டெல்லி ராமகிருஷ்ணபுரம் ஸ்ரீநிவாசர் கோவில். பிப்ரவரி மாத ஏகாதசி திங்கட்கிழமை. அங்கு மதுரையில் கூடலழகர் பெருமான் ஸ்ரீவேணுகோபாலனாய்த் திருத்தோற்றம் தந்தருளும் நன்னாள் என்றும் பிறகு தெரியவந்தது. ஸ்ரீநிவாஸருக்குத் திருமஞ்சனத்திற்குச் சொல்லியிருந்தபடியால் அன்று காலை பிப்ரவரியின் கிடுகிடுக்கும் குளிரை ஒருவாறு அலட்சியம் செய்து, குளித்துக் காப்பித்தண்ணி கூட குடிக்காமல் (எவ்வளவு பெரிய விஷயம்), கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். காலை 8 ¾ மணி. எல்லோரும் ஆஃபீஸ் போகிற நேரம். சில வயதான தம்பதிகள், மாமிகளையும் எங்களையும் விட்டால், பெருமாளும் அர்ச்சகர்களும் மட்டும்தான் கோவிலில். இறைச்சலோ, தேவையற்ற சத்தங்களோ ஏதுமின்றி அமைதியே உருவான அழகான கோவில்.
அர்ச்சகர்கள் நிதானமாக மந்திரங்கள் சொல்ல, அழகாக நடந்தது எம்பெருமானுக்குத் திருமஞ்சனம். குளிருக்கேற்ற வெந்நீர், கூடவே பால், தயிர், தேன், இளநீர் என விதவிதமாக நீராட்டினார்கள் அழகுப்பெருமாளையும், அலமேலு மங்கை, பத்மாவதித் தாயார்களையும். பிறகு மஞ்சள் நீராட்டி, சந்தனக் குளியலுக்குப் பின் சாம்பிராணிப் புகையில் லேசாகக் காட்டப்பட்ட துளசி மாலையை உத்ஸவருக்கு சாத்தினார்கள். தீபாராதனை காட்டப்பட்டது. திருமஞ்சனம் முடிந்து திரையும் விழுந்தது. அலங்காரப் பிரியனான மஹாவிஷ்ணு தன்னை அலங்கரித்துக்கொள்ள நிதானமாக நேரம் எடுத்துக்கொள்வார். காத்திருந்தோம்.
சன்னிதிக்கு வெளியே வருகையில் அந்த மாமியைப் பார்த்தேன். நினைவு நாடா பின்னோக்கி வேகம் பிடித்தது. அன்றொரு நாள் இதே கோவில். சன்னிதியில் பெருமாள் சேவித்துக் கொண்டிருக்கையில் சட்டென ஒரு ஏக்கமாய் மனதில் தோன்றியது: முன்பெல்லாம் கோவில் சன்னிதிகளில், பெருமாளை அந்தக் கருணைமிகு திருமாலை நினைத்து சில மாமிகள் – பாடத்தெரிந்த மாமிகள், பெண் குழந்தைகள் ஆழ்வார் பாடல்களைப் பாடுவதையோ, ஸ்லோகங்களைச் சொல்வதையோ கேட்ட சிறுவயது ஞாபகம். இப்போதெல்லாம் கோயிலில் பக்தியோடு பாடும் பழக்கம் போய்விட்டதா? அந்தமாதிரி மனுஷிகள் இந்தக்காலத்தில் இல்லாது போய்விட்டார்களா? சிந்தனை இவ்வாறு ஓடுகையில், திடீரென்று ஒரு கணீர்க் குரல் பெண்கள் வரிசையிலிருந்து எழுந்தது. சன்னிதியில் பரவி சிலிர்க்க வைத்தது. ஆழ்வார் பாடலை அந்தப் பரந்தாமனுடைய சன்னிதியில் அமைதியான, தெளிவான குரலில் பாடிக் குளிர வைத்தார் அந்த மாமி. அந்த ஸ்ரீநிவாஸன் அப்படி ஆசைப்பட்டிருக்கவேண்டும். அனாயாசமாய் நிகழ்ந்தது அன்று.
அந்த மாமிதான் இப்போது மெல்லத் தள்ளாடி வெளியே வந்துகொண்டிருந்தார். திடீரென எனக்குள் எழுந்தது அந்தப் பாட்டுக் கேட்கும் ஆசை. மாமியைக் கேட்டுக்கொள்ளலாமா. பாடுவாரா? நமஸ்கரித்துவிட்டு மெதுவாகக் கேட்டேன்:
’கொஞ்சம் பெருமாளைப்பத்தி பாட முடியுமா ?’
’இப்பவா?’ என்று அவர் திரும்பிப் பார்க்க, பக்கத்தில் இன்னொரு மாமியும், கையில் ஒரு சிறிய மரப்பெட்டியுடன் ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தையும் நின்றிருந்தார்கள்.
’ஏன், எங்கேயாவது போய்ண்டிருக்கேளா’ என்றேன்.
’இந்தக் கொழந்தைக்குப் பாட்டு சொல்லித் தரணும்..’ பதில் சொன்னார் மாமி.அதைப்பார்த்து, ’நீ இப்பிடிக் கொஞ்சம் ஒக்கார்ந்துக்கறயா’ என்றார். அதுவும் சரியென்று அங்கேயே சமத்தாக உட்கார்ந்து கொண்டது. மாமியுடன் நானும் குழந்தையின் அம்மாவும் கருடர் சன்னிதிமுன் அமர்ந்தோம்.
மூடியிருந்த ஸ்ரீநிவாஸர் சன்னிதியை பார்த்துக்கொண்டு, பாட்டை எதிர்பார்த்திருந்தேன்.
மாமி ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! தள்ளாடும் உடம்பு. இருந்தும் கம்பீரம் குறையாத, ஸ்ருதி பிசகாத சாரீரம். ‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாளே, நாராயணா, ராமா, ராமா, ..அதரம் மதுரம்…அகிலம் மதுரம்.. என்று ஒரு பத்துப்பன்னிரண்டு நிமிஷங்கள் மதுரகீதம் அந்த மாயவனின் வாசல் முன் கிளர்ந்தது. மனமோகனமான அதிர்வலைகளை எழுப்பிப் பரவியது. அது ஒரு ஆழ்ந்த அனுபவம்.
ஆண்டவனின் சன்னிதிக்கு வருதல், வந்தபின் வேறு எதிலாவது மனதை செலுத்தாது இருத்தல், மந்திரங்கள் அர்ச்சகர்களால் அனுபவித்துத் தெளிவாக சொல்லப்படல், கூட இருக்கும் பக்தர்களில் பாடத் தெரிந்தவர் இருத்தல், அவர்கள் மனமுருகி இறைவனைப் பாட நேருதல், அதில் நாம் லயித்திருக்குமாறு நிகழ்தல் –இவை எல்லாம் அந்த வேணுகோபாலன் திருவுள்ளமன்றி வேறென்னவாய் இருக்கமுடியும்?
ஒம் நமோ நாராயணா..
**