”பெங்களூரிலா இருக்கிறீர்கள்? மேலக்கோட்டை போய்வந்தீர்களா? என்ன? இன்னும் போகவில்லையா? அவசியம் ஒரு தடவை குடும்பத்தோடு போய்ட்டு வந்திருங்க சார். ராமானுஜர் 12 வருஷம் அங்கே இருந்திருக்கார். திருநாராயணபுரம்னு அந்த ஸ்தலத்துக்கு பேரு..!” என்றெல்லாம் என்னை சந்திக்கும்போதெல்லாம் சொல்லித் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு நண்பர் டெல்லியில். சரி, ஒரு ட்ரிப் போயிட்டுவந்துடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொள்வேன்.
கடந்த வாரம் என் பெண்ணிற்கு சேர்ந்தாற்போல் விடுமுறை. வெள்ளிக்கிழமையில் புறப்படலாம் எங்கேயாவது என்றாள். மேலக்கோட்டை! மணியடித்தது மனம். பெங்களூரிலில் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து. சுமார் 150 கி.மீ. தூரத்திலிருக்கும் அந்த ஊருக்கு, மைசூர் ரோடில் மாண்ட்யா போய்ப் போகலாம் எனத் தெரியவந்தது. கார் காத்திருக்கிறது. ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தோம். வந்துவிடப்பா காலையில் 6 ½ மணிக்கு என்று சொல்லியாயிற்று. வழக்கம்போல் லேட்டாக ஓட்டுனர் வர, ஒருவழியாக காலை 7 மணிக்கு பெங்களூரின் ஹென்னூர் விட்டுப் புறப்பட்டோம். 8 மணிக்குள் பெங்களூர் அவுட்டர் போய்விட்டோம். இருந்தும் பஸ்களும் பெரிய ட்ரக்குகளும் சாலையை இடது வலதாக மேய்ந்துகொண்டிருந்தன. வோக்ஸ்வாகனை 100-க்கு மேல் சீறவிட்டு அவைகளுக்குள் புகுந்து வெளியேறி மாண்ட்யா நோக்கி முன்னேறினோம். பிதாதி (Bidadi), ராம்நகர், மத்துரு (Madduru) ஆகிய ஊர்களைக் கடந்து 9.35-க்கு மாண்ட்யா வந்துசேர்ந்தோம். காஃபி குடிக்கக்கூட கீழே இறங்கவில்லை.
ஜிபிஎஸ் போட்டுப்பார்த்ததில், மாண்ட்யாவிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மேலக்கோட்டை போகிறது என்றது. மாண்ட்யாவிலிருந்து 36 கி.மீ. தூரம்.(மைசூரிலிருந்து வடக்காக 51 கி.மீ.-ல் இருக்கிறது). நாங்கள் பயணித்த சாலை முதலில் குறுகலாகி பயமுறுத்தியது. பின் விசாலமாகிப் பளபளத்தது புதிதாகப் போடப்பட்டிருந்த தார் சாலை. எங்களது காரும் புத்தம்புதிது. கேட்கவா வேண்டும்? போக்குவரத்து நெரிசலில்லாத மலைப்பகுதியின் வழுவழு சாலையில் இருபுறமும் காடுகள் சூழ்ந்திருக்கக் சீரான வேகத்தில் காலையில் பயணித்தது மனதுக்குப் பிடித்திருந்தது. பெங்களூரின் கான்க்ரீட் குவியலிலிருந்து, போக்குவரத்து நெருக்கடிகளிலிருந்து தற்காலிக விடுதலை. இடையிடையே தென்பட்டன குக்கிராமங்கள். மாடுகள், ஆடுகள், கோழிகள், சாலையின் இருமருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் என இயற்கைச் சூழல் ரம்யமாயிருந்தது. 45 நிமிடத்திற்குப்பின் வந்துசேர்ந்தோம் நாங்கள் தேடிய ஊருக்கு. யதிராஜர் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை தன்னகத்தே 12 வருடங்களுக்கு மேலாக வசியப்படுத்தி வைத்திருந்த முக்கிய வைஷ்ணவ ஸ்தலமாக அறியப்படும் மேலக்கோட்டை. (கன்னட மொழியில் மேலுக்கோட்டே(Melukote). கடல்மட்டத்திலிருந்து 3589 அடிக்கு மேல், க்ரானைட் குன்றுகளின் இடையே குளுகுளுவென ஒரு அழகுப் பிரதேசம். யாதவகிரி என்று கிருஷ்ணர் காலத்தில் அழைக்கப்பட்ட மலைப்பகுதி. ராமானுஜர் காலத்து வனம் சூழ்ந்த கிராமம், தற்போது மாண்ட்யா மாவட்டம், பாண்டவபுரா தாலுக்காவில் ஒரு சிறிய டவுனாக உருமாறியிருந்தது.
