில் சிலராவது காந்தி, தாகூர் பற்றியும் அவ்வப்போது பேசுகிறார்கள், தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கவனித்திருந்தேன் அப்போது. இன்னும் இப்படி விஷயங்கள் இருக்கின்றன சொல்ல..!

**

ஜிம்பாப்வேயின் சிகந்தர்  !

இதை எழுத சற்று தாமதமாகிவிட்டது.

இந்தியா தொடரை வென்றுவிட்ட நிலையில் மூன்றாவது ஒரு-நாள் போட்டியில் ஏதும் சுவாரஸ்யமில்லை – சாதாரண கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவே நிலை. என்னைப்போன்ற  Cricket-obsessed blokes- அவ்வளவு எளிதில் விட்டுவிடுவோமா! பார்க்கலாம் கடைசி மேட்ச்சையும், ஏதாவது விசேஷமாக நடக்குமோ என்னவோ…

இந்தியாவுக்கெதிரான இந்தத் தொடரில் ஜிம்பாப்வேயின் தரப்பில் இன்னசெண்ட் காயா, சிகந்தர் ரஸா (Sikandar Raza) ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்க வாய்ப்புண்டு என்பதாக ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். அவர்களின் ஏற்கனவே வெளிப்பட்டிருக்கும் திறமை அப்படி. காயா ஏமாற்றிக் காணாமற்போனார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் தடுமாறிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் சிகந்தர் ரஸா, தொடரின் கடைசி மேட்ச்சில் தான் யாரென்று காட்டிவிட்டார். மைதானத்தில் புழுதியைப் பறக்கவிட்ட அதிரடி சதம். தணிவதும்,  எழுவதுமாய் படபடத்த ரஸாவின் ஆட்டம், கடைசி மேட்ச்சை எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்று கேப்டன் ராகுலுக்கு பீதியைக் கிளப்பிவிட்டது.

இந்தியாவின் ஸ்கோரான 289-க்கு எதிராக, ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே விக்கெட்களை வரிசையாக வழக்கம்போல் இழக்க ஆரம்பித்தது.  140-150 அடித்தாலே பெரிய விஷயம் என்றிருந்த மோசமான நிலை. ஷான் வில்லியம்ஸ், போன மேட்ச்சைப்போல்  நன்றாக ஆடி அரைசதத்தைத் தவறவிட்டு, தொய்ந்த முகத்தோடு பெவிலியன் திரும்பியிருந்தார். தொடரில் இதுவரை உருப்படியாக ஒன்றும் செய்யமுடியாத, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் முக்கிய வீரர் ரஸா தடுமாற்றமும் தவிப்புமாய் காணப்பட்டார். இந்திய பௌலர்கள் -குறிப்பாக தீபக் சாஹர், ஆவேஷ் கான் – தங்கள் வீர, தீரத்தை வெளிப்படுத்திவிட்டதாக இறுமாப்பில், சிரிப்புகளில் கலந்திருந்த நேரம்.

