முன்னமே எழுந்துவிட்டதனால்..

காலையில் முன்னமே எழுந்துவிட்டால், முந்திக்கொண்டு வந்து விழுகிறதே வார்த்தைகள்.. ம்.. சரி.. மூன்றுதான் :

 

இடமாறுகேட்டல் பிழை ?

 

நல்லவற்றின் மீது ஆசைப்படவேண்டும்

கெட்டதைக் கண்டால் கோபம் வரவேண்டும்

சொல்லிச் சென்றாரே மகாபெரியவர்

காதில் சரியாக விழலியோ ஜனங்களுக்கு

நல்லவற்றைக் கண்டாலே கடுப்பும்

கெட்டவைகளின் மேல் தீரா மோகமும்

தட்டாது உண்டாகிறதே இதுகளுக்கு?

 

**

டேய்.. ஏண்டா இப்படி ?

 

கிட்டாதாயின் வெட்டென மற !

பட்டெனப் போட்டாளே ஒரு பாட்டி

படிக்கவில்லையோ ஒருவேளை – இப்படி

அரிவாளைத் தூக்கிக்கொண்டு

அலையறதுகளே அறிவில்லாமல் ?

 

**

கரைந்து கரைந்து நெஞ்சம் ..

 

பறந்துவந்து உட்காரும் காகம்

பரபரக்கிறது கரைகிறது சத்தமாய்

ஏதேதோ சொல்கிறது அவசர அவசரமாய்

பாவிக்குப் புரியவில்லையே

பறவையின் பாஷை ?

 

**

இந்தியா  இப்போது ஒரு விண்வெளி வல்லரசு

இன்று (27/3/19) காலையில், மூன்றே நிமிடங்களில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட  ‘மிஷன் ஷக்தி’ (Mission Shakti)  எனக் குறிக்கப்பட்ட ஒரு சிறப்பு ஏவுகணை (ASAT) சோதனையில், இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்தி மையம் (Defence Research and Development Orgnization of India) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக   (ISRO) விஞ்ஞானிகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துணைக்கோளை (Live Low-orbiting Earth Satellite) துல்லியமாகத் தாக்கித் தகர்த்தெறிந்தனர். விண்வெளியிலேயே யுத்தம் செய்ய நேர்ந்தாலும் (Space Wars) ,  அதற்கான நிபுணத்துவம், வல்லமை  எங்களிடம் இருக்கிறதென உலகிற்கு அறிவித்திருக்கிறது இந்தியா.  ‘இந்தியா இப்போது ஒரு விண்வெளி வல்லரசு (Space Superpower)’ என்கிற  அறிவிப்பை தனது சிறப்பு செய்தியறிவிப்பு மூலம் நாட்டுமக்களுக்கு சற்றுமுன் தெரிவித்தார் பிரதமர்.
கடும் போர் ஆயுதங்களான ஏவுகணைகளில், பொதுவாக சில வகைகள் உண்டு: தரையிலிருந்து ஏவப்பட்டு போர்விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் (surface to air missiles), போர்விமானங்களிலிருந்து ஏவப்பட்டு விமான இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் (air to air missiles (அபிநந்தன் MIG-21-லிருந்து ஏவிய R-73 இத்தகையதுதான்), தரையிலிருந்து ஏவப்பட்டு சில ஆயிரம் மைல்கள் வரை  சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் (IRBMs-Intermediate Range Ballistic Missiles), மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Inter-Continental Ballistic Missiles) போன்றவை. இதுதவிர, குறுகியதூரமே சென்று தாக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்கள்/நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எனவும் உண்டு.
     ASAT – என்றால் என்ன? Anti-Satellite Missiles. இது வேற லெவல் ! அதாவது  எதிர்கால விண்வெளி யுத்தத்திற்கான ஆயுதங்கள் என  சுருக்கமாகச் சொல்லலாம்.  ராணுவ மற்றும் அழிவு வேலைகளைச் செய்யும் எதிரிநாட்டு (சீனா போன்றவை எனக்கொள்க) துணைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் விண் ஆயுதங்கள் இவை. இத்தகைய விண்வெளி ஆயுத வல்லமைகொண்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா  மற்றும் சீனா  என மூன்று நாடுகள் மட்டுமே இதுநாள்வரை கோலோச்சிக்கொண்டிருந்தன. கவனியுங்கள் – பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், ஃப்ரான்ஸ் போன்ற தொழில்நுட்பமிகு நாடுகளும் இதில் இல்லை.  இந்த சிறப்பு நாடுகளின் வரிசையில் (Elite Club) இந்தியா இன்று சேர்ந்துகொண்டது என்பதே இதன் முக்கியத்துவம். ’ஒவ்வொரு இந்தியனும் நினைத்துப் பெருமைப்படவேண்டிய நாளிது’ என மேலும் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோதி.
**

உனக்கும் எனக்கும் இடையே..

சனிக்கிழமை அதிகாலை. பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வேங்கடரமணர் கோவில். இரண்டு வரிசையாக சன்னிதிக்கு முன் ஆண்கள், பெண்கள் என சுமார் இருபது பேர். சனிக்கிழமை காலைநேரங்களில் ஆண்களில் எப்போதும் பிரதானமாக நின்று சகஸ்ரநாமம், வேங்கடேச ஸ்தோத்ரமெல்லாம் உறக்கச்சொல்லும் பெரியவர் அன்று வரவில்லை.  முன்னின்ற பெண்களில் சிலர் கணீரென ஆரம்பிக்க, மற்றவர்கள் சேர்ந்து சொல்லிமுடித்தார்கள். என்னைப்போல்  நின்றிருந்த ஏதுமறியா ஆண்கள் சிலர், சேர்ந்துபாடுகிறோம் பேர்வழி என்று கெடுத்துவைக்காமல்,  வாயைத் திறக்காமல், பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இறைவனின் புகழைக் காதால் கேட்டுமகிழ்ந்தோம். இன்னும் திரை விலகவில்லை. சில நிமிடங்கள்தான், ஆறரை மணிக்கு, பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆரம்பிக்கும்.

எனக்கு முன்னே நின்றிருந்த பெண்மணி என் பக்கமாகத் திரும்பி, நாம் உட்கார்ந்துகொள்ளலாமே.. என்பதாகச் சொல்லிவிட்டு மெல்ல உட்கார, நான் இடம்விட்டு,  இன்னும் பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும்  உட்கார ஆரம்பித்ததை கவனித்து,  அமர்ந்துகொண்டேன். எனக்கு முன்னே ஆறேழு பேர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பரபரப்பேதுமின்றி, நிதானமாக திருமஞ்சனத்தை தரிசிக்கலாம். தொண்ணையில் வாழைப்பழம், தேன் கலந்த பிரசாதமும் கிடைக்கும். பிறகு வீடு நோக்கிய நடை..

இரண்டு  மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். எல்லோரும் திரை விலகக் காத்திருந்தார்கள்.  என் முன்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி திடீரெனத் திரும்பி ‘நான் உங்களுக்கு மறைக்கிறேனா?’ என்றார். கொஞ்சமும் இதை எதிர்பாராததால், சற்றே திடுக்கிட்டவனாய், ‘இல்லையே.. நீங்கள் எதையும் மறைக்கவில்லை‘ என்றேன் அவசரமாக. அவர் திருப்தியுற்றவராய் சன்னிதிக் கதவை நோக்கியிருந்தார். எல்லோரும் தனக்கு சாமி சரியாகத் தெரிகிறதா அல்லது தெரியவேண்டுமே என்றுதான் முன்னோக்கி எம்புவார்கள்.. கூர்ந்து பார்க்க முனைவார்களே தவிர,  பின்னாலிருக்கிறவனுக்கு நாம் மறைக்கிறோமா என்கிற சிந்தனை வருமா என்ன? எத்தனை பேருக்கு வரும்?

எங்கோ இதுவரையில் அலைந்துகொண்டிருந்த மனம், இப்போது இதற்குத் திரும்பியது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்ததில்.. மற்றவர்களா நமக்கு மறைக்கிறார்கள்? நமது மனமேதானே இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறது எப்போதும். பெருமாளுக்கும் நமக்கும் இடையில் திரையாய் தொங்கிக்கிடப்பது இந்தப் பாழாய்ப்போன மனம்தானே. கண் என்னவோ, கோவிலில் கடவுளின் விக்ரஹ உருவைப் பார்க்கத்தான் செய்கிறது. மனம் பெரும்பாலும் வேறெதையோ அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது? மனம் பார்க்காத காட்சியை, கண்மட்டும் பார்த்து என்ன பயன்? அதுவா ஆண்டவன் தரிசனம் ? ஏதேதோ சிந்தனை ஓட, முன்பு படிக்க நேர்ந்த தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்வின் நிகழ்வொன்று, நினைவடுக்குகளின் மேலேறிப் படபடத்தது..

         பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நாள். திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகள் ராமா.. ராமா.. என லயித்திருக்கிறார் வழக்கம்போல. ராமனைத் தவிர வேறொன்றுமில்லை இவ்வுலகில்..அவர் மனதில். அப்போதுதான் அந்த இளைஞன் அங்கு வந்து சொல்லிச் சென்றிருந்தான். ஒவ்வொரு கோவிலுக்காகப் போய் வருகிறான் போலும். திருவேங்கடத்துக்குப் போனானாம். அங்கே அவன் கண்டது கண்கொள்ளாக் காட்சியாம். ராமனைப்போலவேதான் அந்தக் கடவுளும் இருந்தாராம். ஏகப்பட்ட பொருத்தங்கள் என்றெல்லாம் சொல்லி அவரது சிந்தனையைத் திருப்பிவிட்டுவிட்டுப் போய்விட்டான் வந்தவன். என்ன, நம் ராமனைப்போல் இன்னொரு தெய்வமா? அப்படியா இருக்கிறது உண்மையில் எனச் சிந்தித்த மனம், போய் பார்த்துவிடவேண்டும் என்கிற நிலைக்கு வந்துசேர்ந்தது. கிளம்பிவிட்டார் மூன்று சிஷ்யர்களையும் கூட்டிக்கொண்டு.

இந்தக் கால பஸ் சர்வீஸா, காரா என்ன, அப்போதெல்லாம்.  பாதையைக் கேட்டுக்கொண்டே கால் கடுக்க பொழுதெல்லாம் நடப்பது, களைத்தால் எங்காவது வழியில் தங்குவது, இளைப்பாறிக்கொள்வது, மீண்டும் நடப்பது.. இதுதான் பயணம்..திவ்யதேசப் பிரயாணம். பாதையெல்லாம் சரியாக இருக்கிறதோ என்னவோ, அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.. போய்விடவேண்டியதுதான் என அந்த வயதான காலத்திலும் மனதில் எழுந்தது ஒரு பொறி. உருவானது ஒரு உத்வேகம்.

