தமிழ்நாட்டில் ஒரு சிறு பயணம் – 2

காட்டழகிய சிங்கர், ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில்கள்

அடுத்த நாள் காலையில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம மண்டபத்தில் உட்கார்ந்து அளவளாவிக்கொண்டிருக்கையில், ‘காட்டழகிய சிங்கர் கோவிலுக்குப்போறோம்..வர்றீங்களா?’ என்றார் உறவினர். கரும்புதின்னக் கூலியும் வேண்டுமா என்ன? ’இதோ வந்துட்டேன்..!’’ என்று பாய்ந்து அவரது மாருதி ஆல்ட்டோவில் ஏறிக்கொண்டேன். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது பிரும்மாண்டமான ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். ஒரு காலத்தில் பெரும் வனமாய் இந்தப்பகுதி இருந்ததாம். காட்டின் முரட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளிலும் அசால்ட்டாகப் புகுந்து அட்டகாசம் செய்தனவாம். இதுகளின் தொல்லையைத் தாங்காத மக்கள் காட்டின் நடுவில் நரசிம்மப்பெருமானுக்குக் கோவில் கட்டி வழிபட்டதால் யானைகளின் தொல்லை ஒருவாறு கட்டுக்குள் வந்ததாம்.

கோவிலுக்கருகே விஸ்தாரமாக திறந்தவெளி. அருகே கல்யாணமண்டபம் போன்று கட்டியிருந்தார்கள். பக்கவாட்டில் காரை பார்க் செய்து நடந்து உள்ளே சென்றோம். பெரியகூட்டம் ஏதுமில்லை. நாங்கள் சென்றபோது திரை போட்டிருந்தார்கள். சன்னிதிக்கு முன் காத்திருந்தோம். திரைவிலகியதும் தீபம் காட்டினார்கள். தீபத்தைத் தவிர பெருமாளுக்கருகில் வேறு வெளிச்சமில்லை. தூரத்திலிருந்து பார்த்ததால் முகம் தெரிவது கஷ்டமாயிருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கர்ப்பகிருஹத்தை நோக்கி நகர்ந்தது. மிக அருகில் சென்றதும் பார்த்தோம். எட்டடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் நரசிம்மப் பெருமாள். தாயார் லக்ஷ்மி மடியில் அமர்ந்திருக்க அவரை இடதுகையால் அணைத்தவாறு, வலது கையினால் அபயஹஸ்தம் காட்டி, கம்பீரமாய் அருள்பாலிக்கிறார். கவர்ச்சியான அருட்தோற்றம். கோவில் பிரஹாரத்தைச் சுற்றிவருகையில் கோவிலின் பழமையை உணரமுடிகிறது.

விஜயதசமி அன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இக்கோவிலுள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி, காலையிலிருந்து மாலைவரை பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருகிறார். திருக்கார்த்திகை அன்று 1008 விளக்கு (சகஸ்ரதீபம்) ஏற்றப்பட்டு விசேஷ பூஜைகள் உண்டு. ஸ்ரீராமானுஜரின் சிஷ்யரான ஸ்ரீரங்கத்துக்காரரான பிள்ளை லோகாச்சாரியார், இக்கோவிலுக்கு வந்து ஏகாந்தத்தில் அமர்ந்து நீண்ட நாட்கள் தியானம் செய்திருக்கிறார். ’ஸ்ரீவசனபூஷணம்’ போன்ற ரகசிய கிருந்தங்களை இந்தக் கோவிலில் அமர்ந்துதான் இயற்றினாராம் அவர்.

காட்டழகிய சிங்கரின் தரிசனம் கண்டபின் அங்கிருந்து ’அப்படியே ஜம்புகேஸ்வரரையும் போய் சேவிச்சுடுவோம். இன்னிக்கு பிரதோஷமா இருக்கு!’ என்றார் எங்களைக் கூட்டிச் சென்ற தயவான். ’கெளம்புங்க!’ என்றேன். திருச்சி – திருவானைக்காவலில் உள்ள சிவபெருமானின் புகழ்பெற்ற பெருங்கோவிலது. சோழமன்னன் கோ செங்கட்சோழனால் 1800 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டதாம் இதுவன்றி மேலும் 77 மாடக்கோவில்களை தன் ஆட்சிக்காலத்தில் அவன் கட்டுவித்தான். சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இது அப்புஸ்தலம் (நீர் ஸ்தலம்) என அழைக்கப்படுகிறது. அம்பிகை அகிலாண்டேஸ்வரி நீரினால் லிங்கத்தைத் தோற்றுவித்து சிவனை வழிபட்ட சிறப்பான சிவஸ்தலம். ‘ஜம்பு’ என அழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் கீழ் லிங்கவடிவில் காணப்படுவதால் சிவபெருமானுக்கு இங்கு ஜம்புகேஸ்வரர் என்கிற திருப்பெயர். நீர் எப்போதும் கருவறையில் சுரந்துகொண்டே இருக்குமாம் இந்த ஸ்தலத்தில்.

பிரும்மாண்டமான கோவிலின் நுழைவாசலில் புகுகையில் ஒரு சின்னஞ்சிறு வஸ்துவைப்போல் உணரநேர்ந்தது. இறைமை அல்லது தெய்வீகம் எனும் மாபெரும் சக்தியின் முன் மனிதன் என்பவன் ஒரு அற்பம் – அதாவது ஒன்றுமில்லை – எனப் புரிந்துகொள்ளத்தான் இந்த பிரும்மாண்டமோ? உள்ளே செல்லச்செல்லக் கோவில் பரந்து விரிந்தது. ஜம்புகேஸ்வரரின் தரிசனம் சுவற்றில் உள்ள ஒரு சிறு ஓட்டைவழியே கிடைத்தது. உள்ளே குருக்கள் லிங்கத்துக்குப் பூஜை செய்துகொண்டிருந்தார். வணங்கி மகிழ்ந்தோம். பிரகாரத்தை எல்லோரும் சுற்றி வந்தோம்.

அங்குமிங்கும் பார்த்து அரட்டை அடித்துக்கொண்டு கொஞ்சம் நேரத்தை வீணாக்கிவிட்டோம்போலும். அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதிக்குப்
போனால் சாத்திவிட்டிருந்தார்கள். சன்னிதிக்கு வெளியே ஒரு மூலையில், குருக்கள்கள் நின்றுகொண்டு, ஃப்ளாஸ்க்கில் கொண்டுவரப்பட்டிருந்த தேநீரை காகிதக்கப்புகளில் அருந்திக்கொண்டிருந்தார்கள். கேட்டதற்கு ‘இப்பத்தான் சாத்தினோம். பத்தரை மணி ஆயிடுத்தில்லியா!’ என்றார்கள். சரிதான். அம்மாதானே என்று நினைத்து எப்பவேண்டுமானாலும் அவளது சன்னிதிக்கு வரலாமா? நேரம் என்று ஒன்று இருக்கிறா இல்லையா? கவனிக்காதது நம் தவறுதான் எனப் பேசிக்கொண்டு, அம்பிகையின் சன்னிதியைப் பார்த்துக் கைகூப்பிவிட்டு வெளியே வந்தோம். சன்னிதிக்குமுன், துவஜஸ்தம்பத்திற்கு முன் எனப் பெரிய செவ்வக உலோகத்தட்டுகளில் பக்தர்கள் எண்ணெய், நெய் விளக்கேற்றி வைத்து வணங்கினார்கள். ஒரு இடத்தில் ஒரு இளந்தாய் தன் குழந்தையை விளக்கிற்குமுன் விழுந்து வணங்கச்சொன்னாள். இரண்டரை வயதேயிருக்கும் மொட்டையடித்திருந்த அந்தப் பெண்குழந்தைக்கு என்று தோன்றியது. விளக்கிற்குமுன், கிட்டத்தட்ட குட்டிக்கரணம் போடும் நிலையில் தன் சிறுதலையை செங்குத்தாகத் தரையில் வைத்து வணங்கியது குழந்தை.

