இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவரான அசோகமித்திரன் மறைந்துவிட்டார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என ஒரு பெரும்காலவெளி காண்பித்த நகர்வாழ் மத்தியதர சமூகத்தின் தினசரி வாழ்வுப்போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்து, எழுத்தில் உன்னதமாய்க் கொண்டுவந்த படைப்பாளி. 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள் என ஒரு இடைவெளியின்றி தமிழ்ப்பரப்பில் இயங்கிவந்தவர். இருந்தும் ஆரவாரமில்லாதவர். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர். An extraordinary, unassuming genius, no doubt.
தமிழ் இலக்கிய வாழ்வில் தொடரும் அபத்தமான குழு அரசியலில் என்றும் அவர் சிக்கியதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் அசோகமித்திரன். மென்மையாகப் பேசியவர். குறைவாகவே தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். வெகுசில நேர்காணல்களையே தந்திருக்கிறார். அந்த நேர்காணல்களில் அவர் சொன்னவையும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அலங்காரமற்ற சாதாரண மொழியில் வாசகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துச்சிற்பி அவர். அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ செகந்திராபாதில் 1948-ல், ஹைதராபாத் பகுதி இந்திய யூனியனில் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த இனக்கலவரங்கள் அடிக்கோடிட்ட சமூகவாழ்வினைப் பதிவு செய்கிறது. கரைந்த நிழல்கள் எனும் நாவல் தமிழ்ச் சினிமா உலகினை பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கிறது. மானசரோவர், தண்ணீர், ஒற்றன் போன்ற நாவல்களும் ப்ரபலமாகப் பேசப்படுபவை.
மிகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார் அசோகமித்திரன். சொற்சிக்கனத்துக்குப் பேர்போனவர். அனாவசியமாக ஒரு வார்த்தை, வர்ணனை எதுவும் கிடைக்காது அவரது எழுத்தில். அவரது படைப்பில் படைப்பாளி துருத்திக்கொண்டிருப்பதில்லை. போதனைகள் இல்லவே இல்லை. சாதாரண நிகழ்வுகளினூடே பூடகமாக மனித வாழ்வைப்பற்றி எதையோ வாசகனுக்கு உணர்த்தப் பார்த்தவர். சிறுகதையின் பொதுவாக அறியப்பட்ட வடிவங்களைத் தாண்டி வெறும் நிகழ்வுகளின் கோர்வையாகவும், கதாபாத்திரத்தின் சிந்தனைப்போக்காகவும்கூட தன்னுடைய சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதையைப்பற்றி அறியப்பட்டுள்ள கோட்பாடுகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவரைப் படிப்பவருக்கு அசோகமித்திரன் எளிதில் பிடிபடுவதில்லை. பார்வை, எண்கள், காந்தி போன்ற சிறுகதைகளை இவ்வகைகளில் குறிப்பிடலாம்.
முன்பு, இதழொன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த தன் கதைகளென சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார் அசோகமித்திரன். அவை: அப்பாவின் சிநேகிதர், ராஜாவுக்கு ஆபத்து, நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பதினெட்டாவது அட்சக்கோடு. மேலும், தனக்குப் பிடிக்காதவை எனவும் இரண்டைக் குறிப்பிட்டிருக்கிறார் ! தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகியவை இந்த மாதிரியும் அறியப்படுகின்றன. காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், விமோசனம், பறவை வேட்டை, பிரயாணம் போன்ற சிறுகதைகள் இலக்கியவெளியில் அடிக்கடி ஸ்லாகித்துக் குறிப்பிடப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் ஐம்பது ஆண்டுகாலமாய் அவர் எழுதிய சிறுகதைகளை ஒரு பெரும்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.
1996-ல் அவருடைய சிறுகதைத்தொகுப்பான ’அப்பாவின் சிநேகிதர்’ நூலுக்காக சாகித்ய அகாடமி அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. தமிழுக்கான ’ஞானபீட விருது’க்காக அவரது பெயர் சமீபகாலத்தில் குறிப்பிடப்பட்டுவந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அசோகமித்திரனுக்கு அந்த விருது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொடுக்கப்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய விருதிற்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சன்னமானது. கிட்டத்தட்ட இல்லாமலானது.
