ஐந்து கவிதைகள் – ஏகாந்தன்

’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) :

அம்மா  நிலா

மொட்டைமாடிக்குத்

தூக்கிக்கொண்டுவந்து

அம்மா காட்டிய முதல் நிலா

அழகு மிகவாக இருந்தது

இப்போதும் ஒன்று அவ்வப்போது

வந்து நிற்கிறது என் வானத்தில்.

மேலே சுட்டுவிரல் நீட்டிக் காட்டி

கதை சொல்ல

அம்மாதான் அருகிலில்லை.

தானாக எதுவும்

புரிவதில்லை எனக்கும்

**

கணப்பொழுதே ..

தாத்தா தூங்கிண்டிருக்கார்

ரூமுக்குள்ள போகாதே !

அம்மாவின் எச்சரிக்கையை

காதில் வாங்காது

குடுகுடுவென உள்ளே வந்த

குட்டிப்பயல் கட்டிலில் தாவினான்

குப்புறப்படுத்திருந்த என்

முதுகிலேறி உட்கார்ந்து

திங் திங்கெனக் குதித்து

குதிரை சவாரிசெய்தான்

முதுகின்மேலே இந்தச் சின்ன கனம்

எவ்வளவு சுகமாயிருக்கு ..

மனம் இழைய ஆரம்பிக்கையில்

தடாலெனக் குதித்து ஓடிவிட்டான்

குதிரைக்காரன்

**

எங்கெங்கும் எப்போதும்

வெளியூர் போயிருந்த

குடும்பம் திரும்பியிருந்தது

கேட்டாள் பெண் கவலையோடு:

தனியா இருந்தது போரடிச்சதாப்பா?

என்று நான் தனியே இருந்தேன்

என்னுடன் அல்லவா

எப்போதுமிருக்கிறேன்

என்ன சொல்லி எப்படிப்

புரியவைப்பேன் மகளுக்கு ..

**

ஒத்துழைப்பு

ஜன்னலைத் திறந்துவைத்தேன்

மின்விசிறியைச் சுழலவிட்டேன்

சுகாசனத்தில் உட்கார்ந்தேன்

கண்ணை மெல்ல மூடியவாறு

’தியானம்!’ என்றேன்

உத்தரவிடுவதுபோல்.

அப்படியே ஆகட்டும் –  என்றது

முன்னே தன் குப்பைக்கூடையை

திறந்துவைத்துக்கொண்டு

அருகிலமர்ந்துகொண்ட மனம்

**

நிலை

படுக்கையறையின் தரையில்

மல்லாக்கக் கிடந்தது கரப்பான்பூச்சி.

இல்லை, இறந்துவிட்டிருந்தது.

தன்னை நிமிர்த்திக்கொண்டு

ஓடி ஒளிவதற்கான ப்ரயத்தனம்

வாழ்வுப்போராட்டமாக மாறிவிட,

இறுதித் தோல்விகண்டு

உயிரை விட்டிருக்கிறது அந்த ஜீவன்.

நிமிர்ந்து படுத்து நிதானமாகக்

கூரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் –

உயிரோடு இன்னும் நானிருப்பதாக

நம்பிக்கொண்டு

**

எழுத்தின் இளமை

கவிஞன் என்றும் இளமையானவன். ஏன்? அவன் எழுத்து அப்படி. அல்லது அவனது கவிதைகள் அப்படியிருப்பதால், அவனப்படி.

நவீனத் தமிழின் தலைசிறந்த கவிஞருள் ஒருவரான நகுலன் வெகுகாலம் எழுத்துலகில் இருந்தார். ஆனாலும் அப்படி ஒன்றும் அதிகம் எழுதித் தள்ளியவரல்ல. சில கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள். அவ்வளவுதான். இலக்கிய போதையாளர்களைத் தவிர வேறு யாரும் – அரசோ, நிறுவனமோ அவரைக் கண்டுகொண்டதில்லை. இருந்தும் எழுதினார்.. எழுதினார். போய்விட்டார் ஒரு நாள், ஸ்தூல உடம்பைத் தூக்கிக் கடாசிவிட்டு. ஆனால் அவரெழுத்து நின்று ஆடுகிறதே இன்னும். எழுத்தின் – உண்மையான எழுத்தின் – உயிர்ப்பு அப்படி, சாகஸம் அப்படி.

