உலக ஜுடோ சேம்பியனான இந்திய சிறுமி!

உலக ஜுடோ கேடட் சேம்பியன்ஷிப் போட்டிகள் சில நாட்கள் முன்பு போஸ்னியா-ஹெர்ஸகோவினா (Bosnia Herzegovina) நாட்டுத் தலைநகரான ஸரயேவோவில் (Sarajevo) நடைபெற்றன. இந்தியப் பெண் அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் 16-வயது சிறுமி லிந்த்தோய் சனம்பம் (Linthoi Chanambam) பிரேஸிலின் கடும் சவாலை எதிர்கொண்டு உலக சேம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

2018-ல் தேசிய சப்-ஜூனியர் போட்டிகளில் இவர் சேம்பியன் ஆனபோது, சரி, இந்தியாவில் எதிர்கால ஜூடோ ஸ்டாராக வர வாய்ப்பு இந்த சிறுமிக்கு இருக்கிறது என்கிற அளவில் கணித்திருந்தார்கள், ஜூடோ வல்லுநர்கள். கடந்த ஆண்டு நவம்பரில் தன் 15-ஆவது வயதில், தேசிய சேம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார்.  ஜூலையில் தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த போட்டிகளில் ஆசிய ஜூனியர் ஜூடோ சேம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி அதிர்வுகளை ஏற்படுத்திய லிந்த்தோய், உலக சேம்பியன்ஷிப் அரங்கிலும் போட்டுத்தாக்குவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். பிரேஸிலின் அந்த அனுபவ வீராங்கனை (15 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டவர்) பியாங்கா ரெயிஸ் (Bianca Reis) தன் இந்திய எதிரியை சரியாகப் பார்த்திருக்கக்கூடமாட்டார். பின்னே? சர்வதேச ஜூடோ அனுபவம் கூடிய எதிர்கால சேம்பியனை, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் யாரோ ஒரு குட்டிப்பெண் எதிர்ப்பாள் என்பதிருக்கட்டும், புரட்டிச் சாய்ப்பாள் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்?

எப்படி ஆரம்பித்தது இந்த சாதனைப்பயணம்? லிந்த்தோய் மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கருகிலுள்ள  மயாங் எனும் சிற்றூரில் ஒரு சாதாரண விவசாயியின் மகள். அவரது 3 பெண்களில் நடுவில் வந்தவர். சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோதே தன்னை ஒரு சிறுவனாகவே உணர்ந்ததாகவும், பசங்களுடன் சேர்ந்து ஓட்டம், கால்பந்து போன்றவற்றில் கலந்துகொள்வதே வழக்கம் என்கிறார்.  இதைக் கவனித்த விளையாட்டு ரசிகரான அப்பா சந்தோஷப்பட்டதோடு, அருகிலுள்ள ஜூடோ பள்ளியில் சேர்த்துவிட்டார் தன் பெண்ணை. அங்கே சிறுமியின் எனர்ஜி, வேகம், உடல்மொழி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஓரிரு வருடங்களில், 11 வயது சிறுமியாய் லிந்த்தோய் இருக்கையில், அங்கு வருகிறார் ஒரு நிபுணர்.  IIS (Inspire Institute of Sports, Bangalore)-ன் இளம்பிஞ்சுகள் உலகத்தில் எதிர்கால வீரர்களைக் கண்டறியும் ஜூடோ கோச்/நிபுணர் மமுகா பஸிலாஷ்விலி.(Mamuka Basilashvili-ஜார்ஜியா நாட்டவர்) கண்டதும் உடனே புரிந்துகொண்டார் சிறுமி லேசுப்பட்டவளல்ல என்று! கஷ்டப்பட்டு குடும்ப அனுமதி பெற்று, சிறுமியை பெங்களூருக்கு அழைத்துவந்து, ஸ்போர்ட்ஸ் இன்ஸ்ட்டிடியூட்டில் 2017-ல் ஜூடோ பயிற்சிக்காக சேர்த்துவிட்டார்.

படம்: இந்தியாவின் ஜூடோ இளவரசி !

கேடட் (U-18) சேம்பியன்ஷிப் தங்கப்பதக்கத்தை வென்ற லிந்த்தோய் சொல்கிறார்: ’ஏதாவதொரு பதக்கத்தை இங்கிருந்து கொண்டு செல்லவேண்டும் எனத்தான் இங்கே வந்திருந்தேன். அதற்காக மேடையில் சாகவும் தயாராக இருந்தேன்!’ தங்கத்தை வென்றவுடன் ஒரு குட்டிச் சிங்க கர்ஜனை கொடுத்த சிறுமி அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். தன் கோச்சைக் காணவில்லையே என்ற அதிர்ச்சி, ஏமாற்றம். பிறகுதான் என்ன நடந்தது எனத் தெரிந்திருக்கிறது. ஃபைனல் போட்டியின் போது ரெஃப்ரீயின் தவறினால் சில பாய்ண்டுகளை இழந்திருக்கிறார் லிந்த்தோய். அதனால் அரங்கில் கோபப்பட்டுப் பேசியிருக்கிறார் கோச் மமுகா. அரங்கத்துக்காரர்கள்  அவரை எச்சரித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு லாவகத்தில் ப்ரேஸில் வீராங்கனையை நொடியில் கீழே சாய்த்திருந்த லிந்த்தோய்க்கு ‘இப்போன்’ (ippon -ஜப்பானிய பாணியில் அதிக பாய்ண்ட்டுகள்) கொடுத்திருக்கவேண்டும்.  ஆனால் வஸா-அரி (Wasa-ari) எனும் இரண்டாவது க்ரேடிங் பாய்ண்ட்தான் அவருக்கு ரெஃப்ரீயால் தரப்பட்டது. இன்னும் ஒரு நிமிஷம் தானே இருக்கிறது, என் சிஷ்யையை ஜெயிக்கவிடாமல் செய்கிறார்கள் என ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சத்தம்போட்ட, இந்திய கோச்சை அங்கிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அரங்கத்துக்குள் அவர் இனி நுழையக்கூடாது என்கிற தடையையும் விதித்துவிட்டார்கள். இந்தியாவாவது, ஜூடோவில் ஜெயிப்பதாவது என்கிற அலட்சியம், அக்ரமம்தான், வேறென்ன.

ஆனால் தங்கத்தை வென்றுவிட்ட லிந்த்தோய், அவரது கோச் மமுகா இருவரையும் சர்வதேச ஜூடோ சங்கம் மாலையில் நேர்காணலுக்கு அழைத்தது. கோச்சிற்குத் தடை விதித்த ஆட்ட, அரங்க ஏற்பாட்டாளர்களுக்கு  ரொம்ப அவமானமா போயிருச்சாம்.. இது எப்படியிருக்கு!

2024-ல் நிகழவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஏதாவது ஒரு மெடலைத் தூக்கிவிடவேண்டும் என்பதுதான் என் ஆசை! என்கிறார் மணிப்பூர் மாமனுஷி லிந்த்தோய் !

**

டோக்யோ ஒலிம்பிக்ஸ்: நீரஜ் சோப்ரா – தங்கமே தங்கம் !

ஜெர்மனியின் ஜோஹனஸ் வெட்டர் (Johannes Vetter) எனும், உலக ’ஜாவலின்’ (Javelin) ஆட்டத்தின் சூராதி சூரர், டோக்யோ ஒலிம்பிக்ஸின் ஆரம்பத்தில் இந்தியாவின் இளம்புயல் நீரஜ் சோப்ராவைப்பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்: ”சோப்ரா திறமையானவர்தான். ஆனால் என்கிட்டே நெருங்கமுடியாது. நான் 90 மீட்டர் எறிபவன்!” இந்தப் பேச்சை தடகள உலகில் யாரும் அலட்சியம் செய்யவில்லை. ஏனெனில் வெட்டர் இந்த வருடம் (வெவ்வேறு போட்டிகளில்) ஈட்டி எறிதலில் 90 மீட்டர் எனும் சாதனையை 7 முறை கடந்தவர். ஒலிம்பிக் ஜாவலின் தங்கம் ஜெர்மனிக்குத்தான் என்பது ஏற்கனவே ஒலிம்பிக் தடகள உலகில் தீர்மானமாகிவிட்டிருந்தது! புதிதாகச் சுற்றித் திரியும் இந்திய இளைஞன் நீரஜ் சோப்ராவுக்கும் ஏதாவது கிடைக்கலாம் என்பதுபோன்ற நிலை.

கேள்விக்குறி, ஆச்சரியக்குறியோடு உலகம் நீரஜ் சோப்ராவைப் பார்த்துக்கொண்டிருந்தது நேற்று (ஆகஸ்ட் 7, 21) டோக்யோவின் ஒலிம்பிக் மைதானத்தில்.  மற்றவர்களெல்லாம் மூச்சு இழுத்துக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஓடிவந்து ஈட்டி எறிந்துகொண்டிருந்தனர். 79 மீட்டரிலிருந்து 84 வரைதான் அவர்களால் அதுவரை முடிந்தது. அப்போதுதான் இறங்கினார் களத்தில் நீரஜ். ஜாக்கெட்டை கழட்டி வீசினார். ஈட்டியைக் கையில் எடுத்தார். பார்த்தார் ஒரு கணம். தடதடவென ஓடிவந்து வீசினார். போய் விழுந்தது 87 மீட்டர்தாண்டி. மைதானத்தில் பற்றியது தீ!

