ஐபிஎல்-ஸ்பின்னர்களின் குத்தாட்டம்!

சர்வதேச அளவில் T-20 கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், இந்த வகை கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் சொர்கம் எனவே பார்க்கப்பட்டது. இருபதே ஓவர்களில் குவிக்க வேண்டும் ரன்னை. அடித்து விளையாட ஏகப்பட்ட சுதந்திரம். யார் எந்தவகைப் பந்தை வீசினாலும் அது பௌண்டரிக்கோ அல்லது மைதானத்திற்கு வெளியேயோ தூக்கிக் கடாசப்படும். ரன் குவிப்பு சாத்தியம் மிக்க கிரிக்கெட் வகைமையாகப் பார்க்கப்பட்டது டி-20 கிரிக்கெட். பௌலிங்கில் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தளம்; ஸ்பின்னர்கள் எனப்படும் மந்தவேக சுழல்பந்துவீச்சாளர்கள் அதிரடி பேட்ஸ்மன்களால் மைதானத்தை விட்டே தூக்கி எறியப்படும் சாத்தியம் அதிகம் ஆதலால், அவர்களுக்கு இங்கு வேலையில்லை என கிரிக்கெட் வல்லுநர்களே கருதினார்கள். 2007-ல் முதன்முதலில் இந்தியா T-20 உலகக் கிரிக்கெட் கோப்பையை, பாகிஸ்தானை ஃபைனலில் வீழ்த்தி வென்றது. அப்போதும் வேகப்பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களுக்கிடையேயானப் போராகத்தான் T-20 உலகக்கோப்பை விளங்கியது.

2008-ல் இந்திய கிரிக்கெட் போர்டு T-20 கிரிக்கெட்டிற்கான பிரத்தியேகக் கிரிக்கெட் லீக்-ஐ {Indian Premier League (IPL)} ஆரம்பித்தது. வெகு சிறப்பாக ஆடப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட ஐபிஎல், இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே உலகளாவிய புகழ் பெற்றுவிட்டது. நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல்-இல் கேப்டன்கள் காட்டும் விளையாட்டு உக்திகளில் முக்கியத் திருப்பம் காணக் கிடைக்கிறது. கடந்த வருட ஐபிஎல்-லிலிருந்தே அதன் தடயம் தெரிய ஆரம்பித்தது. வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து அணிக் கேப்டன்களின் கவனம் மெல்ல விலகி, ஸ்பின்னர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்துள்ளது. ஒவ்வொர் அணியும் 2, 3 என ஸ்பின்னர்களை தங்கள் அணியில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. நடு ஓவர்களில் (8-15) ரன் விகிதத்தைக் குறைத்து, பேட்ஸ்மென்களின் துணிச்சல், துள்ளலைக் கட்டுப்படுத்த இந்த ஸ்பின் வியூகம் கைகொடுக்கிறது . ஸ்பின்னர் திறமையாகப் பந்துவீசி தகுந்த ஃபீல்டிங்கும் கைகொடுத்தால், எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளையும் முறித்துப்போடமுடியும். எதிரி பேட்ஸ்மனுக்கு ரன் விட்டுக்கொடுக்காது நெருக்கவும் இது வசதியான ஆயுதமாக மாறியிருக்கிறது.

