இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது ?

நண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் வழக்கம். ஏதோ, அதனால் முடிந்த காரியம்!

இப்போது பேசவந்தது இந்த மனதின் சாதுர்யம், சாகசம் பற்றி அல்ல. நாலாபுறமும் நாம் காணும் நாசகார காரியங்கள் பற்றி; சுற்றுச்சூழல் சிதைவு பற்றி. பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளில் ஒன்றான தொழிற்பெருக்கத்திற்கென, நாட்டின் குளிர்ச்சியான குக்கிராமங்கள் தடயம் தெரியாமல் காணாமல்போகுமாறு செய்யப்பட்டுவிட்டன. அதனிடத்தில், மழைக்காளான்களாய் முளைத்துவருகின்றன தொழிற்பேட்டைகளும், போதிய வசதியில்லாப் புறநகர்ப்பகுதிகளும். அசுரவேகத்தில் பெருநகரங்களாக உருமாறுகின்றன சிறு நகரங்கள். தவிர்க்கவியலாத, சூழல்நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், சரியான ஆரோக்யமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின்றி, கான்க்ரீட் மலைகள் ஆங்காங்கே, தாறுமாறாகப் பொங்கி, கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று மனிதனின் ஆரோக்கிய வாழ்வையே அச்சுறுத்தும் அவல நிலை உண்டாகிவிட்டிருக்கிறது.

முன்னர், அக்கம்பக்கத்தில் பச்சைப்பசேலென்று வளர்ந்து சூழ்ந்திருந்தருந்த, குளிர்ச்சிதரும் நாட்டு மரங்களான ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை, பூவரசு, பூங்கொன்றை போன்ற பூ, காயெனப் பொழிந்துதள்ளிய மரங்கள், பணம்பண்ணும் முதலைகளின் பேராசைக்கெனக் காவுகொடுக்கப்பட்டுவிட்டன. கொடுக்கப்பட்டும் வருகின்றன. ஒருகாலத்தில் ஏரிகளால், குளம், குட்டைகளால், நீர்நிலைகளால், நிழல்தரும் மரங்களால் நிறைந்திருந்த, மனிதனுக்கான அழகான வாழ்விடங்களாக இருந்த சிறுநகரங்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தீக்கண்கள்பட்டு, சிதைந்து சின்னாபின்னமாகி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ‘கார்டன் சிட்டி’ என்று ஆசையாக ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று நாட்டின் மற்றுமொரு ‘கான்க்ரீட் சிட்டி’ என்றாகிவிட்டது. பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று. குறுகிய காலகட்டத்திலேயே, கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்.

நமது கிராமங்கள், நகரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கென, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் வரையமுடியாத, செயலாக்கமுடியாத, எதையும் உருப்படியாக செய்ய விரும்பாத அரசியல்வாதிகளால் மனித வாழ்வு சீர்குலைந்துவிட்டது. மனிதனோடு சேர்ந்து வாழநேர்ந்த துர்ப்பாக்கியம் கொண்ட ஜீவன்களான, ஆடு, மாடுகள், பறவைகள் என, இவைகளின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். இவைகளின் வாசம், வாழ்வாதாரத்துக்கு, நீர்நிலைகள், நிழல், காய்கனிதரும் மரங்கள், செடிகொடிகள் முக்கியமல்லவா? சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா? அதிகாலையிலும், மாலையிலும் இப்போதெல்லாம் கேட்காத பறவைகளின் கீச்கீச்சு சப்தங்களுக்காக மனம் ஏங்குகிறது.

நாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிவைத்த அரசியல் வாதிகள், பசப்புவார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பெங்களூரில், மூன்றாவது அடுக்குமாடிவீட்டின் பால்கனியிலிருந்து சிந்தனையோடு சுற்றுவெளியைப் பார்க்கிறேன். குத்துக்குத்தாக தனிவீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே, ஆங்காங்கே கொஞ்சம் பச்சைத் திட்டுகள் இன்னும் தெரிகின்றன. ஒரு இளம் வேப்ப மரம், ஆலமரம், பெயர்தெரியாத சில மரங்கள் – இன்னும் பெரிதாகவில்லை- தூரத்தில் சிறுகூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள்.. தெரியாத்தனமாக விட்டுவைத்திருக்கிறார்களோ? சந்தோஷம் தலைதூக்குகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.யார் கண்ணாவது பட்டுவிடாமல் இருக்கவேண்டுமே !
**

IPL : க்றிஸ் மாரிஸ் – திடீர் டேர்டெவில் ! (Daredevil)

ஐபிஎல்-இல் நேற்று (27-4-16) ஒரு ரன்னில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை, டெல்லியில் வென்றது ரெய்னாவின் குஜராத் லையன்ஸ். இது மேட்ச் ரிசல்ட். இதுமட்டுந்தானா அந்த மேட்ச்சில் நடந்தது ?

முதலில் பேட் செய்த குஜராத் லையன்ஸ், துவக்கவீரர்களான ட்வேன் ஸ்மித்(Dwayne Smith), ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) ஆகியோரின் அதிரடி அஸ்திவாரத்தில் ப்ரமாதமாக ஆரம்பித்தது. ஆனால் ரெய்னா, கார்த்திக், ஜடேஜா என்று வரிசையாக வழிய, 172 தான் அதனால் எடுக்க முடிந்தது.

டெல்லியின் பதில் பிணாத்தலாக இருந்தது. குல்கர்னி வரிசையாக 3 விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார். 16 ரன்களில் 3 விக்கெட் என சிதறிக் கிடந்தது டெல்லி. ஜே.பி டூமினி(JP Duminy) இறங்கி ஒழுங்காக பேட்செய்ய, தடுமாறலில் இருந்து மீள்வதாகப் பட்டது. 57 ரன்களில் நான்காவது விக்கெட்டும் வீழ்ந்துவிட, டெல்லி 140-க்குள் காலியாகிவிடும்-குஜராத் வெற்றி நிச்சயம் என முடிவு செய்து, பாப்கார்னும், பெப்சியுமாக இளைப்பாறியிருந்தது ரசிகர் கூட்டம். எல்லாம் நார்மல்.

அப்போதுதான் அது நிகழ ஆரம்பித்தது. 6-ஆம் நம்பரில் விளையாட ஒரு புயல் வந்து இறங்கியிருப்பதை ரசிகர்கள் மட்டுமல்ல. அவரை மைதானத்துக்கு அனுப்பிவைத்த டெல்லி கேப்டனுக்கே ஒரு மண்ணும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஐபிஎல் அப்படிப்பட்ட கிரிக்கெட்.

