காந்தி talks ?

மய்யம் என்ற ஒன்றை ஆரம்பித்து ஒரு மையமில்லாது போய்விட்ட ’உலக நாயகன்’, ஒரு கலைஞனாக மட்டும் மிளிர்ந்த காலகட்டம். துல்லியமாகச் சொன்னால் 1987 – இங்கே ஃபோகஸுக்கு வருவது. தெற்கு டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம் என்று நினைவு. நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. ஒன்றில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. புஷ்பக் – வடநாட்டு ஆடியன்ஸுக்கு. தெற்குப்பக்கம் அதன் பெயர் பேசும்படம்,  புஷ்பக விமானம் இப்படி. குறிப்பாக கன்னடப் பிரதேசத்தில் மட்டும் 25 வாரங்களைத் தாண்டி அட்டகாசம் செய்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய கமல் ஹாசன் படம். பெங்களூரின் சில இடங்களில் அமைக்கப்பட்ட சுவாரஸ்யக் காட்சிகள். வேலைவெட்டி இல்லா கமலைவிட தன்னிடம் அதிகம் உண்டு காசு என அமர்ந்திருக்கும் சாக்கைத் தூக்கிக் காட்டி சீண்டும் அந்த விஷமப் பிச்சைக்காரன் காட்சிப்படுத்தப்பட்ட இடம் – பெங்களூரின் வின்ஸர் மேனர் ஹோட்டல் அருகில். அமலாவின் அமெரிக்கையான அழகும்,  பாலிவுட்டின் (தூர்தர்ஷனின் ‘நுக்கட்’ சீரியல் புகழ்) சமீர் கக்கர், டினூ ஆனந்த் (ஐஸ் கத்தியோடு மிரட்டும் காமிக்கல் வில்லன்!) ஆகியோரின் நடிப்பும் அதகளம் செய்த ஒரு கனாக்காலத்தின் திரைவெளி. ‘ஒரு பிரேதத்தைச் சுற்றிக் காதலை வளர்த்திருக்கிறீர்களே.. படம் பார்க்க விரும்புகிறேன்!’ – என்று சிங்கீதத்திடம் சொன்னாராம் சத்யஜித் ரே.

இந்தப் புஷ்பக்கின் நினைவு காலையில் ஏன் தீண்டியது? காரணம்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar)! மராத்தி திரைமுகமான அவர் இயக்கியிருக்கும் காந்தி டாக்ஸ் (Gandhi Talks – காந்தி பேசுகிறார்). புஷ்பக் (பேசும்படம்) போல வசனமில்லாப் படம்- வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியத் திரைகளில். A dark comedy. இப்போதைய தலைமுறையினரில் புஷ்பக் போன்ற வித்தியாசமான, அழுத்தமான நடிப்புப் பங்களிப்புகளைத் தந்த படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் குறைவு. அப்படி ஒரு படமும் எண்பதுகளில் வந்தது என்பதே பலருக்குத் தெரியாது. இந்தக் காலத்துக்கேற்றபடி ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணிகொண்டு கொஞ்சம் ட்ரெண்டிங்காக, பலர் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்க்கப் பொருத்தமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டால் என்ன என்று பெலேகர் & கோ (Zee Studios /  Kyoorious Digital) கொஞ்சம் மற்றோரிடமிருந்து வேறுபட்டு யோசித்ததின் திரைவிளைவு காந்தி டாக்ஸ். ம.செ. விஜய் சேதுபதி, அதித்தி ராவ், அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் போன்றோர் வார்த்தையின்றி, உடல்மொழி மட்டுமே கொண்டு ஜாலம் காட்டியிருக்கிறார்களா? எப்படி! பார்த்தால்தான் தெரியும் படமும், அது செல்லும் தடமும். இந்த வருடம் திரையில் ஒளிரும்..

**

விக்ரம் – Just a chartbuster ?

ஃபினாமினல், ப்லாக்பஸ்ட்டர், சார்ட்பஸ்ட்டர் என்றெல்லாம் ஒரு படத்தின் ‘வெற்றி’யைப்பற்றிப் பிரஸ்தாபிப்பது என்பது, அது அள்ளிக்கொடுத்த பண விஷயத்தைப் பிரதானமாக வைத்துத்தான், பொதுவாக. 200 ஐத் தாண்டிருச்சா, என்ன.. 400-க்கும் மேல போய்க்கிட்டிருக்கா! – போன்ற ஆஹா.. ஓஹோக்கள் திரைப்படம்பற்றிய கமர்ஷியல் ஆங்கிள் பிரமிப்புகளே. வியாபாரமாகவே உருமாறிவிட்ட உலகில், வியாபாரம்பற்றித்தானே எப்போதும் பேசுவார்கள்? குதிப்பார்கள்? அதில் தவறென்ன சொல்லமுடியும்.

விக்ரம் (2022)

இந்தப் படத்தை நான் பார்க்க விரும்புவது குறிப்பாக ஃபஹத் ஃபாஸில் (Fahadh Faasil), விஜய் சேதுபதி நடிப்பிற்காக. ஆங்காங்கே இவர்கள் இருவரின் பங்களிப்புபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதால். மேலும், லோகேஷ் கனகராஜ் அவ்வளவு நல்ல இயக்குனரா என்ன? சினிமாவை ஒரு கலானுபவமாக, அதாவது ஒரு சீரியஸ் மீடியம் என அவதானித்து, ‘செலெக்ட்’ படங்களாகப் பார்த்துவருவதால்தான், இவ்வாறான சிந்தனை. விக்ரம் ஒரு ஆர்ட் படமல்ல. ஒரு சத்யஜித் ராய், மிருணாள் சென், அரவிந்தன் படத்தைப்போல் திரையில் இழையும் கவிதையல்ல என்பது தெரிந்ததே (தினத்தந்தி மன்னிக்க)! வணிகமே இதிலும் குறிக்கோள் எனினும், கலைக்கோணத்தில் சிறந்த நடிப்பு, இயக்கப் பங்களிப்புகள் உண்டோ இந்தப் படத்தில் எனத் தெளிவாவதில் ஒரு சந்தோஷம். படத்தை நிதானமாக உட்கார்ந்து பார்த்தால்தான் இந்த விஷயங்களைப்பற்றி அறிய நேரும். கூடவே, கமல் அங்கிளின் நடிப்புத் திறன் அப்படியே இருக்கா, இல்லை, ஒருமாதிரி ‘மய்ய’மாகப் போய்விட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள! ஏனெனில், வெறுமனே சுஹாசினி தன் சித்தப்பாபற்றி வானளாவ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திப்பட்டுக்கொண்டிருக்கமுடியாதே..

**

திரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி

அந்த மாலைப்பொழுதில் நெட்டில் நியூஸ் வாசித்துக்கொண்டிருக்கையில், ’எம்.எஸ். ராஜேஸ்வரி மறைந்தார்’ என்பதில் கண்கள் ஓடியும், ’மறைந்தார்’ என்பதை ஏனோ மனம் தனக்குள் வாங்கிக்கொள்ளவில்லை. எம்.எஸ். ராஜேஸ்வரி என்று பார்த்தவுடனே

‘குவா குவா பாப்பா..அவ
குளிக்க காசு கேப்பா..!
அம்மா வந்து சாப்பிடச் சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா..
குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

என்று நினைவுப் பக்கங்களிலிருந்து பாட ஆரம்பித்துவிட்டது மனது. ஹம் பண்ணிக்கொண்டிருக்கையில், இந்தப்பாடலின் வரிகள் இப்படியெல்லாமும் போகுமே என்பதும் அடுக்கடுக்காக நினைவுக்கு வந்து படுத்தியது:

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டயில இவள நினைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல ..