நாட்டில், நல்ல எழுத்துக்கும் தப்பித் தவறி விருது கிடைத்துவிடலாம். கிடைக்காமலே போய்விடும் சாத்யமே அதிகம், குறிப்பாக தமிழ்வெளியில். சுந்தர ராமசாமி, சுஜாதா {பன்முக ஆளுமை, உரைநடை, அறிவியல் புனைவில் – without a doubt, a trend-setter},  ப்ரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், கலாப்ரியா போன்றோருக்கு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்தது? இந்த நிலையில் மிகக் கொஞ்சமாக எழுதி, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத நகுலனின் நண்பரான ஷண்முக சுப்பையாவை யாருக்குத் தெரியப்போகிறது? ஆனால் அவர்களின் எழுத்தை வாசிக்க நேர்ந்த தமிழ் இலக்கிய வாசகன் லயித்துக்கிடக்கிறானே.. தொடர்ந்து செல்கிறானே, அத்தகைய ஆளுமைகளின் படைப்புகளைத் தேடி.  என்ன ஒரு மாயம்! இயலின் மகிமை இது. மாறாதது.

கொஞ்ச நாட்களாக ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் என அலைந்துகொண்டிருந்தபோது, ஃப்ரான்சிஸ் கிருபாவின் நிகழ்வு குறுக்கிட்டு மனதைக் கசக்கிப்போட்டது. அதனாலென்ன, மேலும் மேலும் சிந்தனைகள், ஒன்றுக்கும் உதவா செயல்பாடுகளென வாழ்க்கை தொடர்கிறது அதுமாட்டுக்கு.

கவிஞனை எழுத நேர்ந்தால், அவனெழுதிய கவிதையும் கொஞ்சம் சிந்தத்தானே செய்யும்?

சோற்றுக்குப் பள்ளி சென்றேன்

உபரி அறிமுகந்தான்

உயிர் எழுத்து…

-மகுடேஸ்வரன்

**

விதி

அந்திக்கருக்கலில்

இந்தத் திசை  தவறிய

பெண்பறவை

தன்  கூட்டுக்காய்

அலைமோதிக்  கரைகிறது.

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை தெரியவில்லை.

கலாப்ரியா

**

பார்த்தல்

கூடைக்காரி
சிலசமயம்
குடும்பக்காரி
வரும் தெருவில்
டீச்சர் வந்தாள் குடைவிரித்து.

ஒற்றைமாட்டு வண்டியிலே
வைக்கோல் பாய்க்கு
நெளிந்து தரும்

மருத்துவச்சி தேடுகிறாள்
எட்டிப்பார்த்து ஒரு வீட்டை .
விளக்குக் கம்பம்
நடைக் கொம்பாய்
நிற்கும் தெருவில்
பிற பெண்கள்
வந்தார் போனார்..

அவள் வரலே.

ஞானக்கூத்தன்

**

என்னைத்

துரத்திக்கொண்டு

நான் செல்கிறேன்

எல்லோரும்

சிரிக்கிறார்கள்

நகுலன்

**

வழி

வயிற்றுப் பசிதீர்க்க

வராதா என்றேங்கி

மழைக்கு அண்ணாந்த கண்கள்

கண்டுகொண்டன

வானம் எல்லையில்லாதது

பிரமிள்

தரிசனம்

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப்

போய்விட்டார்

ஆயினும்

மனதினிலே  ஓர்  நிம்மதி

ஆத்மாநாம்

***

ஜெ. பிரான்சிஸ் கிருபா – சில கவிதைகள்

அழகான படைப்புகளை அருளியிருக்கும் இளங்கவிஞர். காதல் கவிதைகளை எழுதும் கவிஞர்கள் தமிழில் அற்றுப்போய்விட்டனரா என அங்கலாய்க்கும் விக்ரமாதித்யன்,  தன் கட்டுரை நூலொன்றில் பிரான்சிஸ் கிருபாவின் சில ரொமாண்டிக் கவிதைகளை ஸ்லாகித்துச் செல்கிறார்.

கடவுள் செய்த வெட்டி வேலைகளில்

ஒன்றுதானா

காதல் படைத்ததும்!’

-என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டாரோ! மேலும் கிருபாவை, ‘புனைவின் கொடுமுடியில் நின்று கூத்தாடும் கவிஞன்’ என்கிறார்.

பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு- Dinamani
J Francis Krupa

கிருபாவின் கவிதைத் தொகுப்புகள்: மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், சம்மனசுக்காடு,  மெசியாவின் காயங்கள் (தமிழினி (2002), வலியோடு முறியும் மின்னல் (தமிழினி(2004) மற்றும் ஒரு புதினம்: கன்னி. சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது (கவிதைத் தொகுப்பு: சம்மனசுக்காடு), மீரா விருது, விகடன் விருது (2007) (கன்னி -புதினம்) – என சில விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக்குழு, குரங்கு பொம்மை, ராட்டினம் போன்ற திரைப்படங்களில் சில பாடல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பிரான்சிஸ் கிருபாவைக் கொஞ்சம் வாசித்துப்பார்ப்போம்:

வானத்தைத் தோற்றவன்

பறவையொன்றிடம் நான் இன்று

பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு,

வரவில்லை நிலவு.

நூல் பிறையளவு கொடையுமில்லை.

எட்டிக் கூடப் பார்க்கவில்லை

யாதொரு நட்சத்திரமும்.

இப்படிப் பாழடைந்த வானம்

பார்த்ததேயில்லை இதற்கு முன்.

அவமானம் மிகுந்த இரவு

இதுவே கடைசியாக இருக்கட்டும்.

சூதாடக்கூடாது இனி

வானத்தை பூமியில் வைத்து.

**

முரண்பாடு

நேர்மையற்ற வீடுகள்

நிறைய நிறையக்

குறுக்குச் சுவர்களால்

கட்டப்பட்டிருக்கின்றன

ஒவ்வொரு அறைகளுக்கும்

வெவ்வேறு ரகஸியங்களை

ஒதுக்கியிருக்கிறோம்

வரவேற்பறையில் பெரும்பாலும்

மடங்கியே இருக்கின்றன

நாற்காலிகள்.

எல்லா விருந்தாளிகளுமே

தயங்குகிறார்கள்

ஊஞ்சலில் அமர.

அடுத்த வீட்டுக்  கழிவறையில்

அரவமின்றி ப் புழங்குவதிலே பெண்களின்

மொத்த சாமர்த்தியமும் செலவழிகிறது.

பரிமாறப்படும் காபி கோப்பையிலிருந்து

எழுந்து நடனமிடும் ஆவி

விண்ணை நோக்கி நேராய்

ஒரு கோடு கிழிக்க, படும் சிரமத்தை

ருசித்ததில்லை எந்த உதடுகளும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்

நீ வருகிறாய்

நேர்மை பற்றி பேசவும் விவாதிக்கவும்.

ஒரு ஒற்றையடிப் பாதையைக் கூட

நேராய்க் கிழிக்க வக்கற்றவன்தான்

நானும்.

**

கவிஞன்

தோல்வியின் அறிவிப்பு

தோற்கப் போவது

இருவரில் ஒருவர் தான்

நீ பொய்யனானாலும்

உன் கவிதைகள்

பொய்யறியாதவை

ஒழுங்கான பொய்களாக

உன் வார்த்தைகள்

அமைந்திருப்பினும்

ஒழுக்கமற்ற உண்மைகள்

உன் எழுத்துக்குள்

மின்னி மின்னிச் செல்கின்றன

நம்பிக்கையின் நிறத்தை

நீ நிச்சயிக்கிறாய்

அவநம்பிக்கையின் நிறத்தை

நான்

கிளியிலிருந்து பச்சையெடுத்து

புல்லில் வந்து அமர்ந்ததும்

புல்லின் பச்சை கொத்தி

கிளியை நோக்கி பறந்ததும்

எதுவென்று தெரிந்துவிடும்

**

மாயை

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

**

பெண்


பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே ..

பெண் யார்?

பெற்றுக்கொண்டால் மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை.

**

உதவி

கண்ணைக் கசக்கி அழுதபடி

கரையில் நடந்து வரும்

பேசப்பழகாத குழந்தையை எதிர்கொண்டு

‘அம்மா’ எங்கே என்று

அன்பொழுக வினவுகிறார்கள்.

அது தன் இடது கையை

ஆற்றின் மேல் நீட்டுகிறது.