தோற்பது நிச்சயம்போல் தோன்றுகிறது. அதற்குள்  இவன்களை ஒரு,கை பார்த்துவிடுவோம் என்கிற உத்வேகம் கனலாய் அவருள் எழும்ப, சடாரென டாப் கியருக்கு மாறினார் சிகந்தர். பௌலிங்கைப் போட்டுத் தாக்க, பௌண்டரிகள் சர்வ   சாதாரணமாக மூலைக்குமூலை பறக்க, திருதிரு ராகுல் பௌலர்களை வேகவேகமாக மாற்றிப் பார்த்தார். ரஸா தன் ரஸவாதத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார் என்பதை ஆக்ரோஷமான ஸ்டேடியம் கவனித்தது. டிரம்கள் அதிர்ந்து உயர்ந்தன. ஜிம்பாப்வேயின் கோச் ஹௌட்டனும் கலந்துகொண்டு ரசிகர்களோடு ஆட ஆட.. ஜிம்பாப்வேயின் பாப்புலர் கிராமியப்பாடல் ஒன்று வேகம் பிடித்தது கூட்டத்தினருக்கு வெறி ஏற்றியது. இந்தியக் கொடிகள் அமுங்க, உயர ஆரம்பித்திருந்த ஜிம்பாப்வே கொடியின் மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்புக் கோடுகளுக்கிடையில் கழுகு தீவிரமாய் ஆட்டத்தை கவனித்தது. ஜிம்பாப்வே பள்ளிப்பிள்ளைகள்/ரசிகர்கள் துள்ளிக்குதிக்க, கறுப்பும், வெள்ளையுமாக ரசிக அழகிகளின் ரஸமான நடனம், போதை சிரிப்பு! டிரம்களின் தீரா ஓசைக்கு செவிசாய்த்த ரஸா,  பேட்டை போர்வாளாக மாற்றி இந்திய பௌலர்களை வரிசையாகப் பிடித்து வதை செய்தார். குறிப்பாக இதுகாறும் அபார ஸ்விங் பந்துவீச்சைக் காண்பித்துவந்த தீபக் சாஹரை ஸ்டேடியம் முழுதுமாக ஓட ஓட விரட்டினார். Class on display. இந்திய முகங்கள் வெளிற ஆரம்பித்தன. வேதனை.. வேதனை..

Zimbabwe’s Superstar !

ஜிம்பாப்வேயின் ஆக்ரோஷம், அதிரடி பதிலடி என்பதைத் தாண்டி ஒருவேளை அது ஜெயித்தேவிடுமோ என்கிற பரபரப்பு நிலைக்கு மேட்சை இப்போது கொண்டு வந்திருந்த ரஸா, திறன் வாய்ந்த இளம் ஆல்ரவுண்டர் ப்ராட் எவான்ஸின் (Brad Evans) துணையுடன் வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால் கடைசி ஓவரில்… ஆ.. ஷுப்மன் கில்லின் அபார கேட்ச்சில்,  115 ரன்னில் (95 balls) அவுட்டானார். ஜிம்பாப்வே டிரம்களின் ஓசை மங்கி நின்றது. கே.எல். ராகுலுக்கு போயிருந்த மூச்சு திரும்பியது. கடைசியாக நின்றவர்கள் ஷாட் அடிக்க முடியாததால், வெறும் 13 ரன் வித்யாசத்தில் இந்தியா வென்றதென ஸ்கோர் போர்டு கணக்குக் காட்டியது.

ரிசல்ட்டா முக்கியம் ? சிகந்தர் ரஸாவின் விளாசல் செஞ்சுரியில், இந்திய இன்னிங்ஸில் ஷுப்மன் கில் அடித்த சதத்தை மறந்துவிட்டிருந்தார்கள் ரசிகர்கள். மூனே மணி நேரத்தில் பொலிவிழந்த சதம்! அப்படி ஒரு பேயாட்டம் அல்லவா பதிலுக்கு ரஸா காண்பித்தது.

ஷான் வில்லியம்ஸ், ப்ராட் எவான்ஸ், ரயான் பர்ல் (Ryan Burl), ரெஜிஸ் சகாப்வா (Regis Chakabwa), இன்னஸெண்ட் காயா எனும் திறமை வாய்ந்த வீரர்களோடு சிகந்தர் ரஸா ! ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் எதிர்காலம் வளமாக அமைய வாய்ப்பிருக்கிறது எனவே தோன்றுகிறது. என்ன, கருப்பு, வெள்ளை என்கிற நிறவாக்கில் அரசியல் தலையீடுகள் இல்லாமல், தகுதிமட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டு வீரர்கள் தேர்வாக ஆண்டவன் அருள் கிட்டவேண்டும். சர்வதேச அளவில், ஆர்வமாகக் கவனிக்கப்படவேண்டிய கிரிக்கெட் தேசம்!