இலக்கிய மாத இதழான கணையாழியின் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றியிருக்கிறார் அவர். இந்தக்காலகட்டத்தில் (எண்பதுகளின் இறுதிவரை), புதிய படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றைக் கணையாழியில் பிரசுரித்துள்ளார் அசோகமித்திரன். அவரது நாவலான ‘தண்ணீர்’ கணையாழியில்தான் தொடராக வெளிவந்தது. அதனைத் திரைப்படமாக்க முயற்சிசெய்யப்பட்டது. ஏனோ அது வெளிச்சத்துக்கு வரவில்லை. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் பயின்றவர். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் தெரிந்துவைத்திருந்தவர் அசோகமித்திரன். அவைபற்றிய அவரது பத்திகள் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் அவரது எழுத்துக்களில் உண்டு என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ’அதிர்ந்துபேசாத எழுத்து’ என அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தில் ‘கவிதை’ என்கிற வகைமை (genre) அவரை அவ்வளவாகக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.
அசோகமித்திரனின் புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வந்துள்ளன. புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகமான ’பெங்குயின் இந்தியா’ அசோகமித்திரனின் மூன்று படைப்புகளை (மொழிபெயர்ப்பு:என்.கல்யாணராமன்), ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. My years with Boss, The Ghosts of Meenambakkam (குறுநாவல்), Still bleeding from the wound (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் அவை. இளம் வயதில் செகந்திராபாதில் வாழ்ந்திருந்த அசோகமித்திரன் தன் அப்பாவின் மறைவிற்குப்பிறகு சென்னைக்கு இடம்பெயர நேர்ந்தது. அவரது அப்பாவின் சிநேகிதரான, புகழ்பெற்ற படநிறுவனமான ஜெமினி ஸ்டூடியோஸின் அதிபர் வாசன் இளம் அசோகமித்திரனைச் சென்னைக்கு அழைத்தார். ஜெமினி ஸ்டூடியோஸில் வேலைபார்த்த அசோகமித்திரன் அங்கே தன் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள்பற்றி ஹாஸ்யம் கலந்து எழுதிய குறிப்புகளே ‘பாஸுடன் சில வருடங்கள்’ என்கிற சுவாரஸ்யமான புத்தகம். தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக ஆங்கிலத்திலும் எழுதியவர் அசோகமித்திரன்தான். அவருடைய பத்தி எழுத்துக்கள் இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஸ்டேட்ஸ்மன், நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஆங்கில தினசரிகளிலும், அப்போது ப்ரபலமாக இருந்த வார இதழான ’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’விலும் பிரசுரம் கண்டன. கூடவே, மொழிபெயர்ப்புப் பணியையும் செய்துள்ளார் அசோகமித்திரன். அனிதா தேசாயின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆங்கில நாவலான Fire on the Mountain அசோகமித்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை சாகித்ய அகாடமியே வெளியிட்டுள்ளது.
சமகாலப் படைப்பாளிகளான க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி,நகுலன், ஆகியோர்களுடன் நட்புடனும், தொடர்பிலும் இருந்தார் அசோகமித்திரன். தன் வீட்டுக்கு வந்து சந்தித்த எழுத்தாளர்களோடு மனம்விட்டு உரையாடி மகிழ்ந்தவர். அவருடைய எண்பதுகளில் அவர் மெலிந்து, உடல்சோர்ந்து காணப்பட்டாலும், உற்சாகமாகக் கடைசிவரை எழுதிவந்தார். அமெரிக்க பல்கலையான University of Iowa அசோகமித்திரனுக்கு படைப்பிலக்கியத்திற்கான ஃபெலோஷிப்பை (Creative writing fellowship) வழங்கி கௌரவித்துள்ளது. அசோகமித்திரன்பற்றிய ஆவணப்படம் ஒன்று அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் தற்செயலாகக் கிடைத்த ஒரு தமிழ்க்கடையில் மாத இலக்கிய இதழான ’தடம்’ கிடைத்தது. உள்ளே எட்டிப்பார்த்ததில் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. வாங்கிவந்தேன். அதில், ஃப்ரெஞ்சுப்புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸால் (Charles Dickens) எழுதப்பட்ட ’இரு நகரங்களின் கதை’ (A tale of two cities) நாவலே தன்னை வாசிக்க, எழுதத் தூண்டிய புத்தகம் என்கிறார் அவர். தமிழில், புதுமைப்பித்தனின் பெயர் நினைவிலில்லாத ஒரு சிறுகதையையும் இவ்வாறே குறிப்பிடுகிறார். ’உங்கள் புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்கிற ஒரு கேள்விக்கான பதிலில் ‘…..ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டாப் போதும்னு நினைக்கிறேன்’ என்கிறார் அசோகமித்திரன்.
**