இந்த அம்பிகை ஒருகாலத்தில் பெரும் உக்ரத்துடன் இருந்தாளாம். ஜனங்கள் அருகே செல்லவே நடுநடுங்கினார்கள். இங்கே விஜயம் தந்த ஆதிசங்கரரிடம் இதுபற்றி முறையிட்டு ஸ்வாமிகள்தான் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்து எங்களுக்கு அருளவேணும் என்று அவர்கள் ப்ரார்த்தித்துக்கொண்டார்கள். ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதிக்கெதிரே வினாயகப் பெருமானை முதலில் ப்ரதிஷ்டை செய்து வணங்கினார். தான் பூஜித்துவந்த ஸ்ரீசக்ரங்களை அம்பிகையின் காதுகளுக்குக் காதணிகளாக அணிவித்து அம்பிகையின் முன் நெடுந்தியானத்தில் அமர்ந்தார் ஆதிசங்கரர். நாளடைவில் அன்னை மனம் குளிர்ந்தாள். தன் உக்ரம் தணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தாள். ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்கரங்கள் இன்றும் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதியில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

(தொடரும்)

தாயாரால் வெளியே வரமுடியுமா ?

தமிழ்நாட்டில் ஒரு சிறு பயணம் – 1

சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறு பயணமாகச் செல்ல நேர்ந்தது. குறிப்பாக ஸ்ரீரங்கத்துக்கு. சந்தோஷமாகச் சென்றிருந்தேன். பகற்பொழுது உறவினர்களுடன் கலந்தாடல், சடங்குகள் எனக் கழிந்தது. மதியத்தில் உறவினர் ஒருவர் ‘ஆறுமணிக்கு உத்சவர் தாயார் வெளிலே வருவார். தரிசனம் விசேஷமா இருக்கும். போய் சேவிச்சுட்டு வந்துடுங்கோ!’ என்றார். நானும் இன்னொருவரும் தாயார் சந்நிதிக்குமுன் அந்த மாலைத் தரிசனத்திற்காக, பெருகிவரும் பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து நின்றிருந்தோம். ஸ்ரீரங்கம் கோவிலில் வைகாசி மாத கோடை உத்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பொதுவாக, மற்றநாட்களில் புஷ்பமாலை வாங்கித் தாயாருக்கு சாத்துவதற்காகக் கொடுத்தால் தாயாரின் பாதத்தில் வைத்துவிடுவார்கள். ஏற்கனவே இருக்கும் மாலைகளின்மேல் மேலும் பூச்சரங்களை அர்ச்சகர்கள் சாத்தமாட்டார்கள் என்றார்கள் கூட நின்றிருந்தவர்கள்.

கோடை உத்சவத்தின்போது கோவில் பூக்கடைகளில் அமோகமாக பூ விற்பனை நடக்கிறது. பூக்க்காரிகள், காரர்கள் ‘வாங்க அய்யா, அம்மா! தாயாருக்குப் பூ வாங்கிப்போடுங்க!’’ என்று பக்தர்களிடம் கூவிக்கூவி விற்றார்கள். குறிப்பாக மல்லிகைச்சரங்கள் வெகுவாக விற்றன. இரண்டு முழம், நாலு முழம் என பக்தர்கள் தங்கள் வசதி, விருப்பத்துக்கேற்ப பூச்சரங்களை வாங்கி ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும், நெற்றியில் திருநாமம் பளிச்சிடும் சேவகர்களிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் ஒவ்வொன்றாக வாங்கிக் கைகளில் தொங்கவிட்டுக்கொண்டு தாயாரின் வருகைக்காக நாலுகால் மண்டபத்தருகே உலாத்திக்கொண்டிருப்பார்கள். தாயார் தன் சன்னிதியிலிருந்து புறப்பட்டு நாலுகால் மண்டபத்திற்கு வந்து அடியவர்களுக்குத் தரிசனம் தரும் வைகாசிமாத வைபவம். தாயார் அங்கு வந்தவுடன் அந்த மாலைகளை அர்ச்சகர்களிடம் சேவகர்கள் கொடுத்துவிடுவார்கள். தாயாருக்கு அவை சாத்தப்படும்.சன்னிதிக்கு வெளியே வரும்வழியெல்லாம் தாயாரின் ஒரு க்ளோஸ்-அப் தரிசனத்திற்காக பக்தர்கள் – நிறையப்பேர் பெண்கள், குழந்தைகளென ஒவ்வொரு திருப்பத்திலும் திரளாய் நின்றார்கள். எந்தத் திருப்பத்தில் எங்கே நின்றால் மிக அருகே தாயாரின் திருமுகத்தைப் பார்க்கலாம் என்கிற ஒரு திட்டமிடலுடன், பரபரப்புடன் பக்தர் கூட்டம் அங்குமிங்குமாக அலைந்தது. நெய்த்தீப்பந்தம் உயர்த்திப்பிடிக்கப்பட, பல்லக்கில் தாயார் முன்னேற, முன்னேற, ஒவ்வொரு மூலையாய் ஓடிப்போய் நின்றுகொண்டு தலை உயர்த்திப் பார்த்தது கூட்டம்.