க்றிஸ் மாரிஸ் (Chris Morris). டெல்லியின் சிறந்த பௌலர். வந்திருப்பதோ பேட்டிங் செய்ய. நிலைமையோ அபத்தம். 56 பந்துகளில் 116 ரன் தேவை டெல்லிக்கு. மாரிஸைப்போய் யார்தான் கண்டுகொள்வார்கள்? பௌண்டரியும் சிக்ஸருமாக ஆரம்பித்ததற்குக் கொஞ்சம் கைதட்டல் கிடைத்தது. `என்ன, பயல் ஒரு ரெண்டு, மூணு சிக்ஸர் அடித்துவிட்டு ஓடிவிடுவான் !` – என டெல்லியின் கேப்டன் உட்பட அனைவரும் நினைத்திருந்தனர் போலும். ஆனால் கிரிக்கெட் எனும் விசித்திர விளையாட்டு தன் வேலையைக் காண்பிக்க டெல்லியைத் தேர்ந்தெடுத்திருந்தது நேற்று!

வெறும் 17 பந்துகளில் கடந்தார் மாரிஸ், அரை சதத்தை. என்ன! ஒரு வேளை, டெல்லி ஜெயிச்சிருமா ! கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. இதுவரை ரிலாக்ஸ்டாக இருந்த எதிரி டீமின் கேப்டன் ரெய்னாவுக்குக் கவலை பற்றிக்கொண்டது. பௌலர்களை வேகவேகமாக சுழல், வேகம் என மாற்றினார். ம்ஹூம்! ப்ரயோஜனம் இல்லை. ஜெயிக்கப்போற நேரத்துல எங்கேருந்துடா வந்தான் இந்த மாரிஸ்? இவன் பௌலர் அல்லவா? பேட்டிங்கும் தெரியுமா! யாரைக் கூப்பிட்டு என்ன மாதிரி பந்துபோடச் சொல்வது இவனுக்கு? எந்த பௌலர் வந்து, என்ன எழவைப்போட்டாலும், பறக்குதே பந்து சிக்ஸருக்கு. எல்லாம் நம்ப நேரம்… நாக்குத் தள்ளியது ரெய்னாவுக்கு.

18 ஆவது ஓவரில் டுமினி அவுட் ஆகியும், ஒருவேளை மாரிஸ் ஒண்டி ஆளாக நின்று, தனக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியைப் பறித்து டெல்லிக்குக் கொடுத்துவிடுவாரோ என்கிற பயம் குஜராத்திடம் கடைசி பந்துவரை இருந்தது. கடைசி ஓவர்களை ப்ரவீண்குமாரும், ப்ராவோவும் (Bravo) பிரமாதமாகப் போட, பவுண்டரி, சிக்ஸர் விழாது போனதால், குஜராத் ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பித்துவிட்டது மாரிஸிடமிருந்து.

மாரிஸ் 32 பந்துகளில், 4 பௌண்டரி, 8 சிக்ஸரென 82 ரன் எடுத்து, கிட்டத்தட்ட கதையையே மாற்றி எழுதிவிட்டிருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்கள், நிபுணர்கள் என எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்குள், முழுப்பைத்தியமாக்கிவிட்டிருந்தார் டெல்லியில். சோனி சேனலின் chatterbox-ஆன, ஹிந்தி கிரிக்கெட் வர்ணனையாளர் நவ்ஜோத் சித்து (Navjot Sidhu)(BJP’s MP), மாரிஸின் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தை தேடித் திணறியது இன்னுமொரு சுவாரஸ்யம். இறுதிவரை நாட் அவுட். தடாலடி ஆட்டத்தினால் கிடைத்தது ஆட்டநாயகன் விருது. அதுவல்ல விஷயம்- க்றிஸ் கேல்(Chris Gayle), டிவில்லியர்ஸ் (de Villiers), கோஹ்லி, மெக்கெல்லம் ஆகிய ஜாம்பவான்களின் முன்னால், டி-20 கிரிக்கெட்டில், ஐபிஎல்-லில், ஒரு புது நாயகனின் திடீர் காட்சி !

“என்ன மாரிஸ், இவ்வளவு நீங்கள் உழைத்தும் மேட்ச் ரிசல்ட் டெல்லிக்கு இப்படி ஆகிவிட்டதே..“ என்று அங்கலாய்க்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர். “அதனாலென்ன, சூரியன் நாளை மீண்டும் எழும்! புதிய நாளொன்றும் பிறக்கும்!“ என்று பதில் சொல்கிறார் க்றிஸ் மாரிஸ். உயர்விலும் அடக்கம். அதிர்ச்சியிலும் அமைதி. தென்னாப்பிரிக்காவின் க்றிஸ் மாரிஸ்.

**

வைகறை அஞ்சலி

வைகறைப்பொழுதைத் தாண்டி நகர்ந்து
வாழ்வின் பகலில் நடைபயில ஆரம்பித்தவனை
வா வா என அழைத்துக்கொண்டான்
என்ன அவசரம் வந்தது
எதற்கிந்தத் திடீர் அழைப்பு
காலனைக் கடிந்துகொள்வதா
கால நேரத்தை நொந்துகொள்வதா
ஒன்றும் புரியாமலே
ஓரிரு வரிகள் எழுதி வைத்தேன்

-ஏகாந்தன்

இரண்டு நாள் முன் நிகழ்ந்த கவிஞர் வைகறையின் அகால மரணம் பற்றி சற்றுமுன் தெரிந்துகொண்டேன். மனதை உலுக்குகிறது. ஆண்டவன் அருளால் அவரது ஆன்மா சாந்தி பெறட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

வைகறை 35 வயது இளங்கவிஞர். இயற்பெயர் ஜோசப் பென்சிஹர், ஊர் தூத்துக்குடி அருகே உள்ள அடைக்கலாபுரம், புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் போன்ற விபரங்களை நண்பர் தமிழ் இளங்கோவின் வலைப்பதிவிலிருந்து அறிகிறேன். புதுக்கோட்டைக்காரர் என நான் நினைத்திருந்தேன். கடந்த அக்டோபரில், புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவில் கலந்துகொண்டபோது, இவரை மேடையில் பார்த்தேன். பேச நேரவில்லை.