இப்போது நடந்துகொண்டிருக்கும் முதல் ரவுண்டு மேட்ச்சுகளில் டாப் அணிகளாக சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தற்போது விளங்குகின்றன. மாறிவரும் போட்டி நிலவரப்படி அணிகளின் தரவரிசை மாறும். மேற்கண்ட அணிகளின் வெற்றிக்கு இதுவரை, அந்தந்த அணிகளின் ஸ்பின்னர்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. சென்னை அணிக்கு அஷ்வினும், ஜடேஜாவும் இக்கட்டான தருணத்தில் விக்கெட் சாய்த்துக் கைகொடுத்துள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு 42-வயதான ப்ரவீன் தாம்பே பந்துவீசும்போதெல்லாம் மிகக்குறைந்த ரன்களே எதிரணிக்குக் கொடுக்கிறார். அல்லது முக்கிய விக்கெட்டை எடுத்துவிடுகிறார். கொல்கத்தா அணிக்கு பியுஷ் சாவ்லா (Piyush Chawla), ஷகிப்-அல் ஹசன் ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்கள். சுனில் நரைனின் பந்துவீச்சு ஆக்ஷன் மீண்டும் குறை காணப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சென்ற மேட்ச்சில் 44-வயதான ஆஸ்திரேலிய இடது கை சுழல்பந்துவீச்சாளர் ப்ராட் ஹாக் (Brad Hogg) சேர்க்கப்பட்டார். மிகச்சிறப்பாக பந்துபோட்டு சென்னையின் வீரர்களை ரன் எடுக்கவிடாது நெருக்கடி கொடுத்தார் அவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 20 வயதான ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் (Yazuvendra Chahal) அற்புதமாகப் பந்து வீசி வருகிறார். டெல்லி அணியைப்பற்றிக் கேட்க வேண்டாம். அவர்கள் முழுதுமாக தங்கள் ஸ்பின்னர்களை நம்பி இருப்பதுபோல் தெரிகிறது. டெல்லிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹிர் அபாரமாக ஸ்பின் போட்டு இதுவரை அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் தொப்பியை (Purple Cap) வென்றுள்ளார். கூடவே இருக்கின்றனர் கேப்டன் டுமினி(JP Duminy), அமித் மிஷ்ரா ஆகியோர். இருவரும் இடையிலே நுழைந்து விக்கெட்டைச் சரித்து எதிரணியைக் கிடுகிடுக்க வைக்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள். மும்பை அணிக்கு இருக்கவே இருக்கிறார் பழைய புலி ஹர்பஜன் சிங். 20 வயதான இந்தியாவின் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேல் பஞ்சாப் அணிக்காக நல்ல பங்களிப்பு செய்கிறார்.

இவர்களன்றி, ரிசர்வ் வீரர்களாக இருந்துகொண்டு, எந்த நிலையிலும் மைதானத்துக்குள் வரக் காத்திருக்கின்றனர் இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத, வெளிச்சத்துக்கு இன்னும் வராத சுழல்பந்து வீச்சாளர்கள். கல்கத்தா அணியில் மிஸ்டரி ஸ்பின்னர் கரியப்பா, சென்னை அணியில் 21-வயது பவன் நேகி (Pawan Negi), சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (வெஸ்ட் இண்டீஸ்), டெல்லி அணியில் ஷாபாஸ் நதீம், பெங்களூர் அணியில் இக்பால் அப்துல்லா போன்றோர்.

இந்தியாவில் ஸ்பின் பௌலர்களுக்குப் பஞ்சமா என்ன? அவர்களுக்கு சர்வதேசத்தரப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் தான் குறைவு. ஆனால் இப்போது ஐபிஎல் வந்தபின் அனேக வாய்ப்புகள் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன. தேர்வான அவர்களும் சுடச்சுடப் பந்து போட்டு சரியான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள்; காட்டுகிறார்கள் தங்கள் திறமையை. ஸ்பின் மாயாஜாலம் மேலும் தொடரும்போலிருக்கிறது. வரவிருக்கும் முக்கிய ஐபிஎல் போட்டிகள் இதனை உறுதிப்படுத்தும். ரசிகர்களுக்கு எப்போதும் ஐபிஎல் ஒரு விருந்துதான் – ஸ்பின்னர்கள் இதில் சேர்த்துக்கொண்டிருப்பது, விருந்தில் இன்னொரு ருசி.

**

என்னடா இது ? இந்தத் தமிழுக்கு வந்த சோதனை !