Image
Gold getting ready…

87+ மீட்டர் தூரமா? ஆ! யார் இதை வீழ்த்துவது.. இதென்ன கேள்வி? வெட்டர்தான். அவர் போட்றுவாரு 90 என்று முணுமுணுத்தது டோக்யாவில் கால்நீட்டி, தொடைதட்டி உட்கார்ந்திருந்த ஒலிம்பிக் பெரிசுகள் கூட்டம். வெட்டர் வந்தார். அலட்சியமாக ஓடி எறிந்தார் ஈட்டியை. என்ன! 79 மீட்டர்தானே வந்திருக்கு.. முதல் ரவுண்டிலேயே இன்னும் இருக்கிறது 2 சான்ஸ்.. வந்தார். போட்டார்.. போட்டார். ம்ஹூம்.. 84- மீட்டர் தூரத்தையே தாண்டமுடியவில்லை.

ஆளுக்கு 3 முயற்சிகள் செய்த முதல் ரவுண்டிலிருந்து வடிகட்டியபின், தங்கத்துக்கான ஃபைனலின் கடைசி ரவுண்டில், உலகின் 8 டாப் வீரர்கள். ஆனால்… லிஸ்ட்டில் வெட்டரின் பெயர் இல்லை! குட்டி நாடான மால்டோவாவும், ஃபின்லாந்தும் ஜெர்மனியின் வெட்டரை விட அதிகத் தூரம் வீசியதால் உள்ளே! ஒலிம்பிக்கில் தன் முதல் பதக்கத்துக்காக ஏங்கிய பக்கத்துவீட்டு பாகிஸ்தானின் தடகள வீரர் நதீமும் அந்த லிஸ்ட்டில். நிச்சயத் தங்கத்தை எதிர்பார்த்திருந்த ஜெர்மனி அயர்ந்தது. தனது இன்னொரு வீரர் முதல் ரவுண்டில் 85+ வீசியவர், இறுதி ரவுண்டில் இருப்பது கொஞ்சம் ஆசுவாசம் தந்தது ஜெர்மனிக்கு. ஆனால் செக் குடியரசின் (Czech Republic) இரண்டுவீரர்கள்வேறு, 85+ -ல் மிரட்டுகிறார்களே. இந்த இந்தியன் வேற புகுந்துட்டான்.. சே..

முதல் ரவுண்டும் (வீரருக்கு தலா 3 வாய்ப்புகள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறுதி ரவுண்டிலும் மேலும் 3 வாய்ப்புகள், டாப்-8 பேருக்குக் கிடைத்தன. ஃபைனலின் மொத்தம் 6 முயற்சிகளில் எது ஒரு வீரரின் ஆகச் சிறந்ததோ அதுவே பதக்கத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும். வீரர்கள் முயற்சித்தார்கள். முன்பைவிடக் குறைவாகச் சிலரும், கொஞ்சம் கூட எனச் சிலரும் எறிந்தார்கள். சில முயற்சிகள் ஃபௌலில் முடிந்தன. இறுதி ரவுண்டின் இரண்டு முயற்சிகளில், நீரஜ் சோப்ராவும் ஃபௌல் ஆனார். ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இறுதி வாய்ப்பு ஒன்று அவருக்கு பாக்கி இருந்தது. ஆனால் அதை முயற்சிக்கவேண்டிய அவசியமே இல்லாமல் மற்றவர்கள், தங்களது மொத்தம் தலா ஆறு முயற்சிகளில் 86+ மீட்டருக்குக் கீழேயே சுருண்டுவிட்டார்கள். முதல் 3 வாய்ப்புகளில், 87.03, 87.58, 76.79 என வீசியிருந்தார் சோப்ரா.  87.58 மீட்டர் எறிந்து முதல் ரவுண்டிலேயே போட்டுச்சாத்திய தூரம் – இறுதியில் இந்தியத் தங்கத்துக்குப் போதுமானதாக இருந்தது!

செக் குடியரசின் இருவீரர்கள் – யாகுப் வத்லேஷ் (Jakub Vadlejch), விதேஸ்லாவ் வெஸிலி (Vitezslav Vesely) வெள்ளி, வெங்கலப்பதங்களை முறையே வென்றார்கள்.

2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் 10-மீ.துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்காக தங்கம் வென்றார். அதற்கப்புறம், தனிவீரர் ஒருவரின் தங்கமாக (individual gold medal) இதுவே இந்தியாவுக்கு இரண்டாவதாகும். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் முதல் தங்கம் இந்தியாவுக்கு நீரஜ் சோப்ராவினால் கிடைத்துள்ளது.

தன் நாட்டுக்காக கர்வமிகு ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய நீரஜ் சோப்ரா, தான் வென்ற பதக்கத்தை சமீபத்தில் மறைந்த இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறியது எல்லோரையும் நெகிழவைத்தது. 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மில்கா சிங்,  மயிரிழையில் 4-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, வெங்கலப் பதக்கத்தை இழந்தார். ஆயினும் இந்தியத் தடகள வரலாற்றில் மறக்கமுடியாத ஆளுமையாகக் கருதப்பட்டு போற்றப்படுபவர் பத்மஸ்ரீ மில்கா சிங். (மில்கா சிங்கின் அதுபோன்ற விதியே இந்திய வீராங்கனை PT உஷாவுக்காகவும் 1984 லாஸேஞ்சலிஸ் ஒலிம்பிக்ஸிலும் காத்திருந்தது விளையாட்டு ரசிகர்களுக்கு சோர்வு மிகத்தந்த விஷயம்.)

ஹரியானாவில் ஒரு விவசாயியின் மகனான நீரஜ் சோப்ரா, 23 வயதிற்குள், கடந்த சில ஆண்டுகளில் சர்வதேசப்போட்டிகளில் (South Asian Games, Commonwealth Games, Asian Games, World Junior Athletic Championships) பங்கெடுத்து தங்கம் வென்ற சூரர். இந்திய ராணுவத்தில் ஒரு இளநிலை அதிகாரி. பிரதமர், ஜனாதிபதி  எனப் பலரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன இந்தியாவின் புது ஹீரோவுக்கு. இந்திய நாட்டின் மற்றும் இந்திய ராணுவத்தின் வீரதீரக்கொடியை உலக உச்சத்தில் பறக்கவிட்டதற்காக நீரஜ் சோப்ராவை மனமாரப் பாராட்டியிருக்கிறார் இந்திய முப்படைக் கூட்டமைப்பின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் (Gen. Bipin Rawat). ஜெர்மன் வீரர் வெட்டரும், கூடவே இந்திய விளையாட்டுப்பிரபலங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் சோப்ராவுக்கான புகழ் அர்ச்சனையில்..

**

BCCI – புதிய ஒப்பந்த வீரர்கள்

 

வருடம் 2020-சீசன்களில் வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) இன்று (16/01/2020) அறிவித்தது. Grade A+, Grade A, Grade B, Grade C என வீரர்களை அவர்களின் திறன், முந்தைய சாதனை, தற்போது காட்டிவரும் ‘ஃபார்ம்’ போன்றவற்றின் அடிப்படையில், வகைமைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் :

Grade A+ வீரர்கள் : விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா -மூன்றே மூன்று!

Grade A : பேட்ஸ்மன்கள்: (ச்)செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த்.  

பௌலர்கள்: ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா

Grade B : பேட்ஸ்மன்கள்: வ்ரித்திமான் சாஹா, ஹர்தீக் பாண்ட்யா, மயங்க் அகர்வால். பௌலர்கள் : உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல்.

Grade C : பேட்ஸ்மன்கள் : ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே. கேதார் ஜாதவ். பௌலர்கள்: வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர்

இவர்களில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதன் முறையாக இந்த வருடம் BCCI Central Contract கிடைத்துள்ளது. Grade A-ல் காணப்படும் ரிஷப் பந்த்,  Grade B -க்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும்.  மாறாக, Grade C  -ல் இருக்கும் ஹனுமா விஹாரிக்கு  Grade B தரப்பட்டிருக்கலாம். 

மேற்கண்ட வருடாந்திர காண்ட்ராக்ட்களின்படி,  யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் BCCI ? இதோ:

’A+’ : ஒவ்வொருவருக்கும் ரூ. 7 கோடி

‘A’  :  தலா ரூ. 5 கோடி

‘B’  :  தலா ரூ. 3 கோடி  

‘C’  :  தலா ரூ. 1 கோடி

கடந்த வருடம்வரை Grade ‘A’ -ல் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்த வருட Central Contract List-லிருந்து தூக்கிவிட்டது BCCI.  உலகக்கோப்பைக்கு அப்புறமாக அவர் எந்த மேட்ச்சிலும் விளையாடவில்லை. விதம்விதமான விளம்பரப்படங்களுக்கான ஷூட்டிங்குகளின் கால அட்டவணைப்படி அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார் மனுஷன்! இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கவிருக்கும் 2020 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மஞ்சளாய்  இறங்கி ஆடுவார். கவலை வேண்டாம் ’தல’ ரசிகர்களே!

ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?


ஷா ஒரு Cricket prodigy-யா? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை இந்த இளைஞனைப்பற்றி கேள்விப்பட்டு வருவதெல்லாமே – 14 வயது பையனாக மும்பையில் ஸ்கூல் கிரிக்கெட்டில் உலக சாதனை, இந்திய தேசிய சேம்பியன்ஷிப்களான ரஞ்சி மற்றும் துலீப் டிராஃபி தொடர்களில் முதல் மேட்ச்சிலேயே சதங்கள், U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது, இந்தியா-ஏ அணிக்காக வெளிநாடுகளில் காட்டிய திறன்மிகு ஆட்டம் போன்றவை- அவர் இந்தியாவின் ஒரு வருங்கால நட்சத்திரம் என்றே வெளிச்சக்கீற்றுகளால் கோடிட்டு வந்திருக்கிறது. 04-10-18 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளே அவர் ஆடிய ஆட்டமும், அந்தவழியில்தான் சென்றுள்ளது – இன்னும் சர்வதேச அரங்கில் பையன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும்.

முதலில் இந்தியா பேட் செய்ததால் அன்று காலையிலேயே நிகழ்ந்தது ப்ரித்வி ஷாவின் அரங்கேற்றம். வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) வீசிய தொடரின் முதல்பந்தை எதிர்கொண்டு ஆடத் துவங்கிய, சிறுவனாகத் தோன்றும் 18 வயதுக்காரரின் மீது அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. ஒரு பள்ளிப்பையனின் துறுதுறுப்பும், பதின்ம வயதிற்கே உரிய உற்சாகமுமே அவரிடம் மிளிர்ந்தது, பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலிடம் விழுந்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஷாவிடம் ஏற்படுத்தவில்லை. ரன்கள் துள்ளிக்கொண்டு புறப்பட்டன அவருடைய பேட்டிலிருந்து. சிங்கிள், இரண்டு-ரன்கள் என வேக ஓட்டம் (அந்தப்பக்கம் ரன் –அவுட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இருந்தது நமக்குத்தான் பயத்தைக் கொடுத்தது!). இடையிடையே ஸ்கொயர் கட், லேட்-கட், புல், ஹூக் ஷாட் என வெரெய்ட்டி காண்பித்தார் இந்த இளம் புயல். லன்ச் இடைவேளையின் போது 70+ -ல் இருந்தவர், திரும்பி வந்து 99 பந்துகளில் தன் முதல் சதத்தை விளாசி முத்திரை பதித்தார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஒரு அதிரடி சதம் என்பது ஒரு பதின்மவயதுக்காரரிடமிருந்து வருகையில், அதைப் பார்ப்பதின் சுகமே தனி.

கூடவே, வெஸ்ட் இண்டீஸின் பௌலிங் தாக்குதல் அவ்வளவு தரமாக இல்லை என்பதையும் கவனித்தே ஆகவேண்டும். அவர்களின் இரண்டு டாப் வேகப்பந்துவீச்சாளர்களான கெமார் ரோச் (Kemar Roach) மற்றும் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) –ஆகியோர் இந்த முதல் போட்டியில் வெவ்வேறு காரணங்களினால் ஆட இயலவில்லை. ஆதலால் பௌலிங்கில் ஆக்ரோஷம், தாக்கம் குறைவுதான். கூடவே ராஜ்கோட் பிட்ச்சும் பேட்டிங்கிற்கு வெகுவாகத் துணைபோகிறது. ஆனால், இதெல்லாம் தன் முதல் டெஸ்ட்டை ஆடுபவரின் தப்பில்லையே! டெஸ்ட் தொடர் என்கிற பெயரில் இந்தியா புலம்பிவிட்டு வந்த இங்கிலாந்து தொடரிலேயே, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தார்தான். ஆனால் நம்முடைய சூப்பர்கோச் ரவிசாஸ்திரியும், கேப்டனும் வாய்ப்பளித்தால்தானே விளையாடமுடியும்? ’நான் அப்போதே தயாராகத்தான் இருந்தேன். இப்போதுதான் வந்தது வாய்ப்பு’ என்கிறார் அவர்.

இப்போதிருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி, இந்தியாவின் டெஸ்ட் தரத்திற்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. ஆயினும் உன்னிப்பாகக் கவனித்தோருக்கு, ப்ரித்வி ஷாவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் அவர் எத்தகைய பேட்ஸ்மன் என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருந்தது தெரியவரும். இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும், அலட்டிக்கொள்ளாத தன்மையும், அதே சமயத்தில் சரியான பந்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் லாவகமும் பளிச்சிடுகின்றன. வெஸ்ட் இண்டீஸின் தரமான வேகப்பந்துவீச்சாளரான ஷனன் கேப்ரியல், ராஜ்கோட்டின் வெப்பத்திலும் அவ்வப்போது தன் வேகத்தினாலும் (140-143 கி.மீ), எகிறும் பௌன்ஸர்களாலும் அவரை சீண்டிப் பார்த்தார். ஆனால் ஷா அவரையும், ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவையும் ஒரு அதிகாரத்துடன் விளையாடியவிதம், ஏதோ இதற்குமுன்னர் ஏகப்பட்ட போட்டிகளின் அனுபவப் பின்னணியில் விளையாடியது போன்றிருந்தது.

ஷாவின் இந்த இன்னிங்ஸைக் கூர்ந்து கவனித்திருப்பார்போலும் வீரேந்திர சேஹ்வாக். தன் ட்விட்டர் பக்கத்தில், அவருக்கே உரிய பாணியில் இப்படி ஹிந்தியில் எழுதியிருக்கிறார்: லட்கே மே(ன்) தம் ஹை(ன்)! (பையனிடம் தெரியுது ஒரு வீரம் ! – என இதைத் தமிழ்ப்படுத்தலாம்). எகிறும் வேகப்பந்துகளை பாய்ண்ட் மற்றும் தேர்ட்-மேன் திசைகளில் அனாயாசமாகத் தூக்கி விளாசிய விதத்தில் சேஹ்வாக் தெரிந்ததாக சில வர்ணனையாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கிறார்: ’சேஹ்வாக் ஒரு ஜீனியஸ். அவரோடு இந்தப் பையனை ஒப்பிட வேண்டாம். ஆனால் பதற்றமின்றி எளிதாக விளையாடிய விதம், சிலவித ஷாட்களை சர்வசாதாரணமாக ஆடிய முறை, லாவகம் இவற்றைப் பார்க்கையில் இவருள்ளிருக்கும் தரம் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் ஷா முதலில் ஆடவேண்டும். அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஷா நன்றாக விளையாடுவார் என்றே தோன்றுகிறது’ என்றிருக்கிறார்.

2008-லேயே இவரது ஜூனியர் லெவல் ஆட்டத்தைப் பார்த்த டெண்டுல்கர், ’இவன் ஒரு நாள் இந்தியாவுக்காக ஆடுவான்!’ என்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கிரிக்கெட்காலத்தோடு ப்ரித்வி ஷா-வின் கிரிக்கெட் ஆரம்பங்களும் ஏனோ கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்பது கொஞ்சம் வியப்பைத் தருகிறது! இருப்பினும், இப்போதே ஒரேயடியாக ஆஹா..ஓஹோ என நமது மீடியாவோடு சேர்ந்து புகழ்ந்து தள்ளாமல், அமைதியாக இவரைக் கவனிப்பதே உகந்தது. வாய்ப்புகள் இவர்முன் வரும்போது, வெவ்வேறு நாடுகளில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் பிட்ச்சுகளில் ஆவேசமான வேகப்பந்துவீச்சுக்கெதிராக எப்படித் தன்னை நிறுவப்போகிறார் என்பதைக் காலம் நமக்குக் காட்டும். எனினும், இப்போதைக்குச் சொல்லிவைப்போம்: ‘Very well done, தம்பி!’
Picture courtesy: Internet
*

Asia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்!


(Picture courtesy: Internet)

கடைசி ஓவர் த்ரில்லர் துபாயில் நேற்று (28-9-18). இந்தியா-பங்களாதேஷுக்கிடையே நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் ஃபைனல். 223 ரன் அடிப்பதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றால், ஆம் என்பதைத் தவிர வேறு பதிலிருக்க வாய்ப்பில்லை. ஒரு-நாள் கிரிக்கெட். எந்த வீரருக்குள் எந்த பூதம் எப்போது இறங்கும், என்ன நடக்கும்? யாருக்குத் தெரியும்? எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டி, கழித்து நடத்திவிடமுடியாது.