வளர்ந்துவந்த கவிஞர். ஆனந்த விகடன், கணையாழி ஆகிய பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. நந்தலாலா.காம் என்கிற கவிதைகளுக்கான இணைய இதழை நடத்திவந்தவர். புதிதாய் எழுதும் பலருக்கு வாய்ப்பளித்தவர் எனத் தெரிகிறது. வெளிவந்துள்ள அவரது கவிதைப் புத்தகங்கள்: ஒரிஜனல் தாஜ்மஹால், நிலாவை உடைத்த கல், ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்.

கவிஞர் வைகறை இந்த மாதத்தில், தன்னுடைய வாழ்வின் இறுதி மாதத்தில் எழுதிய கவிதை ஒன்று கீழே:

சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

வைகறை

**

நாய் என்றொரு ஜீவன்

எங்கள் குடியிருப்பு வளாகத்தின் வாசல் மரத்தடியில், கொஞ்ச நாட்களாக ஒரு காட்சி. மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு அழகிய இளம் நாய். சாம்பல், வெள்ளை கருப்பென்று வர்ணக் கலவை. துறுதுறு முகம். குறுகுறு பார்வை. அலைக்கழியும் மனத்தோடு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருப்பதாய்ப் படுகிறது. யாரையும் பார்த்துக் குரைப்பதில்லை. அந்த வழியே செல்லும் மற்ற நாய்களையும் சீண்டுவதில்லை. ஒரு இடத்தில் அமர்வதுமில்லை. என்னதான் பிரச்னை? நேற்று மாலை வெளியிலிருந்து திரும்புகையில் கண்ணையும் மனதையும் கவர்ந்த, இந்த நாயை கேஷுவலாக தாண்டிச்செல்ல முடியவில்லை. அருகில் நின்றிருந்த நேபாளி செக்யூரிட்டியிடம் நாயைப் பற்றி விஜாரித்தாள் என் மனைவி. கொஞ்சம் தெரிய வந்தது:

இதன் எஜமானர், எஜமானி ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்க மேடம்! எங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிட்டு போயிருக்காங்க.

நல்லா சாப்பாடுல்லாம் போடுறீங்களா?

அதுதான் பெரிய பிரச்னையாயிருக்கு மேடம். வெளிநாட்டு நாய். அவங்க இதுக்காக பெடிக்ரீ (Pedigree – dog food) வாங்கிக் கொடுத்து, பணமும் கொடுத்துட்டுப்போயிருக்காங்க. இதுதான் சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்குது. தண்ணிகூடக் குடிக்கமாட்டேங்குது.

ஒன்னுமே சாப்பிடலையா !

பக்கத்து வீட்லயும் வெளிநாட்டு நாய் வளர்க்கிறாங்க. அவங்ககிட்ட போய்ச் சொன்னோம். அவங்களும் அவங்க நாய்க்கு போடற வேற மாதிரியான சாப்பாட்டையும் தட்டுல கொண்டுவந்து வைச்சாங்க. தொடணுமே…ம்ஹூம்! இன்னியோட 3 நாளாகப்போகுது. ரொம்பப் பெரிய பிரச்சினையாப் போச்சு..

எங்க போயிருக்காங்க அவங்க? எப்ப திரும்பி வருவாங்க?

அவசரமா சிம்லா போறதாச் சொன்னாங்க. நாலைந்து நாள்ல திரும்பிருவோம்னாங்க. ஒரு துர்சம்பவம் அவங்க குடும்பத்தில ..

என்ன நடந்தது?

அவங்களோட அண்ணா, அண்ணி, ரோட் ஆக்ஸிடெண்ட்டுல போயிட்டாங்க.. அதுக்காகத்தான் இவங்க அவசரமா போயிருக்காங்க.. நாலு நாளாகுமோ, கூட ஆகுமோ தெரியலையே..! உள்ளுக்குள்ள இருந்தா அதுக்கு போரடிக்குமேன்னு, வெளியே இருக்கிற மரத்துல கட்டியிருக்கோம். அக்கம்பக்கத்தைப் பாத்துகிட்டாவது இருக்குமில்ல..!

இவ்வளவு விபரம் செக்யூரிட்டி ஆசாமியிடம் சொல்லிட்டு போயிருக்காங்க. சரிதான். ஆனா இந்த நாய், அவர்களுடைய செல்லம், இந்தப் பாவப்பட்ட ஜெனமத்துக்கிட்ட ஒன்னும் சொல்லலையே. அதுக்கு ஒன்னும் புரியலையே, என்ன செய்ய?

நாய் என்று நாமழைக்கும் இந்த உயிரை, இறைவன் எப்படித்தான் படைத்திருக்கிறான் ? வெகுநேரம் எடுத்துக்கொண்டு தன் வேலையை செய்திருப்பான் போலும். எஜமானன் வரும்வரை சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என்று கிடக்கிறதே.. வாயைத் திறந்து ஒரு சத்தமில்லை. வாலாட்டல் இல்லை ! அப்படி ஒரு விசுவாசம். ஒரு எஜமான பக்தி.

பொதுவாக, மனிதராகிய நாம், உயர்பிறப்பு என நம்மைக் கருதிக்கொண்டு, ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, எப்படி இருக்கிறோம், நடந்து கொள்கிறோம்? நம்முடைய யோக்யதைகள், குணாதிசயங்கள் என்ன? அன்பு, விசுவாசம் போன்ற சங்கதியெல்லாம் நாம் இருக்கும் திசையிலாவது தலைவைத்துப் படுக்குமா? இந்த லட்சணத்தில், சகமனிதனோடு நமக்குப் பிரச்னைவந்து, அவனை நாம் திட்ட முற்படுகையில் `நாயே!` என்று கோபத்தில், வன்மமாகக் கத்துகிறோம். நாய் என்கிற ஒரு அற்புதமான ஜீவனைக் குறிக்கிற சொல்லை, வசைச்சொல்லாக மாற்றியிருக்கிறோம், நம் வசதிக்கென. அடடா! உயர்பிறப்பல்லவா நாம் ?

**

ஆசை ஆசையாய்ப் பெற்றுக்கொண்டு . .

ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தோம் நானும் எனது தர்மபத்தினியும். போகிற வழியில் ஒரு பழக்கடைக்குப் பக்கத்தில் நிறுத்தச் சொல்லுங்கள். கொஞ்சம் பழம் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன் என்றாள் மனைவி. சிடுசிடுக்காமல், பெரியமனசு பண்ணி ஒரு ஓரத்தில் நிறுத்திய இளம் ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

அஞ்சு நிமிஷம் என்ன, பத்து நிமிஷம்கூட வெயிட் பண்ணுவேன் சார்! இந்த வேகாத வெயில்ல, வண்டிய நிறுத்த பக்கத்துல நெழலுகூட இல்ல பாருங்க! என்றார். உண்மைதான். டெல்லியிலிருந்து வந்து இறங்கியபின்தான் உணர்ந்தோம். பெங்களூர்ல இப்ப அடிக்கிற வெயிலுக்கு டெல்லியின் கோடையே பரவாயில்லை. உலகமே உஷ்ணமயமாகிக்கொண்டிருக்கிறது. டெல்லி, பெங்களூர்னு பேசி என்ன பயன்? இருந்தும் பேசினேன்.

மரத்தையெல்லாம் வெட்டி சாச்சிப்பிடுறீங்க. ஏரியையெல்லாம் மண்ணையும் கல்லையும் கொட்டி மூடி, ஏடாகூடமா கான்க்ரீட் கட்டடங்களா கட்டித் தள்ளுறீங்க. நெழல் வேணும், காத்து வேணும்னா எங்கேருந்து வரும்?

அட, என்னசார் நீங்க! மரத்தைக் காணோம், ஏரியை காணோம்கிறீங்க! மனுசனோட வாழ்க்கையே காணாமப் போயிகிட்டிருக்கு சார்!

எதச் சொல்றீங்க!

சுத்துமுத்தும் பாக்குறீங்கல்ல! புரியலையா சார்! தான் பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு, நாயத் தூக்கி மடியில வைச்சுகிட்டு ஏசி கார்ல ஊர்வலம் போறாங்களே! என்ன சார் இதுல்லாம்? இப்பிடிப்போயிட்டானே மனுசன் ! இதுல்லாம்தான் வாழ்க்கைன்னு ஆயிப்போச்சே!

பேச்சு சீரியஸாகிவிட்டது. நீங்க சொல்றது சரிதான் என்றேன் சிந்தனையுடன்.

மனைவி பழங்களுடன் திரும்பியிருந்தாள். ஆட்டோக்காரர் பேச்சை ஸ்டாப் செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். நான் வேறுவிதமாக ஸ்டார்ட் ஆகியிருந்தேன்.

`பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு…` ஹூம்.. பணக்காரர்கள் கிடக்கட்டும். பொதுவாக, நகரங்களில் இளம் தம்பதிகளின் வாழ்க்கைக் கிட்டத்தட்ட இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. மாமனார், மாமியாரோடு சேர்ந்து வாழும், கூட்டு வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட நமது சமூகத்தில் அரிதாகிவிட்டது. நவீன குடும்பங்கள் எல்லாம் nuclear families. அதாவது குடும்பம் என்றால் தனிக்குடித்தனம். இளம் தம்பதிகள், ஒன்றிரண்டு குழந்தைகள். சிறு குடும்பம். இந்தவகைக் குடும்பங்கள்தான் சிறுநகரங்களிலும், டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற மாநகரங்களிலும் மண்டிக்கிடக்கின்றன. எல்லாமே காசு, காசு என்றாகிவிட்ட வாழ்வில், வாழ்வின் மதிப்பீடுகள் தூசாகிவிட்டன. பொருளாதார அபிவிருத்திக்கென மத்தியதரக் குடும்பத்துக் கணவன், மனைவி இருவருமே வேலை செய்யவேண்டிய நிலை, காலத்தின் கட்டாயமாகிவிட்டிருக்கிறது. பணவசதி உள்ளவர்களும்கூட, தங்கள் இளம் மனைவிகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கிறார்கள். சோஷியல் ஸ்டேட்டஸ்.. சமூக அந்தஸ்து! அல்லது சம்பந்தப்பட்ட பெண்களே அதை விரும்புகிறார்கள். இவ்வளவு படித்துவிட்டு வீட்டில் கரண்டி பிடிப்பதா? இல்லை, கிழடுகளோடு உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டிருப்பதா? சே! நமது திறமையை, தனித்துவத்தை நாலுபேருக்குக் காட்ட வேண்டாமா?

நகரத்தின் இளம் தாய்மார்களில் பலர் மத்தியதர வர்க்கத்தினர். கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தும் அப்படி ஒன்னும் பெரிய வருமானமில்லை. குழந்தைகளின் எல்கேஜி அட்மிஷனுக்கே அள்ளித்தரவேண்டிய நிலையில், இருவரும் வேலை பார்த்தே ஆகவேண்டியிருக்கிறது. அவர்களில் பலருக்கு, மாமனார், மாமியாரோ, பெற்றோரோ துணையாக வீட்டில் இருப்பதில்லை. விளைவாக, குழந்தைகளை க்ரெஷ்களில் தள்ளிவிட வேண்டிய கட்டாயம். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஆனால் இளம் அம்மாக்களில், ஓரளவு பணவசதி உள்ளவர்கள், வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களும்கூட, சமூக அந்தஸ்து கருதி, ஏதோ ஒரு வேலைக்குப் போகிறார்கள். தாங்கள் அவசரமாகவோ, ஆசையாகவோ பெற்றுக்கொண்ட குழந்தைகளை க்ரெஷ்களில்தான் கொண்டுபோய் விடுகிறார்கள்.

காலையில் கண்விழிக்கும் குழந்தையை அன்பாகப் பார்த்துச் சிரித்து, அதுகளின் மென்கன்னத்தை வருடி, தலையைக் கோதி, ஆசையாக ரெண்டு வார்த்தை பேசி, அணைத்து, கொஞ்சி..ம்ஹூம்! அந்தக்காலம் மலையேறிவிட்டது. நம்முடைய காலத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. தூக்கம் சரியாகக் கலையாமல், அழுகையும் திணறலுமாக இருக்கும் குழந்தைகளை அவசர அவசரமாகத் `தயார்` செய்து, இழுத்துக்கொண்டுபோய் `க்ரெஷ்`களில் கடாசிவிட்டு, வேலைக்கு ஓடுகிறார்கள் அம்மாக்கள். குழந்தைகளை க்ரெஷில் சேர்த்திருப்பது, தாங்கள் கம்பெனிகளில் வேலை செய்வது –இதிலெல்லாம் ஒரு பெருமை, ஆனந்தம்! இத்தகைய பெண்களில் பலர் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அலுவலக வளாகங்களில் நண்பர்கள், கூடவேலைசெய்பவர்கள் என நட்பு கொள்கிறார்கள். மாலையிலும் சமூக உறவாடல்களில் மகிழ்கிறார்கள். நிறைய சம்பாதிக்கட்டும். உறவாடட்டும். மகிழட்டும். But at what cost ?

