ஏகாந்தனின் புதிய மின்னூல்

அடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:

  1. தாமதத்திற்கு அருந்துகிறேன்

சற்று தாமதமாக(!) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.

இந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.

 

 

 

 

 

ASIN : B08GKMHRY9

லிங்க்

இந்த மின்னூலை இலவசப் பதிவிறக்கம் செய்து வாசிக்க உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது,   4 நாட்கள் அவகாசம்! 27-8-20 -லிருந்து 30-8-20 (ஞாயிறு) வரை.

  1. தூரத்திலிருந்து ஒரு குரல்’ – இலவச வாசிப்பு நீட்டிப்பு !

இந்த மின்னூல் (கட்டுரைத் தொகுப்பு) இலவசப் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது -மேலும் 3 நாட்களுக்கு:  25-8-20 -லிருந்து 27-8-20 வரை.

 

 

 

 

 

 

ASIN : B08F566L57

லிங்க்

வாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது.  நன்றி.

-ஏகாந்தன்.

மெய்ஞானக் கவி இபன் அல்-ஃபாரித் (Ibn al-Farid)

அந்த உன்னதமான புனிதத்தின் ரசத்தைக் குடித்துவிட்டது அவருடைய ஆன்மா. அதன் காரணத்தால் மெய்ஞானிகள், கவிஞர்கள், அரும்காதலர்கள் நிலவும் அபூர்வ உலகில் அது உலவியது. பின்னர் ஒரு நிலைக்குவந்து, பூமிக்குத் திரும்பியது – தான் கண்ட, அனுபவித்த அபூர்வத்தை அழகான வார்த்தைகளில் சொல்வதற்காக.

அவருடைய படைப்புகளை நாம் ஆராய்கையில், சுதந்திரமாக, கட்டுக்கடங்காமல அலையும் மனம் எனும் பெருவெளியின் புனித மனிதனாகத் தெரிகிறார். கற்பனை உலகின் இளவரசனாக, மெய்ஞான உலகின் மாபெரும் தளபதியாக அவரது வாழ்வுத்தோற்றம். மனிதவாழ்வின் மட்டித்தனங்களையும் ஆசாபாசங்களையும் வென்று, உன்னதத்தையும், புனிதத்தையும் நோக்கிய பயணத்திலேயே, கடவுளின் ராஜாங்கத்தை அடைவதிலேயே அவர் முன்னேறியதாக நமக்குத் தெரியவருகிறது.

அல்-ஃபாரித் ஒரு மேதை. மேதமை என்பது எப்போதாவதே நிகழும் ஒரு அதிசயம். தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தை, தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியல்களை விட்டு விலகிப் பயணித்த மாபெரும் கவி. வெளிஉலகிலிருந்து தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டு அவர் வரைந்த கவிதைகள், காணமுடியாத ஒன்றின் உன்னதத்தோடு, மேன்மையோடு, கண்டறிந்த பூலோக வாழ்வனுபவத்தை ஒருவாறு இணைக்க முயன்றன.

அல்-முத்தனபியைப்போலே (Al-Mutanabi, a great 10th century poet from Iraq), வாழ்வின் தினசரி செயல்பாடுகளிலிலிருந்து தன் கருத்தை எடுத்துக்கொண்டவர் அல்ல அல் ஃபாரித். அல்-மாரியைப்போல(Al-Maary, classical Arab poet, 11th century)  வாழ்வின் புதிர்களில் அவர் லயித்துவிடவும் இல்லை. இந்த உலகத்திலிருந்து தன்னை வெளியே கொணர, அல்-ஃபாரித் தன் புறக்கண்களை மூடிக்கொண்டார். சாதாரண உலகின் இறைச்சல்களிலிருந்து விடுபட, காதுகளைப் பொத்திக்கொண்டார்.  ஏன்? இந்த உலகைத் தாண்டிய உன்னதங்களைப் பார்ப்பதற்காக, என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்காத தேவகானத்தைக் கேட்பதற்காக.