கால ஊர்தியில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றுவருவோம். 11-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்து சமயம் சைவம், வைஷ்ணவம் எனச் செங்குத்தாகப் பிரிந்திருந்தது. அதில் ஒன்றும் குற்றமில்லை. ஆனால் சோழமன்னன் ஒரு சைவமதத் தீவிரவாதி! சிவன் தான் கடவுள். மற்ற தெய்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு எதிரே நில்லாதே! வைஷ்ணவர்களை விரட்டிவிரட்டி அடித்தான். நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு அவனது பிரதேசத்தில் யாரும் உலவக்கூடாது. அவனுடைய அட்டூழியங்கள் தாங்கமுடியவில்லை. நித்யகர்மாக்களை செவ்வனே தொடரவென, வைஷ்ணவத் துறவியான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறி, தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்னாடகாவின் மேலக்கோட்டைப் பகுதிக்கு வந்தார். அந்தப்பிரதேசத்து மக்கள் அப்போது மழையின்றி வறுமையில் தவித்துவந்தார்கள். மேலக்கோட்டைக்கு அருகிலிருந்த தொண்டனூருக்கு முதலில் சென்ற ராமானுஜர், அந்த ஊர்க் குளங்களெல்லாம் கேட்பாரின்றி வற்றிக் கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தார். அப்பாவி மக்களுக்கு முதலில் ஏதாவது செய்யமுயல்வோம். ஆண்டவனைப் பிறகு கவனிக்கலாம் என கிராம மக்களைச் சேர்த்துக்கொண்டு நீர்வளச் சீரமைப்பில் ஈடுபட்டார். தொண்டனூர் நம்பி என்னும் சீடரின் தலைமையில் கடும் உழைப்புக்குப்பின், கல்யாணிகுளம் என்கிற பெரியகுளத்தை வெட்டி, பக்கத்துக்கால்வாய் வழி நீர் வந்துசேர வழி செய்தார். பருவமழை வந்தால் நிரம்ப என ஏனைய சிறுகுளங்களும் தூர்வாரப்பட்டன. ஸ்ரீரங்கத்து சாமியின் அன்பும், சேவையும் பாமர மக்களை மகிழ்வித்தன. அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டவுடன், மேலக்கோட்டைக் கோவில் பற்றி விஜாரித்தார் உடையவர். சுல்தானின் படைகளால் சூறையாடப்பட்டு சிதைந்துபோய்விட்டது என்றனர். ’’சாமீ! எங்களுக்குக் கும்பிடக்கூட சாமி இல்ல!’’ என்றனர் சோகமாய், அந்த ஊர் ஜனங்கள்.