ஜெயகாந்தனின் மறைவு பலரைப் பலவிதமாகப் பாதித்திருக்கிறது. வாசகர் கடிதங்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், சமகால எழுத்தாளர்கள், இலக்கிய விமரிசகர்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் எனப் பத்திரிக்கைகளும், இணையதளங்களும் ஒரே ஜெயகாந்தன் மயம். அத்தகைய போற்றத்தகு ஆளுமைதான் அவர். ஒரு எழுத்துப் படைப்பாளிக்கு, சிருஷ்டிகர்த்தாவுக்கு உள்ளூர இருக்கவேண்டிய அந்தரங்கசுத்தி, நேர்மைசார்ந்த கம்பீரம் பற்றி தன் முன்னுரைகளில் அவர் எழுதியிருக்கிறார். அப்படியே அவர் தன் வாழ்நாளில் இருக்கவும் செய்தார்.

மூத்த எழுத்தாளர்களைப்பற்றி அவர் கருத்துக் கூறியதில்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்படியாகவும் தான் அதிகமாக ஒன்றும் சொன்னதில்லை; அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருமுறை பேசியிருக்கிறார் ஜெயகாந்தன்.

எழுதுவதை அவர் நிறுத்தி பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவருடைய வீட்டு மொட்டைமாடியில் தன் அபிமானிகள், நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவருடைய அந்த சந்திப்பு, சம்பாஷித்தல் ‘சபை’ என அவருடைய நண்பர்களால் காலப்போக்கில் அழைக்கப்பட்டது. மருத்துவ உதவி மேற்கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் மிகவும் குன்றிக் காணப்பட்டார் ஜெயகாந்தன். நினைவை அவ்வப்போது இழந்த நிலையிலும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர் யார் என்கிற பிரக்ஞை இல்லாது, ஒரு இயல்பாக, மென்மையாக சிரித்தும் கைகுலுக்கியும் கழிந்த நாட்கள் அவை.

சமீபத்திய குமுதம் இதழில் ஜெயகாந்தன் கையெழுத்தைத் தாங்கி ஒரு கடிதம் வந்துள்ளது. அவ்வார ஏடில் இப்போது வந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் கதைகளைப் படித்து அவர் பாராட்டியதாக அது கூறுகிறது. ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி தன் முகநூல் பக்கத்தில் அந்தப் பாராட்டுக் கடிதம் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்று மன வேதனையோடு மறுத்திருக்கிறார். கூடவே, ஜெயகாந்தன் கடந்த சில மாதங்களாகவே உடல்நலச் சீர்குலைவு காரணமாக எதையும் படிக்கவோ, எழுதவோ முடியாத நிலையில் இருந்தார் என்பது அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும் எனக் கூறியுள்ளார். ஆதலால் யார் எதைச் சொன்னாலும் அதை மறுத்துச் சொல்லும் நிலையிலோ, எதைப்பற்றியும் கருத்துச் சொல்லும் நிலையிலோ அவர் அப்போது இல்லை என்கிறார் அவரது மகள். எனவே வைரமுத்துவின் குமுதம் சிறுகதைகளை அவர் படித்திருக்க வாய்ப்பில்லை. சுயநினைவை இழக்க ஆரம்பித்திருந்த அவருடைய மோசமான உடல்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட கடிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்க முயற்சி செய்திருக்கிறார்கள்; அல்லது அவருடைய பழைய கையெழுத்தை உபயோகப்படுத்தி இருக்கலாம். இதற்கு, பூரண சுயநினைவில் இல்லாதிருந்த அவர் சம்மதித்திருப்பார் என்பது ஒரு அதீதமான கற்பனையாகத்தான் இருக்கமுடியும். இந்தத் தரக்குறைவான செய்கை, இலக்கிய மோசடி குறித்துத் தன் கடுமையான கருத்தை, எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் ‘சிறியார்’ என்கிற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் இலக்கிய உலகில் வைரமுத்துவின் இடம் என்ன? உண்மையில் அவர் கவிப்பேரரசா, சிற்றரசா, இல்லை குறுநிலமன்னர்தானா என்பதையெல்லாம் நிறுவுவதற்குப் போதிய இலக்கியப்புலமை சாதாரணர்களான நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆயினும், தன் கவிதைகளுக்கெனத் தமிழில் தனியிடம் பெற்ற கவிஞர் அவர். விருதுகள் பலவும் பெற்றவர். (இந்தக் காலத்தில் எருதுகளுக்கும் விருதுகள் கிடைக்கின்றன என்பது வேறு விஷயம்).