Ibn al-Farid, Sufi Poet

இதுதான், இவர்தான் அல்-ஃபாரித். சூரியனின் கதிர்களைப்போலே ஒரு தூய ஆன்மா. மலைகளுக்கிடையே அமைதியாகக் காணப்படும் ஏரியைப்போன்ற மனதிருந்தது அவருக்கு. அவர் வார்த்த கவிதைகள், அவருக்கு முன்னாலிருந்த, பின்னால் வாழ்ந்த கவிஞர்களின் கனவுகளையும் தாண்டிச் சென்றவை. மேற்கண்டவாறெல்லாம் அவதானித்து, அல்-ஃபாரிதின் மேதமையை வர்ணிக்கிறார் கலீல் ஜிப்ரான்.

அரபி மொழியின் மாபெரும் மெய்ஞானக்கவியெனக் கொண்டாடப்படுபவர், இபன் அல்-ஃபாரித் (Ibn al-Farid). தன் வாழ்நாளில் ஒரு சுஃபி துறவி என அறியப்பட்டுப் போற்றப்பட்டவர். 12-ஆம் நூற்றாண்டு எகிப்தில் வாழ்ந்தவர். எகிப்தை வாழ்விடமாகக் கொண்டுவிட்ட சிரிய நாட்டவர்களான பெற்றோர்கள். அப்பாவைப்போல் சட்டநிபுணராக வரப் படித்தார் ஆரம்பத்தில். பின் என்ன தோன்றியதோ தனிமையை நாட ஆரம்பித்தார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள முகட்டம் குன்றுகளுக்கடியில் (Muqattam Hills) சென்று உட்கார்ந்தார். அங்கேயே வாழ்ந்தார். சில வருடங்கள் மெக்கா சென்றிருக்கிறார் அல்-ஃபாரித். அங்கே, புகழ்பெற்ற இராக்கிய சுஃபி ஞானியான அல்-சுஹ்ராவார்தியை (Al-Suhrawardi)  சந்தித்திருக்கிறார்.

**

கிண்டிலில் கிண்டிய கவிதைகள் !

சமீபத்தில் கிண்டிலைக் குடைந்துகொண்டிருந்தபோது கவிதைத் தொகுப்புகளால் கவரப்பட்டேன். நல்ல கவிதையைப் பார்த்தவுடன் நம்ப விக்கெட் விழுந்துவிடுவது வழக்கம்தானே! கல்யாண்ஜியின் ‘மூன்றாவது முள்’ மற்றும் ஆத்மாநாமின் கவிதை இதழ் ‘ழ’ -15 ஆகியவற்றை வாங்கிப் புரட்டினேன். மற்ற வாசிப்புகளிடையே, கவிதைகளுக்குள்ளும் புகுந்து ‘ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கொள்வது வழக்கமாகியிருக்கிறது.  ரசித்த கவிதைகளில்  –

‘ழ’ இதழிலிருந்து :

தோற்றம்     -ஆத்மாநாம்

தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும்
தோன்றத் தெரிந்திருக்கவேண்டும்
நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும்தான்
நிஜவாழ்க்கையில் தோன்றுவது சுலபம்
ஏனெனில் அங்கு அனைவரும்
தோற்றம் அளிக்கிறார்கள்
டீ கொடுப்பதில்
சாப்பாட்டுக்கு அழைப்பதில்
திருமணங்கள் நடத்துவதில்
ஆபீஸ் போவதில்
சினிமா போவதில்
நாடகங்கள் போவதில்
இசை கேட்பதில்
இப்படிப் பல்வேறாக.
கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்
அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்
ஒரு விஞ்ஞானியாக
ஒரு தத்துவவாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞனாக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக்காரராக
ஒரு கூத்துக்காரராக
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக்காரராக -
இவற்றில் நாம் யார்
கண்டுபிடிப்பது கஷ்டம்
ஏனெனில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் உள்ளது
அதன் கண்டுபிடிக்கும் காலத்தில்கூட
நாம் கண்டுபிடிக்கமாட்டோம்
மீண்டும் இவ்வாறு இருக்க..
**
சமூக ப்ரக்ஞை     -நிமல. விஸ்வநாதன்