**

Ind-Zim: தொடரில் இந்திய வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு ஒரு-நாள் போட்டிகளை வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட ரிசல்ட்தான் இது. நாளை (21/8/2022) நடக்கப்போகும் ஆட்டமுடிவும் இப்படித்தான் இருக்கும். இந்தியா ஓரிரு புதியவர்களை அறிமுகம் செய்யக்கூடும் என்பதைத்தவிர சுவாரஸ்யம் ஏதுமில்லை.

சர்வதேசப்போட்டி அனுபவம் அதிகமில்லாத, கத்துக்குட்டி வீரர்களை அதிகமாகக் கொண்ட ஒரு அணியை வீழ்த்தியதில் இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. ஆயினும் இந்தத் தொடர் மற்ற வரவிருக்கும் தொடர்கள் போலவே ஒரு சர்வதேச கிரிக்கெட் கமிட்மெண்ட்.

முதல் மேட்ச்சில் ஜிம்பாப்வே 189 அடிக்கக் காரணம் 9-ஆவது விக்கெட்டிற்காக பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய பௌலிங்கை ஆடிக்காண்பித்த இரு வீரர்கள் -பௌலிங் ஆல்ரவுண்டர்கள்: ப்ராட் எவான்ஸ் (Brad Evans), ரிச்சர்ட் இங்கராவா (Richard Ngarava). அணியின் பிரதான ஆட்டக்காரர்களைவிடவும் முதிர்ச்சி, ஆக்ரோஷம் காட்டி ஆடினார்கள். ஜிம்பாப்வேயின் எதிர்கால ஸ்டார்களாக உருவெடுக்கலாம். ஆனால் ஜிம்பாப்வே பௌலர்களால் ஒரு இந்திய விக்கெட்டையும் சாய்க்கமுடியவில்லை என்பது ஆச்சர்யம்தான். ஷுப்மன் கில்லும் (Shubman Gill), ஷிகர் தவணும் 80+ விளாசினார்கள். (Score: Zim 189. India 192 (no loss).

Sanju Samson

நேற்று நடந்த போட்டியில் முதிர்ந்த வீரரான ஷான் வில்லியம்ஸும் (42), இளம் பேட்ஸ்மன் ரயான் பர்ல் (Ryan Burl, 39 Not ourt)-உம் பொறுப்பாக ஆடினார்கள். இருந்தும் 161-ஐத் தாண்டமுடியவில்லை ஜிம்பாப்வேயினால். எளிதாக இந்தியா இலக்கைத் தொடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் 5 விக்கெட்டுகளை பலிகொடுத்தபின் தான் வெற்றி கிடைத்தது. இந்திய கேப்டன் ராஹுல் துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஒரு ரன்னில் பெவிலியனுக்கு ஓடிவந்தார்! விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் நன்றாக ஆடி, 4 சிக்ஸர் தூக்கி 43 நாட் அவுட். ஷர்துல் டாக்குருக்கு 3 விக்கெட். (Score: Zim 161. India 167/5. )

நாளைய போட்டியிலாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ராஹுல் த்ரிப்பாட்டியை இந்தியா களத்தில் இறக்குமா? இல்லை, ஜிம்பாப்வேக்கு டூரிஸ்ட் விஸாவில் தான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறாரா !

**

லட்டு கோபால் !

ஜென்மாஷ்டமி. ஸ்ரீஜெயந்தி. கிருஷ்ண பகவானின் அவதார தினம். இப்படி பல அலங்காரமொழிகள் இந்த நாளுக்கு. சீடையும், முறுக்கும் இன்னபிறவும் வாயில் வரிசையாக நொறுங்கும் மாலைப்பொழுது ஒரு இனிய கனவுபோல் வருகிறது.. நிஜமாய். மனதில் சதா உலவும் பால்யத்தின் கொண்டாட்ட அனுபவங்கள்.