இலக்கிய உலகில் என்ன பதற்றம் இப்போது வைரமுத்துவுக்கு? இத்தகைய கீழ்நிலைக்கு அவர் ஏன் தன்னைத் தாழ்த்திக்கொண்டார் என்பது எந்த ஒரு வாசகனுக்கும் கவலை, மனச்சோர்வு தரும் சங்கதியாகும். ஜெயகாந்தன் கடைசியாக எழுதியதாகக் கூறப்படும் அந்தப் போலிப் பாராட்டுக் கடிதத்தை, வைரமுத்து-குமுதம் & கோ., ஜெயகாந்தன் இறந்தபின் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன? அதை ஒரு இலக்கிய ஆவணம்போல் அவருடைய கையெழுத்தோடு பிரசுரித்து என்ன சொல்லப் பார்க்கிறார்கள்? ஜெயகாந்தன் போன்ற ஒரு இலக்கிய சிம்மம், வைரமுத்து வடித்த கதைகளைப் படித்ததோடல்லாமல், தன் கைப்படக் கடிதம் எழுதிப் பாராட்டியும் விட்டார் என்றா ! இந்தக் கடிதத்தினால், வைரமுத்து தமிழின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுவாரா? மேலும் மேலும் விருதுகள் வந்து விழுமா?

என்ன ஒரு அபத்த நிகழ்வு இது ! தமிழ் இலக்கிய உலகில் நிலவும் விசித்திர வேதனை, சோதனைகளையெல்லாம் எங்கே போய்ச்சொல்லி முட்டிக்கொள்வது ?

ஐபிஎல் – யுவராஜ் துக்கடா !

டெல்லியின் புகழ்பெற்ற ஜன்பத் மார்க்கெட். இளசுகளுக்கான ஜீன்ஸ், டி-ஷர்ட்ஸ், ஷூஸ், பைகள் என்று வர்ண ஜாலம். உலா வருகையில் காதில் விழுந்தது இரண்டு தமிழ் இளைஞர்களிடையே (IPL buffs போல) உரையாடல்:

கல் டெல்லி-மும்பை மேட்ச் தேக்காத்தா? (நேத்து டெல்லி – மும்பை மேட்ச் பாத்தியாடா?)

ஹா(ன்), தேக்கா! (ஆமா, பாத்தேன்)

இந்த யுவராஜ் சிங் என்னடா ஆடறான்? இல்லாத அலட்டு அலட்டறான்..எப்போ அவசியமோ, அப்ப ரெண்டு ரன்னுலே ஓடிர்றான் !

கல்கத்தாவுக்கெதிரா அவன் எப்படி ஸ்டம்ப்ட் ஆகி அவுட் ஆனான் பாத்தியா ! சாவ்லாவோட(Piyush Chawla) பந்த அடிக்கத் துப்பில்ல. பந்து இவங்கிட்டருந்து டபாய்ச்சுகிட்டு விக்கெட்கீப்பர்ட்ட போகுதுங்கிற சொரணைகூட இல்லாம க்ரீஸை விட்டு வெளியே போறான். பார்க்குல நடக்கறதா நெனச்சுக்கிட்டானா.. இண்டியன் டீம்ல வேற இவனப் போடலன்னு இவன் அப்பன் டிவி சேனல்ல வந்து அழறான்!