இதுவரை பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரராக இந்த ஆசியக்கோப்பையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. 33 பந்துகளில் அரைசதம் கடந்த பங்களாதேஷின் லிட்டன் தாஸ் (Liton Das) தனது கேரியரின் அருமையான சதத்தை ஆசியக்கோப்பை ஃபைனலுக்கென ரிசர்வு செய்திருந்தார்போலும். ஆரம்பத்திலிருந்தே விளாசல். பொதுவாக, பும்ராவை யாரும் வெளியே ஏறிவந்து தாக்கி, தப்பித்துவிடமுடியாது. ஆனால் நேற்று அந்த பூதம் தாஸுக்குள் நுழைந்துவிட்டிருந்தது. தாஸின் நாள். அதையும் அவர் செய்தார். ஸ்பின்னர்களை சாதாரணமாக ஸ்வீப் செய்தும் பௌண்டரியைக் காட்டியது இந்தியக் கேப்டனின் நெற்றியில் கவலைக் கோடுகளைப் பரப்பியது. இந்தியாவுக்கெதிராக ஆஃப்கானிஸ்தானின் ஷாஸாத் ஆடிய அட்டகாச இன்னிங்ஸின் வீடியோ பார்த்துவிட்டு வந்திருக்கிறாரோ? பௌண்டரிகள் வெடித்துக்கிளம்பின. தாஸ் விளையாடுகையில், முதன் முறையாக ஸ்கோர் 300 வரை நெருங்கும்போலிருக்கிறதே எனத் தோன்றியது. பங்களாதேஷின் துவக்க பார்ட்னர்ஷிப் 120 ரன். யாரும் எதிர்பாத்திருக்க வாய்ப்பில்லை.

அதிவேக 121 ரன்னெடுத்து லிட்டன் தாஸ் வெளியேறியபின், அதற்காகவே காத்திருந்ததுபோல் தள்ளாடியது, தடுக்கி விழுந்தது பங்களாதேஷ். 120 for no loss –லிருந்து 151-க்கு 5. இந்திய ஸ்பின் தாக்குதலை எதிர்த்து ஆடமுடியாமல் மிடில்-ஆர்டரின் தப்பாட்டம். கேதார் ஜாதவின் அதிமந்தமான சுழல் மெஹ்தி ஹாசனையும், முஷ்ஃபிகுர் ரஹீமையும் விரைவில் வீட்டுக்கு அனுப்ப, சௌமியா சர்க்காரின் 33-ஐத் தவிர, மற்றவர்கள் தப்பி ஓட்டம்! 250-270 எனச் சென்றிருக்கவேண்டிய பங்களாதேஷ், பும்ராவின் death-overs நெருக்கலில் மேலும் தடுமாறி 222 எனச் சரணடைந்தது.

223 தானா இலக்கு? கப் வந்துவிட்டது கையில் என நினைத்து இந்தியா இறங்கியிருந்தால் அது மகா தப்பு! தாஸுக்கு பதில் சொல்லும் வகையில், 3 சிக்ஸர்கள், பௌண்டரிகள் என விறுவிறுவென ரோஹித் ஷர்மா ஆரம்பித்தாலும், மறுமுனையில் தவண் 15 ரன்னிலேயே கழன்றுகொண்டார். ராயுடுவையும் எளிதில் தூக்கிவிட்டது பங்களாதேஷ். தினேஷ் கார்த்திக்கோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித், ருபெல் ஹுசைனை புல் செய்கிறேன் என்று மிட்-விக்கெட்டில் கேட்ச் கொடுத்து 48-ரன்னில்(வெளியேறுகையில் பங்களாதேஷிற்கு கோப்பை தெரிய ஆரம்பித்திருந்தது. நிலைமையை சமாளித்து அணியை கரைசேர்ப்பதில் முனைந்த கார்த்திக்-தோனி ஜோடி, எப்பவுமே சிங்கிள், எப்பவாவது ஒரு பௌண்டரி என ஆரம்பத்தில் போக்குகாட்டி ஸ்கோரை மெல்ல நீட்டியது. பார்ட்னர்ஷிப் உருவாகும் நேரத்தில் 37 ரன்னில் (4 பௌண்டரி, 1 சிக்ஸ்) கார்த்திக், கேப்டன் மொர்தாஸாவிடம் எல்பிடபிள்யூ ஆகி விழ, தோனியோடு சேர்ந்தார் கேதார் ஜாதவ். வேகம் காட்ட முயன்ற ஜாதவை காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு திணறவைத்தது. நின்று அடிக்கவோ, ஓடி ரன்னெடுக்கவோ அவரால் முடியவில்லை. 19 ரன் எடுத்திருக்கையில் காயம் காரணமாக வெளியேறியது பிரச்சினையைத் தீவிரமாக்கியது. ரவீந்திர ஜடேஜா இறங்கித் தட்ட ஆரம்பித்தார். இதற்கிடையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த தோனியை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 36 ரன்னில் (3 பௌண்டரி) சாய்க்கையில், இந்திய ஸ்கோர் 160-க்கு 5 விக்கெட்டுகள். நிலைமை மோசம்.

ஜடேஜாவும் புவனேஷ்வரும் இணைந்து கவனமாக ரன் ரன்னாகச் சேர்க்க, இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது. துல்லியமாகப் பந்துவீசிக்கொண்டிருந்தனர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானும், ருபெல் ஹுசைனும். சிங்கிளைத் தவிர வேறு ஏதும் யோசிக்கமுடியாத கட்டம். திடீரென ருபெல் ஹுசைனை ஒரு அடி வெளிவந்து புவனேஷ்வர் குமார் தூக்க, சிக்ஸர். அடுத்த முனையில் ஜடேஜாவே ஆச்சரியப்பட்டிருப்பார்.. அட, நம்ப Bhuvi-யா இது! இந்திய ரசிகர்களுக்கு மீண்டது உற்சாகம். சிரிப்புகள் எழுப்பிய சலசலப்பு. ஆனால் அதெல்லாம் நீடிக்குமா?

47- ஆவது, 48-ஆவது ஓவர்களில் ஜடேஜாவும், புவனேஷ்வரும் அடுத்தடுத்து காணாமல்போக, ஸ்கோர் 214-க்கு 7 என்றது. இந்தியர்களின் முகம் இருண்டது. உறைந்தது. 9 ரன்கள் எடுக்கவேண்டும் வெற்றிக்கு. 11 பந்துகளில். ஆனால் ரன்னே வராமல் dot balls வந்துவிழும் சூழலில் யாரெடுப்பது இதை? குல்தீப் யாதவா? 3 விக்கெட் எடுத்தார், சரி. ரன்னுமா? புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா? ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன்? பும்ராவா? ரசிகர்களே குழம்பி முழிக்கையில், காயம்பட்டிருந்த கேதார் ஜாதவை ’கால் வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கப்பா.. போய் ஏதாவது செய்!’ என்று ரோஹித் அனுப்பிவைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு எபிக் ஃபைனலின் 6 ரன், 6 பந்து என மிரட்டிய கடைசி ஓவர். இந்தியாவுக்கு கோப்பையா இல்லையா என்பது இப்போது இருவரின் கையில். ஜாதவ். யாதவ். அவ்வ்..

அங்கே தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது யார்? பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை? ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார்? நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா! ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு!’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ! ஹே, பகவான்! ஐந்தாவது பந்து – லெக்சைடில் அடிக்க குல்தீப் முயல, காலில் பட்டு விக்கெட்கீப்பரை விட்டு விலகி ஓட, ஓடிவிட்டார்கள் ஒரு ரன்! ஸ்கோர்ஸ் சமம். இனி தோக்கமாட்டோம்யா!

மேட்ச்சின் கடைசிக்கணம். ஒரு பந்து. ஒரு ரன். கோப்பை இந்தியாவுக்கா? இல்லையா? ஹை-வோல்ட்டேஜ் சஸ்பென்ஸ். கிரிக்கெட்டின் தீரா சாகஸம். ஏகப்பட்ட பேருக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு – எல்லாத்துடிப்பும் ஒரேயடியாக எகிற, திறந்த வாய் திறந்தபடியே இருக்க, போட்டார் மொகமதுல்லா பந்தை. கேதார் ஜாதவ் ஒரு மின்னல்கணத்தில் கால்பக்கமாக அதைத் தட்டிவிட முயற்சிக்க, பந்து அவரது பேடில்(pad) பட்டு டபாய்த்து, விக்கெட்கீப்பருக்கும் பே..பே..காட்டி பின்பக்கம் பாய, ஜாதவும், யாதவும் ஓடியேவிட்டார்கள் – எக்ஸ்ட்ரா ரன். அந்த மேஜிக்கல் ரன்! இந்தியாவுக்கே வெற்றி. ஓ, ஜெய் ஹிந்த் என்றால் இதுதானா அர்த்தம்..!

பளபளக்கும் ஆசியக்கோப்பை, ஏழாவது தடவையாக இந்தியாவின் கையில். இனி, ஓஹோதான், ஆஹாதான், அடுத்த கோப்பை வரும்வரை!

*

Asia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை ?