நானும் உறவினரும் தாயாருக்குப் பக்கவாட்டில் பக்தர்களோடு ஓடி, சில திருப்பங்களில் அருமையான தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்தோம். பிறகு தொடரும் கூட்டத்தைத் தவிர்த்து தாயார் இறுதியாக வந்து நின்று காட்சியளிக்கவிருக்கும் நாலுகால் மண்டபத்தருகே வேகமாகப்போனால் அங்கே ஏற்கனவே திட்டமிட்டுக் காத்திருந்தது ஒரு சிறுகூட்டம். இந்த இடத்தில் நின்றால் சரியான தரிசனம் கிடைக்கும் என அனுமானித்து நாலுகால் மண்டபத்தைச் சுற்றியிருந்த கோவில் சுவரோரமாக ஒரு இடத்தில் சாய்ந்து நின்றுகொண்டோம். நாலுகால் மண்டபத்தின் கூரைக்கும் கோவிலின் பெரும் சுற்றுச்சுவருக்கும் இடையில் வான்வெளி தெரியும். அதனை மூடினாற்போல் இணைத்து வெள்ளைத் துணிப் பந்தல் போட்டிருந்தார்கள். அழகாக இருப்பது இருக்கட்டும்; இந்தக்கோடையில் கொஞ்சம் காற்று உள்ளே வருவதையும் இது தடுக்கிறதே என்று குழம்பியிருந்தேன். பக்கத்திலிருப்பவரிடம் சொல்லவும் செய்தேன். மாலை ஆறரையை நெருங்கும் வேளையிலும் அன்று ஒரே இறுக்கம். புழுக்கம். வேஷ்டியும், இடுப்பைச்சுற்றிய அங்கவஸ்திரமுமாய் வெற்றுடம்புடன் கூட்ட நெரிசலில் இடித்துக் கொண்டு நிற்பதில் சிரமம் தெரிந்தது. தாயார் மண்டபத்தின் முன் வந்து ஒருமுறை மண்டபத்தை மெல்ல சுற்றிவந்தார். நாங்கள் நின்ற இடத்திலிருந்து மிக அருகாமையில் தாயாரின் அழகுமுகம், குழந்தைமுகமாக எங்கள் முன் கடந்து செல்ல, வணங்கி ஆனந்தப்பட்டோம். தாயார் முன்னே சென்று எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் அழகைப்பார்த்து நின்றார்போலும். பக்தர்களுக்கு ஒரே பரவசம். நேரே தாயாரைப் பார்ப்பதா, கண்ணாடியில் உருவபிம்பத்தைப் பார்த்து ரசிப்பதா? முன்னும் பின்னுமாக அவர்களின் கண்கள் அல்லாடின. அப்போது திடீரென மெல்லிய குளிர்ச்சி உடம்பில் பரவியதை உணர்ந்தேன். சற்றுமுன்னான புழுக்கத்திற்கு சம்பந்தமில்லாத, வாட்டியெடுக்கும் கோடைக்குத் தொடர்பில்லாத ஒரு குளிர்காற்று லேசாக அங்கே வீசியது ; மறையவில்லை. நிலவியது சில நிமிடங்கள். மேலே பார்த்தேன் நம்பமுடியாமல். பந்தலுக்கும் சுவருக்குமிடையே இடைவெளி கொஞ்சம் இருந்ததை முன்பும் கவனித்திருந்தேன். ஆனால் அதன்வழி காற்றுவருமென்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாதிருந்தது. இப்போது இந்த அதிசயம். சாதாரணக்காற்று வரலாம்தான். நம்பமுடியாத, கோடைக்குப்பொருந்தாத குளிர்ச்சி எப்படிக் கலந்தது அதில்? சிந்தனையோடு நிறுத்திக்கொள்ளாமல், ‘தாயார் வந்தவுடன் காத்துவீசறது கவனிச்சீங்களா!’ என்றேன் அருகிலிருந்தவரிடம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. அவர் சொன்னது இப்படி: ’காத்து வீசறதுன்னா என்ன அர்த்தம்? வரவேண்டிய மழையத் தள்ளிண்டு போயிடுத்துன்னு அர்த்தம். இனி மழை அவ்வளவுதான்!’ ஓ! ஒங்க வியாக்கியானம் இப்படிப்போறதா? சரிதான். நாம் தாயாரை பார்த்திருப்போம் என நினைத்துத் தாயாரின் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.

தாயார் நின்றிருந்த நாலுகால் மண்டபத்தின் எதிரே சுற்றுச்சுவரருகில் இருந்த கூட்டத்தோடு சேர்ந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்திலிருந்து தரிசனம் சிறப்பாக அமைந்திருந்தது. அப்போது ஒரு பெண் இடுப்பில் குழந்தையுடன் தாயாரை சேவித்து நின்றார். அவளுடைய பையன் –நாலு வயதிருக்கும்- எதிரே சுவரில் தூண்போன்றிருந்த இடத்தில் ஏறித் தாயாரை உன்னிப்பாகப் பார்த்திருந்தான். ஏகப்பட்ட மலர்ச்சரங்கள் தாயாரின் தோளில், கழுத்தில்
அணிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, புஷ்பங்களாலான போர்வை ஒன்று தாயாரின்மீது போர்த்தப்பட்டு (உள்ளே பூச்சரங்களுடன்) கட்டப்பட்டதைக் கவனித்தான் குழந்தை. அம்மாவை நோக்கி ஆரம்பித்தான்:

’இப்பிடி போர்வைய வச்சு தாயாரைக் கட்டறாளே.. தாயாரால் வெளியே வர முடியுமா?’ தன்னைத் துளைத்த சிந்தனையால் அம்மாவைத் துளைத்தான் பையன். தாய்க்காரி முதலில் அவனது கேள்வியை கவனிக்கவில்லை. அவன் விடுவதாயில்லை. ’சொல்லு! தாயாரால் வெளியே வரமுடியுமா ?’

அம்மா சொன்னாள்: ’வரமுடியும். தாயார்ங்கறது பெருமாள்தான். பெருமாள் வெளிய வரமாட்டாரா என்ன!’ என்றாள்.

’எப்பிடி? எப்பிடி வருவா?’- கேட்டான் பொடியன் தூணில் மேலும் தொற்றி ஆடிக்கொண்டே.

’முன்ன ஒரு பெரிய தூண் இருந்துதா இல்லியா? அத அரக்கன் ஒதச்சான்தானே? அப்போ தூண ஒடச்சிண்டு பெருமாள் வெளியே வந்தாரா இல்லியா?’

குழந்தை சிந்தனையுடன் ‘ஆமா!’ என்றான்.

’அந்தப் பெருமாள் பேரென்ன?’ அம்மா கேட்டாள்.

‘சிங்கப்பெருமாள் !’ என்றான் சிறுவன்.

‘சரி. தாயார நன்னா சேவிச்சுக்கோ!’ என்றாள் அம்மா.

சங்கு, சக்கரம், திருநாமம் போட்டிருந்த க்ரீடம்போன்ற தலையணிகளுடன் அரையர்களில் சிலர் முன் வந்து தாயாரைப் பணிந்து சேவித்தார்கள். அவர்களுக்கு அர்ச்சகர்கள் தலையில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்வித்தார்கள். தீர்த்தம் கொடுக்கப்பட்டது. பக்தர்கள்கூட்டம் முன்னே முண்டியடித்துக்கொண்டுவந்து வணங்கிக்களித்தபின், தன் அடியவர்களுக்கு அருள்பாலித்த தாயார் தனது சன்னிதிக்குத் திரும்பினார்.