யாருமில்லா அனாதையா கடையில கிடந்தா – எங்க
அம்மாவுக்குப் பொண்ணா வந்து மடியில இருந்தா
ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா?
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..

குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

(மேற்சொன்ன பாடலை கண்ணதாசன் ’இரு வல்லவர்கள்’ (1966) படத்திற்காக எழுதினார். வேதாவின் இசையில், ராஜேஸ்வரியின் குரலில் வந்தது பாடல்). இப்படியெல்லாம் பாடி நம்மை உருக்கிப்போட்டவர்தான் எம் எஸ் ராஜேஸ்வரி. வெறும் திரைப்பாடகி அல்ல அவர். ஒரு ஸ்பெஷலிஸ்ட். குரலில் அந்த குழந்தைத்தனம், மென்மையை அவரைப்போல அனாயாசமாகக் கொண்டுவந்தவர் யாருமில்லை. தமிழ்த் திரை உலகம் புண்ணியம் செய்திருக்கவேண்டும், இப்படி ஒரு கலைஞர் நமக்கு வாய்த்ததற்கு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆர்.சுதர்சனம், ஜி.ராமனாதன், விஸ்வனாதன் –ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற சிறந்த இசையமைப்பாளர்களுக்காக அவர் திரையில் பாட நேர்ந்ததால், காலத்தால் கரைக்கமுடியா இசைக்காவியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ’களத்தூர் கண்ணம்மா (1960)-வில் வரும் அந்தப் புகழ்பெற்ற பாட்டு நினைவுக்கு வாராதிருக்குமா? காட்சியில், அனாதைக் குழந்தைகள் முருகன் சிலைமுன் நின்று பாடுகின்றன. முன் வரிசையில் நிற்கும் சிறுவன் கமல் ஹாசனுக்குக் குரல் கொடுக்கிறார் ராஜேஸ்வரி :

‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..
அம்மாவும் நீயே ..

என உருக்கத்துடன் ஆரம்பித்து..

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே
எங்களுக்கோர் அன்புசெய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையே…

-என அப்பாவிக் குரலில் அரற்றுகிறார். அதே பாடலில் மேலும் ..

பூனை நாயும் கிளியும்கூட மனிதன் மடியிலே
பெற்ற பிள்ளைபோல நல்லுறவாய்க் கூடி வாழுதே..
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே..

என ஆச்சரியத்துடன் கடவுளைப் பார்த்துக் கேட்கிறார். எல்லாமே சுகித்திருக்கும் உலகில் எங்களுக்கு மட்டும் அன்பில்லாது போனதெப்படி? – என்கிற ஏக்க உணர்வை எழுப்பி, அந்தக் குழந்தையாக நம்மையும் தன் குரலால் மாற்றிக் கரைக்கிறார் ராஜேஸ்வரி. வாலி வரைந்த பாடலுக்கு ஆர்.சுதர்சனத்தின் இசை.

தன்னுடைய முதல் திரைப்பாடலை 12 –ஆவது வயதில் 1946-ல், ’விஜயலக்ஷ்மி’ என்கிற படத்தில் ஸோலாவாகப் பாடுகிறார் எம்.எஸ். ராஜேஸ்வரி. ‘மையல் மிக மீறுதே’ என்கிற பாடல். 1947-ல் இந்திய சுதந்திர வருடக் கொண்டாட்டமாக ஏவிஎம் வெளியிட்டது ‘நாம் இருவர்’ திரைப்படம். அதில் கவிஞர் கே.பி. காமாட்சியின் ‘மகான் காந்தி மகான்’ என்ற ஆர்.சுதர்சனத்தின் இசையிலமைந்த பாடலை குமாரி கமலாவிற்காகப் பிரமாதமாகப் பாடியிருந்தார் சிறுமியான ராஜேஸ்வரி. ’மஹ்ஹான்..காந்தி மஹான்..’ என அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதி. இவரது குரல்நயம், ஏற்ற இறக்கங்கள், பாடும் திறன் என கவனித்திருந்த இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்தான் சிறுமி ராஜேஸ்வரியை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தியவர். ஏவிஎம் ஸ்டூடியோவில் ஆரம்பத்தில் சொற்ப மாத சம்பளத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் ராஜேஸ்வரி. ஏவிஎம்-மின் 1940-1950 வருடங்களிலான படங்களில் ஒரு ஆஸ்தானப் பாடகி போல் ஸோலோ பாடல்களும், டி.எஸ். பகவதி போன்றோரோடு இதர பாடல்களையும் பாடியிருக்கிறார். ராமராஜ்யம், வேதாள உலகம், பராசக்தி, நாம் இருவர், பெண், வாழ்க்கை போன்ற படங்கள் இவை. 1948-ல் வெளியான ’வேதாள உலகம்’ படத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘ஓடிவிளையாடு பாப்பா’வை பாடகி டி.எஸ்.பகவதியுடன் இணைந்து வழங்கியிருக்கிறார். குழந்தைப்பாடல்களுக்காகப் பொதுவாகப்பேசப்பட்டாலும், அருமையான டூயட்டுகளையும், ஸோலோ பாடல்களையும் தமிழ்த் திரையுலகிற்கு அளித்தவர் ராஜேஸ்வரி.

1952 படமான ’பராசக்தி’யில் எம்.எஸ். ராஜேஸ்வரி இரண்டு இனிமையான பாடல்களை ரசிகர்களுக்குத் தந்து ஆச்சரியப்படுத்தினார். தஞ்சை ராமையா தாஸின் காதல் பாடலுக்கு ஆர்.சுதர்ஸனம் ரம்யமாக இசை அமைத்துள்ளார். ஹீரோயின் பண்டரிபாய்க்காகக் இனிமையாக இப்படிப் பாடுகிறார்:

புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க..
இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே.. அந்த
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..!

அடுத்தது- குமாரி கமலா நாட்டியத்துக்காக அமைந்துள்ள இந்தப் பாடல். நடிகரும் கவிஞருமான கே.பி. காமாட்சி
எழுதியது.

ஓ.. ரசிக்கும் சீமானே..!
ஓ.. ரசிக்கும் சீமானே.. வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்!
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..!

இந்தப்பாடலின் கடைசி பாராவை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் கவிஞர் காமாட்சி. அதனை அனாயாசமாகப் பாடித்தள்ளியவர் ராஜேஸ்வரி:

வானுலகம் போற்றுவதை நாடி.. இன்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி – பெண்களின்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப்போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம் !
தினம் நினைக்கும் பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே ..!

-அழகான பாடலுக்கு அருமையாகத் துணைபோகிறது கமலாவின் நடனம். சுகபோக இடத்தில் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு நெளியும் இளைஞனாக சிவாஜி கணேசன்! ஆடியோ, வீடியோ இரண்டையும் ரசிக்கமுடியுமாறு அமைந்த அபூர்வப்பாடல்.

1954-ல் வெளிவந்த சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி ஆகியோர் நடித்த ’தூக்குத்தூக்கி’ படத்தில் ராஜேஸ்வரி டிஎம் சௌந்திரராஜனுடன் பாடிய டூயட் அந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தம். மருதகாசியின் மயக்கும் எழுத்துக்கு ஜி.ராமனாதனின் இதமான இசை. பீம்ப்ளாஸ் ராகம். ஊடலால் தாக்கப்பட்ட நாயக, நாயகிக்கிடையே இழைகிறது பாடல் :

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்..
வேறெதிலே உந்தன் கவனம்?’