புதர்களும் புற்றுக்களுமாய் மண்டிக்கிடந்த வெளியில் பகலெல்லாம் சுற்றித் திரிந்தார் ராமானுஜர். பாழடைந்த பெருங்கோவிலின் சிதிலங்கள் ஆங்காங்கே தெரிந்தன. அந்தப் பகுதியின் வேறுசில கிராமங்களிலும் மேலும் சில கோவில்கள் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த கதையை ஊர் மக்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். அருகில் ஆண்டுகொண்டிருந்த சிற்றரசனை சந்தித்தார் அவர். ராமானுஜர்பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது மிகுந்த மதிப்புகொண்டிருந்தான் மன்னன். அவனிடம், மேலக்கோட்டைக் கோவிலையும் மற்ற சிதிலமடைந்த கோவில்களையும் மீட்டுப் புதிதாய்க் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உடையவர். மன்னன் அதற்கு உடன் இணங்கினான். முதலில் காணாமற்போயிருக்கும் மூலவர் விக்ரஹத்தைக் (செலுவநாராயணர்) கண்டுபிடிப்போம் என எண்ணியவன், தன் படைவீரர்களை விட்டு மேலக்கோட்டை கோவிலின் சிதிலங்களை அலசச் செய்தான். அவர்களும் ராமானுஜரின் மற்றும் கிராமத்துப்பெரியவர்களின் உதவியோடு தேடினர். மேலக்கோட்டை மூலவரான திருநாராயாணப் பெருமாள் பெரும்புதரும் புற்றுமாய்ப் உயர்ந்திருந்த ஒரு பகுதியில் மறைந்து கிடப்பதைக் கண்டனர். சேதமேதுமின்றி பெருமாளை வெளியே எடுத்து மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். மன்னன் உற்சாகமானான். சொன்னபடி மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமி கோவிலை சிறப்பாகக் கட்டி முடித்தான். இதைப்போலவே அடுத்த சில ஆண்டுகளில் தொண்டனூர், பேலூர்(Belur), தலக்காட் (Talakad), கடக் (Gadag) ஆகிய ஊர்களில் நாராயணர் திருக்கோவில்களை மீண்டும் கட்டுவித்தான். விஷ்ணு கோவில்களை கொடுத்த வாக்குப்படி அவன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்ததால், மனமகிழ்ந்தார் ராமானுஜர். அவனுக்கு விஷ்ணுவர்தன் என்கிற பெயரைச் சூட்டி சிறப்பித்தார். பிற்காலத்தில் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டான்.

மேலக்கோட்டைக்கு வந்த ராமானுஜர், புதிதாகக் கட்டப்பட்ட செலுவநாராயணர் கோவிலில் பூஜைக்கிரமங்களை ஏற்படுத்தி மூலவருக்கு நித்ய பூஜைகளை ஆரம்பித்துவைத்தார். மக்கள் பெருமகிழ்வுடன் சாமி கும்பிட்டனர். மூலவர் வந்துவிட்டார். உத்சவர் இல்லாமல் ஒரு கோவிலா? எங்கே போய்விட்டார் அவர்? ராமானுஜர் பெரிதும் விசனப்பட்டார்.ஒரு இரவில் உடையவரின் கனவில் தோன்றிய உலகலந்த பெருமாள், தான் சுல்தானின் அரண்மனையில் இருப்பதாகச் சொல்லி மறைந்தார். அவ்வளவுதான் . இருப்புக்கொள்ளவில்லை ராமானுஜருக்கு. சுல்தானை சந்தித்தே ஆகவேண்டும். தன் சிஷ்யர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு டெல்லிக்கு நெடும்பயணம் மேற்கொண்டார், தன் வயோதிகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றி.
ராமானுஜரைப் பரபரப்புக்குள்ளாக்கிய ’செல்வப்பிள்ளை’ என்று அழைக்கப்படும், செலுவநாராயண ஸ்வாமி கோவிலின் இந்த உத்சவர் விக்ரஹம் புராண காலத்தோடு தொடர்புடையது. இதன் மஹாத்மியமே வேறு! இந்த உத்சவ மூர்த்தியின் ஆரம்பப் பெயர் ‘ராமப்ரியா’. ஏனெனில் ராமபிரானால் முதலில் பூஜிக்கப்பட்டது இது. அவருக்குப்பின் வந்த சூர்ய வம்சத்தினராலும் தொடர்ந்து வணங்கப்பட்டுவந்தது. பிறகு இது சந்திரவம்சத்திற்கு கைமாறியது. கிருஷ்ணராலும், ஏனைய சந்திரவம்சத்தினராலும் பூஜிக்கப்பட்டது. ராமனாலும், கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிறப்புடைய மூர்த்தி இந்த செல்வப்பிள்ளை ! இதை விட்டுவிட்டு எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் ராமானுஜரால் ?
**