நேற்றைய பதிவிலிருந்து ஜெயகாந்தன் சிறுகதை தொடர்கிறது … :
திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில், அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து, அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.
‘அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு – சைக்கிளிலே வந்தவன் – சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே… அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்… இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே…’ என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் ‘பிலுபிலு’வென வளர்ந்திருக்கிறது. தோளும் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.
‘ஐயையோ… கத்தியை வேற எடுத்துண்டு வரானே… நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்… இங்கேதான் வரான்!’ என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று ‘படா’ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.
‘ஏண்டாப்பா… எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே ? இந்த அம்மா கடன்காரி வேற, உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா. நேக்குப் புரியறது… மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா, பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே ‘லேசா’ ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு. என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?’ என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.
அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். ‘அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு. ‘எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?’ என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும், பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் – சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, ‘படக்’கென்று அரை அடி நீளத்துக்கு, ‘பளபள’வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி, ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான். குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: ‘நல்ல வேளை! தப்பிச்சே. ஆத்தை விட்டு வெளிலே வராதே… பலி போட்டுடுவான், பலி!’
அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து, ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார். அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும், குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு, அவனே எழுந்து உள்ளே போனான். அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும், அவன் வெளியே தலை காட்டவே இல்லை.
அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், “வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி. “ஆமாம் ஆமாம்” என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.
அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.
காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான். வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டுவிட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான். காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து ‘தப தப’வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.
திடீரென்று, “மாமா… உங்க பனியன் மண்ணுலே விழுந்துடுத்து…” என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு, மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.
அப்போதுதான் அவன் பயந்தான். தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை, யாராவது பார்த்து விட்டார்களோ என்று, சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.
“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா ? உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு, அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா. அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கச்சே… நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா.. ? திருடிண்டு வந்துடு. அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு ! ”
அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது, அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோடு, பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.
அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து, ரகசியமாகச் சொல்லிற்று குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய், அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன் !”
அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டு, கடைக்கு ஓடினான். ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான். திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள, ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம். அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து, அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ..’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.
“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.
‘உஸ்’ என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு, கதவுக்குப் பின்னால் ஒளிந்து காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.
“இங்கேதான் இருக்கேன். வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ! ” என்று அவனை இழுத்து உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.
குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.
“எல்லாம்.. எனக்கே எனக்கா?”
“ம்…”
இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில், இனிப்பின் சாறு வழிந்தது.
“இந்தா! உனக்கும் ஒண்ணு” என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது
“ராஜி… ராஜி !” என்ற குரல் கேட்டதும், குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.
“அம்மா தேடறா…” என்று அவனிடம் சொல்லி விட்டு, “அம்மா! இங்கேதான் இருக்கேன்” என்று உரத்துக் கூவினாள் குழந்தை.
“எங்கேடி இருக்கே?”
“இங்கேதான்… திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்.”
அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, “அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்பறமா வா” என்று கூறினான் அவன்.
“மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா. இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்பறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷுக்குக் கூட…!”
குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு, அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான். மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன், வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டு, சற்று நேரம் படுத்து உறங்கினான்.
நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும், எழுந்து நின்று வணங்கினான். குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. போலீஸ்காரரை வணங்கிய பின், தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.
“தெரியும்டா… பொல்லாத ரசீது… ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு… என்னைக்கிடா நீ ரிலீஸானே?” என்று மிரட்டினான் போலீஸ்காரன்.
“முந்தா நாளுங்க, எஜமான்” என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.
அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார். முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.
“உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?”
‘வாக்கிங் ஸ்டிக்’கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.
“அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு… அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?” என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.
முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன், வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.
“இங்கே உனக்கு என்ன வேலை?” என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.
“இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்.”
முதலியார், அவனையும், போலீஸ்காரனையும், மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.
“என்னுடைய ‘டெனன்டை’ காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே ‘யூ கெட் அவுட்’!”
முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான். “எஸ், ஸார்” என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.
“அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ!” என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.
“ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர், திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்.” என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.
“என்ன கோனாரே… நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?… நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?…” என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.
கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:
“இந்தாப்பா… உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா, எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்…” என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.
அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தான். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது. காலையில் பால் கறக்க வந்த கோனார், அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான். குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து, பசுவைத் தரிசனம் செய்தார். குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது. அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு, அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.
மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று… இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று, மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.
அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும், ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது. மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
“ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு, தனிமையில் அழுதது குழந்தை.
**
நன்றி : ‘அழியாச்சுடர்கள்’/ராம்பிரசாத் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, “ஜெயகாந்தன் சிறுகதைகள், – ஜெயகாந்தன்” தொகுப்பு