சுப்ரமண்யம்.. சுப்ரமண்யம்..

காலையில் கையில் காப்பியோடு,  என் வலைப்பக்க ட்ராஃபிக்கை பார்க்க நேர்கையில்.. லேசாக அதிர்ந்தேன். என்ன இப்படி ஒரு கூட்டம் இங்கே? நான் ஒன்னும் ரெகுலராக எழுதுகிற ஆளில்லையே.. அதுவும் சமீப காலமாக, என்ற நினைவில் எதற்காக இப்படி ஒரு முட்டிமோதல் இங்கே எனக் கவனிக்கையில்,  நிறையப்பேர் கந்தவர்னைப்பற்றிய என் கட்டுரை, அல்லது அவரது ’மைதானத்து மரங்கள்’ சிறுகதைபற்றி நான் எழுதியிருப்பது என – வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. கந்தர்வன் இன்னும் காந்தமாய் இழுக்கிறாரோ!

எழுத்தாளர்களைப்பற்றிக் கிறுக்கி நாளாகிவிட்டது..  என்கிற எண்ணமும் மனதில். கோபிகிருஷ்ணன், சார்வாகன் போன்ற எழுத்தாளர்களை அதிகம்பேர் அறிந்திருக்கவில்லையே என்று சிலசமயங்களில் அங்கலாய்ப்பு வரும் மனதில். கோபிகிருஷ்ணன் எழுத்து எப்படிப்பட்டது என நினைத்தவாறு கூகிளில் தட்டியபோது, நானே அவர்பற்றி கொஞ்சம் எழுதியிருப்பது தெரியவந்தது! கூடவே தென்பட்டார் சுப்ரமண்ய ராஜு. அவரைக் க்ளிக்கியதில் அது எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், அருண்ப்ரசாத், என்றெல்லாம் காட்டிச்சென்றது. சுப்ரமண்ய ராஜுவின் புத்தகம் என் கைவசம் ஏதுமில்லை. வாங்கலாம் அமேஸானில் என்கிறது ஆர்வமாகும் மனம். ராஜுவைப்பற்றி சுஜாதா, அசோகமித்திரன், விமலாதித்த மாமல்லன், மாலன் போன்றோரின் வார்த்தைகள், இணையத்தில் அலைகையில் அவ்வப்போது கண்ணில்படுகின்றன.

இப்படி அநியாயத்துக்கு சாலையை மறித்து வந்திருக்கவேண்டாம், அவரிடம் இந்த எமன். எமனுக்கும் கால, அகால, நியாய, அநியாயங்களுக்கும் எப்போதிருந்தது சம்பந்தம்? இந்த பூலோகத்தில் 39 வருடங்கள் வாழ்ந்தால் போதும் என்று இரண்டு சுப்ரமண்யர்களையும் கூட்டிச்சென்றவனாயிற்றே  அந்தக் காலன். சுப்ரமண்ய பாரதி, சுப்ரமண்ய ராஜு – இருவரையும்தான் நினைவுபடுத்துகிறேன்.எதற்கும் எழுத்தாளர்கள் ’சுப்ரமண்ய’ என்கிற வார்த்தை,  தங்கள் பெயரின் பகுதியாக வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே ஒருவேளை, அப்படிப் பெயர் அமைந்துவிட்டிருந்தால், அந்த சுப்ரமண்யனையே உடனே சரணாகதி அடைந்துவிடுங்கள். வேறு வழியில்லை!

கவலையும் பயமும் எனக்குப் பகைவர்

நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்

அதனால் மரணத்தை வென்றேன்

நான் அமரன்..!

-இப்படியெல்லாம் பாரதி சீண்டிக்கொண்டிருந்தால்,  எமன் சும்மா இருப்பானா? அவனுக்கும் வராதா கோபம்!

மேலும், காலைக்கடனாகப் பேப்பரைப் புரட்டப்புரட்ட, டிவியை நோக்க, நோக்க,  நிம்மதி வெகுவாகக் குறைகிறது. நாட்டில் அக்ரமங்கள் அதிகமாகி வருவதோடு, இப்படிக் கொழிக்கின்றனவே.. எங்குபோய் முடியுமோ எனத் தவிக்கிறது பாழும் மனம். பாரதி வாழ்ந்த, கண்ணாரக் கண்ட அந்த அருமை நாடா இது?

சுப்ரமண்ய பாரதி:

….

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்

ஆவலோடு அடையும் அரும்புகழ் நாடு

ஊனமொன்றறியா ஞான மெய்பூமி

வானவர் விழையும் மாட்சியார் தேசம்

பாரத நாட்டிசைப் பகர யான் வல்லனோ?

நீரதன் புதல்வர்,  இந்நினைவகற்றாதீர் …

**

அகற்றமாட்டோம் ஐயனே! நாடு நன்றாக இருந்தால் சரி…

**

..