அதில் ஓரிடத்தில் லலிதாவுக்கான குரலில் நாயகனை சீண்டுவார் ராஜேஸ்வரி:

உண்மையில் என்மேல் உமக்கன்பு.. ஆ..ஆ..ஆ..
உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால்… இல்லை இனி வம்பு..!

சிவாஜிக்காக பதில்கொடுக்கும் இளம் டி.எம்.எஸ்:

கண்ணில் தெரியுதே குறும்பு..
கனிமொழியே நீ எனை விரும்பு !

நினைவிலிருந்து நீங்காத டூயட். அந்தக்காலப் பாடலென்றால் அந்தக்காலப் பாடல்தான் !

1955-ல் வெளியான ’டவுன்பஸ்’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் அஞ்சலிதேவிக்காக ராஜேஸ்வரி பாடிய ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே’ என்கிற கவிஞர் கா.மு.ஷெரீஃபின் பாடல் ரசிகர்களின் மனதை நெகிழவைத்தது.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் தாலாட்டுக்கு அருமையாகப் பொருந்திவரும் எனத் திரையுலகில் நிரூபித்த இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி. இவர்களின் இனிய இசையில், எம்.ஜி.ஆர். சாவித்திரி நடித்த மகாதேவி (1957) படத்தில் ‘காக்கா காக்கா மைகொண்டா.. காடைக்குருவி மலர் கொண்டா.. பசுவே பசுவே பால் கொண்டா, பச்சைக்கிளியே பழம் கொண்டா..’ என்கிற மருதகாசியின் பாடலைப் பாடி, புகழ்பெறவைத்தார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. கண்ணதாசன் தயாரித்து பாடலெழுதிய ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் இன்னொரு தாலாட்டுப்பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு விஸ்வநாதன் –ராமமூர்த்தியின் இசையில் அமைந்தது. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்..மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்’ எனச் செல்லும் வரிகளில் கேட்பவருக்கு உத்வேகம் கொடுத்த இந்தப்பாடல் பிரபலமானதோடு, சாகித்ய அகாடமியால் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறப்பையும் பெற்று அசத்தியது. இவரது தாலாட்டுப்பாடல்கள் புகழ்பெறுவதைக் கவனித்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், 1958 படமான ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற படத்தில் கே.முத்துசாமி எழுதிய இந்தப் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கொடுத்தார்:

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா..
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா ?

எனக் கேட்டு, கேட்பவர்களை மெல்ல உருகவிட்டார் ராஜேஸ்வரி. உடனடி ஹிட்டானது இந்தப் பாடலும்.

1960-ல் ராஜேஸ்வரி ஜோராக ஜொலித்துக்கொண்டிருந்தார். அந்த வருடத்தில் அப்படிப்பட்ட படங்கள், பாட்டுகள். படிக்காத மேதை படத்தில், தான் பள்ளிக்குப்போய்ப் படிக்காதுபோய்விட்டோமே என நொந்துபோய்க் கிடக்கும் சிவாஜி கணேசனை சௌகார் ஜானகி தேற்றுவதாக வரும் சீனுக்கான பாடலில் அசத்திவிட்டார் ராஜேஸ்வரி:

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

-என்று ஆரம்பிக்கும் கண்ணதாசன் பாடல் இப்படியெல்லாம் ராஜேஸ்வரியின் குரலில் கேள்வி கேட்கும்:

கல்வியில்லாக் கன்றுகளும் தாயை அழைக்கும் – காட்டில்
கவரிமானும் பெண்களைப்போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே -நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா.. ?

என்று நம் உணர்வை மீட்டிச்செல்லும் பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை இழைத்துள்ளார்.

அறுபதுகளிலிருந்து ராஜேஸ்வரிக்கு பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்களுக்கான பாடல்களே வாய்த்தன. 1960 படமான களத்தூர் கண்ணம்மாவில் கமலுக்காகப் பாடிய ’அம்மாவும் நீயே’ என்கிற புகழ்பெற்ற பாடலுக்குப்பின், அதே வருடத்தில் வெளியான ’கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் மற்றொரு குழந்தைப்பாடலையும் தன் குரலினால் பிரபலமாக்கினார் ராஜேஸ்வரி. அது ’சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்.. இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்!’ என வரும் மருதகாசியின் பாடல். அடுத்த வருடமே அவர் பாடிய இன்னொரு குழந்தைப்பாடல் புகழ்வெளிச்சத்தை சந்தித்தது. அதுவும் மருதகாசி இயற்றியது – கே.வி. மகாதேவன் இசையில் வந்தது:

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி – அவர்
அழகைச் சொல்லடி செல்லக்குட்டி ..
மியாவ்.. மியாவ்..

என மியாவிவிட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. 1961-ல் வெளிவந்த ‘குமுதம்’ படத்தில் கண் தெரியா அப்பாவி சௌகார் ஜானகிக்காக இப்படிக் குரல் கொடுத்திருக்கிறார்.

1965-ல் வெளிவந்த ’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வனாதனின் இசையில் வெளியான ’கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே.. கோழிக்குஞ்சு ரெண்டு மட்டும் அன்பில்லாத காட்டிலே..’ எனும் பாடலுக்கு குட்டிபத்மினிக்காக சோகமாகக் குரல் கொடுத்திருக்கிறார் ராஜேஸ்வரி. பாடல் ரசிகர்களின் மனதில் உடனேபோய் உட்கார்ந்துகொண்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான பாடலென்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரிதான் என்கிற அளவுக்கு அப்போது பேர் வாங்கிவிட்டிருந்தார் அவர். பேபி ஷாலினிக்காக நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். இப்படி பல்வேறு பாடல்கள் 1979 வரை. அதற்குப்பின் அவருக்கு வாய்ப்புகள் வராதிருந்தன.

வெகுகால இடைவெளிக்குப்பின் எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலை ரசிகர்களுக்காகத் திரைக்கு மீட்டுவந்த பெருமை இளையராஜாவையே சாரும். 1989 –ல் வெளியான, கமல் ஹாசனின் மிகச்சிறந்த திரைச்சித்திரங்களில் ஒன்றான ’நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற புலமைப்பித்தனின் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும் கே.ஜமுனா ராணியும் பாட, அருமையாக இசைப்படுத்தியிருந்தார் இளையராஜா.

மதுரை சடகோபன் ராஜேஸ்வரி – எம்.எஸ்.ராஜேஸ்வரி தமிழ் ரசிகர்களிடையே இவ்வளவு புகழ்பெற்றிருந்தும், சமீபத்தில் அவர் தன் 87-ஆவது வயதில் சென்னையில் மறைந்தபோது தமிழ்த் திரையுலகத்திலிருந்து யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் சொன்னதாக விகடனில் படித்தேன். (ட்விட்டரில் அஞ்சலி சொன்ன கமல் ஹாசனும், பின்னால் நினைவு கூர்ந்து பாராட்டிய பாடகிகள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதில் விதிவிலக்கு). ’தமிழ்த் திரை உலகை வெகுவாக நேசித்தார் என் அம்மா. அங்கிருந்து யாராவது வந்து அஞ்சலி செலுத்தினால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும். அதற்காகக் காத்திருக்கிறோம்..’ என அவர் மகன் சொன்னதாகப் படித்தபோது மனதை என்னவோ செய்தது. 40 வருடங்களுக்கு மேலாகத் திரையுலகில் இணைந்திருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை, உணர்ச்சிக்குரலில் ஒலிக்கவிட்டு ரசிக உள்ளங்களைக் கொள்ளைகொண்ட மனுஷிக்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்த சென்னைப் பட உலகில் யாரும் இல்லையா? என்ன ஒரு விசித்திர உலகமடா இது.