ஒருவழியாக திருவையாறிலிருந்து திருவேங்கடத்துக்குண்டான நீண்ட தொலைவு, ஏதேதோ வழிச் சிரமங்களையெல்லாம் கடந்து, மலையேறி, திருமலைக்கு வந்தாகிவிட்டது. குளுகுளுவென்றிருக்கிறதே இங்கே..!  இதோ.. இதுதானா அவனிருக்கும் இடம். தூரத்திலிருந்து பார்க்கையிலேயே களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டதே. கோவிலுள் நுழைந்து கருடப் பெருமானையும் வணங்கித் தாண்டியாகிவிட்டது. இனி அவனுடைய தரிசனம்தான். நாம் கேள்விப்பட்ட அந்த வேங்கடரமணன். ராமனை ஒத்திருப்பவனா? அப்படி ஒரு அழகா இவனும் ?  ஆசையோடு பார்க்கையில்.. அவசரமாக விழுந்துவிட்டது திரை. அதிர்ச்சி. அவருடைய சிஷ்யர்களுக்கு  சுள்ளென்று வந்தது கோபம். அதற்குள் என்னய்யா திரை? ஏனிந்த அவசரம்? அர்ச்சகர்களை நோக்கிக் கேள்விகள் பறக்க, நொடியில் பெரும் வாக்குவாதமாக மாறியது.

தியாகராஜ ஸ்வாமிகள் குறுக்கிடுகிறார். தன் சிஷ்யர்களைத் தடுக்கிறார். பெருமாளை தரிசிக்க வந்திருக்கிறோம். சாந்தமாக இருப்பதல்லவா முக்கியம்?  கோபத்தில் வார்த்தைகளை விட்டுக்கொண்டு நிற்கலாமா? கடிந்துகொள்கிறார். சிஷ்யர்கள் ஒருவழியாக அமைதியாக, எனக்கு ஏன் இப்படி.. சிந்தனை வசப்படுகிறார் தியாகராஜர்.

திரையா எம்பெருமானை மறைத்திருக்கிறது? அது என்ன திரை? அந்த ராமனா இங்கிருப்பதும்? அவன் தானா இவன்.. என சந்தேகப்பட்டுக்கொண்டே வந்தது  மனம். குழப்ப எண்ணமதைக்கொண்ட மனமல்லவா  திரையாகத் தொங்குகிறது? சஞ்சலமுள்ள மனசை வைத்துக்கொண்டு தரிசனத்தை யாசித்தால் எப்படிக் கிடைக்கும்? யோக்யதை வேண்டாமா? மனம் கலங்குகிறார். கண்களும் சேர்ந்துகொள்கிறது. சிஷ்யர்கள் கவனித்துப் பதறுகிறார்கள். நம் குருவிற்கு என்னவாயிற்று? தொலைதூரத்திலிருந்து மெனக்கெட்டு வந்தும் தரிசனம் கிடைக்கவில்லையே என்று அழுகிறாரோ..

தியாகராஜ ஸ்வாமிகளின் மன நெகிழ்வு, இறைவனை இறைஞ்சும் வார்த்தைகளாக உருக்கொள்கிறது. நாதம்  நாடி வருகிறது.. பாடுகிறார் பரம்பொருளை நினைத்தேங்கி, மனமுருக வேண்டி..

தெர தீயக ராதா – நா லோனி

திருப்பதி வேங்கடரமணா – மத்சரமுனு

தெர தீயக ராதா ..

 பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதிநா லோனி

தெர தீயக ராதா ..

 (திரை விலக்கமாட்டாயா-எந்தன்

திருப்பதி வேங்கடரமணா.. தீயமனத்

திரை விலக்கமாட்டாயா..

பரமபுருஷ தர்மமான மோக்ஷம்தனை

அடையவிடாது தடுக்கும் எந்தன்

திரைவிலக்க மாட்டாயா..)

உருகும் பக்தனைப் பார்த்து உளமகிழ்கிறார் திருமால். எரிந்து சரியுமாறு செய்கிறார் இடைநின்ற திரையை. அர்ச்சகர்கள் அதிர்ந்து பார்க்க, அதிவிசேஷமான தரிசனம் திருவையாறு ஸ்வாமிக்கு. ’ஆஹா..வேங்கடரமணா..! நீயே என் ராமன். நீயே பரந்தாமன். என்னே என் பாக்யம்.. என்னே என் பாக்யம்’’  கரைகிறார் தியாகராஜர், திருமலை சன்னிதியில்.