கோதண்டராமர், பட்டாபிராமர், ஸ்வாமி தேசிகன் சன்னிதி எனச் சேவித்து நாங்கள் மேலும் போக முயற்சிக்கையில், ஊரைக் கடந்துபோய்விட்டதாக அவர் சொன்ன மழை ‘இருக்கேன்’ என்று ஆரம்பித்தது கனஜோராக. விரைவில் வேகம்பிடித்து காற்றின் துணையுடன் நாலாபுறமும் புகுந்து விளாசியது. நாங்கள் ஒரு பெரிய மண்டபத்தில் தஞ்சம் புகுந்து கோவிலின் ப்ரும்மாண்ட கூரைகளின் மீதிருந்து மழைநீர் தாரைதாரையாக சீற்றத்துடன்க வெளியேறுவதை
ரசித்துக்கொண்டிருந்தோம். அந்த மழையிலும் தாயார் சன்னிதிக்கு இந்த வழியிலா போகவேண்டும் என்று கேட்டு ஆண்களும் பெண்களுமாய் பக்தர்கள் –அவர்களில் சிலர் வடநாட்டவர்கள்- தொப்பலாக நனைந்துகொண்டே சன்னிதி நோக்கி ஓடினார்கள். சில நிமிஷங்களில் கோவில் பிரகாரமெங்கும் தெப்பக்குளம் போன்ற காட்சி. சுமார் ஒருமணி நேரம் பின்னியெடுத்து கோவிலையும், ஊரையும் குளிர்வித்துச் சென்றது கோடை மழை. இரவு 8 மணிக்குப்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கோவிலுக்குள்ளிருந்து வெளியேறினார்கள் பக்தர்கள்.

-தொடரும்

பெண்கள் படுத்தும்பாடு !

’ஏதோ கொஞ்சம் படிச்சிடுத்துகளாம். சம்பாதிக்கிறதுகளாம். இதுகளுக்கு இருக்கிற திமிரு இருக்கே..அடேங்கப்பா ! எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது!’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா! பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா? பொண்ணப்பெத்தவாளும் இதுகளோடப் பேச்சக்கேட்டுண்டு ஆடறா. இது எங்கபோயி முடியும்னே தெரியலையே..’ சூடான காஃபியை உறிஞ்சிக்கொண்டே கவலையும் கோபமும் தெறிக்கும் உரையாடலில் இரண்டு மாமிகள் ஆழ்ந்திருப்பதை ஒரு ஃபங்க்‌ஷனில் கவனித்தேன்.

உண்மைதான். உலகமயமாக்கல், பொருளாதார, தொழில்துறை முன்னேற்றம், வெளிநாட்டுக் கம்பெனிகளின் அதிரடி வருகை, உயர்கல்வியில் பெண்களின் தொடரும் உழைப்பு, முன்னிலை, இளையோருக்கான புதிய வேலைவாய்ப்புகள், உயர்ந்துவிட்ட சம்பள விகிதங்கள், தராதரங்கள் என கடந்த இருபதுவருடங்களில் மாற்றத்தில் இந்தியா கனவேகம் எடுத்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சமூகத்தின்மீது, குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்மீது வெகுவாகப் படிந்துவிட்டது. அப்போதெல்லாம் நல்ல உத்தியோகத்திலிருந்த பிள்ளைகளைப் பெற்றோர், கல்யாணச்சந்தையில் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளோடு கூத்தடிக்க, தெண்டத்துக்கு ஒரு டிகிரியுடன், மற்றபடி ஒன்னுக்கும் லாயக்கில்லாத, சாமர்த்தியமில்லாத அசட்டுப் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தவரும்கூட போடாத ஆட்டமெல்லாம் போட்டார்கள். ’என் பிள்ளக்கு ஒம்பொண்ண கல்யாணம்பண்ணி வைக்கணுங்கிறியா? எத்தன நகை போடுவே? வீடு, வாசலிருக்கா? மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர், பைக் ஏதாவது வாங்கித் தருவியா? – என்றெல்லாம் அவர்கள் ஏழ்மையிலிருந்த, அல்லது போதிய பொருளாதார வசதியில்லாமல் தடுமாறிய பெண்வீட்டுக்காரர்களை சீண்டிப் பார்த்ததையும், சித்திரவதை செய்ததையு்ம் எளிதில் இந்த சமூகம் மறந்துவிடாது. பிள்ளைவீட்டுக்காரர்களின் தடித்தனம், நியாயமற்ற கோரிக்கைகளின் காரணமாக எத்தனையோ ஏழை, மத்தியவர்க்க யுவதிகள் கல்யாணம் செய்துகொள்ளமுடியாமல் தவித்தார்கள். பெற்றோருக்கு பாரமாய் நின்றதில், மன உளைச்சலில் உழன்றார்கள். அந்தக்காலந்தான் இப்போது ஒருவழியாக மலையேறிப்போய்விட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்கள் சரிய, பெண்கள் மேலே வந்துவிட்டார்கள். Poetic justice !

தற்காலப் பெண்கள் பெரும்பாலும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். சிலர் சிறப்பான உயர்கல்வித்தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். நல்ல வேலைகளுக்கு, சவாலான வேலைகளுக்கும்கூடப் போகிறார்கள். பை நிறைய சம்பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் உறுதியாய் நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கென ப்ரத்தியேக சமூக, நட்பு வட்டமும் உண்டு. சுய சிந்தனை, தீர்க்கமான முடிவு இவர்களுக்குக் கைவந்திருக்கிறது. இவர்களெல்லோரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர் என்றில்லை. பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதை விரும்புகின்றனர். ஆனாலும், தங்களுக்கான வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்னொரு விஷயம்: தற்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் confidence level-ம் அதிகமாகியிருக்கிறது. வேகமாக முன்னேறிவரும் நாட்டில், சமூகமாற்றங்கள், புதிய வாழ்வியல் மதிப்பீடுகள் போன்றவை காலப்போக்கில் நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாதவை இவை.

இந்தக்கால யுவதிகளின் கல்வித்தகுதி, சம்பாத்யம், சுதந்திரம், துணிவு ஆகியவற்றைக் கவனிக்கும் பெற்றவர்கள் – அதாவது பிள்ளையைப் பெற்றவர்கள், நல்ல மருமகளாக நம்வீட்டுக்கு வரவேண்டுமே எனக் கவலைப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றோர் ஒன்றும் எந்தக் கவலையுமின்றிக் காத்துவாங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களும், வரப்போகிற மாப்பிள்ளைப் பையன் நன்றாகச் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல குடும்பத்திலிருந்தும் இருக்கவேண்டுமே, குணாளனாக அமையவேண்டுமே என்று கவலைப்படத்தான் செய்கிறார்கள். மாறிவரும் உலகில் இருதரப்பு அக்கறைகள், கவலைகள் எல்லாம் நியாயமானதுதான். ஆனால், சுதந்திரம், சுயமான முடிவு என்கிற பெயரில் இளைஞர்கள் தான்தோன்றித்தனமாகக் காரியம் செய்து குடும்பவாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதிருக்க, என்ன செய்யவேண்டும்? பெற்றோர் முதலில் தங்களது பிள்ளையை, பெண்ணை நினைத்து ’நம்பளோட கொழந்த’ என்று பெருமிதம்கொள்வதோடுமட்டும் நின்றுவிடாமல், அவர்களைச் சரியாக அவதானிக்கவேண்டும். நம்வீட்டுப் பிள்ளைகள்தான் எனினும், தனிப்பட்ட மனிதர்கள் என்கிற நிலையில் இவர்கள் யார், எப்படி உருவாகியிருக்கிறார்கள், எத்தகைய நம்பிக்கைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நம் பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அவர்களிடம் ஒரேயடியாக புத்திமதி சொல்கிறேன் பேர்வழி என்று லெக்சர் அடிக்காமல், புலம்பாமல், போரடித்து விரட்டிவிடாமல், கனிவோடு, தோழமையோடு பேசி இணக்கம் கொள்வது முக்கி
யம். இப்படி ஒரு சூழலை வீட்டில் அமைத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணம், கார்த்திகை போன்ற விஷயங்களில் குடும்பமாக சேர்ந்து உட்கார்ந்து பேச வாய்ப்புகள் ஏற்படும். இப்படி எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம். காலங்காலமாக, ஒரு தனிமனித, சமூகத் தேவையாக உருவெடுத்துவிட்ட ’குடும்பம்’ என்கிற institution-மீது, அமைப்பின்மீது வளர்ந்த பிள்ளைகள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இது பெரிதும் உதவும். இத்தகைய ஹோம்வொர்க்கைச் சரியாகச் செய்யாமல் பெற்றோர்கள் வெறும் குழப்பமும், அனாவசியப் பதற்றமும், தடுமாற்றமும் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை எனத் தோன்றுகிறது.