**

ஸ்ரீதேவி எனும் சினி சகாப்தம்

இவரை எப்படிப் பார்ப்பது? இந்திய சினி இண்டஸ்ட்ரியின் இன்னுமொரு புகழ்பெற்ற நடிகை என்றா? தெற்கிலும், வடக்கிலுமாக சில வருடங்கள் நன்றாக ஓட்டியிருக்கிறார் என்று சொல்லிக் கடந்துவிடலாமா? இவ்வளவுதானா இந்த மனுஷி?

பத்தோடு பதினொன்னாக என்றும் இருந்தவரல்ல ஸ்ரீதேவி. இந்திய சினிமா அல்லது இந்திய எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி எனும் ஒரு உலகப்புகழ்பெற்ற பெரும் கலை, தொழிலமைப்பில், ஐம்பது வருடகாலம் அயராத தாக்கம் ஏற்படுத்திய ஆர்ட்டிஸ்ட். சீரியஸ் ரோல்களை இயல்பாகச் செய்த திறனுடன், கண்களில் விஷமம் மின்னும் நாசூக்கான காமெடித் திறனும் அவரிடமிருந்து வெளிப்பட்டது பல படங்களில். நடிப்புலகில் ஒரு அபூர்வத் திறனாளர் என்பதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. தன்னிடம் மையம் கொண்டிருந்த கலாதேவியின் கருணையினால், ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பின்னர் ஹிந்தி என வணிகசினிமாவில் செயல்பட்டபோதிலும், சில அழுத்தமான, நெஞ்சிலிருந்து நீங்காத படைப்புகளைக் கொடுத்த உயரிய பெண் கலைஞர். நாடுமுழுதும் பெருகிப் பரவியது இவரின் ரசிகர் கூட்டம். The only female Super Star என்று ஸ்ரீதேவியைக் குறிப்பிடுகிறது புகழ்பெற்ற நாளேடான இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். இன்னும் திரையுலகின் எத்தனையோ பிரபலங்கள் எப்படியெல்லாமோ அவரைப் புகழ்ந்திருக்கிறார்கள். இருந்தும் ஒரு தனிமனுஷி என்கிறவகையில் அவரிடம் காணப்பட்ட குணங்கள் – குழந்தைத்தனம், வெளிப்படுத்திய அவையடக்கம், நம்பமுடியா எளிமை. பாலிவுட்டில் பணியாற்றத்துவங்கிய ஆரம்ப வருடங்களில் அவரை ஒரு ’குழந்தைப்பெண்’ என்று பொருள்பட, ‘a child-woman’ என்றே பலர் குறித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்மிடையே இன்று இல்லாத நிலையில், நாம் நினைத்து ஆச்சரியப்பட, உருகிட நிறைய நினைவுகளை, திரைச்சித்திரங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதேவி .

மூன்றரை வயதுக் குழந்தையான ஸ்ரீதேவி ஒரு சோப் விளம்பரத்திற்காக, கிருஷ்ணனாக வேடமிட்டு கேமராவின் முன் நிற்கவைக்கப்படுகிறார். கேமராமேனாக அப்போது எதிர்நின்றவர், பின்னாளில் சிறந்த மலையாள இயக்குனர்களில் ஒருவராக அறியப்படவிருந்த பரதன்.(தமிழில் கமல், சிவாஜி நடித்த தேவர் மகன் படத்தை இயக்கியவர்). 1996-ல் ஸ்ரீதேவி பாலிவுட்டின் டாப் ஸ்டார். அப்போது தேவராகம் என்கிற தன் படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பது அரிதாயிற்றே எனக் குழம்பியே ஸ்ரீதேவியை சந்திக்க அவரது இல்லத்துக்கு வருகிறார் இயக்குனர் பரதன். ஸ்ரீதேவி அப்போது அங்கில்லை. அவரது அம்மா ராஜேஸ்வரி பரதனை அடையாளம் கண்டுகொள்கிறார். நீங்கள்தானே என் மகளைக் குழந்தைப்பருவத்தில் விளம்பரத்துக்காக ஃபோட்டோ எடுத்தது எனக் கேட்க, ஆச்சரியப்பட்ட பரதன் ஆம் என்கிறார். என் மகள் உங்கள் படத்தில் நடிப்பாள், கவலைப்படாமல் போய்வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பிவைத்தாராம் ஸ்ரீதேவியின் அம்மா. ஸ்ரீதேவியின் நெருக்கடியான வருடத்தில் அவர் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. இருந்தும் அம்மா வாக்குக் கொடுத்துவிட்டாரே என்பதனால், அதே அம்மாவுக்கு மூளை ஆப்பரேஷன் அமெரிக்காவில் நடக்கையில், அமெரிக்காவில் ஒருகால், தேவராகம் ஷூட்டிங்கிற்காக இந்தியாவில் ஒரு கால் என அலைந்து பரதனுக்குப் படத்தை முடித்துக்கொடுத்தார். ஒருபக்கம் அம்மாவின் உயிரையும், மறுபக்கம் அம்மாவின் வார்த்தையையும் காப்பாற்றிய மென்மனம் கொண்டவர் ஸ்ரீதேவி.

பொதுவாக கேமரா முன்னரேயன்றி, சொந்த வாழ்வில் அதிகம் பேசாத இந்த நடிகை அபூர்வமாக ஒரு நேர்காணலில், கமல், ரஜினி இருவரும் எனது நண்பர்கள் என்று கூறியிருக்கிறார். 2011-ல், ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகையில், அவர் சீக்கிரம் குணமாகவேண்டி ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார். விரதத்தை முடித்து ஷிர்டி பாபா கோவிலுக்கு சென்று, ரஜினிக்காக, ஸ்ரீதேவி பிரார்த்தனை செய்து திரும்பியது சினிமா உலகிலேயே பலருக்குத் தெரியாது.

ஆறாவது வயதில் சின்னப்பத்தேவரின் துணைவன் படத்தில் குழந்தை முருகனாக வெளிப்பட்டு, வெள்ளைப்பேச்சில் நம் மனதை அள்ளியவர். தன் எட்டாவது வயதில், 1971- மலையாளப்படமான ’பூம்பாட்டா’வில் தாய் தந்தையை இழந்து, உறவினர் வீட்டில் வளரும் தாயில்லாப்பிள்ளையாய் பார்த்தோரின் மனதை உருகவைத்த குழந்தை ஸ்ரீதேவி. பலனாக 1971-ல், கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 13 வயதினில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இவரைத் தமிழ்ப் படமான மூன்று முடிச்சின் ஹீரோயினாகத் தேர்ந்தெடுக்கிறார். (வேறொரு காலகட்டத்தில் நன்றியுணர்வோடு இதுபற்றிப் பேசியிருக்கிறார் ஸ்ரீதேவி). மூன்று முடிச்சு திரைப்படத்தில் அவர் சந்தித்தது, பின்னாளில் தமிழின் சிறப்புக் கலைஞர்களாக, ஆளுமைகளாக ஒளிரவிருந்த கமல் ஹாசனையும், ரஜினிகாந்தையும். அந்தப் படத்தில் நடிப்பில் இந்த இருவரும், அனுபவமில்லாத கத்துக்குட்டியான ஸ்ரீதேவியுடன் மோதி நிரூபிக்கவேண்டியிருந்தது! ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். பாரதிராஜா தன் ‘பதினாறுவயதினிலே’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது, முதலில் தயங்கிய ஸ்ரீதேவி, பின்னர் ஒப்புக்கொண்டார். மயிலாக வந்து ஒயிலாக ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக அமர்ந்துகொண்டார். ‘என்னோட பேரு குயில் இல்ல… மயில்!’ என்பார் வெகுளியாக ஒரு இடத்தில். (அவர் மறைவுக்குப்பின் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பறந்துகொண்டிருக்கும் வாட்ஸப் மெசேஜ்களில் இது தெரியும்.) வேறு யாரையும் அப்போது அந்த ரோலில் நினைத்துப் பார்த்திருக்கமுடியுமா? அப்படியே யாருக்காவது கிடைத்திருந்தாலும் ஸ்ரீதேவியைப்போல் அந்த அப்பாவித்தனத்தைத் திரையில் கொண்டுவந்திருக்கத்தான் முடியுமா? இந்தப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ’சோல்வா(ன்) சாவன்’ படத்தில் 1979-ல் நடித்து பாலிவுட்டில் கால்பதித்தார் ஸ்ரீதேவி. (இதற்கு முன் ஹிந்தியில் நடிகை லக்ஷ்மி நடித்த ஜூலி படத்திலும் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்). வடநாட்டு ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். 1983-ல் வெளியான, ரஜினிகாந்த் டபுள்ரோலில் நடித்த ஜானி படத்தில், பாடகி அர்ச்சனாவாக வந்து ’என் வானிலே ஒரு வெண்ணிலா’, ’காற்றில் எந்தன் கீதம்..’ ஆகிய பாடல்களுக்கான காட்சிகளுக்குத் தன் உணர்வினால் உயிரளித்த நடிகை.