கிருஷ்ணனுக்கு என்னென்ன பிடிக்கும் என்றெல்லாம் அந்தக் காலத்திலே கற்பனை செய்தவர்கள்,  தங்களுக்குப் பிடித்த பட்சணங்களை அப்படியே நைஸாக சேர்த்திருப்பார்கள் லிஸ்ட்டில்! வருஷத்தில் ஒருநாளாவது வாய்க்கு ருசியாகக் கிருஷ்ணனின் புண்யத்தில் கரகர, மொறுமொறுவென்று கிடைக்கட்டுமே என்கிற உன்னத எண்ணமே காரணம். கிருஷ்ணனின் பெயரைச் சொன்னால் பெண்கள் வேகவேகமாக பட்சணத் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள்! உப்புச்சீடை, வெல்லச் சீடை, முறுக்கு இத்யாதி தின்பண்டங்களில் குழந்தைகளுக்கு பேரிஷ்டம்தான். அவர்களைவிடவும் தாத்தா, பாட்டிகளுக்குத்தான் இந்த சங்கதிகளில் மோகம் அதிகமோ எனவும் தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம், தாத்தா பாட்டிகளைப் பிடித்து எங்கெங்கோ அடைத்துவிட்டு, கேர், ஹோம் என்றெல்லாம் அதற்கு நாமகரணம் சூட்டி, சமாதானம் சொல்கிறார்களே சிலர். அந்தக் கோகுல கிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரியாமலாயிருக்கும்.. இருந்தும், புல்லாங்குழலில் பிஸி !

சில நாட்களாகவே வீட்டில் தீவிரமெடுத்த டிஸ்கஷன், ஸ்ரீஜெயந்திக்கு என்னென்ன பட்சணம் செய்யலாம்.. போனவாரம் பெருமாள் கோவிலுக்குப் போயிருந்தபோது, பெங்களூர் ப்ரூக்ஃபீல்டில் உள்ள இஸ்கான் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா) அமைப்பினர், வண்ணக்காகிதத்தை நீட்டினார்கள். ஜன்மாஷ்டமி அன்று இரவு ஆரத்தி உண்டு. பக்தகோடிகள் கிருஷ்ணனுக்கு உகந்த பிரசாதமாக எதை செய்துகொண்டுவந்து கொடுத்தாலும், கிருஷ்ணகானம் பாடி, நைவேத்யம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தருவோம். செய்து வாருங்கள் என்பது பக்தி அழைப்பு. அதற்கு சர்க்கரைப் பொங்கல், முறுக்கு செய்து தரலாம் எனக்  காலையில் முடிவு. 

இது அப்படியிருக்க, காலையில் நெட்டில் சேதிகளைப் பார்க்கலாம் என லேப்டாப்பை ஆன்செய்தால், கிரிக்கெட், அரசியல் என வழக்கம்போல் தேடுகிறது கண். முன்னால் வந்து ஆடுவதோ மயிலிறகும். புல்லாங்குழலும். ஓ.. கிருஷ்ண ஜெயந்தியா எனப் பார்க்க,  ஒரு கட்டுரை  குறிப்பாக நாலு ராசிக்காரர்களைப் பரவசப்படுத்தப் பார்க்கிறது! பகவான் கிருஷ்ணனின் அனுக்ரஹம், கருணை லோகத்தில் அனைவருக்குமானது என்பதில் என்ன சந்தேகம்? இருந்தாலும், அவனுடைய விசேஷக் கவனிப்பு இந்த நாலு ராசிக்காரர்களின் மீதுதானாமே.. அட! ஆங்கிலப் பத்திரிக்கை ஆர்ட்டிக்கிள் ஆனதால், ராசி சக்கரத்திலிருந்து (பிறப்பின் ஆங்கில மாதக் கணக்குப்படி) இது சொல்கிறது: குறிப்பிடப்பட்ட ராசிகள் (Zodiac signs) நான்கு: Taurus ரிஷபம் (ஏப்ரல் 20- மே 20), Cancer கடகம் (ஜூன் 21-ஜூலை 22), Leo சிம்மம் (ஜூலை 23-ஆகஸ்டு 22) Libra துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22). இந்த ராசிக்காரர்களின் மேல் ஸ்ரீகிருஷ்ணனின்  கருணைக்கண் பட்டவாறே இருக்குமாதலால், அவர்களுக்கு வாழ்வில் பலவாறான வெற்றிகளும், சந்தோஷமும் உண்டாகும் என்கிறது பொதுவாக. குறிப்பாக Cancer (கடகம்) காரர்கள் விஷயத்தில் ஏதோ வித்தியாசமாகச் சொல்கிறதே. என்ன!  அவர்கள் எதைச் செய்தாலும் இறுதியில் வெற்றிபெறுவார்கள் என்பதோடு நிறுத்தாமல் மேலும்: ஜென்மத்தின் முடிவில் முக்திநிலையை அடையும் பாக்யத்தை அவர்களுக்கு அருள்கிறான் கிருஷ்ணன் என்கிறது. இப்படி ஒரு விசேஷத்தை வேறெங்கும் காணவில்லையே. சின்னக்கிருஷ்ணா.. செல்லக்கிருஷ்ணா! உண்மைதானே இது? விளையாட்டில்லையே!