(Picture courtesy: Internet)

இரண்டு வாரக் கிரிக்கெட் டிராமா இன்று முடிவுக்கு வருகிறது துபாயில். இங்கிலாந்துக்குப்போய் சேம்பியன்ஸ் டிராஃபியை பாகிஸ்தானிடம் கோட்டைவிட்டது விராட் கோலியின் இந்தியா. இந்தமுறை ரோஹித்தின் தலைமையில் ஆசியக் கோப்பையை வெல்லுமா என்பதே உலகெங்குமுள்ள இந்திய ரசிகர்களின் சிந்தனை. இந்தத் தொடரில், பாகிஸ்தான் பங்களாதேஷினால் விரட்டப்பட்டுவிட்டது கொஞ்சம் நிம்மதி என்றாலும், பங்களாதேஷ் ஒருமாதிரியான டீம். உலகக்கோப்பையில்கூட நமக்கு சோதனையாக அமைந்துவிட்ட அணி. போட்டி கடுமையாகவே இருக்கும் இன்று. உஷார் இந்தியா!

பங்களாதேஷின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷகிப்-உல்-ஹசன் காயம் காரணமாக டாக்கா திரும்பிவிட்டது அதன் பலத்தைக் குறைத்திருக்கிறது என்பது உண்மை. அவர் தரத்தில் நிரப்ப, வேறு ஸ்பின்னர்கள் அணியில் இப்போதில்லை. 20-வயது இளம் சுழல் மெஹ்தி ஹாசன் மிராஸ் நன்றாக வீசுவதோடு, பேட்டிங்கும் செய்கிறார் என்பது ஒரு ப்ளஸ். பங்களாதேஷின் எதிர்கால ஆல்ரவுண்டராக பரிமளிக்கும் தகுதி அவரிடம் தெரிகிறது. பங்களாதேஷின் ஸ்பின் கோச்-ஆன, முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி இவர்மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இன்றைய ஆசியக்கோப்பை ஃபைனலில், இந்தியாவுக்கெதிராகத் தன்னை நிறுவிக்கொள்ள இந்த இளம் வீரரும் முனைவார்தான். பார்ட்-டைம் பௌலர்கள் சௌம்யா சர்க்கார் மற்றும் மொஹமதுல்லா அவ்வப்போது உபயோகப்படுத்தப்படலாம்.

முஷ்ஃபிகுர், முஸ்தாஃபிசுர் : பேட்டிங்கில் இந்திய பௌலர்கள் எவ்வளவு சீக்கிரம் முஷ்ஃபிகுர் ரஹீமைத் தூக்குகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. முஷ்ஃபிகுர் நின்று ஆடினால் இந்தியாவுக்குத் தலைவேதனையாகிவிடும். மஹ்மதுல்லாவும், இம்ருல் காயெஸ்-உம், மெஹ்தி ஹாசனும் மிடில்-ஆர்டரில் மேலும் ரன் சேர்த்துவிடுவார்கள்.

இந்திய பேட்டிங்மீது முக்கிய தாக்குதல், பாகிஸ்தான் வெளியேற்றத்துக்குக் காரணமான வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானிடமிருந்துதான் இருக்கும். மற்ற இரண்டு மீடியம்-பேஸர்களான கேப்டன் மஷ்ரஃபே மொர்தாஸாவும், ருபெல் ஹுசைனும் சப்போர்ட்டிங் ரோல்தான் செய்வார்கள்.

ஷிகர் தவணின் மட்டைவீச்சு இன்று எடுபடுமா ? நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய துவக்க ஆட்டக்காரர்களை பங்களாதேஷ் எளிதில் வீழ்த்திவிட்டால், அம்பத்தி ராயுடு, தோனி, கார்த்திக் ஆகியோரின் தலைமீது குண்டுபோல் வந்து விழும் பொறுப்பு. விவேகமாக ஆடி நிலைமையை சமாளிக்கவேண்டியிருக்கும். அதுதானே அவர்களது வேலையும். (தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டரில் இன்று இருப்பார் என நம்புவோம்.) கீழ்நிலை பேட்ஸ்மன்களான கேதார் ஜாதவுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் அப்படி ஒரு எமர்ஜென்சிநிலையை எதிர்கொள்ளும் திறன் உண்டு.

பும்ரா, புவனேஷ்வர், சஹல் ஆகியோர் இன்று இந்திய பௌலிங் டூட்டிக்குத் திரும்புவார்கள். சூப்பர்-4 போட்டியில் பங்களாதேஷின் 4 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவும், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் பங்களாதேஷை இன்று பிரித்து மேய்வதற்கு, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கைகொடுப்பார்கள் எனலாம்.

என்ன சொல்லப்போகிறது இன்று துபாய்? கோப்பை இந்தியாவுக்குத்தானே?

*

ASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசியக் கிரிக்கெட் கோப்பையில் எனக்குப் பிடித்த அணி என்று ஆஃப்கானிஸ்தானையே சொல்வேன். வெற்றி, தோல்வியைத் தாண்டி ஜாலியாக விளையாடும் ஒரே சர்வதேச அணி. பழைய வெஸ்ட் இண்டீஸ் நினைவுக்கு வருகிறது. அந்த அளவு திறன் இவர்களிடம் இல்லை. அத்தகைய ஒப்பிடுதலே சரியில்லை. எனினும், கிரிக்கெட் உலகின் இளம் அணிகளில் ஒன்றான ஆஃப்கானிஸ்தான் தங்கள் கிரிக்கெட்டை விளையாடும் லாவகம், மனப்போக்கு மகிழ்ச்சிகரமானது. ரசிக்கத்தக்கது.

நேற்று சூப்பர்-4 போட்டியில் இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் முதன்முதலாகச் சந்தித்தது. அவர்களின் கடைசி மேட்ச். அதற்கப்புறம் தொடரைவிட்டே வெளியேறவிருக்கும் அணி. அந்தக் கவலையோ, சோகமோ ஏதுமில்லை அவர்களிடம். முதலில் பேட் செய்தவர்கள் நிதானமாக மைதானத்தை கவனித்தார்கள். ஆர்வமாக ஆடினார்கள். குறிப்பாக ஆரம்ப ஆட்டக்காரரான 30-வயதான முகமது ஷாஸாத் (Mohamed Shahzad). ஆள் அப்படி ஒரு குண்டு. ஃபிட்னெஸுக்காக மற்ற ஆஃப்கன் வீரர்கள் வேகவைத்த காய்கறி, சூப் என மாறியிருக்க, பிரியாணியை விடாததால் விமரிசனத்துக்குள்ளான பேட்ஸ்மன்! வேறொரு கிரிக்கெட் அணியாயின், இவர் தேர்வாக வாய்ப்பே இல்லை! ஆனால் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன மனுஷன். எப்படி அவரை விடமுடியும்? அவருக்குள் ஒளிந்திருப்பது ஒரு உற்சாகச் சிறுவன்! இஷ்டத்துக்கும் பேட் சுத்த விரும்புபவன். எதிரியைத் துச்சமென மதித்து ஏறி அடிக்கத் துடிப்பவன். அவன் நேற்று ஆடிவிட்டான் ஒரு ஆட்டம் – அதுவும் தோனியின் இந்தியாவுக்கெதிராக.

இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டபடியால் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சஹல் ஆகியோர் ஓய்வுகொடுக்கப்பட்டார்கள். பதிலாக, கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, கலீல் அஹமது, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கௌல் (இந்த மூன்றும் வேகப்பந்துவீச்சாளர்கள்) அணியில் நுழைந்தார்கள். கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்றதில் ரசிகர்களுக்கு ஒரே குதூகலம். ஆஃப்கானிஸ்தானை 42, 43 ஓவரில் ஊதிவிடும் இந்தியா என்பது பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும்.

முதலில் பேட்செய்த ஆஃப்கானிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் முகமது ஷாஸாத் இந்தியாவின் வித்தியாச வேகப்பந்துவீச்சை வெகுவாக ரசித்ததாகத் தோன்றியது! குண்டாக இருப்பதால், மற்ற பேட்ஸ்மன்களைப்போல், இஷ்டத்துக்கும் அவர் முன்னடி எடுத்துவைத்து க்ரீஸிற்கு வெளியே பாய்வதோ, ஆஃப் சைடு, லெக்-சைடு என அடிக்கடி கால்மாற்றி முன்னும் பின்னுமாக அசைந்து ஆடுவதோ எளிதில்லை. ஸ்வீப்பிற்காகக் காலை மடக்குவதும், ஐயோ.. முடியாது. ஆசாமியின் தொப்பை அப்படி! ஆனால் அதைப்பற்றிய கவலை மனதில் கிஞ்சித்தும் இல்லை. அவர் ஆடுகையில் ஆட்டம் தோனி & கோ. Vs முகமது ஷாஸாத் என்றே இருந்தது. ஆரம்பத்திலேயே வேகப்பந்துவீச்சைக் குறிவைத்தவர், தீபக் (ச்)சாஹரின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி எனத் தூள்கிளப்பினார். தோனி உடனே தீபக்கை வெளியே எடுத்து ஃபீல்டு செய்ய அனுப்பிவிட்டு, சித்தார்த் கௌலைக் கொண்டுவந்தார். அதே ட்ரீட்மெண்ட்தான் அவருக்கும். கலீலுக்கும் அடி. விறுவிறுவென ரன் ஏறியதில் விக்கெட் இழப்பின்றி 65 என்றது ஆப்கானிஸ்தான் ஸ்கோர். மறுமுனையில் 5 ரன்தான் எடுத்திருந்தார் இன்னொரு துவக்க ஆட்டக்காரர்.