**

கத்திரி வெயில்

>>>> சிறுகதை : ஏகாந்தன்

தான் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கிழக்குத் தாம்பரம் வியாசர் தெருவில் கட்டிய வீடு கிருஷ்ணய்யங்காருக்கு சுகமாக அமைந்துவிட்டது. அவருடைய அகத்துக்காரி அலமேலு மாமிக்கும் திருப்திதான். ஆனால் அப்படி அவள் சொல்வதில்லை. அவருடைய ஒரே பையன் ராகவன் அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப மும்பையிலிருந்து சென்னைக்கு சமீபத்தில் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணம் மட்டும் வேண்டாம் என்கிறான். அம்மாவின் மனதில் கவலையைக் கூட்டிவைத்து அவளை அடிக்கடி கோவில், குளமென்று அலைய வைத்தான். ஸ்பென்சருக்கருகில் அவனது ஆஃபீஸ். தாம்பரம் வீடு வெகுதூரம் என அப்பாவின் வீட்டில் தங்கத் தயங்கினான். அப்பாவிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் வாடகை வீட்டிற்குப்போய் வசிக்க மறுத்துவிட்டார் ஐயங்கார். ’வேணும்னா நீ ஆஃபீஸுக்குப் பக்கத்துல நல்ல வீடா வாடகக்கிப்பாத்து இருந்துக்கோடா. ஒங்க அம்மாவ வேணும்னாலும் கூட்டிண்டு போ. நா இந்த வீட்லதான் இருப்பேன்’ என்று அடம்பிடித்தார் ஐயங்கார். மேலும் ’தெனம் பிக்-அப் பண்ண ஆஃபீஸ்லதான் கார் அனுப்பறேங்கறானே.. வேறென்னடா வேணும் நோக்கு?’ என்று அவர் உறுமியதற்கு ராகவனிடம் பதிலில்லை. பிள்ளையிடம் அப்படி அவர் கடுகடுத்தது அலமேலு மாமிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வாடகை வீடுகளில் ஏகமாகக் கஷ்டப்பட்டிருக்கிறாளாதலால், இந்த விஷயத்தில் அவள் ஒன்றும் சொல்லவில்லை. வேறுவழியின்றித் தாம்பரம் வீட்டில் பெற்றோருடனேயே தங்கிவிட்டான் பிள்ளையாண்டான். ஆஃபீஸ் வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தான் இப்போது. திரும்பிவர இரண்டு வாரமாகலாம்.

அன்று வழக்கம்போல் அதிகாலையிலேயே குளித்துமுடித்து நெற்றியில் பளிச்சென்று திருமண் இட்டுக்கொண்டு, திருவாராதனையை வேகமாக முடித்தார் ஐயங்கார். அலமேலு மாமி பரிமாறிய இட்லி-சட்னியை நிதானமாக சாப்பிட்டார். ’மொளகாய்ப்பொடி தீந்துடுத்தா ?’ என்று விடாது அதையும் வாங்கித் தட்டில் போட்டுக்கொண்டு சிறிது தூக்கலான அந்தக் காரத்தை ரசித்தார். சாப்பிட்டு முடித்து கை அலம்பி, ஈரக்கையை அங்கவஸ்திரத்தில் ஒத்திக்கொண்டு, வாசலுக்கு வந்தார் ஐயங்கார். கத்திரிவெயில் காலையிலேயே தன் விஷமத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வாசலில் அவர் பார்த்துவைத்த வேப்பமரம் பெரிதாக வளர்ந்து நிழல் பரப்பி நின்றது. மரத்தைப் பாசத்தோடு பார்த்துக்கொண்டே மரத்தடியில் போட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். எதிரே சின்ன ஸ்டூலில் அன்றைய நியூஸ்பேப்பர்கள். ரிடையர் ஆனபின்னும் தன் பாணியை விடாத மனுஷர். அவர் வீட்டிலிருந்தால் தினமும் மூன்று ஃபில்டர் காஃபி-வழக்கமான காலை, மாலைக் காஃபியோடு, பதினோரு மணிக்கு சின்ன டம்ளரில் கொஞ்சம் கொசுறு; தமிழ், இங்கிலீஷ் என இரண்டு பேப்பர்கள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். வாசலில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு பேப்பர் படித்தால்தான் அவருக்குப் படித்தமாதிரி இருக்கும். ’ஒம்பதரமணிகூட இன்னும் ஆனபாடில்ல. அதுக்குள்ள இந்த வெயில் ப்ராணன வாங்க ஆரம்பிச்சிடுத்து!’ என்று முணுமுணுத்துக்கொண்டே, அங்கவஸ்திரத்தினால் கழுத்தில், தோளில் ஒற்றிக்கொண்டார். ஸ்டூல் மேலிருந்து தமிழ்ப்பேப்பரைக் கையிலெடுத்தார். ‘பஸ் ஊழியர் போராட்டம்: புதிய நபர்களை வைத்து ஓட்டுவேன் –அமைச்சர் கங்கணம்!’ ஓட்டுங்கப்பா ஓட்டுங்க. ஒருவழியா தமிழ்நாட்டையே ஓட்டிவிட்டிருங்க.. என்று முணுமுணுத்தவர் கண்ணாடியை சரிசெய்துகொண்டு செய்திகளைத் துழாவ ஆரம்பித்தார். வாசல்கேட்பக்கம் நிழலாடியது.

‘யாரு?’ என்றார் ஐயங்கார், கண்ணைப் பேப்பரிலிருந்து எடுக்காமலேயே.

‘நாந்தான் சாமீ!’ என்றது பலஹீனமான ஒரு பெண்குரல். திரும்பிப் பார்த்தார். யாரோ ஒரு பெண். 27-28 வயதிருக்குமா? சின்ன இரும்புகேட்டின்மீது சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள். ஏதாவது இவ சாப்பிடக் கேட்டா அலமேலுவிடமிருந்து இப்ப ஒன்னும் பெயராதே.. மெல்ல எழுந்து பத்தடி தள்ளியிருந்த கேட்டின் அருகே சென்றார்.