இதுபோன்றவர்களின் பச்சிளம்குழந்தைகள் தங்களின் அம்மாக்களின் தாலாட்டு, சீராட்டு இல்லாமல் தவிக்கின்றன. இது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயம். `க்ரெஷ்` என்றும் `ப்ளே ஸ்கூல்` என்றும் பெயர் வைத்துக்கொண்டு நகரங்களில் இயங்கும் இத்தகைய டே-கேர் (Day-care) செண்டர்கள் பெரும்பணம் பண்ணுகின்றன. வாங்குகின்ற பணத்துக்கேற்றபடி இவர்களின் சேவை இருக்கிறதா என்றால் இல்லை. குழந்தைகளின் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் அணுகும்போது, க்ரெஷ்களை நடத்துபவர்கள் வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்று, தாங்கள் எப்படியெல்லாம் உங்கள் செல்லக்குழந்தையைப் பார்த்துக்கொள்வோம். எத்தனை பொம்மைகள் வாங்கிப்போட்டிருக்கிறோம். கண்ணுக்குள் கண்ணாக வைத்துப்போற்றுவோம். கவலையேபடாமல் நீங்கள் குழந்தையை விட்டுச் செல்லலாம், என்றெல்லாம் தேனான வார்த்தைகள் பேசி அட்மிட் செய்யும்படி செய்துவிடுகிறார்கள். க்ரெஷ் நடத்துபவர்களுக்குப் பணம் வந்தாயிற்று. உங்கள் குழந்தை உள்ளே போயாயிற்று. நீங்கள் ஆஃபீஸுக்குப் போய்விட்டீர்கள். அப்புறம்? போகப்போகத் தெரியும்.

பெற்றோர் தினமும் தங்கள் குழந்தைகளை க்ரெஷ்-ல் கொண்டுவந்து விடும்போது, சிரித்துக்கொண்டே `வரவேற்க`, `ப்ரின்சிபல்`, `மேடம்` என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்படும் க்ரெஷ் சொந்தக்காரர் அல்லது மேனேஜ்மெண்ட் அம்மணி இருப்பார். குழந்தைகள் எல்லாம் உள்ளே வந்துவிட்டபின், கொஞ்சநேரத்தில், இவர் கிளம்பிப் போய்விடுவார். மாலையில் பெற்றோர் வருமுன் மீண்டும் வந்துவிடுவார்! பெற்றோர் திரும்பிவந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகையிலும், இதே அம்மணி அதே சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் பெற்றோர், குழந்தைகளை வழி அனுப்புவார். பெற்றோர் பார்த்து மகிழ்வது, அல்லது திருப்திப்பட்டுக்கொள்வது இந்த முகத்தைத்தான்! இடைப்பட்ட வேளையில் அதாவது காலை சுமார் 8 ½ மணியிலிருந்து மாலை 5 ½ மணிவரை, குழந்தைகள் பார்ப்பது, அனுபவிப்பது எந்த முகத்தை? யாருடைய கைங்கரியத்தை? இளம் அன்னையர்களே, யோசித்திருக்கிறீர்களா?

இத்தகைய க்ரெஷ்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, `அக்கா` அல்லது ‘தீதி’(didi) எனப்படும் `அசிஸ்டெண்ட்’டுகள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்த அக்காக்களைப்பற்றி ஒன்றும் தெரிவதில்லை. அவர்களிடம் தான் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன இந்த அப்பாவிக் குழந்தைகள். குறைந்த மாதச் சம்பளத்தில் பணியில் இருத்தப்படும் 18-20 வயதான இளம் பெண்கள். அவர்களின் ஆசைகள், ஆசாபாசங்கள் வேறு. கொஞ்ச சம்பளத்திற்காக, குழந்தைகளைப் `பார்த்து`க்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டுக் காண்பித்து, அவ்வப்போது அந்த சிறுசுகளை பாத்ரூமுக்குக் கொண்டுபோய்விட, கைகால் அலம்பி துடைத்துவிட, குழந்தைகளில் உடம்புக்கு ஒன்றுமில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றெல்லாம் கவனிக்க, அவர்கள் பயிற்சி பெற்றவர்களுமல்லர். அதற்கேற்ற அக்கறையோ, பொறுமையோ அவர்களிடம் பொதுவாக இருப்பதுமில்லை. வேறு வழி இன்றி அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இந்த வேலையை `monotonous` ஆகச் செய்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத, 3-4 வயது அப்பாவிக் குழந்தைகள், இந்த அக்காக்களின் சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம் இவைகளையெல்லாம் தினம் தினம் சமாளிக்கவேண்டியிருக்கிறது. நிம்மதியாக உட்கார்ந்து நண்பர்களுடன் ஃபோன் போட்டுப் பேசவிடாமல், பிடித்த பாட்டைக் கேட்கவிடாமல் தங்களை `பிஸி`யாக்கும் இந்தக் குழந்தைகளை ஆத்திரம் எரிச்சலுடன் கையாளுகிறார்கள். குழந்தைகளை அவ்வபோது கிள்ளிவிட்டு, கன்னத்தில் அறைந்து, முதுகில் ரெண்டு போடுபோட்டு, தங்கள் எரிச்சல்களுக்கு வடிகால் அமைக்கும் அக்காக்கள். கொண்டுவந்திருக்கும் மதியச் சாப்பாட்டையும் பிரியமாக ஊட்டிவிட ஆளின்றி, அரையும் குறையுமாக சாப்பிட்டு,அங்கும் இங்குமாக அறைக்குள்ளே ஓடி, மாலை நெருங்கும் வேளையில் கொஞ்சம் அசந்து உட்கார்ந்து இக்குழந்தைகள் தூங்கிவிட்டால், அதுவும் பெரும் குற்றம். பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும் வேலையில், ஃப்ரெஷாகத் தோன்றவேண்டுமல்லவா? அதற்காக, எழுப்பினால் உடனே எழுந்திருக்கிறதுகளா இந்த சனியன்கள்? சரியாக எழுந்திருக்காத குழந்தைகளின் முகத்தில், குளிர்ந்த தண்ணீரை அறைந்து (கவனியுங்கள் – தண்ணீரைத் தெளித்து, ஈரத்துண்டினால் துடைத்துவிட்டு அல்ல), அவர்கள் பயமும், பீதியுமாய் விழித்துக்கொண்டு அழ, அவர்களைப் பெற்றோர்களுக்காக மாலை வேலையில் அக்காக்கள் /`தீதி`கள் தயார்படுத்தும் திருப்பணி இருக்கிறதே..! என்னத்தைச் சொல்ல? அந்தப் பிஞ்சுகள் சோர்ந்த முகத்துடன் மாலையில் வீடு திரும்புகையில், பகற்பொழுதில் க்ரெஷில் தாங்கள் `கவனிக்கப்பட்ட` லட்சணம்பற்றி, தங்களின் அம்மாக்களிடம் சொல்லவும் தெரியாத மழலைப் பருவம்.