சோ-வின் துக்ளக் – அந்தக்கால நினைவுகள்!

கவிதை, தத்துவம், இலக்கியம், கிரிக்கெட் என்கிற வழக்கமான கொறித்தல்களினூடே வார, மாத இதழ்களை –தமிழோ, ஆங்கிலமோ- வாசித்தல் என இளவயதிலிருந்தே பழக்கமுண்டு. வாசித்துவரும் பத்திரிக்கைகளில் அந்தக்காலத்திலிருந்து இன்னும்- தொடர்ந்து என இல்லையென்றாலும்- தொடர்கிறது துக்ளக்.  இதழைப் படிக்கையில், சோ-வின் நாட்களை பத்திரிக்கை வாசகர்கள் இன்னும் வாஞ்சையுடன் நினைவுகூறுகிறார்கள் எனத் தெரிகிறது. அந்த இதழின் புகழ்பெற்ற ஆசிரியர் – ஒரு மதிப்புமிக்க பன்முக ஆளுமை – சோ ராமசாமி நம்மிடையே இல்லை. தனக்குப்பின் இவர் என அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட அவரது நண்பரான எஸ். குருமூர்த்தி அதன் ஆசிரியராக இயங்கிவருகிறார். அரசியல்வாதிகளுடன் –தேசிய அரசியல் பிரமுகர்கள் எனக் கொள்க- நெருங்கிய தொடர்பில் பல ஆண்டுகாலம் இருந்தவராதலால், அனுபவத்தை முன்னிட்டு, சில ஆழமான அரசியல் கட்டுரைகளையும், தலையங்கத்தையும் துக்ளக்கில் எழுதிவருகிறார். வழக்கமான பங்களிப்பாளர்களான ஆர். நடராஜன், வண்ணநிலவன், சத்யா, துக்ளக் ரமேஷ், ஸ்ரீ, ராஜு – கார்ட்டூனிஸ்ட்கள் போன்றவர்கள் தொடர்கிறார்கள். அரசியல், ஆன்மீகக் கட்டுரை, தலையங்கத்துடன், அதன் புகழ்பெற்ற கேள்வி-பதில் பகுதியும் துக்ளக்கில் தொடர்கிறது. எஸ்ஜி-தான் பதில்கள். சோ-வின் இயற்கையான அங்கதம் அவற்றில் இனி காணமுடியாதுதான். எனினும், வாசகர்களுக்கு தேசீய அரசியல் மற்றும் பிற சங்கதிகள்பற்றியும் பாரபட்சமின்றி விஷய ஞானம் அளிக்கும் வகையில் வந்துகொண்டிருக்கிறது. புதிய ஆசிரியர் ஏனைய துக்ளக் பங்களிப்பார்களுடன் சேர்ந்து பத்திரிக்கையை திறம்பட நடத்திவருகிறார் என்றே தோன்றுகிறது. பத்திரிக்கையின் தொடரும் வாசகர்கூட்டம், பிராபல்யம் ஒவ்வொரு வருட துக்ளக் ஆண்டுவிழா நிகழ்விலும் அதை நிரூபித்துவருகிறது. மாநில, தேசீய அளவில் கட்சி/சித்தாந்த நெடி வீசும் குப்பைகூளங்களுக்கிடையே, தரமான ஒரு அரசியல் நடுநிலைஇதழாக துக்ளக் தொடர்ந்துவருவது ஒரு சாதனைதான். இத்தகைய இதழ் இந்தியாவில் ஆங்கிலத்திலோ, பிறமொழி எதிலுமோ வருவதில்லை.