இவனுக்குப்போயி எந்த சும்பண்டா 16 கோடிய அள்ளிக் குடுத்தான்!

சரி விட்றா ! டெல்லிதான் நேத்திக்கு ஜெயிச்சுடுச்சுல்ல..

அது ஷ்ரெயாஸ் ஐயர், டுமினி (Shreyas Iyer, JP Duminy) பேட்டிங்குனால… இந்த பேவகூஃப (முட்டாள) நம்பியா டெல்லி டேர்டெவில்ஸ் இருக்குது..சாலா !

**

பிரபஞ்ச வெளியில்

ஆடச்சொன்னால் ஆடுவோம்
பாடச்சொன்னால் பாடுவோம்
வாடச்சொன்னால் வாடுவோம் – தரையை
நாடச் சொன்னால் நாடுவோம்
நமக்கென்று என்ன பெரிய வாழ்க்கை
நிலையில்லாததொரு உலக மேடையில்

**

நினைவுப் படிமங்கள்

எதை எங்கே பார்த்தாலும்
தவறாது தனக்குள்
இருத்திக்கொள்ளும் மனதில்
உன்னைப்பற்றி ஒரு பிம்பம்
என்னைப்பற்றி ஒரு பிம்பம்
அதைப்பற்றி ஒரு பிம்பம்
இதைப்பற்றி ஒரு பிம்பம்
தோன்றி எழுந்து நிலவும் பிம்பம்
தொலைந்தும் போய்விடலாம் ஒரு நாள்
தொலைந்ததைப்பற்றியும்
தொலையாது இன்னுமிருப்பதில்
இருக்கும் ஓர் பிம்பம்

**

சொன்னாக் கேளடா !

கண்ணாடி வீட்டிலிருந்தே காலத்தைக்
கழித்துக்கொண்டிருந்தவனுக்கு
அக்கம்பக்கத்திலிருந்து
அரியபோதனை வந்தது
கல்லைவிட்டெறியாதே வெளியே
பிறர் சொல் கேட்கிறவனா அவன்
எறிந்துதான் பார்ப்போமே
என்னதான் நடந்துவிடும்
நினைத்தான் எறிந்தான்
ஒன்றும் நடக்கவில்லை முதலில்
சிரித்துக்கொண்டான் இந்த
அசட்டு உலகத்தை நினைத்து
தைரியம் மிகக்கொண்டு
கையிலே கல்லெடுத்து
சரமாரியாக வீசினான்
ஆரம்பத்தில் ஒன்றிரண்டுதான்
திரும்பி எகிறின அவனை நோக்கி
ஒரு மலையே வந்திறங்கியது விரைவில்
கண்ணாடி வீடு மறைந்தது நொடியில்
கல்லெறிந்த வீரனும்
காணாமற்போனானே

**

ஜெயகாந்தன் -2

(தொடர்ச்சி)