அந்தக் குழந்தையை தூக்கி

ஓடும் நீரில் வீசிவிட்டு போகிறார்கள்

இடது கை செய்தது

வலது கை அறியாது.

**

சித்திரம்

பாத்திரம் கூட அற்ற

பிச்சைக்காரனாய்

சூரியனை எழுப்பும்

குளிர்காலங்களில்

பனித்துளிகளை

நிதானமாகத் தானமிடும்

ஒற்றை விரலே

யாரின் கையுள் நீயிருக்கிறாய்?

தூரிகையின்றி நீ வரைந்த

மகத்தான ஓவியத்தில்

நானிருக்கக்கூடுமா

வண்ணமாகவேனும்.

எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்

இம் மகாகாவியத்தில்

நான் பெறுவேனா

துளி பாத்திரமேனும்

**

நீண்ட நெடும்கவிதைபோலவே அமைந்துவிட்ட தன் ‘கன்னி’ நாவலின் ஓரிடத்தில் பிரான்சிஸ் கிருபா:

’’இரண்டே இரண்டு விழிகளால் அழுது,  எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது, எப்படி நான் அழாமலிருக்க முடியும்? கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே, தோழிகளே, துரோகிகளே!  ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்..’’

**

என்ன சொன்னேன் ஆரம்பத்தில்.. கிருபாவை இளங்கவிஞனென்றா ? மேலும் சொல்லலாம். சொல்கிறேன்:

கவிஞன் மறைவதில்லை என்றும்.

**

குழந்தையாகப் பேசும் கிருஷ்ணன் நம்பி

என்னதான் அழ. வள்ளியப்பா எழுது எழுது என்று குழந்தைப் பாடல்களை எழுதித் தள்ளினாலும், அதே காலகட்டத்தில் குழந்தைகளுக்காக  சில அருமையான பாடல்களை வரைந்தவர் கிருஷ்ணன் நம்பி. என்ன பிரச்னை என்றால், சசிதேவன் போன்ற வெவ்வேறு பெயர்களில் குழந்தைகளுக்கான சிறுபத்திரிக்கைகளில் விட்டுவிட்டு எழுதிவந்தார் அவர். அவற்றைச் சேர்த்து யாரும் சரியாகத் தொகுக்கவில்லை ஆரம்பத்தில். எப்படியிருந்தும், உயிர்ப்பான எழுத்து வாசகனை விட்டுவிடுமா? 42-ஆவது வயதிலேயே அவர் அகாலமாக மறைந்துவிட்டாலும், அபாரமான சில படைப்புகள் (சிறுகதைகள், கட்டுரைகள் என) அவ்வப்போது தலைதூக்கித் தங்களைக் காட்டிக்கொண்டன. 1965-ல் தமிழ்ப் புத்தகாலயம் அவரது குழந்தைப்பாடல்களை ஒரு தொகுப்பாக ‘யானை என்ன யானை’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, சற்றே கூர்மையான கவனத்திற்கு நம்பியைக் கொண்டுவந்தது.

சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் அவரது அனைத்து படைப்புகளையும் சேர்த்து, ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ எனும் புத்தகத்தைப் பிரசுரித்துள்ளது. கிருஷ்ணன் நம்பி எழுதிய ’விளக்கின் வேண்டுகோள்’ என்கிற இந்தப் பாடல், குறுகுறுக்கிறது அடிக்கடி மனதில். நீங்களும் கொஞ்சம் பாருங்களேன் :

விளக்கின் வேண்டுகோள்

காற்று மாமா.. காற்று மாமா..  கருணை செய்குவீர் !

ஏற்றிவைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர் ?

சின்னஞ்சிறு  குடிசை இதை சிறிது நேரம் நான்

பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்

ஏழைச் சிறுவன் என்னை நம்பிப்  பாடம் படிக்கிறான்

ஏழும் மூனும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்

அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்

என்ன ஆச்சு பானைக்குள்ளே.. எட்டிப் பாக்குறாள்

படிக்கும் சிறுவன் வயித்துக்குள்ளே பசி துடிக்குது

அடிக்கொரு தரம் அவன் முகம் அடுப்பைப் பாக்குது

காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்டவேண்டாமா

ஆச்சு, இதோ ஆச்சு, என்னை அணைத்துவிடாதீர் ..

**