`நல்லதொரு வீணை செய்தே, அதனை நலங்கெட உடைத்து…` என்பதுபோல், அழகழகாக, ஆசைஆசையாகப் பெற்றுக்கொண்டு, காசையும் செலவுசெய்து, குழந்தைகளை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிட்டு, என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் – இந்த அவஸ்தை தேவைதானா? யார் யார் இதனைத் தவிர்க்கமுடியுமோ அத்தகைய பெற்றோர்களாவது, தங்களின் செல்வங்களின் நலனுக்காக தவிர்க்கவேண்டாமா? மற்றவர்களை `இம்ப்ரெஸ்` செய்வதற்காக வேலைக்குப்போவதை விட்டுவிட்டு, இளம் அன்னைகள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டால், அவர்களின் குடும்பத்துக்கு, வாரிசுகளுக்கு மிகவும் நல்லது. கூடவே, ஆரோக்யமான, அன்பான இளம் சமுதாயம் உருவாகவும் இது வழிவகுக்குமல்லவா ?

**

ICC World T-20 : வெஸ்ட் இண்டீஸ் உலக சேம்பியன் !

கல்கத்தாவில் நேற்று(3-4-2016) கடைசி ஓவர் க்ளைமாக்ஸில், கதையை மாற்றி எழுதிவிட்டது வெஸ்ட் இண்டீஸ். ஜெயித்துவிடுவோம் என்கிற இறுமாப்பு காட்டிய இங்கிலாந்தை நொறுக்கி, கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தியா விளையாடாத இறுதிப்போட்டியானாலும், ஈடன் கார்டன்ஸில்(Eden Gardens) ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்திய ரசிகர்களில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீஸின் ஆதரவாளர்களே என்பது கண்கூடாகத் தெரிந்தது. இதே மைதானத்தில் பகலில், மகளிருக்கான உலகக்கோப்பையை முதன்முதலாக வென்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ். பெண்கள் அணியும் தங்கள் ஆடவர் அணியை உசுப்பேற்ற உடன் இருந்தனர். இங்கிலாந்து டீமின் குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிய குழாம் ஒன்று கொடியசைத்துக் கூச்சலிட்டு இங்கிலாந்து அணியை குஷிப்படுத்திக்கொண்டிருந்தது.

டாஸ்(toss) வெல்வதில் மன்னரான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி (Darren Samy) இந்த முறையும் வென்று, இங்கிலாந்தை உள்ளே அனுப்பினார். முதல் ஓவர் போட்டது லெக்-ஸ்பின்னர் சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (சென்னை சூப்பர் கிங்ஸ்). நேராகத் தாக்கும் துல்லியம், பந்தை எகிறவிடாமல் தேய்த்துச் செல்லவைக்கும்(skidding) லாவகம் உடையவர். இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து ஓபனர் ஜேஸன் ராய் (Jason Roy) க்ளீன் –போல்ட்(clean bowled). ஆந்த்ரே ரஸ்ஸல் (Andre Russel) ஒரு விக்கெட் சாய்க்க, அடுத்த ஓவரில் கேப்டன் ஆய்ன் மார்கனை (Eoin Morgan) வீழ்த்தினார் பத்ரீ. 23 ரன்களுக்கு 3 விக்கெட். ஆட்டம் கண்டது இங்கிலாந்து.

இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரமாரியாக விழுந்துகொண்டிருக்க, ஜோ ரூட்(Joe Root-54 ரன்கள்) சிறப்பாக எதிர்த்தாக்குதல் நடத்தினார். துணையாக ஆடியவர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்(Jos Butler-36 ரன்கள்). இருவருடைய வீர சாகசங்களுக்கும் விரைவில் ஒரு முடிவுகட்டினார் கார்லோஸ் ப்ராத்வேய்ட் (Carlos Brathwaite). டுவேன் ப்ராவோவும் சிறப்பாக வீச, இருவரும் ஆளுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து, இங்கிலாந்தை 155 ரன்னில் நிறுத்தி மூச்சிறைக்கவைத்தனர்.

156 கோப்பைக்கான இலக்கு. வெஸ்ட் இண்டீஸின் பதில்? படுமோசமான ஆரம்பம். ஜோ ரூட் வீசிய 2-ஆவது ஓவரிலேயே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கேல் (Chris Gayle), சார்ல்ஸ் ஜான்சன் ஆகியோரின் கதை முடிந்தது. அடுத்துவந்த லெண்டல் சிம்மன்ஸ்(இந்தியாவுக்கு எதிராக பொளந்து தள்ளிய ஆசாமி) டக் (duck) அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்களுக்கு 3 விக்கெட் எனத் தத்தளித்தது. மிடில் ஆர்டரில், மார்லன் சாமுவேல்ஸ் மிகுந்த பொறுப்புடன் ஆட, ப்ராவோ துணையாட்டம். ரன்கள் சேர்ந்தன. ஆனால் ரன்விகிதம் மிக மோசமாக இருந்தது. 25 எடுத்திருந்த ப்ராவோ 14-ஆவது ஓவரில் சாய, 16-ஆவது ஓவர் மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதிரடி ரஸ்ஸல், கேப்டன் சேமி இருவரும் இங்கிலாந்தின் பௌலிங்கைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் விழுந்தனர். சாமுவேல்ஸ் மட்டும், வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர்களிடம் காணப்படாத அதீத பொறுமையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் எகிறும், தேவைப்படும்-ரன்விகிதத்தை (asking rate) அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மலைபோல் உயர்ந்து வெஸ்ட் இண்டீஸின் கழுத்தை நெருக்கியது. ஜெயித்துவிடுவோம் என்கிற நிலை இங்கிலாந்துக்கு போதை ஏற்றியது. அப்போது சாமுவேல்ஸுடன் ஜோடி சேர்ந்தது ஒரு கத்துக்குட்டி. கார்லோஸ் ப்ராத்வேய்ட். அனுபவம் இல்லாத 6 ½ அடி உயர ஆல்ரவுண்டர். 19-ஆவது ஓவரை இங்கிலாந்தின் க்றிஸ் ஜார்டன் (Chris Jordan) அருமையாகப்போட்டு அதிக ரன் கொடுக்காமல் முடித்துவிட, இங்கிலாந்து உலகக்கோப்பையை மனதில் ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டது!