தோனி ஸ்பின்னர்களைக் கொண்டுவந்தபோது ஷாஹ்ஸாத் வீழ்த்தப்படுவார் என்றே ரசிகர்கள் நம்பினர். காமெண்ட்டேட்டர்களும் அதையே விதவிதமாக சலசலத்து சந்தோஷப்பட்டுக்கொண்டனர். ஆனால் நடந்ததென்ன? நேற்று ஷாஸாதின் நாள். அவரை, குல்தீப், ஜடேஜா பின்னர் கேதார் – யாரும் அசைக்கமுடியவில்லை. குல்தீப்பைத் தவிர, மற்ற ஐந்து பௌலர்களையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஷாஸாத். அனாயாசமாக மிட்விக்கெட் திசையில் ஒரு புல் (pull), லாங்-ஆன் பக்கம் ஒரு லாஃப்ட் (lofted shot). பந்து உயர்ந்தது, பறந்தது. தொப்பென்று கூட்டத்திற்கு நடுவே விழுந்து சிரிப்பொலியைக் கிளப்பியது. தோனியும், அவரது பௌலர்களும் அவ்வப்போது ஆகாசத்தைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை.

93-ல் அவர் இருக்கையில் கேட்ச் பிடித்த தோனியும் பௌலர் கலீல் அஹமதும் கூச்சலிட, அம்பயர் ஷாஹ்ஸாதை அவுட் கொடுத்தார். ஷாஸாத் அசரவில்லை. தோளைத் தொட்டுக்காண்பித்தார். அங்கேதான் பட்டது. பேட்டில் அல்ல. ஆஃப்கானிஸ்தான் ரெவ்யூ செய்ய, அதிரடி நாட்-அவுட்! அதன் பிறகு, சிங்கிள், சிங்கிளாக ஊர்ந்தார் ஷாஹ்சாத். 99-லிருந்து தோனிக்குப் பின்னே ஒரு பௌண்டரி தட்டி, உலகின் 2-ஆவது நம்பர் அணிக்கெதிராக ஆக்ரோஷ சதம் எடுத்து அசத்திவிட்டார் ஷாஸாத். இறுதிக்கட்டங்களில் பரபரப்பைக் குறைத்துக்கொண்டு, ஓடமுடியாத நிலையிலும் (விளாவில் அடி, அபுதாபியின் ஹீட், வெகுநேரம் ஆடும் களைப்பு) சிங்கிளுக்காக அடிக்கடி ஓடினார். பொறுப்பாகத் தொடர்ந்த அவர், கேதாரின் வெளியே போகும் பந்தை லாங்-ஆஃபில் (long-off) சிக்ஸர் அடிக்க முயன்று, 124 ரன்களில் கேட்ச்சில் அவுட்டானார். இந்திய பௌலர்கள் மூச்சை ஒருமுறை இழுத்து, மெல்ல வெளியேவிட்டிருப்பார்கள். ஹரே, பாப்ரே! பிறகு வந்தவர்களில் முகமது நபி (முன்னாள் கேப்டன்) 64 அடிக்க, 8 விக்கெட் இழந்து 258 எடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

கொதிக்கும் அபுதாபி பிட்ச்சில், ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர்களுக்கெதிராக 259 என்கிற இலக்கு மிகவும் சவாலானது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதாகத் துவக்கினார்கள் அம்பத்தி ராயுடுவும், கே.எல்.ராஹுலும். நல்ல பார்ட்னர்ஷிப். ராயுடு 57, ராஹுல் 60 என விழுந்தவுடன் கார்த்திக் வந்து பொறுப்பேற்றார். சிறப்பாக ஆடி, 44 எடுத்தார். தோனியும், பாண்டேயும் தலா 8 ரன் என எடுத்து வீழ, கேதார் ஜாதவும் ஓடிவிட, வெற்றி பெற்றுத்தரும் பொறுப்பு ஜடேஜாவின் தலையில்! அவர் நன்றாகவே விளையாடினார் எனினும் (ச்)சாஹர், கௌல் போன்றோர் கைகொடுத்தால்தானே? கடைசியில், 50-ஆவது ஓவரை ஆஃப்கானிஸ்தானின் சூப்பர்ஸ்டாரான ரஷீத்கான் வீசினார். 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியாவுக்கு 7 ரன் தேவைப்பட்டது வெற்றிக்கு. ஜடேஜா இரண்டாவது பந்தில் பௌண்டரி அடிக்க, ஜெயித்துவிட்டதுபோல் தவண் வழக்கம்போல் பெவிலியனில் நின்று சிரித்துக்கொண்டிருந்தார். என்னா சிரிப்பு! வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, ஐந்தாவது பந்தைத் தூக்கி அடித்தார் ஜடேஜா. ஆகாசத்தில் பந்து, ஃபீல்டர் என ஒரு பக்கமும், இன்னொருபக்கம் தவனின் முகம் எனவும் கேமரா விளையாட்டுக் காண்பித்தது. தவணின் சிரிப்புக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. உறைந்தது. ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டே தொலைவிலிருந்து படுவேகமாக ஓடிவந்த ஃபீல்டர் நஜிபுல்லா ஜத்ரன் (Najimbulla Zadran), பந்தின்மீது கண்ணும், ஏந்திய கையுமாக ஓடிக்கொண்டே கேட்ச்சை லபக்கிவிட்டார். எதிர்பாராத முடிவினால் ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் பெரிதாகக் கொடியசைத்து ஆர்ப்பரிக்க, இந்தியா 49.5 ஓவரில் சரியாக 258-ல் ஆல்-அவுட். ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் டை (Tie) கொடுத்துக் கலக்கிவிட்டது ஆஃப்கானிஸ்தான். ஆஃப்கன் கொண்டாட்டங்களுக்கிடையில், அதிர்ந்துபோயிருந்த இந்திய ரசிகர்களில் ஒரு சர்தார்ஜி, அழ ஆரம்பித்துவிட்ட தன் சுமார் 4 வயது பொடியனைத் தேற்றிக்கொண்டிருந்ததும் கேமராவில் சிக்கியது ஒரு கவிதைக்கணம்.

’இந்தியாவுக்கெதிராக ’டை’ என்பது வெற்றிக்குச் சமம். 2018-ல் எங்களின் மிக அபாரமான ஆட்டம் இது’ என்றார் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கன் (Asgar Afghan). யார்தான் மறுக்கமுடியும்?

படங்கள் இணையம். நன்றி.
*

Asia Cup: மீண்டும் சுருண்ட பாகிஸ்தான்


ஆசியக்கோப்பையில், பாகிஸ்தானுக்கெதிராக துபாயில் நடந்த நேற்றைய (23-9-18) கிரிக்கெட் ஆட்டத்தில், இந்தியா 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் என்ற விகிதத்தில் இறங்கியது (நான்காவது ஸ்பின்னராக கேதார் ஜாதவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புடன்). இந்தியாவை வெல்ல பாகிஸ்தான் கைக்கொண்ட ஃபார்முலா 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 ஸ்பின்னர். டாஸ் ஜெயித்து பேட்டைக் கையிலெடுத்த பாகிஸ்தான், இந்திய வேகப்பந்துவீச்சை கவனத்துடன் ஆட ஆரம்பித்தது. முதல் பவர்ப்ளேயில்(10 ஓவர்கள்) வேகப்பந்துவீச்சை சமாளித்து, விக்கெட் இழப்பின்றி ரன் கொஞ்சம் எடுத்துவிட்டால் போதும். பின்னர் வரும் ஸ்பின்னர்களில் யாராவது ஒருவரையாவது அடித்துத் தூள்கிளப்பிவிடலாம், கௌரவமான ஸ்கோரும் கிடைக்கும் என்று கணக்கு போலும்.