ஆகையால் விசேஷமாக இந்த நாலு ராசிக்காரர்கள் கிருஷ்ண மனநிலையில் எப்போதுமிருக்கவேண்டும். (இதைத்தான் Krishna Consciousness என்கிறார் ஸ்வாமி பிரபுபாதா. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என உலகெங்கும் ஆடிப்பாடிப் பரவும் ISKCON அமைப்பின் ஸ்தாபகர்). அவனை தினம் தியானித்து, வணங்கிவந்தால் கைமேல் பலன், மனதுக்கு நிம்மதி என பக்தி உரை. அதை வாசிக்கையில் கண்ணில்பட்ட மேலும் இரண்டு வார்த்தைகள் காலைநேரத்தில் புன்னகையை வரவழைத்தன: லட்டு கோபாலையும், ராதா ராணியையும் தினம்தினம் கும்பிட்டு மகிழ்வோம்!

லட்டுதான் நீ! அதற்காக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளமுடியுமா என்ன! உன் வாய்க்குள்தான் உலகமே இருப்பதைக் கண்டாளே உன் அன்னை..

ராதே..கிருஷ்ணா !

**

ODI Cricket: இந்தியா-ஜிம்பாப்வே

வெஸ்ட் இண்டீஸோடான டி-20, ஒரு-நாள் தொடர்களை வென்றபின், இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஜிம்பாப்வேயில் 3 போட்டிகள் கொண்ட ஒரு-நாள் (50-ஓவர்) ஆட்டத் தொடருக்காக. முதல் மேட்ச் இன்று ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் ஆரம்பம்.

இந்திய அணிக்குத் தலைமை தாங்க முதலில் ஷிகர் தவன் அறிவிக்கப்பட்ட நிலையில், காயத்தில் இருந்த கே.எல்.ராஹுல் மீண்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவர்தான் கேப்டனாம். தவன் வைஸ்-கேப்டன்! ரோஹித் ஷர்மா காயமுற்றிருந்த நிலையில் கடந்த மாதங்களில் ரிஷப் பந்துக்கும், ஹார்திக் பாண்ட்யாவுக்கும்கூட கேப்டனாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அவர்களும் நன்றாகச் செய்தார்கள். புதிய வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதைவிடவும், கேப்டனாக நிறையப் பேருக்கு பயிற்சிகொடுக்கும் உலகின் ஒரே கிரிக்கெட் நிர்வாகம், இந்திய கிரிக்கெட் போர்டுதான்!