இரண்டு கழுதைகள் சோ-வின் பத்திரிக்கை (!) பற்றிக் கிண்டலாகப் பேசுவதாகக் கார்ட்டூன் தாங்கி வெளிவந்தது துக்ளக்கின் ஆரம்ப இதழ் (ஜனவரி 1970, விலை 40 காசு). இப்படி பத்திரிக்கை ஒன்று, தன் ஆசிரியரையே கேலி செய்வதை  அட்டைப்படமாகப்போட்டு விற்பனைக்கு வந்த முதல் பத்திரிக்கை நாட்டிலேயே இதாகத்தான் இருந்திருக்கும்! ஆசிரியர் சோ 2016-ல் மறைந்துவிட்டார். 2020- ஜனவரியில் தன் 50-ஆவது ஆண்டுவிழாவை சென்னையில் துக்ளக் கொண்டாடிய வேளையில், ஏகப்பட்ட நீண்டநாள் வாசகர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்து மேடையேறிப் பேசினார்கள். துக்ளக்கின் ஆரம்பகாலத்திலிருந்து பல விஷயங்கள் நினைவுகூறப்பட்டன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வலுப்பெற்று ஆட்சிசெய்துகொண்டிருந்த காலகட்டத்தில், அதை எதிர்த்தோ, விமரிசித்தோ எழுதும் பத்திரிக்கைகள் காணப்படவில்லை. குமுதம், விகடன் போன்ற பாப்புலர் வாரப்பத்திரிக்கைகள் அவ்வப்போது தலையங்கம் என்ற பேரில் கொஞ்சம் குறைசொல்வதுபோலவும், நிறைய நல்லது கண்டதாகவும் அரசுக்கு ஜால்ரா அடித்தவாறு (பிழைக்கணுமே தமிழ்நாட்டில்) கதை ஓட்டிக்கொண்டிருந்த காலம் அது. இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், ஹிந்து போன்ற புகழ்பெற்ற நாளிதழ்களும் திராவிட இயக்கத்தை நேரடியாக விமரிசிப்பதைத் தவிர்த்து, மாறாக முனைப்புடன் அனுசரித்துப் போன காலமது. அப்போது, ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம், விமரிசிப்போம் என அறிவித்தவாறே  பத்திரிக்கை உலகில் குதித்த அரசியல் இதழ் துக்ளக். அதன் தொடர்வெற்றிக்குக் காரணம் சோ என சினிமா, அரசியல், பத்திரிக்கை வெளியில் அழைக்கப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியர், அரசியல் விமரிசகரின் தனிப்பட்ட ஆளுமை. எந்த ஒரு கவனத்துக்குரிய விஷயத்தையும், மற்ற பத்திரிக்கைகள் பேச அஞ்சும் சர்ச்சைக்குரிய விஷயத்தையும் தைர்யத்துடன் எடுத்துக்கொண்டு, அங்கதம் தொனிக்க அவர் அதை எழுதியளித்த முறை பத்திரிகையின் புகழ், வளர்ச்சிக்கு முக்கிய காரணம். பொதுவாக ஆட்சி எதிர்ப்பு நிலை, அவ்வப்போது பாஜக சார்புநிலை என எடுத்திருந்தாலும், அதன் காரண, காரியங்களை  வாசகருக்கு சோ விளக்கிய விதம், அதே சமயத்தில் குருட்டுத்தனமாக ஒரு கட்சியை, சித்தாந்தத்தை ஆதரித்துக்கொண்டிராமல் எத்தகைய தவறு, மாநிலத்திலோ, மத்தியிலோ நடந்தாலும், அதனை ஒளிவு, மறைவு இன்றி நேரடியாக விமரிசித்த பாணி அவருடைய பத்திரிக்கைக்கு விசுவாசமுள்ள வாசகர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.  தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரதான அரசியல்வாதியும் துக்ளக்கின் விமரிசனங்களை, கருத்துக்களை அலட்சியப்படுத்த முடியாதவாறு, குறிப்பாக சோ-வின் ஆசிரியர் காலம் இருந்திருக்கிறது என்று எழுதியுள்ளது புகழ்பெற்ற அவுட்லுக் (Outlook) ஆங்கில வார இதழ். சேலத்தில் 1971-ல் நடந்த ராமர் அவமதிப்பு ஊர்வலம், 1975 ல் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சி, 1992-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற அரசியல் சர்ச்சை மிகுந்த இந்திய  காலகட்டத்தில் துக்ளக் இதழின் பாரபட்சமற்ற தெளிவான நிலைப்பாடு, வெளியிட்ட காரமான படங்கள், கட்டுரைகள் வாயிலாக அதன் புகழ் தமிழ்நாடெங்கும் வெகுவாகப் பரவியது. மட்டுமல்லாது, தேசீய அரசியல் விமரிசகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆங்கிலத்திலும் இவ்வாறு ஒரு தரமான அரசியல் பத்திரிக்கை அவசியம் என நினைத்த சோ, பிக்விக் (Pickwick) என்கிற பெயரில் ஒரு இதழைத் தொடங்கி கொஞ்சகாலம் நடத்தினார். அதனை வெற்றிகரமாகத் தொடரமுடியாத காரணத்தால் கைவிட்டார். விமரிசனம் தாண்டி, எதிர்க்கருத்துக்களை மிஞ்சி, தான் விமரிசித்த அரசியல்வாதிகளோடும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டிவந்த பண்பாளர் சோ ராமசாமி.