கடைசி ஓவர். 19 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ். இல்லை என்றால் இங்கிலாந்து உலக சேம்பியன். 20-ஆவது ஓவரை வீசியது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). ரன் கொடுப்பதில் கஞ்சன். விக்கெட்டும் எடுத்துவிடக்கூடிய பேர்வழி. சாமுவேல்ஸ் 85 ரன் எடுத்து நின்றார் எதிர்பக்கத்தில். பந்தை எதிர்கொண்டவர் ப்ராத்வேய்ட். இங்கிலாந்து ரசிகர்களின் முகத்தில் வெற்றி ஜொலிப்பு. வெஸ்ட்-இண்டீஸ் ரிசர்வ் ப்ளேயர்கள், கோச்சுகள், வெஸ்ட்-இண்டீஸின் மகளிர் அணி மற்றும் இந்திய ரசிகர்களின் முகத்தில் கிலி. முதல் பந்தை ஸ்டோக்ஸ் யார்க்கராக முயற்சித்து லெக்-ஸ்டம்ப்பின் கீழ் வேகமாக இறக்கினார். அதற்காகவே காத்திருந்தது ப்ராத்வேய்ட்டுக்குள் உட்கார்ந்திருந்த பெரும் பூதம் ஒன்று. கண் இமைக்கும் நேரத்தில், லெக்-சைடில் ஒரு அசுரத் தூக்கல். ஸ்டேடியத்தின் வரிசைகளில் போய் தொப்பென்று விழுந்த பந்து சிக்ஸர் என அலறியது! அடுத்த பந்து கூர்மையான யார்க்கர். லாங்-ஆன் திசையில் சீறி சிக்ஸரானது! வெஸ்ட்-இண்டீஸ் உயிரூட்டப்பட்டுவிட்டது! அதிர்ந்துபோன ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தை நன்றாகத்தான் போட்டார். பந்தின் குணநலன்களை ஆராயும் மனநிலையில் ப்ராத்வேய்ட் இல்லை. தூக்கினார் மீண்டும். இப்போது லாங்-ஆஃப்-இல் தெறித்தது சிக்ஸர். மூன்றே பந்துகளில் 18 ரன்கள். திடீரென்று, இங்கிலாந்து குற்றுயிரும், குலைஉயிருமாய்ப் புரண்டது. சீட்டின் நுனியிலிருந்த வெஸ்ட்-இண்டீஸ் ரசிகர்கள் காற்றில் மிதந்தனர். வெற்றிக்கு இன்னும் ஒரே ரன் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு! க்றிஸ் கேய்ல், ப்ராவோ, சேமி, ரஸ்ஸல் முதான வெஸ்ட்-இண்டீஸ் வீரர்கள் வரிசையாகக் கைகோத்துக்கொண்டு மைதான விளிம்பில். கொண்டாட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக நின்றனர். நிலைகுலைந்த ஸ்டோக்ஸ் நடுங்கிக்கொண்டே வீசினார் நாலாவது பந்தை. மீண்டும் லெக்-சைடில் மின்னல்காட்டியது சிக்ஸர். கடைசி ஓவரின் நான்கு பந்துகள் : 6,6,6,6. ப்ராத்வேய்ட் புதிய கரீபியன் ஹீரோ. யாரிந்த கார்லோஸ் ப்ராத்வேய்ட்? கூகிள் வேகமாகத் தேடிக் கண்டது. கிரிக்கெட்டுக்கு பார்படோஸின்(Barbados) புதிய அன்பளிப்பு. IPL-ல் டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) அணி. ட்விட்டர் சிதறிப் பரவியது.

கல்கத்தாவின் நெடிய இரவு. கரீபியப் பிரதேசத்தில்(Carribean region) களிப்பான காலைப்பொழுது. உலகக்கோப்பையோடு காமிராவுக்கு காட்சி அளித்தபின், ஈடன் கார்டன்ஸில் சட்டையைக் கழட்டிவிட்டு உல்லாச நடனம் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இங்கிலாந்தில் சட்டையைக் கழற்றிச் சுழற்றிய இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மைதானத்தில் சிரிப்புடன் ரசித்திருந்தார்.

2016 ஒரு மறக்கமுடியாத வருடம் வெஸ்ட் இண்டீஸுக்கு. கைக்கு வந்தன கிரிக்கெட்டின் மூன்று உலகக்கோப்பைகள்! முதலில் Under-19 ICC T-20 World Cup. இரண்டாவதாக நேற்று மாலையில் ICC World T-20 Cup for Women. மூன்றாவதாக இரவில் டேரன் சேமியின் வீரர்கள் வென்ற ICC World T-20 Cricket Cup. Fabulous, memorable victories. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மறுமலர்ச்சி. வாழ்த்துக்கள் !

**

உலகக்கோப்பை : இந்தியாவை நிறுத்திய வெஸ்ட் இண்டீஸ் !

இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவை வெஸ்ட் இண்டீஸ் நேற்று (31-3-16) தகர்த்துவிட்டது. மும்பையில் நடந்த கடுமையான செமி ஃபைனல் போட்டியில் இந்தியாவின் 192-என்கிற ஸ்கோரை அனாயாசமாகத் தாண்டி, ஃபைனலில் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

க்றிஸ் கேய்ல் vs விராட் கோஹ்லி, அஷ்வின் vs சாமுவேல் பத்ரீ என்றெல்லாம் ரசிகர்கள் கற்பனை செய்திருந்தார்கள். கதை எப்படியோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது. Typical T-20 !