Sikandar Raza -leading allrounder, Zimbawe

3 போட்டிகள் நடக்கும் தொடர் அனேகமாக இந்தியாவின் பக்கம் எளிதாகச் சாயும் என்பது பலரின் கணிப்பு. காரணம் ஜிம்பாப்வே அணி சர்வதேச விளையாட்டு அனுபவம் மிகக் குறைவாகக் கொண்ட அணி என்பதோடு, அதன் முக்கிய ஆட்டக்காரர்கள் – கேப்டன் க்ரெய்க் எர்வின் (Craig Erwine), பேட்ஸ்மன் ஷான் வில்லியம்ஸ் ( Sean Williams), வேகப்பந்துவீச்சாளர்கள் ப்ளெஸ்ஸிங் முஸரபானி (Blessing Muzarabani), தெண்தாய் ச்சடாரா (Tendai Chatara) ஆகியோர் காயம் காரணமாக அணியில் இல்லை. அணியின் பெரிய பலம் சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிராக சாதித்துக் காண்பித்த ஆல்ரவுண்டர்/முன்னாள் கேப்டன் சிகந்தர் ரஸா மற்றும் இளம் பேட்ஸ்மன் இன்னசெண்ட் கையா (Innocent Kaia) ஆகியோர். ஜான் மஸாரா, ப்ராட் இவான்ஸ் (Brad Evans), விக்டர் ந்யாயுச்சி (Victor Nyauchi) போன்ற பந்துவீச்சாளர்களும் அணியில். அனுபவ வீரரான ரெஜிஸ் சகாப்வா (Regis Chakabwa) ஜிம்பாப்வேயின் கேப்டன். இவர் விக்கெட்கீப்பரும்கூட. ஜிம்பாப்வேயில் பெரிதும் மதிக்கப்படும் முன்னாள் வீரரான டேவ் ஹௌட்டன் (Dave Houghton) அணியின் புதிய கோச். இளம் அணிக்கு புதிய உத்வேகமும், தைர்யமும் தருபவர். சர்வதேச அனுபவம் இதுவரை கூடிவராத இளம்வீரர்கள் இவரிடம் ஆர்வமாக, ஆழமாகக் கற்றுக்கொண்டால், வலிமையான இந்தியாவுக்கெதிரான தொடர் சுவாரஸ்யமாகும். களைகட்டும்.

இந்திய அணியில் -மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதால்-குறிப்பாக கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்: குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ப்ரஸித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர்.

Match starts @ 1245 hrs (IST). Live in Sony Network.

ரமேஷ் பிரேதன்

சென்னைப் புத்தகவிழாவில் வாங்கினேனா, இல்லை ஆன்-லைனில் ஆர்டர் செய்தேனா, நினைவில்லை. எனது அலமாரியில் என்னென்ன தமிழ்ப் புத்தகங்கள்தான் இருக்கின்றன என நானே தெரிந்துகொள்ளவிரும்பி ஒரு காலையில் குடைய ஆரம்பித்தபோது, அந்த ஒல்லிப் புத்தகம் கையில் கிடைத்தது. குண்டுப்புத்தகங்களைக் கண்டு விலகி ஓடுபவன் நான். குண்டாக எது எதிர் வந்தாலும், நன்றாக ஒதுங்கி வழிவிடும் வழக்கம் உண்டு சிறுவயதிலிருந்தே என்னிடம்.

சரி, குண்டுகளை விட்டுக் கொஞ்சம் வெளியே வாருங்கள். இப்போது சொல்ல வந்தது அந்த ஒல்லியை – கவிஞர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் ‘அயோனிகன்’. ஆ…. இப்படி ஒரு கவிஞர் இருப்பதையே மறந்துவிட்டிருக்கிறேனே. திறந்து கொஞ்சம் படிக்க ஆரம்பித்து, சற்றே ஆழ்ந்து மேலும் வாசித்தேன். ஏதேதோ கனவில், தொடரும் நினைவில் இன்றும் வாசிக்க நேர்ந்தபின் எழுதவந்தேன்.