தமிழ், தெலுங்கு, ஹிந்திப்படங்கள் என கமல் ஹாசனுடன் 27 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அந்தக் காலகட்டத்தில், பெரிய திரையில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தது இது. தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே( கமல், ரஜினி, ஸ்ரீதேவி), சிகப்பு ரோஜாக்கள், கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (கமல், ரஜினி, ஸ்ரீதேவி), வறுமையின் நிறம் சிகப்பு (தெலுங்கில் ஆகலி ராஜ்யம்),பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை {ஹிந்தியில் சத்மா (Sadma)} ஆகிய புகழ்பெற்ற படங்களோடு, கல்யாணராமன், மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் போன்ற படங்களில் சிறப்பாக பங்களித்துள்ளார் ஸ்ரீதேவி. ரஜினிகாந்துடன் மேலும் படங்கள்: காயத்ரி, வணக்கத்துக்குரிய காதலியே, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்றவை. எம்ஜிஆர்-உடன் குழந்தை நட்சத்திரமாக ’நம் நாடு’ என்கிற படத்தில் வருகிறார். சிவாஜி கணேசனின் மகளாக பைலட் ப்ரேம்நாத், கவரிமான் போன்ற படங்களில் பாத்திரமேற்று செய்திருக்கிறார். 2015-ல் வெளிவந்த ’புலி ’ என்கிற படந்தான் தமிழில் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.

தெலுங்குப்பட உலகில் கிருஷ்ணாவுடன் அவரது ஜோடி பிரசித்தம். பங்காரு பூமி, பங்காரு கொடுக்கு, கைதி ருத்ரய்யா, ப்ரேம நக்ஷத்திரம், கிருஷ்ணாவதாரம் போன்று 29 படங்களில் இருவரும் இணைந்துள்ளனர். 1992-ல் வெளியான, இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’க்ஷ்ண க்ஷ்ணம்’ படம் புகழ்பெற்ற தெலுங்குப் படங்களில் ஒன்று. 1993-ல் வெளியிடப்பட்ட ’கோவிந்தா கோவிந்தா’ தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதேவி. இவையன்றி, ஆத்யபாடம், நாலுமணிப்பூக்கள், அங்கீகாரம், ஆ நிமிஷம், ஊஞ்சல் என இருபத்தைந்து மலையாளப் படங்களில் கமல் ஹாசன், மது, சோமன், மம்மூட்டி போன்ற பல்வேறு ஹீரோக்களுடன் ஸ்ரீதேவி பணியாற்றியுள்ளார் . பெரிய இடைவெளிக்குப்பிறகு 1996-ல் நடித்ததுதான், பரதனின் மலையாளப்படமான தேவராகம் (ஹீரோ:அரவிந்த்ஸ்வாமி).

1979-ல் பாலிவுட்டில் நுழைந்திருந்தாலும், ஹிந்திமொழி பிடிபட ஸ்ரீதேவிக்கு சிலவருடங்கள் ஆயின. ஆரம்பத்தில் நடிகை ரேகா உட்பட பலர் அவருக்கு ஹிந்திப்படங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர். 1989-வாக்கில் அவர் தன் வெற்றிப்படங்களான ச்சால்பாஜ் (Chaalbaaz), சாந்தினி ஆகிய படங்களில் நடிக்கையில் ஹிந்தி மொழி அவரிடம் வசப்பட்டுவிட்டிருந்தது. பாலிவுட்டில் அவரின் ஆரம்பப்படங்களில் ஒன்று ஹிம்மத்வாலா. இந்தப்படத்தின் ஹீரோவான ஜிதேந்திரா அப்போது மங்கிக்கொண்டிருந்த ஒரு ஸ்டார். ஆனால், படங்களின் பாட்டுக்களும் அதற்கேற்ப ஸ்ரீதேவியின் நாட்டிய, நடிப்புத்திறமையின் காரணம் கொண்டே படம் பிரபலமாகி, பணத்தை அள்ளிக் குவித்தது. வடநாட்டில் ஸ்ரீதேவி ரசிகர் வட்டம் உருக்கொண்டது. ’நாகினா’, புகழ்பெற்ற இயக்குனரான சேகர் கபூர் இயக்கிய சையன்ஸ்ஃபிக்ஷன் படமான ’மிஸ்டர் இண்டியா’ என வெற்றிகள் தொடர, இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் அறியப்பட்ட பிரபலமான பாலிவுட் ஸ்டாரானார் ஸ்ரீதேவி. இந்த வகையில் பார்த்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தமிழ் மற்றும் இதர தென்னிந்தியப்படங்களோடு பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தபோதிலும், ஸ்ரீதேவி அளவுக்கு தெற்கு, வடக்கு என ஒருசேர வென்று கோலோச்ச முடியவில்லை அவர்களால். முன்னர் வைஜயந்திமாலா, பிறகு ஹேமமாலினி, ரேகா ஆகிய தமிழ்நாட்டு நடிகைகள் பாலிவுட்டில் புகழ்பெற்றனர். ஆனால் தென்னிந்திய மொழிப்படங்களில் அவர்களால் காலூன்ற முடிந்ததில்லை. ஸ்ரீதேவி மட்டுமே இத்தகு வியத்தகு சாதனையாளர். அதனால்தான் ’இந்தியாவின் ஒரே பெண் சூப்பர்ஸ்டார்’ என்கிற பட்டம் வெகு இயல்பாகப் பொருந்துகிறது அவருக்கு.

2012-ல் பதினைந்து வருட பெரிய இடைவெளிக்குப்பின், அவரது லைட் காமெடிப் படமான, இளம் பெண்இயக்குனர் கௌரி ஷிண்டே இயக்கிய ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ்’ வெளியானது. ஸ்ரீதேவியைத் தவிர படத்தில் தெரிந்த முகமென்று யாருமில்லை. ’மீண்டும் ஸ்ரீதேவி’ எனப் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே அந்தப்படம் கிளப்பியது. கனடாவின் டொரொண்ட்டோ திரைவிழாவில் திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் திரைவிமரிசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இளம்இயக்குனருக்கான பரிசை வென்றதோடு படம் நன்றாக ஓடி, வணிகரீதியிலும் ஹிட்டானது. அவரது 54-ஆவது வயதில், 2017-ல் அவரது கடைசி ஹிந்திப்படமான ‘மாம்’ (அம்மா) வெளியிடப்பட்டது. ரவி உத்யவர் இயக்க, ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக்கி மற்றும் சிலர் நடித்த குறைந்த பட்ஜெட் படம். படம், போட்ட காசை மீட்டதோடு, கொஞ்ச லாபத்தையும் கொடுத்தது.

