”காக்கா, ‘கா..கா..’ன்னு கத்திச்சா.. வடை கீழே விழுந்திருச்சு.. நரி தூக்கிட்டு ஓடிருச்சு..!” – ஆசியகோப்பை 2022-ன் கதைச் சுருக்கம்.
ஃபைனலுக்கு ஒரு நாள் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் (முன்னாள் வீரர்) ரமீஸ் ராஜா, துபாய்க்கு வந்து தங்கள் அணியின் வியூகம், வீர தீர மகாத்மியத்தைப்பத்தி, கூடவே இந்தியா வெளியேற்றப்பட்ட விதம் (சந்தோஷம்) பற்றி அபாரமா கமெண்ட் அடிச்சிவிட்டிருந்தார் (ஸ்ரீலங்கா ஃபைனலில் இருப்பதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை!): ’’இந்தியாவிடம் திறமையான வீரர்கள் அதிகம்தான். அதுக்காக இப்படி அடிக்கடி டீமை மாத்தியிருக்கக்கூடாது. அதான் டீம் செட் ஆகல.. க்ரூப் 4-லேயே வெளியேறும்படி ஆகியிருச்சு. ஆனா.. பாகிஸ்தான் அப்படிச் செய்யல. எங்களோட பெஸ்ட் 11-ஐ மெய்ண்ட்டெய்ன் பண்ணி, முனைப்பா ஆடினோம். வந்துட்டோம் ஃபைனலுக்கு!’’ (இனி என்ன, கோப்பை எங்களுக்குத்தான்!-னு சொல்லவேண்டியதுதான் பாக்கி). வாயைத் திறந்து காக்கா கத்த, வடை கீழே விழ, லங்கா தூக்கிட்டு ஓடிருச்சு..

வியூகக் கணக்குகளையும், திறமைகளையும் தாண்டி, கிரிக்கெட் ஒரு விசித்திர விளையாட்டு. ஒரு சில ஓவர்களில், ஒரு சில விளாசல்களில் கதை மாறிவிடும். எத்தனைப் பார்த்திருக்கிறோம். டாஸ் வென்றபின், முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ஸ்ரீலங்கா 36 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து முழித்தது. 58 ரன் எடுக்கையில் 5 விக்கெட்டுகள் காலி! பாகிஸ்தான் கோப்பையை கையால் தொட்டுவிட்ட நிலை. பச்சை-வெள்ளைகளின் உற்சாக ஆரவாரம். இயற்கைதானே. அப்படித்தான் இருந்தது மைதானத்து நிலமை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் பனுகா ராஜபக்சவும் (Bhanuka Rajapaksa) , ஆல்ரவுண்டர் வனிந்து ஹஸரங்காவும் ஒரு தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருந்தார்கள். பாகிஸ்தானின் பெஸ்ட் பௌலர்களான, நஸீம் ஷா, ஹஸ்னெய்ன், ஷதாப் கான் ஆகியோரை ஆக்ரோஷமாகத் தாக்கி, ரன்களை வேகமாக அடுக்கினார்கள். பாகிஸ்தான் திணறியது. டென்ஷனில் கேட்ச்சுகளை நழுவவிட்டது. 120-130 -ஐத் தாண்டாது ஸ்ரீலங்கா ஸ்கோர் என நினைத்திருக்கையில், 170-ல் போய் நின்றது. ராஜபக்ச 71. சிக்ஸர் 3, பௌண்டரி 6 என சூப்பர் ஆட்டம்.
பாகிஸ்தான் கோப்பைக்கான இலக்கை நோக்கி இறங்குகையில், துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் ஆடினார் நன்றாக. விராட் கோஹ்லியோடு அடிக்கடி ஒப்பிடப்படும் பாக். சூப்பர்ஸ்டார் கேப்டன் பாபர் 5 ரன்னிலே ஓட்டம். அடுத்துவந்த ஃபகர் ஸமனும் (Fakhar Zaman) ரன் எடுக்காமலே காலி. லங்காவின் பிரமோத் மதுஷன் லியனகமகே ( பல் சுளுக்கிக்கிது) படுதுல்லியப் பந்துவீச்சு. 4 விக்கெட்டுகள். போதாக்குறைக்கு மகேஷ் தீக்ஷனா (Maheesh Theekshana), ஹஸ்ரங்காவின் ஸ்பின் வேற. பாகிஸ்தான் தடதடத்தது. நொறுங்கி, 147-ல் வாயைப் பிளந்தது.
வெகுவருஷங்களுக்குப் பின் ஸ்ரீலங்காவுக்கு ஆசிய கோப்பை. நினைத்துப் பார்க்கையில், இந்தியா, பாகிஸ்தானோடு ஒப்பிடுகையில் அதிகம் பேசாத லங்கர்கள். முனைப்போடு இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள். கோச் க்றிஸ் சில்வர்வுட்டும் (Chris Silverwood), கேப்டன் தஸுன் ஷனகாவும் (Dasun Shanaka) காட்டிய தீவிரம். உழைப்பு. கோப்பைக்குத் தகுதியானவர்கள்தான் ஸ்ரீலங்கா அணி.
Asia Cup Final -Score: Sri Lanka 170 for 6. Pakistan 147 all out.
**