உளம்ததும்பும் தார்மீக சிந்தனையோடு
உதவிசெய்வதாய் ஊருக்குக் காட்ட
பொழுதுபோக்குபோல் வீசப்பட்ட
பொசுக்கென்ற சிறு காசுகள்
பூமியில் விழுந்து மின்னும் நட்சத்திரங்கள்
வெடித்துப்பரவும் வெய்யிலின் சீற்றத்தில்
தீக்குளிக்க விரையும் சாக்குக் கந்தல்
போதிமரத்துப் புத்தனின் பெண்வடிவம் இல்லையெனினும்
ஒற்றை மரத்தின் கீழ் உறைந்திருக்கிறாளே
கால ஓட்டத்தில் களைத்துக் காய்ந்து
கருத்துச் சருகாகிவிட்ட உடம்பு
ஆடாது அசங்காதிருக்கப் பயிற்சி எடுத்துள்ளதா
ஒழிந்து அழிந்துபோன ஒன்றுக்கும் உதவா
உப்புச்சப்பில்லா உறவுகளையும்
அறுந்து அற்றுப்போன வாழ்க்கைக் கயிறையும்
மூடியிருக்கும் கண்ணுக்குள் ஓட்டிப் பார்க்கிறாளோ
யார்பெற்ற குழந்தையோ
யாருடைய உடன்பிறப்போ
யாருடைய மனைவியோ
யாருக்குத்தான் அம்மாவோ
என்னவோ எதுவோ எப்படியெல்லாமோ
அலைக்கழித்த வாழ்க்கைப் பெரும்புயல்
விலகி ஓடி மறைந்துவிட்டது கிழவியிடமிருந்து
எஞ்சியிருந்த வார்த்தையும்
எப்போதோ செத்துவிட்டது
வாடி உலர்ந்த உடம்பு மட்டும்
ஏதோ கடன்பாக்கி இருப்பது போல்
உட்கார்ந்து காத்திருக்கிறது
மறுத்துப் பேசா மரத்தினடியில்
**