படம் வெளிவரவிருந்த நிலையில் தமிழ் நாளேடொன்றில் அவரது சிறிய நேர்காணலொன்று வந்தது. அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மாம் என்றால் தமிழில் அம்மா. ஆனால் இது அம்மாபற்றியது மட்டுமல்ல, வளர்ந்துவரும் மகள் பற்றியதுமாகும் என்கிறார். இந்தப்படத்தில் நடித்தபோது, தன்னோடு எப்போதும் ஸ்டூடியோவுக்குக் கூடவந்த தன் அம்மாவின் நினைவு தாக்கியதாகக் குறிப்பிடுகிறார். மா என்றால் அம்மாவைக் குறிக்கும். ஆனால் தமிழில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் வாழ்க்கைபற்றி படமெடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ’அவரைப் போன்ற ஒரு ஆளுமை கொண்டவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்புமிக்க பணியாகும். அத்தகைய கதாபாத்திரத்துக்கு நான் இவ்வளவு விரைவில் நியாயம் வழங்க முடியாது என்று உணர்கிறேன். ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஜெயலலிதாவை இறைவியாகவே கருதினேன். அவருடன் உரையாடிய கணங்கள் குறித்த இனிய நினைவுகள், இப்போதும் என்னிடம் அழியாமல் இருக்கிறது’ என்கிறார் ஸ்ரீதேவி.

நடிப்புத்தொழிலில் வெற்றிமேல் வெற்றிபெற்றபோதிலும், தன் பிராபல்யம்பற்றிய செருக்கு அவரிடம் காணப்பட்டதில்லை. அவருடைய பதின்மவயதில் காணப்பட்ட குழந்தைமை, ஒரு அப்பாவித்தனம் அவரில் நீடித்திருந்தது. அதுவே அவரது மாபெரும் சக்தியும், பலவீனமும். தனிமனுஷியாக எந்த நேர்காணலிலும் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியவரில்லை. மிகவும் குறைவாக, ஜாக்ரதையாகப் பேசுபவர். உள்ளுக்குள்ளே அவர் மிகவும் மென்மையானவராகவும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் மருண்டுபோய், சந்தேகத்துடன் இந்த உலகை நோக்குபவராகவே இருந்திருக்கிறார். வெளியே சந்தோஷமாக இருப்பதாகத் தெரிந்தாலும், உள்ளே தன் அகத்தின் பாதுகாப்பின்மையை, தன்னுடைய துக்கத்தைக் காட்டிக்கொள்ளாது, தன்னைச் சுற்றிலும் ஒரு உளவியல் கட்டமைப்புடனேயே அவர் எப்போதும் இருந்திருக்கிறார் என்கிறார் அவரது படங்களை இயக்கியவரும் அவரை அருகிருந்து அறிந்தவருமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவி தன் சிறுவயதிலேயே பேரும்புகழும் அடைந்ததனால் தன் வாழ்வை ஸ்திரமாகப் பிடித்துக்கொள்ளவே அவருக்கு வாய்ப்பில்லாது போனதெனவும், தந்தை இருந்தபோதுகூட சொத்துபத்து விஷயங்களில் அவரது உறவினர்களாலேயே வஞ்சிக்கப்பட்டதும், அப்பாவின் மறைவுக்குப்பின் அவர் அம்மாவையே சார்ந்திருக்கவேண்டியிருந்ததும் காரணங்களெனக் கூறுகிறார் ராம் கோபால் வர்மா.

அவரது கல்யாணமும்கூட அவரால் விரும்பி அமைத்துக்கொள்ளப்பட்டதல்ல. அவரது ஒரே துணையான அம்மாவும் இறந்துவிட்ட நிலையில், இவ்வுலகில் தனித்து விடப்பட்டு செய்வதறியாது உள்ளுக்குள்ளே தவித்தபோது, யாரோ ஏதோ சொன்னார், வேறுயாரோ சிபாரிசு செய்தார், இதுதான் சரியோ, வேறுவழியில்லையோ என்கிற குழப்பமான நிலையிலேயே இறுதியில் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள். அவர்போய்ச்சேர்ந்த குடும்பத்திலும் அவரை மதித்தவரோ, உண்மை அன்பு காட்டியவரோ எவரும் இல்லை என்றுதான் தெரியவருகிறது. போதாக்குறைக்கு, ஸ்ரீதேவி சம்பாதித்த பணத்தைவைத்து, கணவரென வந்தவர் தன் பெருங்கடன்களை அடைத்துக்கொண்டார் என்றும் கேள்வி. ஸ்ரீதேவி சண்டைபோடும் குணத்துக்காரர் இல்லையாதலால், எல்லாவற்றையும் அனுசரித்துப்போவதாக எண்ணி, உண்மையில் எல்லாவற்றையும் இழந்தே வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. குழப்பத்தோடு குழப்பமாக, இரண்டு குழந்தைகள் – அதுவும் பெண் குழந்தைகள், பிறந்துவிட்ட நிலையில் அவர்களின் வளர்ப்பிலேயே தன் மனதை முழுதும் ஈடுபடுத்தி இருபது வருடங்களைக் கடத்தியிருக்கிறார்போலும், தனக்கென எந்த சுகமும் இல்லாமலேயே.

’மாலினி ஐயர்’ என இவர் நடித்த ஒரு காமெடி டிவி சீரியல், சஹாரா சேனலில் 2004-ல் வெளிவந்து, ஜனரஞ்சகமாக அமைந்தது. 2012-ல் பெரியதிரைக்கு ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ் (ஹிந்தி படம்)’ மூலம் திரும்பினார். 2013-ல் ஸ்ரீதேவிக்கு இந்தியாவின் உயர் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ வழங்கப்பட்டது. சிலவருடங்களுக்கு முன், அமிதாப் பச்சனின் ’கோன் பனேகா க்ரோர்பதி?’(Kaun banega crorepati – கோடீஸ்வரர் ஆகப்போவது யார்) டிவி நிகழ்ச்சியில், ஒருமுறை ஸ்பெஷல் கெஸ்ட்டாக ஸ்ரீதேவி வந்தபோது, அமிதாப் மிகவும் வாஞ்சையுடன், மரியாதையுடன் அவரை நடத்தியது நினைவில் இருக்கிறது. உடம்பை அதீதக் கட்டுப்பாட்டில் வைத்து நடித்ததோடு, மாடலிங் வேறு செய்துவந்தார் பிற்காலத்தில். இதையெல்லாம் அவர் விரும்பித்தான் செய்தாரா, செய்யுமாறு, மேலும் சம்பாதித்துக்கொடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டாரா – அந்த இறைவனுக்கே வெளிச்சம். கடைசியில் துபாயில் எப்படித்தான் அவர் மறைந்தார் என்பதையும் நாம் அந்தப் படைத்தவனிடமே விட்டுவிடலாம். சதிகார உலகில், நம்மைப்போல் அப்பாவிகள் தெரிந்துகொள்ள வேறேதுமில்லை.

**

ஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா !

காலை எழுந்தவுடன் காஃபி குடித்துக்கொண்டே ரிலிஜியஸாக நெட்டைத்தட்டிவிட்டு தமிழ் மீடியா உலகுக்குள் அலைகிறேன். நாட்ல எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டுருக்கு? நம்ப தமிழ்நாட்ல ஆட்சி என்று ஒன்று நடந்துவருகிறது. சரி. கட்சி? அதைப்பற்றித் தெரிந்துகொள்ள முயன்றால் காலைக் காஃபியின் மணமும் கதறிக்கொண்டு வெளியேறிவிடும். எக்கேடுகெட்டாலும் ஒழியட்டும். பொதுமக்களுக்கே வரவர கட்சிகள்மேல ஈர்ப்பு விட்டுப்போயிடுச்சு. நமக்கெதற்கு காலைல வயித்துவலி?

வேறென்ன விசேஷம்? உருகியும், அணைத்தும், அழுதும், முத்தமிட்டும் ரசிகர்களின் கனவுலகில் ஏகப்பட்ட அளவுக்கு எகிறிக்கொண்டிருந்த ஓவியா, ’பிக் பாஸி’லிருந்து வெளியேறுவார்..வார்…வெளியேறியேவிட்டார். தன் மென்மையான குணநல வெளிப்பாட்டினால் ரசிகர்களின் மனவெளியில் கோலோச்சிய ஓவியா நிகழ்ச்சியிலேயே இல்லையா? செம கடுப்பில்இ ருக்கிறார்கள் ஓவியா ரசிகர்கள். அவரின் சோகக் கதையைக்கேட்டு கமல் ஹாசனும் கண்கலங்கினார் (பெண் என்றாலே நெகிழ்பவராயிற்றே. ஓவியாவுக்காக உருகாவிட்டால் எப்படி?) ஏன், ப்ரொக்ராமை நடத்தும் ஸ்டார் விஜய் சேனலுக்கேகூட ஓவியா வெளியேறியது பிடிக்கவில்லையாமே. ‘’ஆரவ்வை என்னால் மறக்கமுடியாது. அவர் என்னிடம் வருவார்!’’ உணர்ச்சியின் உச்சத்தில்ஓவியா வார்த்தைகளை விட்டுவிட, ’என் மகள் அப்படிப்பட்டவளல்ல. நிஜத்தில் அவளுக்கு நடிக்கத் தெரியாது !’ என்று சாவகாசமாக அறிவிக்கிறார் அவருடைய அப்பா. (இவரைப்போய் யாருய்யா இண்டர்வியூ எடுத்தது?) மேலும் பிக் பாஸ் அறிவிப்புகள்/யூகங்கள். ஜூலியும் வெளியேறிவிட்டார். ஓவியாவை திருப்பிக்கொண்டுவர முயற்சி? ’ஓவியாவைப்பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்!’ – நடிகர் சித்தார்த் (இவரு இப்ப எங்கேர்ந்து வந்தாரு?) பாரதியின் புதுமைப்பெண் போன்றவர் ஓவியா-ஆதலினால் காதல் செய்தார்! –இயக்குனர் சீனு ராமசாமி. அட! அட! இந்த ஓவியா யாரயும் விட்டுவைக்கல போலருக்கே. க்ரிக்கெட்டில் ’பாரத் ஆர்மி’ மாதிரி, தமிழ்நாட்டில் இப்போது ’ஓவியா ஆர்மி’ ஒன்று உருவாகிவிட்டதாமே. ஓவியா இல்லாத பிக் பாஸ், ஜெயலலிதா இல்லாத அதிமுக, சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் என்றெல்லாம் ஏதேதோ எண்ணித் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி ஓவியா, ஓவியா என மீடியா அலை அலையாக மேலெழுப்ப, நான் திக்குமுக்காடி, மனதுக்குள் அவராகவே மாறி அவரது எமோஷன்களை, உளைச்சல்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றியது. சே! இந்த மீடியாக்கள் நம்மை கொன்றுப்போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வார்கள். இன்னொரு காஃபி கிடைத்தால் பரவாயில்லை. மனமெல்லாம் ஓவியா..மனைவியிடம் போய் காஃபியா? விண்ணப்பிப்பதில் அர்த்தமேதுமில்லை. இதற்குப் பதில் இன்னொரு ஆதார் கார்டிற்கு விண்ணப்பித்துப் பார்க்கலாம். இந்திய அரசு இளகிய அரசு; கொடுத்தாலும் கொடுத்துவிடும்.

மேற்கொண்டு செய்திகளைக் கண் மேய்ந்தது. ஜியோவோடு போட்டிபோடும் ஏர்டெல். ம்ஹும்! ரொம்ப முக்கியம். மோதி-அமித் ஷாவினால் காங்கிரஸுக்கே நெருக்கடி!- பின்ன என்ன செய்யணும்கிறீர் ஜெயராம் ரமேஷ். அரசியல்ல நெருக்கடிகூட இருக்கக்கூடாதா ? நல்லா இருக்குய்யா நீர் சொல்றது! மேல..மேலப் போனதில் தட்டுப்பட்டார் ஒருவர். விஜய்சேதுபதி. ’யாரு?’ என்று என் மனசைக் கேட்டுவைத்தேன். ’’அட நம்ம விஜய் சேதுபதி..சூப்பர் ஆக்டரு! விக்ரம் வேதாவுல கலக்கிருக்கார்ல..தெரியாது? மொதல்ல நீ தமிழ்ப் படங்கள கொஞ்சம் உருப்படியாப் பார்க்கப்பாரு..அப்பறமா சீனா-இந்தியா, வடகொரியா-அமெரிக்கா, சிரியா-ஈராக்னு உலக அமைதியப்பத்தில்லாம் கவலப்படலாம்!’’ – மனசு என்னை வன்மையாகக் கண்டித்தது. காலையிலேயே அர்ச்சனை? கேட்டுக்கொண்டேன்; மனசின் அடக்குமுறை ஆட்சியில்தானே இருக்கிறேன் நான்? இப்ப என்ன விஜய்ரகுபதி..சாரி, விஜய் சேதுபதியா…சரி, அவரப்பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்? சிந்தனையோடு மேலே கண்களை ஓட்டினேன். ’’புதிதாக பிஎம்டபிள்யூ வாங்கினார் விஜய் சேதுபதி. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்…’’ ஓ..! ’’அவர் வாங்கியிருக்கும் காரின் நிறம் வெள்ளை..அவரது மனதைப்போலவே!’’ மேலும் உருகி எனது செண்டர்-டேபிள் மீதெல்லாம் வழிந்தது தமிழ்மீடியா. எனவே, கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு வாழ்வெல்லாம் புலம்பிப் புண்ணாகிக் கதை ஓட்டுவோரே.. விடாதீர்கள்.
முன்னேறுவதற்குக் கடுமையாக முயலுங்கள். அப்படி ஒருவேளை முன்னேறியேவிட்டால், மறக்காமல் வாங்கிவிடுங்கள் ஒரு பிஎம்டபிள்யூ. ஞாபகம் இருக்கட்டும் கலர் வெள்ளை. உங்கள் வெள்ளந்தி மனசோடு மேட்ச் ஆகணும் இல்லையா?

**

குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

இதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்!’ என்கிறார்! அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன.

தமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான நடிப்பாற்றலுடையவர்களில் ஒருவர். சராசரிக் கலைஞர்களைப்போலல்லாமல் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்து இறங்குபவர். ஆரம்பத்திலிருந்தே இறைமறுப்புக் கொள்கையில் விசுவாசம் காட்டுபவர். தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் மனிதர். நெடுங்காலமாகவே, நல்ல எழுத்துக்கு மனம் கொடுப்பவராக இருக்கிறார். தமிழ் எழுத்துலகில் முன்பு சுஜாதா, தற்போது ஜெயமோகன் எனத் தொடர்ந்து அணுக்கமாயிருப்பவர் கமல் ஹாசன். கவிதை எழுதும் திறனும் வாய்த்திருக்கிறது. சினிமா என்கிற கலையைப்பற்றி கூரிய அறிவுள்ளவராக விமர்சகர்களாலும் அறியப்படுகிறார். தற்கால சினிமா, அதன் பல்வேறு துறைகள் சார்ந்த மாற்றம்பற்றி நுட்பமாக, தீவிரமாகப் பேசும் வல்லமை அவரிடம் காணப்படுகிறது. டிவி நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டி, அடுத்த தளத்திற்கு விவாதக்களத்தை எடுத்துச் செல்லக்கூடியவர். ஆனால் அதனை விரும்பாதவர்களாக, தாங்கமுடியாதவர்களாக, பேட்டியாளர்கள் கேள்வியை மாற்றியோ, அல்லது அசடுவழிந்தோ நேர்காணல்களை பேருக்கு நடத்திச்செல்வதை, தேசிய சேனல்களில் சிலவருடங்களாகக் கண்டு வருகிறேன். ஒன்று – கமல் ஹாசன் எடுத்துவைக்கும் கருத்துக்கள், அவரிடம் காணப்படும் துறைசார்ந்த அறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு பேட்டியாளர்களிடம் சரக்கில்லை. அல்லது – அவ்வளவு விஸ்தாரமாக நேர்காணல் செல்வதை அந்த சேனலே விரும்பவில்லை என இதற்கான காரணங்கள் இருக்கக்கூடும்.

தான் சார்ந்த துறைதாண்டியும், ஜனநாயகம், குடியரசு, மக்களுரிமை, தனிமனித உரிமை என அக்கறைகொள்ளும் மனிதராகத் தன் அடையாளத்தை அமைத்துக்கொண்டுள்ளவர் கமல் ஹாசன். ஆனால் இவைபற்றி பொதுவெளியில் முன்பெல்லாம் அதிகமாக, தீவிரமாக அவர் ப்ரஸ்தாபித்ததில்லை. கடந்த டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த அசுரவெள்ளத்தின்போது கொஞ்சம் வாய் திறந்து மக்களின் துன்பம்பற்றிப் பேசியும், நேர்காணல்கொடுத்துமிருந்தார். அப்போதும் அவர் சொன்னவை சரியாகப் புரிந்துகொள்ளப்படாமலும் அல்லது திரித்து சொல்லப்பட்டும் சிக்கல் ஏற்பட்டபோது, அதனை அவரே விளக்கித் தெளிவுபடுத்தவேண்டியதாயிற்று. தனது விமர்சனத்தைக் கவிதையாக சமூக தளங்களில் அவர் எழுதிவிட்டாலோ கதையே வேறு. ’ஐயோ, தலைவா! என்ன எழுதியிருக்கீங்க, புரியலையே!’ என அவரது ரசிகர் குழாமே அலறுகிறது! அவரோ, பிறரோ பிற்பாடு அதனை விளக்கிச்சொல்லவேண்டிய நிலை. ஒரு சமயத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், யாரோ எழுதிய கவிதை ஒன்று முகநூலில் உலாவர, கமல் ஹாசனின் கவிதை அது என முந்திரிக்கொட்டை மீடியாவில் முதலில் குறிப்பிடப்பட்டது. பிறகு கமலே ‘அதை நான் எழுதவில்லை’ என வேகமாக மறுக்கும்படியும் ஆனது. ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போதும் தமிழ் இளைஞர் எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் துணைபோகுபவராக அறியப்பட்டவர் கமல்.

மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்குத் திரும்பிய ஆளுமையான ஜெயலலிதாவின் அதிர்ச்சி மறைவுக்குப்பின், தமிழ்நாட்டில் ஒரு குழப்பமான, ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. விதம்விதமான அரசியல் பித்தலாட்டங்கள், குட்டைகுழப்பல்களுக்குப் பதமான நிலமாகப்போய்விட்டது தமிழ்மண். இதனைப் புரிந்துகொள்ள எவரும் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அரசியல் நிபுணராக ஆகவேண்டியதில்லை. முதன் முதலில் இந்த அவலநிலைபற்றிக் கவலைப்பட்டுக் கருத்துச்சொன்னவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஒரு மர்மமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று சொல்லி எண்ணற்ற தன் ரசிகர்களோடு, நடுநிலையாளர்கள், அரசியல் விமரிசகர்களையும்கூட கவனிக்குமாறு செய்தார் அவர். அப்போது சில அரசியல்வாதிகளால் ரஜினி மட்டம் தட்டப்பட்டார். பிறகு கொஞ்ச நாட்கள் சென்றபின் ‘சிஸ்டம் சரியில்லை’ என ரஜினி தடாலெனச் சொன்னபோது, எங்கே இந்தமுறை அரசியல் களத்தில் குதித்தேவிடுவாரோ எனப் பேச்சு தீவிரமாக அடிபட ஆரம்பித்தது. அத்தகைய வாய்ப்புபற்றிய மனத்தோற்றமும்கூட, சில அரசியல் குழுக்களுக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய குழப்பும் அரசியல் பற்றி, முன்னேற்றம் தடுக்கும் மலிந்துபோன ஊழல்பற்றி குரலுயர்த்திப் பேச ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன் ; மனம் திறந்து, சமூகத்தளங்களில் கருத்துக்களை முன்வைக்கிறார். ’’முந்திச்செல்வதல்ல, முன்னேற்றத்தின்பின் செல்வதுதான் பெருமை’’ என முழங்குகிறார். ஊழல் புகார்களைப் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மின்முகவரிக்கே நேரடியாக அனுப்புமாறும் கோரி பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார்! மக்கள்நலன்மீது உண்மையான அக்கறையுடன் பேசும், கேள்விகேட்கும் நல்மனங்கள் – அவர்கள் யாராயினும் – ஊக்குவிக்கப்படவேண்டும். பொதுஆதரவு அவர்களுக்குத் தரப்படவேண்டும். இந்த ரீதியில்தான், இந்திய ஜனநாயகத்தில், மாநில முன்னேற்றத்தில், அக்கறைகொண்ட கமல் ஹாசன் போன்ற கட்சிசாரா பிரபலங்கள், பொதுவெளியில் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டும். ‘நேற்றுத்தானே கமல் இந்தக் கேள்வியைக் கேட்டார், முந்தாநாள் ஏன் கேட்கவில்லை?’ என்பது போன்ற குருட்டுவாதங்கள் இங்கே அர்த்தமற்றவை; மக்கள்மேடையின் முன் அவை எடுபடாது.

ஊழலுக்கெதிராக கமல் ஹாசன் எழுப்பும் நேரிடையான கருத்துக்கள், சமூகவலைத்தள விமர்சனங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு, குறிப்பாக அவருடைய பரவலான ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்களுக்கோ இவை தீராத குடைச்சல்களாக மாறியிருக்கின்றன. ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திய வாயோடு, அங்கிங்குமாக உலவிய அவரது கட்சிப் பிரமுகர்களெல்லாம், கமல் ஹாசனை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, இப்போது இஷ்டம்போல் எதிர்வசனம் பேசிவருகின்றனர். ’தமிழ்நாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் கமல் ஹாசன்? அரசியலில் நேரடியாகக் குதிக்க தைரியம் உண்டா?’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கமல் ஹாசனின்மீது பாய்ச்சல். கேலி, கிண்டல். கமல் ஹாசனும் விடாமல் ‘இந்த ஆட்சி தானாகவே கலையும்..’ என்று விவாதத்தை முடுக்கிவிடுகிறார். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த மீடியாவின் வாயில், வேகவேகமாக அவலை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருதரப்பினரும்! கேட்கவேண்டுமா இனி?

**