ரோஹித் ஷர்மா விடவில்லை. 8-ஆது ஓவரிலேயே லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலை திடீரென நுழைத்து, பாகிஸ்தானை முழிக்கவைத்தார். துபாயின் ஸ்லோ-பிட்ச்சில் சஹலையும் குல்தீப்பையும் ஆட, பேட்ஸ்மனுக்கு, திறனோடு தன்னில் பெரும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். இரண்டு ஸ்பின்னர்களில் ஒருவர் அடிவாங்கினாலும், அடுத்து வருகிறார் இடதுகை சுழல் ரவீந்திர ஜடேஜா. ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஃபக்ர் ஜமன் (Fakhr Zaman) மற்றும் இனாம்-உல்-ஹக்கிடம் பாகிஸ்தான் நேற்று நிறைய எதிர்பார்த்தது. ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடித்து ஆட முயன்ற இனாம்-உல்-ஹக்கை முதலில் தூக்கி எறிந்தார் சஹல். முப்பதைக் கடந்து ஆடிக்கொண்டிருந்த ஃபக்ர் ஜமன் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் ஸ்வீப் செய்யமுயன்றார். சறுக்கினார். சாய்ந்தார். நேரே வந்த பந்து ஸ்டம்புக்கு முன்னால் அவரது காலை முட்டியது. ஜமனை வீட்டுக்கு அனுப்பியது. ஆரவாரமாகக் குதித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அடங்கி உட்கார்ந்தார்கள். 16-ஆவது ஓவரை ஜடேஜா போட்டுக்கொண்டிருக்கையில், கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மதுடன் ஆடிக்கொண்டிருந்தார் பாகிஸ்தானின் இன்னுமொரு பேட்டிங் ஸ்டாரான பாபர் ஆஸம்(Babar Azam). சர்ஃப்ராஸ், ஜடேஜாவின் அந்தப்பந்தை ஆஃப்-சைடில் தட்டிவிட, சிங்கிளுக்காக இந்தப் பக்கத்திலிருந்து பாய்ந்தார் பாபர் ஆஸம். சர்ஃப்ராஸ் அதைக் கவனிக்கவில்லை. சஹல் பந்தைப் பாய்ந்து நிறுத்தி ஜடேஜாவிடம் தூக்கி எறிந்தார். பாபர் ஆஸம் அலறிக்கொண்டு தன் க்ரீஸுக்குத் திரும்பி ஓடிவர, ஜடேஜா பந்தைக் காற்றிலே ஒரு லாவு லாவி, மின்னல்வேகத்தில் பெயிலைத் தட்டிவிட்டார். பாபரின் கதை முடிந்தது. மேட்ச்சை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானிப் பெண் (பாபரின் மனைவியோ?) வாயைப்பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

58 க்கு 3 விக்கெட்டுகள். இப்போது வந்து இறங்கினார் ஷோயப் மாலிக். இதற்குமுன் இந்தியாவுக்கெதிரான 14 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காதவர். ஆனால் பாகிஸ்தான் மிடில்-ஆர்டரின் பலம் எனக் கருதப்படுபவர். கேப்டனுடன் சேர்ந்து, ஸ்பின்னர்களைத் தட்ட ஆரம்பித்தார். ரன்கள் சேர ஆரம்பித்தன.அவ்வப்போது சில அருமையான ஷாட்டுகள். நேற்று ஆடிய பாகிஸ்தானிகளில் ஷோயப் மாலிக் மட்டுமே இந்திய ஸ்பின்னர்களுக்கெதிராக அபாரமாக ஆடினார். இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ராவின் வேகப்பந்தைத் தொட்டு, தோனியிடம் கேட்ச்சாகி வெளியேறினார். 78 ரன்னெடுத்து அவர் திரும்பியபின் பாகிஸ்தான் துவண்டது. சர்ஃப்ராஸின் 44, புவனேஷ்வரின் ஒரு ஓவரில் சிக்ஸர், பௌண்டரி எனப் பறக்கவிட்ட ஆசிஃப் அலியின் 30-ஐத் தவிர அவர்களிடம் ஏதுமில்லை. ஜஸ்ப்ரித் பும்ராவின் டெத்-ஓவர் பௌலிங் (death overs) அபாரமாக அமைந்ததால், பாகிஸ்தானால் 250-ஐ நெருங்க முடியவில்லை. 237-க்கு 7 என்பதே அவர்களின் இறுதி அறிவிப்பு.

வெற்றி இலக்கை நோக்கிய படையெடுப்பில், ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் சிறப்பாக வாள் வீசினார்கள். டென்ஷனில் கிடுகிடுத்த பாகிஸ்தான், ஆங்காங்கே கேட்ச்சுகளை நழுவவிட்டுக்கொண்டு இந்தியத் தாக்குதலுக்கு ஒத்து ஊதியது, இந்திய ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இரு இந்தியத் துவக்க ஆட்டக்காரர்களுமே சதம் விளாசியது அபூர்வமானது. தவண், ரோஹித் இருவரிடமிருந்தும் அருமையான ஷாட்டுகளைப் பார்க்கமுடிந்ததில் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷம். ரோஹித்தின் சதத்தை ரசிகர்கள் கொண்டாடுகையில், ஸ்டேடியத்தில் தவணின் மனைவி ஆயிஷா முகர்ஜி, ரோஹித்தின் மனைவி ரித்திகா ஸஜ்டே-யை அணைத்து வாழ்த்தியது இன்னுமொரு கலர்ஃபுல் சீன். இல்லாத ரன்னுக்காக அவசரமாக ஓடி, திரும்பமுடியாமல் ஷிகர் தவண் அவுட்டாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு இது பத்துவிக்கெட் வித்தியாச வெற்றியாக அமைந்திருக்கும். கடைசியில் ராயுடுவும் களத்தில் இறங்கி ஆட, ரோஹித் 111 நாட்-அவுட் என வெற்றி வாகை சூடியது இந்திய அணி.

செப்டம்பர் 26-ல் அபு தாபியில் நடக்கவிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி, இறுதிப்போட்டியில் யார் இந்தியாவைச் சந்திப்பதென முடிவு செய்யும். இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் ஃபைனலா, அல்லது இந்தியா-பங்களாதேஷ் மோதலா என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கலந்த தவிப்பு!

*

Asia Cup Cricket : மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

ஆசியக்கோப்பைக் கிரிக்கெட்டின் ’சூப்பர்-4’ போட்டியில் இன்று (23-9-18) துபாயில் மோதவிருக்கின்றன, இந்தியாவும் பாகிஸ்தானும்.

19-9-18-ல் நடந்த இருநாடுகளுக்கிடையேயான போட்டியில், பாகிஸ்தான் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா அலட்சியமாகப் பாகிஸ்தானைத் தூக்கி எறிந்தது இந்திய ரசிகர்களுக்கேகூட ஆச்சரியத்தைத் தந்திருக்கும். முதலில் பாகிஸ்தான் பேட் செய்கையில் எதிர்பார்ப்பு 280-300 ரன்கள் என்கிற வகையில் இருந்தது. ஸ்லோ பிட்ச் என்பது தெரிந்திருந்த நிலையிலும். இந்தியாவின் சராசரி வேகப்பந்துவீச்சை பாகிஸ்தான் துவம்சம் செய்யும் எனவே எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கத்துக்குட்டிகளான ஹாங்காங்குக்கு எதிராக அசடு வழிந்த இந்திய வேகப்பந்துவீச்சு, தன் திறனை சரியான சமயத்தில் பாகிஸ்தானுக்கெதிராக வெளிக்கொணர்ந்து அசத்தியது. குறிப்பாக ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார். பாகிஸ்தானி பேட்ஸ்மன்களுக்கு புகுந்து விளையாட இடமே கொடுக்காது நெருக்கித்தள்ளினார் ஆரம்பத்திலிருந்தே. சரியான லென்த் மற்றும் துல்லியப்பந்துவீச்சில் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்தது இந்தியத் தாக்குதலின் சிறப்பம்சம். வேறுவழியின்றி க்ரீஸிற்கு வெளியே வந்து புவனேஷ்வரைத் தாக்க முயன்ற பாகிஸ்தானி பேட்ஸ்மன்கள் தங்கள் விக்கெட்டுகளை எளிதான கேட்ச்சுகளுக்குப் பறிகொடுக்கவேண்டியதாயிற்று. அடுத்த முனையில் ஜஸ்ப்ரித் பும்ராவும் பெண்டெடுக்க, முதல் இருபது ஓவருக்குள்ளேயே மூச்சுத் திணறியது பாகிஸ்தானுக்கு. ஆனால், ஷோயப் மாலிக்கும் (Shoaib Malik (ஸானியா மிர்ஸாவின் வீட்டுக்காரர்!), பாபர் ஆஸமும் சிறப்பாக ஆடி நிலைமையைச் சரிக்கட்ட முயன்றார்கள். யஜ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை ஆரம்பத்தில் அடிக்க ஆரம்பித்த பாகிஸ்தானைக் கவனித்த இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா, பார்ட்-டைம் ஸ்பின்னர் கேதார் ஜாதவைப் பந்துபோட அழைத்தார். ஜாதவின் பந்துவீச்சு ஏதோ பள்ளிக்கூடப் பையன் போடுவதுபோல் அவர்களுக்குத் தோன்றியிருக்கவேண்டும். சுழலோடு, அது ஒரு உளவியல் ரீதியான இந்தியக் களவியூகம் என்பதை அறிந்திராத பாகிஸ்தான், ஜாதவை அலட்சியம் செய்து தாக்கியது. ஆனால், ஆர்ப்பாட்டமில்லாத ஜாதவின் அப்பாவி சுழல், பாகிஸ்தானி மிடில் ஆர்டரை நிலைகுலையவைத்தது. கேதார் ஜாதவும், புவனேஷ்வர் குமாரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, முண்டமுடியாத பாகிஸ்தான், முணகிக்கொண்டே 162 ரன்னில் மைதானம் விட்டு ஓடியது.