’என்ன வேணும்?’

‘பழய துணி இருக்குன்னீங்கலாம் சாமீ! பொன்னம்மா சொல்லிச்சு. அதான்…’

’ஓ! ஆமா. உள்ள வா!’

கதவைத் திறந்துவிட்டார். உள்ளே தயங்கி நுழைந்தவள், பேப்பர் ஸ்டூலுக்குப் பக்கத்தில்வந்து ஓரமாக ஒடுங்கி நின்றாள். தையல்பிரிந்த ரவிக்கை. சேலை என்கிற பெயரில் சாயம்போன கிழிசல். மெலிந்து பாவமாக இருந்தாள். ரொம்பவும் நடந்திருக்கவேண்டும் வியர்வையில் கை, முகமெல்லாம் பளபளத்தது. புடவைத்தலைப்பால் முகத்தை அடிக்கடித் துடைத்துக்கொண்டாள். எப்போ இவ கடசியா சரியான சாப்பாடு சாப்பிட்டிருப்பா.. சிந்தனையுடன் கிருஷ்ணய்யங்கார் வீட்டிற்குள் போனார். அன்றொருநாள் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த அலமேலு மாமி ’சும்மா எப்பப் பாத்தாலும் பேப்பரும் பொஸ்தகமுமா காலத்தக் கழிக்காம, யாரயாவது கூப்புட்டு இந்த பழசையெல்லாம் தூக்கி வீசப்பாருங்கோ. வீடெல்லாம் ஒரே குப்பையாப்போச்சு!’ என்று கடுகடுத்து அவருடைய ரூமின் மூலையில் வீசியிருந்த பாலிதீன்பைக்குள் அலசினார். ராகவனின், பட்டனெல்லாம் காணாமல்போன, காலர் நைந்த சட்டை, ஜிப்பெல்லாம் போய் அவனுக்குச் சேராமலும் போய்விட்ட கருப்புப் பேண்ட், மனைவியின் அரதக்கந்தலான மஞ்சள் புடவை, சல்லடையாக ஒரு போர்வை, பழுப்பாகிப்போன, கரையில் கிழிந்து தொங்கிய வேஷ்டி..எல்லாம் படுபழசாயிருக்கே. அவளுக்கு இதெல்லாம் பயன்படுமா? யோசித்தார். மூக்குக்கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு சமையல்கட்டுப் பக்கம் நோட்டம் விட்டார். அலமேலு மாமி ஏதோ காரியத்தில் படுபிசி. அவர் முகத்தில் லேசாக ஒரு முறுவல். கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தன் துண்டுகளில் ஒன்றை உருவினார். கிட்டத்தட்ட புதுசுபோல் இருந்தது அந்த பச்சைக்கரைபோட்ட நீலநிறத் துண்டு.’பாவம்! எடுத்துண்டு போகட்டும். நம்பகிட்ட இன்னும் மூணு இருக்கு. போறும்’ என நினைத்து அந்த பாலிதீன் பையில் துண்டையும் வைத்து அடைத்தார். கையிலெடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். பையை அவள் முன் வைத்தார்.

‘இந்தா! இதுல பழய துணி கொஞ்சம் இருக்கு. எடுத்துண்டு போ!’

அவள் கீழே உட்கார்ந்தாள். பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட ஆரம்பிக்க ‘அதல்லாம் வெளியே எடுக்காதே. ஒனக்குத்தான். பையோட எடுத்துக்கோ!’ என்றவரிடம் அவள் சொன்னாள்:

’ஒதறிப் பாத்துர்றேன் சாமீ.. ஏதாவது காசு கீசு, வீட்டுச் சாமான் வந்துரக்கூடாதுல்ல’

ஐயங்கார் நெற்றிப்பொட்டில் தேய்த்தவாறே நாற்காலியில் உட்கார்ந்தார். அவள் ஒவ்வொன்றாக எடுத்து உதறினாள். அவருடைய பிள்ளையின் சட்டைப்பையில், பாண்ட் பையில் கைவிட்டுப் பார்த்து அவரிடம் காண்பித்தாள். ’உள்ள ஒன்னுமில்லே!’ என்றவள் எல்லாவற்றையும் மீண்டும் பையில் அடைத்தாள். நீலத்துண்டை ஒருகணம் கூர்ந்து பார்த்தாள். ‘தவறுதலா வந்திருச்சுப் போலருக்கு.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் அதனைத் தனியாகக் கீழே வைத்தாள். பையைத் தூக்கிக்கொண்டு எழுந்திருந்தவளைக் கனிவோடு பார்த்தார் ஐயங்கார்.

‘இதுவும் ஒனக்குத்தான். எடுத்துண்டு போ.’

அவள் கண்களில் ஆச்சரியம். ‘இது வேண்டாம் சாமீ!’ – மறுத்தாள்.

‘ஏன் வேண்டாங்கற. எடுத்து உள்ளவை’ என்றார் மீண்டும்.

‘இல்லெங்க.. புதுசுமாறி இருக்கு. நல்லதுணியெல்லாம் ஆகாது!’

’என்னது! ஆகாதா?’

’எங்க குப்பத்துல யாரும் இதப் பாத்தா சந்தேகப்படுவானுங்க. திருடிட்டு வந்துட்டேன்னு திட்டுவிழும்.. அடிவிழும்.. பிரச்சினயாயிரும்’ – பதற்றமான குரலில் அவள்.

ஐயங்காருக்கு மனம் என்னவோ செய்தது. ’சித்த இரு!’ என்று அவளிடம் சொல்லிவிட்டு நீலத்துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்பினார். ஹாலில் எதிர்ப்பட்ட அவருடைய தர்மபத்தினி சிடுசிடுத்தாள்: ’பழசெல்லாம் தூக்கி விட்டெறிஞ்சாச்சோல்யோ? அப்பறம் என்ன வளவளன்னு கண்டவளோடல்லாம் பேச்சு?’

‘இல்லடி… வேற ஏதாவது வீட்ல குப்ப இருக்கான்னு பாத்துட்டு அனுப்பிச்சிட்றேன்’என்றவரை முறைத்துவிட்டு சமையற்கட்டுப்பக்கம் போனாள் அலமேலு மாமி.

ரூமிலிருந்து தன் பர்சை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வெளியே வந்தார். ‘நீ இங்கின நிக்கிறே..நாம்போய்த் தேடி அலயறேன் ஒன்ன!’ என்றான் சந்தோஷத்துடன் அவளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அழுக்காக, அரைடிரௌசருடன், மேலே சட்டையில்லாமல்.

’ஒம்புள்ளயா?’ என்றார் ஐயங்கார். கீழே பார்த்துக்கொண்டு தலையாட்டினாள். இந்தப் பயலுக்கு ஏதாவது பழய சட்டையத் தரலாம்னா கொழந்தையில்லாத வீடாச்சே இது என்று மனசுக்குள் மருகினார். பர்சைத் திறக்க, இருபது ரூபா புது நோட்டு துருத்தியிருந்தது. எடுத்து அவளிடம் நீட்டினார். ’இந்தா!’