வாசகர் கேள்விகளுக்கு பரிசு கொடுப்பதோடு நிற்காமல், அரசியல்வாதிகளின் அசட்டுப் பேச்சுக்களுக்கும் துக்ளக் அவ்வப்போது பரிசு கொடுத்த காலம் ஒன்று இருந்தது! (மேலே: துக்ளக் 1974 ஆம் வருட இதழிலிருந்து)

இன்று காலை வழக்கம்போல் ஏதேதோ செய்திச் சிதறல்களுக்குள் போய்வந்துகொண்டிருக்கையில், துக்ளக்கின் அந்தக்கால கேள்வி-பதில்களுக்குள் கொஞ்சம் உலவியது மனது! சோ-காலத்து கேள்வி-பதிலில் சிலவற்றை நினைவுக் கோப்புகளிலிருந்து மீட்டுக் காட்டியது. பகிர்வோமே.. பல நாட்களுக்கப்புறம் நாமுமே.. எனத் தோன்ற, ஒருகாலகட்டத்தின் அரசியல் காட்சிகள் தொடர்பான அல்லது பொதுவான ரசம் காட்டும் சோ-வின் பதில்கள் சில இங்கே (காலம் 70, 80-கள்):

கோயம்புத்தூரிலிருந்து ஒரு வாசகரின் கேள்வி :  நேற்று எங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டு உங்களை,  ’முட்டைக்கண்ணன் சோ’ என்று திட்டினார் சார்! இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சோ: அநேகமாக, அந்த கூட்டத்தில் அவர் சொன்ன ஒரே உண்மை அதுவாகத்தான் இருக்கும்.

**

கேள்வி: பாகிஸ்தான் பிரதமர் புட்டோபற்றி?

சோ: எதையும் முன்னுக்குப்பின் முரணாகப் பார்ப்பவர் புட்டோ. அவர் பெயரையே எடுத்துக்கொள்ளுங்களேன்.. ‘A’-க்கு முன்னால் ‘Z’ வந்துவிடும்! Z.A. புட்டோ. Zulfiqar Ali Bhutto !

**

வாசகர் கேள்வி: நமது நாட்டின் வெளியுறவுக்கொள்கைபற்றி ஏதாவது சொல்லுங்களேன்! (கேள்வி வந்தது 1970-களில்)

சோ: வெளியுறவுக் கொள்கையா!   ஜிஞ்ஜினாக்கடி.. ஜிஞ்ஜினாக்கடி… ஜிஞ்ஜினாக்கடி ஜிஞ்ஜின்னா…

**

கேள்வி (ஆர்.முனுசாமி, சிந்தாதிரிப்பேட்டை): மழை ஏன் ‘சோ’ என்று பெய்கிறது?

சோ:  பின்னே? ‘ஆர்.முனுசாமி, சிந்தாதிரிப்பேட்டை’ என்றா பெய்யும்!

**

கேள்வி: குடிக்கிற தண்ணீரில் ஆரம்பித்து சினிமா தயாரிப்பு வரை கருணாநிதி குடும்பத்தாரின் சாம்ராஜ்யம் பெருகிக்கொண்டே வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் கூறியிருப்பதுபற்றி?

சோ: அநியாயமாகப் பேசக்கூடாது. தெருவோர இட்லிக்கடைகள், பீடா, பீடிக்கடைகள், கட்டைவண்டி காய்கறி வியாபாரம் போன்றவற்றை இன்னமும் முதல்வரின் குடும்பம் விட்டுவைத்திருக்கிறது. அந்தப் பெருந்தன்மையைப் பாண்டியன் பாராட்டவேண்டாமா!

**

கேள்வி: இப்போதெல்லாம் பிரபல வாரப்பத்திரிக்கைகள் இலவச இணைப்பு என்று கொடுக்கிறார்களே. துக்ளக்கும் இப்படி இலவசம் ஏதாவது தரலாமல்லவா?

சோ: தரலாம். ஒரு எலுமிச்சைப் பழம் ஒவ்வொரு இதழுடனும் இலவசமாகத் தரலாம். வாசித்து முடித்தபின் தலையில் தேய்த்துக்கொள்ள வசதியாய் இருக்கும்!

**

கேள்வி: சோ! நீ ஒரு முட்டாள்?

சோ: பாம்பின் கால் பாம்பறியும்..

**

கேள்வி: தமிழகப் பசு ‘அம்மா’ என்று அழைக்கிறது. தாய்லாந்து பசு எப்படி அழைக்கும்?

சோ: சித்தப்பா! – என்று அழைக்கும்! தாய்லாந்து போனால் அவசியம் கேட்டு வந்து சொல்கிறேன்.

**

கேள்வி: கடவுள் உம்மைப் படைத்ததற்காக நான் வருந்துகிறேன்…

சோ: உமக்காக கடவுள் வருந்துவார்!

**

கேள்வி:  மிருகங்களின் கேள்விக்கும் நீங்கள் பதில் அளிப்பீர்களா?

சோ:  சும்மா கேளுங்க சார் !

**

ஜூன் 1975-ல் இந்திராகாந்தி எமர்ஜென்சி அறிவித்தபின் வெளிவந்த துக்ளக் இதழின் அட்டைப்படம் மேலே!

**