முக்கியமான டாஸைத் தோற்ற இந்தியா, முதல் பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. ஆனால் ஆச்சரியமாக ரோஹித் ஷர்மா விழித்திருந்தார். முதல் 6 ஓவர் பவர்-ப்ளேயில் ரோஹித்தின் அட்டகாசம்! 3 பௌண்டரி, 3 சிக்ஸர். 31 பந்துகளில் 43 ரன்கள்.சாமுவேல் பத்ரீயிடம் ரோஹித் விழுந்தவுடன் இறங்கினார் கோஹ்லி. கோஹ்லியும், ஷிகர் தவனுக்கு பதிலாக இறங்கியிருந்த ரஹானேயும் பொறுப்புடன் ஓடி, அவ்வபோது பௌண்டரி ஆடி ரன் சேர்த்தனர். ர்ஹானே 40 ரன்களில் அவுட்டாக, தோனி இறங்கி கோஹ்லியுடன் சேர்ந்து ஆடினார். டெத்-ஓவர்களில்(death-overs) கோஹ்லி 16 பந்துகளில் 45 ரன் விளாசினார். 47 பந்துகளில் 89 நாட்-அவுட். ஒரே ஒரு சிக்ஸர்! Masterclass. இந்தியா 192-ஐத் தொட்டது.

பொதுவாக ரன்கள் குவியும் மும்பை மைதானத்தில் 192 என்பது நல்லதொரு ஸ்கோர்தான். ஆனால் இந்தியாவின் பௌலிங்கும் ஃபீல்டிங்கும் மிகக் கறாராக இருந்திருக்கவேண்டும். அதிரடி வெஸ்ட் இண்டீஸை அடக்குவது கஷ்டம். க்றிஸ் கேய்லை குறிவைத்த இந்தியா இரண்டாவது ஓவரில் அவரைச் சாய்த்தது. ஜஸ்பிரித் பும்ரா தன் யார்க்கரால் அவரை க்ளீன்-போல்ட்(clean-bowled) செய்து ரசிகர்களைக் குதிக்க வைத்தார். ஆனால் இன்னொரு ஓபனரான சார்ல்ஸ் ஜான்சன் சிறப்பாக ஆடினார். 3-ஆவதாக இறங்கிய சாமுவேல்ஸ் விரைவிலேயே வீழ்ந்தார். இந்தியர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. அடுத்து வந்தவர்தான் இந்தியாவுக்கு சனியனாக மாறினார். லெண்டல் சிம்மன்ஸ் (Lendl Simmons). ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதே பிட்ச்சில் ஐபிஎல். ஆடிய அனுபவம் உண்டு. மும்பை என்றால் அவருக்கு வெல்லக்கட்டி! கேய்ல் செய்யவேண்டிய வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் இந்திய பௌலிங்கை துவம்சம் செய்ய ஆரம்பித்தார் சிம்மன்ஸ். சார்ல்ஸ் ஜான்சனும் சேர்ந்துகொண்டார். Effortless pulls and fiery hooks. பௌண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்க ஆரம்பித்தன. இந்திய ஃபீல்டர்கள் தடுமாறினர். தோனியின் தலைவேதனை ஆரம்பித்தது.

இக்கட்டான இந்த நிலையில் அஷ்வின் பந்துபோட்டார். அவருடைய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் விழுந்திருக்கவேண்டும். ஆஃப் சைடில் ப்ரமாதமாக லோ-கேட்ச் பிடித்தார் பும்ரா. அம்பயரின் செக்-அப்பில் அது நோ-பால் எனத் தெரிந்தது! ஸ்பின்னரான அஷ்வினிடமிருந்து மேட்ச்சின் ஒரு முக்கியமான தருணத்தில் விக்கெட் எடுத்த பந்து நோ-பால்! தோனியின் முகத்தில் ஈயாடவில்லை. அப்போதே பிடித்தது அனர்த்தம். துரதிருஷ்டத்தின் கோணல் வாய், இந்தியாவைப் பார்த்துச் சிரித்தது.

ஆஷிஷ் நேஹ்ரா மட்டுமே சிக்கனமாக பந்துபோட்டார். கோஹ்லிக்கு ஓவர் கிடைக்க முதல் பந்திலேயே ஜான்சனை வீழ்த்தினார்! மிடில்-ஓவர்களை வீசிய ஜடேஜா செம்மையாக அடி வாங்கினார். ஹர்தீக் பாண்ட்யா ஷார்ட் பிட்ச் பந்துகளைத் தெளித்தார். சிம்மன்ஸும் ஆந்த்ரே ரஸ்ஸலும் அட்டகாசமாக ஆடினர். ஸ்கோர் சீறியது. பாண்ட்யாவின் கடைசி ஒவரின்(15), கடைசி பந்தில் அஷ்வினின் ஷார்ப் கேட்ச். விக்கெட் விழுந்தது – அதாவது, அப்படி நினைத்து ரசிகர்கள் எம்பிக் குதித்தார்கள். ஆனால் அதுவும் ஒரு நோ-பால்! செமி-ஃபைனலில் பௌலிங் இப்படி இருந்தால், நாம் ஃபைனலுக்குப் போக ஆசைப்படலாமா?

நம்பிக்கை போய்விட்டது. வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்க 20 ரன்கள். வேறுவழியின்றி, 19 ஓவரை ஜடேஜாவிடம் தோனி கொடுக்க, சிம்மன்ஸ், ரஸ்ஸல் ஆவேசம் காட்டினர். கடைசி ஓவர். 8 ரன்கள். அஷ்வினுக்கு ஓவர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக கோஹ்லியிடம் தந்தார் தோனி. அவர் என்ன செய்வார், பாவம்! அவர் ஒரு ரெகுலர் பௌலர் கூட இல்லை. விண்ணை முட்டிய சிக்ஸரில், இந்தியாவின் கதையை முடித்தார் ரஸ்ஸல். 7 பௌண்டரி, 5 சிக்ஸர்களுடன் நாட்-அவுட்டாக இருந்தார் சிம்மன்ஸ். ரஸ்ஸல் 20 பந்துகளில் 43 நாட்-அவுட். India – simply outplayed and outsmarted by the West Indies.

ஏப்ரல் 3-ஆம் தேதி கல்கத்தா ஃபைனலில், இங்கிலாந்தை சந்திக்கிறது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை உருவாக்கிய, கிரிக்கெட்டை உயிர்நாதமாகக் கொண்ட சிறு கரீபிய நாடுகள்(Carribean countries) குதூகலித்து மகிழும். எண்ணற்ற வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பீர் அடிப்பார்கள். பாடுவார்கள். ஆடி மகிழ்வார்கள். வாழ்த்துவோம்!

**