சிகப்பு நோட்டைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்கினாள் அவள். ‘நோட்டெல்லாம்போய்க்குடுக்கறீங்களே. வேண்டாம் சாமீ. கெளம்புறேன்..’ என்றவளிடம் ‘வேண்டாங்காதே. ஒம்பிள்ளைக்கு பிஸ்கட் வாங்கிக் குடு. நீயும் ஒரு டீயக் குடிச்சுட்டுப் போ. வாங்கிக்கோ!’ நீட்டினார் மீண்டும்.

‘நாயமா நடந்துக்கணும். பேராசப்பட்டு சீரளிஞ்சுப்போயிறக்கூடாதுன்னு சொல்லிட்டுப்போயிருக்கு!’ என்றாள்.

’யாரு சொன்னா இப்பிடில்லாம்?’ கேட்டார் ஐயங்கார்.

‘எங்க ஆத்தாதேன்… வேற ஆரு!’

’ஓ ! ஒன்னோட ஒங்காத்தாவும் சேந்து இருக்காளா?’

‘அது எங்க இருக்கு? மேலபோயி நாலு வருசமாச்சு. நாந்தான் நாதியத்து நாயா அலயறேன்…’ என்று பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பியவளை அதிர்ச்சியோடு பார்த்தார் அவர். அவள் வாங்காத நோட்டை பர்சில் திருப்பி வைக்க நேர்ந்ததில் வருத்தமுற்றார். அம்மாவுடன் நகர்ந்த பொடியன் அப்போது அவரைத் திரும்பிப் பார்த்தான். என்ன அழகான கண், கூரான மூக்கு இந்தப் பிள்ளைக்கு என எண்ணியவாறே ‘சித்த நில்லுடா கொழந்தே!’ என்றவர் பர்சை அவசரமாய்த் துழாவினார். பத்து ரூபாய் நாணயம் கையில் வந்தது. ‘இந்தா! இது ஒனக்கு. முட்டாய் வாங்கிச் சாப்பிடு!’ என்று அவன் கையில் திணித்தார். ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன் அவரைப் பார்த்த சிறுவன் அதை வாங்கிக்கொண்டு அவளுடன் சேர்ந்து நடந்தான்.

கேட்டைச் சாத்தியவர் அம்மாவும் பையனும் வெயிலில் இறங்கிச் செல்வதை கனத்த மனதோடு பார்த்து நின்றார். ‘ஒம்பேரு என்னன்னு சொல்லலியே!’ குரலைக் கொஞ்சம் உயர்த்திக் கேட்டார்.

‘லெச்சுமி!’ அவரைத் திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு கையில் தன் பிள்ளை, மறுகையில் பழையதுணியுமாய் விடுவிடுவென நடந்தாள் அவள்.

**

அம்மா

*

எப்போதுமே நினைத்திருக்கும்
அப்பாவியை
எப்போதாவது ஒருமுறைகூட
நினைக்காமல் போய்விடுவானோ
இந்த மனுஷன்
எனப் பயந்துதான்
ஆரம்பிக்கப்பட்டதோ
அன்னையர் தினம் ?

*

கலைஞன்

*

நான் ஒரு பாடகன்
பாட ஆரம்பித்தால்
நேரம்போவது தெரியாமல்
மயங்கிக் கிடப்பர்
கேட்பவரெல்லாம்
மயங்குவதற்கு முதலில் அவர்கள்
இருக்கவேண்டுமே எதிரில்
யாருமில்லைதான் கேட்க இன்று
இருந்தும் பாடுகிறேன்
நான் ஒரு பாடகன்

*

நித்தம் நித்தம் மாறுகின்ற நகரம்

பெங்களூரில் ஒரு ஃப்ளாட் வாங்க முயற்சிக்கும் நண்பரோடு இரண்டு வாரங்கள் முன்பு ஒரு ப்ராஜெக்ட்டிற்கு விசிட் அடித்தேன். ’கே.ஆர்.புரம் தாண்டி ஹோஸ்கோட்டே சாலையில கொஞ்சதூரம்போயி, மெயின் ரோடிலிருந்து இடதுபக்கமா திரும்பி ஒன்றரை கிலோமீட்டர்தான் சார் எங்க ப்ராஜெக்ட். நல்ல லொகேஷன் சார்!’ என்றார் கம்பெனி ஆசாமி. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் கடந்த 15 வருடங்களாக பெங்களூரில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் மார்க்கெட்டில் ப்ரெஸ்டீஜ், ஷோபா, ப்ரிகேட் (Brigade), பூர்வாங்கரா என்று கட்டிடத்தொழில்வெளியில் ஜாம்பவான் ப்ளேயர்களுக்கு முன் தங்களை நிறுவிக்கொள்ளும் ஸ்ரீராமின் சிறப்பு முயற்சிகளில் ஒன்றாக இது இருக்கலாம். ப்ராஜெக்ட்பத்தி ஃபோனில் விஜாரித்த நண்பர் ‘அனுப்புய்யா காரை. வந்துபார்க்கிறோம்!’ என்று சொல்லிவிட்டு ’நீயும் வா, போய்ப்பாத்துட்டு வந்துருவோம்!’ என்று என்னையும் கூட்டிச்சென்றார்.

அந்த ப்ராஜெக்ட்டின் ஃபீல்ட் இன்-சார்ஜ் எங்களை வரவேற்று தன் ஆஃபீஸுக்கு அழைத்துச் சென்றார். ஃப்ளோர்-ப்ளானில் வெளிப்பட்டது 2, 2.5, 3 BHK வகைகள். 50-லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை வாங்குபவர் கழட்டிவைக்கவேண்டியிருக்கும். ’பேண்ட் நழுவிக் கீழே விழுந்துடாமக் கவனிச்சுக்கோப்பா’ என்றேன் நண்பரிடம். நடந்துகொண்டிருக்கும் வேலை, சாம்பிள் ஃப்ளாட் என்று ஒரு ரவுண்டு காண்பித்து, கட்டிடவேலைகளுக்காக ஸ்ரீராம் பயன்படுத்தும் பொருட்களின் தரம், வேலைநேர்த்தி என்று சொல்லி முடிக்கும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டிடப் பகுதியையும் தாண்டி அகன்ற வெளி இருந்தது. 17-மாடி டவர்களுள்ள அதில் இரண்டு ஃபேஸ்கள். முதல் ஃபேஸில்(phase) 1200 ப்ளாட்டுகள். ’இந்த டிசம்பரில் பொசஷனுக்குத் தயாராகிடும் சார்’ என்றார். ’மாடி வீட்டிலிருந்து ஏரியல் வியூ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாத்தாத் தேவல’ என்றேன். ஆபரேஷனல் எலவேட்டரில் (elevator) ஏறி 14-ஆவது மாடிக்குச் சென்றோம். எலவேட்டரிலிருந்து அந்த ஃப்ளாட்டில் நுழையமுடியாதபடி ‘ஞொய்’ என்று ஒரே மொய்ப்பு சத்தம். என்ன அது மேலே.. பெரிசா? கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பெரிய பை போல தேன்கூடு! உள்ளே வேலைசெய்துகொண்டிருந்த மேஸ்திரி சொன்னார்: ’ஒரு நிமிஷம் நின்னு வேல செய்யமுடியல சார்.. கையெல்லாம் பாருங்க, கொட்டிவச்சிருக்கு! ‘ என்று கைகாட்டி பயமுறுத்தினார். அந்த ஃப்ளோரில் இறங்கவேண்டாம் என்று முடிவுசெய்து அடுத்த மாடியில் இறங்கினோம்.