**

பாலகோட் தாக்குதலின் அதிர்வுகள்

அண்டை நாடு இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், மிஞ்சி மிஞ்சிப்போனால் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து இந்தியத் தரைப்படை தாக்குதல் ஒன்றை நிகழ்த்தக்கூடும் என்பதுதான் அதன் உச்சபட்ச எதிர்பார்ப்பு; தயார்நிலை. மிகவும் பாதுகாப்பாக, ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத மலைச்சரிவில், பாலக்கோட்டின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளுக்கான பயிற்சிக்கூடம், ஏவுதளம் பற்றி ’ஒருவேளை இந்திய உளவுத்துறை அறிந்திருந்தாலும், நமது நாட்டுக்குள் புகுந்து ஹிந்துஸ்தான் ஒருபோதும் தாக்காது.. ஏனென்றால்,  நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறதே. ஹிந்துஸ்தான் பயப்படுமே!’ என்பது அவர்களது ராணுவத்தலைமையின் சிறுபிள்ளைத்தனமான சிந்தனை. இப்படித்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான கதை-வசனத்தை எழுதிவைத்து நமுட்டுச் சிரிப்புடன் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தது..
ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்குப்பின்னும் இந்தியா பதிலடி கொடுக்கத் தயாராகும்போதெல்லாம், இந்தியாவை பயமுறுத்துவதாக (கூடவே உலகை எச்சரிப்பதாகவும்) நினைத்து அடிக்கடி உச்சரிக்கும் இந்த ’அணுஆயுதப்போர் அபாயம்’ பற்றிய பாகிஸ்தானின் ‘nuclear bluff’ -ஐ நேரிடையாக இந்தமுறை இந்தியா எதிர்கொண்டது. இந்தியப் பிரதமரின் தலைமைப் பண்பு, ஆலோசித்து சரியான முடிவெடுக்கும் இயல்பு ஆகியவை இங்கே காணக்கிடைத்தன. தீவிரவாதம் விளைவித்த நெருக்கடி நிலையில் இந்தியா நிகழ்த்திய தாக்குதல், மூன்று விஷயங்களை உறுதிசெய்ததாக ராணுவ நிபுணரும் முன்னாள் பிரிகேடியருமான ராஜீவ் வில்லியம்ஸ் டிஎன்ஏ-யில் எழுதியிருக்கிறார். அவை இவை: 1)சரியான இலக்கைத் தெரிவுசெய்தது 2) தனது சிறப்புப்படைகளில் ஒன்றைத் திறம்படப் பயன்படுத்தியது 3) மிகக்குறைந்த காலகட்டத்திலும் திருப்பியடிக்கும் திறன்கொண்ட தேசம் இந்தியா என நிரூபித்தது (இதுகாறும் இந்தியாவின் உலகலாவிய பிம்பம் ’இந்தியா ஒரு soft power. யோசிக்குமே தவிர, திருப்பித் தாக்காது. பேசியே பொழுதுபோக்கலாம்’ என்பது).
புல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ’இந்தியாவே..விடாதே! பழிக்குப்பழி! திருப்பித் தாக்கு!’ என ஆவேசக்குரல்கள் இந்திய மக்களிடமிருந்தும் வெளிநாடுவாழ் இந்தியரிடமிருந்தும் உயர எழுந்து அதிர்ந்தன. ’உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும் கனல்கிறது..’ என்றார் இந்தியப் பிரதமர் மோதி. வெறும் வார்த்தையல்ல அது.  இந்தியாவின் Cabinet Committee on Security-ஐ (பிரதம மந்திரியோடு அவரது சீனியர் அமைச்சர்களான பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட பாதுகாப்பு அமைப்பு) உடன்கூட்டி ஆலோசித்தார். முப்படைத் தளபதிகளுடன், எடுக்கப்படவேண்டிய ராணுவ நடவடிக்கை, அதன் பின்விளைவுகள் எனத் தீர ஆலோசித்தார் பிரதமர். எதிர்நடவடிக்கை இல்லையெனில், பாகிஸ்தானுக்குத் துளிர்விட்டுப்போகும். எல்லைதாண்டிய எதிர்த்தாக்குதல் அவசியமே  என முடிவெடுக்கப்பட்டது.
பாலக்கோட் தாக்குதல்பற்றி இப்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி பிரதமர் இந்திய வான்படைத் தளபதிக்கு, தகுந்த எதிர்த் தாக்குதலுக்கான உத்தரவிட்டிருக்கிறார். அதில் ஒரு caveat -எச்சரிக்கையும் : நமது பதிலடி தீவிரவாதத்திற்கு எதிரானது மட்டுமே என்பதை உலகிற்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்திய வான்தாக்குதல் அமையவேண்டும். அதாவது பாகிஸ்தானின் சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி அல்லது ராணுவ தளங்கள் தாக்கப்படக்கூடாது. Civilian losses கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும் என்பதே அது. தாக்குதல் எப்படி, எந்த நாளில் நடத்தப்படவேண்டும் என்பதை விமானப்படை தீர்மானம் செய்துகொள்ளட்டும்.
வேவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றுதான் பாலகோட்.  பாகிஸ்தானின் கிழக்கே கைபர் பக்தூன்க்வா (Khyber Pakhtunkhwa) மாநிலத்தில் இருக்கிறது. பாலகோட் டவுனின்  வெளிப்புறத்தில் வனப்பகுதியில், மலைமுகட்டில் இருக்கும் இடம். மக்கள் நடமாட்டம் அரிது என்பது இது தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று.  2004-2005 வாக்கில் துவக்கப்பட்ட முக்கியமான டெர்ரர் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் (மதராஸா என்கிற போர்டைப் பக்கத்தில் தொங்கவிட்டுக்கொண்டு). வேறு பள்ளிகளில் தீவிரவாத அடிப்படைப்படிப்பு படித்துவிட்டு, மேற்படிப்பு (!)க்காக வருபவர்கள் இங்கே பயிற்சி தரப்படுவார்கள். சீனியர் ட்ரெய்னர்களிடம், ஆர்மி-ஓய்வு பெற்றவர்களிடம் அழிவுப்பாடங்களைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் பாகிஸ்தானின் புண்ணிய ஸ்தலம். இதனைப்பற்றிய குறிப்பு ’தீவிரவாதிகளுக்கான அதிபாதுகாப்பு சிறையான குவந்தானமோ சிறை’ (guantanamo)யின் (க்யூபாவில் உள்ளது) அமெரிக்க கமாண்டோ தலைவரால் எழுதப்பட்ட பாகிஸ்தானில் டெர்ரர் நெட்-வர்க்குகள்பற்றிய ரிப்போர்ட்டில்  காணப்படுகிறது.
பாலகோட் பரிகார ஹோமத்திற்கு பிப்ரவரி 26 அதிகாலை ஏன் தெரிவு செய்யப்பட்டது? அந்த நாட்டின் பல்வேறு பயிற்சிக்கூடங்களிலிருந்து சுமார் இருநூறு தீவிரவாதிகள் அதற்கு முந்தைய தினம்தான் பாலக்கோட் பயிற்சிக்கூடத்தில் சேர்வதாக ரகசியத்தகவல் கிடைத்திருந்தது. கிட்டத்தட்ட 300-க்கும் குறையாமல் பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பது விமானப்படையின் அனுமானம். போட்டுத்தள்ள இருபத்தாறாம் தேதி அதிகாலைக் குறிக்கப்பட்டது. இந்திய அரசு/ராணுவ அதிகாரத்தின் உச்சியில் மொத்தம் ஏழுபேரே இதனை அறிந்திருந்தார்கள். ராணுவ ரகசியம். காரியம் வெற்றிகரமாக முடியும்வரைக் காக்கப்பட்டது.
அந்த அதிகாலையில், இந்தியாவின் ரஷ்யத் தயாரிப்பு SU-30 (ஸுகோய் 30) போர்விமானங்கள் பஞ்சாபில் தங்கள் தளத்திலிருந்து எழும்பி, பாகிஸ்தானின் வசமிருக்கும் காஷ்மீர் நோக்கிப் பறப்பதாக போக்குக்காட்டின. இந்திய விமானங்களைக் குறிவைக்கும் பாகிஸ்தானி ரடார்களை திசை திருப்புவதில் கெட்டிக்காரத்தனம்! ஆக்ரா விமான தளத்திலிருந்து இஸ்ரேலின் Heron  Drone விமானங்கள் எல்லையோர எதிரித் தரைவழி பீரங்கித் தாக்குதல்களை கண்காணித்துப் பறந்துவர, பனிரெண்டு மிராஜ் 2000 போர்விமானங்கள் க்வாலியர் விமானதளத்திலிருந்து சீறி எழுந்தன. நிமிஷத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டி, பாலகோட்டின் மலைமுகடுகளின் மேல் கடந்து அடிவாரம் நோக்கிக் டைவ் அடித்து, தங்கள் இலக்குகளை மோப்பமிட்டு, ஸ்பைஸ்-2000 லேஸர் குண்டுகளால் துளையிட்டுத் தாக்கின. இத்தகைய precision bombs, வானிலிருந்து ஸாட்டலைட் மற்றும் ஜிபிஎஸ் கம்யூனிகேஷனால்  இலக்கு நோக்கித் துல்லியமாகச் செலுத்தப்பட்டு தாக்கும் திறன் கொண்டவை. இவை அறுபது கி.மீ. தொலைவிலிருந்தும் ஏவப்படக்கூடியவை.   பெருங்கட்டிட அமைப்புகளின் கூரையில் மூன்று மீட்டர் விட்டத் துளையிட்டு உள்ளிறங்கி வெடித்து பதுங்கியிருக்கும்  மனிதவெடிகுண்டுகளை அழித்திருக்கின்றன. (2015-ல் இந்தியா, இஸ்ரேலிடமிருந்து ஸ்பைஸ்-2000 அதிநவீன குண்டுகளை இறக்குமதி செய்திருந்தது).
இந்தியாவின் ப்ரிமியர் ஆங்கில இதழான ‘இந்தியா டுடே’ நடப்பு இதழில் (மார்ச் 25, 2019), பாலகோட்டில் இருள் விலகா அந்தக் காலையில் நடந்தவற்றை கட்டுரை, க்ராஃபிக் படங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் எழுதியிருக்கிறது. பாலக்கோட் பயங்கரவாதிகள் பயிற்சிக்கூடம்/ஏவுதளம் எதிர்பார்த்தபடி  ஒரு நவீன காம்ப்ளெக்ஸ் என்கிறது. பத்து பகுதிகளாக விரிந்திருந்த மூன்று ஹால்கள், பயிற்சிக்கூடங்கள், கமாண்டர்கள்/பயிற்சியாளர்களுக்கான தனி அறைகள், கற்றுக்கொள்பவர்களுக்கான தங்கும் விடுதிகள், கேண்டீன், டிஸ்பென்சரி, நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள் அங்கிருந்தன. தீவிரவாதிகளுக்கான தங்கும்விடுதி-ஹால் இணைந்த கட்டிடப்பகுதியில் மூன்று, உயர்தரப் பயிற்சியாளர்களுக்கான விடுதியின் மீது ஒன்று, காம்ப்ளெக்ஸின் வேறொரு பக்கத்தில் காணப்பட்ட மற்றொரு ஹால்-தங்கும்விடுதியில் ஒன்று எனத் துல்லியமாகக் கூரையைக் கிழித்துத் தாக்கியிருக்கின்றன ஐந்து சக்திவாய்ந்த ஸ்பைஸ் குண்டுகள். மொத்தம் 300 (பயங்கரவாதிகள்/பயிற்சியாளர்கள்/பாக் ஆர்மி அதிகாரிகள் சிலர் உட்பட)   அந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதில் 93 பேர் அடிப்படை வகுப்புகளில் இருப்பவர்கள், 81 பேர் ராணுவ பயிற்சிபெறுபவர்கள் மற்றும் 25 பேர் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்பவர்கள் மற்றும் பனிரெண்டு சீனியர் பயிற்சியாளர்கள்/ராணுவ வீரர்கள் – என, விபரங்கள் தந்திருக்கிறது இந்தியா டுடே. இந்த ஐந்து குண்டுகளை மிஞ்சி, ஆறாவது குண்டு திட்டமிட்டபிடி வீசப்படாமல் ஒரு  மிராஜ்-2000 இந்திய தளத்திற்குத் திரும்பிவிட்டது. காரணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு நிமிடத்தில் சரியாக இலக்கைக் குறிவைத்து இறக்கத் தவறியதுதான் என்று சொல்லப்படுகிறது.
காலை மூன்று மணிக்கு தாக்குதல் ஏற்பாடு பற்றி பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அரைமணி நேரம் கழித்து ‘இலக்கு அடையப்பட்டுவிட்டது’ (mission accomplished) மற்றும் எந்தவித இழப்புமின்றி, திட்டமிட்டபடி இந்திய விமானங்கள் தங்கள் தளங்களுக்குத் திரும்பிவிட்டன எனப் பிரதமருக்கு நற்செய்தி சொல்லப்பட்டது. கேட்டபின், அவர் வழக்கம்போல் காலை நான்குமணிக்கு யோகா செய்யச் சென்றுவிட்டார்!
இந்தியா இதுபற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் காலை ஆறுமணி வாக்கில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ட்விட்டர் அலற ஆரம்பித்தது. முதலில் வந்த செய்திகள் இந்தியா தாக்கிவிட்டது என்றுகூடச்  சொல்லவில்லை. ’மோதி நே மார் தியா! (Modi ne maar diya ! (மோதி அடிச்சுப்புட்டான்) ’ என்றுதான் ஓலமிட்டன! சர்வதேச அளவில் செய்தி பரவ ஆரம்பித்த பிறகுதான், இந்தியா காலை பதினோரு மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியுறவுச் செயலர்மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தது. ‘இது தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி. பாகிஸ்தான் மக்கள், ராணுவத்துக்கெதிரானது அல்ல’ என்றது இந்திய அறிக்கை.
சில மணி நேரங்களில் ’இந்தியாவின் தாக்குதல் ஒரு தீவிரவாத எதிர்ப்புச் செயல், அதற்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உண்டு’ என்றார் அமெரிக்காவின் ட்ரம்ப். மற்ற மேலைநாடுகளும் ’ஆமாம்!’ என வழிமொழிந்தன. உலகெங்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலை மேலும் தூண்டப்பட்டது. ஐ.நா.வின் ஜெனரல் அஸெம்பிளியும் கிடுகிடுக்க, பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா கொண்டுவந்த தீர்மானம் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச வெளியில் இந்தியா தன் ராஜீய வெற்றியை (diplomatic victory) மீண்டும் பதிவுசெய்தது.
**

எதிரிவசம் அபிநந்தன் இருக்கையில்..