சாலையில்
என் எதிரில் வந்த
நீயும் கவனமாகயிருந்தாய்
நானும் கவனமாகயிருந்தேன்
நல்லவேளை, ஒரு விபத்திலிருந்து
நான் தப்பித்தேன்
**
கல்யாண்ஜி-யின்(வண்ணதாசன்) ‘மூன்றாவது முள்’ தொகுப்பிலிருந்து:
1.
ஒரு நொடிகூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியை
சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற
காலத்துடன் அல்லவா
ஓடிக்கொண்டிருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா
குதித்துக் குதித்துச் செல்கிறது
அந்த மூன்றாவது முள்
**
2.
விருந்தாளியின் பையன்களில் சிறிய பையனுக்கு
கதைகள் சொல்வது என் பொறுப்பாக இருந்தது
அவன் மறந்துவிட்டுப் போன
சிரிப்பு முகமூடி ஒன்று
தலையணைக்குக் கீழ் இருந்து
அதற்குக் கதை சொல்லச் சொன்னது.
உடனடியாக பதில் சொல்லிவிட்டேன்,
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிற,
எப்போதும் இன்னொரு முகத்தை
மூடுகிற ஒன்றுக்கு
கதைகள் அவசியமில்லை என்று
கதைகள் சொல்வதில்லை என்று.
**
விக்ரமாதித்யன் படைத்து 1982-ல் வெளிவந்த முதல் கவிதைத் 
தொகுதியான ’ஆகாசம் நீல நிறம்’ என்கிற நூலும் கிண்டிலுக்குள் 
நுழைந்திருக்கிறது. நகுலன், ஆர்.சூடாமணி, தஞ்சை ப்ரகாஷ், 
பிரும்மராஜன்   ஆகியோரால் ஸ்லாகிக்கப்பட்ட 
தொகுப்பு. எட்டிப் பார்த்ததில் கிடைத்த ஒன்றிரண்டு :

1. வாழ்க்கை

பறத்தல்
சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்
**

2. ஏகாதசி

யாசகத்திற்கென்று
ஏழெட்டு வீடுகள் சென்று
இருந்த நிலையைப் பார்த்ததில்
திருவோட்டைத் தூக்கித்
தூர எறிந்தேன்
திரும்பி வருகையில்
**
3.
நீச்சலுக் கென்றே
ஆற்றுக்கு வந்தவனை
உள் வாங்கும் சுழல்
பார்த்தபடி
தன் போக்கில் போகும் நதி
** 
*














ஆத்மாநாமின் ‘ழ’ கவிதை இதழ்கள் அமேஸானில்

கவிஞர் ஆத்மாநாம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கவிதைக்கெனப் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே அவராலும், நண்பர்களாலும்  நடத்தப்பட்ட இதழ் ‘ழ’.  1978-லிருந்து 1988 வரை விட்டுவிட்டு காட்சி தந்த இலக்கியப் பத்திரிகை.

ஆத்மாநாமின் கவிதைகளுடன், க.நா.சுப்ரமணியம், கலாப்ரியா, தேவதச்சன், பிரும்மராஜன், காளிதாஸ், ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன், காசியபன், எஸ். வைத்யநாதன்,   மாலன், ’ஷாஅ’ , சத்யன் போன்றோரின் கவிதைகளும் ’ழ’ -வில் அப்போது வெளிவந்தன.

ஆத்மாநாமின் நண்பரும், எழுத்தாளருமான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், ‘ழ’ இதழ்கள் இப்போது அமேஸான் கிண்டிலில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில், இரண்டு ‘ழ’ இதழ்கள் இலவச வாசிப்புக்கு (இரண்டு நாட்களுக்கு) இப்போது:

‘ழ’  16 (ஏப்ரல் 1981): ஆகஸ்ட் 16 மதியம் – ஆகஸ்டு 18 மதியம் (12:30வரை)

‘ழ’  17 (ஜூன் 1981): ஆகஸ்ட் 17 மதியம் – ஆகஸ்ட் 19 மதியம் (12:30வரை)

கவிதை ப்ரேமிகள் கிண்டிலுக்குள் புகுந்து, வாசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ’போஸ்ட்’!

‘ழ’ இதழ் 15 -ஐ வாங்கிப் படித்துப் பார்த்தேன். க.நா.சு., ஞானக்கூத்தன், காசியபன், கலாப்ரியா, எஸ்.வைத்யநாதன், பிரும்மராஜன் போன்றோரோடு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகளும் படிக்கக் கிடைத்தது நல்ல அனுபவம்.