இந்தியா இலக்கை நோக்கி பேட் செய்கையில் ரோஹித்தும் தவணும் நல்ல துவக்கம் தந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களைக் குறிவைத்துத் தாக்கிய ரோஹித் ஷர்மா, உஸ்மான் கானின் ஆவேச ஓவரில், மேல் எகிறிய பந்துகளை ஹூக், புல் என அதிரடியாக 18 ரன்கள் விளாசினார். அரைசதம் அடித்தார். அவரும் அடுத்தபடியாக தவணும் விழுந்தபின், அம்பத்தி ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும் மேற்கொண்டு விக்கெட் சரிவதைத் தவிர்க்க சிங்கிள் சிங்கிளாகத் தட்டி ஆடி இலக்கை எட்டினார்கள். இந்தியாவுக்குக் கடுமையாக சவால் கொடுக்கமுடியாமல், பாகிஸ்தான் சரணடைந்தது துபாயில் ஏராளமாக வந்து அமர்ந்திருந்த பச்சைக்கொடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

இடையிலே காயம் காரணமாக ஹர்தீக் பாண்ட்யா, ஷர்துல் டாக்குர், அக்ஸர் பட்டேல் ஆகியோர் இந்தியா திரும்பிவிட்டனர். பதிலாக அணியில் வந்திருப்பவர்கள் தீபக் (ச்)சாஹர் (Deepak Chahar – சென்னை சூப்பர் கிங்ஸ்), சித்தார்த் கௌல் (Siddharth Kaul), ரவீந்திர ஜடேஜா ஆகியோர். இதற்கிடையில் சூப்பர்-4 மேட்ச் ஒன்றில், பங்களாதேஷை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருக்கிறது. 4 விக்கெட் வீழ்த்தி பங்களாதேஷைக் கதிகலங்கவைத்த இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, பாகிஸ்தானை ஒருகை பார்ப்பதற்காக இன்று துபாயில் களமிறக்கப்படலாம். அப்படியாயின், இந்தியாவின் சுழல்-இரட்டையர்களான சஹல், குல்தீப் – இருவரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படுமோ? வேகப்பந்துவீச்சில் தீபக் (ச்)சாஹர் மூன்றாவது பௌலராக இறங்கும் வாய்ப்பும் உண்டு. பேட்டிங் வரிசை அப்படியேதான் இருக்குமா என்பதைப் பார்க்கவேண்டும். கே.எல்.ராஹுல் அல்லது மனிஷ் பாண்டேயை இறக்கலாம் என்றால் யாரைத்தான் விலக்குவது?

ஏற்கனவே அடிபட்டிருக்கும் பாகிஸ்தான், சீற்றத்துடன் இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அருமையான கிரிக்கெட் யுத்தத்தை எதிர்நோக்கி இருநாட்டு ரசிகர்களும் இன்று தயாராக இருப்பார்கள். ஆட்டபாட்டம் எல்லாமே ரசிகக் கடவுளர்களுக்குப் படைக்கப்படும் விருந்துதானே!

*

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்?


மத்தியக்கிழக்கில், சீட்டு நுனிக் குதூகலத்திற்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகின் பெரும் ரசிகர் கூட்டம். அபூர்வமாகவே இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். அப்படி ஒரு நிகழ்வு இன்று துபாயில்(Dubai). இந்த ஆசியக்கோப்பையில் இதுவரை இருநாடுகளுமே ஐசிசி அஸோஷியேட் உறுப்பினரான ஹாங்காங்கைத் தோற்கடித்து ஆளுக்கொரு வெற்றியோடு ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

எளிதாக முந்தைய போட்டியில், பாகிஸ்தானால் தோற்கடிக்கப்பட்ட ஹாங்காங், இந்தியாவை நேற்று ஒருகை பார்த்துத்தான்விட்டது! ஷிகர் தவண், மற்றும் 4 வருஷத்துக்குப் பின் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் தரமான பங்களிப்பைத் தவிர, நேற்று ஹாங்காங்குக்கெதிராக இந்தியத் தரப்பிலிருந்து பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. முதலில் பேட் செய்த இந்தியா, ஏதோ 285 ரன் எடுத்துவிட்டார்கள். பந்து வெகுவாக எம்பிவராத துபாயின் ஸ்லோ பிட்ச்சில் இந்த ஸ்கோர் பரவாயில்லை எனினும், இந்தியாவுக்கெதிராக ஹாங்காங் இப்படி சிறப்பாக எதிராட்டம் போடும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நமது பௌலர்களும் ’ஹ்ம்..ஹாங்காங்தானே..’ என்று வீசியிருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஹாங்காங்கின் துவக்க ஆட்டக்காரர்களே விக்கெட் இழப்பின்றி 173 ரன் சேர்த்து இந்திய பௌலிங்கை மழுங்கச் செய்துவிட்டது அதிர்ச்சி அளித்தது. ஒருகட்டத்தில், இந்திய பௌலர்களுக்கு விழிபிதுங்கிவிட்ட நிலை. இந்தியா தடுமாறிய நேற்றைய இந்த மேட்ச்சை பாகிஸ்தான் ஆனந்தமாகப் பார்த்து ரசித்திருக்கும். இறுதியில் திக்கித் திணறி 26 ரன் வித்தியாசத்தில்தான் இந்தியா வென்றது. இதே ஹாங்காங்கை பாகிஸ்தான் 115 ரன்னில் முந்தைய போட்டியில் ஆல்-அவுட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இந்திய அணியில் இல்லை என்பதோடு, கூடவே ரஹானே, ரிஷப் பந்த் போன்றோரும் இல்லை. பதிலாக தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். காயத்திலிருந்து திரும்பியிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்வும் (Kedar Jhadav) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் ராஜஸ்தானின் கலீல் அஹ்மத் (Khaleel Ahmed). இப்படி சில மாற்றங்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார்.

ஒருவகையில் பார்த்தால், நேற்றைய தடவலில் இந்தியாவுக்கு மணி அடித்திருக்கும். புவனேஷ்வர் குமார் நேற்று போட்டதுபோல் இன்று பந்துவீசினால், பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவதுபோலாகிவிடும். கேதார் ஜாதவ் அல்லது ஹர்தீக் பாண்ட்யா – இருவரில் ஒருவர்தான் விளையாட வாய்ப்பிருக்கும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை, இருவருமே சேர்க்கப்பட்டால், தினேஷ் கார்த்திக்தான் பலிகடா! ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதிரடிக்குப் பேர்போன பாண்ட்யா பாகிஸ்தானுக்கெதிராகக் களம் இறங்குவதே நல்லது. இந்திய முன்னணி வீரர்கள் எளிதாக நொறுக்கப்பட்டுவிடும் பட்சத்தில், பின்வரிசையில் புகுந்து தாக்க பாண்ட்யாவும், தோனியும் பயன்படுவார்கள் என்றே ரோஹித் நினைப்பார். ரவி சாஸ்திரிவேறு, ஏதாவது சொல்லிக் குழப்பாமல் இருக்கவேண்டும். கே.எல். ராஹுல் இன்று சேர்க்கப்படலாம். ஆனால் யாருக்குப் பதிலாக என்பதே கேள்வி.அறிமுக வீரரான இடதுகை பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் நேற்று மோசமாக
ஆரம்பித்தாலும், தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் தீவிரமாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இன்றைய மேட்ச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் அவர் விளையாடக்கூடும். ஸ்பின் பௌலிங்கில் யஜ்வேந்திர சஹலும் (Yuzvendra Chahal), குல்தீப் யாதவும் பொருத்தமானவர்களே. சரியான அணிஅமைப்பும், களவியூகமும் கொண்டு ரோஹித் இன்று துபாயில் இறங்குவது மிக மிக முக்கியம்.

பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் ஃபகர் ஜமன் (Fakhar Zaman), பாபர் ஆஸம் (Babar Azam), இனாம்-உல்-ஹக் (Inam-ul-Haq) போன்றவர்களும், பந்துவீச்சில் முகமது ஆமீர், உஸ்மான் கான், ஹாஸன் அலி போன்றவர்களும் கவனிக்கப்படவேண்டியவர்கள். இருநாடுகளுக்கிடையேயான தீக்கக்கும் போட்டிகளில் அதிக அனுபவம் உடையவர்களாக பாகிஸ்தான் தரப்பில் ஷோயப் மாலிக்கும், இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியும் காணப்படுகின்றனர்.

இந்திய அணியைவிடவும் பாகிஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பு சற்றே பிரகாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது – அவர்களது ஃபார்மை வைத்துப்பார்க்கையில். எப்படியிருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ஒரு க்ளாஸிக் என பாவித்து பார்த்து மகிழ்வோர் உலகெங்கும் ஏராளம். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! – என்கிற நிலைதான் இன்று, மத்திய கிழக்கு ரசிகர்களுக்கு.

**