குமுதத்தில் வெளியான ஜெயகாந்தனின் இன்னொரு கட்டுரையின் தலைப்பு: ‘அது அவர்களுக்குத் தெரியாது!’ இதில், தான் மிகவும் மதித்த, இருந்தும் ஒருவகையில் நெருக்கம் அதிகம் இல்லாத தன் தந்தையைப்பற்றி, அவரது மரணம் பற்றி எழுதுகிறார். உடம்பு சரியில்லாத தன் அப்பா ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். பார்க்கப்போன சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் அந்த அதிர்ச்சிச் செய்தியை சொல்லி, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் போய்ச் சொல்லச் சொல்கிறார். கேட்ட வார்த்தைகளின் அர்த்தம், அதன் கடுமை சிறுவனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. வீடு திரும்புகிறான் பையன். வீட்டில் இருந்து அருமையான சாம்பாரின் மணம். பசியோ கொல்கிறது. சரி, முதலில் சாப்பிடுவோம் அப்புறம் சொல்வோம் விஷயத்தை என்று உட்கார்ந்து சாப்பிடுகிறான். பிரமாதமான சாப்பாடு. வீட்டிலிருந்த பாட்டி என்று ஞாபகம்- கேட்கிறாள் சிறுவனைப் பார்த்து. ஒங்கப்பன் முடியாம ஆஸ்பத்திரியிலே கெடக்கானே..போயி பாத்தியா, இல்ல எங்கயாவது சுத்திட்டு வர்றியாடா!’ சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வருகிறது. தயங்கிச் சொல்கிறான்: பாத்துட்டுத்தான் வந்தேன். அப்பா போயிட்டாரு! அதிர்ந்துபோன பாட்டி ‘எலே! பாவிப்பயலே! என்னடா சொல்றே! எனக் கத்த, சிறுவன் குரல் தாழ்த்தி, டாக்டரு அப்டித்தான் சொன்னாரு என்கிறான் குழப்பமாக. வீட்டிலுள்ளவர்கள் அலரிப்புடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் அப்பாவின் உடலை கொண்டுவந்து போடுகிறார்கள். வரும் நாட்களில் அப்பாவின் காரியங்கள் நடந்தேறுகின்றன. அவன் நிச்சலனமாக எல்லாவற்றையும் பார்த்து நிற்கிறான். ஏனோ அழுகை வரவில்லை. விஷயத்தின் கனம் அவன் மனதைக் கவ்வவில்லை. வந்திருக்கும் உறவினர்கள் மறைந்தவரின் மகன், சிறுவன் ஜெயகாந்தனைப் பார்க்கிறார்கள். என்னமாதிரி மனுஷனுக்கு என்னமாதிரி பிள்ளை! கிஞ்சித்தும் பாசம் இல்லையே..கொஞ்சமாவது அழுகிறானா பார்த்தியா அவன்! என்பதுபோல் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். பரிகசிக்கிறார்கள்.

காரியங்கள் எல்லாம் முடிந்து வீடு அமைதியாகிவிட்டது. சிறுவன் ஜெயகாந்தன் ஒருநாள் இரவு படுக்கையில் புரள்கிறான். தூக்கம் வரவில்லை. அப்பாவின் நினைவு ஆறாய்ப் பெருகி மனதைத் தாக்குகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று தன்னை வெகுவாக ஈடுபடுத்திக்கொண்ட, மிகவும் நேர்மையானவராய்ப் பேசப்பட்ட அப்பா. எப்போதாவதுதான் வீடு திரும்பும் அப்பா. அப்படி அபூர்வமாகச் சந்திக்க நேர்கையில், அவர் தன் தலையைப் பாசமாகத் தடவி தன்னுடன் அன்பாகப் பேசியது, படிப்பைப்பற்றி விஜாரித்தது, தனக்கு அவர் சொன்ன நல்ல விஷயங்கள். அவரை மற்றவர்கள் பார்க்க வரும்போது அவர் நடந்துகொள்ளும் விதம், பேச்சு, நடத்தையில் ஒரு கம்பீரம். அப்பாவைப்பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதின் ஆழ் அடுக்குகளிலிருந்து மேலெழும்பி மிதக்கிறது. அவன் உடம்பில் சூடேறிக் கண்கள் கலங்குகின்றன. ‘அப்பா!’ மெதுவாக, ஹீனமாக அவனிடமிருந்து குரல் அந்த இரவில் எழும்புகிறது. நம் அப்பாவை நாம் இனிமேல் பார்க்க முடியாதா? அவருடன் பேசமுடியாதா? போய்விட்டார் என்பதற்கு அர்த்தம் இதுதானா? துக்கம் கவ்வுகிறது சிறுவன் ஜெயகாந்தனை. தேம்பித்தேம்பி அப்பாவை நினைத்து இரவு முழுதும் அழுகிறான். அது அவர்களுக்குத் தெரியாது.. அவனுக்கு அப்பாவின் மீது பாசமில்லை என்று பழித்தார்களே அவர்களுக்குத் தெரியாது அது .. என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