அவனுடைய கதைகதைப்பில் நாகம் நெளிகிறது, சிவன் வருகிறான், கவிஞன் உலவும் வெளியில், அவள் இல்லாமலிருக்க முடியுமா என்ன?  இருக்கிறாள். இருந்தாள். இருப்பாள். கூடவே அவனில் தாக்கம் ஏற்படுத்தும் அப்பாவும், தவிக்கவிட்ட அம்மாவும். போதாக்குறைக்கு இந்த வேற்றுக்கிரகவாசி வேறே.. எதுவும் நிம்மதியாக விட்டுவைக்கவில்லை அவனை. ஃப்ரெஞ்சும் தமிழும் சேர்ந்து கலக்கும் புதுச்சேரியின் கலாச்சார கிச்சடிப் பின்புலம்..

சொல்லிக்கொண்டே போவதை நிறுத்தி, அயோனிகனையே கொஞ்சமாகத் தெளித்துவிடுகிறேன்:

காலங்காலமாகக் கைமாறி கைமாறி வந்த சிவன்

கவிஞர்களாலேயே வளர்ந்து ஆளாக்கப்பட்டவன்

போர் நடந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களிலிருந்தே

கூடைகூடையாய் மண்டை ஓடுகள் சிவனுக்குக் கிடைத்திருக்கும்..

**

வங்காள விரிகுடாவைப் பார்த்தபடி இந்த இரவைக் கடக்கிறேன்

நாளை இறந்தவர்களை நினைவுகூரும் நாள்

நிதானமாக ஒருமுறை சாகவேண்டும்

தனியாகச் சாவதற்கு பயமாயிருக்கிறது

**

என் பசியை ஆற்றியவளைப்பற்றிப் பிறகொருநாள் எழுதுகிறேன்

பெண்ணிடம் ஆண் பிச்சையெடுத்தல் கூடாது என புத்தனும்

காமத்தைப் பெண்ணிடம் யாசிப்பவனே யோக்யன் என ஏசுவும்

சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

**

ஆண்மழை பெண்மழை என்பதில் எனக்கு உடன்பாடில்லை

அவள் மழை என்பதைத் தவிர வேறில்லை

நனைந்தால் முளைத்துவிடுவேன்..

**

என்னுடன் நீ நடக்கும்போது

என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய்

நான் மரித்துப்போனேன்

அவ்வளவே

**

அலையோசை ஓய்ந்தாலும் உளியோசை ஓயாதடி வாலைப் பெண்ணே

சொல்லைக் கல்லாக்கும் மாயம் செய்குவையோ வாலைப் பெண்ணே

**

அம்மாவையும் அப்பாவையும் ஒருசேரப் பார்க்காதவன்

அம்மாவையும் அப்பாவையும் தனித்தனியாகக் கொன்றவன்

என்னுள் விளையும் கவித்துவம்போலக்

கொலைத் தொழில் பழகியவன்

**

பிச்சை கேட்கும் மனநிலையை

நான் எட்டிய தருணம்

அகந்தை சூன்யமுற்று

நிர்வாணமாய் நின்றேன்

**

நீந்தினால் மீன்

மிதந்தால் பிணம்

குளம் இதன் வித்தியாசம் அறியாது

**

போரினால் பைத்தியம் பிடித்து

எங்கே எந்த நாட்டில் எந்த நகரத்தின் இடிபாடுகளில்

எந்தப் பிறவியில் அலைகிறாயோ…

போய் வருகிறேன் என் அன்பே..

Au revoir mon amour, au revoir…

**

கவிதைகளினூடே உரையாய், நடையாய் தன்சரிதம் வேறு… வாங்கிப் படியுங்கள் நண்பர்களே. மேலும் புரியலாம், ஏதேதோ தெரியலாம்.

அயோனிகன் – ரமேஷ் பிரேதன் – உயிர்மை பதிப்பகம்.  ரூ.55.

*****