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் பாராச்சூட்டில் குதிக்க நேர்ந்து, எதிரிகளிடம் பிடிபட்டிருப்பது ஆரம்பத்தில் இந்திய விமானப்படைக்குத் தெரிந்திருக்கவில்லை. தங்களது மிக்-21 போர்விமானம் ஒன்றை இழந்துவிட்டதாகவும், போர்விமானி பற்றிய தகவல்பெற முயற்சிப்பதாகவும்  இந்தியா அறிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், எல்லைக்கப்பால் இருந்து பாகிஸ்தானின் கொக்கரிப்பு கேட்க ஆரம்பித்தது. ’இரண்டு இந்திய விமானங்களை  சுட்டுவீழ்த்திவிட்டோம்.  இந்திய விமானிகள் இருவர் எங்களிடம் பிடிபட்டுவிட்டார்கள். ஒருத்தர் கைதாகி இருக்கிறார். இன்னொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று பாகிஸ்தான் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்தது. பாக்.கின் ஒரு எஃப்-16 போர்விமானத்தை வீழ்த்திவிட்டதாக இந்தியா அறிவித்ததற்கு பதிலாக, பாகிஸ்தானிகளைக் குஷிப்படுத்த கொடுக்கப்பட்ட அறிக்கை இது என்பது உலகறிந்த ரகசியம்.
அடுத்த சிலமணிநேரத்தில் பாக். பிரதமர் இம்ரான்கானும், வெளியுறவு மந்திரி குரேஷியும்,  ஏகப்பட்ட குஷியில் இருந்ததாகத் தெரியவந்தது அவர்களது பேச்சுகளிலிருந்து. இந்திய வீரன் நம்மிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டான். இனி இந்தியாவால் முண்டமுடியாது. பேச்சுவார்த்தைக்கு வரத்தான் வேண்டும். நாம் சொல்கிறபடியெல்லாம் ஆடவேண்டும்.   நம் வேலையை இனிக் காண்பிக்கலாம் என்கிற பேடித்தனம் – எதிரிநாட்டுக்கு எப்போதுமே கூடிவருவது. அதன் குலம் அப்படி. குரேஷி அதிகாரபூர்வமாகச் சொல்லவும் செய்தார்; ‘ ஓ! உங்கள் விமானியை விடுவிக்கவேண்டுமா.. விடுவிப்போம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற காரியம் எல்லாம். ஆனால் காஷ்மீரைப்பற்றி நாங்கள் பேசமாட்டோம்!’
இந்தியா புரிந்துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நரேந்திர மோதி. இந்தியா தன் எதிர்நிலையைத் தெளிவாகக் காண்பித்தது. டெல்லியில் உள்ள பாக். ஹைகமிஷனரை சௌத் ப்லாக்கிற்கு (இந்திய வெளியுறவு அமைச்சகம்) ஓடிவரச் செய்த இந்திய அரசு, பாகிஸ்தானை அதிகாரபூர்வமாகக் கடுமையாக எச்சரித்தது. ’எங்கள் விமானியின் தற்போதைய நிலைபற்றிய அறிக்கை  உடன் வேண்டும். தாமதம் ஏதுமின்றி, அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும். இது சம்பந்தமாக எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராகாது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவித இழுத்தடிப்பையும் இந்தியா சகித்துக்கொள்ளாது’ என்பது அதன் சுருக்கம். இது நடந்தது 27 பிப்ரவரி மதியம். விமானத் தாக்குதல் நடந்த சிலமணி நேரங்களில்.
அடுத்த கட்டமாக, எந்தவொரு எமர்ஜென்சிக்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியா தன் முப்படைகளுக்கும் உத்தரவிட்டது. குறிப்பாக கப்பற்படைத் தளபதிக்கு சில உத்திரவுகள். பதற்றம் விளைவித்த உஷ்ணம் அளவைத் தாண்டி சென்றுகொண்டிருக்கையில், இந்தியா P-5 நாடுகளுக்கு (அதாவது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருக்கும் வல்லரசு நாடுகள்) டெல்லியிலுள்ள அவர்கள் தூதர்கள் மூலமாக அவசரச்செய்திகளை அனுப்பியது. ’ பிடிபட்டிருக்கும் எங்கள் வீரரை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் பேரம் பேச முனைகிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தீவிரவாதத்துக்குத் துணைபோகும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இந்திய அரசோ, மக்களோ இல்லை. எங்கள் வீரருக்கு ஏதும் நேர்ந்தாலோ, திரும்புவது தாமதிக்கப்பட்டாலோ,  எல்லையின் பதட்டநிலையை வேறொரு தளத்திற்கு நொடியில் நகர்த்துவோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி உத்திரவுக்காக எங்கள் ராணுவம் அடிநகர்த்திக் காத்திருக்கிறது. பாகிஸ்தானை நாங்கள் ராஜீய ரீதியாக எச்சரித்துவிட்டோம். சர்வதேச வெளியில் நாங்கள் வெளியிடும் முன்னறிவிப்பு இது. பாகிஸ்தானுக்கு இன்னும் 24 மணிநேரமே அவகாசம்’ என்றது இந்திய எச்சரிக்கையின் சாராம்சம்.
இந்நிலையில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) அமெரிக்காவின் தன் இணையோடும், மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ (US Secretary of State Mike Pompeo) வுடனும் ஹாட்-லைனில் தொடர்பிலிருந்தார். இந்தியாவின் கடுமையான, நிர்ணயிக்கப்பட்ட முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாம்பியோவினால்  தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -உடனான பேச்சுவார்த்தைக்காக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இருந்தார்.  இப்படி பாரிஸ், லண்டன், டோக்யோ, டெல் அவிவ் (இஸ்ரேல்), பீஜிங் என வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து இந்தியாவின் தலைமைக்கு அவசர அழைப்புகள், ஆலோசனைகள், அதற்கான இந்திய மறுப்புகள், விவரிப்புகள் என அடுத்த சிலமணிநேரங்கள் தீயாய் எரிந்தன. ‘உலகம் வியட்நாமில் வடகொரியா-அமெரிக்கா இடையே என்ன பேச்சு நடக்கிறது என்று கவனிக்கும் வேளையில், தெற்கு ஆசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) அணுஆயுதப் போர் வெடித்துவிடுமோ என்கிற பயம் நிஜமாகிவிடும் போலிருக்கிறதே எனப் பதறினர் ஜப்பானியர்கள். ஏற்கனவே அணுஆயுத அழிவினை நேரிடையாக சந்தித்தவர்களாயிற்றே.
இந்த நிலையில், வல்லரசு நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த இடையறாத ராஜீயரீதியான அழுத்தம் வேதனையை உச்சத்திற்கு கொண்டு செல்ல, பாகிஸ்தான் நடுக்கம் கொண்டது. இந்தியா உள்ளே புகுந்து அடிக்குமானால், பாகிஸ்தான் தன் மக்களுக்குமுன்னால் மீசையை முறுக்கிப் பிரயோஜனமில்லை. அதனால் நீண்டநாள் போரைத் தாக்குப்பிடிக்கமுடியாது என்பது ராணுவ வல்லுனர்க்ளின் கருத்துமாகவும் இருந்தது. தூங்கமுடியா இரவில் பாக் பிரதமர் இம்ரானிடமிருந்து இந்தியப் பிரதமர் மோதிக்கு ஹாட்லைன் கால். இந்தியப் பிரதமரிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ். மீண்டும் ஒரு முயற்சி. வீணானது. அழுத்தமான மௌனம் காண்பித்த சீனாவும் நிலைமை கட்டுக்கடங்காது போகாதிருக்கவேண்டும் என்கிற கவலையில் பாகிஸ்தானுக்கு ஆலோசனை கூறியிருந்தது. இதற்கிடையில் பாக்.கின் நீண்டநாள் நண்பனான சவூதி அரேபியாவிடமிருந்தும் அதற்கு எச்சரிக்கையே கிடைத்தது.
பிப்ரவரி 28 அன்று அதிகாலை. நிலைமையில் மாற்றம் தோன்றுமா? இம்ரான் கான் இந்தியப் பிரதமரோடு ஹாட்லைனில் பேச இன்னுமொரு முயற்சி. வெற்றியில்லை. பிடிபட்டிருக்கும் விமானப்படைவீரர் திருப்பி அனுப்பப்பட்டாலன்றி பேச்சில்லை என்பது இந்தியாவின் ஸ்திரமான, அதிகாரபூர்வ நிலை. இந்தியா மசிய மறுக்கிறதே எனப் பதறிப்போய், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ப்ரான்ஸ் போன்ற வல்லரசுகளுடன் முறையிட்டுப் பார்த்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடமிருந்து இந்த முறை பாகிஸ்தானுக்கு வந்தது கடும் எச்சரிக்கை. ’இந்தியா உங்களுடன் பேசாது. பிடிபட்டிருக்கும் வீரரை உடன் திருப்பியனுப்பிவிட்டு பிறகு முயற்சிக்கவும். வீரரைத் திருப்பி அனுப்புவதில் இந்தியாவின் இருபத்தி நான்கு மணி காலக்கெடு கடந்தால், இந்திய கப்பற்படை கராச்சியை நோக்கி நகரும்!’ என்பதே அதன் ரத்தினச் சுருக்கம். அப்படியென்றால் என்ன அர்த்தம்?. இந்தியா ராணுவரீதியாக முன்னேறினால், நாங்கள் தலையிடமாட்டோம். வேடிக்கைதான் பார்ப்போம் என்கிற அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலை மண்டைக்குள் சுர்ரென்று இறங்க. வெலவெலத்துப்போனது பாகிஸ்தான். அபிநந்தனை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்கிற விஷமத் திட்டம் வேரோடு பிடுங்கப்பட்டது. வேறு எந்த வழியுமில்லை இனி. அடுத்தநாளே இந்திய வீரரைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என முதலில் அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு பதில் சொல்லியது பாகிஸ்தான்.(ட்ரம்ப் வந்ததிலிருந்து ஏற்கனவே அமெரிக்காவுடன் ஆயிரம் பிரச்னைகள் பாகிஸ்தானுக்கு). பாகிஸ்தான் பணிந்துபோன விபரம் உடனே இந்தியப் பிரதமருக்கும், வியட்நாமில் இருந்த அதிபர் ட்ரம்ப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான் ட்ரம்ப் ஹனோயில் இருந்தவாறே ஒரு ஹிண்ட் கொடுத்தார் சர்வதேச மீடியாவுக்கு. இந்தியா-பாக் பிரச்னையில் ’ இறுதியாக ஒரு டீசண்ட் நியூஸ் வந்திருக்கிறது!’ என்றார் பூடகமாக. அந்த மாலையில் மூஞ்சியைத் தொங்கபோட்டுக்கொண்டு இம்ரான் கான், அவர்களது பார்லிமெண்ட்டில் அறிவிக்கும் நிலை வந்தது. ‘ஒரு சமாதான முயற்சியாக எங்கள் வசமிருக்கும் இந்திய வீர்ரை நாளைத் திருப்பி அனுப்புகிறோம்’ என்று அசடுவழியும்படியானது. சீனாவினால் ஏதும் செய்யமுடியவில்லை.  வல்லரசுகள் உட்பட, உலகின் முக்கிய நாடுகளுடன் பிரதமர் மோதி கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்த்திருந்த நல்லுறவுகள் சரியான நேரத்தில் கைகொடுத்தன என்பதை இந்த இந்தியா-பாக். நெருக்கடி வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அபிநந்தனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பத்தான் வேண்டும். அதுவும் நாளைக்கே. அதனால் கூடுமானவரை,அவரை அவமானப்படுத்தி அனுப்புவோம் என்பது பாகிஸ்தான் அரசின் முடிவு. ராவல்பிண்டி சிறையிலிருந்த அபிநந்தனை லாகூருக்குக் கொண்டுவந்து, இந்தியாவை  அவர் வாயினாலேயே அவமதிக்கும்படி கடும் டார்ச்சர் கொடுத்துப்பார்த்தனர். உடல்ரீதியான துன்புறுத்தலுக்குப் பின்னும் அபிநந்தன் மசியாதலால் உளரீதியான சித்திரவதைகள். அந்த இரவு அவரைத் தூங்கவிடாமல் குளிர்நீரை அவர் முகத்தில் ஜெட்மூலம் பாய்ச்சித் துன்புறுத்தியது. இறுதியில் அவர் குரலை வைத்து போலியான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட ஒண்ணரை நிமிட ஏமாற்று வீடியோவை தனது மக்களுக்காகத் தயாரித்தது என, ஒருவழியாக இந்தியாவுக்கு அனுப்புமுன், இந்திய ஹீரோ அபிநந்தனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பல. எல்லாம் வெளிவர வாய்ப்பில்லைதான்.
1999 கார்கில் போரின்போது பிடிபட்ட இந்திய போர்விமானி ஃப்ளைட் லெஃப்டினெண்ட் நசிகேத்தாவை (Nachiketa), ஜெனீவா கன்வென்ஷனுக்கெதிராக, ஒருவாரம் ராணுவச் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைகளால் அவர் உடம்பைச் சிதைத்து அனுப்பிய சர்வதேச நாகரிகம் தெரிந்தவர்கள் அல்லவா பாகிஸ்தானிகள்? இப்போது இந்தியாவுடன் அமைதிக்காக முயற்சிக்கிறோம் என்று சவுண்டு விட்டால் எவன் நம்புவான்?
**

பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா

Mirage 2000 (courtesy: Internet)
ஃபிப்ரவரி பதினான்காம் தேதி அண்டைநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஜெய்ஷ் தீவிரவாதிகள் காஷ்மீரின் புல்வாமா  (Pulwama) பகுதியில் நாற்பது இந்திய துணைராணுவத்தினரைக் கொன்றது, இந்தியாவுக்குப் பெரும் சினமூட்டியது. ’விடமாட்டோம். பழிக்குப்பழி வாங்குவோம்’ என எச்சரித்தது இந்தியா. ‘எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றதே பாகிஸ்தானின் முதல் எதிர்வினை. ஆனால் எல்லைக்கு அப்பாலிலிருந்து செயல்பட்டுவருவதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இயக்கம் ’தாங்கள்தான் தாக்குதலுக்குக் காரணம்’ என உடனே பெருமையாக அறிவித்து பாகிஸ்தானின் முகத்தில் கரியை அழுந்தப் பூசிவிட்டது.  பாகிஸ்தான் மிரண்டதன் காரணம், ஜெய்ஷ் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே பாகிஸ்தான்தான் என்றும், அதற்கு பாக் ராணுவம் உதவியும், தீவிர பயிற்சியும் தருவதாக ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் முதலான நாடுகளுக்கு ஆதாரங்களுடன் இந்தியா ராஜீயத் தொடர்புகள்வழி (through diplomatic channels) தெரியப்படுத்தியிருந்ததுதான்.
புல்வாமா தாக்குதலுக்கு அடுத்த வாரம் இந்தியா முன்னெடுத்த ராஜீய நடவடிக்கைகளால் – அதாவது வல்லரசு நாடுகள் உட்பட முக்கிய நாடுகளில் இந்திய தூதர்கள் மூலம் பேசி, காரணம் யார் என்பதோடு நிலைமையின் தீவிரத்தையும், இந்தியா கடும் எதிர்வினை ஆற்றும் எனவும் தெரியப்படுத்தியதால்- தீவிரவாதத்தினால் ஏற்கனவே முகம் சிவந்துபோயிருக்கும் நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற முக்கிய நாடுகள் பாகிஸ்தானைக் கடுப்பாகப் பார்த்தன கோழைத்தனமான வெறிச்செயலைக் கண்டித்ததோடு, ’தன்னைத் தற்காத்துக்கொள்ளும்பொருட்டு திருப்பி பதிலடிக்கொடுக்க இந்தியாவுக்குத் உரிமை இருக்கிறது’ என்றும் ஒருபடி மேலேறிச் சொன்னது ட்ரம்ப்பின் அமெரிக்கா.  அவ்வாறு அதிகாரபூர்வமாக அமெரிக்கா சொன்னதும் மற்ற மேலைநாடுகளும் அதே.  அதே.. என்றன. சூட்டோடு சூட்டாக, ஐ.நா.வில் ஜெய்ஷ் மற்றும் தீவிரவாத  இயக்கங்களுக்கெதிராக ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டுவந்தது. வல்லரசு நாடுகள் சேர்ந்து ஓட்டுப்போட, உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ.நா. தனது சம்ச்சாவான பாகிஸ்தானைக் குறைகூறத் தயங்கும் சீனாவுக்கும் இந்திய தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது!
உருவாகிவரும் அபாயகரமான சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா, ஃப்ரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை இந்தியா உறுதி செய்துகொண்டது, (2017-ல்தான் முதன்முறையாக ஒரு இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டது. அதற்கு மறுமொழியாக இஸ்ரேலின் பிரதமர் அடுத்தவருடமே இந்தியா வந்தார். இந்தியா-இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பு நரேந்திர மோதி-பெஞ்சமின் நெதன்யாஹூ சந்திப்புக்களுக்குப் பிறகு பெருமளவில் அதிகரித்து வளர்ந்துவருவதை சீனாவும், பாகிஸ்தானும் கவனிக்கத் தவறவில்லை). குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பாக வல்லரசுகளுடனான இந்திய நெருக்கம்/மேம்படுத்தப்பட்ட உறவுகள், உலக அரங்கில் பாகிஸ்தானை மிகவும் தனிமைப்படுத்தியது. பாகிஸ்தான் புல்வாமாவில் தங்களுக்கு சம்பந்தமில்லை என மறுக்க முயற்சிக்கும் வேளையில், ’எங்கப்பன் குருதுக்குள் இல்ல’ என்பதுபோல ஜெய்ஷ் வேறு உளறிவிட்டதே! ஒவ்வொரு நாளும் பெரும்பொழுதாக பாகிஸ்தானுக்கு நகர, இந்தக் குறுகிய காலகட்டத்தில் பாகிஸ்தானும் சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட தன் வெளிநாட்டு நண்பர்களுடன் குலவி வந்தது.  ஒருகட்டத்தில் பாகிஸ்தான், ’இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நெருக்கடிவேளையில் நம்மை இந்தியா எங்கே தாக்கப்போகிறது.. சான்ஸே இல்லை’ என அலட்சியம் செய்ய ஆரம்பித்திருந்த வேளையில்.. அது நடந்தேவிட்டது.
எல்லை தாண்டியத் தாக்குதல் என்பதைவிட, அதனை இந்தியா நிகழ்த்தியவிதம் பாகிஸ்தானைப் பதறவைத்தது. செப்டம்பர் 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல, ஒரு வேளை இந்தியத் தரைப்படை பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து அடிக்கலாம் என்பதே மிஞ்சி மிஞ்சிப்போனால் அவர்களின் யூகமாக இருந்திருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுடன்தான் அது தயார்நிலையில் வேலிக்கு மறுபுறம் ஓணானாக அமர்ந்திருந்தது! ஆனால் இந்திய அரசு செய்த காரியம் என்ன? இந்திய வேவுத்துறையின் ரகசியத் தகவல்கள் மூலம் ஜெய்ஷின் பயிற்சி முகாம்கள்/ஏவுதளங்களை ஏற்கனவே குறித்துவைத்திருந்த இந்தியா, விமானப்படை மூலமாக அதிகாலையில் புகுந்து விளையாட, வேறுவித ஸ்க்ரிப்ட்டைத் தயார்செய்து வைத்திருந்தது. புல்வாமா தாக்குதலின் ’13-ஆம் நாள் சுபம்’ என்பதாக, ஃபிப்ரவரி 26 தாக்குதலுக்கு பச்சை காட்டியது இந்திய அரசு. மூன்று இடங்கள். இரண்டு பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் எல்லைக்கு அப்பாலுள்ளவை. மூன்றாவது பாலகோட் (Balakot). பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே இருக்கும் இடம்- நம்நாட்டுக்குள் யார் வரப்போகிறார்கள் என்று, முக்கிய பயங்கரவாதிகள் முகாமை அங்கே அமர்த்தி ஆற அமர பயிற்சிகொடுத்துவந்தது பாகிஸ்தான் ராணுவம். மலைச்சரிவில் ஒரு சிறு கிராமம். அதன் ஓரமாக வனப்பகுதியில், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே மதராஸா இருப்பதாக போர்டு -அதை நடத்துவது ஜெய்ஷ் முகமது இயக்கம் என்றே அதில் எழுதப்பட்டும் இருந்தது! (ரிபப்ளிக் சேனல் வீடியோ).
அதிகாலை 3.35-க்கு, இந்திய விமானப்படை, (1971 இந்தியா பாக் போருக்குப்பின் முதன்முறையாக)  எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் சீறித் தாக்கியது. மணிக்கு 2300 கி.மீ. வேகத்தில் பாயும் இந்தியாவின் ஃபைட்டர் ஜெட்டான மிராஜ்-2000 (Mirage 2000), மின்னல்வேகத்தில் உயரமெடுத்தும், நொடியில் குட்டிக்கரணமிட்டுக் கீழ்நோக்கிப் பாய்ந்தும், மீண்டு உயரமெடுத்து வளைந்து திரும்பவும் கூடிய பல்திறனுள்ள, ஃப்ரென்ச் போர்விமானமாகும்.  குறிப்பாக பாலகோட்டில்  மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் பயங்கரவாத முகாம்/தளங்களின்மீது கீழ்நிலையில் பறந்து தாக்கிவிட்டு நொடியில் இந்திய எல்லைக்குள் வந்துவிடவேண்டுமென,  இந்திய விமானப்படை இந்த விமானத்தை, அந்த முகூர்த்த காலையில் தேர்ந்தெடுத்திருந்தது.