அவரது சிறுவயது காலகட்டத்தில், படிப்பை நிறுத்திவிட்ட நிலையில் கம்யூனிச இயக்கத்திலிருந்த தன் தாய்மாமனுடன் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கமர்ந்து நாளிதழ்கள், இலக்கிய ஏடுகளைப் படிப்பது அவர் வழக்கம். அவருக்கு மொழிமேல் இருந்த ஆர்வம் கண்டு, அவர்மீது ஒரு தந்தையைப்போல் அன்புகாட்டிய மார்க்ஸிஸ்ட் சித்தாந்தவாதியான ஜீவா, சிறுவன் ஜெயகாந்தனுக்கு முறையாகத் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். தமிழ்ப் படைப்புகளோடு, நிறைய ரஷ்ய இலக்கியம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது சிறுவன் ஜெயகாந்தனுக்கு. அவரது 16 வயதிலிருந்தே ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தாமரை, சரஸ்வதி, சாந்தி, மனிதன், சக்தி போன்ற சிறு இலக்கியப்பத்திரிக்கைகளில் வெளிவர ஆரம்பித்தன.

நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் ஜெயகாந்தன். இப்போது எழுதிவரும் சில சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, முன்னோடியாக விளங்கிய எழுத்து மேதை. நிறைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்த ஜெயகாந்தன் தன் வாழ்நாளின் கடைசி 20 வருட காலகட்டத்தில் ஒன்றும் எழுதவில்லை. நண்பர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமா? முதலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிக்கட்டும்!’ என்றாராம்.
படைப்புச்செருக்கு நிறைந்தவராக, அடாவடி ஆளாக அவரை சிலர் விமரிசித்தாலும், அவரது மென்மையான குணநலன்கள் அவ்வப்போது வெளிப்பட்டிருக்கின்றன என்பதை நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். ஒருமுறை தன் வாசகர், அபிமானியான இளைஞர் ஒருவரின் கல்யாணத்தை தானே முன்னின்று நடத்தியதோடு, தம்பதிகளைக் குஷிப்படுத்தும் நோக்கோடு அவர்களை சைக்கிள் ரிக்ஷாவில் உட்காரவைத்துத் தானே அதை ஓட்டிச் சென்றவர் ஜெயகாந்தன் !

சமூகத்தின் ஏழை பாழைகளின் அன்றாட நெருக்கடி வாழ்க்கை, அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் அவரிடையே ஒளிவிடும் நேர்மை, உண்மை, தர்மம் போன்ற சீரிய குணங்கள் ஆகியவற்றையும், மத்தியத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள், கோட்பாடுகளின் முரண்கள், வாழ்வுச்சிக்கல்கள், அன்றாடப் போராட்டங்களையும் தன் படைப்புகளில் சிறப்பாக வடித்திருக்கிறார் ஜெயகாந்தன். மனிதநேயம் வாழ்வின் அடிநாதமாக இழைந்தோடுவதை அவரது படைப்புகள் அழகாக, ஆழமாகச் சித்தரிக்கின்றன. ’ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம்’, ஜெய ஜெய சங்கர, யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, பிரளயம், உன்னைப்போல் ஒருவன், கோகிலா என்ன செய்துவிட்டாள்?, உண்மை சுடும், பிரும்மோபதேசம், ரிஷிமூலம், கங்கை எங்கே போகிறாள்? போன்ற நாவல்களும், யுகசந்தி, சுயதரிசனம், ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், தேவன் வருவாரா?, குருபீடம், ஒருபிடி சோறு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், சுதந்திரச் சிந்தனைகள், யோசிக்கும் வேளையில், ஒரு பிரஜையின் குரல், ஒரு சொல் கேளீர், நினைத்துப் பார்க்கிறேன், ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அவரது முக்கியப் படைப்புகளில் அடங்கும். ஆரம்ப காலத்தில் சில கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். அவருடைய ‘நீ யார்’ என்று தலைப்பிட்ட கவிதை எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட ‘எழுத்து’ இதழில் அறுபதுகளில் வெளியாகியுள்ளது. ’ஜெயகாந்தன் கவிதைகள்’ தற்போது தனிப் புத்தகமாகவும் கிடைக்கிறது. அவருடைய கவிதை ஒன்றில் இப்படிக் கேட்கிறார் ஜெயகாந்தன்:

கண்டதைச் சொல்லுகிறேன் – உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் – இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால் – அவ
மானம் எனக்குண்டோ?

சுயசரிதைப் படைப்புகள் என்கிற ரீதியில் அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ (துக்ளக் இதழில் தொடராக வெளிவந்து பெரும் வாசகர் கவனம் பெற்றது), ’ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’, ’ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆங்கில எழுத்தாளர் ஜே.பி.ப்ரீஸ்ட்லி (J.B.Priestley)யைப்போல, ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவருடைய படைப்புகளுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அந்தந்தக் காலகட்டத்தின் தமிழ்ச்சமுதாயம், அதன் போக்கு பற்றி, அதன் மீது அவருக்கிருந்த கவலை, விமரிசனம்பற்றி ஆழமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கிய தீவிர வாசகர்கள், ஆர்வலர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

அவருடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்காக 1972-ல் அவருக்கு விருதளித்துக் கௌரவித்தது இந்திய சாகித்ய அகாடமி. 1996-ல் ஜெயகாந்தனை ‘A Fellow of Sahitya Academy’ –ஆகவும் நியமித்து அது தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ’ஞானபீட விருது’ 2002-ல் அவரது சீரிய இலக்கியப்பணிக்காக வழங்கப்பட்டது. அந்த விருது அறிவிக்கப்பட்டதை நண்பர்கள் அவருக்குத் தெரிவித்தபோது, ‘ஞானத்திற்கு பீடம் எதற்கு !’ என்றாராம் ஜெயகாந்தன். இந்திய அரசின் ’பத்மபூஷன்’ விருது 2009-ல் அவரை அலங்கரித்தது.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மேடைப்பேச்சாளர், திரைப்பட இயக்குனர் எனப் பன்முகத் திறமை வாய்க்கப்பெற்றவர் ஜெயகாந்தன். ஊருக்கு நூறு பேர், சில நேரங்களில் சில மனிதர்கள், உன்னைப்போல் ஒருவன் ஆகிய அவரது படைப்புகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அவர் இயக்கிய ’உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்துக்கு 1965-ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிட்டிபாபு இசையமைத்த இந்தப் படத்தில் பின்னணி இசை மட்டும்தான். திரைப்பாடல்கள் ஏதும் இல்லை!

Game of Cards and Other Stories –Jayakanthan என்கிற தலைப்பில் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அவரது அக்னிப்பிரவேசம், பிரும்மோபதேசம், ட்ரெடில் (Tredil) போன்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவன்றியும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (National Book Trust of India), ‘கதா’ (Katha) போன்ற மத்திய இலக்கிய அமைப்புகள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள சிறந்த இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகளிலும் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் (Alexander Pushkin) மிகச் சிறந்த ரஷ்ய கவிஞராகவும், நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். புஷ்கினின் படைப்புகளைத் தமிழில் ஜெயகாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இதற்காகவும், ஜெயகாந்தனின் படைப்புகள் ரஷ்ய மொழியில் வெளிவந்து புகழ்பெற்றிருப்பதையும் பாராட்டும் வகையில் ஜெயகாந்தனுக்கு ‘The Order of Friendship’ என்கிற உயரிய ரஷிய விருதை 2011-ல் வழங்கி, ரஷ்யா அவரைக் கௌரவித்தது.

**