***

ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்

அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன :

  1.  ஆதிசங்கரர்  ராமானுஜர்  வேதாந்த தேசிகர்

 

 

 

 

 

 

(அமேஸான் Link: B08DMWV29J )

மேற்கண்ட ஹிந்துமத ஞானிகள் வாழ்ந்த காலகட்டம்,  நிகழ்வுகள், சமயப்பணி, படைப்புகள்பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாகச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு.

  1.  தூரத்திலிருந்து  ஒரு  குரல்

 

 

 

 

 

(அமேஸான் Link: B08F566L57 )

இந்தியா என்கிற மாபெரும் தேசத்தில் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், நிகழ்வுகள் இவற்றோடு, கலாம், காந்தி, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என வேகமாகக் காட்டிச் செல்லும் கட்டுரைகள். பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் எனவும் ஆங்காங்கே காட்சிகள் இருக்கும். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் அங்கதம் !

இரண்டு நூல்களையும், ’அமேஸான் அக்கவுண்ட்’ உள்ள அன்பர்கள் ’இலவச Kindle App’-ஐத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ படிக்கலாம். Kindle Unlimited membership -உள்ளவர்கள்  இலவசமாகப் படிக்கலாம்.  மற்ற அன்பர்கள் விலை கொடுத்து வாசிக்கவேண்டியிருக்கும்!

வாசக, வாசகியரை வரவேற்கிறேன் அன்புடன்.

ஏகாந்தன்

மேலும் மேலும் அணு ஆயுதங்கள்

அமெரிக்காவின் பொதுவான ஆதரவை, குறிப்பாக நிதி உதவியை அவசரமாகக் கோரியிருக்கிறது பிரிட்டன். என்ன.. ஏன் ? கொரோனா பிரச்னையில் நாடு நொடித்துவிட்டதா? அவ்வளவுதானா கிரேட் பிரிட்டன்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்திற்கு கொரோனா பெரிய கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இது வேற விஷயம். ‘ஐரோப்பியப் பாதுகாப்பு’ என்கிற முகமூடியைப் போட்டுக்கொண்டு அமெரிக்கக் கூட்டாளியான பிரிட்டன் வகுக்கும் புதுவகை ஆயுதத் தயாரிப்புத் திட்டம்.

’கப்பற்படையில் சேர்க்கவென, நவீன அணு ஆயுதம் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறோம், நீங்களும் சேர்ந்து கொண்டால் பின்னாளில் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் வரவிருக்கும் பேராபத்தை நேட்டோ கூட்டணி (NATO Alliance) சார்பாக சரியாக எதிர்கொள்ளமுடியும்…’ என்கிறது தற்செயலாகக் கசிந்துவிட்ட ஒரு அதிகாரபூர்வக் கடிதத்தின் சாரம். பிரிட்டிஷ் பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ் (Ben Wallace) தன்னுடைய அமெரிக்க இணைக்கு ரகசியமாக அனுப்பிய அன்பு மடல். அமெரிக்க செனட்காரர்களை (பார்லிமெண்ட் குழு உறுப்பினர்கள்) இப்போது மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்காரவைத்திருக்கிறது இது. ஏற்கனவே அமெரிக்க அணு ஆயுதங்கள், வகை, வகையான ஏவுகணைகள் போன்றவற்றின் நவீனமயமாக்கலுக்காக ட்ரம்ப் அரசின் அமெரிக்க பட்ஜெட் திட்டங்கள், 1 ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