பயங்கரவாதிகளின் முகாம்/தளம் இந்திய விமானப்படையால் இஸ்ரேலின் ’ஸ்பைஸ்-2000’ லேஸர் குண்டுகளால் துல்லியத் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்ட அதிர்ச்சியில், பாகிஸ்தான் காலைச் சாயாகூட குடிக்காமல் விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தது.  அந்த பித்து நிலையிலிருந்து விடுபட நேரம்பிடித்தது போலும். வழக்கம்போல், முதலில் இந்தியத் தாக்குதல் ஒன்று நடந்ததாகவே அது ஒத்துக்கொள்ளவில்லை. மறுத்தது. ஏன்? பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிவந்து இந்தியா போட்டுத்தள்ளியதை, அங்கே-அவர்கள் நாட்டுக்குள்- ஒப்புக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை அவர்களின் அரசு/ராணுவ அமைப்புகளுக்கு. அவர்களது மக்களிடம்போய் இந்தியாவிடம் அடிவாங்கியதை எப்படிச் சொல்வது? எனவே ஆரம்பத்தில், அதிகாரபூர்வமாக மறுத்துப் பார்த்தது. பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில்தான் இந்தியா தாக்கியது என்று பிற்பாடு முணக முயன்றது. இந்நிலையில்,  இந்தியா ஒரு ப்ரெஸ் மீட்டில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் மூலம் தாக்குதல்பற்றி அறிவித்துவிட்டது.  அண்டை நாட்டுக்கு வேறுவழியில்லை இப்போது. ’ஆமாம் மூன்று இடங்களில்  குண்டு விழுந்திருக்கிறது ஆனால் அங்கு ஒருத்தரும் இல்லை. காட்டுப்பகுதி!’ என அசடுவழிந்து  பார்த்தது. இதற்குள் சர்வதேச,  இந்திய மீடியா தளங்களில் செய்திகள் பறக்க ஆரம்பித்துவிட்டன.
மதியம் வாக்கில்  இன்னொரு பாக் ரகசியமும் நியூஸ் சேனல்களில் வெளிவந்தது: அவர்களது ராணுவம் அப்போது பாலகோட்டில்  சிலகாரியங்களில் பிஸியாக இருந்தது. ஊரை வளைத்து ராணுவத்தை நிறுத்தி, வேடிக்கை பார்க்கவந்த அக்கம்பக்கத்துக் காரர்களை விரட்டியடித்து எச்சரித்தது. செத்துக் கரியாகிவிட்டிருந்த, அரையும் குறையுமாய் எரிந்து கிடந்த பயங்கரவாதிகளின் உடல்களை, துணையிருந்த ராணுவத்தினர் சிலரின் சடலங்களை, காயம்பட்டவர்களை வேகமாக அப்புறப்படுத்தியது. உடைந்துகிடந்த கட்டிடச் சிதிலங்களை  சில மணிநேரத்தில் ட்ரக்குகளில் ஏற்றி நகர்த்தியது.. தடயம் ஏதும் இனி தெரியாதவாறு, தண்ணீர் தெளித்து துப்புரவாக்கி (கோலம் போடுவது அவர்கள் வழக்கமில்லையே!), மாலையில் தங்களது அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் சிலரை மட்டும் கூட்டி வந்து காண்பித்தது. ’இங்கே பாருங்கள், எல்லாம் வனப்பகுதி. இங்கே எதுவும் முன்னால் இல்லை. பக்கத்தில் சில மரங்கள் எரிந்திருக்கின்றன பாருங்கள். இந்த இடத்தில்தான் குண்டுபோட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் இந்தியர்கள்!’ என்றது. எத்தனையோ விண்ணப்பித்தும் வெளிநாட்டு மீடியாஹவுஸ்களை அங்கே அனுமதிக்கவில்லை. முதலில் இந்தியா தாக்கவேயில்லை என்றும், பிறகு காட்டுக்குள்தான் குண்டு போட்டதென்றும் மணிக்கு மணி மாறி ஒலித்த பாக் குரல், சர்வதேச அரங்கிலும் சிரிப்பை வரவழைத்தது.
இனி தப்பிக்க  வழியில்லை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலை உருவாக, அன்று மாலையே பாக். அறிவித்தது. ’எல்லைதாண்டி இந்தியா தாக்கியிருக்கிறது. இதற்கு பதிலடி விரைவில் தரப்படும்..’ என்றது. அவர்களது மக்களை இம்ப்ரெஸ் செய்ய வீராவேசம் காட்டவில்லையென்றால், இம்ரான் பதவியில் நீடிக்கமுடியாதே.. நவாஸ் ஷெரீஃபும், முஷாரஃபும் ஊழல் கேஸ்களில் மாட்டிக்கொண்டு ஜெயிலில், பெயிலில் இருப்பதால் ஆட்சி அமைக்கமுடியாத நிலையில்தானே, இம்ரானை பொம்மை ஆட்சியில் அமரவைத்திருக்கிறது பாக் ராணுவம்? கையிலுள்ள கிலுகிலுப்பையும் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம்வேறு கானுக்கு.. பாவம்!
எல்லையோரத்தில் இருதரப்பு படைகளும் அலர்ட்டில் இருக்க, அடுத்தநாளே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர்விமானங்கள் ஊடுருவின. ஏற்கனவே வான்ரோந்தில் இருந்த இந்தியப் போர்விமானங்கள், பாகிஸ்தானைத் துரத்த, மொத்த ஆப்ரேஷனே 90 வினாடிகள்தான் நீடித்திருக்கிறது. ஏன் இப்படி? ’இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு எங்களுக்கும் தைரியம் இருக்கிறது’ என்று தனது மக்களுக்கு சீன் போட்டுக் காண்பிக்க, ஒரு ஷோ-ஆஃப் செய்யவே அசட்டுத் தைரியத்தில் இந்த ஊடுருவல். எல்லைதாண்டி வந்து நிகழ்த்திய நாடகம் மேலும் ஒரிரு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தாலும் இந்தியா திருப்பித் தாக்கிவிடும், பெரும் அளவு நஷ்டமும் அவமானமும் உண்டாகும் என்கிற பயம் பாகிஸ்தானுக்கு. அதனால்தான் உள்ளே ஓடிவந்து இந்திய ராணுவக் கிடங்கில் ரெண்டு குண்டைப் பேருக்குப் போட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் எனக் குள்ளநரித்திட்டம் போட்டது. அதையும் செயல்படுத்த துப்பில்லை என்பது அன்று காலையில் புரிந்தது. இதற்குள்  ஒரு பாக் எஃப்-16 ஐ, தன் மிக்-21 பைஸன் (Bison) சூப்பர்சானிக் ஜெட்டில் விரட்டிய நமது சூப்பர் ஹீரோ அபினந்தன், தனது R-73 ஏவுகணையினால் அதனைத் துல்லியமாக சுட்டுவீழ்த்தினார். (R-73 விண்ணிலிருந்து விண்ணிற்கு ஏவப்படும் ரஷ்ய ஏவுகணை. அதனை போர்விமான பைலட்தான் இயக்கவேண்டும்). இந்திய எல்லைக்குள் திரும்பும் முயற்சியில் தனது விமானமும் சுடப்பட, பாரசூட்டில்  இறங்கித் தப்பினார் அபிநந்தன். தப்பினாரா? துரதிர்ஷ்டம் துரத்தியது அவரை. அவர் இறங்கிய இடம் பாக். வசமிருந்த காஷ்மீருக்குள்.  இறங்கியபின்,  பாக். கிராமவாசிகளால் கல்வீசித் தாக்கப்பட்டார். பிறகு பாக். ராணுவத்தினரிடம் அவர் பிடிபட நேர்ந்தது.
அன்று மதியமே இந்திய விமானப்படை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்கள். 90 நொடிகளே நடந்த பாக். விமான அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாகவும், அந்தக் குறுகிய நேரத் தீவிர எதிரடியில், பாகிஸ்தானின் அதிநவீன எஃப்-16-Falcon, இந்திய மிக்-21 பைஸனால் வீழ்த்தப்பட்டதாகவும், எஃப்-16 விழுந்த இடம் அவர்களின் எல்லைக்குள்ளே என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது மிக்-21 ஒன்றை இந்தத் தாக்குதலில் இழந்துவிட்டோம் எனவும், பைலட் திரும்பாததால் அவரை ‘missing in action’ எனக் கணித்து, எதிரிகளிடமிருந்து விபரங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள் இந்திய விமானப்படை அதிகாரிகள்.
போரின்போது ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டில் பிடிபட்டால், அவரை எதிரி நாடு பாதுகாப்பாகக் கையாளவேண்டும், அதுபற்றி சம்பந்தப்பட்ட நாட்டிற்கு உடன் தெரியப்படுத்தவேண்டும், விரைவிலேயே பிடிபட்ட வீரர் அவருடைய நாட்டுக்கு முறையாகத் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஜெனீவா கன்வென்ஷன்’ எனப்படும் சர்வதேச ப்ரோட்டகால் (international protocol) / சட்டதிட்டத்தில் காணப்படுகின்றன.
மேலும் பார்ப்போம்..
**