மூன்று பெட்ரூம் ஃப்ளாட் அது. டிராயிங் ரூம், கிட்ச்சன், பெட்ரூம், பாத்ரூம், பால்கனி என்று நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நண்பருக்குத் திருப்தி. பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தோம். ‘ஏரியல் வியூ’ நன்றாக இருந்தது. ‘வெட்டவெளியா, கொஞ்சம் மரங்களோட இருக்கிறதால பாக்க இப்ப நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு இந்த மரங்களையெல்லாம் வெட்டி துவம்சம்பண்ணி, இங்கெல்லாம் பொட்டிக்கடைகள், ஆட்டோ ரிப்பேர் ஷாப்புகள், ரோட்சைட் ரெஸ்டாரண்ட்டுகள்லாம் மொளைக்குமில்ல. அப்ப என்ன ஆகும் இந்த ‘வியூ!’ என்று ’மிஸ்டர் ஸ்ரீராமை’ச் சீண்டினேன். ‘அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்! நீங்க பாக்கற ஏரியா சுமார் 60 ஏக்கர். எங்க ப்ராப்பர்ட்டி. இத பூரா ஒரு டவுன்ஷிப்பா மாத்தப்போறோம். உள்ளுக்குள்ளேயே ஜிம், ஸ்விம்மிங் பூல், ஜாகிங் ஏரியாவோட, கான்ஃபரன்ஸ் ஹால், யுடிலிட்டி ஸ்டோர், க்ளினிக், டென்னிஸ் கோர்ட் எல்லாம் நாங்க கொடுப்போம். கசமுசா கடைங்கல்லாம் சுத்திவர வர்ற சான்ஸே இல்ல !’ என்று ஊக்கமளித்து என் நண்பரின் முகத்தைப் ப்ரகாசப்படுத்தினார். கீழே இறங்கினவுடன், பெங்களூரின் ஏப்ரல் வெயிலையும் பொருட்படுத்தாமல், ’வாங்க, வெட்டவெளில ஒங்க ஏரியால கொஞ்சம் நடப்போம்; மேற்கொண்டு சொல்லுங்க!’ என்று அவரை இழுத்தேன். நண்பருக்கு ஏசி ரூமில் உட்கார்ந்து டீ குடித்துப்பேசலாம் என்ற சிந்தனை. நான் விடவில்லை.

வெளிப்பகுதியில் நடந்தபோது பூவரசு, வேம்பு போன்ற சிலவகையான நாட்டு மரங்கள்- 5-6 வயதான இளமரங்கள்- நின்று காற்றில் சொகுசாக ஆடுவதைப் பார்த்தேன். ‘ அதுவா மொளச்சிருக்கு. இதையெல்லாம் வெட்டிப்புடாதீங்க. நாட்டு மரங்க, நல்ல காத்து மனுஷனுக்கு முக்கியம்!’ என்றேன். அவர் பதில் சொல்லுமுன் ‘இப்ப வர்ற மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டுகளின் விளம்பரங்கள்ல 70% ஓபன் ஏரியா, க்ரீன் ஏரியான்னுல்லாம் ஒரேயடியா ரீல் சுத்தறாங்களே! உள்ளேபோய் பாத்தா நாலு பனை, ஈச்சை மரங்கள நட்டு, காகிதப்பூச்செடிகளை ஓரத்துல வச்சு சீன் காட்றானுங்க! ஒங்க கத எப்படி?’ அவரை நெருக்கினேன். ‘சார், நீங்க எங்க ப்ராஜெக்ட் எதயாவது பாத்துருக்கீங்களா?’ என்றார். ‘ஆமா, ஐடிபிஎல் ஏரியால ஒன்னு பாத்தேன். பரவாயில்ல!’ என்றேன் அதிகமாக மார்க் கொடுக்க விரும்பாத ஆசிரியரைப்போல. ’சார் அது 12 வருஷப் புரானா ப்ராஜெக்ட். இப்பல்லாம் நெறய அமெனிட்டீஸ் ஸ்ரீராம்ல தர்றோம்’ என்றார். ’’நான் இப்ப ஒங்க அமெனிட்டீஸைப்பத்தி கேக்கல. எல்லா பில்டர்ஸும் அதல்லாம் தந்துதான் ஆகனும். இல்லாட்டி ஃப்ளாட்ட விக்கமுடியாது. கட்டிடத்தை சுத்திலும் மரம், செடிகொடி வளக்கிறதப்பத்தி, green environment-பத்தி ஒங்க ப்ளான் என்ன!’

நண்பருக்கு வியர்க்க, கம்பெனி அலுவலர் சொன்னார்: ’ஹாட்டா இருக்கு சார்! வாங்க, பேசிகிட்டே நம்ம ரூமுக்குப் போவோம். இதுல நெறய க்ரீன் ஏரியா இருக்கு, சார். மரக்கன்றுகள் வாங்கி நட்டாச்சு. உட்புறப்பாதைகள், கட்டிட அமைப்புகள் தவிர்த்து மரங்கள் செடிகொடிகளுக்கான க்ளீயர் ப்ளான் இருக்கு சார். கவலப்படாதீங்க’ என்றார். ‘ஒரு ரிக்வெஸ்ட். முடிஞ்சா ஒங்க மேனேஜ்மெண்ட்டுக்கு பாஸ் பண்ணுங்க. அழகா இருக்குன்னு வெறும் வெளிநாட்டுப் பனமரங்கள வரிசையா நட்டுவச்சுட்டுப்போயிடாம, கொஞ்சம் வேம்பு, கொன்றை, பூவரசு போன்ற நாட்டு மரங்களையும் கலந்து வையுங்க. மண்ணுக்கேத்த மரங்கதான் மனுஷனுக்கும், பறவைகளுக்கும் நல்லது செய்யும். ஏற்கனவே இருக்கிற மரங்க சரியான இடத்தில இருந்தா அப்புடியே விட்டுடச் சொல்லுங்க. இல்லாட்டி இடம் மாத்தி நட்டுவையுங்க. அழிச்சிராதீங்க!’ என்று கேட்டுக்கொண்டேன். ‘கஸ்டமர் ஒபீனியனுக்கு மதிப்பு கொடுப்போம்; செய்யறோம் சார்!’ என்றார் அவர்.

டீ வந்தது. குடித்துக்கொண்டே ’இப்ப இவரோட பேசுங்க.. இவருதான் வீடு வாங்கப்போறவரு!’ என்றேன் நண்பரைக் காண்பித்து.

**