W-93 அழைக்கப்படும் இந்த பிரிட்டிஷ்-வகை ரகசிய அணு ஆயுதம்பற்றி கூடுதல் விபரங்கள் வெளிவரவில்லை. அமெரிக்க-சோவியத் பனியுத்த காலத்தில் (Cold War Period) பேசப்பட்டு, தயாரிப்பில் தாமதிக்கப்பட்ட ’டிசைன்’-ஐ மையமாகக் கொண்டது இது என்கிறது ஒரு தகவல். ஏற்கனவே அமெரிக்கக் கப்பற்படையில் பணியிலிருக்கும் ட்ரைடண்ட் 2 (Trident II) ஏவுகணைகளில், ஏகப்பட்ட பட்ஜெட் பணத்தை விழுங்கிவிட்ட அமெரிக்க W-76 நவீன அணுஆயுதங்கள் இணைக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளன. அமெரிக்க W-76-ன் அழிக்கும் சக்தி, ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமாவின் மீது அமெரிக்காவினால் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட ஆறு மடங்கு அதிகம் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரிட்டன் தயாரிக்கவிருக்கும் W-93, அமெரிக்க W-76-ஐ விடக் கூடுதல் அழிவுசக்தி கொண்டதாக இருக்கும் என்பது நிபுணர்களின் யூகம். இவை விரைவில் தயாரிக்கப்பட்டு, பிரிட்டிஷ் கப்பற்படைக்கான ட்ரைடண்ட் (Trident) வகை ஏவுகணைகளில் வரும் வருடங்களில் பொருத்தப்படவிருக்கிறது.

ஏற்கனவே உலகில் இருக்கும் அணு ஆயுதங்களில் 85%-க்கும் மேலானவை, சூப்பர் வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யாவின் கைவசம் இருக்கின்றன. பிரிட்டன், சீனா, இந்தியா, ஃப்ரான்ஸ், பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகளில் மீதமுள்ள 15% அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பெரிய யுத்தம் நடந்து, அதில் தற்செயலாக ஓரிரண்டு நவீன அணுஆயுதங்கள் வீசப்பட்டாலே போதும், அந்தப் பிரதேசமே அழிந்துவிடும். மீண்டு நிமிர்ந்து எழ பல வருடங்கள் ஆகும். அதுவரை அங்கே புல்கூட முளைக்காது. இப்படிப்பட்டப் பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவை) விதம்விதமாகத் தொடர்ந்து தயாரிக்க, மேம்படுத்த ரகசிய முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இடையிடையே ’அணுஆயுதத்தைக் குறைப்போம், உலக அமைதியைக் காப்போம்’ எனச் சொல்லிக்கொண்டு அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START -Strategic Arms Reduction Talks) என்கிற பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கிடையே அவ்வப்போது கையெழுத்திடப்படுகின்றது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒபாமா, மெட்வடேவ்

தற்பொழுது நடப்பில் இருக்கும் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New START Treaty) முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா (Barack Obama) மற்றும் ரஷ்ய அதிபர் த்மித்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev) ஆகியோரால் 5 பிப்ரவரி 2011-ல் கையெழுத்திடப்பட்டது.5 பிப்ரவரி 2021-ல் முடிவுக்கு வரும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் மேற்கொண்டு பேரழிவு ஆயுதங்களை ராணுவப்பணியில் அமர்த்துவதைத் தவிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் 1550 அணுஆயுதங்களைத் தன் ராணுவம் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதற்குமேல் போகக்கூடாதாம். அடடா, என்ன ஒரு முன் ஜாக்ரதையான பாதுகாப்பு உணர்வு!

கொரோனாவின் கைங்கர்யம் காரணமாக, அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் பொதுமக்கள் ஆதரவு வெகுவாகக் குறைந்து வருகிறது. போகிறபோக்கைப் பார்த்தால், 2021-ல் வாஷிங்டனில் ஜோ பிடென் (Joe Biden) ஜனாதிபதியாக உட்கார்ந்திருப்பார் எனத் தோன்றுகிறது. அவருக்கும் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையே மேற்கொண்டு இன்னொரு ஒப்பந்தத்திற்காகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடக்கும். ஏதேதோ பேசி, ஒரு முடிவுக்கு வந்து, கையெழுத்திடுவார்கள். ஆனால், மற்றொரு பக்கம் மேலும் மேலும் அணுஆயுதங்கள் ஏதோ ஒரு வடிவில் ரகசியமாகத் தயார் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். எந்த ஒரு அணுஆயுத நாடும் இன்னொரு நாட்டை இந்த விஷயத்தில் நம்பத் தயாராக இல்லை. அறிந்தும் தவிர்க்கமுடியாதது போலாகி அழிவை நோக்கி, போட்டி போட்டுக்கொண்டு உலகை நகர்த்திவருகிறார்கள் நாடுகளை ஆள்பவர்கள். எத்தனைதான் தாங்கும் இந்த உலகமும்?

**