துள்ளும் எதிரிக்குத் துல்லியத் தாக்குதல் 

அடுத்த வீட்டு அம்பியால் சும்மா இருக்க முடியாது. அது ஜாதகத்தில் இல்லை. நேரடியாக வந்து தாக்கக் குலை நடுக்கம். (எங்களிடமும் இருக்கு குண்டு என்று அவ்வப்போது உளறினாலும்.) இந்த நிலையில், அதற்கு தோதாகப்பட்டது: விஷப்பாம்புகளை ஒவ்வொன்றாக அடுத்த வீட்டுக்குள் அனுப்பிவிடுவது. போய்ப் போட்டுத் தள்ளட்டும். நேரடியாக நம்மை யார் குறை சொல்லப்போகிறார்கள். (பாம்பு கடித்தால் நாங்கள் என்ன செய்வது? எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்திருக்கிறது, கடித்திருக்கிறது..)சர்வதேச அரங்கில் தூதர்கள் மூலமாக இந்தியாவின் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டால், அவை வரும்போது எதிர்த்து வாயடிப்போம். கூடவே, சீனா அண்ணாச்சி இருக்காருல்ல.. கவலை எதற்கு என்கிற மனோபாவம் பாகிஸ்தானின் தலைமைக்கு . இந்தியாவுக்கு கிடைத்திருப்பது வேறுவிதமான தலைமை  என்பது, 2016 செப்டம்பர் வரை அதற்கு உறைக்கவில்லை.
இங்கே  ஒரு முக்கியமான நிகழ்வைக் கவனிக்க,  பலர் தவறியிருப்பார்கள். இந்திய ராணுவத்தின் எல்லை தாண்டிய  செப்டம்பர் 2016 துல்லியத் தாக்குதல் – ’சர்ஜிகல் ஸ்ட்ரைக் -1’ என இப்போது அழைக்கப்பட்டாலும், இதற்கு முன்பே நரேந்திர மோதியின் இந்தியா, துல்லியத் தாக்குதலை வேறொரு தளத்தில் நடத்திப் பார்த்திருக்கிறது. வெற்றியும் கண்டது. எப்போது? ஜூன் 2015-ல். என்னப்பா சொல்றே! – என்கிறீர்கள். உண்மைதான். நமக்குத்தான் நாலாபுறமும் எதிரிகளாயிற்றே – மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு அமைந்த மாதிரி. (இந்த நெருக்கடியான சூழல்தான் இரு நாடுகளையும் நெருங்கிவர வைத்திருக்கிறது. காலத்தின் கட்டாயம். இது முன்னரே நடந்திருக்கவேண்டும். ஆனால்.. சரி, அதைப் பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம்). இந்தியாவின் வடகிழக்கில் குறிப்பாக மணிப்பூர்-நாகாலாந்து எல்லைகளில், தீவிரவாதம் அதுபாட்டுக்கு வளர்ந்துவந்திருக்கிறது பல வருடங்களாக. (1947-லிருந்து 1998-வரை மாறி மாறி அமைந்திருந்த இந்திய அரசுகள், இந்த   முக்கியப் பகுதியின் பாதுகாப்பைக் கவனிக்க  நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. கீழ்த்தரமான அரசியல் சிந்தனைகளே காரணம்) .
நாகா தீவிரவாதக்குழுக்கள் கொரில்லாப் போர்முறைகளைக் கையாண்டு,  இந்தியப் படைகளை மறைந்திருந்து (மலை, காடுகள் சேர்ந்த பகுதிகள்) திடீரெனத் தாக்குவதும், துரத்தினால் எல்லை கடந்து அயல்நாடான மயன்மாருக்குள் ஓடிவிடுவதுமாய் போக்குக்காட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பிரச்னை பிரதமரின் கவனத்துக்கொண்டுவரப்பட, அதனை முந்தைய அரசுகளைப்போல் ஒத்திப்போடாமல், இந்திய அரசு 2015-ல் நேரடியாக எதிர்கொண்டது. பிரதமர் மோதி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பர்ரிக்கருடன் ஆலோசித்தபின்,  ராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். காத்திருந்த இந்திய ராணுவம் வித்தியாசமான தாக்குதலை முதன்முதலாக செயல்படுத்தியது. மயன்மாரின் ராணுவ கமாண்டர்களுக்கு முன்பே அவர்களின் எல்லைக்குள் கொஞ்சம் நுழைவோம், ஜோலி இருக்கிறது எனச் சொல்லப்பட்டுவிட்டது. இரு ராணுவத்தினருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தொடர்பு உண்டு. அவர்களும் ’எதையாவது பண்ணுங்கப்பா..எங்கள இழுக்காம இருந்தா சரி!’ என்றுவிட்டார்கள் போலும். ரகசியத் திட்டத்தின்படி நாகா-மணிப்பூர்-மயன்மார் மலைக்காட்டுப்பகுதியில்  ராணுவத்தின் ‘துருவ் (Dhruv)‘ ஹெலிகாப்டர்கள் ஒரு இரவில் சீறின. கயிற்றின்மூலம் விறுவிறுவென, இந்தியத் துருப்புகள்  இறக்கப்பட்டார்கள். மலையும் காடுமாக நடந்து சென்று எல்லையை நெருங்கி, அங்கே மயன்மாரின் உட்பகுதியில் காட்டில் கூடாரம் அமைத்து தீவிரவாதிகள் குளிர்காய்ந்துகொண்டிருப்பதை உறுதி செய்துகொண்டார்கள். உடனே ஒரு குழு நேரடித் தாக்குதலுக்காக கூடாரங்கள் நோக்கியும், மற்ற மூன்று குழுக்கள், எதிரிகள் தப்பித்து ஓடினால் போட்டுச் சாத்தவென, மயன்மாரில் உள்ளே மூன்று திசைகளில் சுற்றிவளைத்து நிற்க திடீர்த் துல்லியத்தாக்குதல் நிகழ்ந்தது. அதிர்ந்த நாகா தீவிரவாதிகள் வெவ்வேறு திசைகளில் ஓட முயன்றும், தடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 93-நாகா கலகக்காரர்கள் (insurgents) பலி. தாக்குதல் கால அளவு 40 நிமிடங்கள். இந்தியப் படைவீரர்கள் உயிர்ச்சேதமின்றி (சிலர் காயமுற்று) தங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் துல்லியத்தாக்குதல் (Surgical ground strikes)- அதாவது வெளிநாட்டு எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்/கலகக்காரர்களை அழிக்கும்பொருட்டு, மற்றொரு நாட்டுடனான சர்வதேச எல்லை கடந்து செய்த  ராணுவத் தாக்குதல்.
இதன் அபார வெற்றி நமது மீடியாக்களில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ராணுவமும், அரசும் விட்ட அறிக்கைகளை நமது டிவி சேனல்கள்/ பத்திரிக்கைகள் ஹைலைட் செய்யாது, ஏனோதானோ என்று பத்தோடு பதினொன்றாக வெளியிட்டு கழன்றுகொண்டன. இப்போது விமானப்படையிடமிருந்தே சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு ப்ரூஃப் கேட்கிறார்களே,  தேசபக்தர்களான இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்? அப்போது கேட்டார்களா? பர்மா எல்லைக்குள் தீவிரவாதி முகாமா? அட்ரஸ் எங்கே? ஃபோட்டோ எங்கே? வீடியோ இருக்கா? 93 பேர் செத்தது உண்மைதானா? பர்மா ஏன் ஒன்றும் சொல்லவில்லை? ஒருவேளை எல்லாம் பொய்யோ – என்றெல்லாம் மோதியின் இந்திய அரசையோ, ராணுவத்தையோ ‘கேள்வி’ கேட்கவில்லை! ஏன்? அவர்களுக்குப் ’பிடித்தமான’ பாகிஸ்தான் அதில் சம்பந்தப்படவில்லை! பாகிஸ்தான் டிவி சேனல்களில் அவர்களின் அசட்டு முகங்கள் வெளியாக வாய்ப்பில்லை! மற்றபடி வேறு ஏதாவது பயங்கரவாதக் குழுவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து வந்தால் என்ன, இந்திய ராணுவம் திருப்பி அடித்தால் என்ன? அடிவாங்கினால்தான் என்ன – அதில் நமது ’எதிரி’ கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் தேசபக்தி அப்படி!
இந்த துல்லியத் தாக்குதல் வியூகம், கமாண்டோக்களின் சிறப்புப் பயிற்சி, செயல்பாடு போன்றவற்றிற்கு கடந்த நான்கு வருடங்களாக இந்திய-இஸ்ரேல் ராணுவ ஒத்துழைப்புக்கு பிரதான பங்குண்டு. மயன்மார் எல்லைப் பகுதியில் நமது தரைப்படையின் துல்லியத்தாக்குதல் யுக்தியும், வெற்றியும் 2015 இறுதிவாக்கில்,  ராணுவ, பாதுகாப்பு வட்டாரத்தில், வெகுவாகப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது. இதன் பின்புலத்தில் மோதியின் மத்திய கேபினெட் மந்திரி (முன்னாள் ராணுவ கர்னல், ஒலிம்பிக் ஷூட்டிங் மெடலிஸ்ட்) ராஜ்யவர்த்தன் சிங் ராதோட் (Rajyavardhan Singh Rathore) அப்போது சொன்னார்:  ’இந்தியாவின் எதிரிகளே! தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமெனில், சர்வதேச எல்லை தாண்டி அந்நிய நிலத்தில் இறங்கியும், தீவிரவாதிகளைத் தாக்கி அழிக்க இந்தியா ஒருபோதும் தயங்காது!’  அப்போது, பாகிஸ்தானின் காதில் இது சரியாக விழவில்லை. அவர்கள் சீனர்களின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..
பாகிஸ்தானுக்கெதிரான ’துல்லியத் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்: 2016 செப்டம்பரில், காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாக்-ஆசீர்வாத ஜெய்ஷ் தீவிரவாதிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தினார்கள்.  அதில் ராணுவத்தினர் 19 பேரும், தீய சக்திகள் நால்வரும் கொல்லப்பட்டனர். இதற்குமுன் ஜெய்ஷ் தீவிரவாதிகளை உள்ளே ஊடுருவ வைத்து, பாகிஸ்தான் இந்தியாவின் பட்டான்கோட் (பஞ்சாப்) விமானப்படைத் தளத்தைத் தாக்கியிருந்தது.(Jan.1, 2016). விமானப்படையைச் சேர்ந்த ஏழுபேர் உயிரிழந்தனர்.
நேரடியாகத் தாக்கத் துணிவில்லாமல், பாகிஸ்தான் கோழைத்தனமாக, பயங்கரவாதிகளை ஒரு proxy-யாக (பதிலியாக)ப் பயன்படுத்தி இந்தியப்படைகளின் தளங்களில் தாக்குதல் நடத்துவதை இந்திய அரசு உணர்ந்து அதற்கு ஒரு வழிபண்ண முடிவெடுத்தது. இனிப் பேசிப் பயனில்லை. தாமதித்துப் பிரயோஜனமில்லை. இஸ்ரேல்-ஸ்டைல் பதிலடியில் இறங்கியது.
ராணுவத்தின் டெல்லி மற்றும் வடக்கே உதம்பூர் கமாண்ட் நிலையங்களிலிருந்து கண்காணிக்கப்பட்ட இந்த தாக்குதலில் சிறப்புப்படைகள் (special paratroopers) பெரும் பங்கு வகித்தன. நள்ளிரவுக்குப்பின் கிளம்பிய படைகள் ரகசிய வழிகளினூடே நாலுமணிநேரத்துக்குப்பின் தாக்குதல் இலக்குக்கு முன் வந்து நின்றன.   LOC-த்தாண்டி, பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில் மூன்று கி.மீ. உள்ளே பாய்ந்து, பாகிஸ்தானின் ராணுவ நிலைகளுக்கு சற்றேறக்குறைய அருகில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி/ஏவு முகாம்களின்மீது  பாய்ந்து தாக்கின. முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டவை மூன்று அம்சங்கள். 1)ரகசியம், சஸ்பென்ஸ் கடைசி நொடிவரையில். அப்போதுதான் அதிகபட்ச அழிவை எதிரிக்குக் கொடுக்கமுடியும். 2) டைமிங், கடிகாரத் துல்லியம். 3) தாக்கியவுடன், இந்திய வீரர்களுக்கு இழப்பு/சேதமின்றி உடனே நமது நாட்டிற்குள் திரும்பிவிடுவது.
துல்லியத்தாக்குதலில், முப்பத்தி எட்டு பயங்கரவாதிகள் (பயிற்சியாளர், பயிற்சி கொடுப்பவர் உட்பட), இரண்டு பாகிஸ்தானி வீரர்கள், பயங்கரவாதிகளின் ஏழு ஏவுப்பட்டைகள்/கருவிகள் (launch pads), ஆயுதங்கள் இந்திய ராணுவத்தினால் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தலைமைக்கு தகவல் போகுமுன்னேயே, இந்திய கமாண்டோ துருப்புகள் வந்த காரியத்தை முடித்து,  தங்கள் தளங்களுக்கு இழப்பின்றி திரும்பிவிட்டனர்.
இருந்தும், பாகிஸ்தான் என்கிற நாட்டுக்கு,  அதன் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை இது என அதிகாரபூர்வமாக அந்நாட்டுக்கு இந்தியா தெரியப்படுத்தியது: ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த குறுகிய அளவிலான துல்லியத் தாக்குதல் முடிவடைந்தது. மேற்கொண்டு தொடர இந்தியா விரும்பவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் எதிர்வினை செய்தால், அது நேரடியாக எதிர்கொள்ளப்படும்’ என்றார் இந்திய லெஃப்டினெண்ட் ஜெனரல் ரன்பீர் சிங்.
மயன்மார் எல்லை தாண்டி பதுங்கியிருந்த, நாகா கலகக்காரர்களை தாக்கி அழித்த முன்அனுபவத்தோடு, இந்திய ராணுவம் எதிர்காலத் துல்லியத் தாக்குதலுக்கென 2015-16-லேயே,  இரண்டு பட்டாலியன் சிறப்பு கமாண்டோ யுனிட்களை உருவாக்கிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் இதற்கான உபயோகமிருக்கும் எனத் தீவிர பயிற்சிகொடுத்து, மத்திய அரசின் உத்தரவை எதிர்ப்பார்த்துத் தயார்நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னேறிப் பார்க்கலாம்..

**

பக்கத்துவீட்டுப் படுபாவி

பக்கத்துவீட்டுக்காரன் பாவியாக இருந்தால், ’கதவைத்தான் மூடிக்கொண்டுவிட்டோமே, ஒன்றும் ஆகாது..’ என்று பெண்டாட்டி, பிள்ளைகளோடு ஒருவன் நிம்மதியாக இருந்துவிடமுடியுமா?  அவனால் எந்த சமயத்தில் எந்த இடையூறு வருமோ என அஞ்சித்தானே வாழவேண்டியிருக்கும்? அவனே, பாவத்திலும் ஒருபடி மேலேபோய், கொடும் விஷமியாக, அடுத்தவனை அழிப்பதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருப்பவனாக இருந்துவிட்டால், வேறு வினையே வேண்டாம். இந்தியா என்கிற நாட்டுக்கு, அண்டை நாடொன்று இப்படித்தான் வாய்த்திருக்கிறது. அதன் சகிக்கமுடியா விளைவுகளைத்தான், எழுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியா அனுபவித்து வருகிறது.

இந்த உலகில், இந்த நாட்டைத் தவிர வேறெந்த நாடும், பாம்புகளைப் பால்கொடுத்து வளர்ப்பதுபோல், தீவிரவாதிகளை, சமூக விரோதிகளை பொத்திப் பொத்தி, சீராட்டி, பாராட்டி வளர்ப்பதில்லை. (ஏதோ, ஜாடை மாடையாக பண உதவி  செய்யும் நாடுகள் சில உண்டுதான்.)  அழிவுக்காரியங்களில் அதிநவீன பயிற்சி தந்து,  அண்டை நாட்டின்மீதும், வெகுதொலைவிலிருக்கும் வல்லரசுகளுக்கெதிராகவும் கூட ஏவப்படும் அளவிற்கு, பயங்கரவாதிகளை உருவாக்கி, வாழ்த்தி அனுப்பிவைக்கும் புண்ணிய தேசம், நமக்கு மேற்கிலிருக்கும் நாடு. இதன் 70 ஆண்டு அரசியல் சரித்திரத்தைப் பார்த்தால்,  இந்தியாவின் சீரழிவைத் தவிர வேறெந்த  லட்சியமும் இதற்கு இருந்ததில்லை என்பது, சர்வதேச அரசியலின் அரிச்சுவடி மாணவனுக்குக்கூட எளிதாய்ப் புரிந்துவிடும்.

1948-லிருந்து இதுவரை நான்கு முழுஅளவிலான யுத்தங்கள். எதிரி சீண்ட சீண்ட, ஒரு நிலையில் தாங்கமுடியாமல்போன இந்தியா, வேறு வழியின்றி,  வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்த பயங்கரப் போர்கள். எல்லாவற்றிலும் பாகிஸ்தானுக்குப் படுதோல்வி. 1971-ல் அவர்களது நாட்டின் ஒரு பகுதியே உலக மேப்பிலிருந்து நிரந்தரமாகக் காணாமற்போய்விட்டது. சுமார் தொண்ணூற்றி மூவாயிரம் பாகிஸ்தானி படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார்கள். உலக, போர்சரித்திரத்தில் பிரதானமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிகழ்வு.அந்த இக்கட்டான காலகட்டத்தில், இந்திய அரசுக்கு வலிமையான தலைமை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ராணுவத்தலைமை வகித்த ஃபீல்ட் மார்ஷல் மானேக்‌ஷா மற்றும் இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய  மேஜர் ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோரா, ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் ஆகியோர் இங்கே வெகுவாகப் பாராட்டப்படவேண்டியவர்கள். அப்போதெல்லாம் அண்டை நாட்டுக்கு கிடைத்த பரிசு- அழிவு. அவமானம். 1948, 1965, 1971, 1999 -என கூகிள் செய்தால் தெரியவரும் – பதிவுசெய்யப்பட்டிருக்கும் துணைக்கண்ட சரித்திரம். ஆனால் இப்படித் தன் பின்பக்கத்தில் பழுக்கப்பழுக்க சூடு வாங்கிக்கொண்ட பின்னும், புத்தி வந்ததா அடுத்த வீட்டு அம்பிக்கு?  நஹி.  சூடு,சுரணை என்பதெல்லாம் அவர்களின் ரத்தத்தில் காணப்பட்ட  வஸ்துக்களாக என்றும் இருந்தவையல்ல. ஆனால் ஒன்று தெளிவாக அதற்குப் புரிந்திருக்கவேண்டும். இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்லமுடியாது. உள்நாட்டில் அழிவும், சர்வதேச அரங்கில் அவமானமும் தான் மிஞ்சும். பின், என்னதான் செய்வது? எல்லைதாண்டி, தலையில் முக்காடும், கையில் தாக்குதல் ஆயுதமுமாய் அனுப்பிவைப்போம் ப்ரெய்ன்-வாஷ் செய்யப்பட்ட கோழைகளை. அவர்கள் இந்தியாவுக்குள் புகுந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொல்வார்கள். முக்கிய இடங்களைத் தாக்குவார்கள். நாம் டிவியில் பார்த்து மகிழலாம். கேட்டால் ’எங்கள் மண்ணிலிருந்து வந்தார்களா? எங்கள் நாட்டில் இவர்களுக்குப் பயிற்சிக்கூடமா ? ஐயோ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சீனாவின் டிரவுசரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உளறிக்கொண்டே வாழலாம். உலகம் வேடிக்கை பார்க்கும். நமது எதிரியான இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக அழியும். இதுதான் அவர்களின் அரசியல் வியூகம், திட்டமிட்டு இயக்கப்படும் அழிவுமுயற்சிகள், கடந்த இரு தசாப்தங்களாக.

பிரதமர் நவாஸ் ஷெரீஃபிற்கு தெரிவிக்காமலேயே, பாகிஸ்தான் தளபதி முஷாரஃப் ஆரம்பித்த (அதெப்படி பிரதமருக்குத் தெரியாமல், அவரின் உத்தரவு இல்லாமல், ராணுவ தளபதி போர் தொடுக்கமுடியும் என இடையிலே புகுந்து கேட்டு, உங்கள் அறியாமையை இங்கே வெளிப்படுத்தவேண்டாம், ப்ளீஸ்!  பாகிஸ்தானில் அப்படித்தான். அங்கே,  பிரதமர் என்பவர் ராணுவத்தின்  கைப்பாவை. வெளி உலகுக்கு ஆட்டிக் காண்பிக்கவென கையிலொரு ஜனநாயக பொம்மை. அவ்வளவுதான்) 1999 கார்கில் (Kargil) போரில் வாஜ்பாயி அரசு கொடுத்த உத்திரவில், இந்திய ராணுவம்  பாகிஸ்தானை அடித்து நிமிர்த்தியதன் ராணுவ, ராஜீய விளைவுகள் அதற்கு பயங்கரமாய் அமைந்துவிட்டன. அதனால் சும்மா இருக்கமுடியுமா?

2008 நவம்பரில், பாகிஸ்தானிலிருந்து கடல்வழி வந்த நாசகாரக்கும்பல், மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் புகுந்தும், அதை சுற்றியும் நான்கு நாட்கள்  தாக்குதல்களை நடத்தியது.  இறுதியில், இந்தியா விஷமிகளை ஒருவழியாக அழித்துவிட்டாலும், இந்தத் தாக்குதல் அதற்கு பெரும் துன்பத்தையும், உலக அரங்கில் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு ஆதரவாக, சர்வதேச அரங்கில் குரல்கள் எழுப்பப்பட்டன. இருந்தும் விஷம் விதைத்தவர்களை அது ஒன்றும் பாதிக்கவில்லை. மாறாக ‘ பயங்கரவாதிகளா, எங்கள் மண்ணிலிருந்தா? இல்லவே இல்லை. நாங்களும் தீவிரவாதத்துக்கெதிராக உலக நாடுகளோடு ஒத்துழைக்கிறோம்’ என்றெல்லாம் வாயடித்து ஒதுங்கிக்கொண்டது அண்டை நாடு. அப்போதிருந்த இந்திய அரசு, எந்த விதமான எதிர்த் தாக்குதலையும் திட்டமிடவுமில்லை. ராணுவத்திற்கு உத்திரவு இடவுமில்லை. நமக்காக சில நாடுகள் ‘ச்சூ’.. என சூ கொட்டினார்களே ஒழிய, பாகிஸ்தானைப் பெரிதாக யாரும் கண்டித்துவிடவில்லை. சீனா மழுப்பலாகச் சிரித்து, தனது சீடனின் விஷமத்தை  ரசித்துக்கொண்டிருந்தது. இதுதான் சோனியா ஆசீர்வாதத்தில், ’மாட்டிக்கொண்ட மன்மோகன் சிங்’ தலைமையிலான அப்போதைய இந்திய அரசு, தன்னை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் நடத்திக்கொண்ட லட்சணம். இந்திய வெளியுறவுக்கொள்கையின் படுதோல்வி, இந்திய அரசுத் தலைமையின் கையாலாகாத்தனம் அது. அன்னை சோனியாவுக்கும், ஐயா சிங்குக்கும் ஆயிரம் பிரச்னைகள். யார் மும்பைக்குள் நுழைந்து தாக்கினால் என்ன, இல்லை டெல்லி வந்தே அடித்தால்தான் என்ன? சிங்குக்கு அப்புறம் தன் செல்வப்புதல்வனை நாற்காலியில் உட்காரவைத்தால்தான் ஜென்ம சாபல்யம் சோனியா அம்மையாருக்கு. அதற்கான முனைப்பிலேயே ’அவர்கள்’ செயல்பட்டதால் (ப்ளஸ் – வேறு யாரும் அரியாசனம் ஏறிவிடக்கூடாதே என்கிற மரணபயம்), அவர்களுக்கு  இந்தியா என்கிற நாடோ, அதன் கௌரவமோ, பாதுகாப்போ முக்கியமாகப்படவில்லை. நமது தலையெழுத்து அப்படித்தான் இருந்தது 2004-2014-வரை. இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டம்.  இதைச் சொல்ல பலர் தயங்கலாம். ஒளிந்துகொண்டு, வாய்மூடி, அல்லது எதையாவது கலந்துகட்டியாகச் சொல்லி, வேறுசிலரிடம் நல்லபேர் வாங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிடுவீர்களா! சரித்திர உண்மையை சந்திக்காது எங்கே ஓடுவீர்கள்?

இப்படி இந்தியாவைப்போன்ற ஒரு பெரும் தேசம், ஆபத்தின்போது தன்னை சரியாகத் தற்காத்துக்கொள்ளாது, தாக்கப்பட்டும் திருப்பியும் தாக்காது பம்மிக்கிடந்தால், பாவிஸ்தானுக்கு மேலும் துளிர்விடத்தானே செய்யும்? நம்மைக் குறைகூறுவார்களே தவிர, இந்தியாவிற்கு நம்மைத் தாக்கும் அளவிற்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கிடந்தது. தன் எஜமானனான சீனாவின் காலைக் கட்டிக்கிடந்ததன் கதகதப்புவேறு, குளிருக்கு இதமாய் இருந்தது அதற்கு அப்போது.

மேலும் பார்ப்போம்..

**